கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 18,183 
 

பாவுக்கு “வீடியோ கேம்’ விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும், “கிரிக்கெட்’ என்றால் கேட்கவே வேண்டாம். அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் 11 பேர் விளையாடும் விளையாட்டைத் தனி ஒருவனாக விளையாடிக் கொண்டிருப்பான். இடையிடையே, “வா….வ்…வ், சூப்பர், அச்சச்சோ…’ என்ற கமென்ட்ஸ் மட்டும் வந்துகொண்டிருக்கும். ஏழாம் வகுப்பு படிக்கும் பாபுவுக்கு கம்ப்யூட்டரில் “ஏ டு இசட்’ அத்துப்படி. ஆன்லைனில் அப்பாவுக்கு பஸ் டிக்கெட், டிரெயின் டிக்கெட் எல்லாம் அவன்தான் பதிவு செய்து தருவான். கம்ப்யூட்டரைப் பற்றி அவன் தெரிந்து வைத்திருந்ததில் கால் பங்குகூட பாவுவின் அப்பா குணசேகருக்குத் தெரியாது.

பாபுவின் துணிவு“இந்த முறை கோடை விடுமுறைக்கு எந்த ஊருக்கும் போகப்போவதில்லை’ என்று அப்பா முன்பே கூறிவிட்டதால், பகல் பொழுதெல்லாம் வீட்டில் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல், வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான் பாபு.

“”கடைக்குப் போயிட்டு வரேன்டா பாபு, வீட்டைப் பூட்டிக்கோ, டிஃபன் எடுத்து வெச்சிருக்கேன் சாப்பிடு” என்று கூறிய அம்மா உஷாவிடம்,

“”ம்…ம்..” என்றபடி “சிக்சர்’ அடிப்பதிலேயே தீவிரமாக இருந்தான்.

அம்மா சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் அம்மாவின் செல்போன் ஒலித்தது. “சீ…ய்..ய்.. இதுவேற…, போனை கையோட எடுத்துக்கிட்டுப் போகக்கூடாதோ… வீட்டுல ஏன் வச்சிட்டுப் போனாங்க’ என்று அம்மாவைக் கோபித்துக்கொண்டே, விளையாட்டை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு செல்போனை எடுத்தான். அம்மாவுடையது என்பதால் எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கமும் எழுந்தது பாபுவுக்கு. ஆனால், “இன்கமிங்’ கால் அம்மா வேலை செய்யும் வங்கியின் மேலதிகாரி கண்ணன் சாரிடமிருந்து வந்ததால், உடனே ஆன் செய்தான்.

“”ஹலோ… ஹலோ…. சார்” என்றான். எதிர்முனையில் எந்த பதில் ஹலோவும் வரவில்லை. மாறாக, ஏதோ பயங்கர சத்தம், யாரோ உரக்க மிரட்டுவது போலப் பேசுவதும், யாரோ கெஞ்சுவதும், கூடவே ஒரு சிறுமியின் அழுகுரலும் கேட்டது. பாபு மீண்டும் “”ஹலோ… ஹலோ…சார்” என்பதற்குள் லைன் கட்டாகிவிட்டது.

“போன் பண்ணிட்டுப் பேசமாட்டேங்கிறாங்களே… ஒரே சத்தமா இருக்கே… என்னன்னு தெரியலையே…’ என்று நினைத்துக்கொண்ட பாபு, சந்தேகத்துடன் தன் அறைக்கு வந்து, விட்ட இடத்திலிருந்து மீண்டும் விளையாட்டை ஆரம்பித்தான். பாபுவின் அம்மா வைத்துவிட்டுப்போன காலை உணவு அப்படியே இருந்தது. அதுகூடத் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தான் பாபு.

அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் போன் ஒலித்தது. “அட, விளையாட விடாம இதுவேற பெரிய தொல்லையா இருக்கே…’ என்று எரிச்சல் அடைந்துகொண்டே அதை “சைலன்டி’ல் போட எண்ணி எழுந்து போய் செல்போனை எடுத்ததும், மறுபடியும் “கண்ணன் சார்’ என்று வந்ததைப் பார்த்து, “ஏதோ முக்கியமான செய்தி போலிருக்கு, அம்மா கடைக்குப் போயிருக்காங்கன்னு சொல்லி வச்சிடுவோம்’ என்று நினைத்து “ஆன்’ செய்தான். ஆனால், மறுமுனையில் இந்த முறையும் ஏதேதோ சத்தமும் பொருள்கள் உருளுவதும், சிறுமியின் அழுகைக் குரலும்தான் கேட்டதே தவிர யாரும் “ஹலோ’ சொல்லவே இல்லை.

உடனே பாபுவின் சமயோஜித புத்தி விழித்துக்கொண்டது. “அந்த அங்கிள் வீட்டில் ஏதோ சண்டை நடக்கிற மாதிரி இருக்கே… அந்த அங்கிளோட பொண்ணு மாலினி அழுவுற குரல் மாதிரி இருக்கே… அவங்க வீட்டில் அப்படி என்ன நடக்குது?’ என்று ஏதேதோ நினைத்தவன், உடனே 100க்கு டயல் செய்தான்.

“”ஹலோ… சார்…”

“”ஹலோ, யாருப்பா நீ, என்ன வேணும்”

“”நான் பாபு பேசறேன் சார்… எங்கம்மா “………’ பேங்க்ல வேலை செய்யறாங்க. அந்த பேங்க் மேனேஜரோட நம்பர்லேந்து எங்கம்மாவுக்கு ரெண்டு தடவை போன்கால் வந்தது. ஆனால் யாருமே பேசலை…” என்று நடந்ததைக் கூறி, அந்த வங்கியின் பெயரையும் வீட்டு விலாசத்தையும் கூறினான்.

“”வெரிகுட் பாபு, நாங்க பாத்துக்கறோம்… கவலைப்படாதே…” என்ற போலீசார் லைனைத் துண்டித்தார்.

பத்து நிமிடம் கழித்து வீட்டுக்கு வந்த அம்மாவிடம் நடந்ததைக் கூறினான் பாபு. பதறிப்போன அவர், “”நல்ல வேலை செஞ்சிருக்கே பாபு, ஆனா போலீஸ்காரங்க உடனே ஆக்ஷன் எடுப்பாங்களோ மாட்டாங்களோ தெரியலையே…” என்றவர் உடனே, தன் போனை எடுத்து மேனேஜர் கண்ணன் சாருக்கு டயல் செய்தார். அது “ஸ்விச்டு ஆஃப்’ என்ற பதிலைத் தந்தது. “”இப்ப என்னடா செய்யறது பாபு? அவருக்கு ஏதாவது பிரச்னை வந்திருக்குமோ, நேற்று இரவுகூட எனக்குப் போன் பண்ணி அக்கவுண்ட்ஸ் சம்பந்தமா பேசிக்கிட்டிருந்தாரே…. போன் வேற ஸ்விச்டு ஆஃப்னு வருதே… நீ போலீஸ்காரர் பெயரைக் கேட்டியா? எந்தப் போலீஸ் ஸ்டேஷன்?”

“”அதெல்லாம் தெரியாதும்மா, 100க்கு போட்டேன். உடனே எடுத்துட்டாங்க. நடந்ததைச் சொன்னவுடனே, “நாங்க பாத்துக்கிறோம்னு’ சொல்லி வெச்சிட்டாங்கம்மா” என்றான்.

“என்ன செய்றதுன்ணு தெரியலையே… எனக்கு ஏன் போன் பண்ணியிருக்கார்?’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் உஷா.

“”கவலைப் படாதம்மா.., போலீஸ்காரங்க பாத்துக்குவாங்க..” என்று கூறிவிட்டு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து விளையாட்டைத் தொடர்ந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் செல்போன் ஒலித்தது. ஓடிவந்து எடுத்தார் உஷா. புதிய எண்ணாக இருந்தது.

“”ஹலோ….”

“”ஹலோ… மேடம், கொஞ்சம் நேரம் முன்னாடி இந்த நம்பர்லேந்து ஒரு பையன் பேசினானே பாபுன்னு, வெரி கிளவர் பாய். பசங்கன்னா இப்படித்தான் இருக்கணும். நல்லா வளத்திருக்கீங்க… அந்தப் பையன் சந்தேகப்பட்டது போலத்தான் நடந்திருக்கு” என்றார் போலீஸ்காரர்.

“”என்ன சார் ஆச்சு, மானேஜர் சாருக்கு ஏதாவது ஆபத்தா…?”

“”ஆபத்து வராம உங்க பையன்தான் காப்பாத்திட்டானே! நாலைஞ்சு பேர் அவங்க வீட்டுக்குப் போய் அவரைக் கட்டிப்போட்டு, பேங்க் லாக்கர் சாவியைத் தரச்சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டியிருக்காங்க… அவரோட பொண்ணுதான், சமயம் பார்த்து, தன் அப்பா கடைசியா யாருக்குப் போன் பண்ணியிருந்தாரோ அந்த நம்பரை அழுத்தியிருக்கா… நல்லவேலை அது உங்களோட நம்பராப் போச்சு. அதிலும், புத்திசாலியான உங்க மகன் அதை எடுத்ததுனாலதான் அவரை எங்களால் காப்பாத்த முடிஞ்சுது. சமயோஜித புத்தி உங்க பையனுக்கு நிறையவே இருக்கு மேடம். இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்களைவிட ரொம்பவே புத்திசாலிகளா இருக்காங்க. அவனுக்கு என் நன்றியைச் சொல்லுங்க” என்றார்.

அம்மா பேசுவதைப் பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பாபு, அம்மா போனை வைத்ததும், “”யாரும்மா போன்ல…?” என்றான்.

ஒன்றுமே சொல்லாமல் பாபுவை அப்படியே இழுத்து அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் பாபுவின் அம்மா உஷா. அடுத்தடுத்து மேனேஜர் வீட்டிலிருந்தும், மீடியாக்களிலிருந்தும் வந்த ஃபோன் கால்களின் பாராட்டு மழையில் பாபு மட்டுமல்ல, அவனைப் பெற்றதால் அவன் அம்மாவும் நனைந்தார்.

***

மறுநாள் வகுப்பறையில், அன்றைய செய்தித்தாளுடன் உள்ளே நுழைந்த வகுப்பாசிரியர் கோவிந்தன், பாபுவைப் பற்றி வெளிவந்திருந்த செய்தியை மாணவர்களுக்குப் படித்துக் காட்டிவிட்டு, “”மாணவச் செல்வங்களே… எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் வராது இந்த சமயோஜித புத்தி. ஒருவருக்கு சமயோஜித புத்தி அதாவது சமயத்துக்குத் தக்க, நன்மை-தீமை அறிந்து செய்யக்கூடிய செயல் திறன், அறிவு நுட்பம், துணிவு இருந்துவிட்டால், அவருக்கும் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எப்போதும் நன்மையே விளையும் என்பதை பாபுவின் துணிச்சலான செயலும், சமயோஜித புத்தியும் நிருபித்துவிட்டதல்லவா?
இதைத்தான் “தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தில்,

“”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”

என்றார் வள்ளுவர். அதாவது, “செய்யக்கூடாத செயலைச் செய்தாலும் கெடுதல் உண்டாகும். அதேபோல செய்யத் தகுந்த செயலை உரிய நேரத்தில் செய்யவில்லை என்றாலும் கெடுதல் உண்டாகும்’ என்றார். மேலும், காலமறிதல் அதிகாரத்தில், “ஒரு செயலைக் காலம் அறிந்து செய்தால் அதைவிட அரிய செயல் உலகில் வேறொன்றும் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

÷பேங்க் மேனஜரின் குடும்பத்தை மட்டுமல்ல, அவர் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களின் பணத்தையும், நகைகளையும் உரிய நேரத்தில் காப்பாற்றிய பாபுவின் துணிவைப் பாராட்டுவோம்” என்றுகூறி, பாபுவை அருகில் அழைத்து, அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். வகுப்பறையில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது.

– இடைமருதூர் கி.மஞ்சுளா (அக்டோபர் 2013)

Print Friendly, PDF & Email

1 thought on “பாபுவின் துணிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *