கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,178 
 

முன்னொரு காலத்தில், மனாசே என்ற இளைஞன், வேலை ஒன்றும் கிடைக்காமல், மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தான். தினமும் செய்து வருகிற கூலி வேலை கூட அவனுக்கு சரியாகக் கிடைக்கவில்லை. வறுமையோடு போராட்டம் நடத்தியபடி, உண்ண உணவும், உடுக்க உடையும் கூட இல்லாமல், கஷ்டமான நிலையில் வாழ்ந்தான்.

PattiPattiஅது மழைக்காலமானதால், மனாசேவால் எங்கும் அலைந்து திரிந்து வேலை தேட முடியவில்லை. இருந்தாலும், தன் கஷ்ட நிலையைத் தீர்க்க வேண்டுமென்று ஒருநாள், அடை மழையை கூடப் பொருட்படுத்தாமல், தன் கிராமத்தை விட்டு வெளியேறினான்.

கிராமத்தின் எல்லையைக் கடக்கிற நேரம், இடியுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்தபடியே, எப்படியாவது வேலைதேடி விட வேண்டும் என்ற வெறியோடு, கிராம எல்லையைக் கடந்து, ஓர் ஒத்தையடிப் பாதையின் வழியாக நடந்தான் மனாசே.

மழையோ, அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவன் எதிரே, கம்பை ஊன்றி சற்று தள்ளாடியபடி யாரோ வருவதை உணர்ந்தான். மெல்ல மெல்ல அந்த உருவம் தன் அருகே வந்ததும் தான், அந்த உருவத்திற்கு சொந்தமானவள், தள்ளாத வயதுடைய, கம்பு ஊன்றிய வயதான பாட்டி என்பது தெரிந்தது.

பாட்டியின் உடல், மழையில் நனைந்தபடி கிடுகிடுவென்று ஆடிக் கொண்டிருந்தது. பாட்டியால், தரையில் நிற்கக்கூட முடியவில்லை. தள்ளாடியபடி தரையில் விழ வேண்டிய நிலைமையில் இருந்தாள் அந்தப் பாட்டி. பாட்டியின் பரிதாப நிலைமையைக் கண்டதும், ஓடி வந்து பாட்டியைப் பிடித்துத் தாங்கிக் கொண்டான் மனாசே.

பாட்டி, மெல்லத் தன் கண்களை அகல விரித்து, இளைஞன் மனாசேவைப் பார்த்தாள்.

“”அப்பா… இந்த ஊரில் உன்னை இப்போது தான் புதிதாகப் பார்க்கிறேன்! யாரப்பா நீ?” என்று விசாரித்தாள்.

“”பாட்டி! நாம் நலம் விசாரிக்க இந்த இடம் ஏற்றதல்ல! நானும், நீங்களும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம். மழைநீர் நம் உடலில் படாதபடி, சற்று ஒதுக்குப்புறமான இடத்திற்குச் செல்வோம்!” என்று கூறினான் மனாசே.
பாட்டியும், மனாசேயின் அழைப்பிற்கு செவி சாய்த்து, ஒதுக்குப்புறமான இடத்தை நோக்கிச் சென்றாள். இருவரும், ஓர் கல் மண்டபத்தின் உள்ளே வந்து ஒதுங்கிக் கொண்டனர். மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்ட சந்தோஷம், இருவர் முகத்திலும் நிரம்ப இருந்தது.

“”அப்பா! என் மீது அன்பு வைத்து, என்னை மழையில் நனையாதபடி இங்கு அழைத்து வந்ததற்கு மிகவும் நன்றியப்பா! ஆமாம்! நீயும் ஏன் என்னைப் போன்று மழையில் நனைந்து கொண்டு வந்தாய்? உனக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டது!” என்று அன்புடன் வினவினாள்.

இதுவரையிலும் தனக்கு அன்பு காட்ட யாருமேயில்லாத போது, பாட்டி புதிதாகத் தன்னிடம் அன்பு காட்டுவதை நினைத்து மிகவும் சந்தோஷமடைந்தான் மனாசே.
“”பாட்டி! நான் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவன். ரொம்ப நாட்களாக எனக்கு வேலை எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. என் வீட்டில் வறுமை தாண்டவமாட ஆரம்பித்து விட்டது. என் வறுமையைப் போக்க வேண்டி, வேலை தேடிப் புறப்பட்டேன். வருகிற வழியில்தான் உங்களை சந்தித்தேன். உங்கள் அன்பான குணத்தை அனுபவிக்கக்கூடிய பாக்கியத்தைப் பெற்றேன்!” என்றான்.
மனாசேயின் பேச்சு, பாட்டிக்கு மிகவும் பிடித்திருந்தது.

“”அப்பா! வேலை தேட வேண்டும் என்ற எண்ணத்தில் நீ, கடும் மழையைக் கூடப் பொருட்படுத்தாமல் புறப்பட்டு வந்ததற்காக உன்னைப் பாராட்டுகிறேன். அதோடு, தற்போது ஒரு சிலர், என்போன்ற முதியோரை மதிப்பதே இல்லை. அவர்களை கண்டாலே எரிந்து விழுகின்றனர்.

“”திருமணமான ஒரு சில இளைஞர்கள் கூட, தங்கள் மனைவி பேச்சைக் கேட்டு, பெற்ற தாய், தந்தையரை சரிவர மதித்து நடத்தாமல், முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கின்றனர். தங்கள் தாய், தந்தையரை மதித்து, அவர்களை வணங்கி வாழ்ந்தால், மிகவும் சிறப்பான வாழ்க்கை வாழ்வர்.

ஆனால், அவர்கள் அவ்வாறு வாழத் தவறி விடுகின்றனர். மனைவியின் மயக்கத்திலேயே, பெற்ற தாய், தந்தையரை மதிக்கத் தவறி விடுகின்றனர். ஆனால், நீ திருமணமானதும், உன் தாய், தந்தையரை மறந்துவிடாதே! அவர்களை மதித்துப் போற்றி நீ வாழ வேண்டும்!” என்றாள் பாட்டி.
இவ்வளவு விஷயங்களையும் பாட்டி தெளிவாகக் கூறியதைக் கேட்டதும், வியப்பில் ஆழ்ந்தான் மனாசே.

“”பாட்டி! நான் எனக்குக் கிடைக்கிற சொற்ப வருமானத்திலும், என் தாய், தந்தையரை பசி பட்டினியில்லாமல் நன்றாகக் கவனித்து வருகிறேன். அவர்களை சந்தோஷமாக வைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான், இன்னும் அதிகமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற முடிவோடு வேலை தேடி வந்தேன்!” என்று கூறினான்.

பெற்றோர் மீது மிகவும் பாசத்துடன் இருக்கிற மனாசேவை, அன்போடு பார்த்தாள் பாட்டி.

“”அப்பா! பெற்றோரை மதிக்கும் உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதோ, மழையும் சற்றும் ஓய்ந்துவிட்டது. எனவே, நீ என் குடிசைக்கு வர வேண்டும். நான் கொடுக்கிற உணவை அன்போடு சாப்பிட்டுச் செல்ல வேண்டும்!” என்று கூறினாள்.

பாட்டியின் அன்பான அழைப்பிற்கு, மனாசேவால் மறுப்பு சொல்ல முடியவில்லை. பாட்டியோடு குடிசைக்குப் புறப்பட்டான். குடிசையுள் நுழைந்ததும், மனாசேவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
அவன் உடலில் இருந்த, மழையில் நனைந்து கந்தலுடன் காணப்பட்ட ஈர உடை எங்கோ மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக, புத்தம்புது பட்டாடை அவன் உடலைப் போர்த்திக் கொண்டிருந்தது. அவன் கை விரல்கள், தலை, காது எங்கும், தங்க ஆபரணங்களும், வைர நகைகளும் அணியப்பட்டிருந்தன.

திடுக்கிட்டுப் பாட்டியைப் பார்த்தான் மனாசே. பாட்டி எதுவும் பேசிக் கொள்ளாமல், கலயத்தில் இருந்த கஞ்சியைக் கொண்டு வந்து மனாசேயின் கையில் கொடுத்தாள்.

“”அப்பா! இதைக் கண்டு உனக்கு பயமோ, ஆச்சர்யமோ ஏற்படலாம். இந்தக் கலயத்தில் இருக்கும் கஞ்சியைக் குடி. உனக்கு எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன்!” என்றாள்.

கலயத்தில் இருந்த கஞ்சியைக் குடிக்கத் தொடங்கினான் மனாசே. அந்தக் கஞ்சி, அறுசுவை உணவு போன்று இருப்பதை உணர்ந்தான்.

கஞ்சியை குடித்து முடித்ததும், பாட்டியை ஏறிட்டான்.

“”அப்பா! நீ உனது பெற்றோரின் மீது வைத்துள்ள பாசத்திற்காகவும், மனித நேயத்தோடு மழையிலிருந்து என்னைக் காப்பாற்றியதிற்கும் பரிசாக, இந்த தங்கங்களையும், வைரங்களையும் ஏற்றுக்கொள். நீ இனிமேல் கஷ்டப்படத் தேவையில்லை. உன் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்துவிட்டது. இனி நீ தைரியமாக உன் கிராமத்திற்குப் புறப்பட்டுச் செல்லலாம்!” என்று கூறினாள் பாட்டி.

அதைக் கேட்ட மனாசே, செய்வதறியாது திகைத்தான்.

“”பாட்டி! நான் சொல்வதை சற்றுக் கேளுங்கள். நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்கிறவன். எனவே, இந்த நகைகளின் மீது எனக்கு ஆசையில்லை. தயவு செய்து இவற்றையெல்லாம் நீங்களே திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசி ஒன்றே எனக்குப் போதும்!” என்று கூறினான்.

“”அப்பா! நான் எனது தியானத்தின் மூலம், மாபெரும் சக்தியைப் பெற்றுள்ளேன். அந்த சக்திகளை பயன்படுத்தித்தான், உனக்கு இந்த நகைகளைப் பரிசாகத் தந்துள்ளேன். இது நான், உன் மனித நேயத்திற்கு தந்த பரிசு. இதை நீ அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என்று வற்புறுத்திக் கொடுத்தாள்.

மனாசேவால், பாட்டியின் அன்புப் பரிசை மறுக்க முடியவில்லை. பாட்டியின் பரிசை ஏற்று, வெற்றிப் புன்னகையுடன், தன் தாய், தந்தையைப் பார்க்க கிராமத்திற்குப் புறப்பட்டான் மனாசே.

– செப்டம்பர் 24,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *