தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,513 
 

வெகு காலத்துக்கு முன்னர், ஒரு மரம்வெட்டி, காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான்.

திடீரென்று, மரவெட்டியின் கையிலிருந்த கோடரி தவறி, கீழே இருந்த நதியில் விழுந்துவிட்டது.

பரிகாரம்நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அவனிடமிருந்த ஒரே ஆயுதமும் காணாமல் போனதால் பிழைக்க வழியில்லை என்று கதறி அழுதான்.

அவனது அழுகையைக் கேட்டு, நதியிலிருந்த அழகிய தேவதை ஆறுதல் கூறியது. நீரில் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து கொடுத்தது. மரவெட்டி அது தன்னுடையதில்லை என்று கூறி, பெற மறுத்துவிட்டான். அடுத்து, வெள்ளிக் கோடரி ஒன்றைக் காட்டியது. அதுவும் தனதில்லை என்று மறுத்துவிட்டான்.

கடைசியாக ஒரு இரும்புக் கோடரியை எடுத்துக் காட்டியபோது, அதுவே தன்னுடையது என்றான். மரவெட்டியின் நேர்மையைப் பாராட்டிய தேவதை, மூன்று கோடரிகளையுமே பரிசாகக் கொடுத்துவிட்டு மறைந்தது.

மரவெட்டி, தொடர்ந்து மரங்களை வெட்டி விற்பனை செய்து வந்தான். வயதான பின் மரவெட்டியின் மகன், அவனது பணியைத் தொடர்ந்தான். மரங்கள் குறைந்து போனதால், மரவெட்டியின் குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. தங்க, வெள்ளிக் கோடரிகளை விற்றும் வறுமை நீங்கவில்லை.

அதனால், தந்தையைப் போலவே, மரவெட்டியின் மகனும் நதியோர மரங்களை நாடி, வெட்டத் தொடங்கினான்.

மரங்கள் அதிகம் இல்லாததால் மழை குறைந்து, நதி சேறும் சகதியுமாக இருந்தது. மகனின் கோடரியும் நதியில் விழுந்தது. அவனும் தந்தையைப் போலவே கதறி அழுதான்.

அவனது குரலைக் கேட்ட நதி தேவதை வெளியே வந்தது.

தேவதை கூட முன்பு போல பார்ப்பதற்கு அழகாக இல்லை. சேறும் சகதியும் படிந்து அவலட்சணமாக இருந்தது.

“”யார் நீ? ஏன் அழுகிறாய்?” என்று தேவதை கேட்டது.

மரவெட்டியின் மகன் தனது கோடரி நதியில் விழுந்துவிட்டதைக் கூறினான்.

சேற்றில் மூழ்கி எழுந்து வந்த தேவதை, ஒரு கையில் மண்வெட்டியும் மறு கையில் வாளியும் கொண்டு வந்தது.

“”உன் தந்தை மரங்களை வெட்டித் தவறு செய்ததாலும் நானும் அவனுக்குக் கோடரிகளைக் கொடுத்து உதவியதாலுமே இயற்கைக்கு அழிவு நேர்ந்துவிட்டது. அதற்குப் பரிகாரமாக நீ மரங்களை நடு. நான் அவற்றுக்கு எப்படியாவது நீர் ஊற்றுகிறேன். வனத்தை நாம் காத்தால், வனம் நம்மைக் காக்கும்…” என்று அறிவுரை கூறியது.

அவனும் மரங்களை நடுவதற்காக சிறிய செடிகளைத் தேட ஆரம்பித்தான்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *