நாற்பத்து ஒன்றாவது திருடன்!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 14,490 
 

‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதை உங்களுக்குத் தெரியும். அலிபாபாவின் வேலைக்காரியால், திருடர்களின் தலைவன் ஹசன் கொல்லப்பட்டதுவரை தெரிந்திருக்கும். அதற்கப்புறம் நடந்ததைத்தான் இப்போது படிக்கப் போகிறீர்கள்.

ஹசனுக்கு ஃபாத்திமா என்ற மனைவியும் அப்துல் காதர் என்ற மகனும் உண்டு. நகரத்தில் அவர்களைக் குடியமர்த்தி இருந்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அவனை வணிகன் என்றே நம்பி வந்தார்கள். அவன் மனைவிக்கு மட்டும்தான் அவன் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத் தலைவன் என்பது தெரியும். அந்தத் தொழிலை விட்டுவிடும்படி அவனிடம் எவ்வளவோ கெஞ்சிவந்தாள். அவன் கேட்கவில்லை.

தன் கூட்டத்தின் திருடர்களை அலிபாபாவின் வீட்டில் கொதிக்கும் எண்ணெய்க்கு பலி கொடுத்துவிட்டு, தான் மட்டும் தப்பிய ஹசன், வீட்டுக்கு வந்தான்.

ஒரு சுவடியில் இதுவரை நடந்ததை எல்லாம் எழுதினான். தன் மந்திர குகை இருக்கும் இடத்தின் வரைபடத்தையும் குகையின் கதவை திறந்து மூடும் மந்திரங்களையும் குறித்தான். அலிபாபாவின் அங்க அடையாளங்களையும் அவன் வீடு இருக்கும் இடத்தையும் சுவடியில் எழுதிய ஹசன், மனைவியிடம் வந்தான்.

‘‘இந்தச்சுவடியில்எல்லாவற்றையும் எழுதியிருக்கிறேன். இன்று முதல் அலிபாபாவை கொல்லும் முயற்சியில் ஈடுபடப் போகிறேன். ஒரு வேளை அலிபாபா என்னைக் கொன்றுவிட்டால் நீ அந்த குகைக்குச் சென்று வேண்டிய செல்வங்களை எடுத்து வாழ்க்கை நடத்து. நம் மகனை எந்தக் குறையும் இல்லாமல் காப்பாற்று. அவன் மனதில் அலிபாபாவை பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்துவா.அவன் பெரியவனானதும் அலிபாபாவைக் கொல்லவேண்டும்…’’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.

நாட்கள் ஓடின. ஹசன் திரும்பி வரவேயில்லை. அலிபாபாவைக் கொல்லச் சென்ற ஹசனைத்தான் அலிபாபாவின்வேலைக்காரிகுத்திக் கொன்றுவிட்டாளே…

கணவன் இறந்திருப்பான் என்பதை யூகித்த ஃபாத்திமா, மகனுடன் வேறு நகரத்திற்குக் குடிபெயர்ந்தாள்.

கணவனின் திருட்டு சொத்தைப் பயன்படுத்தவோ அலிபாபாவை பழிவாங்கவோ அவள் விரும்பவில்லை.

தன் நகைகளை விற்று ஒரு டையைத் தொடங்கி நடத்தினாள், மகனை பண்புள்ளவனாக வளர்த்தாள். அப்துல்காதரும் தந்தையின் இரகசியங்கள் தெரியாமல் வளர்ந்தான்.

திடீரென ஃபாத்திமா இறந்து போகவே அன்னையின் நகைகள், ஆடைகளை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுக்க விரும்பினான் அப்துல் காதர். அதற்காக ஃபாத்திமாவின் அறையை ஆராய்ந்தபோது அந்தச் சுவடி கண்ணில் பட்டது.

எடுத்துப் புரட்டினான், அதிர்ந்தான்! இறுதியில் அம்மாவின் கையெழுத்தில் சில சொற்கள் காணப்பட்டன:‘என் கணவர் திரும்பி வரவேயில்லை. அலிபாபாதான் கொன்றிருக்க வேண்டும்!’

‘‘அலிபாபா…’’ அலறினான் அப்துல் காதர்.

குகையில் இருந்து தங்க நாணய மூட்டையை எடுத்து வந்த அலிபாபா, அதை தன் குதிரையின் மேல்ஏற்றினார்.காலம்அலிபாபாவை முதியவராக மாற்றிவிட்டிருந்தது இத்தனைக்கும் 50 வயதைத்தான் நெருங்கியிருந்தார் அலிபாபா.

தானும் குதிரை மீது ஏறிய அலிபாபா, ஊரை நோக்கிப் போகத் தொடங்கினார்.

குகையின்மேல்பகுதியில்ஒளிந்து பார்த்துக்கொண்டு இருந்தான் அப்துல் காதர். சுவடியிலிருந்த குறிப்புகளை வைத்து அலிபாபாவை அவன் கண்டுபிடித்துவிட்டான். கடந்த20 நாள்களாக அலிபாபாவைக் கண்காணித்து வந்திருந்தான்.

வாளை உருவிய அப்துல் காதர் குகைப் பக்கம் திரும்பினான். ‘திறந்திடு சீசேம்!’ என்று அவன் சொன்னவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தான்.

அலிபாபாவுக்கு புதிதாக ஒரு கவலை. அவருடைய மகள் சுல்தானா, நகரச் சந்தையில் நகைக்கடை வைத்திருக்கும் அப்துல் காதர் என்ற இளைஞனோடு பழகுவதாகத் தெரிய வந்தது. சுல்தானா ‘திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன்’ என்று அடம் பிடித்தாள். அப்துல்காதரை மனதில் வைத்துத்தான் இப்படிச் சொல்கிறாள் என்பதை அலிபாபா உணர்ந்து கொண்டார்.

அப்துல் காதருக்கு முடிவுகட்ட விரும்பிய அலிபாபா, மாறுவேடம் போட்டுக்கொண்டு சென்று அவனைப் பார்த்தார். திடுக்கிட்டுப் போனார். திருடர் கூட்டத் தலைவன் ஹசனின் முகச்சாயல் அப்படியே இருந்தது அப்துல்காதரிடம்!

அதிர்ந்து போய் வீடு வந்து சேர்ந்தார். ஹசனின் மகனாகிய அப்துல் காதர், தன்னைப் பழிவாங்கத்தான் வந்திருக்கிறான் என்று அலிபாபா யூகித்தார். இப்போது என்ன செய்வது? மகளை எப்படி காப்பாற்றுவது?

அதிகாலையில் எழுந்த அவர், நடுங்கும் கைகளால் பரணிலிருந்து தன் வாளை எடுத்து பயிற்சியில் ஈடுபட்டார்.

எதிரே அமர்ந்திருந்த அலிபாபாவை ஏளனமாகப் பார்த்தான் அப்துல் காதர். இருவரும் அவனுடைய கடையில் தனி அறையில் இருந்தார்கள்.

‘‘நீ என் சொத்துக்களுக்காகத்தான் என் மகளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறாய்’’ என்றார் அலிபாபா.

‘‘உங்கள் சொத்துக்கள் எல்லாம் நீங்கள் உழைத்து சம்பாதித்தவையா?’’

‘‘ அப்துல்காதர்! நீ யார் என்பது எனக்குத் தெரியும்!’’

‘‘அலிபாபா அவர்களே! தங்கள் சொத்துக்களின் ரகசியம் எனக்கும் தெரியும்!’’

‘‘என்னோடு மோதாதே! உன் தந்தையின் கதிதான் உனக்கு ஏற்படும்!’’

‘‘அதையும் பார்க்கலாம்!’’

‘‘மோதிப் பார்த்து விடலாம் வா!’’

‘‘தங்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்!’’

இரண்டு குதிரைகள் காட்டுப் பாதையில் புழுதியைக் கிளப்பியபடி விரைந்தன…

குகை வாசலில் நின்றன அந்தக் குதிரைகள். அப்துல்காதரும் அலிபாபாவும் கீழே குதித்தார்கள்.

‘‘திறந்திடு சீசேம்’’ அலிபாபா நடுங்கும் குரலில் கூற கதவு திறந்தது. இருவரும் உள்ளே நுழைய சாத்திக்கொண்டது…

‘‘நன்றாகப் பார்! உன் தந்தையும் 40 திருடர்களும் கொள்ளையடித்த செல்வம் இதோ கிடக்கிறது! இந்தச் செல்வத்துக்காகத்தானே என் மகளை மணம் செய்ய விரும்பினாய்? இதையெல்லாம் எடுத்துக்கொள்! என் மகளை விட்டு விடு… இல்லாவிட்டால் நீ உயிரோடு வெளியேறமுடியாது!’’&

அலிபாபாவின் அறைகூவலைக் கேட்ட அப்துல்காதர் சிரித்தான். அலிபாபா வாளை உருவினார். ‘‘கிழவனால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணமா?’’

அப்துல்காதர் மறுபடியும் சிரித்தான். சினம் கொண்ட அலிபாபா சீறிப் பாய்ந்தார்.

அப்துல்காதரும் வாளை உருவ, இருவரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள்.

சில நிமிடங்களிலேயே அலிபாபா களைத்துப் போனார். தாறுமாறாக வாளை வீசினார். அப்துல் காதர் சிரித்தபடியே நிதானமாகப் போரிட்டான். இறுதியில் வாளை ஓங்கி வீசினான் அப்துல் காதர். அலிபாபாவின் வாள் எங்கோ பறந்தது. அப்துல்காதரின் வாள் அலிபாபாவின் கழுத்தில் பதிந்து நின்றது. அலிபாபா செய்வதறியாது திகைத்து நின்றார்.

‘‘அலிபாபா அவர்களே! 40 திருடர்களைப் பற்றிக் கூறிய நீங்கள் 41&வது திருடனை மறந்து விட்டீர்களே…’’

‘‘என்ன? 41&வது திருடனா… யாரது?’’ குழப்பமாகக் கேட்டார் அலிபாபா.

‘‘யாரென்று தெரியவில்லையா? அந்த 41&வது திருடன் நீங்கள்தான்!’’

‘‘என்ன… நான் திருடனா?’’

‘‘ஆம், நீங்கள் திருடர்தான்! என் தந்தையோடு 40 திருடர்கள் கொள்ளையடித்த இந்தச் செல்வத்தை இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்களே… நீங்கள் திருடர் இல்லையா?’’ என்றான் அப்துல்காதர்.

அலிபாபாவுக்கு நெஞ்சு படபடத்தது. கால்கள் தடுமாறின. ‘‘அப்துல்காதர்… அது… வந்து … நான்…’’ ஏதோ குழறினார்.

‘‘தமக்கு ஆபத்து வரும் என்று அஞ்சி உங்களைக் கொல்ல முயன்றார் என் தந்தை. நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ள 38 பேரைக் கொன்றீர்கள்! நீங்கள் கொலைகாரார் இல்லையா? நீங்களும் திருடர்தான், கொள்ளைக்காரர்தான்,கொலைகாரர்தான்…’’ இரைந்தான் அப்துல் காதர்.

‘‘இல்லை! இல்லை! நான் கொலை செய்ய… ஆ!’’

அலிபாபா,முழுதாகச்சொல்லிமுடிக்க இயலாமல் அலறினார். இரு கைகளாலும் நெஞ்சைப் பற்றிக்கொண்டு கீழே சாய்ந்தார்.

அலிபாபா கண்விழித்துப் பார்த்தபோது, அவர் குகைக்கு வெளியே அப்துல்காதரின் மடியில் சாய்ந்திருந்தார்.

அலிபாபாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. ‘‘நான் உன் தந்தையாரைக் கொல்லவில்லை…’’ என்று தொடங்கிய அலிபாபா தன் அடிமை வேலைக்காரி மோர்க்கியானா 38 திருடர்களையும் கொன்ற கதையைக் கூறினார்.

அதற்கு அப்துல்காதர், ‘‘என் தந்தையும் திருடர்களும் இறந்ததற்காக நான் வருந்தவில்லை… மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் செல்வத்தை மக்களுக்கே திருப்பித்தர வேண்டும் என்பதுதான் என் ஆசை! இந்த குகையின் ரகசியம் எனக்குத் தெரியும். நினைத்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ வாரிச் சென்றிருக்க முடியும். உங்கள் மகள் மேல் நான் கொண்டிருப்பது உண்மையான அன்பு! அவளை மணந்து, முறைப்படி உங்கள் மருமகனாகி இந்தச் செல்வத்தை எளியவர்களுக்கு வழங்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்!’’ என்றான் அப்துல் காதர்.

அலிபாபவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி மின்னல் வீசி அடங்கியது.

‘‘அப்படியே நடக்கும் அப்துல்காதர்! அப்படியே நடக்கும்!’’

வெளியான தேதி: 01 ஜனவரி ௨௦௦௬

Print Friendly, PDF & Email

2 thoughts on “நாற்பத்து ஒன்றாவது திருடன்!

  1. கதை மிக மிக அருமை. சில இடங்களில் கதை ஓட்டம் விடுபட்டிருதலும், கதையின் போக்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

  2. அலிபாபா கதை நன்றாக இருந்தது, முடிவும் அருமை நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *