தேவதை மகளும், நண்பர்களும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,706 
 

நள்ளிரவின் கரிய இருட்டில் அந்த வீட்டைக் கண்டுபிடித்ததே பெரிய விஷயமாய்ப் பட்டது பட்டாபிக்கு.

“”இனிமேல் நடந்து போய் நம்ம குரூப் மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவங்களும் நம்மைத் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. அதனால ராத்திரி இந்த இடத்துல பாதுகாப்பா இருப்போம். விடிஞ்சதும் ஈஸியா அவங்க கூட சேர்ந்துடலாம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

நேசமலரும், ஷிவானியும் அதிக பயத்தில் இருந்தார்கள். அச்சுதனுக்கும் ஒரே உதறலாய்த்தான் இருந்தது. இதில் அலட்சியமாய் இருந்தது ஜஸ்டின் மட்டும்தான்.
“”இதுல என்ன இருக்கு. இந்த வீட்டுல தங்குறதைத் தவிர வேற வழியே இல்லே. சார் எவ்வளவோ சொன்னாரு. தனித்தனி குரூப்பா காட்டுக்குள்ளே போகாதீங்க. வழி தவறிடும்னு சொன்னாரு. பொழுதுபோன நேரத்துல கூழாங்கற்களைப் பொறுக்க இந்த ரெண்டு பெண்களும் போக நாம மூணு பேரும் இதுகளைத் தேடிகிட்டு இப்போ எங்கோ மாட்டிக்கிட்டோம்…” என்றான் ஜஸ்டின். ஏற்கனவே பயந்திருந்த ஷிவானி அழ ஆரம்பித்தாள்.

“”எங்களாலதானே எல்லாம். இப்ப என்ன செய்யறது?” -அவள் அழ, பட்டாபி அதட்டினான்.
“”ஷிவானி அழறதை விட்டு ஆகப் போறதைப் பாரு. ஜஸ்டின் உன்னோட பென் டார்ச்சை அடி. வீட்டில ஆள் இருக்கிற மாதிரி தெரியலையே..?”
ஐந்து பேரும் தயங்கித் தயங்கி வீட்டின் வாசலை அடைந்தார்கள். அச்சுதன் கதவில் கை வைக்க கதவு திறந்து கொண்டது.
“”ஹா… இதென்ன இவ்ளோ வாசனை. பிஸ்கட், சாக்லேட் வாசனை ஆளைத் தூக்குதே…” என்றான் ஜஸ்டின்.

“”ஷ்ஷ்ஷ்…” டார்ச் உதவியால் வீட்டை ஒரு வட்டம் அடித்தான் பட்டாபி.
“”காட்டுக்குள்ளே திகில் பயணம்னு சும்மா ஜாலிக்கு சொன்னேன். அதுவே நிஜமாயிடுச்சு. ஹலோ… வீட்டுல யாருங்க?”

– எந்த பதிலும் இல்லை. அது ஒரு சின்ன வீடு. ஒரு மூலையில் மேஜையும், ஆறு நாற்காலிகளும் இருந்தன. சுவரில் ஒரு தண்ணீர்க் குழாய் இருந்தது. தரையில் ஒரு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மேஜை மீது காலி தட்டுகளும், டபரா, கரண்டிகளும் இருந்தன. அறை முழுக்க வாசனையாய் இருந்தது.

“”என்னடா இது… பக்கத்துல ஏதாச்சும் பிஸ்கட் ஃபாக்டரி இருக்குமோ?” -அச்சுதன் சொல்ல, நேசமலர் ஒரு டபராவை எடுத்து குழாயைத் திறந்தாள். பாத்திரம் முழுக்க நுரை போல் வர, “”ஆ… இதென்ன தண்ணிக்குப் பதிலா வேற ஏதோ வருது. ஆனா ஸ்ட்ராபெர்ரி வாசனை வருதே” என்றாள்.

அவர்களுக்கு ஓரளவு இருட்டு பழக்கப்பட்டு விட்டது.

நாள் முழுக்க நடந்ததன் களைப்பு, பசி, பயம் இவையெல்லாம் சேர்ந்து வெள்ளை வெளேரென்ற அத்தனை பெரிய மெத்தையைப் பார்த்ததும், ஐந்து பேரும் அதில் ஆளுக்கொரு பக்கம் விழுந்து தூங்க ஆரம்பித்தார்கள்.

“பீப்… பீப்… பீப்…’ -என ஜஸ்டின் கைக் கடிகாரத்தின் அலாரம் ஒலித்தது. வழக்கமாய் ஐந்து மணிக்கு அவன் எழுந்து படிப்பதற்காக அவன் அம்மா செட் பண்ணியிருந்த அலாரம் அது. பழக்கதோஷத்தில் பட்டென்று எழுந்தான் ஜஸ்டின். புலர்ந்துக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அறையில் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. அறையின் சுவரை பார்த்த ஜஸ்டின் “”மை காட்!” என்று கத்தினான். அவன் கத்தல் கேட்டு ஒவ்வொருவராய் விழித்துக் கொண்டனர்.

“”என்னடா…. ஏன் கத்தறே?” கண்களைத் திறக்காமலேயே கேட்டான் பட்டாபி.
“”டேய்… பாருடா அதிசயத்தை. இந்த அறைச் சுவர் பிஸ்கட்டால் ஆனது. பாருடா… முழுவதும் பிஸ்கட் சுவர்” கத்தினான் ஜஸ்டின்.

சுவரை லேசாக சுரண்டிப் பார்த்த ஷிவானி, “”ஆமா… ஆமா…” என்றாள்.

“”ஐயய்யோ… இங்கே பாருங்க” -அலறினாள் நேசமலர். அவள் கையில் நேற்று தண்ணீர் பிடித்த பாத்திரம் இருந்தது. அதில் தண்ணீருக்குப் பதில் ஐஸ்கிரீம் இருந்தது. குழாயைத் திருகினாள். அதிலிருந்து ஐஸ்கிரீம் கொட்டியது.
எல்லோரும் அதிர்ச்சியிலும், ஆனந்தத்திலும் கூக்குரலிட்டனர்.
“”இங்கே பாருங்க… நாம ராத்திரி படுத்திருந்தது வெறும் பெட் இல்லை. பிரெட் பெட்…” என்றான் அச்சுதன். அவர்களுக்கு மேலும் மேலும் ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருந்தன.
ஆவலுடன் ஒரு பாத்திரத்தில் ஐஸ்கிரீமை நிரப்பிக் கொண்டு பெட்டிலிருந்து கொஞ்சம் பிய்த்துக் கொண்டு சாப்பிட்டு மேஜையில் உட்கார்ந்த ஜஸ்டின் சாப்பாட்டுத் தட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, பிரெட்டைப் போட்டு விட்டு வெறும் தட்டை கடித்துத் தின்ன ஆரம்பித்தான்.

“”டேய்… என்னடா செய்றே?” -பட்டாபி கேட்க,
“”இந்தப் பாத்திரங்கள் எல்லாமும்… ஏன் இந்த மேஜை, நாற்காலி எல்லாமே சாக்லேட்டால் ஆனது” என்றான் ஜஸ்டின்.

இதைக் கேட்டதும் ஆனந்த இரைச்சலில் அந்த இடம் அதிர்ந்தது.
ஆளாளுக்கு பெட்டையும், தட்டையும் கடித்துத் தின்ன ஆரம்பித்தார்கள். வழிய வழிய ஐஸ்கிரீம் பிடித்து சாப்பிட்டார்கள். வயிறு நிறைய மட்டும் சாப்பிட்டு ஆட்டம் போட்டார்கள்.

ஒருவகையாய் பசியும், பிரமிப்பும் அடங்கியது.
“”நாம கனவு காணலியே…” இரண்டாவது தட்டை மென்று கொண்டே கேட்டான் அச்சுதன்.

“”சேச்சே… அஞ்சு பேரும் ஒரே மாதிரி கனவா காண முடியும். இது நிஜம்” என்றாள் ஷிவானி.

“”அப்படின்னா இந்த அதிசய வீடு யாருடையது? ஒண்ணுமே புரியலையே.” -இது அச்சுதன்.
“”சரி… விடிஞ்சிடுச்சு… நம்ம பசியும் அடங்கிடுச்சு… புறப்படலாமா?” -கேட்டான் பட்டாபி.
“”ஐயோ… இந்த அதிசய வீட்டை விட்டு எப்படி வர்றது? இப்படி ஒரு வீடு இருக்கிறதா வெளில சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்களே…” -நேசமலர் அங்கலாய்த்தாள்.
அப்போது திடீரென்று வெளியே விமானம் தரையிறங்குவது போல் பெரும் சப்தம் எழுந்தது. பயந்து நடுங்கிப் போன சிறுவர்கள் மேஜைக்கடியில் புகுந்து கொண்டனர். கதவைத் திறந்து மிகப் பெரிய பறவை ஒன்று உள்ளே வந்தது.

அதன் சிறகில் அழகான சின்னஞ் சிறுமி ஒருத்தி இருந்தாள். அச்சிறுமி குட்டி சூரியனைப் போல பிரகாசித்தாள். அவளது ஆடை முழுக்க நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. தலையில் பிறைநிலவை சூடியிருந்தாள். ஆனால், அவள் முகம் மட்டும் சோர்ந்து இருந்தது. சிறுமியை இறக்கிவிட்ட பறவை அவள் முன் மண்டியிட்டது.

“”தேவதை மகளே… உன்னை நாள் முழுதும் பராமரிக்கும் வேலைக்காரப் பறவையாகிய நான் என்ன செய்தும் உன்னைச் சிரிக்க வைக்க முடியவில்லை. மாலையில் உன்னைக் காண வரும் உன் தாய் என்னை கோபிக்கிறார்கள். உனக்கென பிஸ்கட்டால் வீடு கட்டி பிரெட், சாக்லேட், ஐஸ்கிரீம் என்று நீ விரும்பியது போல் வீட்டை வடிவமைத்திருக்கிறேன். இருந்தாலும் நீ சந்தோஷப்படவில்லை. என்ன காரணம்?” என்று கேட்டது.

தேவதை மகள் மவுனமாக மேஜையைப் பார்த்தது. அவள் பார்வை போன திசையைப் பார்த்த வேலைக்காரப் பறவை மேஜைக்கடியில் பார்த்து உருமியது. அவ்வளவுதான் ஐந்து பேரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.
“”யார் நீங்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்?” -அதட்டியது பறவை.

காட்டுச் சுற்றுலா வந்த இடத்தில் வழி தவறி விட்டதை விளக்கிக் கூறினான் பட்டாபி.
“”தயவு செய்து எங்களை மன்னிச்சிடுங்க. நாங்க தெரியாம வந்துட்டோம். நாங்க வெளியே போயிடறோம்” என்றார்கள் ஒருமித்தக் குரலில்.
வேலைக்காரப் பறவை யோசித்தது.

“”பொழுது விடிந்து விட்டது. இனி யாரும் வெளியே போக முடியாது. இருட்டினால் தான் வெளியே போக முடியும். வேறு வழியில்லை. மாலை வரை அமைதியாக உட்கார்ந்திருங்கள்” என்று பணித்தது.
எல்லோரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் பொறுமையாக ஒரே இடத்தில் உட்கார முடியும்? அச்சுதன் நைஸôக ஜஸ்டினிடம், “”விளையாடலாமா?” என்று கேட்டான்.

ஜஸ்டின் தலையாட்ட அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். விளையாட்டு களைகட்டத் துவங்கியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை மகள் “”நானும் வரலாமா” என்று கேட்க, சந்தோஷமாக வரவேற்றார்கள்.

நேரம் செல்லச் செல்ல சிரிப்பும், கும்மாளமும் காதைப் பிளந்தது. தேவதை மகள் ஆனந்தமாக விளையாடினாள். வேலைக்காரப் பறவை இதையெல்லாம் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தது.

தேவதை மகள் முகம் பிரகாசமாய் மலர்ந்திருந்தது.
“”இந்த சந்தோஷத்துக்குக் காரணம் என்ன?” என்று தேவதை மகளிடம் கேட்டது பறவை.
“”இத்தனை நண்பர்களுடன் சேர்ந்து நான் விளையாடியதே இல்லை. எனக்கு இதுவரை நண்பர்களும் இல்லை. நட்பு என்றால் என்ன என்று இன்றைக்குப் புரிந்து கொண்டேன். நீ எனக்காக என்ன செய்தாலும் நண்பர்களுடன் இருப்பதைப் போன்ற சந்தோஷம் வராது” என்றாள்.

“”சரி… நேரமாகிறது கிளம்புவோம்” -வேலைக்காரப் பறவை சிறகை விரிக்க, தேவதை மகள் நண்பர்களிடம் விடை பெற்றாள்.

“”உங்களை மறக்கவே மாட்டேன். ஆசைப்பட்டவை அத்தனையும் கிடைத்தாலும் நல்ல நண்பர்கள் கிடைப்பதுதான் பெரிய விஷயம். நாம் இனியும் நண்பர்களாகவே இருப்போம்… வருகிறேன்.” பறவை தேவதை மகளுடன் பறந்தது.
ஐந்து பேரும் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

ஒருநாள் முழுதும் எங்கே இருந்தீர்கள்?” என்று ஆசிரியர் கேட்டார்.
“”வழி தவறி காட்டில் நடந்து கொண்டே இருந்தோம். இரவு ஒரு ஓடக் கரையில் தங்கியிருந்தோம்” என்றான் பட்டாபி. மற்ற நால்வரும் அதை ஆமோதித்தார்கள்.
தேவதை மகளின் நல்ல நட்பை இழக்க அவர்களுக்கு மனதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *