தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,220 
 

மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை அறிந்து அரசரிடம் நல்ல யோசனைகளைத் தெரிவித்து வந்ததால் நாட்டில் சுபிட்சம் நிலவியது.

தருமம்ஒருநாள் அமைச்சரிடம் மன்னர், நாட்டில் தரும சிந்தனை மக்களிடம் இருக்கிறதா என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர், யாசிப்பவர்கள் இருந்தால்தானே மக்கள் தருமம் செய்வார்கள். தங்கள் நல்லாட்சியில் இரப்போரே இல்லையே என்றார். இருந்தாலும் மன்னர் ஒரு முடிவெடுத்தார்.

மன்னரும் மந்திரியும் பிச்சைக்காரர்கள் போல மாறுவேடம் அணிந்து சென்று மக்களிடம் இன்னும் தரும சிந்தனை இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி இருவரும் மாறுவேடம் அணிந்து, ஒருநாள் இரவு, நகரிலுள்ள ஒரு தெருவுக்குச் சென்று, ஒரு வீட்டு வாசலில் நின்று யாசித்தனர்.

வீட்டுக்குள் இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியே வந்து, இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் திரும்பிச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள், இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று, அமரச் செய்து தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவு பரிமாறினாள்.

சாப்பாடு முடிந்ததும், இருவரும் அந்தப் பெண்ணிடம், “”அம்மா, உணவு நன்றாக இருந்தது. வயிறாரச் சாப்பிட்டோம்” என்றனர்.

அதற்கு அந்தப் பெண், “”நீங்கள் வெளியூரா?” என்று கேட்டாள்.

“”ஆமாம், பல ஊர்கள் சென்று வருகிறோம்….” என்றார் அமைச்சர்.

உடனே, அந்தப் பெண், “”அதானே பார்த்தேன்… இந்த ஊரில் யாரும் பிச்சை எடுப்பதில்லையே… அதனால் நீங்கள் அசலூராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்…” என்றாள்.

உடனே இருவரும் வேடத்தைக் கலைத்துவிட்டு தங்கள் சுய உருவத்தைக் காட்டினர்.

வந்திருப்பது யார் என்பது தெரிந்ததும் அவள் மன்னரை வணங்கினாள்.

மன்னர், அந்தப் பெண்ணுக்குப் பரிசளித்துவிட்டு “”நம் நாட்டில் தருமம் இன்னும் காப்பாற்றப்படுகிறது…” என்று கூறி மகிழ்ந்தார்.

– என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம். (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *