தன்வினை தன்னைச் சுடும்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,143 
 

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் கெட்டிக்காரன். அடுத்தவனோ கள்ளம் கபடு அறியாத பால்மனம் கொண்டவன்.

மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. இளையவனுக்குத் திருமணம் முடியவில்லை.

தன்வினை தன்னைச் சுடும்விவசாயி மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

அதனால் மூத்த மருமகளின் அதிகாரம் அந்த வீட்டில் அதிகமாக இருந்தது.

விவசாயிக்கு இருபது ஏக்கர் நிலம் இருந்தது. பத்து ஏக்கர் நிலம், காவிரி ஆறு ஓடும் அருகில் நல்ல நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது. ஆனால் அடுத்த பத்து ஏக்கரோ, மண் இறுகிக் கெட்டியாகி பாறைகள் நிறைந்திருக்கும் இடத்தில் அமைந்திருந்தது.

அந்த நிலத்தில் விவசாயி எந்த சாகுபடியும் செய்வதில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக வரும் முன்னோர் நிலம் என்பதால் அதை விற்காமல் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

ஆற்றுப் பாசனம் அருகில் இருக்கும் இடத்தில் ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்து சாமர்த்தியமாக சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் அவருக்குக் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே பெரியவனும் சின்னவனும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் நன்கு பரிசோதித்துவிட்டு இன்னும் 72 மணி நேரம் தாண்டினால்தான் தங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கூறினர். பிள்ளைகள் இருவரும் சோர்ந்து போயினர்.

விவசாயி தனக்கு ஏற்பட இருக்கும் சாவை நினைத்து அச்சம் கொண்டார். தன் உடல் நிலையை நினைத்து நிச்சயம் தான் உயிருடன் இருக்க மாட்டோம் என்று தீர்மானித்தார்.

எனவே இரண்டு மகன்களையும் அழைத்தார். அப்போதுதான் சின்னவன் அவருக்கு உணவு எடுத்து வருவதற்காக வீட்டுக்குச் சென்றிருந்தான். பெரியவன் மட்டுமே அவரது அருகில் இருந்தான். கைகட்டி வாய்பொத்தி அப்பா அருகில் நின்று கொண்டிருந்தான்.

அவனை அருகில் அழைத்த விவசாயி, இளையவன் எங்கே என்று சைகையால் கேட்டார்.

அவனும் விவரமாகக் கூறினான். அதற்குள் அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. மார்பு வலி மீண்டும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார்.

உடனே தனது சக்தியை எல்லாம் திரட்டி, “”பெரிய தம்பி, இனி நான் பிழைக்கப் போவதில்லை. அதனால் என் சொத்துக்களை உங்களுக்கு எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்று சொல்லி விடுகிறேன். இப்போது சின்னவன் இல்லை. நான் சொத்தை எப்படிப் பிரித்தேன் என்பதை நீயே அவனிடம் சொல்லிவிடு. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ வேண்டும். உன் தம்பிக்கு நீயே நல்ல இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைக்க வேண்டும்..

நமக்கு மொத்தம் இருபது ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பத்து ஏக்கர் நல்ல ஆற்றுப்பாசனம் கொண்டது. அடுத்த பத்து ஏக்கரோ விவசாயம் செய்ய தகுதியற்றது. ஆனால் அது நம் முன்னோர்களின் பரம்பரை சொத்து. ஆகவே அதை விற்றுவிடாதீர்கள். ஆற்றுப்பாசனம் கொண்ட நிலத்தை ஆளுக்கு ஐந்து ஏக்கராகவும் பாறை நிலத்தை ஆளுக்கு 5 ஏக்கராகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இதுவே எனது ஆசை. இதை நீ நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு உயிர் விட்டார் அந்த விவசாயி.

அந்தச் சமயம் பார்த்து மூத்தவனின் மனைவி தனது மாமனாரைப் பார்ப்பதற்காக அங்கே வந்தாள். தந்தை சொத்தைப் பிரிக்கும் விவரத்தைத் தன்னிடம் கூறியிருப்பதாக மனைவியிடம் கூறினான் பெரியவன்.

“”அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவனது மனைவி.

அப்போது இளையவன் சாப்பாட்டுடன் அங்கே வந்து சேர்ந்தான்.

“”ஏம்ப்பா, சோறு கட்டிக் கொடுத்துவிட்டு நானே விரைவாக வந்து விட்டேன். ஆனால் நீ வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம்? உன் அப்பா உன்னை அழைத்தார். நான் அப்பவே சோறு கொடுத்து அனுப்பிவிட்டதாகக் கூறினேன். நீ எங்காவது யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பாய் என்று நினைத்தவர் பொறுப்பற்றவன் என்று உன்னைத் திட்டினார். பின் அவரிடம் உள்ள சொத்துக்களை எப்படி இருவரும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு நா குழற ஆரம்பித்துவிட்டது. கை மட்டும் வயிற்றைக் காட்டி பசி, பசி என்று கூறுவது போலத் தெரிந்தது. நாங்கள் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தோம். அடுத்த சில விநாடிகளில் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. இப்போது மருத்துவரிடம் சொல்லப் போகிறோம்” என்று கூறிவிட்டுப் பொய்யாக அழுதுவிட்டுத் தனது கணவனைக் கூட்டிக் கொண்டு சென்றாள் அந்தப் பெண்.

இளையவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

“”அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். என் சைக்கிள் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால் அதைச் சரிசெய்து கொண்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. என்னை மன்னியுங்கள்…” என்று அவரைக் கட்டிக் கொண்டு அழுதான் இளையவன்.

பின்னர் டாக்டர் வந்து செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்தார்.

நாட்கள் ஓடின… ஒரு பத்திரத்தை எடுத்து வந்து இளையவன் முன் நீட்டினான் பெரியவன்.

“”என்ன அண்ணா இது?” என்று கேட்டான் இளையவன்.

“”நம் அப்பா சாகும்போது கூறியபடி, உனக்குப் பாறையாக இருந்த பத்து ஏக்கரையும் இதில் எழுதிக் கொடுத்திருக்கிறேன். அப்பா படுத்த படுக்கையாக இருந்தபோது நீ சாப்பாடு கொண்டு வரத் தாமதம் செய்ததால் உன்மேல் கோபம் கொண்டு, இறுகிய மண் உள்ள பத்து ஏக்கர் நிலத்தையே உனக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டார். இந்த விஷயத்தில் தான் எடுத்த முடிவை ஒருபோதும் மாற்றக்கூடாது என்றும் அப்படி மாற்றினால் தனது ஆன்மா சாந்தி அடையாது என்றும் இப்படிச் செய்தால்தான் உனக்குப் பொறுப்பு வந்து அவரை மாதிரி உழைத்து முன்னுக்கு வருவாய் என்று கூறி என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு உயிரைவிட்டார் அப்பா!” என்றான் பெரியவன், தனது மனைவி சொல்லிக் கொடுத்தபடி.

இளையவன் அந்தப் பத்திரத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

“”அப்பா உங்கள் அறிவுரை வீண் போகாது. நான் அதே பாறை நிலத்தில் எனது முழு உழைப்பையும் திறமையையும் காட்டி நீங்கள் நினைத்ததுபோல முன்னேறுவேன். இது சத்தியம்!” என்று அழுதபடி, அவரது படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

அவன் ஏதாவது பிரச்னை பண்ணி விடுவானோ என்று பயந்து கொண்டிருந்த பெரியவனும் அவனது மனைவியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பெரியவனின் நிலம் நல்ல ஆற்றுப்பாசனம் என்பதால் அவனுக்கு விளைச்சல் நன்றாக இருந்தது.

சின்னவன் தன் தந்தையின் படத்தைத் தனது நிலத்தில் வைத்து அதற்குப் பூமாலை ஒன்றைப் போட்டு வணங்கிவிட்டு நிலத்தை உழ ஆரம்பித்தான். ஆனால், அவனால் அந்த நிலத்தைக் கொஞ்சம்கூட உழ முடியவில்லை.

வெகுநேரம் கஷ்டப்பட்டுவிட்டு, ஒரு கோடரியை எடுத்து அந்தப் பாறைகளை உடைக்க முயற்சித்தான்.

அப்போது, ஏதோ வழுவழுப்பான் பழுப்பு நிறம் கொண்ட கல் ஒன்று சிதறி உடைவது அவனுக்குத் தெரிந்தது. அட, என்ன இது? இங்கே உள்ள பாறை வித்தியாசமாக வழுவழுப்பாக இருக்கிறதே! இது என்ன பாறை? என்று வியந்து கொண்டே மேலும் வெட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! எங்கு பார்த்தாலும் ஒரே பளபளக்கும் வழுவழு கற்களாக இருந்தது. சூரிய வெளிச்சத்தில் அந்தப் பாறைகள் மின்னி அவனது கண்களைக் கூசச் செய்தன.

இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக, கட்டிடக்கலை தெரிந்த தனது நண்பனைச் சந்திக்க ஓடினான். அவனிடம் விவரம் கூறினான். அவனும் உடனே கிளம்பி அந்த நிலம் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

அந்த வழுவழு பாறைகளைப் பார்த்ததும் அவனுக்கு நா எழவில்லை.

“”நண்பா, இனி நீ ஒரு மகாராஜாவுக்குச் சமமான பணக்காரன். ஆம்! இந்தக் கற்கள் எல்லாம் சாதாரணக் கற்கள் அல்ல! இவை அத்தனையும் வீடு கட்ட உதவும் வண்ண கிரானைட் கற்கள். இப்போதெல்லாம் இதை வைத்துத்தான் வீட்டை எல்லோரும் அழகுபடுத்துகிறார்கள். உன் நிலம் சாதாரண நிலமல்ல! விலையுயர்ந்த கற்களைக் கொண்ட சுரங்கம்” என்றான் தனது நண்பனைக் கட்டிக் கொண்டு.

இளைய மகன் சந்தோஷம் தாங்க முடியாமல் தனது தந்தையின் படத்துக்கு அருகே சென்று மீண்டும் அவரை வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டான்.

இப்போது, ஊரின் பெரும் பணக்காரர்களில் பெரும் பணக்காரன் அந்த இளைய மகன். சொந்தமாகத் தனக்கென வியாபாரம் ஆரம்பித்து, கற்களை வெட்டி எடுக்கவும் விற்கவும் பல தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு நல்ல சம்பளமும் கொடுத்தான்.

நல்ல பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு உயர்ந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.

மூத்தவனும் அவனது மனைவியும் தாங்கள் செய்த தவறை எண்ணி வருந்தினர்.

– ஜி.சுப்பிரமணியன் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *