கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 21,166 
 

ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர் தனது தாத்தா, பாட்டி பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தாள்.

அவளின் பாட்டி மார்கரெட் ஒரு ஆசிரியை, தாத்தா மார்டின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஜெனீஃபரின் தாத்தா, பாட்டி இருவரும் கோடை வெயிலில் நிழல் தரும் மரம் போலத் தங்கள் பேத்தியைக் காப்பாற்றி வந்தனர்.

ஜெனீஃபர்

வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. ஜெனீஃபரின் பாட்டி ஆசிரியர் என்பதால் அவளுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் ஒருசேர போதித்தார். பணிவு, தாழ்மை, அன்பு, நேர்மை இவைகளையே அவளுக்கு அணிகலன்களாக அணிவித்து மகிழ்ந்தனர் தாத்தா, பாட்டி இருவரும்.
அதே சமயம், தாத்தா மார்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்பதால் வீரத்தையும் விவேகத்தையும் தனது பேத்திக்கு நாளும் கற்றுத் தந்தார். ஜெனீஃபர், தான் மாவட்ட ஆட்சித் தலைவராகி ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று அடிக்கடி தன் தாத்தாவிடமும், பாட்டியிடமும் கூறுவாள்.

ஜெனீஃபர் எல்லா உயிரினங்களிடமும் இறைவன் இருப்பதாக நினைப்பவள்.
ஒரு முறை தன் பேத்திக்காக தாத்தா மார்ட்டின், அழகிய கிளியை அதன் கூண்டுடன் வாங்கி வந்தார்.

“”அம்மா, ஜெனீஃபர் பார்த்தாயா, நான் உனக்கு அழகிய கிளியை வாங்கி வந்துள்ளேன். இது பேசும் கிளியம்மா” என்று ஆசையாக தன் பேத்தியிடம் கூறினார்.

“”தாத்தா, ரொம்ப நன்றி…. ஆனால், இந்தக் கூண்டுக்கிளி எனக்கு வேண்டாம். சுதந்திரமாகப் பறந்தால்தான் அது பறவை… இல்லாவிட்டால் அது நம் அடிமை. எல்லாப் பறவைகளும் சுதந்திரமாக இருக்கத்தான் விரும்பும். என்னை நீங்கள் ஓர் அறையில் அடைத்து வைத்து விட்டால் நான் எவ்வளவு கஷ்டப்படுவேன். அது போலத்தானே இந்தக் கிளியும் கஷ்டப்படும். இந்த கிளியும் சுதந்திரப்பறவைதானே..! இதோ இப்போதே இதைப்பறக்கவிட்டு விடுகிறேன் பாருங்கள்” என்று பேசிக் கொண்டே கூண்டைத் திறந்து விட்டாள்.

அவ்வளவுதான்… அந்தக் கிளி சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில், ஜெனீஃபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவளை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே வேகமாகப் பறந்து சென்றது.

எண்ணம் நல்லதாக இருந்தால் எங்கும் சந்தோஷமாக இருக்கும் என்பதால் ஜெனீஃபர் எப்போதும் நல்லவற்றையே சிந்திப்பாள். தன்னை அறியாமல் செய்யும் தவறுகளைப் பற்றிக்கூட கவலைப்படுவாள். அதை உணர்ந்து தனது சிறிய தவறையும்கூட பெரிதாக நினைத்து அதனைச் சரிப்படுத்த முயற்சிப்பாள்.

மற்றவர்களிடம் இருக்கும் குறைகள் பெரிதாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களையே பெரிதாகக் கருதுவாள். தன்னுடன் பழகும் அனைவரிடமும் அன்பாக இருப்பாள். அதனால், அவளுடன் பயிலும் மாணவிகள் அவளுடன் பழக ஆவலாக இருப்பார்கள்.

ஒரு முறை ஜெனீஃபர் பள்ளியில் ஒரு நாடகத்தில் நடிக்க தன் பெயரையும் கொடுத்திருந்தாள். அவள் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்ற வதந்தியை நம்பி தன்னை அழகு செய்து கொண்டு பல நாட்கள் ஒத்திகையும் பார்த்துக் கொண்டாள். ஒத்திகையின் போது அவள் சிறப்பாக நடிப்பதைக் கண்டு தாத்தாவும், பாட்டியும் ஆச்சரியப்பட்டார்கள்.

“”அம்மா ஜெனீஃபர் நீ நடிக்கிற இந்த நாடகத்திற்குத் தானம்மா முதல் பரிசு கிடைக்கும்” என்று தாத்தா கூறினார்.

அன்று பள்ளிக்குச் சென்ற போது அவள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற ஏமற்ற செய்தியே அவளுக்குக் கிடைத்தது. அன்று மாலை வீட்டிற்குத் திரும்பியதும் அவள் தன் தாத்தாவிடம் “”தாத்தா, நான் நாடகம் நடக்கும்போது அதை ரசித்துக் கைதட்டத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்” என்று சிரித்தபடியே கூறினாள்.

தன்னைத் தாழ்த்துபவன் உயர்கிறான் என்பதை தாத்தா உணர்ந்து கொண்டார். அது முதல் தாத்தா அவருக்கு எப்பொழுதாவது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால் மனத் தளர்ச்சி ஏற்பட்டால் தனது பேத்தி ஜெனீஃபர் சொன்னதை நினைத்துக் கொள்வார். ஜெனீஃபருக்குக் கிடைத்த ஞானம் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்.

ஜெனீஃபர் ஒரு நாள் கூட பள்ளிச் செல்லத் தவறியதே இல்லை. ஒரு நாள் அவளுக்கு நல்ல காய்ச்சல். பாட்டி அவள் உடம்பு அனலென சுடுவதைக் கண்டு மனம் வருந்தி மருந்து கொடுத்து, போர்வையைப் போர்த்தி படுக்க வைத்தார்.

காலை மணி 8 அடித்தது. அவ்வளவுதான்… ஜெனீபர் போர்வையை உதறி மடித்து வைத்துவிட்டு, கை, கால்களைக் கழுவி பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகி, புத்தகப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வேகமாகப் புறப்பட்டாள்.

அப்போது, அங்கு வந்த தாத்தா,””அம்மா ஜெனீபர்… உனக்குத்தான் நல்ல காய்ச்சலாச்சே… ஒரு நாள் பள்ளிக்கூடம் போகவில்லை என்றால் என்னம்மா? பேசாமல் படுத்து ஓய்வு எடுத்துக்கொள். உடம்பை அலட்டிக் கொள்ளாதே” என்றார்.

“”பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா? ஒரு நாள் பள்ளிக்கு நான் போகவில்லை என்றால், ஆசிரியர் நடத்தும் பாடத்தை கேட்க முடியாமல் போகும். அதனால் எனக்குத்தானே நஷ்டம். ஓய்வு என்ற போர்வையில் வெறுமனே படுத்திருந்தால் நோய் தான் வரும் தாத்தா. ஆண்டவனின் அருளும் பாட்டி மற்றும் உங்களின் அன்பும், ஆசீர்வாதமும் இருக்கும் போது எனக்கு ஒரு நோயும் குறையும் அண்டாது தாத்தா” என்று சொல்லிக்கொண்டே பள்ளிக்கு நடைபோட்டாள் ஜெனீஃபர்.

ஒரு நாள் கூடத் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஜெனீஃபரின் மன உறுதியைக் கண்டு வியந்தார் தாத்தா மார்டின்.
அன்று மாலை வீடு திரும்பிய ஜெனீஃபர் தன் பாட்டியிடம் அழகானதொரு புத்தகத்தைக் காட்டினாள்.

“”பாட்டி, இந்தப் புத்தகத்தை எனது ஆசிரியர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். எனக்குக் காய்ச்சல் இருந்த போதும் பள்ளிக்கு வந்ததையும் நாள் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற எனது குறிக்கோளையும் எனது ஒழுக்கத்தையும் வியந்து, பாராட்டி இந்த திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். அது மட்டுமா, இன்று அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தேர்வுக்கான கால அட்டவணையையும் எழுதிப் போட்டார். இன்று நான் பள்ளிக்குச் செல்லவில்லை எனில் தேர்வையே மறந்திருப்பேன். நான் படிக்கப் போகிறேன்..” என்று கூறிவிட்டுப் பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டாள்.

அடுத்த நாள், பள்ளியின் ஆண்டு விழா. பள்ளியே விழாக் கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றதற்கான பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், தலைமையாசிரியரும் ஆசிரியர்கள் அனைவரும் பதற்றமாக இருந்ததோடு, அரங்கத்தில் அவர்கள் கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.

ஏனெனில், அன்று ஆண்டு விழாவின் முத்தாய்ப்பாக நாடகம் நடைபெறுவதாக இருந்தது. நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருந்த மாணவி அன்று உடல்நலக் குறைவால் பள்ளிக்கு வரவில்லை.

ஜெனீஃபர், தன் தாத்தாவும், பாட்டியும் பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்றிருந்தாள்.

“”அதோ, ஜெனீஃபர் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் பாருங்கள் டீச்சர்…” என்று வகுப்பு ஆசிரியர் கூறியவுடன்தான் தலைமையாசிரியருக்கு உயிரே வந்தது.

அவர் ஜெனீஃபர் அருகில் வந்து, தனது இக்கட்டான நிலைமையை எடுத்துரைத்து, நாடகத்தில் நடித்து பள்ளிக்கு நற்பெயர் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஜெனீஃபரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், தலைமை ஆசிரியரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நாடகத்தில் நடித்தாள்.

அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் சிறந்ததாக அந்த நாடகமே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெனீ ஃபரும் அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றதோடு, சிறந்த நடிப்புக்கான பரிசையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றாள். தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் ஜெனீஃபரின் நடிப்பைப் பாராட்டி வாழ்த்தினர்.

“”அம்மா, உன் நடிப்பு பிராமதம்! உன் நம்பிக்கை வீண் போகவில்லை… முயற்சி திருவினையாக்கும்” என்று சொல்லி தாத்தாவும், பாட்டியும் கண்ணீர்த்துளியுடன் ஜெனீஃபரை ஆரத் தழுவிக் கொண்டனர்.

– பா.இராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *