கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 7,508 
 

சின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றி தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள். பக்கத்து காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்த காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க” , ” சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்கு சின்னு மரம் காட்டின் முக்கிய சின்னமாக கருதப்பட்டது.
அது சரி அது என்ன அணில் மரம். அந்த கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குமா?. முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது.பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களை போல அமைதியாக நல்ல பிள்ளையாக தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம். எந்த மரத்திற்கு சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது.குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க.மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என சொல்லும்.வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர்.சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.
சின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்? பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்த கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டன்ர்.
சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்கு பயந்து இருந்தது.இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது.” நாங்கள் அனைவரும் உனக்கு தினமும் வேண்டிய உணவினை தருகிறோம்.இந்த மரத்தைவிட்டு வரவே வராதே” என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர்.
அதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம்,புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தை காண வந்தது.
மரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும்.காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு,மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன.முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவொ செய்தது.
தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது.அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது.சின்ன சின்ன வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பித்தது.உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது.நல்ல அணிலாக மாறிவிட்டது.சில மாதங்களில் அந்த பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களை போன்று மாறிவிட்டது. பொறுப்பு வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது.ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்கு சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்க சொல்வது அந்த காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *