கொக்கும் மீனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 10,450 
 

ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது, அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது.

அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்க்கு நினைவுக்கு வந்தன. “கொக்குகள் நிற்கும் இடத்தைக் கண்டால் அங்கே போகாதே, அவை மீன்களைப் பிடித்துத் தின்றுவிடும்” என்று அது கூறியிருந்தது. எனவேதான் அந்தக் கொழுத்த மீன் கொக்கைக் கண்டவுடன் பயந்து நின்று விட்டது.

ஆனால், அதைக்காட்டிலும் சிறிய மீன்களெல்லாம் சிறிதும் அச்சமில்லாமல் மடைவாய் வழியாகச் சென்று கொண்டிருந்தன. கொக்கு நிற்பதைப் பற்றி அவை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள் தன்னைக் கடந்து செல்வதை அந்தக் கொக்கு கவனித்ததாகவும் தெரியவில்லை. அது சும்மா நின்று கொண்டிருந்தது.

அந்தக் கொழுத்த மீன் குஞ்சு சிறுது நீரம் நின்று பார்த்தது. ‘இந்த கொக்கு ஏமாளிக் கொக்கு போலிருக்கிறது! இத்தனை மீன்களில் ஒன்றைக் கூடப் பிடித்துத் தின்னவில்லை. இவ்வளவு சின்ன சின்ன மீனெல்லாம் அந்தக் கொக்குக்குப் பயப்பாடாமல் போகும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு அதுவும் புறப்பட்டது.

மடைவாயை அந்தக் கொழுத்த மீன்குஞ்சு நெருங்கியது. திடீர் என்று அதன் மண்டையில் ஒரு குத்து விழுந்தது, அதற்குத் தலை சுழன்றது; மயக்கம் வந்தது. அதே சமயம் கொக்கு அதைப் பிடித்துக் கொன்று தின்றது.

மறுபடியும் அந்தக் கொக்கு, இன்னொரு கொழுத்த மீன் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு மடைவாயின் கரையில் நின்று கொண்டிருந்தது.

கருத்துரை: ஓடுகிற மீனையெல்லாம் ஓட விட்டு விட்டுப் பொருத்தமான மீன் வரும்போது சட்டென்று கொத்தித் தின்றுவிடும் கொக்கு; அடக்கமாக உள்ளவர்கள் கொக்குப் போல தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களே; அவர்களை ஏமாளிகள் என்று எண்ணிவிடக் கூடாது.

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம் – முதற் பாதிப்பு ஜனவரி 1965.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *