கல்விதான் நமக்கு செல்வம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 15,781 
 

மரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன் அதிகமாக கல்வி அறிவு இல்லாதவன்.ஆனால் அவன் தந்தை நல்ல கல்வி அறிவு பெற்றவராக இருந்ததால் இவனையும் கல்வி கற்க குருகுல வாசகத்துக்கு அனுப்பினார். என் தந்தைதான் மன்னர், அதற்கடுத்து நான்தான் மன்னராவேன், அப்புறம் எதற்கு படிக்கவேண்டும்? என்று குருவிடம் விதண்டாவாதம் செய்தான். குருவும் எத்தனையோ சொல்லிப்பார்த்தார்.

கல்வி என்பது மற்றவர்களை விட ஆளப்போகும் மன்னனுக்கு முக்கியம் என்று, இவன் கேட்காமல், குருவுக்கு தெரியாமல் அரண்மனைக்கு வந்துவிட்டான். அவன் தந்தையும் எத்தனையோ அறிவுரைகள் சொன்னார். கடைசி வரை இவன் கேட்கவேயில்லை. இந்த வருத்தத்திலேயே மன்னர் நோய்வாய்ப்பட்டு சிறிது காலத்துக்குள் இறந்து விட்டார்.

வாரிசுப்படி கோசலன் அடுத்த மன்னனாக முடிசூடப்பட்டான். கல்வி இல்லாமலேயே நான் மன்னனாகிவிட்டேன் என்ற கர்வம் அவனிடம் ஏற்பட்டது. தந்தையிடம் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து சான்றோர்களையும், வீட்டுக்கு அனுப்பி விட்டு அவனைப்போல கல்வியை கற்காமல் இருப்பவர்களையே மந்திரிகளாகவும்,நண்பர்களாகவும் வைத்துக்கொண்டான்.படித்தவர்களை இவனது வேலைக்காரர்களாகவும்,வீரர்களாகவும் வைத்துக்கொண்டான்.இதனால் தினமும் நடைபெரும் மந்திரி சபை வெறும் பாட்டும் கேலியுமாகவே நடந்து கொண்டிருந்தது. இது எதுவும் அறியாத புலவர் ஒருவர் மன்னனை காண அரண்மனை வாசலில், வாயில் காப்பவனாக நின்று கொண்டிருந்த வீரன் ஒருவனிடம் மன்னனைக்காண வந்துள்ளதாகத் தெரிவித்தார்.வாயில் காப்பவனாக நின்று கொண்டிருந்தவன் ஓரளவு கற்றவன், அவன் ஐயா நீர் ஒரு புலவர், நன்கு கற்றவர், ஆனால் நீர் பார்க்கப்போகும் மன்னர் அதிகம் கல்வி கற்காதவர், அது போல் மந்திரி சபையில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி அறிவு அற்றவர்கள்.அதனால் அங்கு உங்களுக்கு ஏதேனும் அவமானம் ஏற்படலாம். ஆதலால் தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று சொன்னான். அதைக்கேட்ட புலவர் உன் அறிவுரைக்கு நன்றி. ஆனால் நான் மன்னனைக் கண்டிப்பாக காணவேண்டும் என வற்புறுத்தினார்.

வேறு வழியில்லாமல் வாயிற்காப்போன் புலவரை மன்னனை காண உள்ளே அனுப்பி வைத்தான். உள்ளே நுழைந்த புலவர் மன்னனை கண்டவுடன் மன்னரே வணக்கம் என்றார். புலவரைப்பார்த்த மன்னன் நீங்கள் யார்? எதற்காக என்னைக்காண வந்தீர்கள்? என்று கேள்வி மேல் கேட்டான். ஐயா நான் ஒரு புலவன் தங்களை ஒரு விசயமாக காண வந்துள்ளேன், என்று சொல்லவும், மன்னர் இடி இடி என சிரித்து உம்மைப்போல மேதாவிகளுக்கு என்னிடம் என்ன வேலை? காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் உம்மைப்போன்ற புலவர்களை உள்ளேயே விடக்கூடாது என வாயில் காப்போனிடம் அறிவுரை சொல்லியும் உம்மை உள்ளே அனுப்பி இருக்கிறான். முதலில் அவனை உள்ளே வரச்சொல்லி பத்து சவுக்கடி வழங்க உத்தரவிடுகிறன் என்று ஆணையிட்டான்.

புலவர் பதறி மன்னா சற்று பொறுங்கள், அவன் என்னை தடுத்தான். நான்தான் உங்களை அவசரமாக காண வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளே வந்துவிட்டேன். பக்கத்து நாட்டு மன்னனை காண நான் சென்றபோது இந்த ஓலையை உங்களிடம் தரச்சொல்லி அனுப்பி வைத்தார். வாங்கிப்பார்த்த மன்னனுக்கு அதில் என்ன எழுதி இருக்கிறது என்பது புரியவில்லை, அருகில் உள்ள மந்திரியிடம் கொடுத்து படிக்கச்சொல்ல அவரும் அதிகம் படிக்காதவராகையால் எனக்கும் புரியவில்லை மன்னா என்று தலையை சொறிந்தார்.புலவரே அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை நீரே சொல்லும் என்று புலவரை பார்த்து கேட்க மன்னா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் இதை கொடுத்த மன்னர் இதில் உள்ளதை நீர் கண்டிப்பாக படித்து சொல்லக்கூடாது, அப்படிச்சொன்னால் அதன் பலன் மன்னனுக்கு கிடைக்காமல் போய்விடும். இதை மன்னன் தானாக புரிந்து கொண்டால் அவனுக்கும் செல்வங்கள் வந்து குவியும் என்று சொன்னார். இல்லை என்றால் அவருக்கு அழிவுதான் என்றும் சொல்லிவிட்டார். என்னை மன்னியுங்கள் மன்னா, நான் வருகிறேன் எனது கடமை முடிந்தது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.

ஓலையை வாங்கிய மன்னனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அங்கிருந்த அனைவருக்குமே கல்வி அறிவு குறைவாக இருந்ததால் ஓலையில் என்ன எழுதி உள்ளது என்று படிக்க முடியவில்லை. மன்னன் ஒரு வீரனை அழைத்தான்.வீரனிடம் இந்த ஓலையை கொடுத்து யாராவது இந்த ஓலையை படித்து மன்னனுக்கு விளக்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கும்படி சொன்னான்.

வீரன் அதன்படி அரண்மனையை விட்டு வெளியே வந்து யாராவது ஓலையை படித்து மன்னனுக்கு விளக்கினால் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்தான்.

மன்னனைப்பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால் யாரும் அந்த ஓலையைப்படித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. மன்னனுக்கு மிகுந்த அவமானமாயிற்று.ஒரு ஓலையை படிக்க நம் நாட்டில் யாருமில்லையா?முதன் முதலாக கல்வியின் அருமையை உணரத்தொடங்கினான். தன் தந்தையிடம் முன்னர் பணிபுரிந்த மந்திரியாரை அழைத்துவரச்சொன்னார்.அவரும் மன்னரை காண அரண்மனைக்கு வந்தார்.

ஐயா நீங்களாவது இந்த ஓலையை படித்து எனக்கு விளக்கமளிக்கக்கூடாதா என்று கேட்டான். மந்திரியாரும் அந்த ஓலையை வாங்கிப்பார்த்தார்.

சிறிது நேரம் வாசித்து வாசித்து பார்த்தவர் திடீரென்று அகலமான ஒரு கண்ணாடியை கொண்டு வரச்சொன்னார். மன்னனும் எதுவும் புரியாமல் ஒரு கண்ணாடியை கொண்டு வரச்சொன்னான். கண்ணாடி வந்தவுடன் மந்திரியார் மன்னா இப்பொழுது கண்ணாடியில் உள்ளதை படியுங்கள் என்று ஓலையை கண்ணாடி முன்னால் காட்ட அதில் எழுதியிருந்த வாசகங்கள்.

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
கல்லாதான் ஒட்பம் கழியனன்று ஆயினும்
கொள்ளார் அறிவு உடை யார்.
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
கல்லா தவரும் நனினல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்

மன்னன் வெட்கத்துடன் மந்திரியாரே எனக்கு படிக்கத்தெரியவில்லை தயவு செய்து படித்து காட்டும் என்று கேட்டான்.மந்திரியாரும் வாசித்து அவனுக்கு விளக்கம் சொன்னார்.

மன்னன் “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் மந்திரியாரே, கல்வி என்பது ஒரு நாட்டின் செல்வம் என்பதை “ஒரு ஓலையை படிக்க இங்குள்ள அனைவருமே சிரமமப்பட்ட பொழுதே புரிந்து கொண்டேன்”. இனி இந்த நாடு முழுவதும் அனைவரும் கல்வி கற்க ஏற்பாடு செய்வேன். அது போல நானும் உங்களைப்போல உள்ள சான்றோரிடம் கல்வி கற்றுக்கொள்ளப்போகிறன்.

(ஒரு நாட்டின் வளமைக்கும்,வளர்ச்சிக்கும்,கல்விதான் அடிப்படை. இந்த கல்வி வளர்ச்சி பெற்றால்தான் ஒரு நாடு அனைத்து வளங்களும் பெற முடியும்.)

Print Friendly, PDF & Email

1 thought on “கல்விதான் நமக்கு செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *