கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,924 
 

வந்தனபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார் மன்னன் அறிவுடைய நம்பி. இவர் ஒரு கஞ்சப் பிரபு; பிசு நாறி. காசை எவருக்கும் எளிதில் கொடுக்க மனம் இல்லாதவர். இவருடைய அன்றாடச் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கு இவர் நியமித்த எந்த ஆளுக்கும் இவர் வேலைக்குத் தக்க ஊதியம் கொடுக்காததால், இவரிடம் எவனும் ஒரு ஆண்டுக் காலம் கூட நிலைத்து நிற்பது இல்லை.

KanchaMagarajaஇதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை நியமிக்கும் முன்பு மூன்று கேள்விகளைக் கேட்பார். அவற்றுக்குப் பொருத்தமான விடை அளித்தவரையே வேலைக்கு அமர்த்திக் கொள்வார்.

மேலும், அவர் வேலைக்கு நியமித்தவர் தாமாகவே வேலையை விட்டுப் போனால் சம்பளம் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால், மன்னன் தாமாகவே ஒருவரை வேலையை விட்டு நீக்கினால், வேலையாளுக்குச் சம்பளத்துடன், ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்வார். அத்துடன், அவரிடம் வேலை பார்ப்பவரைப் பிழிந்து எடுத்து விடுவார்.

இத்தகைய வேலைக் கொடுமை தாங்காமல், அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்கள் வேலை செய்ய யாராலும் முடியாது. கொடுமை தாங்காமல், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலையில், வந்த தடம் தெரியாமல் அவனவன் வேலையை விட்டுச் சென்றதுதான் வரலாறு. அவராக யாரையும் இதுவரை வேலையை விட்டு நிறுத்தியது இல்லை. பல நூறு வேலையாட்கள் வந்து, மன்னரின் சிக்கனம், சிடுமூஞ்சித்தனம் மற்றும் அவருடைய தீவிர நச்சரிப்புத் தாங்காமல் வேலையை விட்டுச் சென்றவர்கள் தான் உண்டு.

இந்த நிலையில், இவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர், இவரையும் ஏமாற வைத்துவிட எண்ணினார். ஒரு காது கேளாதவரை இவரிடம் எப்படியாவது வேலைக்கு அமர்த்தி, அவனை இவர் வெளியேற்ற, பெரும் தொகையும், சம்பளமும் பெற்றுப் போகச் செய்யத் திட்டம் போட்டார். அதன் பலன் தான் சுத்த செவிடம் ஆன உதயா என்பவனை மன்னன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார். உடனே அவர் உதயாவிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

“”ஒரு தடவை போனாலும், எளிதில் நாம் அதைப் பெறலாம். அது எது?” எனக் கேட்க, “”அது பணம்!” எனப் பதில் சொன்னான் உதயா.

“”ஒருமுறை போனால் பலமுறை கிடைக்காதது எது?” என்றான் மன்னன்.

“”இரவும், பகலும்!” என்றான் உதயா.

மூன்றாவது கேள்வி. “”உதவி செய்த ஒருவனுக்கு உதவி பெற்றவன் எத்தனை காலம் கடன் பட்டிருக்க வேண்டும்?”

“”உயிர் உள்ளவரை!” என்றான் உதயா! இவ்வாறு மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை சொன்னதால், உதயாவை உடனடியாக மிகுந்த திருப்தியுடன் வேலைக்கு வைத்துக் கொண்டார். எனினும், மறுநாளே மன்னனுக்கு இவனுக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வந்தது.

உடனே உதயாவை மன்னன் ஓர் ஆசனத்தில் ஆர அமர இருத்தி மிகவும் ஆர்வத்துடன் ஒருசில கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும் எனத் தீர்மானித்தார். மிகவும் ஜாடை காட்டியும், வெடிக்கும் சப்தத்தில் கீழ்க்கண்ட வினாக்களை மன்னன் உதயாவிடம் கேட்டார்.

“”அப்பா… இடி இடித்தாலும் எள் அளவும் கேட்காதவனாக நீ இருக்கிறாய். நீ எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்திக்க வேண்டும் என்ற முடிவில்தான், நான் உன்னை உட்கார வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல்!” என்றார்.

அதற்கு ஆமோதித்துத் தலை அசைத்ததுடன், “”மன்னா! கேள்விகளைக் கேளுங்கள்!” என்றான்.

“”நீ நேற்று என் கேள்விகளுக்கு எப்படிச் சரியான பதிலைச் சொன்னாய்?” என்று வினவினார்.

“”நீங்கள் கேட்ட கேள்விகள் என் காதில் நன்றாக விழுந்ததே. உங்கள் முதல் கேள்வி. “உனக்கு என்ன வேண்டும்?’ என்றீர்கள். “பணம்’ என்றேன். இரண்டாவது கேள்வி, “எப்போது வேலை செய்வாய்?’ என்பது. இதற்கு, “இரவும் பகலும்’ என்றேன். மூன்றாவது கேள்வி, “எவ்வளவு காலம் வேலை செய்வாய்?’ எனக் கேட்டீர்கள். “உயிர் உள்ளவரை’ என விடை அளித்தேன்,” என்றான்.

இவனை வைத்து வேலை வாங்குவது மிகவும் சிரமம் என்று கருதி ஒப்பந்தப்படி பெரும் தொகையைக் கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவனை வழியனுப்பி வைத்தார் மன்னர். அதில் இருந்து அவர் யாரையும் ஏமாற்றுவது இல்லை மன்னனுடைய அந்தரங்கக் காரிய தரிசிக்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.

– ஆகஸ்ட் 20,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *