தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,393 
 

தென்தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமம்.மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.

குண்டும் குழியுமாய் மழைநீர் தேங்கி நாற்று நடும் அளவிற்கு சேறும் சகதியுமாய் இருந்த அந்தத் தெருவின் ஓரத்தில் சிறுவர் கூட்டம் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தது.

“ஏலேய்… காசி… காசி…’ என்ற குரல் பக்கத்துக் குடிசையிலிருந்து ஒலித்தது.

ஏக்கத் தீஅந்தச் சிறுவர் கூட்டத்திலிருந்து காசி தலைதெறிக்க ஓடிவந்தான். வயது பன்னிரண்டு இருக்கும். போன வருடம் தீபாவளிக்கு முதல் நாள் இரவு இருபது ரூபாய்க்கு சந்தையில் வாங்கிய சட்டையை அணிந்திருந்தான். அது கசங்கிப் போய், ஆங்காங்கே கிழிந்திருந்தது.

“என்னப்பா..?’

“எலேய்… அடுத்த வாரம் தீபாவளி வருதுல… அதுக்கு உனக்கு புது சொக்கா எடுக்க டவுனுக்குப் போறோம்…. சீக்கிரம் கிளம்பு…’ என்று குடிசைக்குள் இருந்து வெளியே எட்டிப்பார்த்தபடியே, மருதப்பன் சொன்ன அடுத்த விநாடி, “எலே.. கும்மிடியான்… நான் டவுனுக்குப் போய் புது சொக்கா வாங்கப் போறேண்டா… அதுவும் ஜீன்ஸ் சொக்காடா…’

-என்று தெருவுக்கே கேட்குறமாதிரி கத்திக் கொண்டே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தபடி குடிசைக்குள் நுழைந்தான்.

டவுனிலிருந்து புதுத் துணிகள் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள். காசிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவனுக்குப் பிடித்த ஜீன்ஸ் சொக்காவையே வாங்கிவிட்டதால், தீபாவளி எப்போது வரும் என்று ரொம்ப ஆசையாய் காத்திருந்தான். தீபாவளியும் வந்தது.

புது சொக்காயை உடுத்திக் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று காண்பித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.

காசி போட்டிருப்பதைப் போலவே நீலக் கலரில் ஜீன்ஸ் துணியில் தைத்த சட்டையும் பேண்ட்டும் போட்டிருந்தான், அந்த ஊர்த்தலைவர் மகன்.

அதே மாதிரி சட்டையை தானும் போடணும் என்பதுதான் காசியின் ரொம்ப நாள் ஆசை!

அந்த ஆசை இன்று நிறைவேறியதை நினைத்து அந்த நிலாவையே பிடித்துவிட்ட மாதிரி சந்தோஷத்தில் குதித்துக் கொண்டே ஓடினான் காசி. ஏதோ ஒரு சினிமாப் பாடலை சத்தம்போட்டுப் பாடிக் கொண்டே ஆடவும் செய்தான்.

“”இந்தப் புதுச் சொக்காயை எப்படியாவது தலைவர் மகன்கிட்டே காண்பிக்கணும்..

அவன் வீடு மெயின் ரோட்டுல இருக்குது… அங்க போனா, ஆத்தா காலை ஒடிச்ச, அடுப்புக்குள்ள வச்சிடுவேன்னு அடிக்க வருமே… ம்..ம்… எப்படியாவது காண்பிச்சே ஆகணும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே ஊருக்கு வெளியே தள்ளி இருக்கும் தலைவர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அப்பொழுது, எதிர்வீட்டு முருகன் இவனைப் பார்த்துவிட்டான். காசியின் சட்டையைப் பார்த்து அதிசயத்துடன்…

“காசி, அப்படியே நம்ம தலைவர் வீட்டுப் பையன் சட்டை மாதிரியே அச்சா, அட்டகாசமா இருக்குடா…’ என்று சொன்னதும் காசி சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

“டவுனுல போய் எடுத்தோம்… ஐந்நூறு ரூபாயாக்கும்!’ என்றான் காசி. முருகன் காசியின் சட்டையைத் தொட்டுப் பார்க்க முயற்சித்தான்…

“டேய்… தொடாத… அழுக்காயிடும்… நான் தலைவர் வீட்டுக்குத்தான் போறேன்… வரட்டுமா’ என்று சொல்லிவிட்டு, தெருவைக் கடந்து சாலையில் நடக்கலானான்.

எதிரே வந்த லாரி, இவன்மீது சாலையில் தேங்கியிருந்த மழைநீரை வாரி இறைத்துவிட்டுப் போனது….

லாரி டிரைவரை திட்டிக் கொண்டே, ஒரு கல்லை எடுத்து லாரி மீது வீசினான். அதற்குள் லாரி போயே போய்விட்டது.

பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து சட்டையைச் சிறிது சிறிதாக, மிகவும் கவனத்துடன் அலம்பினான் காசி. ஓரளவுக்குச் சட்டையில் படிந்த அழுக்கு மறைந்து போனது.

மீண்டும் சாலையில் நடக்கலானான். இல்லையில்லை…. ஒரு மாதிரி ஸ்டைல் நடை… காலைப் பின்னிப் பின்னி நொண்டியடிப்பது போல அசத்தலான நடை… கூடவே விசிலடித்துக் கொண்டே சந்தோஷம் கொப்பளிக்கச் சென்றான்.

தலைவர் வீடு வந்தது. தலைவர் மகன் பளபளவென கண்களைப் பறிக்கிற மாதிரி வெல்வெட் துணியால் தைத்த சட்டை போட்டிருந்தான். நிறையப் பட்டாசுகளை வைத்துக் கொண்டு ஒரு சரத்தைக் கொளுத்திக் கொண்டிருந்தான்.

காசி, தன் சொக்காவைப் பார்த்து ஆஹா… ஓஹோன்னு… புகழப்போறான் என்ற நினைப்பில், அவன் பார்க்கிற மாதிரி அருகில் போய் நின்று கொண்டான்.

தலைவர் மகனோ, சேரிக்காரப் பய, தன்னைப் போல உயர்ரக சட்டை போட்டிருக்கானே என்ற எரிச்சலில்-

“ஏய்… அந்தப் பக்கமா போடா… இங்க என்ன வேடிக்கை? வெடி மத்தாப்பெல்லாம் திருட வந்திருக்கியா… திருட்டுப்பயலே… எங்கப்பாகிட்டே சொன்னேன்னா, உங்க குடும்பத்தையே ஊரைவிட்டு துரத்திப்புடுவாரு… ஓடிப் போடா…’ என்று கத்தியபடி, காசியை விரட்டினான்.

அப்போதுதான் எதிர்பாராமல் அது நடந்தது….

தலைவர் மகன் கொளுத்திப் போட்ட சரவெடியில் ஒன்று அவன் மீதே பட்டு வெடித்தது. அவன் அணிந்திருந்தது வெல்வெட் துணியாலான சட்டையாக இருந்ததால் குபுக்கென்று தீ பற்றிக் கொண்டது.

“அய்யோ… அம்மா…!’ என்று தலைவர் மகன் அலறினான். சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த தலைவரும் வேலையாள்களும் என்ன செய்வது என்று தெரியமால் ஒரு நொடி பரிதவிக்க, காசி சட்டென்று தனது ஜீன்ஸ் சொக்காவைக் கழட்டினான்.

அதைத் தலைவர் மகன் மீது போர்த்தி, அவனைக் கீழே தள்ளி, தரையில் அங்கும் இங்குமாக உருட்டினான்.

சிறிது நேரத்தில் தீ அணைந்துவிட்டது.

சிறிய காயத்தோடு தலைவர் மகன் பிழைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்திற்கு முன் திருட்டுப் பயலே என்று திட்டியும், பற்றி எரிந்த தீயிலிருந்த தன் உயிரைக் காப்பாற்றிய காசியைப் பார்த்தான் தலைவர் மகன். அவனுக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. ஆனாலும் முகத்தில் நன்றி தெரிந்தது.

காசிக்கோ, தீ பட்டதால் ஆங்காங்கே பொத்தல் விழுந்தும் பாதி கருகியும் போன தனது ஜீன்ஸ் சொக்காவைப் பார்த்து இனி அடுத்த தீபாவளி எப்போது வரும்? என்ற ஏக்கத் தீ பற்றிக் கொண்டது!

– யாழினி மாறன் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *