கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 22,090 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

Ambulimama_Tamil_1996_04_0025-picதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது ஏறி அதில் தொங்கும் உட லைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர நடு ராத்திரியில் ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்? இதற்கான பலன் கிடைக்குமா? அல்லது நீயும் விலட்சணனைப் போல கிடைத்த வாய்ப்பைத் நழுவி விடப் போகிறாயா? உனக்கு அவனது கதையைக் கூறுகிறேன் கவனமாகக் கேள்” என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது.

வெகு காலத்திற்கு முன் மந்திரபுரியை மகாசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மகள் மாலினி. அவள் அழகானவள். தீர வீரச் செயல்கள் புரிபவள். அவள் மன்னனுக்குப் பிறந்த ஒரே மகள். மகனே அம்மன்னனுக்கு பிறக்காததால் அவளை மணப்பவனுக்கு மந்திரபுரியும் ஆளக் கிடைக்கும். எனவே பல அரசகுமாரர்கள் அவளை மணக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

மாலினியோ தன் தந்தையிடம் “என்னை மணப்பவன் வீர தீரச் செயல் புரிபவனாயும் துணிச்சல் மிக்க வனாயும் இருக்க வேண்டும். நான் வைக்கும் பரீட்சையில் தேறவும் வேண்டும்” எனக் கூறி அப்பரீட்சை என்ன என்றும் தன் தந்தையிடம் கூறினாள்.

அப்பரீட்சை பற்றிய விவரங்களைக் கேட்டதும் மன்னன் திடுக்கிட்டான். அவன் “அம்மா! இந்த மாதிரியான பரீட்சை வைக்க வேண்டாம். இது மிகவும் ஆபத்தானது. இதில் கலந்து கொள்ள யாரும் தயங்குவார்” என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் பிடிவாதமாக அந்தப் பரீட்சைதான் வைக்க வேண்டும் என்று கூறிவிட்டாள்.

மன்னன் யோசனை செய்யவே மாலினியும் “என்னை உயிருக்கும் மேலாக விரும்புவதாகச் சொல்லும் எந்த வாலிபனும் இந்தப் பரீட்சைக்கு இணங்குவான். நீங்கள் கவலைப் படாதீர்கள்” என்றாள்.

மன்னனும் அமைச்சருடன்கலந்து ஆலோசித்தான். அவரும் அந்தப் பரீட்சை என்ன என்று அறிந்ததும் “தாங்கள் இப்பரீட்சையின் விவரங்களைக் கூறாமல் பொதுவாகப் பரீட்சை என்று அறிவியுங்கள்” என்றார்.

அதன்படியே மன்னன் தன் மகளிடமும் “சரி. நான் உன்னை மணக்க வருபவர்களுக்குப் பரீட்சை வைக்கப் படும் என அறிவிக்கிறேன்” எனக் கூறி விட்டுச் சென்றான். மாலினியை மணக்க முன் வருபவர்கள் ஒரு பரீட் சைக்கு உட்பட வேண்டும் என்று மட்டும் அவன் அறிவித்தானேயொழிய அது என்ன பரீட்சை என்று கூறவில்லை. ஏனெனில் அது பற்றிய விவரம் கூறினால் யாருமே மாலினியை மணக்க முன் வர மாட்டான் என்று மன்னன் உறுதியாக நம்பினான்.

Ambulimama_Tamil_1996_04_0026-picமந்திரபுரியின் பக்கத்தில் சிங்கபுரி என்ற ஊர் இருந்தது. அங்கு விலட்சணன் என்ற இளைஞன் இருந்தான். அவனுக்குப் பிறக்கும் போதே இரு கைகளும் இருக்கவில்லை. அவனது சிறு வயதிலேயே அவனது தாயும் இறந்து விட்டாள். அவனது தந்தை இரண்டாந்தாரமாக ஒருத்தியை மணந்து கொண்டான்.

இரு கைகளையும் இழந்த விலட்சணனை மாற்றாந்தாய் கொடுமைப்படுத்தி வந்தாள். அவனுக்குச் சாப்பாடு போடுவது வீண் என்றும் அவன் எதற்கும் பயன்படாத உதவாக்கரை என்றும் திட்டி வந்தாள். விலட்சணனின் தந்தையால் தன் இளம் இளைய மனைவியை எதிர்த்துப் பேச முடியவில்லை. அவன் தன் மகன் படும் பாட்டைக் கண்டு மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தான்.

விலட்சணனும் “என் சிற்றன்னை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறாளே. இதற்கு என்றாவது ஒரு முடிவு ஏற்படுமா? நான் உயிர் வாழ்வதே வீண் என்ற இவளது கூற்று சரியல்ல என்று எடுத்துக் காட்ட வேண்டும்” என மனதில் எண்ணி வந்தான்.

இந்த நிலையில் மாலினிக்கு சுயம்வரம் நடக்கப்போகிறது என்று விலட் சணன் கேள்விப்பட்டான். அந்த சுயம்வரம் எப்படி நடக்கப் போகிறது என்பதைக் காண அவன் மனம் ஆசைப்பட்டது. மேலும் ஏதோ பரீட்சை அரச குமாரர்களுக்கு வைக்கப் போவது பற்றிக் கேட்டு அவன் வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணித் தலை நகருக்குச் சென்றான்.

அந்தப் பரீட்சையில் அரசகுமாரர் களைத் தவிர வேறு சில இளைஞர்களும் கலந்து கொள்ள இருப்பதை அவன் கண்டான். அதுவரை பரீட்சை என்ன என்று யாருக்குமே தெரியாது. எல்லோரும் மற்போரோ, வாட் போரோ அல்லது அம்பு எய்தலோ தான் பரீட்சையாக இருக்கும் என்று எண்ணினார்கள்.

பரீட்சைக்கான நேரம் வந்தது. மன்னனும் மாலினியும் அமைச்சர் அச்சுதானந்தரும் வந்து மேடையில் அமர்ந்தார்கள். அப்போது அமைச்சர் எழுந்து நின்று “அரசகுமாரியை மணக்க முன் வருபவனுக்கு ஒரு பரீட்சை வைக்கப்படுகிறது. அந்த வீரன் கோட்டை மதிலிலிருந்து கீழே குத்தி நிறுத்தப்பட்டுள்ள மூன்று வரிசைக் கத்திகளுக்கு மத்தியிலுள்ள காலி இடத்தில் குதிக்க வேண்டும். காயப்படாமல் குதித்து அந்த இடத்தை அடைபவனே அரசகுமாரியை மணக்கத் தகுதி பெற்றவன்” என்றார்.

Ambulimama_Tamil_1996_04_0027-picஅமைச்சர் இப்படிக் கூறி முடித்ததும் அரசகுமாரர்கள் திடுக்கிட்டார்கள். கோட்டை மதில் உயரமானது. அங்கிருந்து கத்திகள் புதைக்கப்பட்ட இடம் வெகு ஆழம். மூன்று வரிசைக் கத்திகளுக்கு இடையே விடப்பட்ட காலி இடமோ நாலடி சதுரம். காயப்படாமல் அதில் கோட்டை மதில் மீதிருந்து குதிக்க முடியுமா? ஒரு வேளை குதித்தாலும் காயப்படாமல் காலி இடத்தை அடைய முடியுமா? இப்படியெல்லாம் யோசித்துப் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் பேசாமல் இருந்தனர்.

அதன் பிறகு அவர்கள் மெதுவாக “இதுவா பரீட்சை? அரசகுமாரியை மணக்க வாட்போர், மற்போர், அம்பு எய்தல் போன்ற ஏதாவது ஒன்றில் பரீட்சைவைத்தால் அதில் நம் திறமையைக் காட்டலாம். ஆனால் இந்தப் பரீட்சையில் கலந்து கொண்டால் நம் உயிரே போய் விடுமே. இப்படி நம் உயிரைப் பணயம் வைத்து ஏன் இந்த அரசகுமாரியை மணக்க முயல வேண்டும்? உலகில் வேறு அழகான அரசகுமாரிகள் இல்லாமலா போய் விட்டார்கள்?” என்று தமக்குள் பேசிக் கொள்ளலானார்கள்.

எல்லோரும் அசையாமல் இருந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தனர். மன்னனோ தன் மனதுள் “நான் நினைத்தது போல நடக்கிறதே. இந்தப் பரீட்சையின் விவரங்களைக் கேட்டதும் ஒரு அரசகுமாரன் கூட இருந்த இடத்தை விட்டு நகரவில்லையே. என் மகளுக்குத் திருமணமே நடக்காதா?” என்று எண்ணி கவலைப்பட்டான். அந்தப்பரீட்சை நடப்பதை வேடிக்கை பார்க்க வந்த விலட்சணனின் மனதில் திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. அவன் தன் உயிர் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் அப்பரீட்சையில் கலந்து கொள்வது என முடிவு செய்தான்.

அவன் எழுந்து அரசன் முன் போய் நின்று வணங்கி “அரசே! இந்தப் பரீட் சைக்கு நான் தயார்” என்று கூறினான். இருகைகளும் இல்லாத விலட்சணன் பரீட்சைக்குத் தயாராக வந்திருப்பது கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். இப்படி ஒரு நிலை உருவாகும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அப்பரீட்சையில் அந்த இளைஞன் வெற்றி பெற்று விட்டால் தன் மகள் வாழ்நாள் முழுவதும் ஒரு முடவனோடு வாழ வேண்டி வருமே என்று மன்னன் கவலைப்படலானான்.

அவன் ஓரிரண்டு நிமிடங்கள் பேசாமல் இருந்து விட்டுப்பிறகு பெருமூச்சு விட்டவாறே “சரி. பொதுப் பரீட்சை அத்னால் யாரும் கலந்து கொள்ளலாம். நீ முயல்வதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை” என்றான். மாலினியோ தன்னை மணக்க எவனாவது அழகிய அரசகுமாரன் அப்பரீட்சையில் கலந்து கொள்ள முன் வருவான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவ்விதம் யாரும் முன் வராமல் ஒரு முடவன் பரீட்சைக்கு உட்பட வந்தது கண்டு மனமொடிந்து போனாள்.

Ambulimama_Tamil_1996_04_0028-picஆனாலும் அவள் மனதில் இவன் எங்கே கோட்டை மதில் மீதிருந்து குதித்து கத்தி வரிசைகளுக்கு மத்தியிலுள்ள காலி இடத்தை காயப்படாமல் அடையப் போகிறான்” என்று தனக்குள் கூறிக் கொண்டு ஆறுதல் அடையலானாள். அரசகுமாரர்களோ ஒரு முடவன் பரீட்சைக்குத் தயாரெனக் கூறியது கேட்டு அவமானத்தால் தலை குனிந்து கொண்டார்கள்.

ஒரு அரசகுமாரனோ ஆத்திரத்தோடு ‘ஓகோ! கைகளில்லாத நீ இந்தக் கோட்டை மதில் மீதிருந்து குரங்கு போலக் குதிக்கப் போகிறாயா?’ என்று கொக்கரித்தான். விலட்சணன் அதைக் கேட்டும் சற்றும் லட்சியம் செய்யாமல் கோட்டை மதில் மீது தன்னை ஏற்றி விடச்சொன்னான். இரு வீரர்கள் அவனுக்கு உதவி கோட்டை மதில் மீது அவனை நிறுத்தினார்கள். அங்கிருந்துதான் குதித்துச் சேரவேண்டிய இடத்தையும் பார்த்தான். அது மிகவும் ஆபத்தான செயலே என்று உணர்ந்தாலும் அவன் பின்வாங்க வில்லை.

கோட்டையின் கீழே வாட்கள் புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் நின்றிருந்தது. அது விலட்சணன் எப்போது குதிப்பான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. விலட்சணனும் சற்றும் பயமில்லாமல் மதில் மீதிருந்து குதித்தான். அது கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். மறு கணம் கூட்டத்தினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஏனெனில் விலட்சணன் சற்றும் காயப்படாமல் வாட்களுக்கு மத்தியிலிருந்த காலி இடத்தை அடைந்து விட்டான்!

Ambulimama_Tamil_1996_04_0029-picஅதைக் கண்ட மாலினி திடுக்கிட்டாள். முடிவில் தனக்குத் கணவனாகப் போகிறவன் ஒரு முடவனா என்று எண்ணி வருந்தலானாள். மன்னனோ தன் மகளின் தலை எழுத்து இதுவா என எண்ணிப் பெருமூச்சு விட்டான். இவ்வாறு அவர்களிருவரும் எண்ணி வருந்திக் கொண்டிருக்கையில் விலட்சணன் அவர்களிருந்த இடத்திற்கு வந்தான். அவன் மன்னனை வணங்கி “அரசே! நான் அரசகுமாரியை மணக்கப் போவதில்லை. நான் பரீட்சையில் கலந்து கொண்டது அரசகுமாரியை மணக்கும் நோக்கத்தாடு அல்ல. ஆனால் இப்பரீட்சையில் நான் ஒரு அரிய பரிசைப் பெற்று விட்டேன்” என்று பணிவுடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

வேதாளம் இக்கதையைக் கூறி “மன்னனே! விலட்சனனின் நடத்தை ஒரு பைத்தியக்காரனுடையதைப் போலத்தானே இருக்கிறது. அரசகுமாரியை மணக்கும் நோக்கம் இல்லாத அவன் ஏன் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டும்? மேலும் அவன் அப்பரீட்சையில் கலந்து கொண்டதால் ஒரு அரிய பரிசைப் பெற்று விட்டதாகக் கூறினானே. அது என்ன? அரசகுமாரியை மணக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவன் அதைக் கைநழுவ விட்டது அவனது அறிவீனம்தானே? இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும் நீகூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது.

விக்கிரமனும் “விலட்சணன் ஒரு முடவன். இளம் வயதில் தாயை இழந்த அவனை அவனது மாற்றாந் தாய் உதவாக்கரை என்று எப்போதும் திட்டி வந்தாள். அவனுக்குத்தான் உதவாக்கரை இல்லை என்று பலர் முன் நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவே அவனடைந்த பெரும் பரிசு. அவன் பரீட்சையை வேடிக்கை பார்க்கத்தான் வந்தான். அரச குமாரியை மணக்கும் நோக்கத்தோடு அல்ல. கைகளே இல்லாத தான் அரசகுமாரியை மணந்து அரசனானால் வாளைக்கூடப்பிடிக்க முடியாதே என எண்ணித்தான் அரசகுமாரியை மணக்கத் தகுந்தவனல்ல என அவன் முடிவு செய்தான். அவன் மக்களிடையே தன் பெயர் பரவி தான் உதவாக்கரை இல்லை என நிரூபித்தது ஒன்றே போதும் என அவன் திருப்தி அடைந்தான். அதனால்தான் அவன் அரச குமாரியை மணக்கவில்லை. அவன் செயல் பைத்தியக்காரத்தனமானது அல்ல. விவேகம் நிறைந்ததே” என்று கூறினான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

– ஏப்ரல் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *