கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 37,441 
 

“”பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”

கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும், வகுப்பில் இருந்த அனைவரின் பார்வையும் பூங்கோதை பக்கம் திரும்பியது. திடுக்கிட்டு ஆசிரியரைப் பார்த்த பூங்கோதை, “”ஒன்னுமில்ல சார்” என்று மெதுவாக எழுந்து நின்றாள்.

உணர்வுகள்“ஒன்னுமில்லாமலா பாடத்தைக் கவனிக்காம ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாய்? பாடம் நடத்தும்போது அப்படி என்ன வேடிக்கை வேண்டியிருக்கு? சரி உட்கார்… வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பார்த்துட்டுப் போ” என்றார்.

“”சரி… சார்” என்று கூறிவிட்டு மெதுவாக இருப்பிடத்தில் அமர்ந்தாள். தொடர்ந்து அவர் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், பூங்கோதையின் நினைவெல்லாம் அந்தத் தெருவையே வலம் வந்துகொண்டிருந்தது.

வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றாள் பூங்கோதை. அங்கு அமர்ந்திருந்த தேவராஜன் சாரைப் பார்த்து, “”சார்….” என்றாள். பூங்கோதையைப் பார்த்து “வா’ என்பதுபோல தலையாட்டினார். மெல்ல அவர் அருகில் சென்றாள். அங்கு அவ்விருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

“”உன்னை ரெண்டு மூனு நாளாக கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்கிறேன். நல்லாப் படிக்கிற பொண்ணாச்சே, ஒன்பதாம் வகுப்பு வந்தாச்சுல்ல, இனிமே நிறைய படிக்க வேண்டியிருக்குமே. ஆனால், ஒருவாரமாவே நீ சரியில்லயே! பாடம் நடத்தறதையும் ஒழுங்கா கவனிக்கிறதில்ல! ஏன் எதையோ பறிகொடுத்ததுபோல இருக்க? அடிக்கடி ஜன்னலுக்கு வெளியில் உள்ள மரங்களையே வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க, குடும்பத்துல ஏதாவது பிரச்னையா? ஃபீஸ் கட்ட முடியலையா?”

பூங்கோதை, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். அவளுடைய அப்பா ஒரு குடியிருப்பில் வாச்மேன் வேலை பார்க்கிறார். நேரம் கிடைக்கும்போது அக்கம் பக்கம் வீடுகளுக்கு துணிகளை இஸ்திரி போட்டுத் தருவார்.

“”அதெல்லாம் ஒன்னுமில்ல சார்” என்ற பூங்கோதை, நான்கு நாள்களுக்கு முன்பு அந்தத் தெருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறத் தொடங்கினாள்.

“”சார்! நாலு நாளைக்கு முன்னாடி என்னோட ஃபிரண்டு பானு வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் வீடு சாந்தி காலனியில் இருக்கும் ஒரு தெருவில் இருக்கு. அவள் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு தெருவில் பெரிய வேப்பமரம் ஒன்று இருக்கு. அதை சிலர் வெட்டப் போவதாகப் பேசிக்கொண்டதைக் கேட்டு என் மனம் பதைபதைத்தது. காரணம் புரியவில்லை. காரணமே தெரியாம அழுகை அழுகையா வந்தது. நான் அவங்ககிட்ட போய் “”ஏன் இந்த மரத்தை வெட்டப்போறீங்க? மரங்கள் மழையைத் தருகின்றன; நிழலைத் தருகின்றன, நல்ல காய், கனிகளைத் தருகின்றன; காற்றிலுள்ள அசுத்தத்தைப் போக்கி, தூய்மையான காற்றைத் தருகின்றன என்று எங்க தமிழ்ப் பாடத்தில் படிச்சதைக் கூறி, மரத்தை வெட்டாதீங்க என்று சொன்னேன். அதுக்கு அவங்க, “வெட்டச்சொல்லி பணம் கொடுத்திருக்காங்க. எங்க பொழப்புல மண்ணப் போட்டுடாதே’ என்று என்னை விரட்டிட்டாங்க.

என்னோட கனவுல அடிக்கடி அந்த மரம் வந்து “என்னைக் காப்பாத்து… என்னைக் காப்பாத்துன்னு’ சொல்ற மாதிரி இருக்கு சார். எனக்கும் அந்த மரத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கறதப்போல உணர்கிறேன். அந்த மரத்த எப்படியாவது காப்பாத்தனும்னு என் உள்ளுணர்வு சொல்லிக்கிட்டே இருக்கு. அதனால்தான், நாலுநாளா இப்படி இருக்கேன் சார். ப்ளீஸ்…சார்…. நீங்கதான் ஏதாவது செய்யணும்” கெஞ்சினாள் பூங்கோதை.

ஆசிரியர் தேவராஜன், பூங்கோதையை வியப்பாகப் பார்த்தார். “”இந்தச் சின்ன வயசுல, பள்ளிப் பாடத்துல படிச்சதை வாழ்க்கையில கடைப்பிடிக்கனும்னு நீ நினைக்கிறதை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு. உன்னமாதிரியே மத்தவங்களும் இப்படி யோசிச்சா பல மரங்கள் காப்பாற்றப்படுமே! கண்டிப்பா இதப்பத்தி நம்ம தலைமை ஆசிரியர்கிட்ட பேசறேன். இந்தக் கவலையை இன்னியோட விட்டுவிட்டு ஒழுங்கா பாடத்தைக் கவனிக்கிற வழியைப் பாரு” என்று கூறி அனுப்பினார்.

மதிய உணவு இடைவேளையின் போது இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் பேசினார் தேவராஜன்.

“”நாளை காலை மாணவர்களை ஒன்றுதிரட்டி, “மரத்தை வெட்டாதே’, “பசுமையைப் பேணுவோம்’, “மனிதர்களின் நண்பன் மரம்’, “மரத்தைப் பேணினால் மழைவளம் பேணலாம்’- என்பது போன்ற வாசகங்களை அட்டைகளில் எழுதி, மாணவர்களிடம் கொடுத்து, அந்தப் பகுதியில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். இந்தத் தகவலை சர்க்குலர் மூலம் எல்லா வகுப்பாசிரியருக்கும் அனுப்ப நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் தலைமை ஆசிரியர்.

இச்செய்தி மாலைக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சர்க்குலர் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் காவல்துறை உதவியோடு ஊர்வலம் நடப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினர்.

மறுநாள் காலை, பூங்கோதை உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பினாள். காலை எட்டு மணிக்கு இறை வணக்கம் முடிந்ததும், மாணவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு அட்டையைக் கையில் ஏந்திக்கொண்டு பள்ளியிலிருந்து ஊர்வலம் செல்லத் தொடங்கினர். பூங்கோதை குறிப்பிட்ட அந்த சாலையை நோக்கி, காவல்துறையின் பாதுகாப்போடு சாலையோரம் சென்று கொண்டிருந்தது அந்த ஊர்வலம்.

பூங்கோதை சொன்ன அந்த மரம் இருக்கும் தெருவில் நுழைந்ததும், மாணவர்களை அங்கேயே நிறுத்தினார் ஆசிரியர் தேவராஜன். அதற்குள் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து எல்லோரும் கூடிவிட்டனர்.

“”இந்தத் தெருவில் உள்ள இந்த வேப்பமரம் வெட்டப்பட உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. சாலையோரம் உள்ள மரங்கள் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலோ, அவர்களுக்குத் தெரியாமலோ எந்த மரத்தையும் யாரும் வெட்ட அனுமதி கிடையாது. அவ்வாறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார் தேவராஜன். அவர் கூறியதை, அந்த மரத்தை வெட்டத் திட்டமிட்டிருந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் “கப்சிப்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆசிரியர் தேவராஜன், இது தொடர்பாக அந்த வீட்டுச் சொந்தக்காரரைத் தனியாக அழைத்துப் பேசிவிட்டு வந்தார். பிறகு பூங்கோதையைப் பார்த்து, “”கவலைப்படாதே, உன் மரம் காப்பாற்றப்பட்டது” என்றார்.

வீட்டுக்குத் திரும்பிய பூங்கோதை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆபத்தில் அகப்பட்டுக்கொண்ட ஒரு தாயைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அப்பாவிடம் நடந்தது அனைத்தையும் கூறினாள்.

“”ஓ…. அந்த மரமா..? அதுக்காகத்தான் இரண்டு மூணு நாளா மூஞ்சியை உம்முன்னு வச்சிகிட்டு இருந்தியா? அந்த மரம்தான் உன்னோட வளர்ப்புத் தாய். அந்த உணர்வுதான் உன்னைத் தூங்கவிடாம செய்திருக்கு. அந்தக் கதை உனக்குத் தெரியாதா?” என்று சிரித்தார்.

பூங்கோதைக்கு ஒன்றுமே புரியவில்லை. திருதிருவென விழித்தாள். அடுப்படியில் இருந்து வெளியே வந்த பூங்கோதையின் தாய் வள்ளி,

“”அடியே பூங்கோதை, நான் உன்னைப் பெத்தவதான்டி. ஆனா… உன்னத் தாலாட்டி சீராட்டி வளத்ததெல்லாம் அந்த வேப்ப மரம்தான்டி! நீ குழந்தையா இருந்தப்ப…. என்று ஆரம்பித்த வள்ளி, “”அண்ணா நகர் சாந்தி காலனியை ஒட்டினாற்போல ஒரு சின்ன தெரு.

அந்தத் தெருவுல ஒரு பங்களா. அந்த பங்களா வாசல்ல இருக்கிற அந்த மரத்து நிழல்லதான் உங்க அப்பா இஸ்திரி கடை வெச்சு பொழப்பு நடத்திக்கிட்டிருந்தாரு.

திருமணம் முடிச்சு வந்த நாளிலிருந்து இருவரும் அந்த வேப்பமரத்து நிழலே கதின்னு வாழ்க்கை நடத்தினோம். கிட்டத்தட்ட அந்தத் தெருவில் 15 வருசமா நாங்க கடை நடத்தியிருக்கோம். அவருக்கு ஒத்தாசையா நானும் அங்கயேதான் இருப்பேன். நீ பொறந்த பிறகு, நாள் முழுவதும் அந்த மரத்துல கட்டுன தொட்டில்லதான் தூங்கிகிட்டு இருப்பே. அந்த வேப்பமரத்துலேர்ந்து ஜிலுஜிலுன்னு வீசுற காத்துல நீ நல்லா தூங்குவே! எங்கள எந்தத் தொந்தரவும் செய்யமாட்ட! அந்த மரம் கொடுத்த சொகத்துல, என்னோட மடியே உனக்கு மறந்து போயிடுச்சு. அந்தத் தொட்டிலுலதான் தூங்குவேன்னு அடம்பிடிப்பே! நீ வளர்ந்ததும் அப்பாவோடு தினமும் போய் அந்த மரத்துல ஊஞ்சல் கட்டி விளையாடுவ! அப்பால உங்க அப்பாவுக்கு “வாட்ச்மேன்’ வேலை கிடைச்சதும் அந்தக் காலனியை விட்டு இந்த ஏரியாவுக்கு நாம வந்துட்டோம். உனக்கு அந்த வேப்பமரம் தாண்டி வளர்ப்புத் தாய்; நான் பெத்தவ, அவ்வளவுதான்!”

அம்மா கூறி முடித்ததும் அந்த வேப்பமரத்தின் மீதிருந்த பூங்கோதையின் பாசம் எல்லைமீறி பீறிட்டது. “அதனால்தான் என்னைச் சீராட்டி, தாலாட்டி வளர்த்த அந்தத் தாய் என் கனவில் வந்து காப்பாற்றச் சொல்லியிருக்கிறாளோ! அவளது கைகள் என்னும் கிளைகளால் என் பாரத்தைத் தாங்கி, என்னைத் தூங்கவைத்தவள் அல்லவா அவள்! அவளது நிழலில் இளைப்பாறிய உணர்வு இந்த உடம்புக்கு இல்லாமலா போகும்? தகுந்த பருவத்தில் தாய்-தந்தை அரவணைப்பு கிடைக்காத என்னைப் போன்ற தெருவோர தொழிலாளர் குழந்தைகளுக்கு இதுபோன்ற மரங்கள்தான் வளர்ப்புத் தாய் போலும்’! பூங்கோதை நினைத்துக்கொண்டாள்.

இப்போதெல்லாம், சாலையோரம் நடந்தோ அல்லது பேருந்தில் பயணிக்கும் போதோ, சாலையோரம் உள்ள மரங்களில் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் தன் வளர்ப்புத் தாயின் நினைவு வந்துவிடும் பூங்கோதைக்கு!

– கி.மஞ்சுளா, இடைமருதூர் (அக்டோபர் 2013)

Print Friendly, PDF & Email

1 thought on “உணர்வுகள்!

  1. Really nice sentiment story.இந்த மாதிரி கதைகள் குழந்தைகளை மனதை எல்லா ஜெவரசிக்கும் உயிர் உண்டென மதிக்க vaikum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *