கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,599 
 

ரோட்டோ ஒரு விறகு வெட்டும் தொழிலாளி. மிகவும் நல்லவன். விறகுகளை அதீத லாபத்திற்கு விற்று பணம் சேர்க்க மாட்டான். கிடைத்த லாபம் போதும் என்ற நல்லெண்ணத்தால் வாடிக்கையாளர்களிடம், “நீங்கள் கொடுப்பதை கொடுங்கள்… நான் மகிழ்வோடு வாங்கிக் கொள்கிறேன்…’ என்பான். ஏழைகளை துன்புறுத்த மாட்டான்.

IrataiKannamபாவம்… இத்தனை நற்பண்புடையவனுக்கு ஒரே ஒரு குறை… அவனின் இடது கன்னத்தின் மேல் மிகப் பெரிதாக மற்றுமொரு கன்னம் முளைத்திருக்கும். அது அவனின் முக அழகை வெகுவாக பாதித்தது.

“”ஏன் தாத்தா! உனக்கு வலிக்கவில்லையா? இவ்வளவு பெரிய மூன்றாவது கன்னத்தை எப்படி சுமந்து கொண்டு இப்படி ஜாலியாக எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறாய்?” என்று குழந்தைகள் பட்டாளம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கும்.

மேலும், அவன் குனிந்து நிமிர்ந்து விறகு வெட்டும் போது, அவனின் இடது கன்னம் மேலும், கீழும் ஒரே ரீதியாக ஏறி இறங்கும். இதை வேடிக்கை பார்க்கவென்றே அவன் விறகு வெட்டும் இடத்தில் குழந்தைகள் பட்டாளம் கூடிவிடும். அதற்காக அவன் குழந்தைகளை கோபிக்க மாட்டான். சிரித்துக் கொண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் சொல்லுவான்.

ரோட்டோவைப் போலவே அவ்வூரில் வசித்து வந்த மற்றொரு விறகு வெட்டிக்கும் இதே தொல்லை தான். இவனுக்கும், வலது கன்னத்தின் மேல் மற்றுமொரு பெரிய கன்னம்! ரோட்டோவின் இடது கன்னத்திலிருந்து கீழ் நோக்கி தனிச்சையாக தொங்கிக் கொண்டிருந்ததைப் போலவே, இவனின் வலது கன்னமும் அச்சு அசலாக அதைப் போலவே கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருந்தது.

குணத்தில் இவன் ரோட்டோவிற்கு எதிர்மாறானவன். எப்போதும் சிடுசிடுவென்று யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான். இவனுக்கு ஒரே ஒரு ஆறுதல், தன்னைப் போலவே மிக கோரமான இரட்டை கன்னப்பயல் இன்னொருவன் இருக்கிறான் என்பதுதான்.

வழக்கம்போல் ரோட்டோ, விறகு வெட்ட காட்டிற்கு சென்றான். விறகு வெட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மேலும், மேலும் வலுப்பெற்ற மழை, மிக கனமாக கொட்ட ஆரம்பித்தது. பாவம்… மழையில் மிகத் தெப்பமாக நனைந்துவிட்டவன், ஒதுங்கிக்கொள்ள இடம் தேடி அங்குமிங்குமாக ஓடினான்.

கடைசியாக அவன் விறகு வெட்டிக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு தூரம், பின்புறத்தில் ஒரு பெரிய மரம், அதில் ஒரு பெரிய பொந்தும் இருக்க, அதில் போய் உட்கார்ந்து கொண்டவன், அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டான்.

ஏதோ பாட்டு சப்தம் கேட்டு கண்விழித்தபோது, நட்டநடு நிசி வேளை… வானக் கூரையில் வட்ட நிலா ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. “ஐயோ! இத்தனை நேரமாகவா தூங்கி விட்டேன்!’ என்று பதறி எழுந்தவன், அவனுக்கு மிக அருகில் பாட்டு சப்தமும், “தும் தும்’ என்று மிக மகிழ்ச்சியாக ஒரு கும்பல் நடனமாடிக் கொண்டிருப்பதையும் பார்த்து ஆச்சர்யமடைந்தான்.

இந்த நேரத்தில் இது எப்படி சாத்தியம்? மெதுவாக தான் ஒளிந்து கொண்டிருந்த பொந்தை விட்டு வெளியே வந்தவன், புதர்கள் வழியே மெல்ல எட்டிப் பார்த்தான்.
என்னவொரு ஆச்சரியம்! அங்கே நிறைய பூதகணங்கள்… பச்சை உடையில், நீல உடையில், மஞ்சள் உடையில், வெள்ளை உடையில் இருந்தன. ட்ரம்ஸ் ஒலி காதை பிளக்க, ஒன்றோடு ஒன்று கைகளைப்பற்றிக் கொண்டு, “சிக் ஏ பூம்… சிக் ஏ பூம்… சிக் ஏ பூம்… பூம்… பூம்…’ என்று பாடிக்கொண்டே, வட்டமாக சுழன்று சுழன்று நடமாடிக் கொண்டிருந்தன?

நடு நடுவே ஒரு குட்டி பூதம், அந்த அனைவருக்கும் “டிரிங்கஸ்’யை தாராளமாக ஊற்றிக் கொடுத்துக் கொண்ட இருந்தது. அடேயப்பா! அந்த பாங்கை என்னவென்பது.

பூதங்கள் என்றால் நம் ரோட்டோவிற்கு அதீத பயம். ஆனால், அப்போது அவனுக்கு என்னவாயிற்று என்றே புரியவில்லை. பாட்டு என்றால் அவனுக்கு உயிர். அதுவும், பாட்டிற்கு ஏற்ப உடலையும், இடுப்பையும் நெளித்து, நிமிர்த்தி நடனம் ஆடுவதில் ரோட்டோ கில்லாடி.

இப்போது இந்த பாட்டின் சப்தம், இந்த பூதகணங்களின் “பூம்… பூம்…’ நடனம் இரண்டையும் பார்த்த பின், இதுகாரும் அவனுள் இருந்த பயம் சட்டென்று அவனிடமிருந்து விடைபெற்றுவிட, பூத கணங்களுக்கு இணையாக, “ஹே லா லா… ஊ லா லா…’ என்று பாடிக்கொண்டே, பூத கணங்களின் வட்டத்தை உடைத்துக்கொண்டு, அதன் தலைவர்களுக்கு இணையாக நட்டநடுவில் போய் நடனமாடிக்கொண்டே இருந்தான்.

அவைகளுக்கும் இவனைக் கண்டதும் ஆச்சரியம் தாங்கவில்லை. அட, இவனைப் பார்த்தால் ஒரு மனிதனைப் போல் அல்லவா இருக்கிறது என்று ஒன்றோடு ஒன்று கிசுகிசுக்க, தலைவனோ, அந்த மனிதனைப் போலவே நடனமாட, கூட்டத்திற்கு குஷி தாங்கவில்லை. தலைவனுக்கோ தலைகால் புரியவில்லை. ரோட்டோவின் கரங்களை இறுகப்பற்றி அணைத்துக் கொண்டு, இசையின் வேகத்திற்கேற்ப மிக வேகமாக மேலும், கீழும், பக்கவாட்டிலுமாக ஆடிக்கொண்டே இருந்தான்.

“”உம்… உம்… டிரம்சை வேகமாக அடியுங்கள்… புல்லாங்குழலை இன்னும் ஸ்பீடாக வாசியுங்கள்!” என்று உத்தரவிட, அட, என்னவொரு பாட்டு… என்னவொரு நடனம்! காடே அதிர்ந்தது. முழு இரவும் கரைந்துவிட, லேசாக கிழக்கு வெளுக்கத் துவங்கியது.

“காக் ஏ டூடில்… டூ… காக் ஏ டூடில் டூ…’ இந்த சப்தத்தைக் கேட்டதும் ஒரு பூதம், “”ஓ! இது சேவலின் முதல் கூவல். பூத கணங்கள் விடியுமுன் வீடு திரும்பிவிட வேண்டும் என்ற கவலையில் தலைவனை அணுக, ஊஹும்… தலைவன் இவன் பக்கம் கூட திரும்பவில்லை. இரண்டாம் முறையாக சேவல் கூவிவிட்டது! இனியும் இப்படியே இங்கிருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்து, சட்டென்று தன் தலைவனை அணுகி, அவனின் தோளில் தட்டி நிலைமையை விளக்கிற்று.
உடனே தலைவனும், ரோட்டோவின் கரங்களை இறுகப் பற்றி, “”நீ மனிதனாக இருந்தாலும், மிகப்பெரிய டான்சர். உன்னிடமிருந்து எனக்குக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதனால், கட்டாயம் மறக்காமல் நாளை இரவு நீ வர வேண்டும்!” என்றது.

இத்தனை நேரமும் இவைகளின் பாட்டிலும், நடனத்திலும் தன்னை மறந்திருந்த ரோட்டோவை, திடீரென பயம் பீடித்துக் கொண்டது.

“ஐய்யோ! இத்தனை நேரமும் நான் இந்த பூதங்களுடனா ஆடிப்பாடிக் கொண்டிருந்தேன்?’

உடலும், உள்ளமும் விதிர் விதிர்க்க, நாக்கு குழற, பயத்தால் வெடவெடத்து நின்றான்.

“”என்னப்பா, பயந்துட்டியா? பயப்படாதே… கட்டாயம் இன்று இரவு நீ வந்தே தீர வேண்டும்!” என்று சொல்லிக் கொண்டே, “டக்’கென்று அவனின் இடது கன்னத்திலிருந்து மிக அசிங்கமாகத் தொங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாவது கன்னத்தை பறித்து எடுத்தது.

“”இதோ பார்… நீ மரியாதையாக இன்று இரவு வந்தால் தான் இதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன்,” என்று சொல்லி, தான் பறித்த அந்த கன்னத்தை அவன் முன் ஆட்டிக் காண்பித்துவிட்டு, காட்டினுள் மறைந்து ஓடிவிட்டது.

ரோட்டோவிற்குள் ஒரே பயம் கலந்த திக் பிரமை. சட்டென்று தன்னை நிமிர்த்திக் கொள்ள, அவனுக்கு சற்று நேரம் பிடித்தது. தன் கன்னத்தைத் தடவிப் பார்த்தான். அங்கே இத்தனை காலமாக, ஏன் அவன் பிறந்ததிலிருந்த அவன் முகத்தை அலங்கரித்த அந்த கன்னத்தை காணவே காணோம்.

ஒரு துளி வலியில்லை; ஒரு பொட்டு ரத்தம் இல்லை. அவனின் இடது கன்னத்தைப் போலவே வழுவழுப்பாக இருந்தது. அந்த பூதம், கன்னத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கன்னத்தைப் பற்றி இழுத்து பறித்துக்கொண்டபோதுகூட வலியே தெரியவில்லையே. இது எப்படி சாத்தியம்?
உடல் முழுதும் பரபரப்பும், ஆச்சரியமும் கலந்த நிலையில் ஊரில் காலடி எடுத்து வைத்தபோது, அவனைப் பார்த்த அனைவரும் அப்படியே பிரமித்துப் போயினர்.
“”என்ன ஆச்சு உனக்கு ரோட்டோ? நேற்று காலை விறகு வெட்டச் சென்றவன், இப்போது சூரியன் உச்சி வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் சமயத்தில் வந்திருக்கிறாயே… முழுசாக ஒருநாள் நீ எங்கே போனாய்?” என்று ஆளாளுக்குத் துளைத்தெடுக்க, அவன் ஒன்று விடாமல் முழு விவரத்தையும் சொன்னான்.
குழந்தைகள் பட்டாளம் அனைத்தும் ஒரே குரலில், “”தாத்தா! இப்போது தான் நீ அழகாக இருக்கே… நல்லவேளை, அந்த பூதம் உன் கன்னத்தை பறித்துக் கொண்டது!” என்று அவனை புகழ்ந்து தள்ளின.

பாவம் அந்த வென்… இவனைப் போலவே, அவனின் வலது கன்னத்திலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்த அந்த மற்றுமொரு கன்னத்தின் சொந்தக்காரன். ரோட்டோ பேசியது அனைத்தையும் மிக உன்னிப்பாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“”அட! இந்த அயோக்கியனை குணப்படுத்தியதைப் போல என்னையும் ஏன் அந்த பூதகணங்களால் குணப்படுத்த முடியாது. இன்று இரவு நான் போய் அவைகளை சந்திக்கிறேன்,” என்று தீர்மானித்துக் கொண்டு, பூதகணங்களை சந்திக்க அன்று மதியமே புறப்பட்டான்.

அவன் நடக்க நடக்க, அக்காட்டுப்பாதை நீண்டு கொண்டே போயிற்று. காட்டை இருள் சூழ்ந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் கூட ஓய்ந்துவிட்ட நிலை என்றே சொல்லலாம். வட்ட நிலா மேல் வானத்தை நோக்கி மெல்ல மெல்ல நீந்திக் கொண்டிருக்க, எங்கிருந்தோ பாட்டு சப்தம்… வென்நிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சப்தம் வந்த திசையை நோக்கி வேக வேகமாக முன்னேறினான்.
புதர் வழியாக பார்த்தபோது, அங்கே விதவிதமான உடைகளில், படுகோரமான முகத்துடன், மனம் போனபடி நடனமாடிக் கொண்டிருந்தன பூதகணங்கள். அக்கூட்டத்தைப் பார்க்கவே, இவனுக்கு பயம் கவ்விக்கொண்டது.

“ஹும்… பயந்தால் எப்படி? தன் வலது கன்னம் சரியாக வேண்டுமெனில், பயத்தை உதறிவிட்டு உள்ளே நுழைய வேண்டியது தான்!’ என்று முடிவெடுத்து, பல்லை கடித்துக்கொண்டு பயத்தை மனது ஓரத்தில் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான் வென்.

“”பாஸ்! இதோ அந்த மனிதன் வந்துவிட்டான்!” ஒரு குட்டி பூதம் தன் தலைவனுக்கு அறிவித்தது.

“”வா… வா… உனக்காக எத்தனை நேரம் காத்திருப்பது. சீக்கிரம் நடனத்தை ஆரம்பித்துவிடு… ஒன்… டூ… த்ரீ… ஊஹும்!”

பாவம் நம் வென் என்ன செய்வான்? அவனுக்கு பாட்டு வராது; நடனமும் வராது… பயத்தால் நடுங்கிக்கொண்டே, கோணலும் மாணலுமாக ஆட, தலைவருக்கு ஒரே கோபம்.

“”பார்த்து சரியாக ஸ்டெப்ஸ் வைடா… ஒன்… டூ… த்ரீ…”

தலைவன் சொல்லச் சொல்ல, வென் அம்பேல் மற்ற பூதகணங்கள் முகத்தை சுளிக்க, “”மூடு டா ராஸ்கல் உன் வாயை… நீ பாடுவது பாட்டா… நீ ஆடுவது நடனமா? இரண்டு நிமிடம் தருகிறேன். ஓடிவிடு இங்கிருந்து!” என கர்ஜித்தது தலைமை பூதம்.

உடல் நடுங்க, வாய் குழற, “”மிஸ்டர் பூதம்! இதோ என் வலது கன்னத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த சதையை பார்த்தீர்களா?”
இடைவெட்டியது தலைமை பூதம்.

“”என்னடா உளறுகிறாய்? அநியாயமாக எங்களின் அருமையான பார்ட்டியை கெடுத்தாய்… இந்தா, இதை எடுத்துக்கொண்டு ஓடி விடு… சொல்லிக் கொண்டே, நேற்று ரோட்டோவிடமிருந்து பறித்த அந்த கன்னத்தை எடுத்து, இவனின் வலது கன்னத்தில் அழுத்திவிட… இப்போது இரண்டு கன்னங்களிலும் ஒரே மாதிரியாக இரண்டு தொங்கும் கன்னங்கள்.

உயிருக்கு பயந்து, அந்த அப்பிய இருளில் ஓட… கல்லும், முள்ளும், உடலையும், கை, கால்களையும் பதம் பார்க்க, ரத்தம் கசியும் உடலோடு நான்கு கன்னங்களோடு ஊருக்குள் நுழைந்தவனை கண்டு, குழந்தைகள் பட்டாளம் கும்மி அடித்து விசில் அடித்து வரவேற்றன.

குட்டீஸ்! அடுத்தவனைக் கண்டு பொறாமை பட்டவனின் கதியை பார்த்தீர்களா?

– செப்டம்பர் 10,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *