இரக்கமில்லா கம்சனும், இதயமில்லா கபீஷூம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 6,939 
 

பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் ஒரு அடர்ந்த காடு, அங்கே இருந்த உயரமான மலையில் இருந்து விழும் நீர் அருவியானது ஆறாக மாறி ஓடிக் கொண்டிருந்தது, ஆற்றின் இருபக்கங்களிலும் நிறைய பழம் தரும் மரங்கள். அந்த மரங்களின் மேலே பறவைகள், குரங்கு கூட்டங்கள் வாழ்ந்து வந்தன.

அங்கே கபீஷ் என்ற புத்திச்சாலி குரங்கு இருந்தது, அது ரொம்பவும் நல்ல குரங்கு, அந்த ஆற்றில் ஒரு கம்சன் என்ற முதலை இருந்தது, அந்த முதலையானது கபீஷ் குரங்கோடு பேசி, நட்பு உண்டாக்கிக் கொண்டது. கபீஷ் குரங்கு மரத்தின் மேலிருந்து நன்கு பழுத்த கொய்யா, பலா, மாம்பழங்களை பறித்து போடும், அந்த முதலையும் அவற்றை உண்டு மகிழும்.
http://www.freefever.com/animatedgif…/monkeys15.gif
கம்சன் கபீஷிடம் ஆற்றின் அடுத்த பக்கம் இருக்கும் ஊரின் சிறப்புகளை கதை கதையாக சொல்லும், கபீஷீம் ஆச்சரியமாக கேட்டு மகிழும், அதற்கு ஒரு நாள் எப்படியும் அந்த பக்கம் போய் ஊரை சுற்றிப் பார்க்க ஆசை. கம்சனும் அழைத்துச் செல்வதாக சொன்னது.

தினமும் காலையில் கம்சன், கபீஷ் இருக்கும் மரங்கள் அருகில் வரும், பழங்களை சாப்பிட்டு, பேசி விட்டு மாலையில் வீடு திரும்பும். அவ்வாறு வீடு செல்லும் போது கபீஷ் கொடுத்த பழங்களையும் எடுத்துச் செல்லும்.

கம்சன் வீட்டில் அதன் மனைவி குழந்தைகள் இருந்தார்கள். குழந்தைகள் தந்தை தரும் இனிப்பாக பழங்களை சாப்பிட்டு மகிழும். தினமும் தன் கணவர் கொண்டு வரும் பழங்களை சாப்பிட்ட பெண் முதலை, ஒரு நாள் “ஆமாம், உங்களுக்கு எப்படி தினமும் இத்தனை பழங்கள் கிடைக்கிறது” என்று கேட்டது.

அதற்கு அந்த முதலை “எனக்கு கபீஷ் என்ற ஒரு குரங்கு நண்பன் இருக்கிறான், அவன் ரொம்பவும் நல்லவன், அவன் தான் எனக்கு தினமும் நிறைய பழங்களை தேடி பறித்து கொடுப்பான், அவனுக்கு தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்” என்றது.

உடனே குட்டி முதலைகள் “அப்பா, அப்பா, நாளை கபீஷ் மாமாவுக்கு எங்களது நன்றியை சொல்லுங்க” என்றன.

பெண் முதலைக்கு ரொம்ப நாட்களாக குரங்கு கறி சாப்பிட ஆசை, அதிலும் குரங்கின் இதயம் என்றால் ரொம்ப ருசியாக இருக்கும் என்று பக்கத்து வீட்டு முதலை சொல்லக் கேட்டப் பின்பு, அதன் ஆசை அதிகமாகி விட்டது.

தன் கணவனுக்கு ஒரு குரங்கு நண்பன் இருக்கும் போது அதை எளிதாக வீட்டிற்கு வரவழைத்து சாப்பிட்டு விடலாம் என்று எண்ணியது.

பெண் முதலை பல முறை குரங்குகளை படிக்க தரைக்கு போனாலும் பிடிக்க முடியவில்லல. காரணம் குரங்குகள் வேகமாக ஓடி, மரத்தின் மேல் ஏறிவிடும். முதலையால் மரத்தில் ஏற முடியாது தானே.

இப்படி பலமுறை ஏமாந்த அந்த பெண் முதலை, இந்த முறை கணவன் உதவியால் குரங்கின் கறி சாப்பிடலாம் என்று நம்பியது. தான் நேரிடையாக சொன்னால் தன் கணவன் தனக்கு உதவ மாட்டார், எனவே ஏதாவது நாடகம் ஆட வேண்டும் என்று திட்டம் போட்டது.

அடுத்த நாள் பெண் குரங்கு திடிரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டது, எழுந்திருக்கவே இல்லை, ஆண் குரங்கு பயந்து போய் மருத்துவரை அழைக்க போனது, வீட்டில் சமையலே செய்யவில்லை, குட்டி முதலைகள் பசியால் துடித்தன.

http://www1.bestgraph.com/gifs/anima…codiles-03.gif

மருத்துவர் ஒரு பெண் முதலை, அதுவும் அந்த முதலையின் நண்பி, வந்த மருத்துவ முதலை, பெண் முதலையை சோதித்து பார்த்து, “உங்க மனைவிக்கு கடுமையான இதய நோய், இதை சரி செய்ய மருந்தே கிடையாது, ஆனால் ஒரு வழி இருக்கிறது, அதை செய்தால் சரியாகி விடும்” என்றது.

கம்சன் முதலை “உடனே சொல்லுங்க, என்ன செய்ய வேண்டும்”.

http://www1.bestgraph.com/gifs/anima…codiles-03.gif

மருத்துவ முதலை “அது ஒன்றும் இல்லை, உயிரோடு இருக்கும் குரங்கின் ரத்தமும், இதயமும் சாப்பிட்டால், உடனே உங்க மனைவியின் இதய நோய் தீர்ந்து விடும், இல்லை என்றால் இன்னும் ஒரு வாரத்தில் உங்க மனைவி இறந்து விடுவார்” என்றது.

அதை கேட்டதும் கம்சன் முதலைக்கு இதயமே நின்று விடுவது போலிருந்தது “மூலிகை, வேர், காய், கனி இப்படி ஏதாவது என்றால் எப்படியாவது தேடி கொண்டு வந்து விடலாம், ஆனால் குரங்கின் இதயம் என்றால் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியவில்லையே?”.

அப்போ கண் விழித்த மனைவி முதலை “உங்களுக்கு தெரிந்த குரங்கு ஒன்று இருக்கிறதே, அதை எப்படியாவது ஏமாற்றி அழைத்து வாங்க”

“அய்யோ, என் நண்பன் கபீஷா, அது பாவமில்லையா, அவன் நமக்கு எத்தனையோ முறை உதவி செய்திருக்கிறானே, அவனையா கொல்வது, என்னால் முடியது” என்றது கம்சன் முதலை

“அப்போ, நான் செத்து போனால் உங்களுக்கு கவலை இல்லையா, நம் குழந்தைகள் பட்டினியால் செத்து போகப் போறாங்க, அப்புறமும் நீங்க உங்க நண்பனோடு இருங்க” என்று புலம்பியது. குட்டி முதலைகளும் என்ன என்று சரியாக புரியாமல் அம்மாவோடு சேர்ந்து அழுதன.

அவர்களின் அழுகுரல் கேட்ட சகிக்காமல் ஆண் முதலை வீட்டை விட்டு வெளியே வந்தது, அதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கபீஷை பார்க்க சென்றது, கபீஷை கண்டதும், கபீஷின் அன்பை கண்டு மனைவியின் கோரிக்கையை மறந்தது. வழக்கம் போல் கபீஷிடம் பேசி விட்டு, அது கொடுத்த பழங்களை வீட்டிற்கு எடுத்து சென்றது.

மாலையில் மீண்டும் வீட்டில் ஒரே ரணகளம், அழுகை. இறுதியாக மனைவியிடம் “சரி! நான் என் நண்பனை அழைத்து வருகிறேன், நம் வீட்டில் நல்ல விருந்து தயாரித்து வை, கபீஷ் கடைசியாக பாயாசம் குடிக்கும் போது அதில் மயக்க மருந்து கலந்து கொடு, கபீஷ் மயங்கியதும், நீ அவன் ரத்தம் குடித்து, இதயத்தை சாப்பிட்டு விடு, நான் அப்போ அங்கே இருக்க மாட்டேன்” என்றது.

பெண் முதலையும் மிகவும் மகிழ்ந்து கபீஷிக்கு என்று பெரிய விருந்தே தயார் செய்தது, குட்டி முதலைகளும் விபரம் தெரியாமல் வீட்டிற்கு விருந்தாளி கபீஷ் மாமா வரப்போறாங்க என்று சந்தோசமாக இருந்தது.

அன்று இரவு சரியான மழை, இடி மின்னலோடு கனத்த மழை பெய்தது, அடுத்த நாள் கபீஷைப் பார்த்த முதலை “இன்று எனக்கு திருமண நாள், நீ கட்டாயம் எங்க வீட்டிற்கு வர வேண்டும், உனக்கு மத்தியானம் சிறப்பு விருந்து தயாராக உள்ளது, உன் வரவை என் மனைவி, குழந்தைகள் ஆவலோடு எதிர் பார்க்கிறாங்க”

அதை கேட்டதும் கபீஷ் குரங்கு மகிழ்ச்சி அடைந்து கம்சனுக்கு திருமண நாள் வாழ்த்துகள் கூறியது, உடனே அங்கே இங்கே என்று ஓடி நல்ல சுவையான பழங்கள் நிறைய பறித்து வந்தது, இன்னும் கிழங்கு வகைகள், தானியங்கள் என்று நிறைய கொண்டு வந்து கொடுத்தது.

கபீஷ் கம்சனிடம், “ஆமாம் நான் எப்படி உங்க வீட்டிற்கு வர முடியும்” என்றது,
உடனே கம்சன் சொன்னது, “நீ என் முதுகில் ஏறி அமர்ந்துக் கொள், நான் உன்னை பத்திரமாக அழைத்துச் சென்று, மீண்டும் இங்கே கொண்டு வந்து விடுகிறேன்”.

http://www1.bestgraph.com/gifs/anima…codiles-03.gif

கபீஷீம் கம்சனின் முதுகில் ஏறி அமர்ந்துக் கொள்ள, கம்சன் மெதுவாக சென்றது. கம்சனின் வீட்டை அடைந்ததும், கம்சனின் மனைவி வரவேற்று சூடாக காப்பி கொடுத்தது, குட்டு குழந்தை முதலைகள் பயங்கரமான குதுகுலமடைந்து, கபீஷிடம் பேசி மகிழ்ந்தன.

சிறிது நேரத்தில் கம்சனும் மனைவியும் சமையல் அறைக்கு செல்ல, கபீஷ் குட்டி முதலைகளுக்கு கதை சொன்னது, ஜெய் அனுமானின் வீரபிரதாபங்களை சுவையாக சொன்னது, அதை கேட்டு குட்டி முதலைகள் மகிழ்ந்தன, அப்போ அனுமான் தன் இதயத்தை திறந்து அதில் இராமர் சீதை இருப்பதை சொன்னது, அதை கேட்டதும் குட்டி முதலைகள் “மாமா! உங்க இதயத்தை திறந்து காட்டினாலும் அதில் இராமர் சீதை இருப்பாங்களா, அதையா எங்க அம்மா சாப்பிட போறாங்க, பாவமில்லையா?” என்று கூறின.

அதைக் கேட்டதும் கபீஷ் திடுக்கிட்டது, இங்கே ஏதோ சதி நடக்குது, அதை யாருக்கும் தெரியாமல் அறிய வேண்டும், குழந்தைகள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நினைத்து குட்டி முதலைகளிடம் ஏன் அப்படி சொல்லுறீங்க என்று கேட்டது, அதற்கு குட்டி முதலைகள் “இன்று காலையில் எங்க அம்மா, பக்கத்து வீட்டு பாட்டியிடம் இன்று எங்க வீட்டிற்கு கபீஷ் குரங்கு வருது, அதான் விருந்து தயார் ஆகுது, பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கியப் பின்பு அதன் இதயத்தை சாப்பிட போகிறேன், இன்று என்னால் உங்களிடம் கதை பேச நேரமில்லை” என்று பேசியதை நாங்க கேட்டோம்.

“மாமா, உங்க இதயத்தை சாப்பிட்டா, நீங்க செத்து போக மாட்டீங்களா?” என்று கவலையாக கேட்டது, அதற்குள் கபீஷ் குரங்கு பிரச்சனையை சமாளிக்க தயார் ஆகிவிட்டது. குட்டி முதலைகளைப் பார்த்து “குழந்தைகளா, நீங்க ரொம்ப நல்லவங்க, நான் இன்று என் இதயத்தை இங்கே கொண்டு வரவில்லை, அதனால் பிரச்சனை இல்லை, பயப்பட வேண்டாம், வாங்க விருந்து சாப்பிடலாம்” என்றது.

கம்சனும், அதன் மனைவியும் அறுஞ்சுவையான விருந்து படைத்தார்கள், கபீஷீம் கவலைப்படாமல் சாப்பிட்டது, இறுதியாக பாயசம் கொண்டு வைக்க அதை கபீஷ் தொடவில்லை.

கம்சனின் மனைவி கபீஷை பார்த்து “இந்த பாயாசம் ரொம்ப சுவையானது, அதில் பாதாம், பிஷ்தா, முந்திரி, திராட்சை, நெய் எல்லாம் போட்டு செய்திருக்கிறேன், சாப்பிடுங்க” என்றது.

உடனே கபீஷ் “என்னை விட என் இதயத்திற்கு தான் பாயாசம் ரொம்ப பிடிக்கும், இன்றைக்கு பார்த்து என் இதயத்தை கொண்டு வரவில்லையே, நேற்று இரவு பெய்த கடும் மழையில் நானும் என் இதயமும் நனைந்து விட்டோம், நனைந்த இதயத்தை காயப்போடவே மரத்தில் தொங்க விட்டு வந்தேன், நீ காலையில் வந்த போது கூட நான் காயப்போடுவதை பார்த்திருப்பாயே?” என்று அப்பாவியாக சொன்னது.

குட்டி குழந்தை முதலைகளும் “ஆமாம் அப்பா, மாமா இங்கே வந்ததும் எங்க கூட பேசும் போது கூட அவர் இதயத்தை கொண்டு வரவில்லை, கொண்டு வந்திருந்தால் இராமர் சீதையை காட்டியிருப்பேன்னு சொன்னாங்க, பரவாயில்லை அடுத்த முறை கண்டிப்பாக கொண்டு வருவதாக சொல்லியிருக்காங்க”.

கபீஷ் உடனே கம்சனைப் பார்த்து “நண்பா, உன் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருக்காங்க, மேலும் என் இதயமும் பாயாசம் சாப்பிட ஆசைப்படும், வேண்டும் என்றால் நாம் இருவரும் போய், மரத்தில் இருக்கும் இதயத்தை கொண்டு வரலாமே, எப்படி வசதி?” என்று கேட்டது.

உடனே கம்சன் தன் மனைவியை பார்க்க, பெண் முதலை, சீக்கிரமாக போயிட்டு வாங்க என்று கண் சிமிட்டு சொன்னது.

உடனே கம்சன் கபீஷ் குரங்கை தன் முதுகில் ஏற்றி கபீஷ் வசிக்கும் மரத்தின் அருகே இறக்கி விட்டது, உடனே கபீஷீம் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

கீழே கம்சன் காத்திருந்தது, ஆனால் கபீஷோ அதே இடத்தில் அமர்ந்திருக்க “ஏன் நண்பா, உன் இதயத்தை இன்னமும் எடுக்கவில்லை, நேரமாகிறது வா, வீட்டிற்கு போகலாம்” என்றது.

உடனே கபீஷ் “ஏய் முட்டாள் முதலை நண்பா! எங்கேயாவது, யாராவது தன் இதயத்தை உடலில் இருந்து பிரித்து எடுக்கப் பார்த்திருக்கிறாயா, இதயத்தை எடுத்த உடனே இறந்து போயிடுவாங்கன்னும் உனக்கு தெரியாதா? நண்பன் என்றும் கூட பார்க்காமல் என் இதயத்தை உன் மனைவி சாப்பிட என்னை அழைத்து சென்றாயே, இதுவா நட்பு. எந்த நிலையிலும் கை விடாமல் காப்பது தானே நட்பு, எனக்கு கெடுதல் செய்ய நினைத்த நீ இன்று முதல் எனக்கு நண்பன் கிடையாது, இனிமேல் என்னிடம் பேசாது, இங்கே வராதே, வந்தால் உன் தலையில் பெரிய கல்லாக பார்த்து தூக்கிப் போட்டு கொன்று விடுவேன்” என்று ஆத்திரமாக கூறியது.

முட்டாள் கம்சன் முதலையும் மனம் நொந்து போனது, தன் அவசர புத்தியால் தனத்தால் நல்ல நண்பனை இழந்து விட்டோமே. மனைவி பேச்சை கேட்டு நல்ல நட்பை இழந்து விட்டோமே, எத்தனையோ நாட்கள் கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு, ஒரு நாளில் வீணாகி விட்டதே, என்று மனம் வருந்தி கபீஷிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, சோகமாக வீட்டிற்கு திரும்பியது.

இனியும் இயற்கைக்கு மாறாக நட்பு பாராட்டக்கூடாது, தீய எண்ணம் படைத்தவர்களோடு சேரக்கூடாது, அவ்வாறு செய்தால் என்றாவது ஒரு நாள் ஆபத்தாக முடியும் என்பதை அறிந்த கபீஷ் மீண்டும் அந்த தவற்றை செய்யவில்லை, மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *