கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 7,547 
 

ஊர் எல்லையைத் தொட்டு ஓடிய ரயில் பாதை. சற்று தொலைவில் சின்னச்சின்ன வீடுகளும், குடிசைகளும். இடையே கரடுமுரடான பாதை, சில மரங்கள், அடர்த்தியில்லாத புதர்கள். அங்கே நின்ற ஒரு பிரும்மாண்டமானஆலமரம்! அதன் நூற்றுக்கணக்கான விழுதுகளை மெல்லிய காற்று உசுப்பிவிட, தரையுடன் கொஞ்சின. அந்தஆலமரம் எத்தனை காலமாக அங்கே இருந்ததோ… ஊரில் யாருக்கும் தெரியாது. ஆனால் ஊராரின்இன்பதுன்பங்களை அதுவே சுமப்பது போல அதன் கிளைகள் பரவிக்கிடந்தன.

ஆலமரத்தடியில் ரயில் பாதையை நோக்கி ஆவலுடன் உட்கார்ந்திருந்தது ஒரு சிறுவர் கூட்டம். அதன்தலைவன் பத்து வயது முத்து. காலை பதனோரு மணியளவில் வரும் ரயிலின் ‘தடதட …தடதட’ சத்தத்துக்குபையன்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்.

தரையில் காதை வைத்து உன்னிப்பாகக்கேட்ட முத்துவின் முகம்மலர்ந்தது…

“வண்டி வருதுடா…” முத்து கூவினான்.

அன்று வண்டி மிக வேகக் குறைச்சலாக வருவதைப் போலத் தோன்றியது. சில பெட்டிகள் ஆலமரத்தைத்தாண்டியதும் வண்டி நின்றது… பையன்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘ஏன் நின்றது?’ என்றகேள்வியை அவர்களுடைய முகம் காட்டியது.

“டேய், முத்து…வண்டி ஏண்டா நின்னுச்சி?”

“அங்க பாருங்கடா…யாரோ மூணு பேர் வண்டியிலேந்து இறங்கி வராங்கடா…”

முத்து கத்தினான்.

“ஓடிடலாம்டா, முத்து…”

“சும்மா கிடங்கடா… யாருன்னு பாக்கலாம்…”. விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தலைவன் முத்து.

வண்டியிலிருந்து இறங்கிய மூவரும் ஆலமரத்தை நோக்கி நடந்தனர். இன்னும் சில நிமிடங்கள்தான்…சிறுவர்கூட்டம் நின்றிருந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள்…முத்து மற்ற பையன்களைப் பார்த்தான்…

“ஓடிடலாம்டா, முத்து…”

“ஓடவேணாம்…மரத்துக்கு அந்தப் பக்கம் போய் ஒளிஞ்சிக்கலாம்…” விரைவாக ஒளிந்து கொண்டார்கள்.

வந்தவர்கள் கையிலிருந்த பொருள்களை கீழே வைத்தனர். வெள்ளையுடை அணிந்தவர்தான் அதிகாரியாகஇருக்கும்…மற்ற இருவரும் காக்கிச் சட்டை போட்டவர்கள். அதிகாரி விவரமாக ஏதோ சொன்னார்.

ஆலமரத்தின் அளவுகள் குறிக்கப் பட்டன. ரயில் பாதையிலிருந்து வெட்டவெளி எவ்வளவு என்பதும் குறிக்கப்பட்டது. அடுத்தது…ஆலமரத்தின் சுற்றளவு…

அதிகாரியுடன் காக்கிச் சட்டை ஆட்கள் மரத்தின் மறுபக்கம் வந்தபோது முத்துவுக்கு வியர்த்தது… ‘அப்பவேஓடியிருக்கணுமோ?’

“டேய் பசங்களா…இங்கே என்னடா செய்யறீங்க?” ஒரு காக்கிச்சட்டை அலறினான்.

“ரயில் வண்டி பாக்க வந்தோம்…”. தயக்கத்துடன் முத்துவின் பதில் வந்தது.

“மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிகிட்டுதான் பாக்கணுமா?” என்று பெரிதாக சிரித்தான் இன்னொரு காக்கிச்சட்டை.

“சரி…சரி…வந்த வேலையை கவனிங்கப்பா…” என்றார் அதிகாரி எரிச்சலுடன்.

ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாத முத்து, “என்னய்யா செய்றீங்க?” என்றான்.

“இங்க…புதுசா ஆறு வழி பாதை வரப்போகுது தம்பி…” அதிகாரியின் குரலில் ஒரு துள்ளல்.

“ஆலமரத்தை சுத்தியா?”

“ஆங்…இல்லை… உங்க ஊரை சுத்தி வரும்டா ஆறு வழி பாதை…” என்றான் முதல் காக்கிச்சட்டை.

அதிகாரியும் பெரிதாக சிரித்தார். சிரிப்பில் ஏளனம், கர்வம்…முத்துவின் முகம் சுருங்கியது.

ஆலமரத்துக்கு ஆபத்து…

அவன் எண்ணத்தை ஆமோதிப்பதைப் போல, “இந்த ஆலமரத்தை வெட்டப் போறோம்…ரயில் பாதையைஒட்டி நெடுக மரம், செடி, கொடி எதும் மிஞ்சாது…எல்லாத்தையும் சமப்படுத்திட்டு, ஆறு வழி பாதை…” இரண்டாம் காக்கிச்சட்டை விளக்கினான்.

“ஏனுங்க…ஊர்ல சொல்லிட்டீங்களா?”

“என்னடா சொல்லணும்?”

“ஆலமரத்தை வெட்டறதுக்கு ஊர்ல சொல்லணுமே…” முத்து அழாத குறைதான்.

“நீதான் பஞ்சாயத்து தலைவனா? இந்த மரம் யாரோட பரம்பரை சொத்துமில்லே…அரசாங்கத்துக்குசொந்தம்…ஊர் எது சொன்னாலும் நடக்காது…” அதிகாரி உறுமினார்.

மேலே எதுவுமே பேச முடியாமல் முத்து தன் சகாக்களுடன் ஊரை நோக்கி ஓடினான்.

அதிகாரியும் கூட வந்தஆட்களும் சிரித்தவாறு நின்றனர்.

மூன்று மாதங்கள் ஓடின…ஆலமரத்தடியில் ஊர் கூடியது. அரசு அதிகாரிகள் உட்கார்ந்திருக்க, ஊர் மக்கள் நின்று கொண்டிருந்தனர். முத்துவின் சிறுவர் கூட்டம் ஒருபுறமாக ஒதுங்கி நின்றனர்.

“இந்த ஆலமரம் எங்க ஊரை காக்கற சாமி மாதிரி…இதை வெட்டறதுக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்…”

“இது எத்தனை காலமா இங்கே கிடக்கு…இது மாதிரி வேறே ஆலமரம் உங்களால வளக்க முடியமா…”

சுற்றுப்புறச் சூழலைப் பற்றி ஊர்க்காரர்களுக்கு புரியாமலிருக்கலாம். அனால் இயற்கையை ஒட்டியதே மனிதவாழ்க்கை என்பதை நினைவில் நிறுத்தி வாழ்பவர்கள். இயற்கையைப் போற்றுபவர்கள். குரல் எழுப்பினார்கள். யார் காதில் விழுகிறது?

அதிகாரிகளுடன் பேசி எந்தப்பயனும் இல்லாது போகவே, போராட்டதில் தோல்வியடைந்த ஊர் மக்கள், அந்த ஆலமரத்தை எப்படிக் காப்பது என்று விளங்காமல் தவித்தனர்.

அடுத்த சில மாதங்களில் அரசு மிக மும்முரமாக ஆறு வழி பாதைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டது. பாதைபோடுவதில் யார் யாருக்கு எவ்வளவு ஒப்பந்தங்களோ, ஆதாயங்களோ…ஊராரின் ஓலக்குரல் ஒதுக்கப்பட்டு, ஆலமரத்துக்கு அருகே சாதனங்கள் தயாராயின.

மறுநாள் ஆலமரம் சாய்ந்துவிடும்…

முத்துவின் சிறுவர் கூட்டம் கடைசி முறையாக ஆலமரத்தடியிலிருந்து பதினோரு மணி ரயில் வண்டியின்வருகைக்காகக் காத்திருந்தனர்.

“மரத்தை வெட்டி என்னடா சொய்வாங்க?”

“எரிப்பாங்க…”

“இல்லடா…வித்துடுவாங்க…”

“மரப்பாச்சி சொய்வாங்டா…” குட்டிப்பையன் சொன்னான். ஒரே சிரிப்பு…

முத்து ஆலமரத்தையே உத்துப் பார்த்தான். இதுவரை இல்லாத ஏதோ ஒன்று அந்த மரத்தில்…என்ன அது? திடீரென முத்துவுக்கு ஒரு யோசனை…

“டேய் வாங்கடா போவோம்…” என்றான் உற்சாகத்துடன்.

“ரயில் இன்னும் வரலையே…”

“நாளைக்கி பாத்துக்கலாம்டா…”

மறுநாள்…

ஆலமரத்தை வெட்ட வந்த ஆட்கள்…வெள்ளையுடை அதிகாரி…இவர்கள் ஒருபுறம்…

மரத்தைச்சுற்றி ஊர் மக்கள். ஒவ்வொருவரும் தேங்காய், பழம், பூ, சூடம் நிரம்பிய தட்டை கைகளில் ஏந்தி நின்றிருந்தனர். அவர்களின் பக்திக் கூச்சல் உரக்க ஒலித்தது.

“புள்ளையாரப்பா…”

“நீதான் எங்க ஊரை காப்பத்தணும்…”

“டேய்…பூசாரிக்கு வழி உடுங்கடா…”

பூசாரி கூட்டத்தில் இடிபட்டு ஆலமரத்தடிக்கு வந்தான். அவனைப் பின் தொடர்ந்து அதிகாரியும் வந்தார். அவர் நிறையவே குழப்பத்தில் இருந்தார்…ஆனால், குழப்பம் ஊராருக்குத் தெரயாத வகையில் நாசுக்காக நட்நது கொள்ள முயற்சி செய்தார்.

“இங்கே எதுக்கு இவ்ளோ கூட்டம்?” முகம் காட்டாத குழப்பத்தை அவருடைய குரல் காட்டிவிட்டது…

“அங்க அன்னாந்து பாருங்க…சாமி…”

தன்னை சாமி என்று அடை மொழியிட்டு சொல்கிறார்களா? இல்லை, ஆலமரத்தில் ஏதாவது… சாமியா…? அன்னாந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி…

ஆலமரத்தில் பிள்ளையார் போன்ற உருவம்…இது எப்படி? அளவெடுக்க வந்தபோதும், ஊரின் எதிர்க்கூச்சலை விசாரிக்க வந்தபோதும் ஆலமரத்தில் இல்லாத பிள்ளையார் இப்போது எப்படி தரிசனம்…? ஒருவேளை….பார்க்கத்தவறி விட்டோமோ…?

பூசாரி கற்பூரத்தை ஏற்ற, ஊர் மக்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட, அதிகாரியும் அதையே செய்ய வேண்டிய நிலை…ஊரார் சிலர் தோப்புக்கரணம் போட்டனர். அதிகாரியும் குனிந்து எழுந்து தோப்புக்கரணம் போட்டபோது அவருக்கு மூச்சு வாங்கியது.

‘இனிமே இந்த ஆலமரத்தை வெட்டமாட்டாங்க…புள்ளையார் சக்தி வாஞ்சவரு…” என்று நினைத்த முத்துவின் முகத்தில் புன்னகை.

தூரத்தில் பதினோரு மணி ரயலின் கூவல் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *