கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 22,897 
 

ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில் பெரும்பாலோர் முடிந்தவரை உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் எல்லாருமே மது அருந்தியதால் நிலை தடுமாறியிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலிபேசியும், வேடிக்கைகள் செய்தும், சண்டை சச்சரவுகள் செய்தும் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் சில பயணிகள் முல்லாவைச் சூழ்ந்து கொண்டு கேலியும், கிண்டலும் செய்தனர்.

aabathu“”என்ன முல்லா அவர்களே! கடவுளோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது! உம்முடன் உரையாடும் அளவுக்கு கடவுள் அவ்வளவு எளிமையானவராகி விட்டாரா?” என்று ஏளனப் பேச்சு பேசத் தொடங்கினர்.
முல்லா அவர்களை ஏளனமாக நோக்கினான். அவர் சற்றும் கோபம் அடையவில்லை.

“”என் நண்பர்களே! கடவுள் என்னுடன் மட்டுமல்ல, தம்மைச் சந்திக்க வரும் எவ்வளவு எளியவரிடமும் உரையாட விரும்பும் கருணை உள்ளம் படைத்தவர்!” என்று மற்ற பயணிகளை நோக்கி கூறினார் முல்லா.

“”அப்படியானால் கடவுளிடம் எங்களுக்கு ஏதாவது உதவிவேண்டும் என்றால் உமது மூலமாக அதைப் பெறலாம் போலிருக்கிறதே!” என்று கூறிவிட்டுப் பயணிகள் கேலியாகச் சிரித்தனர்.

“”கடவுளின் தயவைப் பெறவேண்டுமானால் என்னுடைய தயவே தேவையில்லை. கடவுளிடம் கையேந்தினால், அவர் நிச்சயமாக யாருக்கும் உதவி செய்வார்!” என்று அடக்கமான குரலில் கூறினார் முல்லா.

அவருடைய பேச்சைக் கேட்டுப் பயணிகள் பரிகாசச் சிரிப்பொலி எழுப்பினர்.
முல்லா சக பயணிகளின் நடவடிக்கைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. தன்போக்கில் அமைதியாக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்.
திடிரென்று வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. பெரும் சூறாவளிக் காற்றுடன் பெருமளவு மழை கொட்டத் தொடங்கியது.

கடலில் எழுந்த பெரும் அலைகளின் நடுவே கப்பல் தத்தளிக்கத் தொடங்கியது. கப்பலை கட்டுப்படுத்த மாலுமி முயன்றார். கப்பல் திசைமாறித் தாறுமாறாகச் செல்லத் தொடங்கியது.

கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு அச்சமும், குழப்பமும் ஏற்பட்டது. கப்பல் கவிழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பீதியடைந்தனர்.

அப்போது கப்பல் மாலுமி அளித்த செய்தி பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

“”கப்பல் திசைமாறித் தன் போக்கில் நடுக்கடலுக்குச் சென்றுவிட்டது. சமீபத்தில் கரை இருக்குமா என்பது தெரியவில்லை. நாளைக் காலைக்குள் நாம் கரையை அடையாவிட்டால் நம்மிடம் இருக்கும் உணவும், தண்ணீரும் காலியாகி விடும். பசியும், பட்டினியுமாகக் கிடந்து நடுக்கடலில் நாம் இறக்க வேண்டியதுதான்!” என்று மாலுமி அறிவித்தார்.

கப்பல் பயணிகள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. ஒவ்வொருவரும் தத்தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள யோசனை செய்தனர்.
உயிர் தப்புவதற்கு அவர்களுக்கு வேறு எந்தவழியும் புலப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு முல்லாவிடம் ஓடிவந்தனர்.

“”முல்லா அவர்களே! சற்றுமுன் நாங்கள் கடவுளைப் பற்றி இழித்தும், பழித்தும் பேசியதன் காரணமாகத்தான் இப்படி ஓர் ஆபத்தில் சிக்கிக் கொண்டோமோ என்று தோன்றுகிறது. தாங்கள் கடவுளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்பதால் கடவுளுடன் தொடர்பு கொண்டு, எங்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்!” என்று பயணிகள் வேண்டிக்கொண்டனர்.

“”அன்பார்ந்த நண்பர்களே! இந்த ஆபத்து நிறைந்த நேரத்தில் கூட கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்ய உங்களுக்குத் தோன்றவில்லை. உங்களைப் போன்ற சாமானிய மனிதனாகிய என்னிடம் வந்துதான் முறையிடுகிறீர்கள். நீங்களெல்லாம் கடவுளை அவமரியாதை செய்தாலும் கடவுள் உங்களைக் கோபிக்க மாட்டார். உலகத்திலுள்ள மக்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள் அல்லவா? கருணை உள்ளம் படைத்த கடவுள் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார்!”

இவ்வாறு சற்றும் பதற்றமில்லாமல் அமைதியான குரலில் கூறினார் முல்லா.
“”கடவுள் நம்மையெல்லாம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?” என்று பரபரப்போடு வினவினர் கப்பல் பயணிகள்.

“”என் அன்பு நண்பர்களே! அதோ பாருங்கள் தொலைவில் கரை தெரிகிறதை!” என்று ஒரு திசையைக் காட்டினார் முல்லா.

உடனே அங்கிருந்த கலக்கமும், குழப்பமும் அகன்றன. மகிழ்ச்சியடைந்த கப்பல் பயணிகள், “”இனி ஆபத்தில்லை!” என்று ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினர்.
முல்லா மகிழ்ச்சிக் கூத்தாட்டம் நடத்திய பயணிகளை வேதனையோடு நோக்கினார்.

“இந்த நேரத்தில் கூட இந்த மக்களுக்கு கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையே!’ என்று மிகுந்த வருத்தத்தோடு தனக்குத்தானே கூறிக் கொண்டார் முல்லா.

– செப்டம்பர் 10,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *