ஆபத்து வேளையில் உதவியவர் யார்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 9,533 
 

ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில் வாழ்கை நடத்தினார்.

அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோமன், இளையவன் காமன்.

மூத்தவன் சோமன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமமாகக் கருதி பழகுவது அவன் வழக்கம்.

இளையவன் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தான். கல்வி போதித்து வந்தான். அந்தணரான தந்தை இறக்கவே, இருந்த சிறிது நிலத்தை அண்ணனும் தம்பியும் பகிர்ந்து கொண்டனர்.

மூத்தவனான சோமன் விவசாயத்தில் ஈடுப்பட்டு உழைக்கலானான். ஒரு நாள், சோமன் தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டு வெறுப்படைந்த அந்தணப் பெரியவர் ஒருவர், சோமனிடம் “நீ அந்தண குலத்தில் பிறந்தவன் அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுடன் பழகலாமா?” என்று கண்டித்து அவனை ஏசினார்.

பெரியவரின் பேச்சு அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது, “கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? பிறப்பு என்பது எல்லோருக்கும் சமம். அதில் வேறுபாடு காண்பது முட்டாள்தனமானது. மேலும், அந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர், உழுது பயிர் செய்து தருவதைத்தானே அனைவரும் சாப்பிடுகிறோம். அதில் வேறுபாடு காண்கிறோமா?. மக்களின் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முட்டாள் தனமானது” என்று கூறினான்.

பெரியவர் பேசாமல் சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த அந்தணப் பெரியவர் சாலையில் சென்று கொண்டிருந்த பொது, மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவன் ஒருவன், ஓடி வந்து, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது தண்ணீர் குடிக்கச் செய்து, அருகில் இருந்த, தன் குடிசைக்குத் தூக்கிச் சென்று மயக்கத்தை தெளியவைத்து உதவினான்.

பெரியவர் எழுந்து புறப்பட்டு போது எதிர்பாராமல் அங்கே வந்த சோமன், “அந்தணப் பெரியவரே! மயக்கமுற்று கிழே விழுந்த உங்களைக் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தவரின் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்கள் இனத்தவர் வரும்வரை காத்திருந்தாள் நீங்கள் செத்துப் போயிருப்பீர்கள்” என்று இடித்துப் காட்டினான். பெரியவர் தலைகவிழ்ந்து, எதுவும் பேசாமல் நடக்கலானார்.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *