அனைவருக்கும் சொந்தம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,989 
 

முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும் நிறையக் கிளைகளுடனும் பசுமையான இலைகளுடன், நிறையப் பழங்களைச் சுமந்து கொண்டு நிமிர்ந்து நின்றது.

இதன் காரணமாக அம்மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வசித்தன. கிளிகளும் வெளவால்களும் அத்திப் பழங்களைச் சாப்பிட்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. எந்நேரமும் அம்மரத்தில் பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது.

அனைவருக்கும் சொந்தம்மரத்திலிருந்து உதிர்ந்து விழும் பழங்கள் சிறு பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் உணவாகின. நீர்ப்பறவைகள், மயில்கள் மைனாக்கள் போன்றவை அப்பூச்சிகளையும் புழுக்களையும் உண்டு பசியாறின. பறவைகளின் எச்சம் விழுந்து கொண்டே இருந்ததாலும் எண்ணற்ற செடி, கொடிகளும் புற்களும் அம்மரத்தின் கீழ் அடர்ந்து வளர்ந்து இருந்தன.

ஒருநாள் ஆண்குரங்கு ஒன்று உடம்பெங்கும் காயங்களுடனும் வீக்கத்துடனும் மிகவும் சோர்ந்து போய் அந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தது.

அது எங்கேயோ அடிபட்டிருக்கும் போலும்! ஆற்று நீரைச் சிறிது அருந்திவிட்டுப் பிறகு மரத்தில் இருந்த கனிந்த அத்திப் பழங்களைச் சுவைத்து உண்ணத் தொடங்கியது.

வயிறார உண்டபின் உடல் அசதியின் காரணமாக அப்படியே மரக்கிளையில் அமர்ந்து உறங்க ஆரம்பித்தது.

ஒரு வார காலத்துக்குப் பிறகு அதன் உடம்பில் இருந்த வீக்கமும் காயங்களும் மறைந்து போயின. குரங்கு, இப்பொழுது முழுத் தெம்புடனும் உற்சாகத்துடனும் இருந்தது. தன் இஷ்டம் போல மரத்தின்மீது ஏறி விளையாட ஆரம்பித்தது.

அந்தக் குரங்குக்கு, ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பறவைகளின் ஒலி பிடிக்கவே இல்லை! எனவே அது, பறவைகளை விரட்டத் தொடங்கியது. மரத்திலிருந்த பறவைகளின் கூடுகளைப் பிய்த்து எறிய ஆரம்பித்தது. பறவைகளின் முட்டைகளை உடைத்து ஆற்று நீரில் வீசியது. இதைக் கண்ட பறவைகள் அஞ்சி நடுங்கின.
அம்மரத்தை நாடி வரும் மற்ற குரங்குகளையும், அது விரட்டியடிக்க ஆரம்பித்தது. குரங்கின் அட்டகாசம் பொறுக்க முடியாத பறவைகள் வேறு மரத்தை நாடிச் செல்லத் தொடங்கின. சில நாட்களில் எல்லாப் பறவைகளும் வேறு இடம் தேடிச் சென்று விட்டன.

இப்போது அந்த மரத்தில் அந்தக் குரங்கு மட்டுமே இருந்தது. அந்த மரத்திலேயே அதற்குத் தேவையான அளவு பழங்கள் கிடைத்ததால், உணவைத் தேடி வேறு இடத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எங்கும் செல்லாமல் மரத்திலேயே வாழ்ந்து வந்ததால் குரங்கின் உடல் பெருக்கத் தொடங்கியது.

எப்போதாவது, அம்மரத்தின் கிளைகளில் வந்து அமரும் கொக்கு, செங்கால் நாரை போன்ற நீர்ப்பறவைகள்கூட அம்மரத்துக்கு இப்போது வருவதில்லை.

குரங்கின் துஷ்டத்தனத்தால் அம்மரம் பறவைகளே அண்டாத மரமாகக் காட்சியளித்தது.

ஆண்டுகள் பல கடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மரத்தின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கின. இது இயல்பான நிகழ்வுதான் என்றாலும், இலைகள் திரும்பவும் அந்த மரத்தில் தோன்றவில்லை. இலைகள் குறைந்து கொண்டே போனதால், பழங்களும் குறைய ஆரம்பித்தன. சிறிது நாட்களில் மரத்தில் பழங்களே இல்லாமல் போயிற்று.
இப்பொழுது குரங்குக்கு உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுப் பழகியதால் அதனால் பிற மரங்களுக்குத் தாவிச் செல்லவும் சோம்பேறித்தனமாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக மரம் மொட்டை மரமானது. வெயில் வேறு கொளுத்தத் தொடங்கியது. இலைகள் இல்லாமல் நிழல் இல்லாமல் வெப்பம் குரங்கின் உடலைத் தாக்கத் தொடங்கியது. இதுவரை தன் இனத்தாரை மதிக்காமல், அந்த மரத்திலேயே குடியிருந்த குரங்கு தனது இனத்தாரைத் தேடிச் சென்றது. ஆனால் பிற குரங்குகள் அதைத் துரத்தி அடித்தன.

ஒரு பருந்திடம் குரங்கு தனது நிலைமையைச் சொல்லி அழுதது.
குரங்கின் மேல் பரிதாபப்பட்ட பருந்து, “”நண்பா, இந்த மரத்தில் பறவைகள் இருந்த வரையில் உணவுக்குப் பஞ்சமின்றி வாழ்ந்தாய். மரத்தை நாடி வந்த பறவைகளையும் உன் இனத்தாரையும் இரக்கமின்றி விரட்டியடித்தாய். எல்லாவற்றையும் நீயே அனுபவிக்க எண்ணினாய். சுயநலத்தின் பலனை இப்போது நீ அனுபவிக்கின்றாய். இயற்கையின் படைப்புகள் அனைத்தும் எல்லோருக்கும் சொந்தம் என்பதை மறந்து போனாய்.

இப் பகுதியில் உள்ள மற்ற மரங்கள் யாவும் செழுமையாக இருக்க, நீ தங்கியிருக்கும் மரம் மட்டும் வாடுவது புரியாத புதிராக உள்ளது. இப்பகுதியில் மிகவும் வயதான மரங்கொத்தி ஒன்று இருக்கிறது. நீ அதை அணுகினால், அது உனக்கு உதவி செய்யக்கூடும். இம்மரம் மீண்டும் பறவைகளால் உயிர் பெற வேண்டும். அதற்கு இதுதான் நல்ல வழி. நீ உடனே போய் அந்த மரங்கொத்தியைப் பார்…”

குரங்கு உடனே விரைந்து சென்று அந்த மரங்கொத்தியிடம் தன் நிலையைச் சொல்லி வருந்தியது.

மரத்தை சோதனை செய்த மரங்கொத்தி, பல காலமாக அம்மரத்தில் பறவைகளே வசிக்காததால் கரையான்களும் புழுக்களும் பூச்சிகளும் அம்மரத்தின் தண்டுப் பகுதியை அரித்துக் கொண்டிருப்பதைக் கண்டது.
அதனால்தான் மற்ற மரங்கள் யாவும் செழிப்போடிருக்க, இந்த ஒரு மரம் மட்டும் பட்டுப்போகத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொண்டது.
உடனே தனது கூரிய அலகால், அந்தக் கரையான்களையும் புழுக்களையும் கொத்தித் தின்னத் தொடங்கியது. மேலும் பல மரங்கொத்திகள் கூட்டமாகப் பறந்து வந்து மரத்தை அரித்துக் கொண்டிருந்த பூச்சிகளைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.

இப்படியே சில நாட்கள் சென்றன. கரையான்கள் முற்றிலுமாக அழிந்து போக, மரம் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது. தன் தவறை உணர்ந்த குரங்கு மனம் திருந்தியது.

மரம் துளிர்த்திருப்பதைக் கண்ட புதிய பறவைகள் பல அம்மரத்துக்கு வரத் தொடங்கின. குரங்கு தொந்தரவு ஏதும் செய்யாமல் இருந்ததால் நிறையப் பறவைகள் மரத்தை நாடி வந்து, தங்களது கூடுகளைக் கட்ட ஆரம்பித்தன. மரம் மீண்டும் செழிப்பானது. குரங்கும் பறவைகளும் அந்த மரத்தில் ஒற்றுமையாக வாழத் தொடங்கின.

ஆம்! இயற்கையின் படைப்புகள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமாகும். தனி ஒருவர் உரிமை கொள்ள நினைத்தால் அழிவுதான் நேரிடும்.

இப் பூமியானது மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமில்லை. இறைவன் படைத்த தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைவருக்கும் சொந்தமாகும்.

இக்கதையில் வந்த குரங்கைப் போலத்தான் மனிதன் தான் மட்டும் வாழக் காடுகளை அழிக்கின்றான். அதனால் ஏற்படும் விளைவை இன்னும் சில நாட்களில் உணரத்தான் போகின்றான்.

கதையில் வந்த குரங்குக்கு உதவ ஒரு மரங்கொத்தி இருந்தது. மனிதனுக்கு..?

– ந.லெட்சுமி (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *