சிறுகதை எழுத விரும்புவோர்க்கு எனது பட்டறிவுக் குறிப்புகள் – தி.ச.வரதராசன்

 

இலக்கியமோ, வேறு எந்த விதக்கலையோ – அது மக்களுக்குப் பயன் செய்ய வில்லை என்றால், அப்படியான ஒன்று வேண்டிய தில்லையென்று கருதுகிறேன்

கதைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நாவல்.- பெரியது. மற்றது சிறுகதை- சிறியது. பெரியனவாய், மிக நீண்டனவாய், அநேக பக்கங்களில் இருக்கும் கதைகளையெல்லாம் ‘ நாவல் ‘ என்றும்; சிறியனவாய், சிலபக்கங்களில் மட்டுமே வருவன எல்லாவற்றையும் ‘ சிறுகதை ‘ என்றும் சொல்லி விடலாமா?

தவறு,

ஒரு சிறு நிகழ்வை, ஒரு காட்சியை, ஒரு கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதற்குத் தேவையான கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் கற்பனை செய்து, சொற்செட்டுடன் எழுதப்படுவது சிறுகதை. ஐந்து பக்கங்களுக்குள் வந்தாலும் சரி, ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் போனாலும் சரி, இது சிறுகதைதான்.

நாவல் அப்படியல்ல. அது ஒரு வரலாறு போன்றது. ஒரு கதாநாயகன், அல்லது கதாநாயகி யையும், அவரைச் சூழ்ந்துள்ள பற்பல பாத்திரங்க ளையும், அவர்கள் சந்திக்கிற அநேக நிகழ்வுகளையும் கோவைப்படுத்தி எழுதப்படுவது நாவல். இருபது பக்கத்திலும் ஒரு நாவல் வரக்கூடும்; இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேலேயும் போகக்கூடும். (சிறிய நாவல்களை ‘குறு நாவல்’ என்று சொல்கிறோம்.)

சிறுகதைகள் எழுதுவதைப்பற்றியே, எனது பட்டறிவைக் கொண்டு – நான் சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன்.

varathar-pic

சிறுகதையையோ, அல்லது வேறு எதையோ எழுதி, ஒரு எழுத்தாளராக வருவதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? – அந்த ஆசை, அந்த ஆவல் தான் உங்களை ஒரு எழுத்தாளராக்குவதற்கு முக்கியமான மூலப்பொருளாகும்.

அது பேராசையாக, இடையிலே வற்றிப்போகாத பேரார்வமாக இருத்தல் வேண்டும்.

இந்த ஆசை உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது: நிறையப் படிக்க வேண்டும்.

நல்ல சிறுகதைகளைத் தேடித் தேடிப் படிக்க வேண்டும், சிறுகதைகளை மட்டுமல்ல, நாவல்கள், கவிதைகள், பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள்எல்லாவற்றையும் நிறையப் படிக்க வேண்டும்.

நான் சுமார் பத்துப் பன்னிரண்டு வயதிலேயே கதைப் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கி விட்டேன்.

இப்போது உங்களுக்கு மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய அருமையான நாவல்கள், சிறுகதைகள் படிப்பதற்கு வேண்டிய அளவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆனால், சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மூன் – நான் கதைகளைப் படிக்க வேண்டுமென்று பேராவலோடு முனைந்த போது, ‘ தரமான இலக்கியம்’ என்று எடுத்துப் படிப்பதற்கு எந்த நூலுமே — நாவல் – சிறுகதை இலக்கியத்தில் இருந்ததாகத் தெரியவில்லை .

தொடக்க காலத்தில் நான் படித்த நூல்கள் எத்தகையன தெரியுமா?

அல்லியரசாணி மாலை, நல்ல தங்காள் கதை, மயில் ராவணன் கதை , மதன காமராசன் கதை, தெனாலி ராமன் கதை, ஸ்ரீமத் கம்பராமாயாண வசனம், ஸ்ரீமத் மகாபாரத வசனம் – இப்படியான நூல்களைத்தான் நான் தொடக்கத்தில் படித்தேன்.

இந்த நூல்களில் எதுவும் உங்களுக்கு இப்போது கிடைக்குமென்று தோன்றவில்லை!

இந்த நூல்களை யெல்லாம் படித்த பிறகு தான், ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், ஆனந்த விகடன் , கலை மகள் முதலிய தென்னிந்தியச் சஞ்சகைகளை நான் காணவும் படிக்கவும் நேர்ந்தது.

இந்தச் சஞ்சிகைகளில் வந்த கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன ,

நானும் எழுதவேண்டுமென்ற ஆவல் என் நெஞ்சுக்குள்ளே முளைகொண்டது.

‘இந்தக் கதைகளையெல்லாம் யாரோ எழுதுகிறார்கள் தானே, ஏன் நானும் எழுதக் கூடாது?’ என்று ஒரு எழுச்சி என்னுக்குள்ளே உதயமாயிற்று.

ஒரு கதையை எப்படி எழுத வேண்டுமென்று புத்திமதி கூற எனக்கு யாரும் இருக்கவில்லை. கதை எழுதுகிறவர்கள் யாரையும் நான் சந்திக்கக் கூடியதாயில்லை .

ஆனந்த விகடனில், ஆர்.கே. நாராயணன் எழுதிய ‘சுவாமியும் சினேகிதர்களும்’ என்ற தொடர்கதை அப்போது வந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட அதே மாதிரி, எங்கள் யாழ்ப்பாணத்துச் சிறுவர்களை வைத்து ஒரு கதையை எழுதி ஆனந்த விகடனுக்கே அனுப்பி வைத்தது ஏதோ கனவு போல நினைவிருக்கிறது. அது போல வேறு சில கதைகளையும் எழுதி அனுப்பியிருப்பேன். அவை எதுவுமே அச்சில் வரவில்லை !

ஆனால், அதைப்பற்றிச் சற்றேனும் மனம் தளராமல், நான் புதிது புதிதாகக் கதைகள் படிப்பதும், இடைக்கிடை எழுதுவதுமாக வளர்ந்து கொண்டிருந்தேன் .

சிறுகதை எழுதி, எழுத்தாளர்களாக வர விரும்புகிறவர்கள் என்னுடைய இந்தப்பட்டறிவை மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, நீங்கள் என்னைப்போல ‘அல்லி யரசாணி மாலை’ போன்ற நூல்களையெல்லாம் படித்துப் பொழுதை வீணாக்க வேண்டியதில்லை.

நல்ல எழுத்தாளர்கள், சுவைஞர்களிடம் கேட்டறிந்து, சிறந்த சிறுகதை நூல்களைத் தெரிவு செய்து படிக்கலாம்.

படித்து, மனத்திலே ஒரு தெளிவு தோன்றிய பின், ஒரு சிறுகதையை எழுதிப்பார்க்கலாம். ‘பரவாயில்லை’ அச்சில் வரக்கூடிய கதைதான், என்று ஒரு தகுதியான சுவைஞர் சொல்வாரானால் அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்பிப் பார்க்கலாம்.

ஆனால், அது அச்சில் வரவில்லை என்றால் — அதற்காக நீங்கள் மனம் தளர்ந்து விடக் கூடாது! – இது மிக முக்கியமானது.

தகுதி வாய்ந்த ஒருவரின் அறிவுரையின்படி அந்தக் கதையையே திருப்பி எழுதிப் பார்க்கலாம். அல்லது அதைப் போட்டுவிட்டு, புதிதாக இன்னொரு கதையை எழுதத் தொடங்கலாம்.

‘சிறு கதைகள் எழுத வேண்டும்; சிறந்த எழுத்தாளராக வரவேண்டும்’ என்ற உங்கள் ஆசைத் தீ ஒருபோதும் அணைந்து விடக்கூடாது!

நல்ல சிறு கதைகளைப் படித்துவிட்டால் மட்டும் சிறுகதைகளை எழுதிவிட முடியுமா?

முதலில், ‘படிப்பது’ என்பது நூல்களில் படிப்பவற்றோடு மட்டும் நின்று விடாது —

கண்ணால் பார்த்துப் படிப்பவை அநேகம்.

மற்றவர்களிடம் காதால் கேட்டுப் படிப்பவையும் அநேகம் .

எல்லா வழிகளிலும் படிக்க வேண்டும்.

சரி. படித்தால் மட்டும் போதுமா? போதாது!

நீங்கள் படித்தவைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் நன்றாகவும் சரியாகவும் சிந்திப்பதற்கு பரந்துபட்ட படிப்பறிவே உதவும்.

சிந்தனையின் குழந்தைதான் கற்பனை.

கற்பனை செய்யும் ஆற்றல் இல்லாமல் நீங்கள் கதைகளை எழுதமுடியாது!

‘சிறுகதை என்பது ஒரு சிறந்த இலக்கிய வடிவம்’ என்பது இப்போது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது .

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் – ஐம்பது ஆண்டுகளுக்கு முன் -சிறு கதை ஒரு இலக்கியத் தரம் வாய்ந்த பொருளென்று எங்கள் நாட்டு அறிஞர்கள் – பண்டிதர்கள் ஏற்றுக் கொண்டதில்லை.

சங்ககால இலக்கியங்களும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலான நூல்களுமே இலக்கியத் தரமுள்ளவை என்று அவர்கள் கருதினார்கள். முக்கியமாக ‘இலக்கியம்’ என்பது செய்யுள் வடிவத்திலேயே இருக்குமென்றார்கள். கதை எழுதுகிறவர்களை இலக்கிய கர்த்தாக்களாக அப்போது ஏற்றுக் கொண்டதில்லை!

நல்லது. இலக்கியம் எப்படியிருத்தல் வேண்டும்?

இதைப்பற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு – 1960ம் ஆண்டு நான் வெளியிட்ட (கயமை மயக்கம் என்ற) சிறுகதைத் தொகுதியின் முகவுரையில் பின் வருமாறு எழுதியிருக்கிறேன் .

“கவிதையோ, கதையோ, நாடகமோ, கட்டுரையோ — உருவத்தில் அது எப்படியிருந்த போதிலும், அதை ‘இலக்கியம்’ ஒன்று சொல்வதற்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும் .

“முதலாவது அதில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கு மனிதனுடைய அகத்தையோ, புறத்தையோ உயர்த்துவதாக அமைய வேண்டும்.

மற்றது, அசைச் சொல்லும்விதம், நடை, கட்டுக்கோப்பு ஆதியவற்றில் சுவையிருக்க வேண்டும். “இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இல்லாமற் போனாலும் அதை இலக்கியம் என்று சொல்ல முடியாது . பாடப்புத்தகங்களில் நாங்கள் படித்த ‘ நல்லொழுக்கம் ‘ என்ற கட்டுரையில் சிறந்த இலக்கு இருந்த போதிலும்; சமீபத்தில் ஒரு வார இதழில் படித்து விட்டுச் சிரி சிரி என்று சிரித்த விகடத் துணுக்கில் சுவை இருந்த போதிலும் இவற்றை நாம் இலக்கியம் என்று கொள்ளவில்லையல்லவா!”.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் குறிப்பிட்டஇந் தக் கருத்து, இன்றைக்கும் ஏற்றதாகவே இருக்கிறது.

சில கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறக் கூடியவைதான்.

நானே என்னுடைய முந்திய கருக்துக்கள் பல வற்றைப் பின்னால் மாற்றிக் கொண்டதுண்டு, அதில் தவறில்லை. அது வளர்ச்சியின் அறிகுறி.

ஆனால், சில கருத்துக்கள் நிலையானவை. அவை மாறுவதில்லை .

இலக்கியம் பற்றி நான் அன்று குறிப்பிட்ட கருத்துக்களும் நிலையானவைதான் என்று இன்றைக்கும் நினைக்கிறேன் .

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், ‘கலை கலைக்காகவே’ என்று சிலர் வாதிட்டார்கள். ‘இலக்கியத்தில் பிரசாரம் இருக்கக் கூடாது. அதற்கு ஒரு இலக்கு முக்கியமல்ல. படித்து, உணர்ந்து, சுவக்கக் கூடியன வெல்லாம் இலக்கியங்களேதான்’ என்ற மாதிரிச் சொன்னார்கள்.

இப்போதும் மிக அருமையாக, ‘உயர்ந்த தரத்தில் இருக்கும் இலக்கிய விமர்சகர்கள் சிலரும் ‘கலை கலைக்காகவே; அதில் கருத்துத் திணிப்பு இருக்கக் கூடாது’ என்று கருதுகிறார்கள் போலிருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில், நான் மிக உயரப் போகவில்லை. அதை விரும்பவுமில்லை .

இலக்கியமோ, வேறு எந்தவிதக் கலையோ அது அநேக மக்களுக்குப் பயன் செய்யவில்லையென்றால், அப்படியான ஒன்று வேண்டியதில்லையென்று கருதுகிறேன் .

நாங்கள் எழுதுவது மக்களுக்குப் பயன்தர வேண்டும். நல்ல இலக்கியம் என்பது அப்படித்தான் இருக்க வேண்டும் .

சிறுகதை இலக்கியமும் இந்தக் கட்டுக்கோப்புக்குள் அடங்கியதுதான் .

நீங்கள் நிறையப் படிக்கிறீர்கள். சிந்திக்கிறீர்கள், எனவே உங்களால் நன்றாகக் கற்பனை செய்யமுடிகிறது.

அப்படிக் கற்பனை செய்து, கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் திறம்படக்கோத்து கதை எழுதி விடுகிறீர்கள் .

ஆனால், அந்தக் கதையைத் ‘தரமற்றது’ என்று இலக்கியகாரர்கள் ஒதுக்கியே விடுகிறார்கள்.

ஏன் ?

நான் கூட ஆரம்ப காலத்தில் பல கதைகளை இப்படித்தான் எழுதினேன். அவை அச்சிலும் வந்தன.

ஆனால் அவைகளை நானே இன்று ஒதுக்கி விட்டேன். 1960 ல் நான் வெளியிட்ட எனது சிறுகதைத் தொகுதியில் அந்தக் கதைகளைச் சேர்க்கவேயில்லை!

ஏனென்றால், அந்தக் கதைகளில் மற்ற எல்லாம் இருந்த போதிலும், நல்ல கருத்துகளை அவை மையமாகக் கொண்டு அமையவில்லை.

அந்தக்கதைகள் படிப்பதற்குச் சுவையாக இருந்த போதிலும், மனத்தில் ஒரு நிறைவைத் தரவில்லை !

நீங்கள் நிறையப் படிக்கிறீர்கள் அதனால் –

நன்கு சிந்திக்கிறீர்கள். அதனால் –

சிறந்த கற்பனைகளைச் செய்கிறீர்கள்.

ஆனால் –

கற்பனைக்காக மட்டும் நீங்கள் சிந்தித்தால் போதாது.

நல்ல கருத்துகளுக்காகவும் நீங்கள் சிந்திக்க வேண்டும்!

சிறுகதைகளுக்கு அவற்றின் கருத்துக்களே உயிர்.

உயிர் இல்லாத வெறும் சடலங்களைப் படைக்க விரும்புவீர்களா?

எனவே, நீங்கள் முதலில் உங்கள் கதைப் படைப்புக்கான உயிரை – கருத்தைத் தேட வேண்டும்.

நீங்கள் கண்டது, கேட்டது , படித்தறிந்தது, பட்டறிந்தது எதிலிருந்தாயினும் ஒரு கருத்தைக் கண்டு கொள்ளுங்கள் .

அந்த உயிருக்கு நீங்கள் ஓர் உடலைப் படைக்க வேண்டும்.

கதைக்குத் தேவையான கருத்தைத் தெரிந்தெடுப்பதிலேயே நீங்கள் பாதி வெற்றி அடைந்து விடுகிறீர்கள்.

நான் கதை எழுதத் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் கழித்தே கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்.

‘கலைச் செல்வி’ என்ற சஞ்சிகையில் நான் ஒரு சிறுகதையைப் படித்தேன்.

அதில் ஒரு பெண் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன் உயிரையே துறந்தாள் என்ற கொள்கையைப் பாராட்டி எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கதாநாயகியை, ஒருவன் பலவந்தமாக உடலுறவு கொண்டு ‘கற்பழிக்க’ முயன்றான். அவள் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள் !

‘ஒரு பெண்ணின் கற்பு, அவளுடைய உயிரினும் மேலானது’ என்று பரம்பரை பரம்பரையாக எங்கள் நெஞ்சுகளில் இருத்தப்பட்ட கொள்கை இது.

நான் சிந்திக்கத் தொடங்கினேன் .

கற்பு என்றால் என்ன என்று சிந்தித்தேன்.

அந்தச் சிந்தனையால் எழுந்ததுதான் ‘கற்பு’, என்ற கதை.

அதில், அந்தக் கதையைச் சொல்லி வந்த கணபதி ஐயர், கடைசியில் கேட்கிறார்: “இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர், பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடலுக்கு ஊறு செய்யப்பட்டால் (கற்பழிக்கப்பட்டால்) அவள் மானம் அழிந்து விடுமா? அதற்காக அவள் தன் உடலையும் அழித்து விட வேண்டுமா ? …………. அப்படி உயிரை விட்டவளைப் ‘பத்தினித் தெய்வம்’ என்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை எறியவள் – அப்படிச் செய்வதே கற்புடை மகளிரின் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள், பத்தினித் தெய்வமா? அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா?… சொல்லுங்கள் மாஸ்டர்!”

இதுதான் என்னுடைய சிந்தனை, இந்தச் சிந்தனையை, கதையைச் சொன்ன கணபதி ஐயர் என்ற பாத்திரத்தில் ஏற்றிச் சொல்லியிருக்கிறேன்.

சாதாரண செய்திகளிலிருந்து கூட நீங்கள் ஒரு கதைக்கான கருத்தை எடுக்க முடியும்.

1950 களில் என்று நினைக்கிறேன். அப்போது பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவாகப் பாண் கொடுத்து வந்தார்கள். அப்படிப் பாண் கொடுத்து வந்த வழக்கத்தை அரசாங்கம் நிறுத்தப் போவதாக ஒரு நாள் பத்திரிகையில் செய்தி ஒன்று வந்தது.

அந்தச் செய்தி என் சிந்தனையில் குத்திற்று.

பல ஏழைப் பிள்ளைகளின் வயிற்றில் இது அடிக்குமே என்று நான் சிந்தித்தேன்.

அதை ஒரு சிறுகதையாக வடிக்க விரும்பினேன்.

எனக்குக் கிடைத்த கருத்தை வெளிப்படுத்துவதற்கு வேண்டிய நிகழ்வுகளைக் கற்பனை செய்தேன்.

அந்தக் கற்பனை நிகழ்வு இது:

பொன்னாலை என்ற கிராமத்தில் தெய்வானை என்ற ஏழைப் பெண் வசித்து வந்தாள்.

அவளுடைய கணவன் சிறிது காலத்துக்கு முன்புதான் இறந்து போனான்.

அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சுந்தரம். பாடசாலையில் மூன்றாம். வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு இளையவள் கமலம் என்ற மூன்று வயதுச் சிறுமி. அவள் இன்னும் பாடசாலைக்குப் போகவில்லை.

கூப்பன் அரிசி விலை கூடிவிட்டதால் அந்த அரிசியை வாங்குவதற்கே இயலாத நிலை தெய்வானைக்கு.

பாடசாலையில், சுந்தரத்துக்கு இலவச மதிய உணவாக பாண் கொடுப்பார்கள். அதில் பாதியை மறைத்து எடுத்து வந்து, வீட்டிலிருக் கும் தங்கச்சிக்குக் கொடுப்பது சுந்தரத்தின் வழக்கம். தங்கச்சி மீது அவனுக்கு அளவற்ற பிரியம்.

மதிய இலவச உணவை நிறுத்தி விடப் போவதாக அரசு இப்போது தீர்மானித்துள்ளதாகச் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வந்திருக்கிறது.

பாவம், சுந்தரம் ! பாவம், கமலம்! – இவர்களெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள் ?

மேலே நான் எழுதியிருப்பது நான் படித்த ஒரு செய்தியினால் எனக்குள் ஏற்பட்ட சிந்தனை – அதனால் கற்பனை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு.

ஒரு ஆரம்ப எழுத்தாளர் இந்த நிகழ்வை, கிட்டத் தட்ட நான் மேலே எழுதியிருப்பது போலவே எழுதி விடக் கூடும்.

அப்படி எழுதினால்,

அது ஒரு நல்ல சிறுகதையாகாது.

நான் அதை அப்போது எப்படி எழுதினே னென்று பாருங்கள்:

வாத்தியார் அழுதார்

பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

கந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய ‘ஆட்டுப்புழுக்கைப் ‘ பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒருபக்கம், மற்றப்பக்கத்திலும் பார்க்க கொஞ்சம் ‘வண்டி’ வைத்துவிட்டாற்போலிருந்தது.

அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த ‘தாமோரி’ யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய ‘ஆர்ட்டிஸ்ற் றோய்ங்’ கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்சாயென்று நினைத்து பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒருபக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? ‘போடா, என்னுடைய றப்பர் தேஞ்சுபோம்; நான் தரமாட்டேன்” என்றான் .

சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூட பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, “வாத்தியார்!” என்று பொய சத்தம் போட்டான்.

மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப்பற்றிப் பத்திரிகையிலே வாசித் நுக்கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து “என்னது?” என்றார்.

“வாத்தியார், இங்கே சுந்தரம் ……… எச்சிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்!”

முருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுதர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோ நியையும் தெரியும் ; தந்தையை இழந்தவுடன் ஏழைப்பிள்ளையாகி விட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.

“இங்கே வா சுந்தரம்!” என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும். அதைப் பிரதி பலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

“நீ எச்சில் தொட்டு அழித்தாயா ?”

சுந்தரம் பதில் சொல்லு முன்பே, தாமோரி எழும்பி , “நான் பார்த்தேன் வாத்தியார்!”, என்றான்.

“நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட் டது?” என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப்பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத்தொடங்கிவிட்டது.

ஆனால், திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்ந்தது. “இங்கே வா, சுந்தரம்” என்று அவனைப்பக்கத்தில் கூப்பிட்டு ழுதுகில் லேசாகத் தட்டினார். “நீ எச்சில் போட்டாயா?” என்றார்.

“என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை!” என்ற சுந்தரத்தின் கண்ணில் நீர் நிறைந்து விட்டது.

“றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது ……….” என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பைக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்: “கால் சட்டைப் பைக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?”

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. “ஏன் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு!” என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொலபொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக் கொடுத்து ” அழாதே சுந்தரம். அதற்குள்ளே என்ன, புத்தகமா ?” என்றார்.

கந்தரம் இல்லை என்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக , “வாத்தியார் …… அது ……. அது …… கொஞ்சப் பாண்!” என்றான்.

“ஏன் நீ சாப்பிட வில்லையா?……. பசிக்கவில்லயா ?”.

“கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்”

“நீ போ சுந்தரம்” என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடிய வில்லை. ‘அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது! சுந்தரத்தைப் போகும்மடி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார். “சுந்தரம் !……. உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள் !”

இதுதான் நான் எழுதிய கதை. கருத்தைச் சிந்தித்தேன். அதற்கு வேண்டிய நிகழ்வுகளையும் , பாத்திரங்களையும் கற்பனை செய்தேன். பொன்னாலை என்ற கிராமத்தின் பெயரும், தெய்வானை, கமலா ஆகிய பாத்திரங்களின் பெயர்களும் வேண்டியிருக்கவில்லை . கருத்தை வெளிப்படுத்துவதற்குத் தேவையான நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் மட்டுமே எடுத்துக் கொண்டேன். ஓரளவுக்கு வளம் பெற்றிருந்த எனது வசன நடையினால் அதை அழகாகக் கட்டி முடித்தேன்.

இந்தக் கதை அப்போது ‘ஆனந்தன்’ என்ற சஞ்சிகையில் வெளிவந்தபோது, சிலவாசகர்கள் இந்தக் கதையைப் படித்துத் தாங்கள் கண்கலங்கியதாகச் சொன்னார்கள்.

அவர்கள் கண் கலங்கியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது!

சிந்தனை உங்களுக்கு மிக மிக முக்கியம். புதிய புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். எல்லோரும் சொல்கிற கருத்தையே நீங்களும் திருப்பிச் சொல்வதில் பெருமையில்லை.

“சிந்தனையின் எதிரி நம்பிக்கை” என்று அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.

நீங்கள் படித்த, பட்டறிந்தவைகளினால் உங்களுக்கு அநேக ‘நம்பிக்கைகள்’ மனத்திலே இறுக்கப் பட்டிருக்கும், அவைகளுக்கு அடிமைகளாகி விடாதீர்கள்.

உங்கள் சிந்தனைகளுக்கு இந்த ‘நம்பிக்கைகள்’ இடையூறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ‘கற்பு’ என்ற பொருள் பற்றி நான் படித்தறிந்த கருத்துக்களில் என்னுடைய நம்பிக்கை உறுதிப்பட்டிருக்குமானால், நான் ‘கற்பு’ என்ற கதையை எழுதியிருக்க முடியாது.

அதற்கு முன் நான் படித்தறிந்த, கற்பைப்பற்றிய நம்பிக்கைகளை உடைத்துக்கொண்டு புறப்பட்ட எனது சிந்தனைதான் ‘கற்பு’ என்ற கதையை எழுத என்னைத் தூண்டிற்று.

இதே மாதிரி எத்தனையோ நம்பிக்கைகளினால் நாங்கள் கட்டுப்பட்டிருக்கிறோம்.

‘தெய்வீகக் காதல்’ என்பது பற்றி கதை கதையாகப்படித்து ஒரு நம்பிக்கை, இதை அடித்து நொருக்கிப் பல கதைகள் எழுதலாம்.

‘கடவுள்’ என்று கற்பனை செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து, அப்பப்பா! ஆயிரம் ஆயிரம் நம்பிக்கைகளை மிக இறுக்கமாகக் கட்டி வைத்திருக்கிறோம்! அந்த நம்பிக்கையைப் பற்றி வெளியிலே சொல்வதற்குத் தயங்குகிறோம்.

கடவுள் கொள்கையால் நடக்கும் கொடுமைகளைப் பற்றி நான் சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

மாதுளம்பழம், உள்ளும் புறமும், பிள்ளையார் கொடுத்தார் – என்ற இந்த மூன்று கதைகளும் ‘கயமை மயக்கம்’ என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ளன.

கதை எழுதுவதற்காக நல்லதொரு கருத்தை நீங்கள் தெரிவு செய்து கொண்டால்,

கதை வெளிப்படுவதற்கான நிகழ்வுகளை நீங்கள் கற்பளை செய்ய வேண்டும். நிகழ்வுகளுக்குத் தேவையான – தேவையான மட்டும் – பாத்திரங்களையும் கற்பனை செய்து கொண்டு கதையை எழுதத்தொடங்கலாம்.

நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் கற்பனை செய்யும் போது மிக அவதானமாக இருக்கவேண்டும்

அவை யதார்த்தமானவையா இருக்கவேண்டும். உண்மையான வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளாகவும், காணக்கூடிய பாத்திரங்களாகவும் இருத்தல் வேண்டும்.

நடைமுறைக்கு ஒவ்வாத நிகழ்வுகளையும், இயல் புக்கு மிஞ்சிய பாத்திரங்களையும் கற்பனை செய்தும் நீங்கள் எடுத்துக்கொண்ட கருத்தை விளக்குவதற்காகக் கதை படைக்கலாம். பொதுவாக அத்தகைய கதைகள் வரவேற்கப்படமாட்டா.

கதையை எப்படி ஆரம்பிப்பது, எப்படி நடத்திச்செல்வது, எப்படி முடிப்பது என்பது ஒரு வித்தை.

‘ஒரு ஊரிலே ஒரு இராசா இருந்தார் …………. ‘ என்ற மாதிரிக் கதையை ஆரம்பிக்கக் கூடாதென்பது உங்களுக்குத் தெரியும்.

‘வாத்தியார் அழுதார்’ என்ற கதையைப் பார்த்தீர்கள். அது ஒரு பாடசாலை வகுப்பறையில் ஆரம்பமாகிறது.

நீங்கள் கற்பனை செய்த நிகழ்வை எங்கே தொடங்கினால் நன்றாக இருக்குமென்பதைச் சிந்தித்து அப்படி தொடங்குங்கள்.

உத்தி, கதை சொல்லுகிற விதம் என்று சொல்கிறார்கள்.

எழுத்தாளரே கதையைச் சொல்வது போல் எமுதலாம். (‘வாத்தியார் அழுதார்’ அப்படித்தான் சொல்லப் படுகிறது)

கதையில் வரும் ஒரு முக்கிய பாத்திரமே அந்தக் கதையைச் சொல்வது போல எழுதலாம். எழுத்தாளர் தாமே அந்தப்பாத்திரமாக மாறி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இந்த உத்தி பெரிதும் உதவக் கூடும்.

நான் தொடக்க காலத்தில் எழுதிய கதைகளை இந்த உத்தியில்தான் எழுதினேன்.

அதிலும் ஒரு இடர்ப்பாடு உண்டு.

நான் அப்பொழுது இளைஞன். அநேகமாகக் காதல் கதைகளையே எழுதினேன்.

கதாநாயகனாக நானே உட்கார்ந்து கதை சொல்லுவேன்.

சாதாரண வாசகர்கள் சிலர் அந்தக் கதைகளை என்னுடைய சொந்த அனுபவங்களாக எண்ணிக் கொண்டு என்னைப்பற்றி ஒரு தவறான எண்ணம் கொண்டதுமுண்டு.

ஆனால், அதைப்பற்றி நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. காலப்போக்கில், நீங்கள் ஓரு நல்ல எழுத்தாளராக வளரும்போது, அத்தகைய தவறான எண்ணங்கள் மறைந்து போகும்.

கதையில் வரும் நாலைந்து பாத்திரங்களே தங்கள் தங்கள் கதைகளைச் சொல்வதாக எழுதிக் கதையைக் கோவை செய்வதும் ஒரு உத்தி.

கதையைத் தொடக்கத்திலிருந்து ஒழுங்காகச் சொல்லலாம். அப்படியின்றி , இடையில் ஒரு சுவையான இடத்தில் ஆரம்பித்து , பிறகு பின்னோக்கிச் சென்று முன்பு நடந்த நிகழ்வுகளைச் சொல்லி, கடைசியில் கதையை முடிப்பதும் ஒரு உத்தி, இப்படிப் டலர் எழுதுகிறார்கள்.

எந்த உத்தியில் வேண்டுமானாலும் உங்கள் கதையை எழுதுங்கள். உங்கள் கற்பனை ஒவியம் எந்த உத்தியில் வந்தால் நன்றாக அமையுமென்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அந்த உத்தியில் எழுதுங்கள்,

நல்லது; நீங்கள் தேர்ந்தெடுத்த கருத்தை விளக்கக் கூடிய நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் கற்பனை செய்து கொண்டீர்கள். இனி நீங்கள் சிறுகதை ஒன்றை எழுதலாம்.

அதற்கு முன்ன்னொன்றையும் கவனத்தில் கொள் ளவேண்டும்.

‘வசன நடை’ என்று சொல்கிறார்களே, அதுவும் மிக முக்கியமானது.

சில எழுத்தாளர்கள் எதைப்பற்றி எழுதினாலும் படித்துச் சுவைக்கக் கூடியதாக இருக்கும்.

சிலர், நாம் விரும்புகிற ஒரு பொருளைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருந்த போதிலும், அதைப் படிப்பதில் அலுப்புத்தட்டும். மருந்து குடிப்பதுபோல அதைப் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கும்.

இதற்குக் காரணம் அவர்களுடைய வசன நடை தான்!

அந்தக் காலத்தில் ‘கல்கி’ யின் கதைகளை நான் விரும்பிப் படிப்பேன். அவர் எழுதும் கதைகளை மட்டுமல்ல; அரசியல் கட்டுரைகள், எனக்கு முன்பின் தெரியாத கர்நாடக சங்கீத விமர்சனங்களைக்கூட நான் ஆவலோடு படித்ததுண்டு.

காரணம்: கல்கியினுடய வசன நடைதான்!

அவருடைய நடையில் நல்ல தெளிவும், கவர்ச்சியும் இருக்கும்.

கல்கிக்குப் பிறகு ‘புதுமைப்பித்த’ னுடைய வசனங்களை விரும்பிப் படித்தேன். புதுமைப்பித்தனுடைய கதைகளில் நல்ல – புதிய கருத்துக்கள் அமைந்திருப்பதோடு – அவருடைய வாக்கியங்கள், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வீச்சாக வந்து படிப்பவரின் நெஞ்சிலே பாயும்!

டாக்டர் மு.வரதராசனாரின் வசனங்கள் அமைதியான ஒரு தெளிந்த நீரோடைபோல், உள்ளத்தைத் தடவிச் செல்லும்.

நல்ல வசன நடையை எவ்வாறு எழுதுவது?

முதலில் நாங்கள் எங்கள் தமிழ் மொழியை ஓரளவு பிழையின்றி எழுதப் பழகிக் கொள்ள வேண்டும்.

எழுத்துப் பிழைகள் ஓரு சொல்லின் கருத்தையே தலை கீழாகப் புரட்டி விடக்கூடும்!

‘அளித்தான்’ என்பதை ‘ அழித்தான்’ என்று எழுதினால் என்ன ஆகும்?

இதற்காக, தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தபின்னர்தான் எழுதத்தொடங்க வேண்டுமென்பதல்ல.

நீங்கள் நூல்களைப் படிக்கும் போது சொற்களில் சிறிது கவனம் செலுத்தினீர்களானால், சரியான சொற்கள் உங்கள் மனதுக்குப் பழக்கமாகிவிடும்.

நான் பாடசாலையில் படித்த காலத்தில், தன்னூற் காண்டிகையும், இலக்கணச் சுருக்கமும் படித்த துண்டு .

ஆனால் அவை எதுவும் இன்று எனக்கு உதவுவ தில்லை. இலக்கணச் சூத்திரங்களையும் விதிகளையும் நான் எப்போதோ மறந்து விட்டேன். நான் எழுதும் தமிழுக்கு இலக்கண விதிமுறை சொல்லும் படி கேட்டால் எனக்குத் தெரியாது.

ஆயினும், என்னால் ஓரளவு நல்ல தமிழில் எழுத முடிகிறது. நல்ல நூல்களைக்கற்ற பழக்கத்தினால், என்னால் நல்ல தமிழை எழுத முடிகிறது!

மேலும்,

‘மண்வாசனை’ என்று ஒரு சொல்லை எழுத்தாளர்கள் கூறுவதைக் கேட்டிப்ருபீர்கள்.

தங்கள் எமூத்துக்களில் மண்வாசனை வரவேண்டுமென்பதற்காக, பேச்சு வழக்குச் சொற்களைப்பல எழுத்தாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

‘மண்வாசனை’ என்பது பேச்சு வழக்குச்சொற்களை உபயோகித்தால் மட்டும் வந்து விடாது!

எங்களுடைய நாகரிகம், பண்பாடு ஆகியவைக ளுக்கமைய எழுதினால்தான் மண்வாசனை வரும்!

இந்த மண்ணில் வாழும் பாத்திரங்களையும், நடக்கும் நிகழ்ச்சிகளையும் இயல்பாக அமைப்பதனால் தான் மண்வாசனை வரும்!

டாக்டர் மு.வரதராசனார், கி, வா.ஜகந்நாதன் மூதவியோர் நல்ல செந்தமிழ் நடையிலேயே உரையாடல்களைக்கூட எழுதினார்கள். அவர்களுடைய கதைகளிலே மண்வாசனை வரவில்லையா?

தமிழ் தெரிந்த அனைவருக்குமாக நாங்கள் எழு துவதென்றால் , ஒரளவு செம்மையான சொற்களி லேயே எழுதவேண்டும்.

மண்வாசனை வரவேண்டுமென்பதற்காக அவரவர் பேச்சுத் தமிழிலேயே எல்லாரும் எழுதினால், ஓரு தமிழ்மொழி போய், முப்பது நாற்பது தமிழ் மொழிகள் உருவாகக்கூடும்.

இந்த இடர்ப்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒருவழி உண்டு நல்ல தமிழிலேயே எழுதி, முக்கியமான சில இடங் களில் மட்டும் – மண்வாசனையை எடுத்துக்காட்டுவதற்காக பேச்சுவழக்கைக் கையாளலாம். நான் இந்த வழியைத்தான் கையாளுகிறேன்.

பெரிய பெரிய இலக்கிய ஆய்வாளர்களெல்லாம் இது பற்றி கருத்து முரண்பாடு கொண்டிருக்கிறார்கள்.

பரவாயில்லை. கதாபாத்திரங்களின் உரையாடல்களை அவை பேசும் தொனியில் எழுத வெண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் அப்படியே எழுதுங்கள். (அது லேசான காரியமல்ல. அனுபவம்மிக்க சிறந்த எழுத்தாளர்கள் பலருமே இந்தப்பேச்சு மொழியைச் சரிவர எழுத முடியாமல் திணறுகிறார்கள்!) ஆனால் எழுத்தாளரின் வெளிப்பாடுகளை இயன்ற வரையில் நல்ல தமிழில் எழுதுங்கள்.

தமிழில் பிறமொழிச் சொற்களையும் நீக்கித் தூய தமிழில் எழுதுவதற்கும் நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

‘அப்படி எழுதினால் , ஒன்று: வாசகர்களுக்கு இலகுவில் விளங்க முடியாமலிருக்கும். மற்றது; வசனங்களில் சரியான தாக்கம் வரமாட்டாது’ என்று சிலர் சொல்லக்கூடும்.

உண்மைதான்.

சிறு வயதிலிருந்தே நாங்கள் பழகிய சொற்களை விட்டு, புதிய சொற்களை உபயோகிப்பது, படிப்ப வருக்கு மட்டுமன்றி, எழுதுபவருக்கும் இடர்ப்பாடு தருவதாக அமையும்.

ஒரே நாளில் நாங்கள் தூய தமிழை எழுத வேண்டாம். அப்படி எழுதுவதால் பயனில்லை.

இயன்றவரையில், வாசகருக்கு விளங்கக்கூடிய அளவில், வழக்கத்திலுள்ள பிற மொழிச்சொற்களுக்குப் பதிலாகத் தூய தமிழ்ச்சொற்களை உபயோகிக்கலாம்:

இப்படிச்செய்து வந்தால்,

மெல்ல, மெல்ல, மெல்ல – யாரிலும் நோகாமல் தூய தமிழ் வந்துவிட வாய்ப்புண்டு. எனது பட்டறிவில் கண்டது:

அக்கிராசனர், காரியதரிசி, பொக்கிஷாதிபர், விவாகம், ஆசீர்வாதம், வருஷம், சந்தோஷம் – இப்படி எங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த பல வட மொழிச் சொற்கள், இப்போது,

தலைவர். செயலாளர், பொருளாளர் , திருமணம், வாழ்த்து, ஆண்டு, மகிழ்ச்சி என்று தூய தமிழ்ச்செம்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறேன்,

முன்பெல்லாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘நமஸ்காரம்’ என்றுதான் சொல்வார்கள். இப்போது அது ‘வணக்கம்’ என்று தூய தமிழில் வந்துவிட்ட தல்லவா!

தொடர்ந்து மெல்ல – மெல்ல முயற்சித்தால் தூய தமிழ் வந்தேவிடும்!

ஏற்ற ஒரு சொல் தமிழில் தோன்றாதபோது, பழக்கப்பட்ட பிறமொழிச் சொல்லை இப்போதைக்கு உபயோகிப்பதில் தவறொன்றுமில்லை .

ஆனால், நல்ல தமிழ்ச்சொல் இருக்கவும், எதற்காகப் பிறமொழிச்சொல்லை உபயோகிக்கவேண்டும்?

எங்களுக்கும் தன்மானம் உண்டல்லவா!

கடைசியாக,

நீங்கள் எழுத்தாளர் – எழுத்தை ஆள்பவராக இருக்கவேண்டும்.

எழுத்தை ஆள்வதற்கு,

அந்த எழுத்துக்களைப் பற்றி,

அந்த எழுத்துக்களாலாகும் சொற்களைப் பற்றி, அந்தச் சொற்களாலாகும் வாக்கியங்கள் பற்றி, நன்கு அறிந்திருத்தல் மிக நல்லது.

மீண்டும் படலையில்

சிறுகதை பற்றிய எனது பட்டறிவுக் குறிப்பு களை இதுவரை மனங்கொண்ட உங்களுக்கு நன்றி.

சிறுகதை எழுதுவது பற்றி இன்னும் பலருடைய கருத்துக்களை நீங்கள் அறியக்கூடும்.

பொதுவாக, சிறுகதை இலக்கணங்களைப் பற்றிக் கூறுவோர் மிக உயர்ந்த நிலையில் நின்று போதனை’ செய்வார்கள்.

இப்போதெல்லாம் வானொலியில் பாடல்களைக் கேட்கும்போது, பாடல்களை விடப் பின்னணி இசைக்கே முக்கியத்துவம் வந்து விட்டதுபோலத் தோன்றுகிறதல்லவா ?

அது மாதிரி, சிறுகதை நாவல்களிலும் கதையை விட, விபரிப்பு முதலிய வெளிப்பாடுகளுக்கே முக்கியத் துவம் கொடுப்பதைச் சிலர் விரும்புகிறார்கள் .

கதையின் முடிவைச் சொல்ல வேண்டாம். கருத்தை வெளிப்படுத்த வேண்டாம். அதை வாசக ரின் கற்பனைக்கே விட்டுவிட வேண்டுமென்கிறார்கள்.

இப்படிப் பற்பல கருத்துக்கள்.

இவைகள் எல்லாவற்றையும் அறித்து வைத்திருங்கள்.

இவை எவையுமே முடிந்த முடிபுகளல்ல. ஒரு கருத்தைச்சொன்னவரே, சில காலத்தின் பின் அதை மாற்றிக்கொள்ளவும் கூடும். ஆகையால், அவற்றை ஓரே பிடியாகப் பிடித்துக்கொள்ளாதீர்கள்.

குழப்பம் வேண்டாம்.

இன்றைக்கு உங்கள் மனத்துக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அப்படி எழுதுங்கள்.

நாளைக்கு அது சரியில்லையென்று தோன்றினால் அதை விட்டுவிட்டுப் புதிய வழிக்குப் போகத்தயங்காதீர்கள்.

கடைசியாக ஒரு வேண்டுகோள்: இச்சிறுநூலைப் படித்தபின், இதைப்பற்றி எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், உங்கள் கருத்துக்களை ஆவலோடு வரவேற்கிறேன்.

எனது முகவரி முன் படலையில் இருக்கிறது.

– வரதர்

முதற்பதிப்பு:- மார்ச், 1992 ஆசிரியர்:- வரதா வெளியீடு:- வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

அச்சுப்பதிவு:- ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்

விற்பனை:- ஆனந்தா புத்தகசாலை, 226, காங்கேசன் துறைச்சாலை யாழ்ப்பாணம். விலை:- ரூபா 18/=

2 thoughts on “சிறுகதை எழுத விரும்புவோர்க்கு எனது பட்டறிவுக் குறிப்புகள் – தி.ச.வரதராசன்

  1. மதிப்பிற்குரிய வரதர் ஐயா அவர்களுக்கு வணக்கம்,

    சிறுகதைகள் எழுதுவதுப் பற்றி உங்கள் பதிவில் படித்தேன், தங்களுடைய அறிவுரைகளுக்கு மிக்க நன்றி, என்னைப் போல் புதிதாக எழுதுபவர்களுக்கு, தங்களுடைய அனுபவம் வாய்ந்த பதிவு, எங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள, எங்களுக்கு நல்ல அறிவுரையை கொடுத்து இருக்கீங்க ஐயா, ஒரு கருத்தை வைத்து கற்பனையோடு கதையை எவ்வாறு எழுத வேண்டுமென்று, “வாத்தியார் அழுதார்” என்ற உங்கள் கதையை உதாரணமாக கொடுத்து கூறியிருப்பதற்கு மிக்க நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *