ஹலோ மிஸ்டர், உங்களைத்தான்..!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 18,076 
 

ஹலோ மிஸ்டர் ஹானரபிள்… உங்களைத்தான்… நில்லுங்கள். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.

நீங்கள் உலகத்தைப் பார்த்து இப்போதெல்லாம் அடிக்கடி என்ன சொல்வீர்கள்? ‘எல்லாம் போச்சு! காலம் கெட்டுப்போச்சு. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம்போச்சு!’ என்பீர்கள். (கடைசி இரண்டு வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாது.)

பாண்டி பஜார் பக்கம் மாலை வேளையில் போவீர்கள். நடைபாதையில் விதவிதமான இளசுகளைப் பார்ப்பீர்கள். ஒவ்வொன்றின் டிரஸ்ஸ§ம் உங்கள் நெஞ்சில் திக்திக் கொடுக்கும். எதிரே வரும் நான்கு இளசுகளைக் கண்டு வலப் பக்கம் போகலாமா, இடப் பக்கமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அந்த இளசுகள் இரண்டாகப் பிரிந்து உங்களை நடுவில்விட்டு, உங்களை உரசியபடி கடப்பார்கள். சே… இவர்களும் பெண்களா என்று முணுமுணுப்பீர்கள்.

ஒரு டெக்ஸ்டைல் ஷாப் முன் போய் நிற்பீர்கள். அங்கே ஒரு மினி ஸ்கர்ட் நிற்கும். ஒரு காலை முன்னால் எடுத்துவைத்துக் குனிந்தவாறு ஷோ கேஸைப் பார்த்துக்கொண்டு இருக்கும் அந்தப் பெண் குனியக் குனிய, அவளது மினி ஸ்கர்ட்டின் பின்புறம் ஒவ்வொரு இன்ச்சாக மேலே உயரும். நீங்கள் சபித்துக்கொண்டு மேலே நடப்பீர்கள்.

ஜி.என்.செட்டி ரோடுக்கு வருவீர்கள். அங்கே ஹை கிளாஸ் வர்க்கங்களைக் காண்பீர்கள். பேன்ட், ஸ்கர்ட் போட்டு, டூவீலரில் வந்து இறங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இளமைகள்! ‘டேய் ஹரி, பிரதாப், ரவீன்… இங்கே வாடா’ என்று டே, டா போட்டு உரிமையாகப் பேசுவார்கள்.

ஒரு பெருமூச்சுடன் அருகில் இருக்கும் காபி ஷாப்பை அணுகுவீர்கள். உள்ளே காட்சி, ‘அடோப்’ போட்டோ ஷாப் பிரின்ட் போல துல்லியமாகத் தெரியும்.

இளசுகள் மேஜைகளில் மொய்த்திருப் பார்கள். உங்களுக்கு இடம் இருக்காது. நீங்கள் வெளியேறலாமா என்று யோசிக்கும்போது, ‘ஹே! கம் ஆன் ஹியர்!’ என்று ஒரு குயில் கூவும். திரும்புவீர்கள். ஒரு ஒல்லிப் பெண், தன் அருகில் உள்ள இடத்தைத் தட்டிக் காட்டுவாள்.

இந்த மாதிரி சமயங்களில் கொஞ்சம்போல் அசட்டு தைரியம் உங்களுக்குள் உண்டாகும். மாடர்ன் விஷயங்களுக்கு உங்களாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும் என்பது போல, தைரியமாக அவள் அருகில் உட்காருவீர்கள். எதிரே இருக்கும் பெண் உங்களைப் பார்த்து முறுவலிப்பாள்.

எக்ஸ்ப்ரஸ்ஸோ காபியை ஆர்டர் செய்வீர்கள். அது வந்ததும் சாப்பிட ஆரம்பிப்பீர்கள். ஒடிகோலோன் ஷாம்பூ, ரவ்லான் இன்டிமேட், ஹேர் ஃபிக்ஸர் எல்லாமாகச் சேர்ந்து ஒரு மயக்கும் நெடி உண்டாக்கும். இதுவரை அனுபவித்திராத சுகந்தம். ‘இந்த ஜென்மங்கள் ஒழுங்காகக் குளிக்காது போல… சென்ட்டுக்கெல்லாம் குறைச்ச லில்லை’ என்று உள்ளுக்குள் முணுமுணுத் தாலும், அந்த சுகந்தத்தின் மென்மை உங்களைக் கவர்ந்திருக்கும்.

கடைசி விளிம்பில், ஒரே ஒரு காதில் மட்டும் கடுக்கண் போட்ட இளைஞன் அமர்ந்து இருப்பதைப் பார்ப்பீர்கள். உங்கள் அருகில் உட்கார்ந்திருக்கும் ஒல்லி, அவனிடம் ஜாடையில் ஏதோ சொல்லிச் சிரிப்பாள். அப்புறம் எதிரே உள்ள இளசுடன் கிசுகிசு என்று பேசுவாள். பதிலுக்கு அவளும் ஏதோ சொல்வாள். அந்த இங்கிலீஷ் ‘ஜார்கான்’ உங்களுக்குத் தெரியாது. உங்களைப் பற்றித்தான் ஏதோ நக்கலாகப் பேசுகிறார்கள் என்று உங்களுக்குக் கோபம் வரும். திரும்பிப் பார்ப்பீர்கள். சிநேகிதியிடம் பேசிய அதே சிரிப்போடு, அந்த ஒல்லி உங்கள் மீது ஒரு பார்வையை வீசுவாள். அது உங்களைச் சிலிர்க்கவைத்தாலும், அலட்சியமாக முகத்தைத் திருப்பிக்கொள்வீர்கள்.

பல விநாடி போயிருக்கும். ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்ற குரல் கேட்டுத் திரும்புவீர்கள். ‘வீ ஆர் கோயிங் அவுட் ஃபார் ய ஒய்ல்! வில் யு ப்ளீஸ் கீப் அன் ஐ ஆன் அவர் புக்ஸ்?’ என்பாள் ஒல்லி. தலையை ஆட்டுவீர்கள். அவளது குழைந்த பேச்சு, ஒரு ‘மிஸ்ட்’ போல உங்கள் முன் நின்றுகொண்டு இருக்கும்.

அவர்கள் போனதும், அந்தப் புத்தகங்களை மெள்ள எடுப்பீர்கள். ‘தி எம்ப்டினெஸ் ஆஃப் லைஃப்’, ‘ஹெள டு ரிலாக்ஸ்?’, ‘தி டிரான்ஸென்டெண்டல் மெடிடேஷன்’, ‘யோகா இஸ் தி ஆன்ஸர்’, ‘வெஸ்ட் அண்டர்ஸ்டாண்ட்ஸ் தி ஈஸ்ட்’ என்ற தலைப்புகளைப் படிப்பீர்கள்.

அவர்கள் திரும்பி வருவார்கள். மீண்டும் முறுவல்களோடு உட்காருவார்கள்.

-‘ப்ளீஸ்!’ என்று ஒரு டாஃபீயை ஒல்லி உங்கள் முன் நீட்டுவாள். மறுப்பது அழகில்லை என்று வாங்கிக்கொள்வீர்கள். அந்தக் கணத்தில், இவர்களுக்கும் கொஞ்சம் பண்பு தெரிந்திருக்கிறதே என்று நினைப்பீர்கள்.

பின், அவர்கள் டின்னருக்குக் கிளம்புவார்கள். ‘நீங்களும் வாருங்கள்!’ என்று மறுகுவாள் ஒல்லி. அவளது அழைப்பு உங்களை வருடி இழுக்கும். மனம் ‘பீர்’ போல நுரைக்கும்.

அவர்கள் முன்னால் நடக்க, நீங்கள் பின்னால் போவீர்கள். ஒல்லியின் இடைச் சரிவுகள், வளைவுகள் உங்களை ஈர்க்கும். மறுகணம், அப்படிப் பார்ப்பது சரியல்ல என்று பார்வையைத் திருப்புவீர்கள்.

சாலைக்கு வந்ததும்… கூச்சல்… சத்தம். யாரோ ஓடுவார்கள். விசில் சத்தம் கேட்கும். ரவுடிகள் போலீஸார் லடாய்! ‘போலீஸ் அடிச்சு விரட்டறாங்க… ஓடுங்க!’ என்று கத்திக்கொண்டே பத்துப் பதினைந்து பேர் ஓடுவார்கள். ‘ஐயோ! ஐயோ!’ என்று அலறல். யாரோ அடிபடுவார்கள்.

நீங்களும் தலைதெறிக்க ஓடுவீர்கள். ஒரு கட்டடத்தின் பெரிய கேட்டைப் பார்ப்பீர்கள். அதன் இடைவெளியில் புகுந்து, பதுங்குவீர்கள். அடுத்த நிமிடம், நீங்கள் பதுங்கும் இடத்திலேயே இன்னும் இரண்டு மூன்று பேர் பதுங்குவார்கள். ஆச்சர்யம்… அவர்கள் வேறு யாருமல்ல, அந்த இரு பெண்களும், கடுக்கண் இளைஞனும்தான்.

வெளியே, விடாதே… விடாதே… என்று கூக்குரல். ரவுடிகளைத் துரத்திக்கொண்டு போலீஸ்காரர்கள் உங்கள் கண் முன் ஓடுவார்கள். நீங்கள் எல்லாரும் படபட இதயத்தோடு மூச்சைப் பிடித்தபடி சத்தம் காட்டாமல் காத்திருப்பீர்கள். ஒல்லி உங்கள் முதுகில் சாய்ந்திருப்பாள். அவளது கை உங்கள் தோள் மீது விழுந்திருக்கும். அந்தச் சூழ்நிலையில், அது உங்களுக்கு வெறுப்பு தராது.

தொடர்ந்து பத்து நிமிடத்துக்குக் கூச்சல் குழப்பம். எங்கேயோ துப்பாக்கி வெடிக்கும். அப்புறம், சில விநாடிகள் கழித்து, கனத்த அமைதி. மெதுவாக நகர்ந்து, ‘போகலாம்!’ என்பாள் ஒல்லி. நீங்களும் அவர்களோடு சேர்வீர்கள். மெள்ள வெளியேறி, ஊர்ந்து, பதுங்கிப் போவீர்கள். சாலையில் ஒரே நிசப்தம். விளக்கு கள் உடைந்துகிடக்கும். ரத்தத் துளிகள் சிதறி யிருக்கும். கண்ணாடிச் சில்லுகள் இறைந்து கிடக்கும். ஒரே இருட்டு. தொலைவில், போலீஸ் விசில் சத்தம். வியர்த்துப்போவீர்கள். உங்களைத் தவிர, ரோடில் ஒரு ஈ, காக்கா கிடையாது.

அடுத்து, அவர்களோடு நீங்கள் போன இடம் மூன்று நட்சத்திர ஓட்டல் கட்டடம்! அதன் வெளி கேட்டை மூடியிருப்பார்கள். எல்லோரும் திகைப்பீர்கள். அந்த இளைஞன் ஒரு பெண்ணைத் தூக்கி கேட்டின் மேல் ஏற்றி, உள்ளே பத்திரமாக இறங்க வழி வகுப்பான். ஒல்லி உங்களை நோக்கி ஜாடை செய்ய, நீங்களும் அதே போல் அவளைத் தூக்கி கேட்டின் மீது ஏற்றுவீர்கள். அவளைத் தொட்ட இடம் எல்லாம் ஜிலீரென்று உங்கள் கையில் சிலிர்க்கும்! ‘ஸ்ஸ்ஸ்!’ என்று அவள் மெதுவாகச் சிரிப்பாள். உங்களை நன்றியோடு பார்ப்பாள்.

கடைசியில், நீங்களும் அந்த வாலிபனும் கேட்டில் ஏறி உள்ளே குதிப்பீர்கள். ஒல்லி உங்கள் கையை ஆதரவாகப் பிடித்துக்கொள்வாள். ஓட்டல் கதவைத் தட்டுவீர்கள். பலமுறை விசாரித்துவிட்டுத் தயக்கத்துடன் திறப்பார்கள். ‘அடடா! இந்தச் சமயத்திலா வெளியே போனீர்கள்? கலவரமும், துப்பாக்கிச் சூடுமாக இருக்கிறதே. சரி சரி, சீக்கிரம் உள்ளே வாருங் கள்!’ என்று சொல்லிக் கதவை அவசரமாக மூடுவார்கள்.

போச்சு! இந்த இரவில் இனி வெளியே போக முடியாது.

இளைஞன் ஓர் அறையை வாடகைக்கு எடுப்பான். அது ஒரு பெரிய ஸ¨ட். அரண்மனை போல இருக்கும். முகப்பு அறை, நடு அறை, பின் அறை என மூன்று அறைகள். உள்ளே கண்ணாடிகளும், விளக்குகளும் பளபளக்கும். பீரோ, மேஜை, மெத்தைகள், கட்டில்கள் யாவுமே உங்களைப் பிரமிக்கவைக்கும். நீங்கள் அது போன்ற ‘பாஷ்’ ஓட்டல் அறையில், அதுவரை நுழைந்தது இல்லை.

இன்டர்காம் எடுத்து ரொட்டி, நாண், குருமா என வரவழைப்பார் கள். உங்களையும் சாப்பிடச் சொல் வார்கள். ஒல்லி உங்கள் அருகில் வந்து உரசியபடி உட்காருவாள். எதிரே வாலிபனும், இன்னொரு பெண்ணும்!

ஒல்லி குதூகலமாக இருப்பாள். உங்களுக்கு முதலில் சர்வ் பண்ணு வாள். ‘ஆலூ ஃப்ரை இருக்கு. ஜாம் வேணுமா, வெண்ணெய் வேணுமா?’ என்பாள்.

பல கோர்ஸ்கள் முடிந்த பிறகு, ஸ்லைஸ் செய்த ஆப்பிள்களை உங்கள் கையில் வைப்பாள். அவளின் கிக்கிக் சிரிப்பு, கண் இமைப்பு யாவுமே உங்களுக்குப் புதுசாக, அழகாகத் தெரியும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, எல்லோரும் டூத் ப்ரஷ்ஷ§டன் பாத்ரூம் போவார்கள். பல் விளக்கு வார்கள். நீங்கள் எழுந்து, ‘சரி, நான் கிளம்புகிறேன்!’ என்பீர்கள். ‘ஓ… நோ! இப்பவா? வெளியே கலவரம்! காலையில் போகலாம்!’ என்பார்கள்.

நடு அறையில் இரண்டு படுக்கைகள்! வெளி அறையில் ஒரு படுக்கையும், சோபாவும். நீங்கள் வெளி அறைக்கு வருவீர்கள். சிறிது நேரத்தில், ஒல்லி உங்கள் அறைக்கு வருவாள். சிறிது நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடப்பாள்.

‘சாப்பாட்டுக்குப் பிறகு கொஞ்ச நேரம் நடப்பது நல்லது. இல்லாவிட்டால், இடை பெருத்துவிடும்’ என்பாள். உடலைச் சுத்தமாகவும், அமைப்பாகவும் வைத்துக்கொள்வதில் இந்த இளசுகள்தான் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

நடக்கும்போது அவளது ஸ்லெண்ட ரான உடம்பு உங்கள் பார்வையை இழுக்கும். அசையும் பிருஷ்டங்களும், வெட்டும் இடையும், சோளியின் மிருதுவான இரு அணைவுகளும் உங்களைப் பரவசப்படுத்தும். கனவு உலகில் சஞ்சரிக்கத் தொடங்குவீர்கள்.

சிறிது நேரத்தில் அவள் உங்கள் அருகில் உட்கார்ந்து, உங்கள் கைகளைப் பிடித்துக்கொள்வாள். குறும்பாகவும் கனிவாகவும் பார்ப்பாள். அதே நேரம், அடுத்த அறையில் வெளிச்சம் கப்பென்று அணையும். அதன் வாசலில் ஒரு திரை இழுத்துக்கொள்ளும்.

ஒல்லியின் மேனியிலிருந்து பரவும் சுகந்தமும், அவளது ‘விஸ்பரான’ மொழியும், மிருதுவான கை ஸ்பரிசமும் உங்களைப் பல நிமிடங்களாகவே ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கும். அவள் இன்னும் தழைந்து, உங்கள் மீது படர்வாள். உங்கள் தோளில் தன் முகவாயை மெது வாக அழுத்துவாள். நீங்கள் தத்தளிப்பீர்கள்.

இங்கே அகப்பட்டுக்கொண்டோமே என்று நினைப்பதற்குக்கூட உங்கள் மனம் அனுமதி தராது.

இங்கே வராதிருந்தால், நீங்கள் பாட்டுக்கு வீட்டுக்குப் போயிருப்பீர் கள். கதவைத் தட்டியிருப்பீர்கள். உங்கள் மனைவி தூக்கக்கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறந்திருப் பாள். அவளுக்கு பேங்க்கில் வேலை. வியர்த்து விறுவிறுத்து வீடு வருவாள். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, சாப்பாடு போட்டுத் தூங்க வைப்பாள். அவள் கண்ணயர யத்தனிக்கையில்தான், நீங்கள் கதவைத் தட்டியிருப்பீர்கள். திறந்ததும், உள்ளே போய் சமையலறையில் உட்காருவீர்கள். தூங்கி வழிந்துகொண்டே உங்கள் மனைவி உங்களுக்குத் தட்டை எடுத்துவைத்துச் சாப்பாடு பரிமாறுவாள். ‘சாப்பிட்டு முடிச்சு, தட்டை ஸிங்க்ல போட்டுட்டு இடத்தைத் துடைச்சுடுங்க’ என்று சொல்லிவிட்டு, நீங்கள் வருவதற்குள் தூங்கியிருப்பாள்!

ஒல்லி உங்களோடு மேலும் இழைந் திருப்பாள். ‘நாம் அதிர்ஷ்டக்காரர்கள், இல்லையா?’ என்பாள். ‘ஏன்?’ என்பீர்கள். ‘இல்லாவிட்டால் நாம் இங்கே, இந்த இடத்தில் சந்தித்திருக்க முடியுமா? நீங்கள் எங்கேயோ, நான் எங்கேயோ?’

உங்கள் வலது கையை எடுத்துத் தன் மார்பில் வைத்துக்கொள்வாள். ஒரே நேரத்தில் குளிர்ச்சியையும் உஷ்ணத்தையும் அனுபவிப்பீர்கள்.

‘ஸ்டில் டாக்கிங்! லைட்ஸ் ஆஃப்!’ என்று அடுத்த அறையிலிருந்து குரல் வரும். தொடர்ந்து சிரிப்புச் சத்தம். ஒல்லி எழுந்து போய் லைட்டை அணைத்துவிட்டு வருவாள். உங்கள் அருகில் உட்கார்ந்து, ‘டியர்! டு யூ லைக் மீ?’ என்பாள். நீங்கள் தத்தளிப்பீர்கள்.

வீட்டில் இருந்தால், நீங்கள் இப்போது சாப்பிட்டு முடித்திருப் பீர்கள். அசந்து தூங்கும் மனைவியை எழுப்ப முனைவீர்கள். அவள் தோளைத் தட்டி, ‘ஸ்ஸ்ஸ்… இப்படித் திரும்பு’ என்பீர்கள். ‘போதும்! இரண்டு பெத்தாச்சு. விடுங்க, இன்னிக்கு வேண்டாம்!’ என்பாள்.

வீட்டு நினைவுகள் உங்களைப் பற்றிக்கொள்ளும். நீங்கள் அதைக் கீழே உதிர்ப்பது போல, ‘எல்லாம் சூழ்நிலை. ஆமாம், சூழ்நிலைதான் காரணம்!’ என்று முணுமுணுப்பீர்கள்.

‘என்ன முனகுறீங்க?’

‘ஒன்றுமில்லை. எதையோ நினைத்தேன்!’

‘எதையும் நினைக்காதீங்க! உண்மைகளை நினைத்தால், எல்லாமே துக்கம்தான்!’

இவ்வளவு சிறிய வயதுப் பெண்ணா இதைச் சொல்கிறாள். நீங்கள் மேலும் தவிப்பீர்கள். ஒல்லி உங்கள் கன்னங்களை வருடுவாள். அவளின் சூடான சுவாசம் உங்கள் கழுத்துப்புறத்தில் மோதும். திடுமென உங்களை இறுக அணைத்துக்கொள்வாள். அந்த அணைப்பின் இனிமையில், நீங்கள் அதுவரை வைத்திருந்த பாதுகாப்பு வளையம் நொறுங்கிப்போய்விடும்.

மறுநாள்… அவர்களிடமிருந்து விடை பெற்று, வீட்டுக்கு வருவீர்கள். இரவில் நடந்த கலவரத்தையும், நீங்கள் ஓட்டலில் அடைக்கலமாக நேர்ந்ததையும் (ஒல்லியுட னான அட்வென்ச்சரை டெலிட் செய்து) உங்கள் மனைவியிடம் சொல்வீர்கள்.

உள்ளே போவீர்கள். அழுக்குகள் போக இரண்டு, மூன்று முறை சோப் போட்டுக் குளிப்பீர்கள். மனைவி தந்த டிபனை உண்ட பின், ஷர்ட்டை மாட்டிக்கொண்டு ஆபீஸ் புறப்படுவீர்கள். மெயின் ரோடுக்கு வந்ததும், உங்கள் கண்களில் படுவது யார்?

நான்கு இளசுகள்!

‘சே! என்ன மோசமாக டிரஸ் அணிகிறார் கள்! உலகமே கெட்டுப்போச்சு! எல்லாம் போலித்தனம்’ என்று நினைப்பீர்கள்.

‘போலித்தனமா? யார்? அவர்களா, நீயா?’ என்று குரல் கேட்கும். திடுக்கிட்டு, சுற்றிவரப் பார்ப்பீர்கள். யாரும் தென்பட மாட்டார்கள். பேசியது வேறு யாரும் இல்லை; உங்கள் மனசாட்சி!

– பெப்ரவரி 2006

Print Friendly, PDF & Email

1 thought on “ஹலோ மிஸ்டர், உங்களைத்தான்..!

  1. ஒரு நவநாகரீக யுவதி சிலமணி நேரப் பழக்கத்திலேயே அந்த நடுத்தர வயதுக்கார்ரிடம் தன்னை முழுதாக கொடுத்து விடுவதாக புஷ்பா தங்கதுரை எழுதியிருப்பது ஜீரணிக்க முடியவில்லை .லாஜிக் இல்லாத கதை.ஆனால் ஒரு நடுத்தர வயசுக்கார்ரின் உணர்வுகளை ஜூம் பண்ணி காட்டியிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *