கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 12,022 
 

வண்ணாரப்பேட்டையில், ஒரு குறுகலான சந்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டரைப் பார்க்கச் சொன்னான் என் நண்பன் சிவா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. பெரிய பெரிய டாக்டரையெல்லாம் பார்த்துவிட்டேன். அவர்களால் சொல்ல முடியாத தீர்வையா இந்த முட்டுச் சந்து டாக்டர் சொல்லிவிடப் போகிறார்? அவர்கள் கொடுக்காத மருந்தையா இவர் கொடுத்துவிடப் போகிறார்?

எனக்குப் புரியாத புதிராக இருந்தது, என் வயிற்றுப் பிரச்னை. இரண்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று காய்ச்சல் அதிகமாகி, உட்காரக்கூட முடியாமல் அவதிப்பட்டபோது ஆரம்பித்த பிரச்னை அது. எதிரில் இருந்த கிளினிக்குக்குச் சிரமப்பட்டு நடந்து சென்றேன். என் மோசமான நிலமையைப் புரிந்துகொண்டு டாக்டர் உடனே ரத்தம், சளி, இத்யாதி டெஸ்ட்களுடன் மார்பு எக்ஸ்-ரேயும் எடுக்க ஏற்பாடு செய்தார்.

‘‘உங்களுக்கு நெஞ்சு பூரா சளி இருக்கு. ஊசி போடறேன். ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு விரல்களை மடக்க முடியாது. பயப்படாதீங்க’’- எக்ஸ்-ரேயைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து அவரிடம் காண்பித்தும் ஒன்றும் குணமாகாததில், தி.நகரில் இருந்த ஒரு பெரிய டாக்டரைப் போய்ப் பார்த்தேன்.

அவர் என்னைப் பரிசோதித்து விட்டு, ‘‘உங்களுக்குச் சளி இருக்கு. ஆனா, அது பிரச்னை இல்லை. மஞ்சள்காமாலை மாதிரி தெரியுது’’ என்றார்.

‘‘ஆனா, நல்லா பசிக்குதே டாக்டர்!’’

‘‘இப்பதான் ஆரம்பிச்சிருக்கு. பசி எடுக்கும். ஆனா, கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலோ, எண்ணெய்ப் பதார்த்தம் சாப்பிட்டாலோ ஜீரணம் ஆகாது. உடல்ல அழுக்கு சேர்ந்துடுச் சுன்னா காய்ச்சல் உத்ரவாதம்!’’

அவர் சொல்வது சரியெனப் பட்டது. நன்றாகப் பசிக்கிறதே என்று சாப்பிட்டால், அடுத்த நாள் வயிற்றுப் பிரச்னைதான்.

டாக்டர் கொடுத்த மாத்திரை களைச் சாப்பிட ஆரம்பித்தேன். குணம் தெரிந்தது. காய்ச்சல் விட்டது. ஆனால், குடும்ப விழாக்களிலும், வெளியிடத்திலும் நண்பர்களும் உறவினர்களும், ‘‘என்னப்பா, இப்படித் துரும்பா இளைச்சுப் போயிட்டே?’’ என்று கேட்கத் தொடங்கினார்கள்.

‘‘இந்தக் குட்டிக் குட்டி டாக்டர் களையெல்லாம் நம்பாதே! உனக்கு லிவர் பிராப்ளம் இருக்குன்னு தெரியுது. அதுக் குன்னு இருக்கிற ஸ்பெஷல் டாக்டரைப் பாரு’’ என்று சகலரும் சொன்னதன்பேரில், அண்ணா மேம்பாலம் அருகில் கிளினிக் வைத்திருந்த அந்த டாக்டரைப் பார்த்தேன். வாசலில் ஏராளமான கார்கள் காத்திருந்தன. வெளியூரிலிருந்தும் நிறைய மக்கள் வந்து காத்திருந்தனர். இந்த டாக்டர் என் பிரச் னையைத் தீர்த்துவிடுவார் என்று நம்பிக்கை பிறந்தது.

பத்து மணிக்குக் கிளினிக் போனவன், மதியம் மூன்று மணிக்குதான் டாக்டரைப் பார்க்க முடிந்தது.

‘‘உங்க லிவர் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு. ஒரு மருந்து எழுதித் தரேன். ரெண்டு மாசம் சாப்பிடுங்க. அதுக்கப் புறம் சில டெஸ்ட்கள் பண்ணலாம்’’ என்றார்.

மருந்து, மாத்திரைகளை வாங்கப் போனவன் அவற்றின் விலையைக் கேட்டு அதிர்ந்து போனேன். ஒரு மாதத்துக்கான மருந்து செலவு 1,800 ரூபாய். ஆனாலும், வாங்கிச் சாப்பிட்டதில் சிறு குணம் தெரிந்தது. இடையில், ஒரு மாநாட்டுக்காக டெல்லி போய் பத்து நாட்கள் தங்கி, பயப்படாமல் சப்பாத்தி சாப்பிட்டேன். ஒரு பிரச்னையும் இல்லை.

இரண்டு மாதங்கள் கழித்து, மறுபடியும் அந்த டாக்டரைப் போய்ப் பார்த்தேன். ‘‘என்ன, இம்ப்ரூவ்மென்ட் தெரியுதா? புரோட்டீன் சத்துதான் கம்மியா இருக்கு. இன்னொரு டெஸ்ட் எடுக்கணும். இங்கே கொடுக்க முடியாது. டெல்லிக்குதான் அனுப்பணும்’’ என்றார்.

எப்படியாவது குணமாகணுமே என்று தலையாட்டினேன். டெஸ்ட்டுக்கே ரூ.10,000.

‘‘என்னங்க, அநியாயமா இருக்கு! அந்த டாக்டர் சரியில்லை. எங்கப்பா ஒரு டாக்டர் சொன்னார். ரொம்ப நல்லா பார்ப்பாராம். நாளைக்கு அவரைப் போய்ப் பார்க்கலாம், வாங்க’’ என்றாள் மனைவி. அவள் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது.

அந்த டாக்டரையும் போய்ப் பார்த்து ஒரு வாரம், பத்து நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டும் வயிற்றுப் பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் நான் இளைத்துக் கொண்டு இருப்பதாக நண்பர்கள் கவலை தெரிவித்தார்கள். அந்த நேரத்தில்தான், என் நண்பன் சிவா வண்ணாரப்பேட்டைக்கு வழி சொன்னான்.

வழியெல்லாம் இரும்பு பைப்புகளும், உடைந்த இரும்புச் சாமான்களும் இறைந்து கிடந்தன. ஒரே அழுக்கும், குப்பைக் காடுமாகக் கிடந்தது. ஒருவழியாகத் தாண்டிப் போய் கிளினிக்கை அடைந்தேன். வரவேற்பு அறையில் ஒரு பழைய லொட லொடா ஃபேன் கிர்ர்க்… கிர்ர்க் என்று சுற்றிக்கொண்டு இருக்க, கணிசமான கூட்டம் இருந்தது. எல்லோரும் அடித் தட்டு மக்கள்.

டாக்டருக்கு 60 வயது இருக்கும். ரொம்ப எளிமையாக உடை அணிந்திருந்தார். ஒல்லி யாக இருந்தார். நடுத்தர உயரம். கண்களில் தீட்சண்யமான ஒளி. நான் கொண்டுபோயிருந்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் கூர்ந்து கவனித் தார்.

பின்னர், தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘‘உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லியே! யூ ஆர் ஆல்ரைட்!’’ என்றார். ‘என்ன இவர், இப்படிச் சொல்கிறார்!’ என்று நம்ப முடியாமல் அவரைப் பார்த்தேன்.

‘‘மஞ்சள்காமாலை… லிவர் பிரச்னை…’’

கெக்கெக்கெக் என்று சிரித்தார் டாக்டர். ‘‘நம்ம எல்லோருக்கும் ஏதாவது பிரச்னை இருந்தே தீரும். சிலருக்கு உடல் வெப்பம் சாதாரணமாகவே 100 டிகிரி இருக்கும். அதுக்காகப் பயந்து ஜுர மாத்திரையை முழுங்குவாங்களா? உடம்பைக் கொஞ்சம் கூல் பண்ணிக்கிட்டு, ஓய்வு எடுத்தா போதும். ரொம்ப அலட்டிக்கத் தேவையில்லை. நம்ம நாடு ஏழை நாடு. ஆரோக்கியத்தைப் பத்தி அதிகம் கவலைப்பட முடியாத பொருளாதாரப் பிரச்னை. அதனால… உடம்பைப் பத்திப் பொறுப்போடு இருங்க. ஆனா, கவலைப் படாதீங்க!’’

‘‘ஆனா, நாளுக்கு நாள் நான் மெலிஞ்சுக்கிட்டே வர்றதா…’’

மறுபடியும் கெக்கெக்கெக்..! ‘‘என்ன சார், அவனவன் உடம்பு மெலியலையேன்னு கவலைப்பட்டுப் பத்தாயிரம், இருபதா யிரம்னு செலவு பண்றான். நீங்க என்ன டான்னா… சரி, அது போகட்டும்… உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க யாராவது சமீபத்திலே ரொம்ப உடம்பு முடியாம…’’

‘‘ஆமா சார், போன வருஷம் எங்கம்மா பத்து நாள் படுத்த படுக்கையா இருந்து, தவறிட்டாங்க..!’’

‘‘த்சொ… த்சொ… அப்பா..?’’

‘‘அவர் நாலு வருஷத்துக்கு முன்னாடியே…’’ – என் குரல் கம்மியது.

‘‘உங்களுக்கு பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்…’’

‘‘யாரும் இல்லை சார்! நான் ஒரே பையன்!’’

‘‘சரிதான்… அம்மா போன பிறகு நீங்க உங்களை ஒரு அநாதை போல ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க. அஃப்கோர்ஸ்… மனைவி, குழந்தைகள்னு இருந்தாலும் அம்மா அன்புக்கு ஈடாகுமா? தவிர, உங்க ஒர்க் டென்ஷன், மேலதிகாரிகளின் எரிச்சல், எத்தனை தான் சின்ஸியரா உழைச்சாலும் அதை யெல்லாம் கண்டுக்காம உங்களை ஏதாவது குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கிற நிர்வாகம்…’’

என் மனதைப் படித்தவர் மாதிரி எத்தனை கரெக்டாகச் சொல்கிறார் இந்த டாக்டர் என்று வியப்பு வந்தது. ‘‘ஆமா சார், நீங்க சொன்னது 100 சதவிகிதம் உண்மை. ஆனா, இதுக்கு முடிவே கிடையாதா?’’

‘‘ஏன் கிடையாது..? ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்குப் போய்ப் பாருங்க. அங்கே பெற்ற பிள்ளைங் களால கைவிடப்பட்ட ஒரு தாயார் கிட்டே பேசுங்க. ஒரு நாள் முழுக்க அவங்ககூடவே இருந்து அவங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்க. உங்க மனசு மட்டுமில்லே, உங்க ஆத்மாவும் இந்தப் பணியினால சந்தோஷப்படும். படிப்படியா உங்க உடல் தோற்றமும் பொலிவடையும். மத்தபடி, தேவையில்லாத மருந்தைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கா தீங்க. அம்மா இல்லாத குறையை மருந்துகளால் தீர்க்க முடியாது. மனசுதான் தீர்க்கும்!’’

அவர் சொல்வதில் முழு நம்பிக்கை உண்டானது. மறு நாளே முதியோர் இல்லத்துக்குப் போய் வருவதென்கிற முடிவோடு வீடு திரும்பினேன். என்னைப் பார்த்த மனைவி, ‘‘என்னங்க, இன்னிக்கு உங்க முகத்திலே பழைய பிரகாசம் தெரியுதே! டாக்டர் அப்படி என்ன மருந்து கொடுத்தார்?’’ என்றாள்.

‘‘ரொம்ப நல்ல மருந்துதான். நம்பிக்கை மருந்து!’’ என்றேன்.

வெளியான தேதி: 06 டிசம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *