கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 10,750 
 

‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால் ஒடிந்துபோன மாட்டுவண்டிபோல கைகள் இரண்டையும் பின்கழுத்தில் சேர்த்துக்கட்டி சாய்ந்து கிடந்தான் பட்சிராசா. அவனுக்கு முன்னால் சோத்துக் கும்பாவோடு வானதி..

பதிலுக்காகக் காத்திருந்தார் அய்யா. பட்சிராசாவுக்கு அய்யாவின்பால் எப்போதும் அலட்சியம்தான். பகலிலாவது அவர் ஏதாவது புத்தி சொன்னால் கேட்பான். அதுவே ராத்திரிப் பொழுதாகிவிட்டால் அவர் இருக்கும் பக்கம் திரும்பியே பார்க்கமாட்டான். ஏனென்றால் இரவில் அய்யா தொண்டை நனைக்காமல் உறங்கமாட்டார். பட்சிராசா பிச்சைக்காரர்கள் மீது கூட தோள்மேல் கைபோட்டுக் கொள்வான். ஆனால் தண்ணியடிப்பவர்கள் வந்து எதிரில் நின்றாலே அவனுக்கு குமட்டல் எழும்பிவிடும்.

மணி எட்டகிவிட்டது ‘பட்டறை’க்குக் கிளம்பவேண்டும். எட்டேமுக்காலுக்கு டீ பட்டறையில் ஏறி நிற்கவேண்டும். பட்சிராசா போகாவிட்டாலும் பகல் டூட்டி பார்த்தவர் நேரத்துக்கு பட்டறையைவிட்டு கீழே இறங்கிவிடுவார்.

“யே புள்ளேய் . . மருமகளே ! என்னாம்மா ? என்னாதேஞ் சங்கதி ! வாயத் தெறந்துதே சொல்லுங்க” பொறுமை இழந்து போனார் அய்யா.

வானதி, முகம் துடைக்கிற சாக்கில் அப்படியே கண்களையும் துடைத்துக் கொண்டாள்.

பட்சிராசா, வால் மிதிபட்ட நாயைப்போல விடைத்துத் திரும்பினான். “ஒன்னிய ஆரு இங்கன பாக்கு வச்சு அழச்சாக ! ஒஞ் சோலிக் கழுதயப் பாத்துட்டுப் போ”

முகத்தில் தீயள்ளிக் கொட்டியது போலத்தான் பேசினான். அதையும் நாசூக்காய்த் துடைத்துக் கொண்ட அய்யா, ‘ இதுக ரெண்டுக்கும் இன்னிக்கி என்னா கேடு வந்திச்சு, என மனம் பதைத்தார். ‘நாள ஆவணி பொறந்தா கலியாணங்கட்டி ஆறுவருசம் கழியப்போவுது. ஆனாலும் நேத்துத்தே தாலிகட்டி வந்த பொடுசுகபோல அதுக கூத்தும் கும்மர்ச்சமும் பாக்கவே அத்தன சந்தோசமா இருக்கும். இதெல்லா இருந்து பாக்க சாவித்திரிக்கி குடுத்து வைக்கலியே என காலமாகிப்போன தனது மனைவியை எண்ணி மருகிய நேரம் உண்டு. ’ஆனால் மூஞ்சூரும் மொசக்குட்டியுமாகவே ரெண்டும் மொறச்சுட்டுத் தியறதப் பாத்தா மனசுக்கு கஷ்ட்டமாவுள்ள இருக்கு. பொம்பள இருந்தா இந்நேரம் உள்ளபூந்து நெலவரத்த கணிச்சு வந்திருப்பா !

தன்னுடைய இயலாமையை உணர்ந்த நேரம் வானதி, மாமனாருக்காக ஆதரவுக் குரல் கொடுத்தாள். ”ந்தா ராவுகாலம். என்னா ஒரேதாத்தே அலம்புற. ஒர்த்தரையும் வாயத்தொறக்க வுடமாட்டேன்ற ?”

”பெறவு என்னா ? இங்க என்னமோ ரெண்டுபேரும் கம்பெடுத்து சுத்தி மண்டய ஒடச்சுக்கிட்டு இருக்க மாக்கும், வெலக்கிவிட அய்யா நாணயக் குருக்களு ஓடிவாறாரு”

“எது ஒண்ணுன்னாலும் தொண்டைய அடக்கிப் பேசத் தெரியணும் ஊ ங்கறதுக் கெல்லா தீப்புடிச்ச மாதரி லொலொன்னு அலறுனா வீதில போறவக ஆளுக்கொரு செம்பு தண்ணிய மோந்துகிட்டுத்தே வருவாங்க.”

கிழவனாருக்குப் பொறுக்கவில்லை. கண்ணைக்கட்டி கையில் தடிகொடுத்து இடமும் வலமுமாய் சுற்றிவிட்டதுபோல தலைகிறுகிறுத்து வந்தது. “யே கிருசகெட்ட கழுதைகளா, என்னா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. என்னா ஏதுனு சொல்லுங்க.” சொல்லித் தொலைங்க என்றுதான் வாயில் வந்தது. சாவித்திரி கோவித்துக் கொள்வாள். ‘பெரிய மனுசெம் பேசுற பேச்சா ? தொலைங்க, ஒழிங்கன்னு. நாக்கப் படச்சதே ரெண்டு நல்ல சொல் சொல்லத்தேன் ‘ எனத் திருத்துவாள்.

. . . . . . . . . .

“என்னாம்மா சங்கதீ?”

கடேசியாய் வானதிதான் வாய் திறந்தாள். “ம் . . ! அதுக்கு (கணவனுக்கு) நூத்தம்பது ரூவா வேணுமாம்”

“நூத்தம்பது ரூவாயா ? எதுக்கு ?”

அது ஒரு வார்த்தையில் சொல்லி முடிக்கக்கூடிய பிரச்சனையா ? ஆனாலும் சொன்னாள்.

பட்சிராசாவுக்கு தேனி பசாரில் வேலை. பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கமாய் ஒரு பேக்கரி கடையில் இரவு நேரப்பணி. அவனுக்கு உதவியாய் ஒரு சிறுவன் மட்டும். இரவு எட்டேமுக்கால் மணிக்கு பட்டறையில் ஏறினால் காலை எட்டேமுக்காலுக்கு ஓனர் வந்து இறக்கிவிடுவார். பகலில் மட்டும் ஓனரும் ஒரு டீ மாஸ்டரும் இருப்பார்கள். இரவுப் பொழுதில் ஒட்டுமொத்தக் கடையும் பட்சிராசாவின் பொறுப்பில் வரும்.

பொறுப்பு ஏற்கும்போது பால்,சீனி,காப்பித்தூள்,டீத்தூள் எடைகட்டிய-எடைகட்டாத பால், மிக்சர், சேவு, மற்றும் இருக்கக்கூடிய அத்தனை ஸ்வீட் காரம் உட்பட, பண்டங்களும் நிறுத்து, எண்ணி ஸ்டாக் நோட்டில் குறித்து வைத்துவிட்டுப் போவார். ஒருலிட்டர் பாலுக்கு எத்தனை டீ, எவ்வளவு சீனி துல்லியமாய்க் கணக்கு வைப்பார். காலையில், விற்றதுபோக பைசா குறையாமல் கணக்குப் பார்ப்பார்

அதேபோல சிகரட், பீடி பிஸ்கட், பன் என ஏதாவது சரக்குகள் வந்தாலும் இருப்பைப் பார்த்து வாங்கி வாங்கியதற்கான சிட்டை எழுதிக் கொடுத்துவிட வேண்டும். நன்றாகப் போகிறதே என நினைத்து ஸ்டாக் இருக்கும்போதே ஒன்றிரண்டை வாங்கிப் போட்டால், ‘யாரக் கேட்டு வாங்குன ? சாயங்காலம் காசக்குடுன்னு சிட்டய நீட்டிக்கிட்டு வந்து நிப்பானே ஒங்கய்யாவா பணங்குடுப்பாரு’ என திட்டுவார்.

எதுக்கு வம்பு என வாங்காமல் விட்டாலும் ஏறுதான், ‘வந்தா வாங்கிப் போட வேண்டிதான, ஏவாரத்துக்கு இல்லீல்ல. குடுக்கறவங்கிட்ட சரக்க வாங்கிக் குறிச்சு வெக்க ஒடம்பு வலிக்கிதா, இல்ல ! நிய்யும் ஒங்கய்யாவும் பணத்த சுண்டப்போறீங்களா ?”

வீட்டில் காலாட்டிக் கொண்டிருக்கும் அய்யாவை என்னத்துக்கு பேச்சுக்கொருதரம் முதலாளி இழுக்கிறார் என விளங்கவில்லை.

ஒவ்வொரு நாளும் கரெக்ட்டாய் ஏவாரம் பார்த்து கணக்கு ஒப்படைத்து வீட்டுக்கு வருவது மலைஏறி இறங்கியது போல அலுப்பாய் இருந்தது. பகல் நேரத்திய வேலையில் இத்தனை உளைச்சல் இல்லை. டீ பட்டறையில் நின்று டீ,காப்பி போட்டுத்தருவதும் வாடிக்கையாளருக்கு பார்சல் கட்டித்தருவதும் மட்டுமே வேலை. ஆனால் இரவில் கடைக்கு மொத்தப் பொறுப்பாளர் ஓனருக்கு சமானமான ஒரு இடம். தூரத்தில் நின்று கடையை பார்த்து பெருமிதம் கொள்வதும். கல்லாவில் சட்டமாய் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஆளுவதும் எத்தனை கஷ்ட்டத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறது.

கடைக்கு வரும் சரக்குகள் பெரும்பாலும் காலை ஒன்பது மணிக்குமேல்தான் வரும். அத்தனையும் ஒனர் பார்த்துக் கொள்ளுவார். இந்த பன்ரொட்டிக்காரர் மட்டும் விடிந்தும் விடியாத பொழுதில் வந்து விடுகிறார். மனுசன் ராத்திரி தூங்குவாரா மாட்டாரா என்பது போலிருக்கும். ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் கடையில் முன்னால் சடக்கென எக்செல் வண்டியின் ஸ்டாண்டை ஒடிப்பது போன்ற பெருஞ்சத்தத்துடன் வந்து நிறுத்துவார். எக்செல் வருவதற்கு முன்னால் சைக்கிள் நங்கென ஸ்டாண்டை தூக்கிவைத்து நிறுத்தினாரென்றால் சைக்கிள் நிறுத்திய இடம் குழிவிழுந்து கிடக்கும்.

பஞ்சுப்பொதி ஏற்றிய லாரியாய் வண்டி திமிறி நிற்கும். ரேக்மேல் ரேக்வைத்து போதாதற்கு ரேக்கைச்சுற்றி கொண்டிவளையம் தொங்கவிட்டு அதிலும் பைகள் மட்டியிருப்பார். தவிர வண்டியின் ஹேண்ட்பாரில் முன்பாரமாய் சரக்குகள் தொங்கிக் கொண்டிருக்கும். தூரத்தில் வரும்போதே கடையை அளந்துவிடுவர் போல. வண்டியை நிறுத்திய வேகத்தில் என்ன தேவை என்பதை ஆடர் கேட்காமலேயே மடமடவென எடுத்து அடுக்கிவிட்டு, சிகரெட் அட்டை ஒன்றில் கொடுத்த சரக்கை எழுதி தேதி குறித்து கடையில் நிற்பவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வார். கையெழுத்தாகி விட்டால் சாயங்காலம் வந்து காசைவாங்கிக் கொண்டு சிட்டையை திரும்பத் தந்துவிடுவார். அல்லது கிழித்துப் போட்டுவிடுவார்.

அன்றைக்கு பன்ரொட்டி ஒரு டசனுக்குமேல் அப்படியே இருந்தது. இரவுப் பொழுதுதான் பன்ரொட்டி அதிகமாய் விற்பனையாகும். சாயங்காலம் அல்லது மறுநாள் போட்டால் கூடப்போதும். இன்றைக்கு சரக்கு தேவையில்லை என சொல்ல இருந்தான். வழக்கம் போல வண்டி சடக்கென நின்றது. மடமடவென எடுத்தார். டேபிளில் வைத்தார். சரக்கைக் குறிக்க அட்டையை தேடுகையில் ‘ஸ்டாப்’ சொன்னான். ஸ்டாக் இருப்பதைக் காட்டி “ சாயங்காலம் வந்து போடுங்க” என்றான்.

ரொட்டிக்காரரும் கடையை எட்டீப் பார்த்தார்.

“பன்னு இருக்குண்ணே” அட்டளையைக் காட்டினான்.

“இன்னிக்கி சந்த நாளு. போதுமான்னு பாத்துக்க, அப்பறம் அங்கிட்டுப் போகவிட்டி கேக்கக் குடாது. “ ஆனாலும் போட்ட சரக்கை எடுக்காமலே பேசினார். பட்சிராசாவுக்கு கண்ணில் பூச்சிபறந்தது. என்ன செய்ய என புரியவில்லை.

“ஒம்பது மணிக்கு வந்துகூட போட்டுக்கண்ணே. ஓனர் வந்துருவார்”

“அதெப்பிடி ஒங்களுக்குன்னு ஒருடயம் வரமுடிமா. சரக்கு மிச்சமிருந்தா வசூலுக்கு வாரப்ப சாய்ங்காலமா வருவேன். இல்லாட்டி காலம்பறதேன்.”

சரக்கு போடுபவர்கள் யாரும் நாம் சொல்வதை காதில் வாங்கவே மாட்டார்கள். எப்படியாவது தள்ளிவிடத்தான் பார்ப்பார்கள். ஓனரிடம் தோண்டு வாங்குவது யார் ?

“ஓனர் வைவாரே ண்ணே !”

“ஒண்ணு செய்வோம். சரக்க எடுத்துவையி. நா ஓனர்கிட்டயே சிட்டயப் போட்டு காசு வாங்கிக்கறேன்”

“சரி ஒங்க இஷ்டம் !”

இரண்டு நாள் கழிந்தது மூணாம்நாள் டூட்டிக்கு வந்ததும் முதலாளியின் முகத்தில் இருளை தரிசித்தான். துணுக்கென்றது. எதோ நடந்திருக்கிறது. என்னவெனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தன்னை பாதிக்காமல் இருக்க வேணும். சந்தை மாரியாத்தாளை உள்ளம் உருகவேண்டினான். வேலை முடித்துப் போகும்போது சொந்தக்காசில் சூடம் வாங்கிக் கொளுத்துவதாக வேண்டுதலும் போட்டான். அது ஆத்தாளுக்கு சரிவரக் கேட்கவில்லை.

“என்னாவாம் , பெரியாளா ஆய்ட்டியக்கும்.” பட்டறை ஆளை மாத்திவிட்டதும் முதலாளி கேள்விபோட்டார். பகல்சிப்ட் ஆள் சம்பளத்துக்காக காத்து நின்றார்.

பட்சிராசாவுக்கு முதலில் அது தன்னைத்தான் என்பது புரியவில்லை. “ஒன்னத்தே” என முதலாளி சொன்னதும் உடம்பு வெலவெலத்தது.

“ணே” காத்துப் போன பலூனாய் குரல் செத்துப் பேசினான்.

“இல்ல, நைட்டு கடைய மொத்தத்துக்கு ஒப்படைச்சுட்டுப் போறதால ஓனரா ஆய்ட்டம்னு நெனப்பா ?”

பகல் சிப்ட்டு ஆள் அப்படியே நின்றார். அவருக்குத் தெரியும் இந்த பஞ்சாயத்து முடியாமல் தனக்கு சம்பளத்தைத் தரமாட்டார். ஒரு வேலைக்காரனை முன்னால் வைத்துத் தான் இன்னொரு வேலைக்காரனைக் கண்டிப்பார்கள். இது எல்லா முதலாளிகளும் செய்யக்கூடிய பொதுவான செயல்பாடு. அவன் அசிங்கப்பட வேணுமாம். அந்தபயம் இவனுக்கும் ஏறவேண்டுமாம். பீடியைப் பற்றவைத்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அது முடியாது. யாருக்காவது பரிந்து பேசினால் பிரச்சனை சீக்கிரம் முடியும். முதலாளிக்குத்தான் பரிந்து பேசமுடியும். அதற்கு வெறுமனே வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஒரு பழைய செய்தித்தாளை எடுத்து ஸ்வீட் அடுக்கி வைத்திருந்த ஷோகேஸ் கண்ணாடியைத் துடைக்கலானான்.

முதலாளியின் அந்தவார்த்தை கேட்டு அதிர்ந்துபோனான். பட்சிராசா, ”ணே” அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.

“என்னா நொண்ணே நொச்சக் கொட்டங்குற. பன்ரொட்டிக்கார கிட்ட என்னா சொன்ன ?”

என்ன சொன்னேன். சட்டென ஞாபகம் வரவில்லை.

“எங்கிட்ட சிட்ட எழுதி காசு வாங்கிக்கறச் சொன்னியாமே.” அவரே ஞாபகமூட்டினார்.

“இல்லண்ணே . . நா வந்து . .”

“சேந்து எவ்வளவு நாளாச்சு ?“

அதுவும் உடனே நினைவுக்கு வரவில்லை. வானதிதான் இதிலெல்லாம் கெட்டி. ஆவணியோட ஆவணி ஒண்ணு பொரட்டாசி, ஐப்பசி பதிமூணு பதினாலு மாசம் என கணக்குப்போட்டு சொல்வாள்.

மௌனமாய் அவரை நோக்கினான்.

“இந்தா இந்த பாசாங்கல்லாம் வேணாம். சரக்க வாங்குன மயிராண்டிக்கு சிட்ட எழுதிக்குடுக்க முடியலியோ ! நைட்டெல்லா வெட்டி முறிக்கிறவேல.மரம் மரமா !”

“ஸ்டாக் இருந்துச்சுண்ணே”

“பெறகு என்னா சோலிக்கு வாங்குனவெ”

“அவருதே !”

” என்னா சொவருதே . .! சொவரு திங்கச் சொன்னா தின்னுருவ”

இப்படியேதான் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் போராட வேண்டி இருக்கிறது. நியாயம் தன்பக்கமிருந்தாலும் தான்தான் தலைகுனிந்து நிற்க வேண்டும். அன்றைக்கே ஒழுங்காய் படித்து இருந்தால் ஒரு அரசாங்க வேலையில்போய் அய்யா சொன்னதுபோல காத்தாடிக்குக் கீழ் காலாட்டிக் கொண்டு வேலைபார்க்கலாம்.

“ஆமா அவகமட்டும் என்னத்த நிம்மதியா இருக்காக, வாத்திமாரெல்லாம் பாரு என்னிக்கு பள்ளிக்கூடத்த காலிபண்ணப் போறாகளோன்னு உசுர கையில புடிச்சுகிட்டு அவகளுந்தே மல்லுக்கட்டிகிட்டிருக்காக” வானதி பேப்பர் செய்திகளை அவ்வப்போது எடுத்துச் சொல்லி பட்சிராசாவை தேற்றிக் கொண்டிருப்பாள்.

“ந்தா பார்,, என்னயப் பாரப்பா . பன்னு நான் வாங்குனனா ?

இல்லை என தலையைக் குலுக்கினான்.

நீதான வாங்குன !”

ஆமென தலை மேலும் கீழுமாய் அசைந்தது

“அப்பன்ன நீயே காசக் குடுத்துரு”

அப்பாடா ! நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு சுமை கழன்று காற்றில் கலந்தது.

“ஆனா, கல்லாவுல எடுக்கக் குடாது. ஒஞ்சேப்புல இருந்து குடுத்துரு ஏ இங்க வாப்பாவ்” பகல் சிப்டு ஆளுக்கு சம்பளத்தைக் கொடுத்தார்.

“மொதலாளிமாருகன்னா அப்புடித்தாண்டா இருப்பாக. நீ வாங்குன விசியத்த ஆவுகமா ஒருவார்த்த சொல்லீர்க்கணும். கணக்கு ஒப்படைக்கிற நெனப்புல விட்டுப்போச்சு. விடு ரெண்டுநாள்ல சரியாயிரும். அதுக்காக வீட்டுக்குள்ள வந்து சட்டிபானைய உருட்டறது நல்லாவா இருக்கு.” அய்யா சினிமாவில் வரும் சொட்டைத்தலை தகப்பன் போல தலையை ஆட்டிஆட்டிப் பேசினார்.

பட்சிராசாவும் அப்படித்தான் நினைத்தான். ஒருவாரமாகியும் நிலமை சீராகவில்லை. இதில் பன்காரர் தொந்தரவு வேறு. “தயவு பண்ணுங்க அண்ணாச்சி” அய்யா வயசுள்ள அவர் பட்சிராசாவை அண்ணாச்சிப் பட்டம் சூட்டிக் கெஞ்சலானார். “தெரியாத்தனமா வந்து போட்டுட்டேன். எங்க ஓனரு அங்க குத்துராரு”.

”இப்ப என்னாதே பண்ணனுண்ற ?” வானதி முடிவாய்க் கேட்டாள்.

“நூத்தம்பது ரூவாயக் குடுத்து நல்லபிள்ளையாகணும்னு பாக்குறான்.”

“வேற என்னா செய்யணும். சொல்லு” பட்சிராசா மனைவியிடம் பரிதாபமாய் நின்றான்.

“ஆமா நாஞ் சொல்றதத்தேன் மொனமுறியாம செஞ்சு முடிக்கப் போற !”

“சொல்லுத்தா அதே செய்றேன்றான்ல”

“அதெல்லா பசப்பு மாமா. தெனத்துக்கும் ஆய்ரத்துக்கு ஒண்ணு கொறச்சலாக் கொணாந்து குடுக்கற. இதில தானம் வேற குடுத்துரு. நாங்கேட்டா மட்டும் அங்கன வீங்கிக் கெடக்கு இங்கன பொடச்சுச் கெடக்குனு பொலம்புறது” இந்த சம்பவத்தைச் சாக்கிட்டு பழைய கதையெல்லாம் இழுக்கலானாள் வானதி.

“நீ என்னைக்கித்தே கேக்காம இருந்த. சட்டயக் கழட்டங்குள்ள அண்ட்ராயர்ல இருக்க காசயும் ஆட்டயப் போட்ருவியே” பட்சிராசாவுக்கும் வேகாளம் வந்துவிட்டது.

“ஆமா நா ஆட்டயப் போடுறவதே . தெரிஞ்சுதான கட்டீட்டு வந்த”

“இந்தா கைய எடுத்துக்க, காலக்கூட வெட்டி எடுத்துப்போ. பத்தாக்கொறைக்கு எங்கியோ கிட்னி வெலைக்கிக் கேக்கறாகளாம்ல, அதையுங்கூட அறுத்து எடுத்து கடனத் தீத்துரு. போதுமா”

பட்சிராசாவின் அந்த பேச்சில் இருவரும் அடங்கிப் போயினர். கொல்லைப் பக்கம்போய் முகம் அலம்பித் துடைத்து. பவுடர்பூசி, நெற்றியில் நடுவில் திண்ணீறு தீட்டி குற்றாலத்துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கடைக்குக் கிளம்ப தயாரானான். அந்த நிசப்தத்தில் சுவர்க்கோழியின் ரீங்காரம் மூவருக்கும் துல்லியமாய்க் கேட்டது.

“மொதலாளின்னா இப்பிடியா ஒரேமானக்கி வீம்பு புடிப்பாக, கொஞ்சமாச்சும் ஈவுசோவு நாய அநியாயம் வேணா” வானதி பேச்சை மாற்றிப் போட்டாள்.

“காசு பணம் வச்சுருக்கவன்ட்ட அதெல்லா இருக்காது ஆத்தா”

“காசு என்னா காசு ஒரு காச்சல் மண்டவலிக்குத் தாங்குமா? ஆஸ்பத்திரிக்காரனுக்கு குடுக்கக் கடைய அடவு வெக்கெணும் தெரிமா!

“அதான, ஒருஆளவேலைக்குப் போஒட்டதும் டாட்டா நெணப்பு வதுரும் போல. பாவமாத்தே இருக்கு.

அதுக்காக வித்தகாச இவரு என்னா சேப்புலயா போட்டுட்டு வந்தாரு. கேக்கலாம்ல.”

“கேக்கணும்ல. “

“மனுசே, ராப்பூரம் கண்ணப் பொட்டுன்னு மூடாம அரும்பாடுபட்டு ஒழச்ச காச இந்தான்னு தூக்கித் தந்துற முடியுமா ?”

“காசப் பாத்தா தெனமும் இமுசப் படறது அவந்தான”

“என்னாத்துக்கு இமுசப் படணும் ? நா வாங்கிப் போட்ட ரொட்டியக் குடப்பான்னு நிமிந்து கேக்க வேண்டிதான”

“வேலய விடுட்டு வாடாங்கற “

“அட, அப்பிடிப் போனாப் போகுது, ஆர்லயும் சாவு நூர்லயும் சாவு. கையுங்காலும் திடமா இருக்கப்ப யாருக்கு நாம தலைய கவுந்து நிக்கணும்?”

ஆண்பிள்ளை சாண்பிள்ளையாய் குறுகி நிற்க, வானதி மாமனாரோடு போருக்கான ஒத்திகையில் இருந்தாள்.

– 08-10-2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *