கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 16,506 
 

வெள்ளிக் கிழமை மாலை. நியூயார்க் சப்வேயில் 5:40 ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தபோது, அந்த போஸ்டர் கண்ணில் பட்டது.

‘ஒயிட் லைஸ்!’ ஏதோ அமெச்சூர் குழுவின் ப்ளே- நாடகம். அதை முழுவதும் படிப்பதற்குள் ரயில் வந்துவிட்டது. அதிசய மாக உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. நிம்மதியாக சிறிது நேரம் கண் மூடலாம் என்று நினைத்தபோது, என் அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் இருக்கும் ஸ்மித் கண்ணில் பட்டான். ‘ஹேய் சுப்ரேமேனியேன்…’ என்று விளித்து, ஏதாவது தொணதொணப்பான். அவன் என்னைப் பார்க்கும் முன் ஐபாடில் பாட்டுக் கேட்பது போல் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன். கூடவே, தூங்கி வழிவது போல் தலையை அவ்வப்போது அசைத்துக் கொண்டதும் பாசாங்குதான்.

வெள்ளைப் பொய். பச்சைப் புளுகு. தினம் சந்திக்கிற விஷயம்.

நேற்று இப்படித்தான் என் கீழே வேலை பார்க்கும் நிக்கலஸ் வேலைக்கு வரவில்லை. ‘செமையாக சைனஸ் தலைவலி’ என்று சொல்லி மட்டம் போட்டுவிட்டான். ஆனால், நேற்றிரவு சி.பி.எஸ். சேனலில் விளையாட்டு செய்தியில் நியூயார்க் மெட்ஸ் விளையாட்டில் ரசிகர்கள் மீது கேமரா ஊர்ந்தபோது, அவனை நான் பார்த்துவிட்டேன். அதை இன்று காலை போட்டு உடைத்திருக் கலாம்தான். ஆனால், என்னவோ மனசு வரவில்லை.

மறுநாள் சனிக்கிழமை, காலையில் கொஞ்சம் நேரம் கழித்து விழிக்கலாமே என்றிருந்தவனை வலுக்கட்டாயமாக அழைப்பு மணி கூப்பிட்டது. ஒரு திருப்திப் புன்னகையுடன் தலையணையை இறுகக் கட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டு இருந்த அருமை மனைவி ஜோதியை எழுப்ப மனமின்றி நானே எழுந்தேன். வாசலில் அம்மா.

மன்ஹாட்டனில் 26 மாடிக் கட்டடத் தில் எங்கள் குடியிருப்பு. நான் 15-வது மாடி. அம்மாவும் அப்பாவும் நான்கா வதில். அண்ணன் சூரியும், அவன் மனைவி ஸ்ரீகலாவும் 17-ல்.

‘‘என்னம்மா இவ்ளோ சீக்கிரம்…அப்பாவுக்கு ஒண்ணும் இல்லையே?’’ கவலையுடன் கேட்டபடியே கதவைத் திறந்தேன். ‘‘நேத்து ராத்திரி ஏன் ஃபுட் பால் மேட்ச் பார்க்க வரலை? அதான் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்’’ என்றபடி உள்ளே நுழைந்தாள்.

இதற்குள் பேச்சு சத்தம் கேட்டு ஜோதியும் வந்தாள். நான் ஒரு கணம் யோசித்துவிட்டு, சட்டென்று மனதுக் குத் தோன்றிய ஒரு பொய்யைச் சொன்னேன்… ‘‘அதுவாம்மா… ராத்திரி சரியான தலைவலி. மைக்ரேன்! ஒரே குடைச்சல். கண்ணையே திறக்க முடியலை. மேட்ச்சை வீடியோ டேப் பண்ணி வெச்சுட்டேன், அப்புறம் பார்த்துக்கலாம்னு. இல்லையா ஜோதி?’’

‘‘தலைவலியா? உனக்கா? நேத்து ராத்திரி…’’ என்று அவள் ஆரம்பித்த போது, ‘என்னைக் காட்டிக் கொடுத்து விடாதேயேன்..’ என்று கண்களால் கேட்டுக்கொண்டேன். அம்மா என் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ‘‘ஊஹ¨ம். ஜுரம் இல்லை. போன்ல கூப்பிட்டுக் கேட்கலாம்னா பிஸி சிக்னலாவே இருந்துது…’’

இதற்கு ஜோதி பதில் சொன்னாள்… ‘‘ஆமாம்மா! இவருக்குத் தலைவலியா… நான்தான் டைகர் பாம் தடவிவிட்டு ராத்திரியெல்லாம் மசாஜ் பண்ணேன். அதனால ஒரு நிமிஷம்கூட எனக்கும் தூக்கம் இல்லை. தொந்தரவு வேண்டா மேனு போனையும் அணைச்சுட்டேன்…’’ இரண்டு பேரும் பெண்ணையும் பிள்ளையையும் தூங்கப் பண்ணிவிட்டு, மேட்ச் பார்த்துக்கொண்டு கொட்டம் அடித்த தைக் காட்டிக் கொடுக்காத தர்ம பத்தினி.

அம்மா எங்கள் இருவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தாள். நாங்கள் சொன்ன பொய்யை நம்பினாளா? தெரியாது.

அன்று மாலை ஜோதியும் நானும் வெளியே போக வேண்டியிருந்ததால், அம்மாவும் அப்பாவும் பசங்களைப் பார்த் துக்கொள்வதாகச் சொல்லியிருந்தார்கள். டாண் என்று ஆறு மணிக்கு வந்தவுடனே அப்பா, ‘‘சுப்பு… ராத்திரி மேட்ச்சை நீ வீடியோவில் டேப் பண்ணி வெச்சிருக் கியாமே, உன் அம்மா சொன்னாள். அதைப் போடு. நானும் இன்னும் பார்க்கலை’’ என்றவர் சப்ளிக்காக டி.வி. முன் உட்கார்ந்துவிட்டார். போச்சு! மாட்டிக்கொண்டேன். ம்… அம்மாவிடம் சொன்ன பொய்யில் மாட்டிக்கொள் ளாமல் இருக்க, இன்னொரு பொய்… ‘வி.சி.ஆர். ரிப்பேர்ப்பா!’ அப்பா விடுவாரா? ‘‘பின்னே, நேத்து ராத்திரி மேட்ச்சை எப்படி ரெக்கார்ட் பண்ணே?” என்றார்.

‘‘அதுவா?’’ – மென்று விழுங்கும்போது என் எட்டு வயது அருமைப் பிள்ளை அர்ஜுன் வந்தான். ‘‘ஹாய் க்ராண்ட்பா…’’ என்று கையசைத்து-விட்டு சமையலறை நோக்கி ஓடினான். நான் அவனைப் பார்த்தபடியே, ‘‘நேத்து ராத்திரி சரியாதான் இருந்தது. காலைல அர்ஜுனுடைய ஃப்ரெண்ட் எட்வர்ட் விளையாட வந்திருந்தான். அவங்க ரெண்டு பேருமா வீட்டுக்குள்ளேயே பந்து போட்டு விளையாடி பந்து பட்டதிலே, வி.சி.ஆர். பணால்!’’

‘‘சரி, நீயும் ஜோதியும் போன பிறகு, நான் அதை ரிப்பேர் பண்ணி வைக்கிறேன்’’ என்றவரை அவசர மாகத் தடுத்தேன். ‘‘வி.சி.ஆர். ரிப்பேர் இருக்கட்டும்பா! முதல்ல வாஷிங் மெஷினைப் பாருங்க. அது இல்லாம முடியலைன்னு ஜோதி நாலு நாளா மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிட்டிருக்கா!’’

வெளியில் போகத் தயாராக அழகாக சல்வார் கமீஸ் உடுத்திக் கொண்டு வந்த ஜோதி, ‘‘இல்லை… இல்லை! வாஷிங் மெஷினை ஒண்ணும் பண்ணாதீங்க மாமா! நாளைக்கு சியர்ஸிலிருந்து ரிப் பேர் பண்ண ஆள் வரேன்னு சொல்லியிருக்கான்’’ என்றவள், கண்ணாலேயே என்னை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். அப்பா ரிப்பேர் பண்ணிய எது வும் ஒழுங்காக வேலை செய்த தில்லை என்பது அவளின் பொருமல்!

இத்தனை நேரம் பேசாமல் இருந்த அம்மா, இப்போது திருவாய் மலர்ந்தாள். ‘‘என்ன ஜோதி, இன்னும் வாஷிங் மெஷினைச் சரி பண்ணலையா? நேத்திக்கு எங்க வீட்டுக்கு வந்து துணியைச் தோச்சுக்கன்னு நான் சொன்னப்போ, சரியாயிடுச்சுன்னு சொன்னியே?’’ என்றாள். ஜோதி லேசாக ஜெர்க்கடித்து, ‘‘அது… அதுவாம்மா? அப்படிதான் நினைச்சேன். அப்புறம் பார்த்தா…’’ என்று அவள் தன் கதையை ஆரம்பித்தாள். நேற்று என்னிடம் அவள் ஒரு பாடு மூக்கால் அழுதது நினைவுக்கு வந்தது.

‘உங்கம்மாவுக்கு நான் ஒரு அடி முட்டாள்னு நினைப்பு. ரெண்டு நாள் முன்னாடி வேற வழி இல்லாம துணிகளை எடுத்துக்கிட்டு அவங்க வீட்டு மெஷின்லே தோய்க்கலாம்னு போனா, என்னை உட்கார வெச்சு ரெண்டு மணி நேரம் லெக்சர்! வெள்ளைத் துணியைத் தனியா க்ளோராக்ஸ் போட்டுத் துவைக்கணும், காலர்ல முதல்லேயே சோப் போட்டு ஊற வைக்கணும்னு… மெஷின்ல துணி தோய்க்கறது பெரிய பிரம்ம வித்தையா? நானும் எம்.பி.ஏ. படிச்சவதான். இனியும் அங்கே துணி தோய்க்க எடுத்துட்டுப் போனா நான் ஒரு இடியட்!’

அம்மா இப்போது டாப்பிக் மாற்றி, ‘‘ஏன் ஜோதி… சாயி பஜனுக்குதானே போறேன்னு சொன்னே? அழகா புடவை கட்டிக்கிட்டுப் போக மாட்டியோ?’’

‘‘இல்லேம்மா… எந்தப் புடவையும் அயர்ன் பண்ணினதா இல்லை…’’ என்று சொன்னபடியே, ‘ஏதாவது சாக்கு சொல்லி என்னை விடுவிப்பாயா?’ என்பது போல், ஜோதி என்னைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.

‘‘ஜோ… பேசிட்டே நிக்காதே! கிளம்பு. வி.ஐ.பி. மாதிரி லேட்டா போனா அத்தனை பேருக்கும் நடுவிலே நம்ம மண்டை உருளும்’’ என்று கார் சாவி யோடு நான் வெளியே வர, ஜோதி கதவுக்கருகில் இருந்த மர கொக்கியிலிருந்து தன் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டாள்.

‘‘அனிதா, அர்ஜுன்! ரெண்டு பேரும் ஹோம் வொர்க் முடிக்கணும். அது வரைக்கும் நோ டி.வி! நோ சாக்லெட்ஸ்! அம்மா, உங்க பேத்தி மேல ஒரு கண் வெச்சுக்கங்க. விட்டா மணிக்கணக்கிலே போன் பேசிட்டிருப்பா..!’’

அனிதாவுக்கு 12 முடிந்து 13 ஆரம்பித் திருக்கிறது. பள்ளித் தோழி ஜாக்கியுடன் பாய் ஃப்ரெண்ட்ஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுகிற வயது.

ப்ராட் பிட்டும், ஏஞ்ஜலினா ஜோலியும் நடித்த படத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பினோம். அப்பா மும்முரமாக கால் பந்து ஆட்டம் பார்த்துக்கொண்டு இருந் தார். ‘‘ஏம்ப்பா, வாஷிங் மெஷின்லே என்ன கோளாறுன்னு பார்த்தீங்களா?’’ என்று கேட்டேன்.

‘‘பார்த்தேன்… என்னாலே சரி பண்ண முடியலை. நீ சியர்ஸ் கம்பெனிக்கார னையே கூப்பிட்டுக்கோ!’’ என்றார் கண்ணை டி.வி-யிலிருந்து எடுக்காமல்.

‘‘டாடி! தாத்தா பொய் சொல்றார். அவர் சோபாவை விட்டு எழுந்திருக்கவே இல்லை. தாத்தாவும் நானும் வீடியோவில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்தோமே’’ என்றான். ‘‘வீடியோவிலா? அது ரிப்பேர்னு…’’-நான் சொல்லி முடிப்பதற்குள், அப்பா ‘‘சரி, சரி… மேலே எதுவும் சொல்ல வேண்டாம். அவன் ஃப்ரெண்ட் இன்னிக்கு இங்கே வரவே இல்லையாமே! உன் பிள்ளையாண்டான் என்கிட்டே உண்மையை உளறிட்டான்’’ என்றார். அவரது கவனமெல்லாம் ஆட்டத் திலேயே இருந்ததால், மேலே எதுவும் கேட்கவில்லை. நான் தப்பித்தேன்.

அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குக் கிளம்பும்போது, ‘‘மறக்காதீங்க… நாளைக்கு ஞாயித்துக்கிழமை’’ என்றாள் அம்மா. ஒவ்வொரு ஞாயிறும் சூரி, ஸ்ரீகலா உள்பட எங்கள் எல்லோருக்கும் அம்மா வீட்டில்தான் லன்ச்.

மறு நாள் அங்கே போனோம். எல்லோரும் வழக்கம் போல் மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டோம். சூப்பரான சாப்பாடு! பருப்பு உசிலி, மோர்க் குழம்பு, உருளைக் கிழங்கு ரோஸ்ட், தயிர்ப் பச்சடி என்று ஒரு கை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, தொலைபேசி ஒலித்தது. அம்மாதான் போனை எடுத்தாள்.

பேசிவிட்டு மறுபடி மேசைக்கு வந்த-போது, அவள் முகம் சுரத்தின்றி இருந்தது. என்னையும் ஜோதியையும் எரித்துவிடுவது போல் பார்த்-தவள், ‘‘நேத்திக்கு நீங்க சாயி பஜன் போகலையா? கமலாவோட அம்மாதான் போன் பண்ணினாள். ஏன் உங்க வீட்லேர்ந்து யாரும் வரலைன்னு கேட்கிறா. ஏன் பொய் சொன்னீங்க?’’ என்று நேரிடையாகக் கேட்டாள்.

ஜோவும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ‘‘அது வந்து…’’ – ஜோதி ஆரம்பிக்கும் முன், அப்பாவே அம்மாவுக்குப் பதில் சொன்னார்… ‘‘அவங்க ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்’ சினிமா பார்க்கப் போனாங்க. உன்கிட்டே சொன்னா நீ போக விட மாட்டே. நான்தான் சாயி பஜன் போறோம்னு சொல்லச் சொன்னேன்’’ என்றார்.

‘‘ஓஹோ! பொய் பேச நீங்களே சொல்லிக் கொடுத்தீங்களா? பேஷ்! எனக்குத் துளியும் பிடிக்காத விஷ யம் பொய் சொல்றது. அது, இந்த 38 வருஷம் என்னோடு குடித்தனம் பண்ணியும் உங்களுக்குத் தெரிய லையா?’’

‘‘அசடே! இது பொய் இல்லடி. புளுகு. ஒயிட் லை (white lie). உன் மனசும் நோகக் கூடாது… அவங்களும் படத்துக்குப் போகணும். இதுல என்ன தப்பு? அப்படிப் பார்த்தா நீயும்தான் கூசாம புளுகறே! சுப்புவோட உட்கார்ந்து மேட்ச் பார்க்கணும்னு கூப்பிட்டிருந்தே. ஆனா, உண்மையில் அவன்கிட்டே உன் மருமக ஜோதியைப் பத்தி ஒரு மூச்சு புகார் காண்டம் படிக்கத்தான்னு எனக்குத் தெரியாதா? அது ஒயிட் லைதானே? அவனுக்குப் பிடிக்குமேன்னு மெனக்கெட்டு பிஸிபேளா செஞ்சு வெச்சே. அவன் வராததால, சூரி வந்தப்போ ஸ்ரீகலாவுக்குப் பிடிக்குமேன்னு ஸ்பெஷலா பண்ணினதா சொல்லிக் கொடுத்தனுப்பினியே, அதுவும் ஒயிட்லைதான்!’’ என்று போட்டு உடைத்தார் அப்பா.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அம்மா திருதிருவென்று விழித்தது பரிதாபமாக இருந்தது.

மதியம் 2 மணி சுமாருக்கு, வீடு போய்ச் சேர்ந்த பின், சோபாவில் ஜோ என் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டாள். ‘‘சுப்பு… உன் அம்மா, அப்பா, நீ, நான் எல்லோருமே அப்பப்ப பொய் சொல்றோம். காரணம், அடுத்தவர் மனசை நோகடிக்க வேண்டாமே என்கிற நல்ல எண்ணம் மட்டும்தான். அது சரி… இதுவரைக்கும் நீ என்னிடம் சொன்னதில், எது ரொம்பப் பெரிய பொய்?’’ என்றாள்.

நான் ஏமாற மாட்டேனே! இது மாதிரி கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, பிறகு அது பூமராங் மாதிரி திரும்பி என் மேலேயே விழுந்து, வாழ்நாள் பூரா குடைச்சல் தரும் என்று எனக்குத் தெரியாதா? அதனால், ‘‘நீ முதல்ல சொல்லு…’’ என்றேன்.

அவள் பதில் சொல்லுமுன், என் பெண் அனிதா வந்தாள். கூடவே அவளுடைய சினேகிதி ஜாக்கியும் வந்தாள். இரண்டு பேரும் ரொம்பவே டைட்டாக ஸ்லிம் கட் ஜீன்ஸ், டாங்க் டாப் என்று அசத்தலாக இருந்ததைக் கவனித்தேன். ‘‘மாம்… டாட்..! நானும் ஜாக்கியும் மிஷெல் வீட்டுக்குப் போய் சயின்ஸ் ப்ராஜக்ட் பண்ணப் போறோம். அதுக்குச் சில சாமான்கள் வாங்க வேண்டியிருக்கு. மாலுக்குப் போகணும். 20 டாலர் தர்றியா?’’ என்றாள்.

‘‘மாலுக்கா? ப்ராஜெக்ட்னு சொல்றே, கையிலே புக்ஸ் எதுவும் இல்லையே?’’ என்று சந்தேகமாகக் கேட்டேன்.

சினேகிதிகள் இருவரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘‘வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத் திலிருந்து வரும்போதே புத்தகங்களை மிஷெல் வீட்டில் வெச்சுட்டோமே!’’ என்று கோரஸாகப் பதில் சொன்னார் கள்.

இந்த இளசுகள் இரண்டும் எதற் காக பிளாஸா பக்கம் போகின்றன என்று எனக்குத் தெரியாதா? சயின்ஸ் ப்ராஜெக்ட் என்பதெல்லாம் சும்மா! இருந்தாலும், என் வாலெட்டிலிருந்து 20 டாலர் எடுத்துக் கொடுத்தேன். அவர்கள் உற்சாகமாகப் பேசிச் சிரித்தபடி வெளியே போக, ‘‘என்ன சுப்பு! அவங்க ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் பார்க்க மாலுக்குப் போறாங்க. ப்ராஜெக்ட்னு சொல்ற தெல்லாம் சுத்தப் பொய். இதுகூடவா உனக்குப் புரியலை?’’ என்றாள் ஜோ.

புன்சிரித்தேன். சில சமயங்களில் சில பொய்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதும் சௌகரியம்தான்!

– 11th ஜூலை 2007

Print Friendly, PDF & Email

1 thought on “வெள்ளைப் பொய்கள்

  1. இந்த கதை Everybody Loves Raymond இருந்து எடுத்த மாதிரி இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *