கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 8,752 
 

“எண்ணித் துணிக கருமம்
துவைத்த பின் செல்லுவது அழுக்கு “

என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப ஜீன்ஸ் பேண்டை துவைக்க போடும்போது மூன்றாவது முறையாக மறதியில் 6GB பிளாஷ் மெமரியையும் சேர்த்து போட்டு துவைத்து விட்டேன்.

ஞாபகம் வந்து அதைத் தேடிக் கண்டடைந்த போது மழையில் நனைந்த நாய்க்குட்டி போல வெளிறி இருந்தது நல்லவேளை உடையவில்லை.

சுடு தண்ணீர் செய்வது எப்படி என்று “யு டியுபில்” கண்டது போல, கூகிளில் ஈரமான பிளாஸ் மெமரியை சரி செய்வது எப்படி என்று அடித்து கேட்டு அது கூறியது பிரகாரம் USB யை வெயிலில் இட்டு உலர்த்தி காயவைத்து ஹீட்டர் மூலம் சூடான காற்றை செலுத்தி பலவித மந்திரஜால வித்தைகள் காட்டி கம்ப்யூட்டரில் இணைத்து பார்க்க அதில் கதையாக எழுதி இருந்த பச்சை பொய்கள் எல்லாம் நீரில் நனைந்து சாயம் போய் வெள்ளைப் பொய்களாக மாறி காட்சி அளித்தன.

அவற்றில் ஒரே ஒரு வெள்ளைப் பொய்யை உங்களிடம் சனிக்கிழமையான இன்று கூறலாம் என்று இருக்கிறேன். வீட்டில் செவ்வாய்கிழமை தான் முடி வெட்டக் கூடாது என்பார்கள். அதற்கும் சொல்லப் போகும் வெள்ளைப் பொய் கதைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா. சம்பந்தமே இல்லாம நடிகை கௌதமி அரசியலுக்கு வரும் போது நான் இதை எழுதக் கூடாதா, இதென்ன அநியாயம்.

சரி விடுங்கள் “ வெள்ளைப் பொய்கள் “ பற்றிக் கூறுகிறேன்.

ஒரு கிருஸ்துமஸ் ஒட்டிய டிசம்பர் மாத மாலை வேளையிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி கூறி டெல்லி நோக்கி சென்னையில் ரயில் நிலையத்தில் இருந்து ஒருவன் பயணிக்க துவங்குகிறான்.

தவிச்ச வாய்க்கு 25 ரூபா பிஸ்லரி பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்போம் என நினைத்து ரயில் ஏறும் முன் பிளாட்பார கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றவன் அப்போது அருகில் இருந்த EB பாக்ஸில் ஒரு புத்தகத்தை காண்கிறான், வெளியே ஒரு சிகப்பு நிற ஸ்டிக்கர் ஓடிய நிலையில்.

அந்த ஸ்டிக்கரில் “ இந்த புத்தகத்தை வாசித்து விட்டு மீண்டும் வேறு ஏதேனும் ஒரு பொது இடத்தில் வைத்து விடவும். கபளீகரம் செய்து சொந்தமாக்க நினைக்க வேண்டாம். நேரம் இருப்பின் கதைப் புத்தகம் எடுத்து வாசிக்கவும். சில நேரம் உங்கள் கதை கூட இருக்கக் கூடும் “ என்ற தமிழில் எழுதப்பட்ட செய்தி கண்டு ஆச்சர்யத்துடன் அதை கையில் எடுத்து ரயில் ஏறுகிறான் அவன்.

அந்த கதைப் புத்தகத்தின் பெயர் “ வெள்ளைப் பொய்கள் “

அதில் உள்ள கதைகளில் நான்காவது கதை வாசிக்கும் போது அதிர்ச்சி அடைகிறான். அந்தக் கதை முழுமையாக அவனைப் பற்றியதாக இருக்கிறது. சுவராசியம் என்னவெனில் அந்த கதையிலும் அவன் சென்னையில் இருந்து நாக்பூர் செல்ல வேண்டி டிசம்பர் மாதம் டெல்லி செல்லும் ரயிலில் பயணிக்கிறான். ஆனால் அவன் செல்லும் வேலை உருப்படாது. ஒரு வாரம் கழித்து வெறும் கையோடு திரும்புவதாக கதை முடிகிறது.

அயற்சியில் அடுத்த கதை செல்ல மனமின்றி புத்தகத்தை மூடி வைத்து விடுகிறான். ஞாபகத்திற்க்காக புத்தகத்துடன் ஒரு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டு நாக்பூர் வந்ததும் இறங்கி நாக்பூர் ரயில் நிலையத்தில் ஒரு டெலிபோன் பூத் மீது இந்த கதைப் புத்தகத்தை வைத்து விட்டு அவன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறுகிறான்.

எவனோ ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஏதோ ஒரு பொருளை டெலிபோன் பூத் மேலே வைப்பதை தூர நின்று நாக்பூர் ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று தம் அடித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருந்த டெல்லி செல்லும் ஒரு தமிழ் ஆள் அதைத் தேடி அருகில் வந்து எடுத்து பார்க்க அதில் ஒரு சிகப்பு ஸ்டிக்கர் உடன் ஒரு கதைப் புத்தகம் இருப்பதை காண்கிறான்.

அந்த ஸ்டிக்கரில் “ இந்த புத்தகத்தை வாசித்து விட்டு மீண்டும் வேறு ஏதேனும் ஒரு பொது இடத்தில் வைத்து விடவும். கபளீகரம் செய்து சொந்தமாக்க வேண்டாம். நேரம் இருப்பின் கதைப் புத்தகம் எடுத்து வாசிக்கவும். சில நேரம் உங்கள் கதை கூட இருக்கக் கூடும் “ என்ற தமிழில் எழுதப்பட்ட செய்தி கண்டு ஆச்சர்யத்துடன் அதை கையில் எடுத்து ரயில் ஏறுகிறான் அவன்.

ஒ …..இதனால் தான் அந்த ஆள் டெலிபோன் பூத் மீது வைத்தானோ என்று எண்ணிக் கொண்டே அந்த கதைகளை வாசிக்கத் துவங்குகிறான்.

அதில் இருந்த கதைகளில் ஏழாவது கதை அவனுடைய வாழ்வை அப்படியே கூறுகிறது. அந்த கதையிலும் அவன் சென்னையில் இருந்து டெல்லி செல்வதாகவும் இனி இவன் வாழ்வில் நடக்கப் போகும் செய்திகளும் அந்த கதையில் வருகிறது. ஆச்சர்யத்துடன் வாசித்து விட்டு புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டி ஒரு செல்பி புகைப்படம் எடுத்து விட்டு கதையில் உள்ள பிரகாரம் நடந்தால் நன்றாக இருக்குமே என்ற சந்தோஷத்தில் உறங்கி மறுநாள் காலையில் டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு கடை அருகில் அந்த புத்தகத்தை வைத்து விட்டு வெளியேறுகிறான்.

பதினோரு கதைகளைக் கொண்ட அந்த சிறுகதைப் புத்தகம் இந்தியா முழுக்க சுற்றி பத்து தமிழ் ஆள் படித்து கடைசி கதைக்கான ஆள் கைக்கு அந்த புத்தகம் கிடைக்கும் போது அது கல்கத்தா விமான நிலையம் அடைந்திருந்தது.

சிகப்பு ஸ்டிக்கர் உடன் தமிழில் சிறு குறிப்பு எழுதப்பட்ட அந்த புத்தகம் ஈர்க்க கையில் எடுத்து வாசிக்கத் துவங்குகிறான் அந்த அமேரிக்கா செல்லும் தமிழ் ஆள்.

இருபது மணி நேர பிரயாணத்தில் கதைப் புத்தகத்தை தொடர்ச்சியாக வாசித்து அவர் கடைசி கதையை படிக்கும் போது அது அப்படியே அவர் வாழ்வை கூறுவது போல இருக்க அந்த கதையிலும் டிசம்பர் மாத இறுதியில் அவர் கல்கத்தாவில் இருந்து நியுயார்க் செல்கிறார். ஆனால் அந்த கதை முடிவு அவருக்கு அத்தனை விருப்பமில்லை.

காரணம் அந்த கதையில் அவர் நியுயார்க் சென்ற ஒரே வாரத்தில் தனது தந்தை இறந்து விட மீண்டும் சென்னை திரும்புவதாக முடிகிறது.

புத்தகத்தில் இருந்த கதைப் பிரகாரம் ஒரே வாரத்தில் அது சம்பவிக்கவும் செய்கிறது.

மீண்டும் விடுமுறைக் கூறி சென்னை திரும்புபவர் கையோடு அந்த கதைப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். எப்படியாவது இதை எழுதிய ஆசிரியரை காண வேண்டும் என்ற ஆவலுடன்.

இதே மன நிலையில் கதைப் புத்தகம் வாசித்த பதினோரு பேரும் ஆசிரியரை தேடி ஒரே நாளில் வருகிறார்கள் நாட்டின் வேறு வேறு இடத்தில் இருந்து.

ஏதோ ஒரு ஆர்வத்தில் அவர்கள் அனைவரும் புத்தகத்துடன் எடுத்த செல்பி புகைப்படத்தில் “ஆழ்வார்திருநகரி சீனு “ என்று எழுத்தாளர் பெயரை காட்டியதில் அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அடுத்த ஆழ்வார் திருநகரியை தேடி வருகின்றனர்.

சிறிய ஊர் என்பதால் யாரைத் தேடி ஊருக்குள் வந்தாலும் அவர்கள் ஓதுவார் மூர்த்தி நாட்டு மருந்துக் கடைக்குத் தான் அனுப்பப் படுவார்கள். அவர் தான் ஊருக்குள் இருக்கும் 85 வயதைத் தொட்ட அதர பழைய ஆள்.

ஒரே நாளில் தொடர்ச்சியாக ஒருவர் மாறி ஒருவர் என பதினோரு பேர் சீனு என்ற எழுத்தாளர் பெயரைக் கூறி தேடி வர ஆச்சர்யத்துடன் கடைக்காரர் “ எதற்கு தேடுகிறீர்கள் “ என்று கேட்க

“ ஒன்றுமில்லை சும்மா தான் “ என்று கூறிய ஒரே பதிலால் ஆச்சர்யம் அடைந்து

“ பத்து நிமிஷம் முன்னாடி தான் ஒரு ஆள் இதே கேள்வி கேட்டார், ஒரு மணி நேரம் முன்னாடி வேற ஒரு ஆள் கேட்டார். காலையில இன்னொரு ஆள் கேட்டார். அதுக்கு முன்னாடி இன்னொரு ஆள் கேட்டார். அதுக்கும் முன்னாடி இன்னொரு ஆள் கேட்டார். எல்லாருமே ஒண்ணுமில்ல சும்மாதான்ன்னு வேற சொல்லுறீங்க. அப்படி ஒரு எழுத்தாளர் ரொம்ப வருஷம் முன்னாடி இங்க இருந்தார். ஆமா, செத்துப் போன ஆளை, ஆளாளுக்கு எதுக்கு தேடுறீங்க, என்ன விஷயம், “ என்று கேட்க

அதிர்சியுடன், கேள்வி கேட்டவர் சுதாரித்து “அப்படியானால் பதினோரு கதைக்கான ஆட்களும் இன்று இந்த ஊரில் தான் இருக்கிறார்களா “ என்று யோசித்து ஊருக்குள் தேடிச் சென்று அக்ரஹார தெருக்களில் வித்தியாசமாக தெரியும் ஆட்களை தேடித் பிடித்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு “ ரெண்டாவது கதை என்னோட கதை, நாலாவது கதை என்னோட கதை ஏழாவது கதை என்னோட கதை என்று அனைவரும் அறிமுகம் செய்த பின் தாங்கள் தேடி வந்த ஆள் செத்து வருடம் ஆகி விட்டது என அறிந்து அதிர்ச்சி அடைந்து ஆனால் புத்தகம் வெளி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது மறுபதிப்பு அல்ல, இது தான் முதல் பதிப்பு என்ற வாதம் துவங்கி ஆளாளுக்கு ஏதேதோ யோசனைக் கூறி

கடைசியில் அமேரிக்கா சென்று திரும்பிய பதினோராவது கதைக்கான ஆள் கையில் இருந்த புத்தகத்தில் இருந்த சென்னை பதிப்பக முகவரியை குறித்துக் கொண்டு சென்னை நோக்கி செல்ல முடிவு செய்கின்றனர் அனைவரும்.

மறுநாள் சென்னை திருவல்லிகேணியில் கீதா பதிப்பகம் இருக்கும் தெருவின் வழியாக சென்று அந்த புத்தகத்தில் இருந்த பதிப்பக முகவரி அடைந்து இந்த புத்தகத்தைக் காட்ட

“ ஒ ………இவரா, இப்போ தான் வந்திட்டு போறார். “ வெள்ளைப் பொய்கள் –இரண்டாம் பாகம் தான் பிரிண்டிங் ஓடிக்கிட்டு இருக்கு. நாளைக்கு புக் ரெடி ஆகிரும் “ எனக் கூற,

அதிர்ச்சி அடைந்தவர்களாக “ அவரு அட்ரஸ் “ என கேட்க

“ அவர் அட்ரஸ் தெரியாது சார். நாங்க கேக்குறதில்ல. போன் நம்பரும் கிடையாது சார். கேட்டா, தேடவேண்டாம் நானே வந்து புக் வாங்கிக்கிறேன்னு சொல்லுவார். ஆனா பத்து பனிரெண்டு பேர் தேடி வருவாங்க. வந்தா பிரிண்ட் ஆனதும் இலவசமா கொடுங்க. என் நண்பர்கள் தான்னு சொல்லி இருக்கார். நீங்க தானா அது. ஏன் சார் நண்பர்கள்ன்னு சொன்னார் உங்களுக்கே அவர் நம்பர் தெரியாதா, என்கிட்டே கேக்குறீங்க “ என்றார் அந்த பதிப்பக ஆள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *