கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 10,986 
 

நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டேன். நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை ரயிலின் கூரையில் சீராக தாளம் போட்டுக்கொண்டிருந்தது.

வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மனது, மாலை நடந்த பள்ளியின் தமிழ் மன்றத்தின் ஆண்டு விழாவை நினைத்து அசை போட்டுக்கொண்டிருந்தது. அந்தக் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை அழைத்துவிடுவார்கள். இந்த முறை, என்னை விழாவிற்குத் தலைமையேற்று வள்ளுவரின் விருந்தோம்பலைப் பற்றி சிறப்புரை ஆற்றும்படி கேட்டிருந்தார்கள்.

பொதுவாகவே எளிமையான வார்த்தைகளில் சொல்லும் போது எந்தக் கருத்துமே சரியாகப் போய் சேரும். வள்ளுவரின் எந்தக் குறளையுமே அப்படியே திரும்ப ஒப்புவிக்காமல் அதன் உட்கருத்தை மட்டுமே சில நடைமுறை எடுத்து காட்டுகளோடு பேசினேன். விருந்தோம்பல் என்பது எப்படி நம் அன்றாட வாழ்வோடு ஒருங்கிணைந்திருக்கிறது , எப்படி நம் உறவுகளை மேம்படுத்துகிறது, எதனால் தமிழர்களின் சமுதாய வாழ்க்கையில் அது ஒரு உன்னதமான பண்பாடாக போற்றப்படுகிறது என்று பேசி முடிக்கும் போது பேச்சுக்கு நன்றாகவே வரவேற்பிருந்தது. பின்னோக்கி பார்க்கையில் எனக்கும் திருப்தியாகவே இருந்தது.

அந்த எண்ண ஓட்டத்தை உடைப்பது போல், பரபரப்பாக ஒரு குடும்பம் ரயிலில் ஏறியது. ஒரு கணவன், மனைவி, ஒரு சிறு பெண், ஒரு சிறு பையன் மற்றும் ஒரு வயதான பெண் மூட்டை முடிச்சுகளோடு உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். அந்த கணவன், சிறுவன் மற்றும் வயதான பெண் மூவரும் மொட்டை அடித்திருந்தார்கள். சந்தனத்தின் பிசிறுகள் கூட இன்னும் முழுமையாக உதிரவில்லை. அவர்கள் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் கிராமத்து வாசனை முழுமையாகத் தெரிந்தது.

கொண்டுவந்த மூட்டைகளைக் கூட ஒழுங்கீனமாக செல்லும் பாதையிலேயே பரப்பியிருந்தார்கள். ரயில் கிளம்பும் நேரத்தில் அந்தச் சிறுவன் ஒடிவந்து அந்தப் பைகளின் மேல் ஏறி என் காலை மிதித்து விட்டு ஜன்னலோரம் பாய்ந்து சென்று உட்கார்ந்தான். என் காலை மிதித்ததையோ என் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையோ அவன் கொஞ்சம் கூட கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் அம்மா மட்டும், ” ஏய், கழுதை ! எருமை மாடு ! எப்படி பேக்கை மிதிச்கிட்டு போறான் பாரு” என்றார். மற்ற மூன்று பேரும் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஏனோ எனக்கு எரிச்சலாக வந்தது. கையில் இருந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன். அந்த பெண்ணும், கணவனும் உரத்த குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். அந்த வயதான பெண்ணோ தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார். மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை.

பேசாமல் பையில் இருந்து பெப்சி பாட்டிலையும் சிப்ஸ் பாக்கட்டையும் எடுத்தேன். வெளியே வேடிக்கை பார்த்தவாறே சிப்ஸையும் பெப்சியையும் சாப்பிடத் தொடங்கினேன். அந்தப் பையன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் நேரடியாக சாப்பிடச் சொல்லிக் கேட்பதோ, பகிர்ந்து கொள்வதோ நாகரிகம் என்று எனக்குப் படவில்லை. ஒரு வேளை அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால்……

பெப்சியின் சுறுசுறு வென்ற உணர்வும், இனிப்பு கலந்த சுவையும் தொண்டை வரை இனித்தது. என் பெப்சி பாட்டிலைப் பார்த்தோ என்னவோ அந்த பையன் “ அம்மா அந்த ஜூஸ் எங்கம்மா” என்றபடியே கீழே இருந்த பைகளில் தேடத்தொடங்கினான். “அந்த பையில பாருடா … அதில்லடா இது … சனியன் கேட்குறானா பாரு” என்று திட்டியபடியே அந்த அம்மா கீழே கிடந்த ஒரு பையில் இருந்து ஒரு ஜூஸ் பாட்டிலை எடுத்தார்கள். அதை பையில் இருந்து எடுப்பதற்குள் அந்த சிறுவன் பிடுங்கிக் கொண்டான்.

அந்த சிறுமி கத்தினாள் “அம்மா ! அவ்வளவையும் அவனே குடிக்க போறான்மா” டேய் எருமை மாடு ! அக்காவுக்கு குடுத்து சாப்பிடுறா ! என்று அந்த பெண் கத்தினார். “எல்லாத்துக்கும் சேர்த்துதான்டா வாங்கிருக்கு” என்று அந்த அப்பா அதட்டல் போட்டார். “என்னக்கி சொல்றதை கேட்டான் … புடுங்கித் தின்னுட்டே இருப்பான்” வயதான அம்மா தனக்குத் தானே புலம்பியது.

அந்த சின்னப் பெண் கோவமான முகத்தோடு அந்த அம்மாவின் கையை தட்டி விட்டாள். “டேய் ! ஒரு வாய் குடிச்சிட்டு எல்லாத்துக்கும் குடுடா” என்ற அப்பாவின் அதட்டலை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் மூடியைத் திறப்பதிலேயே குறியாக இருந்தான். அந்தப் பாட்டிலின் மூடி சற்று இருக்கமாக இருந்ததால் அவனால் திறக்க முடியவில்லை. “குடுடா நான் திறந்து தாரேன்” என்று மற்றவர்கள் கேட்ட போதும் பாட்டிலைத் தராமலே மீண்டும் மீண்டும் பல்லால் கடித்து முயற்சி செய்து கொண்டே இருந்தான்.

அந்த சின்ன பாட்டிலில் இருப்பதை ஐந்து பேரும் எப்படி பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். அந்தப் பையனே குடித்து விடுவானா? அம்மா பிடுங்கி பெண்ணுக்கும் கொஞ்சம் கொடுப்பாரா ? அப்பா ரெண்டு அடி கொடுத்து பாட்டிலை பிடுங்கப் போகிறாரா ? அந்த வயதான பெண்ணுக்கு ஏதேனும் மிச்சம் மீதம் கிடைக்குமா ? என்றெல்லாம் நான் யோசித்துக்கொண்டே இருக்கையில், அந்த மூடி திறந்து விட்டது. நான் சற்று உஷாராகவே இருந்தேன். ஒரு வேளை பாட்டிலை பிடுங்குறேன்னு சொல்லி மேலே கொட்டிவிட்டால் என்ன செய்ய ?

அந்தப் பையன் ஜன்னல் பக்கம் திரும்பி, ஒளிந்து கொண்டு, பாட்டிலின் வாய்ப்புறத்தை தன் சட்டையாலேயே துடைத்தான். அளவு சரியாக இருக்கிறதா என்பது போல் அந்தப் பாட்டிலைத் தூக்கிப் பார்த்தான். பிறகு என்னையே பார்த்தான். பாட்டிலை என் பக்கம் நீட்டி, “அண்ணா…..சாப்பிடுறிங்களாண்ணா” என்றான்.

சற்றும் எதிர்பார்க்காத நான் “ இல்லைப்பா … வேணான்னேன்.

அந்தப் பையன் மறுபடியும் “இல்லங்கண்ணா …. கொஞ்சம் சாப்பிடுங்கண்ணா “… என்றான். அருகில் இருந்த வயதான பெண்ணும் கூட “சாப்பிடுங்கப்பா ” என்றார் என்னை நேரடியாகப் பார்க்காமல்.

மூன்றாம் முறையாக அந்தப் பையன் பாட்டிலை நீட்டி “கொஞ்சூண்டு குடிங்கண்ணா” என்றான் மீண்டும். அந்த குடும்பத்தின் மற்றவர்களும் கூட அதையே ஆமோதிப்பது போல என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் – ஒரு நட்புடன்.

இல்லைப்பா … நீ சாப்பிடு …. நான் இப்பத்தானே சாப்பிட்டேன்னு சொல்லி ஜன்னல் பக்கம் திரும்பி வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றது. மழை முழுவதுமாக விட்டு விட்டது. இரவானதால் ஊரடங்கிப்போய் விட்டது. வெளியே பூரணமான நிசப்தம் நிலவியது. ஆனால் மனது மட்டும் அமைதியை இழந்து சலனப்பட்டிருந்தது .

விருந்தோம்பல் என்பது என்ன ? வள்ளூவரின் பத்து குறள்களையும் படித்து, புரிந்து மேடையில் ஒரு மணி நேரம் பேசி கை தட்டு வாங்குவதுதானா ? இது ஒரு உயர்ந்த தர்மம் என்று பேசுவதும், இது ஒரு உன்னத பண்பாடு என்று உணர்ந்து கொள்வதும் மட்டுந்தானா ?

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் நேரடியாக சாப்பிடச் சொல்லிக் கேட்பது நாகரிகமா இல்லையா என்று கூட அந்தக் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கவில்லை. வள்ளுவரின் விருந்தோம்பலை படித்து, புரிந்து, அதை செயல் படுத்தியிருப்பார்கள் என்பதும் சாத்தியமாகத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களுடைய செய்கையில், ஒரு உள்ளார்த்தமான அன்பும், வெள்ளந்தியான, பொய்யின் கலப்பில்லாத மேம்பட்ட விருந்தோம்பலும் இருந்ததை மட்டும் என்னால் வெளிப்படையாக உணர முடிந்தது. அன்பு செலுத்த அறிமுகம் தேவையா என்ன ?.

தலைமுறை தலைமுறையாய் விருந்தோம்பல் என்ற பண்பாட்டை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருப்பது அவர்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்பதை அறியாமலே, தங்களுக்குள் உரத்த குரலில் பேசிக்கொண்டும், திட்டிக் கொண்டும், கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை பிரிக்கத் தொடங்கினார்கள்

சற்று முன், நானே தனியாகக் குடித்த பெப்சி தொண்டைவரை கசந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *