விதையின்றி விருட்ஷம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 17,784 
 

அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது…

அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக…. ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி… கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது…

பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி… சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம். எங்கும் எதிலும் ஒரு சுத்தம், ஒழுக்கம் காணப்பட்டது. சுவரின் ஒரு பக்கம் உள்ளடங்கி ஒரு கப்போர்ட்…. அதில் இருவருக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள்….

அந்த அறையை ஒட்டி ஒரு குளியல் மற்றும் கழிப்பறை.. குளியல் அறையின் சுவரில் கைப் பிடித்து நடக்க கம்பிகள் (Rail ) பொருத்தப்பட்டிருந்தது.. நவீன கழிப்பறையில் அமர்வதற்கும் எழுந்து கொள்வதற்கும் வசதியாக பிடிமானங்கள் இருந்தது.. ஒரு பட்டன் அழுத்தினால் தானே கழுவிவிடும் தானியங்கி வசதி இருந்தது…(எதைக் கொண்டு கழுவுகிறார்கள் என்பது சற்று குழப்பமாக இருந்தது) குழாய்களுக்குத் திருகி மூடுவதுபோல் அல்லாமல் ஒரு மெல்லிய பொத்தான்(soft button ) இருந்தது. ஒருமுறை அழுத்தினால் மெலிதாக சிறிது தண்ணீர் போன்ற திரவம் வரும் – மறுமுறை அழுத்தினால் நின்றுவிடும்…. சுடுநீர் அதிகம் சூடாகாமல் மிதமான சூடு வருமாறும் அமைக்கப் பட்டிருந்தது…. நீரின் அளவு மி.லி.யில் இருந்தது…

அந்த அறையிலிருந்து வெளியே செல்ல, அடுத்து ஒரு சிறிய வரவேற்பறை, . ஒரு வெளிநோக்கும் மாடம்…. வரவேற்பு அறையில் ஒரு சிறிய மேஜை, இரண்டு நாற்காலிகள். அவ்வளவுதான்…வேறு எந்தவித ஆடம்பரப் பொருட்களோ, அலங்காரப் பொருட்களோ அங்கு இல்லை.. குறிப்பாக சமையல் அறை இல்லை.

திரை மலர்ந்து வணக்கம் கூற, அவர் கண்விழிக்கும் முன்னர் தன் உள்ளங்கைகளைத் தேய்த்து விரித்துப் பார்த்துக் கொண்டார். பிறகு சுற்றுமுற்றும் பார்த்தார். அருகிலே அடுத்த கட்டிலில் அவர் மனைவி கண் விழித்து படுத்திருந்தார்…..

“எப்பொழுது எழுந்தாய்…?”

“எங்கே தூக்கம் வருகிறது, வெகு நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்”

“காலை வணக்கம் கூறிவிட்டார்கள் அல்லவா… இனி நாம் எழுந்துகொள்ளலாம்”

அவர்கள் இருவருக்கும் வயது எண்பதைத் தாண்டியதுபோல் தோற்றம் இருந்தது…. ஒரு கால கட்டத்தில் தன் சொத்துக்களை அரசாங்கமே எடுத்துக்கொண்டு இந்த இருப்பிடத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தது…. அவரது இளமைக் காலத்தில் சம்பாதிக்கவும், சொத்து குவிக்கவும் நிறைய வசதிகள் இருந்தது… அந்த யுத்ததுக்கும், புரட்சிக்கும் பின் இந்தச் சலுகைகள் பறிக்கப்பட்டிருந்தது … அதைப் பற்றிப் பிறகு…

“நீ முதலில் காலைக் கடன்களை முடி….”

மெல்ல எழுந்து நடக்க முயன்றவளை ஒரு குரல் “வாக்கர் எடுத்துக் கொள்ளவும்” என எச்சரிக்க … ‘இது ஒரு சனியன்…’ என்று முணுமுணுத்துக் கொண்டு.. வாக்கருடன் சென்று குளியல் அறைக் கதவைத் தொட்டவுடன் திறந்து கொண்டது… உள்ளே சென்று கதவைத் தொட்டவுடன் மூடிக்கொண்டது… உள்ளே ஆள் இருப்பதற்கு அறிகுறியாக கதவில் மெல்லிய நீல ஒளி பரவியிருந்தது….
****

இருவரும் கட்டிலில் அமர்ந்து ஒருவரை ஒருவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்… காலைச் சிற்றுண்டிக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தது…. அவர் அருகில் இருந்த மேஜைமேல் இருந்த தொடுதிரை கணினியைக் கையில் எடுத்தார்…

“திரும்பவும் ஏதாவது கவிதை, கட்டுரை என்று ஆரம்பிக்காதீர்கள்…. உங்கள் மீது தீவிர கண்காணிப்பு உள்ளது…” என்று மனைவி எச்சரிக்க …

“அதெல்லாம் இல்லை … செய்தி பார்க்கப் போகிறேன்…”

“நானும் செய்தி பார்க்க வேண்டும்….”

அவர் தொடு திரையில் எதோ தேட முன் சுவர் பெரிய திரையில் செய்திகள் ஓடின…

“இந்தியாவில் 12% இடங்கள் நச்சுக் கழிவிலிருந்து முழுவதுமாக மீட்பு .. உலக நாடுகள் பாராட்டு.. …”

“பிராணவாயு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது….”

“மணலைப் பிளந்து பிராண வாயு தயாரிக்கும் புதிய முறை கண்டுபிடிப்பு .. ”

திரும்பத் திரும்ப இவர்களுக்கு இதேதான் என சலித்துக் கொண்டவரின் கவனத்தை வாயில் மணி ஓசை கலைக்க, முன்னே இருந்த பெரிய திரையின் ஒரு பகுதியில் வாசலில் ஒருவர் நிற்பது தெரிந்தது…

“சாப்பாடு….” என்றாள் மனைவி…

தொடு திரையில் ஒரு பொத்தானை அழுத்த படுக்கை அறைக் கண்ணாடிக் கதவு மூடிய பிறகு வாயில் கதவு திறந்தது…. உள்ளே நுழைந்த ரோபோ, மேஜையின் மேல் ஒரு வாரத்திற்கான உணவு வகைகளை வைத்து விட்டுத் திரும்பிச் சென்றது…. வாயில் கதவு மூடியபின் …. ‘இன்னும் பதினைந்து நிமிடம் படுக்கைஅறைக் கதவைத் திறக்க வேண்டாம்’ என எச்சரிக்கை வந்தது….

“ஏன் திறந்தால் என்னவாகும்” என்ற மனைவிக்கு

“வாயில் கதவு திறந்ததால் அறையில் உள்ள பிராணவாயு அளவு குறைந்திருக்கும், அது சரியாக சிறிது நேரம் பிடிக்கும்… நாம் திறக்க முயன்றாலும் திறக்க முடியாது….”

“நம்மை ஏன் இப்படி வைத்திருகிறார்கள் …?”

“சும்மா இரு…. இங்கே எதுவும் பேசாதே… வா சாப்பிடலாம்..”

மெல்ல அவர்கள் வாக்கரை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றனர்… மேஜை மேல் வைத்திருந்த பெட்டியில் ஒரு வாரத்திற்கான உணவு இருந்தது.. இருவருக்கும் தனித் தனிப் பெட்டி…. வேறு வேறு வகை என்பதை நிறத்தை வைத்து உணரலாம்… அந்தப் பெட்டி ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வோரு பகுதியும் மூன்றாகப் பிரிக்கப் பட்டிருந்தது… முதல் பிரிவின் முதல் பகுதியில் அவர் கை கட்டைவிரலை வைக்க, அது திறந்து கொண்டது… உள்ளிருந்த சில வில்லைகள் சிறு குப்பி நீர் எடுத்து வாயில் போட்டுக்கொண்டவர், தன் மனதில் தோன்றிய பழைய நினைவுகளுக்குச் சென்றார்….

அவரின் அந்தக் கால நினைவுகளில் காலை உணவாக இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என பல வகை உணவுடன் தொட்டுக்கொள்ள அமைந்த வித வித சட்னி, சாம்பார், கொத்சு, குருமா, என பலவித உணவு வகைகள் வந்து போயின…. அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று அவரால் சரியாக நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை…. மெல்ல மனைவி பக்கம் பார்க்க அவள் தனது பகுதியான உணவு வில்லையில் மூழ்கி சுவைத்துக் கொண்டிருந்தாள் …. அவருக்குத் தெரியும் அவள் மனதில் எந்த விதமான சிந்தனையும் வராது என்று…. அவள் பழைய நினைவுகள் அழிக்கப் பட்டிருந்தது…. இந்த வில்லைகள்தான் தன் உயிர் காக்கும் உணவு என்று நம்பி இருந்தாள்… அவள் உயிருடன் இருப்பது, தன் கணவனின் சிறப்புத் தகுதியால் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை… மெல்ல அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்…

சிவராமன் (அதுதான் அவர் பெயர்) முன்னாளில் ஒரு தலை சிறந்த இயற்கை விஞ்ஞானி… நீர் நிலைகள் காப்பது, இயற்கை உரங்கள், மரங்கள் வளர்ப்பது போன்ற பலவிஷயங்களில், தீவிர ஆராய்ச்சி மற்றும் செயல் முறையிலும் வெற்றி கண்டவர், விவசாயமும் செய்தவர்…. உலகில் இந்த அறிவும் ஆராய்ச்சித் திறனும் பெற்ற வெகு சிலரில் ஒருவர்…… தன் மூளையின் ஆழத்தில் பதிந்துள்ள அறிவினை கொஞ்சம் கொஞ்சமாக இன்றைய அரசாங்கம் எடுத்துக்கொண்டபின் தன் தேவை தீர்ந்து விடும்… அதன் பின் தனக்கு முடிவு வந்துவிடும் என்று அறிவார்.. அவர்கள் செய்யும் ஆராய்ச்சி வெற்றி அடைந்து தாவரங்களை வளரவைத்து விட்டால் இவர் ஆயுளை முடித்து விடுவார்கள்…….

தனது தோற்றம் எண்பதைத் தாண்டியதுபோல் தோன்றினாலும், உண்மையில் தம் வயது அதைவிட மிக அதிகம் இருக்கும் என்று அவருக்குத் தெரியும்… தன் மனைவியையும் வாழ வைத்திருப்பதன் உள்நோக்கம், தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும், தன்னிடம் உள்ள அந்த அரிய தகவலுக்காக மட்டுமே என்றும் அவருக்குத் தெரியும்…. இந்தக் காலக்கட்டத்தில் ஒருவருடைய வயது, அவருடைய உண்மையான பயன்பாட்டைப் பொருத்தே என்றும் அவருக்குத் தெரியும்…. இவை எதையும் அறியாத மனைவி பாக்கியவதி என்று எண்ணினார்….

அந்த அறையை ஒருமுறை கண்ணால் சுற்றிப் பார்த்தார் …. எங்கும் தான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்தார்…. எந்தச் சலனமும் இல்லாத தன் மனைவியைப் பார்த்தார்….. என்ன நினைத்துக்கொண்டாரோ

“வா இங்கே….. உனக்கு ஒன்று காண்பிக்கிறேன்….”

மெல்ல அவளை அழைத்துக்கொண்டு மாடத்திற்குச் சென்றார்…. மாடத்தில் கண்காணிப்பு கருவி இல்லை என்று அவர் அறிவார்… மாடத்தின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்த ஒன்றை எடுத்து அவளுக்கு காண்பிக்க, அதைப் பார்த்தவள் பதறி

“என்னங்க இது… என்னங்க இது…. ” என்றாள்

அங்கே ஒரு செடி, இரண்டு இலைகள் மலர்ந்து, மூன்றாவது மலரக் காத்திருந்தது….

“விதையின்றி தோன்றிய முதல் விருட்ஷம் ….” என்றார்…..

“எப்படிங்க…. எதுக்குங்க…. உங்களுக்கு ஏங்க இந்த வீண் வம்பு…..” அதிர்ச்சியில் மெல்ல அவர்மேல் துவண்டுவிழுந்தாள் …. மெல்லத் தாங்கிப் பிடித்தவர், மாடத்தின் கண்ணாடித் தடுப்பு வழியாக பார்க்க வெளியே அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக உயர்ந்த கட்டிடங்கள்….. மேகங்கள் இல்லை… நீலமும் இல்லை…. ஒருவித வெறுமை இருந்தது….. கட்டிடங்களுக்கு இடையே பரந்த மணல்வெளி போல் தெரிந்தது…. தான் 208-வது மாடியில் இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை….

அந்த DRONE சத்தமின்றி மாடத்தின் கண்ணாடி முன் கடந்து சென்றதை உணர்ந்தார் என்றே தோன்றியது …..

அவருக்கு இனிமேல் நடக்கப்போவது நல்லதல்ல என்று அறிவார்……. அவரைப் பொருத்தவரை….

Print Friendly, PDF & Email

2 thoughts on “விதையின்றி விருட்ஷம்

  1. சுஜாதா மரபில் ஒரு அழகான கதை..பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *