கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 39,161 
 

புவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்120°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2% என்ற ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இருநூறு வகையான பறவை இனங்கள், கொசு, கரப்பான் பூச்சி, உள்ளிட்ட பல வகையான பூச்சியினங்கள், ஊர்வன, கணக்கிலடங்கா தாவர இனங்கள், அத்தனையும் வெப்பத்தில் பொசுங்கி, அடியோடு பூண்டற்றுப் போய்விட்டன. பரவலாக ரொம்ப வயதானவர்களும், இளம் சிசுக்களும் கூட டீஹைட்ரேஷனில் மடிந்துக் கொண்டிருந்தார்கள். தண்ணீர்…?, அறுநூறு அடிக்குக் கீழே, சொற்ப அளவில். உலகெங்கும்கடல் நீரை வடித்து குடித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் பரந்து தண்ணீர், காற்று, வியாபாரங்கள் நடக்கின்றன. உணவு?,ஒரு கிண்ணம் இறைச்சிக்கு ஆலாய் பறக்கும் மனிதக் கூட்டங்கள். வேறு வழியில்லை. இறைச்சியே பிரதான உணவு. எப்பவாவது பெய்யும் சொற்ப மழையில் புல், பூண்டுகள், சிலவகை மரங்கள் சிரமத்துடன் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அதீத அடர்த்தியில் மக்கள் கூட்டம். மனிதசக்தியும், சூரிய சக்தியும், சொற்பமாய் காற்றாலை சக்தியும்தான் இருக்கும் ஆதார சக்திகள்.. ஏற்படும் ஆபத்தான தொடர் விளைவுகளினால் அணுசக்தியை உலகமெங்கும் புறந்தள்ளி வைத்து விட்டார்கள், அல்லது சொற்ப அளவில் பயன்படுத்துகிறார்கள். நரகம் என்பது எங்கேயோ பரலோகத்தில் இல்லை. இன்றைக்கு நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த உலகம்தான் நரகம். இறப்புதான் சொர்கம், என்று மதவாதிகள் நொந்துபோய் புதிய சிந்தனைகளை மக்களிடம் போதித்து மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருத்தரும் முக்கிய காரணியான மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி பேசவில்லை.

உயிரினங்கள் நரக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த இந்த காலகட்டத்தில்தான், ஒரு மாலைப் பொழுதில் நாங்கள் கோளரங்கத்தில் முதன் முதலாக அதைப் பார்த்தோம். வானத்தில் வடமேற்கு திசையில் ஒரு தீர்வு போல அது முளைத்திருந்தது. டெலஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடிந்தது. புரபஸர் ஆதித்யா சார்தான் எங்களுக்குக் காட்டினார். பளீரென்று இல்லாமல் தீற்றல் மாதிரி ஒரு வெளிச்சம். அது என்னவென்று ஒருத்தருக்கும் தெரியவில்லை. “இன்னும் ஆழ்ந்து ஸ்டடி பண்ணவேண்டியிருக்குப்பா” என்றார் மதன் சார். நான் இங்கே நிர்வாகத்துறையில் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர். ”அது அநேகமாக ஹெர்ம்ஸ் அல்லது ஐகாரஸ் குறுங்கோளாக இருக்கக் கூடும். எதுவாயிருந்தாலும் அது இப்போது பூமியை நோக்கித்தான் வந்துக் கொண்டிருக்கிறது. ”— என்று ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார் ரீடர்—சூர்யா..

அன்றிலிருந்து மூன்றாம் நாள் இரவு செய்தியில் நம்முடைய ஐ.எஸ்.ஆர்.ஓ.வும், நாசாவும், அதுபற்றிய அறிக்கையை வெளியிட்டு இருந்தன. அதன்படி வடமேற்கில் கண்களுக்குத் தெரியாத, டெலஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக் கூடியதாக பிரகாசிக்கும் அந்த வெளிச்சத் தீற்றல், `ஐகாரஸ்’-என்ற குறுங்கோள்தான் என்று உறுதிப் படுத்தினார்கள். சீனா அதை வழிமொழிந்தது.அது என்றைக்கு பூமிக்குமிக நெருக்கமாக வரும் என்று விஞ்ஞானிகள் கணித்து சொல்லி வைத்திருந்தார்களோ அதே நாளில்தான் இதோ இப்போது வந்து கொண்டிருக்கிறது. அன்றிலிருந்தே நாட்டுக்கு நாடு விஞ்ஞானிகள் மட்டத்தில் ஒருவிதமான பயத்தோடு செய்திகள், அனுமானங்கள், கருத்துருக்கள், பரிமாற்றங்கள் என்று நடக்க ஆரம்பித்தன. விஞ்ஞானிகள் அதன் போக்கை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் கோளரங்கத்திலும் இரவில் ஒரு கும்பல் ஆய்வு செய்துக் கொண்டுதான் இருக்கிறது.

எல்லா ஊடகங்களும் இது பற்றின செய்தியில் மயிர் கூச்செரியும் படியாக கூட இரண்டு பிட்டுகளை சேர்த்துப் போட்டு பரபரப்பாக்கி, கணிசமான அளவு தன் பத்திரிகைகளை விற்று காசு பார்க்க ஆரம்பித்தார்கள். விளைவு..? தினசரி மாலை நேரங்களில் மக்கள் ஐகாரஸைப் பார்க்க சாரி சாரியாக அப்சர்வேட்டரிகளுக்கும், கோளரங்கங்களுக்கும் படையெடுக்க ஆரம்பித்தார்கள். டி.வி.யில் ஐகாரஸின் இமேஜை காட்டி விலாவாரியாக பேசினார்கள். “ தோழர்களே! ஒரு காலத்தில் இது போன்ற குறுங்கோள் ஒன்று பூமியின் மீது மோதியதால்தான் உலகம் ஒரு தடவை முழுமையாக அழிந்து மீண்டு எழுந்தது. அந்த நிகழ்வில்தான் டைனோசரஸ் என்ற இனம் முழுமையாக அழிந்து விட்டது. இப்போதும் அது போன்ற ஒரு குறுங்கோள்தான் நம் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.”—டி.வி.செய்தியில் இதைக் கேட்டதில் எல்லோரிடமும் கிளர்ந்த பீதியில் மக்கள் அதுபற்றிய சந்தேகங்களை நிறைய கேட்டுக் கேட்டு மனதில் பயத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்கள். சற்று வயதானவர்கள்

“பகவானே! பட்டினியா சாவறதை விட இந்த நரகத்தில இருந்து ஒரேயடியா எங்களைக் கொண்டுபோயிடு. ”— என்று வேண்டிக் கொண்டார்கள்.

“ஏன் சார்! இதனால உலகம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே?” “நோ சான்ஸ். நிச்சயம் அப்படி எதுவும் நடக்காது. பூமியிலிருந்து வெகு தொலைவிலேயே நாம்உணராமலேயே அது கடந்து போய்விடும். அதுதான் ஐகாரஸின் பாதை. அது எப்போதும் அதன் பாதையில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இது தேவையில்லாத அச்சம்.” —என்று அரசும், வானியல் ஆராய்ச்சியாளர்களும் விளக்கம் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

பத்திரிகைகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஐகாரஸ் பற்றிய விதவிதமான தகவல்களை திரட்டி பரப்ப, வல்லுனர்களின் பேட்டிகள் ஒருபக்கம், மக்களிடம் மைக்கைக் கொடுத்து அவர்களின் பேச்சுகள் ஒருபக்கம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் ஐகாரஸ்ஸினால் பூமிக்கு ஆபத்து அறவே இல்லையென்று எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்க, ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் சிலர் ஆதாரம் இன்றி தத்தம் அனுபவ அறிவால் இந்த தடவை ஐகாரஸ் குறுங்கோள் நம் பூமிமேல் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலகம் முழுக்க இப்படி முன்னுக்குப் பின் முரணாக வரும் தகவல்களால் மக்கள் குழம்பி நிற்க,

”ஐகாரஸினால் பூமிக்கு எந்த ஆபத்துமில்லை. வதந்திகளையும், யூகங்களையும், பரப்புபவர்கள் தண்டிக்கப் படுவார்கள்.”—என்று அரசு தினந்தோரும் அறிக்கை விட்டு எச்சரித்துக் கொண்டிருந்தது.. ஆயினும் அதை நம்பாமல் எல்லா எதிர்கட்சிகளும் ஐகாரஸ் ஆபத்து நெருங்கி வரும் இந்த நிமிஷம் வரைக்கும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டத்தை அறிவித்தன. இதைப் பற்றி அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மைய அரசிடம்தான் உள்ளது என்று கை காட்டிவிட்டு, அதைப் பற்றியெல்லாம் எவ்வித உறுத்தலும் இன்றி ஊழலில் சுருட்டிய பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் திருட்டுத்தனமாய் போட்டு வைக்கும் அரசியல் தலைவர்களும், தங்கக் கட்டிகளாக மாற்றி ஒளித்து வைத்திருக்கும் அரசு அதிகாரிகளும், திருடர்களும், இந்த நிமிஷம் வரையிலும் தொடர்ந்து மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்க /ஏமாற்றிக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஒரு வார்த்தை, `யாருமே அனுபவிக்கார் பாவிகாள் இந்தப் பணம்.’

அடுத்த வாரக் கடைசியில் தொலைநோக்கியின் பார்வையில் ஐகாரஸ் முன்பிருந்த இடத்திலிருந்து நாலடி தெற்காக இடம் பெயர்ந்திருந்தது. .

“ ஏம்பா! ஐகாரஸ் பத்தி `காலக்கணக்கு மலர்’ ல ஜோஸ்யம் கணிச்சி போட்ருக்கான் பார்த்தியா?.” “என்னவாம்?.” “ ஐகாரஸ் முளைச்சிருக்கிறது நாட்டுக்கு நல்லதில்லை, கெடுதியாம். கிருத்திகை, பரணி, ரோகிணி,ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, ஆக எட்டு நட்சத்திரங்களுக்கும் ரொம்ப கெட்ட நேரமாம். கண்டமாம். மத்தவாளுக்கு சின்னச் சின்ன உடல் நலி இருக்குமாம். என் பையன் மகம்யா. அதான் கவலையா இருக்கு. கடும் வறட்சியில தண்ணி பஞ்சம் வேற இருக்குமாமே அய்யோ பகவானே!.”

“அடத்தூ! இப்ப என்ன எதேஷ்டமா தண்ணி கொட்டி ஜனங்க மிதக்கறாங்களா என்ன?. இதை ஒருஜோஸ்யம்னு சொல்ல வந்துட்டான் பார்.”

இப்படி ஜோஸ்யங்களும், ஹேஸ்யங்களும், சித்தாந்தங்களும், நம்பிக்கைகளும், மக்களை பலவாறாய் குழப்பிக் கொண்டிருக்கும் போது, ஐகாரஸ் தோன்றிய பின் மூன்றாவது வார கடைசியில் ஒரு நாள் அந்த பேரிடி இறங்கியது. மழை, புயல், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவு விஷயங்களில் மனிதர்களின் அனுமானங்கள் பல சந்தர்ப்பங்களில் தோற்றுப் போயிருக்கின்றன என்பதற்கு வரலாறு இருக்கிறது. இன்று அதிகாலையிலேயே பக்கத்து வீட்டு ரஹீம்பாய் பயத்தில் முகம் வெளிறிப் போய் கத்திக் கொண்டே ஓடி வந்தார்.

“ சார்…!..சார்!..போச்சு…போச்சு…ஐகாரஸ் மோதப்போவுதாம். விஞ்ஞானிகள்லாம் கை விரிச்சிட்டாங்க சார்.” ——- அப்போது வெளியே ஒரே கூக்குரல்களாக இருந்தன. உள்ளே திக்கென்று அடைத்தது. நான் செய்தி சேனலுக்காக டி.வி.யிடம் ஓடினேன்.

திரையில் ஐகாரஸ் குறுங்கோள் பற்றிய விஷயங்கள் நம் கைமீறி போய்விட்டன என்று விஞ்ஞானிகள் எல்லா சேனல்களிலும் அலறிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகி இருந்தது. உலகெங்கும் செய்திகள் தீபோல பற்றிக் கொண்டு கிடுகிடுவென்று பரவ ஆரம்பித்தன. இது வரைக்கும் அரசுகள் சொன்னதெல்லாம் பொய். விஞ்ஞானிகளின் அனுமானங்கள் அத்தனையும் தோற்றுப் போய்விட்டன. எப்படியாச்சி?. விஞ்ஞானிகள் அவ்வளவு முட்டாள்களா?. தன் கதியில்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது?. திடீரென்று அதன் பாதை மாறியிருந்ததை ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் விஞ்ஞானி டாக்டர்.ஆத்ரேயனும், நாசாவின் டாக்டர் .அர்ஷித் சோப்ராவும்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்து உறுதி செய்திருக்கிறார்கள். ஏதோ ஒரு பெயர் தெரியாத விண்கல்தான் வந்து மோதி அதன் பாதையை மாற்றியிருக்க வேண்டுமாம்.

இந்தளவுக்கு பாதைமாற்றம் ஏற்பட்டதற்கு எப்படியும் மோதிய விண்கல் குறைந்தது பத்தாயிரம் டன்னுக்கு மேல் எடையுள்ளதாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மட்டத்தில் கணித்திருந்தார்கள். த்தூ! உலகமேகதிகலங்கி நிற்கும் இந்த நேரத்தில் யாருக்கு வேண்டும் எங்களை காப்பாற்றாத உங்களின் கணிப்புகள்?. உலகம் பூராவும் கொந்தளிப்புகள் ஆரம்பமாகி விட்டன. இன்றைக்கு மதியம் திரையில் ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் தகவலறிக்கையாக தலைமை விஞ்ஞானி சூர்யா பேசினார்.

“ தோழர்களே! ஐகாரஸினால் வரக்கூடியபேராபத்தைத் தடுக்க உலகவிஞ்ஞானிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன. இன்றிலிருந்து பதினைந்தாம் நாள் காலை பதினோறு மணிக்கு ஐகாரஸும், பூமியும் ஒரே புள்ளியில் சந்திக்கப் போகின்றன, இனி தடுத்து நிறுத்த முடியாது. மிகப் பெரிய மோதல்தான். யாரோ பாதை போட்டுக் கொடுத்து ஏற்பாடு செய்தது போல அவ்வளவு துல்லியமாக ஐகாரஸின் பாதை எப்படி மாறியது? என்பது புரியாத புதிர். இதுதான் பிரளயம், யுகமுடிவு என்று நினைக்கின்றேன். இதனால் ஏற்படக்கூடிய நம்முடைய பேரழிவை நாம் எல்லோரும் அமைதியாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. எங்கே ஓடி தப்பிக்க முடியும்?.”——

சொல்லும் போதே அவருக்கு அழுகை வந்து விட்டது, குரல் உடைந்து போய், அடக்கமாட்டாமல் கண்ணீர் கொட்ட கைக்குட்டையால் முகத்தைப் பொத்திக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த மக்களிடையே அழுகையும், கொந்தளிப்பும் எழுந்தன. சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. அத்துடன் விஞ்ஞானிகள் உலகம் வாயை மூடிக் கொண்டது. ஆக இயற்கைக்கு எதிராய் நம்மால் ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்..”—பெரும்பாலும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்க, எதை, எங்கே, எப்படி?, எதுவும் விளங்காத உன்மத்த நிலை. ஒரு நிமிடத்தில் ஒட்டு மொத்த மரணம் என்பதை மனசு உள் வாங்கிக் கொள்ள மறுக்கிறது. ஐயோ..ஐயோ.. என்று உலகெங்கும் மரண ஓலங்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.

“ஐகாரஸ் பூமியை நெருங்கும் போது அதன் வேகம் மணிக்கு 46,000—மைல்களாம். அதனால் பூமியில் ஏற்படும் காந்தப் புயல் மாற்றங்களினால் சூறாவளியாய் வீசும் காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படும். கடலலைகள் ஆக்ரோஷமாக கொந்தளிக்கும். அதுதான் நமக்கு அறிகுறி. மோதும் அந்த கடைசி நொடியில் 1000—2000 மெகா டன்கள் ஹைட்ரஜன் பாம்கள் ஒருசேர வெடித்தது போல சக்தி வெளிப்பட்டு உலகத்தை பொசுக்கி விடும் சாத்தியங்கள் அதிகம் .”—

இந்தத் தகவல்களை உண்மை விளம்பியாய் விஞ்ஞானிகள் குழு அறிவிக்க, உலகம் அலறியது, அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கும். குழப்பமும், கூச்சலுமாக இருக்க, மக்களின் கோபம் இலக்கு தெரியாமல் ஆட்சியாளர்கள் மீது திரும்பியது அவர்களின் வீடுகளும், உடமைகளும், அடித்து நொறுக்கப் பட்டன. அதில் நிறைய அரசியல்வாதிகள் இறந்து போனார்கள். எங்கும் அழுகை ஓலங்கள். நடக்கப் போவதை விஞ்ஞானிகள் சொல்லாமல் இருந்திருக்கலாம். அன்றைக்கு டைனோசரஸ்கள் ஒட்டு மொத்தமாக அழிந்த போது சாவு நேரப்போவதை அவைகள் அறிந்திருக்க வில்லை. ஆனால் இன்றைக்கு..?. தெரிந்தே சாவது கொடுமையிலும் கொடுமை. இனி கடவுளைத்தான் நம்பவேண்டும் என்று மக்கள் கூட்டம் கோயில்களில் படையெடுத்தன. சாலையில் வேகமாக போய்க் கொண்டிருக்கும் மனிதர்கள் ஒவ்வொருத்தரிடமும் ஆயிரம் சந்தேகங்கள், பதில் சொல்லத்தான் யாரும் இல்லை. கேமராவோடு ஓடிக் கொண்டிருந்த ஒருத்தனை சேனல்காரன் என்று நெனைச்சி ஒரு குப்பத்துப் பெண் மடக்கிப் பிடித்தாள்.

“தோ பார்பா! இன்னாமோ ஒரு மலை மானத்தில இர்ந்து ஜனங்க மேல வந்து வுயப் போவுதுன்னு சொல்றாங்க. ஊர்ல எல்லாம் ஜனங்க சாவப் போவுதுங்களாமே?. ஐயோ! காபராவா கீதே. நாங்கள்லாம் கொயந்தை குட்டிங்கள வெச்சிக்கிணு கஸ்டப் பட்டுக்கிணு கீறோம், இப்பிடி இர்ந்தா எப்பிடி பொயக்கிறது?. சொல்லுய்யா. குந்த ஒரு குட்சை கீதா எங்களுக்கு?. மந்திரி, எம்.எல்.ஏ., கவுன்சிலரு பேமானிங்க ஒர்த்தனும் இதுவரிக்கும் இன்னான்னு வந்து கேக்கல. ஓட்டுக்கு மட்டும் வந்துர்றானுங்க கேப்மாரிங்க.. ஐயோ! என் வூட்டு பொறம்போக்கு நாயீ, கெய்த, எங்க குடிச்சிப்புட்டு மெலாந்துட்டானோ தெர்லியே.”—

என்று கண்களைக் கசக்கினாள். அன்றிரவு ஆதித்யா சாரோட சேர்ந்து டெலஸ்கோப்பில் மீண்டும் ஐகாரஸ்ஸைப் பார்த்தேன். இப்போது அது சற்று நீளமாக ஒழுங்கற்ற வடிவத்தில் பிரமாண்டமான நாசகாரிபோல தெளிவாய் தெரிகிறது. பார்க்கிறபோதே பயம் வந்தது..வெறும் கண்களுக்கு அது துருவ நட்சத்திரம் அளவுக்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது..

கடைசியில் ஒரு நாள் மாலை ஆறுமணிக்கு சாலைகளில் அடர்த்தியாக மக்கள் கூட்டம் இருக்கிற போது. திடீரென்று காது கிழியும்படி பெரிய இடி சத்தம். அதன் அதிர்வை உலகெங்கிலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்குள் இந்தியாவின் சில பகுதிகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இங்கெல்லாம் சில இடங்களிலும் மழை பெய்வதைப் போல சடசடவென்று எரிகற்கள் விழுந்தன. அதனால் எரிந்தவர்களும், செத்து விழுந்தவர்களும், எங்கும் அழுகை ஓலம். எல்லாம் பத்து நிமிடந்தான். பொழிவு நின்று விட்டது. எரிகற்களின் இந்த பொழிவு நிகழப்போகும் பேரழிவை உறுதி செய்யும் இன்னுமொரு ஆதாரம் என்றது விஞ்ஞானிகள் கூட்டம். இனிமேல் மனிதர்களுக்கு மனதளவில் செத்துப் போவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு மதகுருமார்களும், ஆன்மீகவாதிகளும் மரணம் என்பது இந்த நரகத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் ஒருவகையான விடுதலை, முக்தி. நம்மை பகவான் பாதங்களில் கொண்டு சென்று சேர்க்கும் உத்தி. அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்று போதனை செய்து மக்களுக்கு மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தார்கள்..

இன்னும் எட்டே நாள் வாழ்க்கை மிச்சமிருக்க, அன்றைக்கு எல்லா நாடுகளிலும் மக்கள் எட்டாம் நாள் நேரப் போகும் மரணங்களையும்,, இழக்கப் போகும் உறவுகளையும், சேர்த்து வைத்திருக்கும்சொத்துக்களையும், பற்றியே மாய்ந்து மாய்ந்துப் பேசி அழுதார்கள். இனி இருக்கும் நாட்களில் எல்லா சுகங்களையும் முழுமையாக அனுபவித்து விடவேண்டும் என்று மனசு தெளிந்து, வெறித்தனமாய் இறங்கினார்கள். உலகில் மிஞ்சியிருக்கும் நடப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பன, எல்லாவற்றையும் அசுர வேகத்தில் கொன்று தின்ன ஆரம்பித்தார்கள். எங்கெங்கும் அவைகளின் மரண ஓலங்கள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள், என்று அத்தனையும் மந்தை மந்தைகளாய் உயிர்களை விட்டன. ரம், பீர், ஜின்னு,ப்ராண்டி, ஷாம்பெய்ன், ஒன்று பாக்கியில்லை. அங்காடிகளெல்லாம் திறந்தே கிடக்க விலையில்லா பொருட்களை மக்கள் இனாமாக வாரிச் சென்றார்கள். கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள்,எங்கும் எங்கும் இறைச்சி நாற்றங்களும்,மீன் நாற்றங்களும், மதுக்களின் நாற்றங்களும் மூக்கை அறுத்தன. மக்கள் தத்தம் மாச்சரியங்களை மறந்து உறவுகளுடன் கூடி, கும்பல் கும்பல்களாய் குடிப்பதும், தின்பதும், சம்போகித்தலும் என்று இருக்கத் தலைப் பட்டனர். ரவுடிகளும்,கொள்ளைக்கார அரசியல்வாதிகளும்,திருடர்களும், பணக்காரர்களும், வியாபாரிகளும், இதுவரையிலும் சேர்த்த செல்வங்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விட விரக்தியில் பற்றற்று அமைதியாகி விட்டார்கள். உலகம் முழுமைக்கும் இப்படியொரு அந்திம கால ஞானத்தை கொடுத்து விட்டது ஐகாரஸ்.

ஐந்து நாட்கள் முடிந்து இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலை. வந்தபோது, அன்று காலையில் விஞ்ஞானிகள் சொன்ன அறிகுறி போல கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் தீவிரமாகி ஐயோ!…சுனாமி பேரலை போல ஒவ்வொரு அலையும் பிரமாண்டமாய் நூறு மீட்டர் உயரத்துக்கு எழும்பியடித்தன. பல இடங்களில் கடல் சில கிலோமீட்டர்கள் தூரத்துக்கு உள்ளே புகுந்து விழுங்க ஆரம்பித்ததாக செய்தியில் சொன்னார்கள். கடற்கரை ஓரங்களில் குடியிருப்பவர்களுக்கு எச்சரிக்கை தரப் பட்டது.. திடீரென்று சிக்னல்கள் தடைப்பட்டுவிட டிவி வேலைசெய்யவில்லை. வானம் இருட்டிக் கொண்டு வந்தது. சூறாவளியாய் எழுந்த புழுதிக் காற்று அதிவேகமாய் சுழன்றடித்தது. இந்த அறிகுறிகளெல்லாம் ஐகாரஸின் மோதல் நிச்சயம் என்று உறுதி செய்தன.. இந்த மோதல் நிகழாமல் போகவும் சான்ஸ் உண்டு. என்று இதுவரைக்கும் எல்லோருக்கும் இருந்த கொஞ்ச நஞ்ச நப்பாசைகளும் சிதறிப் போக, சாவு ஊர்ஜிதமாகிவிட்ட அந்த கணத்திலிருந்து ஆண், பெண், இருபாலரும் இதுவரையிலும் காப்பாற்றி வந்த தனிமனித ஒழுக்கங்களை, சமூக ஒழுக்கங்களை, தூக்கி வீசிவிட்டு, வக்கிர உணர்வுகள் தலைதூக்க, மனம் போனபடி துய்க்க ஆரம்பித்தனர். பெண்கள் மேல் திணிக்கப் பட்டிருந்த கற்பு என்ற மாயை புறந்தள்ளப்பட்டுவிட, மக்கள்எவ்வித வெட்க, குற்ற,உணர்வுகளுமின்றி வெளிப்படையாகவே விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு மாறினார்கள்.. கடந்த ஐந்து நாட்களாகவே இந்த நிலை பரவலாக அங்கங்கே மறைவாய் நடந்துக் கொண்டுதான் இருந்தன. என்றாலும் இப்போது இன்னும் மூன்றே நாட்கள்தான் மிச்சம் என்பதில் நிகழ்வுகள் வெளிப்படையாகவே இருந்தன. யாருக்காகவும் யாரும் ஒளிந்து தப்பு செய்யவில்லை. போதையும், போஜனமும், சிருங்காரமும், வரைமுறையின்றி உச்சங்களைத் தொட்டன.

இன்று இறுதி நாள். எல்லாம் ஓய்ந்து போய், உலகமே சலனங்கள் இன்றி உறைந்து போயிற்று. எங்கும் பயம்…பயம். மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். மரணபயம். ஆக மனிதர்களைப் பொறுத்தமட்டில் இந்த உலகம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அழியப் போகிறது என்பது சத்தியம்.. ஆனால் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்கள் போன்ற அத்தனை உயிரினங்களைப் பொறுத்த மட்டில் ஏற்கனவே இந்த உலகம்அழிந்து விட்டது.

குறிப்பிட்ட அந்த நேரம் வந்து விட்டது. காலை சரியாக 11.00 மணி என்று நேரம் குறித்திருந்தார்கள். குழந்தைகளில் இருந்து கிழங்கள் வரை, ஆண்கள், பெண்கள், என்று உலகம் பூராவும் எல்லோருடைய பார்வைகளும் வானத்தையே துளைத்துக் கொண்டிருந்தன. அந்நேரத்துக்கு சுழற்காற்று வேகமெடுக்க, எழுந்த புழுதி வானத்தையே மறைத்தது. இதயங்கள் படபடவென்று வாயில் வந்து அடிக்க, எங்கே… எங்கே..?ஆ …ஆ…. அதோ.. அதோ…அதுவா?..அதுவா…? . தோ இங்க பாரு. எங்க ஒண்ணுமே தெரியலையே. அப்போது நடுவானில் பளீரென்று ஒரு அரை வெளிச்சத் தீற்றல். ஆ..ஆ… அதோ..அதோ…ஒ…! அதுவும் ஒரு ஐந்து வினாடி நேரந்தான். சடக்கென்று மறைந்து போக, ஓ……ஓ…….! கோவிந்தா…கோவிந்தா! நாராயணா…! மாதவா…!, ஈஸ்வரா…! ஆ….ஆ….! நீலகண்டா..! அல்லா…அல்லா…! அல்லாஹூ அக்பர்,.பரலோகத்தில் இருக்கும் எங்க பரம பிதாவே!, ஆமென். ஏசுவே!…ஏசுவே…! ,புத்தம் சரணம் கச்சாமீ, கோஷங்களும், அழுகைகளும்,அலறல்களும், வானை முட்ட, ஐயோ…..!..ஐயோ!….10:52…..53…54…55……56….ஆ..ஆ… விஞ்ஞானிகள் இப்போது விடையைத் தேடி ஓட, இதுவரை ஐகாரஸின் வருகையை ஒட்டி நடந்து முடிந்த அத்தனை தப்பாட்டங்களும் நடந்தவை நடந்தவைகளாக இருக்க, விஞ்ஞானிகளின் அனுமானங்கள், கணக்கீடுகள், தியரம்கள், உறவுமுறைகள், அத்தனையும் அர்த்தமின்றி போக, வானம் இப்போது நிர்ச்சலனத்துக்கு மாற ஆரம்பித்திருந்தது. ஐகாரஸ் வரவில்லை.

– திண்ணை டாட் காம். இதழில் வெளியான சிறுகதை தேதி 19-11-2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *