வள்ளம் போகும் இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 11,595 
 

மேகம் இறுக்கமாகவும், பெரும் மழை வரும் போல காற்று மிக குளிர்மையாகவும் வீசியது இருக்கையில் அமர்ந்து ஜன்னலை திறந்துவிட்டான். பேருந்து நிலையத்தில் நடத்துனர்களின் குரல்கள் கூவி கூவி அழைத்துக்கொண்டிருந்தன பயணிகளை. இறுக்கத்தில் வியர்த்து போனது உடம்பு…

பஸ்சுக்குள் ஏறும் பயணிகளைப் பார்த்து ஊர்க்காரர்கள், உறவினர்கள் எவரேனும் தென்படுகிறார்களா? என்று பார்த்தான். மனம் மிகுந்த மகிழ்ச்சியில் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. சீக்கிரமாக பஸ்சை எடுக்கமாட்டார்களா? என்று டிரைவரைப் பார்த்தான். ஐப்பசி மாதத்தின் மழைக்கால வாரம், படபடவென்று தூறல்கள் விழுந்து சிறு சத்தம் எழுந்தது. ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாய் சிதறி ஓடி மழைக்கு ஒதுங்கினார்கள்.

இரண்டு வருடம் மூன்று மாதம் நான்கு நாட்கள் எப்படி கடந்து போனது என்று நினைக்கும் போது வியப்பாகயிருக்கிறது. இந்த நான்கு நாட்களை தவிர்த்து இரண்டு வருடம் மூன்று மாதமும் சிறையின் துயர்மிகு நாட்கள்…! வலிமிகு பொழுதுகள்! ஒரு கனவு போல அவற்றையெல்லாம் மறந்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டான் பால்ராஜ். தனிமையும், வீறிட்டு அழுத பொழுதுகளும், நேவிக்காரன் கொடுத்த பிரம்படியும் கெட்ட வசைகளும் எளிதில் மறந்து போகும் நினைவுகளா மறக்க முடியாத வடுக்கள்…! இதயத்துக்குள் உறைந்து போயிருக்கும் குருதியில் நனைந்த சித்திரங்கள். “நேரமாயிட்டு சீக்கிரமா எடுங்கப்பா பஸ்சை” பால்ராஜ் பின் அமர்ந்திருந்த ஒருவர்… சலித்துக்கொண்டே சொன்னார். மழை மிதமாக பெய்து கொண்டிருந்தது. நடத்துனர் விசிலடித்து குரல் கொடுத்தார். ரைட்… ரைட்…! பஸ்… மெல்ல நகர்ந்து… ஓட்டம் எடுக்கத் தொடங்கியது…!

பால்ராஜ் இருக்கையில் தனித்து இருந்தான். குறைவான பயணிகளால் களையிழந்து தெரிந்தது பஸ். நீருற்றுக்குள் இருந்து பீறிட்டு வரும் நீரைப்போல ஊரின் நினைவுகளும், சீதாலெட்சுமியின் ஞாபகமும் கிளர்ந்து எழத் தொடங்கியது. பட்டினத்துறை அலைகள் தெருவுக்குள் வந்து முகம் காட்டிவிட்டு செல்லக்கூடிய அளவில் கடலோடு மிக நெருக்கமாக அமைந்துவிட்ட கிராமம் அது. அதில் கிழக்கு மேற்காக அவன் தெரு அமைந்திருந்தது. கடலிலிருந்து நான்கு வீடு தள்ளிய வடக்கு பார்த்த வீடு அவனுடையது…! கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ரிலீஸ் ஆன வருஷத்தில் கட்டிய வீடு என்று அடிக்கடி சொல்வார் அப்பா.

அந்த படம் ரிலீஸ் ஆன போது ‘பால்ராஜ்’க்கு ஐந்து வயது ஆகியிருந்ததாக அம்மா சொன்னாள். கடலோடி சம்பாதித்த காசையெல்லாம் இந்த வீடு கட்டுவதற்கே அப்பா செலவழித்து இருந்தார். ஆழமான ‘கடவு’ தோண்டி… சிமெண்ட் கலவை குறையாமல் நல்ல கம்பி போட்டு கட்டியிருந்தார். கட்டிடத்தை புயல்களும், உப்புக்காற்றும் சிமெண்ட்டை ‘நிறம்’ மங்கிப் போகச் செய்து விட்டிருந்தன என்றாலும் வீடு ஒருபோதும் தன் வலிமையை இழக்கவில்லை. சுனாமி வந்தபோது கூட ஆர்ப்பரித்து மேலெழுந்த அலைகளுக்கு கொஞ்சமும் இடமளிக்கவில்லை. மோதிய அலைகள் அப்பாவின் உயிரை மட்டும் பறித்துக்கொண்டு எழுந்து இடத்திலேயே போய் அடித்துக் கொண்டிருந்தது.

அன்று பால்ராஜ் கடலுக்கு போயிருந்தான். அன்று நடுக்கடலில் அளவுக்கு அதிகமாக மீன்கள் சிக்கியிருந்தன. சீக்கிரமாக கிளம்பிவிடலாம் என்று சிங்காரம் மன்றடியார் சொல்லிவிட்டிருந்தார். ‘வள்ளத்தில்’ இருந்த எட்டு ஆட்களும் அவர் பேச்சை கவனமாக கேட்டார்கள். சிங்காரம் மன்றடியார் சாதாரண ஆள் இல்லை. ஒரு வள்ளத்தின் சுக்கனை மிக நுட்பமாக பிடிப்பவர். மூன்று நாட்களாகவே இரவும், பகலும் சொல்லிக்கொள்ளும் படியாக ‘பருவம்’ இல்லை. ‘நீவாடு’ ஒரு மாதிரியாக திசை மாறிக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு முறை காற்று வீசும்போதும் நீவாடு குழப்பத்தை ஏற்படுத்தியது. கரைக்கு ஓடுற நீவாடு திடீரென்று அர நீவாடுவாக கடலுக்குள் போனது. குழப்பமாகி ‘கவனமா இருங்கடான்னு’ எச்சரித்து விட்டார்.

திடீரென கடலுக்குள்ள பொறுமலான காத்து வேற வீசுது… நீர்குதிப்பும் ஒரு மாதிரிதான் இருக்குன்னு… சஞ்சலப்பட்டார் சிங்காரம் மன்றாடியார். கடலில் பல கலைகள் தெரிந்தவர் நீரோட்டத்துக்கு ஏற்ப சுக்கன் பிடித்து வள்ளத்தை ஓட்டுவதில் தொடங்கி காற்றின் திசையும், நீவாடும் பார்த்து மீன்கூட்டம் எங்கே… திரியும் எங்கே போனால் என்ன மீன் கிடைக்கும், எந்த திசையில் ஆபத்து இருக்கும் என்பது வரை மிக நுட்பமாக தெரிந்தவர் ஊரிலிருக்கும் மற்ற மன்றாடியார்களும், மன்னாட்டியார்களும் இவரிடம் சற்று மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். வடக்கேயிருந்து வாடை கொண்டால் காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது.

“ஓக்காலி, காத்து என்னாடா இப்படி அடிக்கிது…” என்று இடுப்பு வேட்டியிலிருந்து சுருட்டை எடுத்து ‘லைட்டரால்’ பற்ற வைக்க முயன்றார். கடும் காற்றால், வள்ளத்திலிந்தவர்கள் பதட்டமானார்கள். பால்ராஜ், கம்பீரமாக நின்று சுக்கனை பிடித்துக் கொண்டிருந்தான். நீவாடு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. வானில் வெள்ளியை பார்த்தார் காணவில்லை. சிங்காரம் மன்றாடியார் கண்களுக்கு புலப்படாமல் ஒரே இருளாய் தெரிந்தது. கடும் குளிர் காற்றால் உடல் வெடவெடக்கத் தொடங்கியது. வள்ளத்தை காற்று போக்கிற்கே விட்டுவிடலாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார் மன்றாடியார். நாலுமைல் தூரத்துக்குப் போகவும், காற்று கட்டுக்குள் வந்திருந்தது. எந்த இடம் என்று தெரியாமல் வள்ளத்தை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். அசந்து உட்கார்ந்து விட்டார்கள் ஆட்கள். பொழுது விடிந்தது. இறுக்கமான அமைதியில் உறைந்து போயிருந்தது கடல். நூறுக்கும் மேற்பட்ட ஓங்கல்கள் மேலே வந்து குதித்து எதையோ உணர்த்திக்கொண்டிருந்தன.

இப்படி ஓங்கல்கள் மேலே வந்தால் திமிங்கலமோ, சுறாவோ வள்ளத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடும். அதனை உணர்த்தும் விதமாக அவைகள் நீரிலிருந்து மேலெழும்பி மீனவர்களுக்கு சமிக்ஞை செய்வது உண்டு என்பதால் சிங்காரம் மன்றாடியார் வள்ளத்தை மேற்கு பக்கமாக திருப்பச் சொன்னார். கடலில் பேரமைதி நிலவியது. இந்த இறுக்கம், மிக பெரிய ஆபத்துக்கான அறிகுறி என்று தோன்றியது சிங்காரம் மன்றாடியாருக்கு. ஐம்பது ஆண்டுகால கடலோடி வாழ்க்கையில் இப்படியொரு விசித்திரமான கால நிலையை கண்டதில்லை. காற்று இல்லாத கடலில் ஒரு அழகு தெரிந்தது. வள்ளத்திலிருந்த மற்ற ஆட்கள் பரபரப்பானார்கள். பட்டினத்துறைக்கான திசையை மிக நுட்பமாக கணிக்கத் தொடங்கினார் சிங்காரம் மன்றாடியார்.

சூரியன் சுள்ளென்று அடித்தது. டிசம்பர் மாதத்தில் இப்படி சூட்டை பகற்பொழுதில் கடலில் உணர்ந்தது இல்லை. வள்ளம் வேகமெடுத்தது. அவர் கணிப்பு மிக சரியாக இருந்தது. பட்டினத்துறை லைட் ஹவுஸ் மட்டும் தெரிந்தது. மற்றவையெல்லாம் வெள்ளக்காடாகவும் நிலப்பகுதி சிதைந்தது போலவும் தெரிந்தது. கரைக்கு வரத்தொடங்கினார்கள்.

பால்ராஜ்க்கு உடல் வியர்த்தது. சிங்காரம் மன்றடியார் கூர்மையாக கரையைப் பார்த்தார். படகை நிறுத்தியதுமே ஏதோ உரைத்துவிட்டது. கரையில் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. கடலோரத்தில் இருந்த பல குடிசைகள் காணாமல் போயிருந்தன. வள்ளத்திலிருந்தவர்கள் ஓவென ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள். கரைக்கு வந்தபிறகு தான் தெரிந்தது. பேரலைகள் எழுந்து வந்து ஊரையே சுருட்டிக்கொண்டு போனது. அந்த தெருவில் பால்ராஜ் வீடு மட்டும் தப்பியிருந்தது. மீதியெல்லாம் அலையோடு போய்விட்டிருந்தன.

பால்ராஜ் அப்பா மட்டுமல்ல. கரையோரத்தில் நின்றவர்கள், போனவர்கள், வந்தவர்கள், வீட்டுக்குள் இருந்தவர்கள் என எத்தனையோ பேர் காணாமல் போயிருந்தார்கள். சில குடும்பங்கள் முழுவதுமாக கூட அழிந்து போயிருந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகான பேருந்து பயணம் பால்ராஜ்க்கு மிகுந்த உவப்பையளித்தது. அருகில் சீதாலெட்சுமி இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

சுனாமி பேரலைக்குப்பிறகு பட்டினத்துறை கிராமத்தின் நிலை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. இவன் தந்தை கடலோடு போனபிறகு இவனும், தம்பி நீலகண்டனும் தவித்துப்போனார்கள். நல்ல வேளையாக தம்பி அன்று அவன் தெரிந்தவர் வீட்டுக்கு சென்று விட்டிருந்தான். இல்லையென்றால் அப்பாவோடு இவனும் ஜல சமாதியாகிருப்பான். சிங்காரம் மன்றாடியார் தான் இவனுக்கு ஆறுதலாக இருந்தார்.

அந்த மழைக்கால நள்ளிரவில் ஜுரம் முற்றி ஜன்னி கண்டு அம்மா இறந்து போன பிறகு அப்பாவே சகலமுமாய் இருந்து குடும்பத்தை நடத்தினார். அவர் போன பிறகு வீடே தீராத தனிமையிலும், துயரத்திலும் ஆழ்ந்தது. பால்ராஜ் பித்து கொண்டது போல் கடற்கரையில் திரிந்து கொண்டிருந்தான். படகு துறையில் உட்கார்ந்து கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். ‘கடலுக்கு போக பிடிக்கவில்லை’ என்று சொல்லி சாராயம் குடிக்க வாஞ்சூருக்கு போகத் தொடங்கியிருந்தான். சிங்காரம் மன்றாடியார், சிதம்பர சம்மட்டியாரிடம் சொல்லி கல்யாணம் செய்து வைத்தால் பயல் தெளிந்து விடுவான் என்று பணஉதவி கேட்டார். சிதம்பர சம்மட்டியாருக்கு பத்துக்கும் மேற்பட்ட வள்ளங்கள் உண்டு. குறைந்தது ஐம்பது ஆளுக்கும் குறையாமல் அவரிடம் வேலை செய்கிறார்கள். அவர்தான் ‘நல்லபயல்’ என்று சொல்லி பண உதவிகள் செய்வதாக சொன்னார். சிங்காரம் மன்றாடியார் மனைவி வகை தூரத்து சொந்தத்தில் தான் சீதாலெட்சுமியை பார்த்தார். பட்டினத்துறை கிராமத்துக்கும், அந்த கிராமத்துக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கோடியக்கரை ஒட்டிய கழிமுகத்துவர கிராமம். நல்ல மீன்வளம் உள்ள பகுதி என்று பால்ராஜ் கேள்விப்பட்டிருந்தான்.

சீதாலெட்சுமி அப்பா இல்லாத பெண். கூட பிறந்த மூன்று பேரில் இவள் கடைக்குட்டிப் பெண். எப்போதும் வசீகரம் கொள்ளும் வட்டமான முகம் கொண்டவளாகவும், உதடுகளில் பழுப்பு நிற ரோமங்கள் படர்ந்து அழகான சின்ன கண்களை கொண்டு சற்று கூச்ச சுபாவ பெண்ணாகவும் தெரிந்தாள். வலிமையான, ஆனால் சற்று மெலிந்த நடுத்தர உயரத்தில் குறைவான கூந்தலைப் பின்னி ஒற்றை ஜடை போட்டிருந்தாள். முதல் பார்வையிலேயே ‘பால்ராஜ்’க்கு அவளை பிடித்துப்போனது. பட்டினத்துறை மாரியம்மன் கோவிலில் வைத்து எளிமையாக கல்யாணம் முடித்து வைத்தார்கள். மன்றாடியாரும், ஊர்க்காரர்களும் சேர்ந்து தான் மிக குறுகிய காலத்தில் பால்ராஜின் திருமண வாழ்க்கை தொடங்கி வைத்தார்கள்.

பால்ராஜ் சீராக பெய்யும் மழையையும், ஜன்னலின் ஊடே தெறித்து விழும் துளிகளையும், உள்வாங்கி கொண்டபடி ஜன்னலோரத்தில் தன்னை இருத்திக் கொண்டிருந்தான். நினைவுகளும், அது கிளர்த்தும் வலிகளும் சுகமாக இந்த தருணத்தை அர்த்தம் கொள்ள செய்தது. மனிதன் வாழ்க்கையில் நினைவுகளே உயிர் கொள்கின்றன. ஒருவேளை இந்த நினைவுகளை மனிதன் இழந்துவிட்டால் மனிதனுடைய வாழ்க்கை எப்படியிருக்கும். “பால்ராஜ்க்கு திடீரென்று இப்படியொரு சிந்தனை எழுந்து சட்டென்று அடங்கிப்போனது.

‘பஸ்’ அதிகம் வேகமில்லாது சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. பயணத்தில் கண்களுக்கு உற்சாகமளித்துவிட்டு மறைந்து விடும் மரங்கள் சூழ்ந்த நிலக்காட்சியை போல ‘வாழ்க்கை’ எப்படி ரூபம் காட்டி மறைகின்றன. சீதாலெட்சுமி வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கத்தொடங்கிய அந்த தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து வீடு புது வாசனையில் மணம் கொள்ளத் தொடங்கியிருந்தது.

எப்போதும் வௌவால்களின் எச்சத்தின் கெட்ட நாற்றத்தைவீசிக்கொண்டிருந்த வீட்டில் சீதாலெட்சுமி சாம்பிராணி மணத்தை படரச் செய்தாள் புதுப்புது உறவுகள் முளைத்திருந்தன. சீதாலெட்சுமியின் நெருங்கிய உறவுக்காரர்கள். ‘உறவுமொறை’ சொல்லி அழைத்தார்கள். எப்போதும் விருந்தினர்களின் வருகையால் வீடு சந்தோஷத்தின் வார்த்தைகளை முணுமுணுத்தது. பால்ராஜின் தம்பி நீலகண்டனுக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டிருந்தது. அண்ணியின் வார்த்தைகளை தட்டாமல் கேட்டு நடந்து கொண்டிருந்தான். பால்ராஜ் கடலுக்கு போகும் பொழுதெல்லாம் அண்ணிக்கு காவலாக வீட்டுக்கு வெளியே கட்டிலைப்போட்டு படுத்துக்கிடந்தான். தாய்வீட்டில், சீதாலெட்சுமிக்கு பிரசவ வலி கண்டபோது பால்ராஜ், கடலுக்கு போயிருந்தான். ஒரு வாரம் கழித்து மன்றாடியாரோடு திரும்பியிருந்தான். அன்றையபாடு நிறைய திருக்கை மீன்கள் கிடைத்து இருந்தன. கரையில் இறங்கி மீன்களை இறக்கி கொண்டிருக்கும் போது தம்பி ஓடிவந்தான். பெரியவனே ரெட்டை புள்ள பொறந்திருக்கு.

“அப்படியா எப்ப செய்தி வந்துச்சு”

“நேத்து ராத்திரி வந்து ஆள் சொல்லிட்டு போனிச்சு” பால்ராஜ்க்கு உடல் லேசாக நடுங்கியது. சந்தோஷத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. வலையை எடுப்பதற்கு பதிலாக மீன்களை அள்ளி பரப்பிவிடுகிறான். சிங்காரம் மன்றாடியாருக்கு சிரிப்பு வந்து மற்ற ஆட்களும் இவனின் சைகைகளை பார்த்து சிரிக்கிறார்கள்.

“பயலுக்கு தலைகால் புரியலடா” என்று சொல்லி மன்றாடியார் பால்ராஜ் முதுகில் செல்லமாக தட்டி சிரிக்கிறார். வள்ளத்தின் சக ஆட்கள் வாஞ்சூரில் கள்ளுத்தண்ணி வாங்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். மீன்களை எல்லாம் கரை சேர்த்து விட்டு வேதாரண்யம் ஆஸ்பத்திரிக்கு சென்று வாசலில் நின்று விசாரித்தபோது சீதாலெட்சுமி உறவுக்காரப் பெண்கள் இரண்டு பேர் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்தார்கள். இவனை பார்த்ததும், “வாங்க” தம்பி என்று வாஞ்சையுடன் அழைத்தார்கள்..

‘எந்த’ இடத்துல… சீதா இருக்கு” “வாங்க… காட்டுறோம்” அழைத்துக்கொண்டு உள்ளேப் போனார்கள். நடந்தபோது அடிவயிற்றுக்குள் ஒரு குளிர்ச்சி நிரம்பியது. கட்டிலில் படுத்துக்கிடந்தாள். சீதாலெட்சுமி, குழந்தைகள் இரண்டும் பக்கத்தில் உறங்கின. இவனை கண்டதும் அவளின் கண்கள் கலங்கின. அருகில் அமர்ந்து “நல்லாயிருக்கியா” நெற்றியை அன்போடு வருடிக்கொடுத்தான்.

மாமியார் எழுந்து நின்று மரியாதை செய்தார். அருகில் உட்கார்ந்த இவன் கையை அழுத்தி பதிலுக்கு அன்பை உணர்த்தினாள். பஸ்சை ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். “சாப்பிடுறவங்க.. சாப்பிடலாம்” முதியவர் ஒருவர் கரகரப்பான குரலில் சத்தமிட்டார். பஸ்சுக்குள்ளிருந்து கீழே இறங்கினாள். தூதரகத்தில் கொடுத்த பணத்தை எண்ணிப்பார்த்தான். சீதாலெட்சுமிக்கு புடவையும், குழந்தைகளுக்கு உடைகளும் எடுத்துவிடலாம் என்று நினைத்தான். கடற்காற்று ஊசியாக குத்தியது. ஓட்டலில் பயணிகள் சிலர் வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘பஸ்’ போய்விடுமோ என்ற அச்சம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. பீடி கட்டு வாங்கி, அதில ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்சுகளை, சாலையில் வீறிட்டுப் பாய்ந்து செல்லும் வாகனங்களை பார்த்துக்கொண்டே நின்றான். மழை மிக மெல்லிய தூறலாய் விழுந்தது. பீடியை புகைப்பது மிக இதமாக இருந்தது இந்த சூழலுக்கு…!

“டையம் ஆயிட்டு, வாங்கப்பா” கண்ட்ரக்டர் சத்தம் போட்டார். பீடியை கீழே போட்டு அணைத்துவிட்டு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். “காலம் எவ்வளவு அழகானது இரண்டு பெண்குழந்தைகளும் அப்படியே சீதாலெட்சுமியை உரித்து வைத்தாற்போல இருந்தார்கள்.

“இரட்டைப் பிறவிகள்” என்றாலே அதிசயம்தான். இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. குழந்தைகள் மழலை பேசி பால்ராஜின் பகல் பொழுதுகளை மிக ஆனந்தம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள். கடலுக்கு சென்று திரும்பிய உடனே, மகள்களுக்கு கடற்கரையில் விற்கும் அவித்த மரவள்ளி கிழங்குகளை வாங்கிக்கொண்டு ஓடிவருவான். தம்பி நீலகண்டன் கடைத்தெருக்களுக்கு சென்று ‘பொம்மைகள்’ பிளாஸ்டிக் கார்கள், வாங்கி வந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

தம்பிக்கு கடலுக்கு போவதற்கு அவ்வளவு ஆர்வம் கிடையாது. மீன் ஏலம் எடுத்து உப்பனாற்றின் கடை வீதியில் கரையில் கடை போட்டிருந்தான். இவன் அண்ணன் கடலுக்குப் போவதால் சலுகை விலையில் மீன் கிடைத்தது. சீதாலெட்சுமியிடம் நெருக்கமாக இருக்கும் தருணங்களில் எல்லாம் தம்பிக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தோன்றும். சீதாவிடம் சொல்லுவான். சரிங்க என்று ஆமோதிப்பாள். தெரிந்த ஆட்கள் சிலரிடம் கடை வீதிகளுக்கு போகும்போது சொல்லி வைத்திருந்தான். சீதாலெட்சுமிப் போல் நல்ல மனசும், குணமும் உள்ள பெண்ணாக பாருங்கள் என்று. அன்று கீழ்வானில் நிலவு துல்லியமாக ஏறத்தொடங்கியிருந்தது. சிங்காரம் மன்றாடியாருக்கு ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அடிக்கடி மூச்சிறைப்பும், தீராத சளியும் அவரை இம்சித்துக்கொண்டிருப்பதாக பால்ராஜிடம் குறைப்பட்டுக்கொண்டார். மருந்து, மாத்திரைகள் பலனளிக்கவில்லை. முகம் வாட்டம் கண்டுவிட்டது. பால்ராஜ் மன்றாடியாராக மாறியிருந்தான். சி

ங்காரம் இவனையே மன்றாடியாருக்கு சரியான ‘ஆளாக’ அறிவித்தார். முதன்முதலாக ‘வள்ளத்துக்கு’ தலைமை பொறுப்பேற்று கிளம்புவதற்கு சிங்காரத்திடம் ‘ஆசி’ வாங்க சென்று இருந்தான். அவர் கடல் பார்த்த கான்கிரீட் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கடலையே பார்த்தபடி இருந்தார். பால்ராஜ் வையும் சீதாவை கண்டதும் வாங்க என்று நெகிழ்வாக அழைத்தார்…! அவர் காலில் விழுந்து வணங்கினான், எழுந்து கொள்ள முயன்றார் முடியவில்லை. “இஞ்ச பாரு…கடலுக்கு மீன் புடிக்கப்போறது முக்கியமில்ல கடல்ல நேவிக்காரன்கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. நம்ம ஊருல இது வரைக்கும் பதினைஞ்சு பேருங்க காணாம போயிருக்காங்க.. நம்ம எல்லையை விட்டு எக்காரணம் கொண்டும் அடுத்தவன் எல்லைக்கு போகக்கூடாது. திசையை கவனமா தீர்மானிச்சுக்கணும்.. அவர் வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டது. சிங்காரத்திடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பும்போது நல்ல குளிர்மையான நேர்கொண்டல், வீசத் தொடங்கியிருந்தது.

வேகமாக நடந்து சீதாலெட்சுமியோடு மாரியம்மன் கோயிலுக்கு வந்தான். பூசாரி இவர்களை வரவேற்று அம்மனுக்கு தீபாரதனை காட்டினார். சூடம் ஏற்றிக் கடலுக்குப் போவதாகச் சொன்னான். நல்ல விதமாக சென்று வர அம்மனை வேண்டிக்கொள்ளும்படி தெரிவித்தார் பூசாரி. சாமி மாடத்தில் அங்காளம்மனுக்கு விளக்கை ஏற்றி வைத்து விட்டு வழியனுப்பினாள். குழந்தைகளை தூக்கி கொஞ்சிவிட்டு, கிளம்பும்போது நிலா மேலேழும்பி தெளிவான வெளிச்சம் பரப்பியது. கடற்கரையில் வள்ளத்தை சரிசெய்து தயாராக காத்திருந்தார்கள் ஆட்கள். “இன்னக்கி பத்து வள்ளம் கௌம்புது” “எந்த மரத்துல எத்தினி பேருன்னு” தெளிவா குறிச்சி கொடுத்துட்டு வாங்க.

“வர வர இலங்கை கடற்படைக்காரங்க ரொம்ப தொல்லை கொடுக்குறானுங்க”

“அவனுவ எல்லைக்குள்ள போகாம திசைய கவனமா கணிச்சுக்குங்க” கடலுக்கு வராத ஆட்கள் எச்சரிக்கை செய்தார்கள். குலதெய்வத்தை வணங்கிவிட்டு, வளத்தை செலுத்தத் தொடங்கினார்கள். மிதமான ‘கடலடி’யும், ஆர்ப்பாட்டமும் இல்லாத காற்றும் வள்ளத்திலிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. கரக்கடலிலிருந்து வள்ளம் ஆழ்கடலை நோக்கி அணி வகுக்கத் தொடங்கின. பௌர்ணமி நாளின் தொடக்கம் என்பதால் திடீரென்று காரக்கடலில் காற்று சற்று அதிகமாக தெரிந்தது. ஆனால் நடுக்கடல் அமைதியாக இருந்தது. வலையை இறக்கி மீன்களை பிடித்துக்கொண்டிருந்தார்கள். முதன் முதலாக பால்ராஜ்க்கு கிடைத்த மன்றாடியார் பட்டமும், கிடைக்கும் நிறைய மீன்களையும் வைத்து இந்த ‘பாடு’. முடிந்து ஊருக்குச் செல்லும் போது சம்மட்டியார்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வேலைக் கொடுக்க முன் வருவார்கள். லட்சக்கணக்கில் அட்வான்ஸ் கொடுப்பார்கள். வானத்தையும், கடலையும் பார்த்து வலைகளை இறக்கிக்கொண்டும், மீன்களை பக்குவப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். முதல் நாளே நல்ல மீன்கள் கிடைத்தன. மூன்றாவது நாள் கடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பகலெல்லாம் கடும் வெயில். அனல் தாங்க முடியாமல் புழுவாய் நெளிந்தார்கள். மாலைப்பொழுது நெருங்கத் தொடங்கியபோது சூரியனைச் சுற்றி சூரியவட்டம் விழுந்திருந்தது. இப்படி விழுந்தால் நல்ல அறிகுறியில்லை என்று சிங்காரம் மன்றடியார் சொல்லுவார்.

இது சூறைக்காற்று அடிப்பதற்கான அறிகுறி! கவனமாக இருக்கவேண்டும். கடலில் குளிர்ச்சி தன்மை குறைந்து போய் ஒரே வெதுவெதுப்பாக இருந்தது. அந்தோணிராஜ் வள்ளத்தில் இருப்பதிலேயே மூத்த ஆள். நிறைய அனுபவமும் உண்டு! பால்ராஜிடம் கடலு ஒரு மாதிரியா கெடக்கு என்று எச்சரிக்கை செய்தார். இரவு மெல்ல வரத் தொடங்கியிருந்தது. தென்திசையைப் பார்த்தான். கச்சத்தீவு அருகில் இருப்பது போல தெரிந்தது. சீக்கிரமாக ஸ்டவைப் பற்றவைத்து சமையல் செய்து முடித்து விட்டிருந்தார்கள். வெரசாக சாப்பிட்டுவிடலாம் ஊதலான காற்று திடீரென்று வீசத்தொடங்கியது. காற்றில் ஒரு ‘ஒலி’ கேட்டது. வள்ளத்துக்கு நூறடி தள்ளி சுறாவேடன், அடியாழத்திலிருந்து மேலேவந்து வாயைப் பொழந்தது. வள்ளத்திலிருந்த ஆட்கள், சுறாவேடன்கள் அதிகளவில் மேலே வந்து போவதை மிரட்சியுடன் பார்த்தார்கள். கையிலிருந்த ‘ரேடியோவை’ எடுத்து திருப்பிப் பார்த்தான் பால்ராஜ். கொரகொரவென ஓசையெழுந்தது.

எந்த அலைவரிசையும் எடுக்கவில்லை. ஒவ்வொருவராக சாப்பிட்டு முடித்தார்கள். வானம் கறுத்துப்போய் இறுக்கம் கொண்டது. பால்ராஜ் சோற்றில் வவ்வால் மீன் குழம்பை ஊற்றி முதல் உருண்டையை பிசைந்து வாயில் வைக்கத் தொடங்கிய போது மழைப் பிடிக்கத் தொடங்கியது. மற்ற ஆட்கள் வள்ளத்தின் சுக்கனைப் பிடித்து திசையை தீர்மானிக்க திணறிக் கொண்டிருந்ததால் அறக்க பறக்க சாப்பிட்டுவிட்டு உப்புத்தண்ணீரால் கையை கழுவி சுக்கனைப் பிடித்து வள்ளத்தை மேற்குத்திசையிலிருந்து கிழக்குத்திசை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான். காற்று கடும் வேகத்தில் அடிக்கத் தொடங்கியிருந்தது. மழை பெரும் சத்தத்தோடு பெய்ந்தது. அண்டளிக்க முடியாத பெரும் மழையாக இருந்தது. காற்றின் வேகம் கூடிக்கொண்டே போனது. திசையை கணிக்க முடியவில்லை இருளில். காற்றுக்கு வள்ளம் ஈடு கொடுக்க முடியாது. காற்றில் வேகம் கூடிக்கொண்டேயிருந்தது. மழையில் நனைந்து போய் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். காற்றின் போக்கில் வள்ளம் போய் கொண்டிருந்தது. காற்றின் வேகம் அதிகமாகியது. அங்காளம்மனை வேண்டிக்கொண்டான். அந்தோணிராஜ் வேளாங்கண்ணி மாதாவை கூப்பிட்டார். மற்ற ஆட்களும் பயத்தில் கூச்சலிட்டார்கள். “ஆறுன பாட்டன் என் பாட்டன் முப்பாட்டன் சீர்பாட்டன்” என்று பால்ராஜ் குரல் கொடுத்தான். கடலில் இறந்துபோன பாட்டன், தந்தை உள்ளிட்ட முன்னோர்கள் தெய்வமாக காப்பாற்றுவார்கள்! என்ற நம்பிக்கையில் மற்றவர்களும் குரலிட்டார்கள்.

பெரும் சப்தத்தோடு காற்று வள்ளத்தைப் புரட்டிப் போட்டது. ஆளுக்கொரு பக்கமாக கடலில் விழுந்து நீரில் மிதந்தார்கள். கடைசியாக நீரில் சுப்ரமணியன் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். காற்றும், அலையின் பெரும் சீற்றமும் திசையை தெரியாது எங்கோ இழுத்துக்கொண்டு போனது!

ஒரு இரவும், ஒரு பகலும் கழித்த மூன்றாவது நாள் பகலில் தலை மன்னார் வளைகுடா பகுதியில் உடலில் வலுகுறைந்த போய் வெறும் தக்கையாக நீரில் மிதந்துக் கொண்டிருந்தான். சற்று தொலைவில் கடற்படை ‘போட்’ ஒன்று வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மழை விட்டிருந்தது. வானம் வெளுத்துப்போய் தெரிந்தது. நல்ல குளிர்காற்று கடலூரை தாண்டி பஸ் வந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஆர்ப்பரிக்கும் அலையோசை கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகின்றன. கடலூர் துறைமுகத்தின் கவுச்சி வாசனையும், உப்புக்காற்றின் குளிர்மையும் அவனை அப்படியே உறக்கத்தில் ஆழ்த்தியது.

“எந்திரிப்பா… கண்டக்டர் தட்டி எழுப்பினார். மெர்க்குரி வெளிச்சம் படர வெறிச்சோடி கிடந்தது பஸ் ஸ்டாண்ட். கண்களை கசக்கிக்கொண்டு கீழே இறங்கினான். சுற்றும், முற்றும் பார்த்தான். எதிர்ப்பட்ட ஆளிடம் மணி கேட்டான். மூன்றரை என்றார். தென்பக்கத்தில் இரண்டு டீக்கடைகளில் ஆட்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். வாய் கொப்பளித்து விட்டு கிளாசில் “டீ” வாங்கி உறிந்து குடித்துக்கொண்டிருந்த போது எதிரே ஒருவர் உந்தி உந்தி நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஓடக்கார மாரியப்பன் அருகே போய் ‘எப்படிண்ணே இருக்கீங்க?’ என்றான்.

“யார்ரா அது”

“நாந்தண்ணே… பால்ராஜ்…”

“பால்ராஜ்ஜா…?”

“வலைக்காரு மொவனா…”

“அட நம்ம பால்ராஜ்”

“இவன் கையை இறுக பற்றினார்”

அன்னக்கி வள்ளம் கவிழ்ந்து தண்ணியில தத்தளிச்சிக்கிட்டு இருந்தப்போ இலங்கை கடற்படைக்காரன்கிட்டே மாட்டி தலைமன்னார் ஜெயில்ல போட்டானுவோ… அபின் கடத்தல்னு கேசு… போட்டு… ரெண்டு வருஷம்… மூணு மாசமா இப்ப நாலு நாளைக்கு முன்னாடி தான் ரிலீஸ் ஆனேன். என்னோட வந்தவங்க எல்லாம் உயிரோடு திரும்பி வந்துட்டாங்களா? இவனை கூர்மையாக பார்த்தார்! இப்படி வா ‘செய்தியிருக்கு’ என்று அருகில் அழைத்து சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார். பால்ராஜ் அமர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான்…!

“யாருமே உயிரோடு திரும்பல நீ கடல்ல போயி ஒரு மாசம் கழிச்சு அதிராப்பட்டிணத்துல ஒரு சடலம் ஒதுங்கிச்சு பார்க்குறதுக்கு உன்ன மாதிரி அச்சு அசலா இருந்துச்சு. எடுத்து வந்து காரியம் எல்லாம் செஞ்சுட்டோம்…!” அவர் குரல் உடைந்தது.

“அதனாலே என்ன நாந்தேன் உயிரோடு இருக்கேன்ல” அது சரிப்பா… போன வருஷம் உன் குடும்பம் அனாதையா ஆயிடக்கூடாதேன்னு உன் தம்பியோடு சேர்த்து வச்சுட்டோம்.. இப்ப வாயும் வயிறுமா…! இருக்காப்பா… அவ.. இப்ப என்னச் செய்யப்போற… பால்ராஜ் தொண்டைக்குள் ஏதோ உருண்டது. மயக்கமாக வந்தது. அவர் கையைப் பற்றினான்…

“என்னை உயிரோடு பார்த்தேன்னு… யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க… இது நம்ம கடல் அம்மா மேல சத்தியம்…!” வேகமாக நடக்கத் தொடங்கினான். கடலோசை ஆங்காரமாக கேட்டது! சீதாலெட்சுமியும்… குழந்தைகளும்… மீண்டும்… நினைவில் உயிர் பெறத் தொடங்கினார்கள். பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பிய திருச்சி பஸ்ஸில் வேகமாக ஓடி ஏறிக்கொண்டான்.

– நன்றி; கணையாழி மாத இதழ் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *