வட்டங்களுக்கு வெளியே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 12,506 
 

ஜீப் வேகமாக மேடுகளில் ஏறிக் கொண்டிருந்தது. காளியண்ணன் கண்களை மூடி, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகதான் இருந்தது. இவன் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கலாம் என்று மனம் பொருமியது.

காளியண்ணனுடன் ஆசானைப் பார்க்கப் போகிறேன் என்று வைதேகியிடம் சொன்னவுடன் அவளிடமிருந்து வந்த முதல் வார்த்தையே நிராகரிப்புத்தான்.

“அவன்கூட போக வேண்டாம். நமக்கு அவனால எதுவுமே நல்லது நடக்கலை. அவன் சகவாசம் எப்பவுமே உங்களுக்கு பிரச்சனைதான். இப்பதான் பிரச்சனை எல்லாம் தீர்ந்து, எல்லாத்தையும் விட்டுவிட்டு கொஞ்சம் தெளிவாகி இருக்கீங்க. திரும்பவும் ஊருக்கு வந்ததும் ஆஸ்ரமம், ஆசான் என்று எதுக்கு இப்ப காளியண்ணனுடன் சகவாசம்?”

எனக்கு சுருக்கென்று இருந்தது. காளியண்ணன் என்னுடன் படித்துக் கொண்டிருந்தபோது கணுவாயிலிருந்து 11ஆம் நம்பர் பஸ் பிடித்து வருவது வழக்கம். வைதேகியை எப்படி காதலிக்க வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறான். பேருந்து நிலையத்துக்கும், தட்டச்சு வகுப்புக்கும், விநாயகர் கோயிலிலுக்கும் அவள் எந்த நேரங்களில் வருவாள் என்று அறிந்து, மிக தெளிவாக திட்டம் போட்டு, நான் அங்கெல்லாம் தற்செயலாக செல்வது போல் ஏற்பாடு செய்து, அவளுடன் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, ஒரு அபிமானத்தை ஏற்படுத்தியதில் அவனுக்கு மிகப் பெரும் பங்கு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். வைதேகி எனக்கு சரியாக வருவாள் என்று சொல்லி அவளைப் பற்றிய ஒரு தீப்பொறியைப் பற்ற விட்டவன் என்று கூட அவனைச் சொல்லலாம். காளியண்ணனால்தான் இவளைக் கட்டிக் கொள்ள வேண்டிய சூழலே ஏற்பட்டது. அப்படி இருக்கையில் என்னுடன் ஏற்பட்ட திருமணத்தை நல்லதாக இவள் கருதவில்லையோ என்று மனசுக்குள் ஓர் கேள்வி எழுந்தது.

“இத பாரு வைதேகி, காளியண்ணன் இன்னைக்கு ஆசானுக்கு ஒரு கரம் போல. ஊருல இருக்கற பெரிய மனுஷங்க எல்லாம் ஆசானைப் பார்க்க வரிசையில் நின்று காத்துக் கிடக்கும்போது, காளியண்ணன் மூலமா நம்மால மிக சுலபமாக பார்க்க முடியும்னா சந்தோஷம்தானே”.

“இப்ப என்ன நிம்மதி இல்லாம போயிடுச்சு, நீங்க ஆசிரமமும், ஆசானும் தேடிப் போகிறதுக்கு? குழந்தையும் நானும் தராத நிம்மதி வெளியே போய் எங்கே கிடைக்கப் போகுது?”

அவளிடம் எதுவும் பதில் பேசவில்லை. ஆனால், ஆசானை நிச்சயம் பார்த்து விட வேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து விட்டேன்.

அதற்கு பிறகு இந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை அவரைப் பார்க்க முயன்று, முடியாமல் போய் விட்டது. இந்த முறை காளியண்ணனுடன் போகிறேன், நிச்சயமாய் பார்த்து விட முடியும் என்று அவன் நம்பிக்கை தெரிவித்திருந்தான்.

“ராமா, ஆசானுக்கு சமையல் வேலை செய்ற சின்னப் பொண்ணு நம்ம ஊருதான். அவள் சொல்லி நிச்சயமா அவரு தட்ட மாட்டாரு. நீயும் ரொம்ப நாளா அவர பார்க்கணும்னு நெனச்சு முடியாம போயிடுச்சு. அதுதான் நீ என் மூலமா பார்க்க ஏற்பாடு செஞ்சுருக்கார்னு நெனக்கிறேன்” வளவளவென்று காளியண்ணன் அளந்து கொண்டிருந்தான். ஆசானின் குழுமங்களில் காளியண்ணன் எப்படி இந்த அளவுக்கு ஒன்றிப் போனான் என்பது ஆச்சரியம்தான்.

“எவ்வளவு நாளைக்கு இப்படியே நீ தனியா இருக்க போற? இங்கப் பாரு, எனக்கு கல்யாணமாகி குழநதைகூட ஆயாச்சு. நீ இப்படி தனியாக இருக்கறது நல்லதில்ல,” என்றேன்.

“ஆசான் பாத்துக்குவார் நம்ம வழியை. ஆசானை நாம பார்த்துகிட்டே இருந்தா, நம்ம காலம் ஓடிப் போயிடும்,” என்று சந்தோசமாகச் சொன்னான் காளியண்ணன்.

“நீ ஆசான் பின்னாடி போயிக்கிட்டு இரு. அவரு யாருகூட போறாருன்னு நாளைக்கு டிவியிலும், செய்திகளிலும் பார்க்கும்போது தெரியும்”.

அவனது முகம் வெளிறியது. முகத்தில் அறைபட்டது போல், கண்கள் விரிந்து, கண்ணீர் தளும்ப, பரிதாபமாகச் சொன்னான், “டே, ராமா தயவு செஞ்சு ஆசானைப் பற்றி அப்படியெல்லாம் பேசிடாதே”.

“ஏன், சாபம் கொடுத்திடுவாரா என்ன, பார்க்கலாம்”

“ஐயோ, அவரு அப்படிப்பட்ட சாமியெல்லாம் கிடையாது. அவரு சாபமெல்லாம் கொடுக்க மாட்டாரு. மந்திரம், மாயமெல்லாம் செய்ய மாட்டாரு. நம்மளை போல அவரு ஒரு சாதாரண ஆசாமிதான். ஆனால் நம்ம வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எல்லாம் எப்படி சுலபமா எடுத்துக்கலாமுன்னு மனச லேசுப்படுத்திக் கொள்ள பயிற்சி தருவாரு, அவ்வளவுதான்.”

“அப்ப உன்னோட ஆசான் பிரச்சனைகளை எதிர் கொள்ள திராணியில்லாதவர்களுக்கு தைரியம் கொடுக்கற ஒரு மனோதத்துவ டாக்டர் அவ்வளவுதான்.”

“சரி அப்படியே இருக்கட்டும். இந்தப் பேச்சு நம்ம நட்புக்கு நல்லது கிடையாது.” என்று சிரித்தான் அவன்.

பள்ளி படிப்பு முடித்த பின்னரும் இருந்த பழக்கம், எனக்கு வேலை கிடைத்தபின் நீடிக்கவில்லை. அவன் வேறு ஊருக்கு தொழில் செய்யப் போனான், நான் ஒரு இரண்டு வருடம் போல அங்கேயே இருந்துவிட்டு வைதேகியைக் கல்யாணம் செய்து கொண்டு ஊரைப் பிரிந்தேன். அப்புறம் ஒரு முறை வங்கி அலுவல் விஷயமாக பொள்ளாச்சியில் ஒரு நூற்பாலைக்குச் சென்றபோதுதான் அவனைப் பார்க்கும் எண்ணம் வந்தது.

உரத்த ஓசை எழுப்பிக் கொண்டிருந்த நூற்பு எந்திரங்களின் பின்னணியில் ஒரு பெண் தொழிலாளியை சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் முகம் மலர்ந்து, அந்தப் பெண்ணை அப்படியே அனுப்பிவிட்டு என்னை வெளியே வரும்படி கண்களால் சமிங்கை செய்துவிட்டு கான்டீன் பக்கம் செல்லலானான். அவனைப் பின் தொடர்ந்தேன்.

“என்ன ராமா, பார்த்து நாளாச்சு. இன்னமும் ஞாபகம் வெச்சுருக்கியே,” என்றான் டீ வைத்திருந்த பேப்பர் கோப்பையை இரு கைகளுக்குமிடையே உருட்டியபடி.

“இன்னமும் இந்த பழக்கத்தை விடலை போலிருக்கே” என்றேன், அவன் தேநீர் கோப்பையை பார்த்தபடி.

“அதுவெல்லாம் அவ்வளோ சுளுவா போயிடுமா என்ன! ஆமா என்ன இந்தப் பக்கம்?”

“இங்க ஆடிட் விஷயமா வந்திருக்கேன். இன்னைக்கு என்னோட எங்க பேங்க் ஸ்டாஃப்பும் வந்திருக்காங்க”.

“அப்புறம் வைதேகியை கல்யாணம் செஞ்சிட்டியா என்ன?” என்றான் கண்களைச் சிமிட்டியபடி.

“ஆமாம், வைதேகிதான். இப்ப எங்களுக்கு மூணு வயசு பையன் ஒருத்தன்கூட இருக்கான்.”

“அப்ப உனக்கு கல்யாணமாகி நாலு வருஷம்தான் ஆகுது சரியா?”

“சரிதான்” என்றேன்.

“எப்படி ஐயாவோட கணக்கு?”

“எப்பவுமே சரியாதான இருக்கும்.”

எனக்கே ஒரு ஆசான் போல இருந்த காளியண்ணன் ஆன்மிகமாக மாறி இருந்தான். இப்போது தனக்கும் ஒரு ஆசான் இருப்பதாக அவன் தெரிவித்தபோது எனக்கு ஆச்சரியமும், ஒரு விதமான குழப்பமும் ஏற்பட்டது. அவனோடு இருந்த அடுத்த சில நாட்களில் எப்போதும் அவரைப் பற்றி பேசிப் பேசியே அந்த ஆசானைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டான். சாமியார்கள், ஆசிரமம் என்றாலே விலகிச் செல்லும் எனக்கும்கூட அவனது பேச்சுக்கள் ஒரு ஆசையை உருவாக்கி விட்டது.

“ஆசானுக்கு இப்போ குறைந்தது முன்னூறு வருஷம் ஆகியிருக்கும். இமய மலையில ரொம்ப வருஷம் இருந்திரூக்கிறார். பாபாஜியோட நெருங்கின சிஷ்யர்கள்ல இவரு முதன்மையானவர். இதுவரைக்கும் இருபத்தி அஞ்சு கும்பமேளா பார்த்திருக்கிறார். அவர் கண்களில் தென்படும் ஒளியைப் பார்த்தாலே போதும், நம்ம வாழ்க்கையோட வழி என்ன அப்படின்னு மிகத் தெளிவாக தெரிஞ்சுடும்.”

அதற்கு பிறகு அந்த ஒரு மாதத்தில் காளியண்ணனை அடிக்கடி சந்தித்தேன். ஆசானைப் பற்றிதான் அவன் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். அவன் பேசப் பேச இந்த மிகையான வழிபாட்டைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்து விடும். ஆனாலும் காளியண்ணன் ஆசானைப் பற்றிய செய்திகளைச் சொல்லக் கேட்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் மேலும் அவன் அவரைப் பற்றி எதாவது சொல்ல மாட்டானோ என்ற ஏக்கமும்கூட ஏற்படலானது.

அவன் ஆசானைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்ததை ஈர்ப்புடன் கவனித்த தருணம் அது. அப்போதும் என்னைப் பொறுத்தவரையில் காளியண்ணன்தான் எனக்கு ஆசானாக இருந்தான். ஆடிட் முடிந்து பொள்ளாச்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லாதபோதும் புதுப்பிக்கப்பட்ட நட்பு நீடித்தது.

காளியண்ணனுடன் பேசுவதை வைதேகியிடம் சொல்லச் சொல்ல அவளுக்கும் ஆசான் மீது ஒரு ஆர்வம் வருவதை என்னால் காண முடிந்தது. ஆனால் அதை நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வங்கி வேலைகள் அதிகமாகிவிடவே காளியண்ணனைப் பார்த்து பேசுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

வங்கியில் பணி மாறுதல் ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் சதாரா செல்ல வேண்டும். மிகக் குறைந்த வருடங்களே இருக்க வேண்டியிருக்க வேண்டும், இரண்டு வருடங்களில் மீண்டும் ஊருக்கே திரும்பி வந்துவிட முடியும் என்று சொன்னதால், வைதேகியையும், அம்மாவையும் விட்டுவிட்டுப் போகலாம் என்று முடிவு செய்தேன். காளியண்ணனிடம் விடை பெறும்போது, தனது நெஞ்சில் கை வைத்துக் கொண்டு, ‘நீ நன்றாக இருக்க வேண்டும்,’ என்று பிரார்த்தனை செய்து அனுப்பி வைத்தான்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசானைப் பற்றிய செய்திகள், மெதுவாக செய்தித்தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் வர ஆரம்பித்து விட்டன. சதாராவில் இருந்து கொண்டு, ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும், ஆசானைப் பற்றிய பல செய்திகளை கவனிக்கலானேன். பொங்கல், தீபாவளி, சுதந்திர, குடியரசு தினங்களில் தவறாமல் ஆசானின் பேட்டியை தொலைகாட்சியில் காண முடிந்தது. ஒரு முறை அப்போது உச்சத்திலிருந்த ஒரு நடிகைகூட பேட்டி கண்டாள். அந்த குறிப்பிட்ட நாட்களுக்கும் இந்த பேட்டிகளுக்கும் என்ன மாதிரி ஒரு தொடர்பு என்றே இனம் காண முடியாதபடி நுகர்வு கலாசாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் ஆசானுக்கு உருவாகிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. சதாராவில் கூட ஆசானின் வகுப்புகள் பிரசித்தமாக ஆரம்பித்துவிட்டன.

இடையில் ஆசானின் மனைவி இறந்து போனாள். மகள்கூட இறந்தாள். இவையெல்லாம் மிக முக்கியமான செய்திகளாக தொலைகாட்சியில் காண முடிந்தது. எதுவுமே தன்னை பாதிக்கவில்லை என்ற பாவனையுடன் ஆசான் ஊடகங்களில் உலா வந்தார்.

ஆசானின் “பிரச்சனையை எதிர் கொள்ளல்”, மனதை இலகுப் படுத்துதல்” போன்ற தலைப்புகளில் பல வகுப்புகள் உலகளாவிய அளவில் வளர்ந்து விரிந்தன. ஆசானின் ஆசிரமம் வர்த்தக உலகில் ஒரு முழுமையை அடைந்து விட்டதை என்னால் உணர முடிந்தது. நிறைய சமூக சேவைகள், மக்களின் ஆரோகியத்துக்காக பல விதமான மருத்துவ முகாம்கள், இலவச சிகிச்சைகள், மரக் கன்று நடுதல் என்று ஆசானின் பிம்பம் தெளிவான ஒரு சக்தியாய் உருவாகி விட்டது.

மீண்டும் கோவைக்கு மாற்றல் பெற்று வந்தபோது காளியண்ணன்கூட பல உயரங்கள் கடந்து விட்டதைக் காண முடிந்தது. அவன் தன்னுடைய நூற்பு ஆலை வேலையை விட்டுவிட்டு ஆசானின் அலுவல் நிர்வாகத்தில் இருந்தான். அவனுடைய ஆளுமை அங்கே நன்றாய் வெளிப்பட்டது. பொறுப்பேற்றுக்கொண்டு, அதிகாரத் தோரணையுடன் அலுவல்களை கையாண்டு தான் ஏற்றுக் கொண்ட வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது.

வைதேகிதான் ஆசானை முதலில் காணச் சென்றாள். அவள் எதனால் உந்தப்பட்டு அவரை காணச் சென்றாள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நான் ஆசானைப் பற்றியும், காளியண்ணனைப் பற்றியும் அடிக்கடி சொல்லி வந்த பல விஷயங்கள் அவள் ஆசானை காணச் செய்யும் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.

அவள் ஆசானைப் பார்க்கப் போவதாக முதல் முறை சொன்னபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது, எதுவும் சொல்லாமல் சிரித்து வைத்தேன். அந்த சிரிப்பே அவளிடமொரு தெளிவான தீர்மானத்தை உருவாக்கியிருக்கக் கூடும்.

வைதேகி நிச்சயமாய் ஆசானை காணப் போவதாகச் சொன்னாள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளுக்கு மனக் குழப்பங்கள் இருக்கின்றன என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாள் அல்ல நான். அதனால் அவள் ஆசிரமம் சென்று வருவதை ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும், இப்படியொரு கட்டத்தை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் தவித்தேன்.

அதனால்தானோ என்னவோ, அவள் என்னையும் ஆசானைக் காண வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டேன். எனக்கு என் வழி, அவளுக்கு அவள் வழி. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு சிறிய புரிதல் ஏற்பாடுடன் மிகத் தெளிவாக ஒரு கோடு போட்டுக் கொண்டு தாம்பத்தியத்தைத் தொடர ஆரம்பித்தோம்.

வைதேகிக்கும், எனக்குமிடையே எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் இருந்ததற்கும் ஆசானே காரணமாக இருந்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் வைதேகி ஆசான் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்றுதான் சொல்வேன். ஆசான் அவளிடத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாக்கியுள்ளதை விடுப்பில் கோவை வரும்போதெல்லாம் காண முடிந்தது. மனதளவில் அவளது எண்ணங்களிலும், வெளிப்புற குணாதிசயங்களிலும் நல்ல விதமான மாற்றங்களை காண முடிந்தது.

அம்மா போன் பண்ணி யார், யாரோ வீட்டுக்கு வருவதாகச் சொன்னார்கள். சத்சங்கம் என்ற பெயரில் வீட்டைச் சுத்தம் செய்து, ஆசானின் ஆளுயர புகைப்படத்தின் முன்னர் ஊதுபத்தி வைத்து தியானம் செய்கிறார்கள், ஆசானின் பேச்சுக்களை டிவிடியில் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அவர்களை வெளியிலிருந்து காண்கையில் மிக ஆச்சரியமாகவும், மனிதர்களிடம் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.

அவரவர் அளவில் ஒரு ஆன்மீகத் தேடல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. குழு மனப்பான்மை இருந்தாலும்கூட, அதில் கடைபிடித்து வரும் கட்டுப்பாடான முறையின் காரணமாகவும்கூட, ஆன்மீகத் தேடலை நோக்கியே எல்லாமும் பயணித்து வருவதாகத் தோன்றியது.

அந்த குழுக்களில் பொதுவாக வயதானவர்களும், மிகவும் இளம் பருவத்தவர்களுமே இருந்தார்கள். ஆசானின் பாதை நடுத்தர வர்க்கத்துக்கும், நடுத்தர வயதினருக்கும் ஒரு முழுமையான் நம்பிக்கையை உண்டாக்கவில்லை போலிருக்கிறது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால், வைதேகியைப் போன்ற சிலரும் இருப்பதைக் காண்கையில் அவர்கள் ஆசானின் பாதையில் பயணிப்பதை விட, குடும்பம், சூழல் என்ற வழக்கமான வட்டத்தை விட்டு ஒரு வெளி வட்டத்தில் பிரயாணிக்க ஆர்வம் காட்டுவதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த வெளி வட்டத்தைத் தாண்டி மற்றுமொரு வெளி வட்டத்தை எந்த ஒரு இடத்திலும் சந்திப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்றே தொன்றியது.

அவரவருக்கு என்று ஒரு வட்டப் பாதையை ஏற்றுக் கொண்டு அந்த வட்டப் பாதையில் மற்றுமொரு குழு எதிர்ப்படுவதை எப்போதும் தவிர்ப்பதாகவே தோன்றியது. சூரியனைச் சுற்றி பல கோள்கள் தமக்கிட்ட பாதையில் சுற்றி வருவதைப் போல ஆசானைச் சுற்றியும் இப்படி பலக் குழுக்கள் இருக்கக் கூடும். ஆசானைப் போல இன்னும் பல ஆசான்கள் அவரவர் குழுக்களில் தனித்தனி வட்டப் பாதைகளில் பயணிக்கிறார்கள். மேலும் பார்த்தால் ஆசான்கூட ஒரு வட்டப் பாதையில்தான் பயணிக்கிறார். பல ஆசான்கள் ஒரு குழுவாக சார்ந்து ஒரு வட்டப் பாதையில் பயணிப்பதாகவும், மற்றவர்களுக்கு அந்தப் பாதையில் இடமில்லை என்றும் தோன்றியது.

இவற்றையெல்லாம் வைதேகியிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றினாலும் எங்களின் ஒப்பந்த நிபந்தனைகளின் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு என்னுளே வைத்துக் கொண்டேன். மேலும், இப்படியெல்லாம் பேசுவது வைதேகிக்கு எப்போதும் புரியாது.

இப்போது ஜீப் ஆசிரமத்தை நெருங்குவது மிக நன்றாக தெரிந்தது. இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான வன பிரதேசத்தில் காட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து ஆசிரமம் கட்டப்பட்டிருந்து. பசுமையான சூழலில், மலைகளின் பின்னணியில் ஒரு கான்க்ரீட் குகை போன்ற அமைப்புடன், முடிந்த வரையில் இயற்கையை ஒத்திருக்கும் முயற்சியில் சணல் பைகளும், பச்சை பெயிண்ட் அடித்த கம்பி வேலிகளுமாய் கிட்டத்தட்ட ஒரு பசுமை வெளியாகவே அந்த இடம் இருந்தது.

எங்களது ஜீப்பைக் கண்டவுடன் வாசலில் இருந்த சீருடை காவலர் உடனடியாக சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினார். எந்த விதமான பரிசோதனையும் இன்றி ஆசிரமத்தின் பின்புறம் சென்றது ஜீப்.

சுற்றிலும் மிகப் பெரிய வேலிகள். மின்சாரம் பாய்ச்சப்பட்ட பிரம்மாண்டமான வேலிகள். யானைகளிடமிருந்தும், அங்கேயிருந்த வன விலங்குகளிடமிருந்தும், ஆசிரமவாசிகளைக் காக்கும் வேலிகள். விவசாய நிலத்தை காக்க காட்டுப் பன்றிகளை வெடி வைத்துத் தகர்க்கும் விவசாயிகளும், மின்சாரம் பாய்ச்சி யானைகளைக் கொன்று தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் விவசாயிகளும் எனக்கு ஞாபகம் வந்தது.

காளியண்ணன் என் தோளை தட்டி, “ஆசான் தியானத்தில் இருக்காரு. ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்” என்றான்.

“நாம வேணா அடுத்த முறை வரும் போது அவர பார்த்துக்கலாமே” என்றேன்.

ஆசானிடமிருந்து இன்னமும் சரியான அழைப்பு எனக்கு வரவில்லை என்று தோன்றியது. வைதேகியிடம் என்ன சொல்வது என்று யோசித்தபடி ஆசிரமத்தினுள்ளே சலசலத்து ஓடும் ஓடையில் கால்களை நனைத்துக் கொண்டு எதிரே வியாபித்து, கம்பீரமாய் நின்றுகொண்டிருந்த மலை முகட்டை அண்ணாந்து பார்த்தேன்.

ஆசானின் போதனைகள் சன்னமாக அந்தச் சூழலுக்கும், அமைதிக்கும், வெளி வானுக்கும் சம்பந்தமில்லாமல் ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்டிருந்தது. ஆசானின் சீருடை அணிந்த பணியாளர்கள் எல்லோரையும் அமைதியுடன் இருக்கும்படி ஜாடை செய்துக் கொண்டிருந்தார்கள். இயற்கையை பயன்படுத்தி செய்யப்பட்ட கைவினை பொருட்களை விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள். அவை எல்லாம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசிகளின் கைவண்ணத்தில் உருவானதாக இருக்கக்கூடும்.

தூரத்தில் யானை ஒன்றின் பிளிறல் கேட்பது போல் எனக்கு தோன்றியது. ‘அக்கோவ்’ என்று குயிலின் சன்னமான குரல் கேட்டபோது கண்களில் ஈரம் முட்டிக் கொண்டு வந்தது. மொட்டாய் நின்ற கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டு, ஓடையின் சிலீர் தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டேன்.

– மார்ச் 2013

vattam2

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *