றோஸா லஷ்சம்போர்க் வீதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 11,749 
 

குழந்தைக்கு நல்ல நித்திரைபோலும்,சரியாகப் பால்குடிக்காமலே தூங்கிவிட்டாள.; குழந்தையை இன்னொருதரம் எழுப்பிப் பால் கொடுக்கத் தொடங்கினால் வேலைக்குப்போக நேரமாகிவிடும். நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால் இவளுடைய ஜேர்மன் முதலாளிக்குப் பிடிக்காது.

வேலையால் நிறுத்தப்பட்டால்,இவளின் ஊதியத்தில் தங்கியிருக்கும் குடும்பம் தாங்காது. சுமதி,மெல்லமாகக் குழந்தையைத் தனது முலையிலிருந்து விலக்கினாள். குழந்தை,நித்திரைத் தூக்கத்தில், முலையைச் சப்புவதுபோல் சப்பிவிட்டுத்தூங்கிவிட்டது.

இன்னும் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்குக் குழந்தை எழும்பாமற் தூங்குவாள்.

மூன்று மாதக்குழந்தை உலகில் எந்தத் துன்பத்தையும் அறியாமற் தூங்குகிறாள்.

‘நானும் இப்படி;தான் இருந்திருப்பேனா’?

சுமதி தனக்குள்த்தானே நினைத்துக்கொள்கிறாள்.

சுமதி அவள் குடும்பத்தில்மூன்றாவது குழந்தை,மூன்றாவது பெண்குழந்தை. சுமதி பிறந்தபோது அவளின் தாய் பிரசவத்திற் தொடர்ந்த பிரச்சினையான நோய்களால் இறந்துவிட்டாள்.

சுமதி பிறந்தவுடன் அவள் தாயிறந்த பழியைச் சுமதியின் பாட்டி சுமதியிற் போட்டுவிட்டாள்.

‘பிறந்த நேரமே தாயை விழுங்க வந்த சனியன்’ என்று சுமதியைப் பாட்டி திட்டியதை உணராமல் சுமதியும் ஒருகாலத்தில் பால்ப்புட்டியின் சூப்பியைத் தாயின் முலையாக நினைத்துச் சூப்பிக்கொண்டிருந்திருக்கலாம்.

பக்கத்துக் கட்டிலில்; சுமதி பத்துவயது மகள் செல்வி படுத்திருக்கிறான். பத்துவயதில அவளுக்கு எவ்வளவு பொறுப்புணர்ச்சி!

செல்விக்குப் பிறகு இன்னுமொரு குழந்தையும் வேண்டாம் என்றுதான் சுமதி நினைத்தாள்.ஆனால் இந்தக் குழந்தை பிறந்து விட்டது. குழந்தை வயிற்றில் வந்ததும்,இவள் மாமியார் இவளைப்பார்த்த விதம்?

‘என்ன இன்னொரு பெட்டைக் குட்டியைப்போடப்போகிறாயா?’

ஈவிரக்கமின்றிச் சுமதியைப்பார்த்துக்கேட்டாள் அவள் மாமியார்.

சுமதி மறுமொழி சொல்லவில்லை. மாமியார் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முயன்றால் சுமதிக்கு மூளை குழம்பி விடும்.

அறையின் ஒரு மூலையில் கட்டிலில் இவள் கணவனின் குறட்டை சீராகக் கேட்கிறது.

குறட்டைச் சத்தத்துடன் மதுபான நெடியும் மூக்கில் அடிக்கிறது.

சுமதி பெருமூச்சு விட்டபடி எழுந்தாள்.

மெல்ல அடி எடுத்துவைத்து குளியலறைக்குச் சென்றாள்.போகும்போது ஜன்னலால் வெளியே எட்டிப்பார்த்தாள்.

ஜன்னலுக்கு வெளியே உலகம் மிக அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. வானத்தில் நட்சத்திரங்களைக் காணவில்லை. கருமுகில்கள் நிறைந்த வானம் எப்போதும் மழையைக் கொட்டலாம்.

தூரத்தில் கருமுகில்களுக்குக் கண்ணடித்துக்கொண்டு ஒரு விமானம் போய்க்கொண்டிருக்கிறது.

சுமதி ஜன்னற் சீலையை மூடிவிட்டு ஒரு நிமிடம் சுவரிற் சாய்ந்தாள். இப்போது நேரம்,அதிகாலை ஒரு மணியாகிறது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவள் வேலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கிறாள்.

ஊரில்,யாழ்ப்பாணத்தில், பயிர்களுக்குத் தண்ணீர்;விடக்கூட,காலையில் ஐந்து மணிக்கு முன் யாரும் எழும்புவது அவளுக்குத் தெரியாது.

இது பேர்லின் நகர்.ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்து சேர்ந்த ஐரோப்பிய நகரங்களிலொன்று. இடம் பெயர்ந்த நகர்களில்,இரவு பகலாக வேலைசெய்யும் நடைப்பிணங்களாக வாழப் பழகிக் கொண்ட தமிழர்களில் அவளுமொருத்தி.

வேலை செய்யாவிட்டால் குடும்பம் என்ன செய்யும்? கவுரவத்தைப்பார்த்தால் வாயும் வயிறும் என்ன செய்யும்?

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனவாதக் கொடுமைகளுக்குத் தப்பி புலம் பெயர்ந்த தமிழர்களில் படித்த பட்டதாரிகள், சிந்தனையாளர்கள்,அறிஞர்கள்,கலைஞர்கள்,என்று பல தரப்பட்டவர்களிருக்கிறார்கள்.

ஆனால், மொழி தெரியாத இடங்களில் உயிர் தப்பி வாழவந்தவர்கள்,தங்களின் படிப்புக்கும், அறிவுக்கும் உகந்த வேலையைத் தேடிக்கொள்வது கனவில் நடக்கும் காரியமே.

மேற்கு நாட்டாரின்,ஆழ்ந்த இனவாதக் கொளகைகளுக்கு முன்னால், மூன்றாம் உலக் நாடுகளிலிருந்து வரும் மக்களின் திறமைகளும் ,சிந்தனைகளும் மதிக்கப்படுவதில்லை.

அவர்களின் பார்வையில், அயல்நாட்டு மக்கள் என்போர், தங்கள் நாட்டுக்குக் கூலிவேலை செய்து பிழைக்க வந்த மூளையற்ற மனிதர்கள்.

அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பவர்களில்; சுமதியும் ஒருத்தி.அவள் இலங்கையில் ஏ லெவலுக்கு மேல் ஒன்றும் படிக்கவில்லை. ஆனால், பல்கலைக்கழகம் சென்று படித்துப் பட்டம் பெற்ற அவளின் தமக்கைகளை விடப் பகுத்தறிவுவாதி. வாழ்க்கையின் தேவைகளையுமுணர்ந்தவள்.உழைக்கத் தயங்காதவள். எத்தனையோ ஆசைகளை மனதில் புதைத்து விட்டு இன்று தனது குடும்பத்திற்காகத் தன்னையற்பணித்தவள்.

இப்படி நினைக்கும்போது,சுமதிக்குத் தன்னிலேயே ஒரு பரிதாபம் வரும். ஜன்னல்களில் பதிந்த அவளின் பார்வை,உலகத்து இருளைத் தாண்டிக்கொண்டு,இலங்கையின் ஒரு ஊருக்கு இவளின் நினைவை இழுத்துக்கொண்டு செல்கிறது.

நீலவானமும்,பசும் பச்சை நிலங்களும்,மேனியைத் தடவிச் செல்லும் இளம் தென்றலும், இறைவனை ஞாபகப் படுத்தும் கோயில் மணியோசையும் அவள் நினைவைச் சீண்டுகின்றன.

பன்னிரண்டு வருடங்களுக்க முன்னால், சுமதி, பேர்லினில் வாழும் இந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வில்லை. பேர்லின் நகரில், அதிகாலை ஒரு மணிக்கு வெளியிற் சென்று பேப்பர் போடும் வேலையைச் செய்வதை அவள் கற்பனை கூடச் செய்யவில்லை.

பேர்லின் வாழும் அந்நிய நாட்டார்களுக்குக் கிடைக்கும்வேலைகள், றெஸ்ட்டோரன்டுகளில் வேலை.அல்லது கட்டிடங்களையொ வீடுகளையோ துப்பரவு செய்வது. அல்லது, பெரிய கொம்பனிகளின் விளப்பரப் பத்திரிகைகளை வீடுகளுக்குக் கொண்டு போடுவது போன்றவையாகும்.

இன்று,பேர்லினிலிருந்து இலங்கைத் தமிழர்கள் துரத்தப்பட்டால், சிலவேளை பேர்லின்; துப்பரவு செய்யப்படாமல் நாற்றமெடுக்கலாம்.

இந்த இரவில்,இவள் முகம் பளிச்சென்றிருக்கவில்லையென்றோ அல்லது இவளது தலை குழம்பிக் கிடக்கிறது என்றோ யார் கவனிக்கப்போகிறார்கள்.

முகம் கழுவித் தலை சீவப்போன சுமதி; வேதனையுடன் சிரித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில், தெருவில் ஒன்றிரண்டு மக்களையே காண்பது அரிது.

அவர்களும் குடிவெறியில் தடுமாறுபவர்களாக அல்லது இவளைப் போல் வேலைக்கு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சில அந்நிய நாட்டு மனிதர்களாகவிருக்கும். அவர்களில் யாரும், இவளின் முகத்தையோ, தலையலங்காரத்தையோ பெரிது படுத்தப்போவதில்லை.

ஆனாலும் வழக்கம்போல் முகம் கழுவித் தலை வாரிக்கொண்டாள்.வெளியே சரியான குளிர். அதற்கேற்ப உடுத்துக் கொண்டாள். ‘ஊரில் இப்போது, மார்கழி மாதத்தில் திருவெம்பாவைப் பக்திப் பாடல்கள் அதிகாலை மவுனத்தைப் பிழந்து கொண்டு காதில் வந்து விழுமே’. இன்னுமொரு நினைவு சட்டென்று வந்து போகிறது.

குழந்தைகளை,இன்னொருதரம் திரும்பிப் பார்கத்து விட்டுக் கதவைப் பூட்ட வெளிக்கிட்டவளின் பார்வை அவள் கணவனிற் படிகிறது. அவன் உடுத்திருக்கும் சாரம் சோர்ந்து போனதும் தெரியாமல் மதுவெறியிற் படுத்திருக்கிறான் அவள் கணவன் சண்முகநாதன்.

அவன், உலகை மறந்த ஆழந்த நித்திரையிற் படுத்திருந்தான். எச்சில் வழிந்து தலையணையை நனைத்திருக்கிறது.

அவனின் குறட்டைச் சத்தம் எரிச்சலையுண்டாக்கியது. அறை முழுதும் மதுவாடை நிறைந்திருந்தது. அவனைப் பார்த்ததும் அவள் தனது முகத்தைப் பொத்திக்கொண்டு அழவேண்டும்போலிருந்தத.

இவனை நமபித்;தானே தனக்கு முன்னால் இரண்டு தமக்கைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இந்த ஊருக்கு இவனுடன் ஓடிவந்தாள்?

இவனை இப்படியாக்கியது யார்?

நினைவுகள் சிறகடிக்கின்றன.

அவனுக்கும் அவளுக்கும பன்னிரண்டு வயது வித்தியாசம்.சண்முகநாதன், சுமதியின் தமக்கை ஒருத்தியின் கிளாஸ்மேட். சுமதிக்கு நினைவு தெரிந்த நாள்முதலே அவனைத் தெரியும்.

இன்று இவனை நம்பி ஓடிவந்து என்ன சுகத்தைக் கண்டு விட்டாள்? சுமதியின் கண்கள் பனிக்கின்றன. மெல்லமாகக் கதவைச் சாத்தினாள்.

முன்னறையில் மாமியார் படுத்திருக்கிறாள். மாமியார்; தற்செயலாக எழும்பி, சுமதியின் கலங்கிய கண்களைக் கண்டால் திட்டுவாள்.’மூதேவி மாதிரி விடிய முதலே அழத் தொடங்கிட்டியா?’ என்று இவளின் மாமியார் முழங்கத் தொடங்கி விடுவாள்.

சுமதி தனது சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவசரமாகப் படிகளில் இறங்கிக் கொண்டாள்.மூன்றாவது மாடியிலுள்ள வீட்டில் சுமதி குடும்பமிருக்கிறது. மாடிப்படிகளில் அவள் காலடிகள் அவசரமாகத் தொனிக்கின்றன.மாமியாருக்கு இவளைப் பிடிக்காது.பெண் இன்னொரு பெண்ணை இப்படி வெறுக்கும் சமுதாயத்தில் என்னவென்று தர்மம் நிலைத்திருக்கும்?

சுமதி நடந்தபடி யோசிக்கிறாள்.

பத்திரிகை போட இப்படி எத்தனையோ மாடிப்படிகள் ஏறி இறங்கவேண்டும். முதலிற் போய் ஒரு கனமான பேப்பர்க் குவியலை எடுக்கவேண்டும். பின்னர்,அவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் போட்டு முடிய அதிகாலை நாலு மணியாகி விடும்.

பெரும்பாலான ஜேர்மனியர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். 1989ம் ஆண்டுக்குமுன், ஜேர்மன் தெருக்களில்,ஒருத்தொருக்கொருத்தர் முன் பின் தெரியாதவர்களாக விருந்தாலும் காலை வணக்கம் சொல்வார்கள். இப்போது ஏராளமான அந்நியர்கள் போரிலினில் வந்து குவிந்து விட்டதால், ஜேர்மனியர்களுக்கு அந்நியர்களைப் படிக்காமல் அருவருப்பாகப் பார்க்கிறார்கள்.

அகதிகளாக வந்தவர்கள் தங்கள் நாட்டுக்குத் தொற்று தொற்று நோய்களைக் கொண்டுவந்து பரப்ப வந்திருக்கிறார்கள,;களவு செய்ய வந்தவர்கள். கவாலித்தனம் செய்பவர்கள். பழக்க வழக்கம்,பண்பாடுகள் தெரியாதவர்கள், என்று சில ஜேர்மனியர்கள்; துர்ப்பிரசாரம் செய்கிறார்கள். இப்போது சில ஜேர்மனியர் வெளிநாட்டாரைக்கண்டால், காறித்துப்புகிறார்கள், தூஷணத்தால் திட்டுகிறார்கள்

சுமதி தெருவில் இறங்கினாள்.இந்தத் தெருவில், தங்கள் துவேசத்தால் எத்தனை யூதர்களை இந்த ஜேர்மன்காரர்கள் கொலை செய்திருப்பார்கள்?

இந்தத் தெருவின் பெயர் றோஸா லஷ்சம்போhக் வீதி. இந்தத்தெருவின் மூலையிலுள்ள வீடொன்றிற்தான் சுமதியின் குடும்பம் வசிக்கிறது. மேற்கு,பேர்லினையும் கிழக்கு பேர்லினையும் பிரிக்கும் பிரண்டன்போர்க் வாசலின் ஒரு சில மைல்களுக்கப்பால் இந்தத் தெருவிருக்கிறது.

அவள் சைக்கிளில் ஏறிக்கொண்டாள், யாரோ ஒருத்தன் மதுபோதையில் தள்ளாடியபடி ஆபாசமாகப்பேசிக் கொண்டு போகிறான்.

மேற்கு ஜேர்மனியும் கிழக்கு ஜேர்மனியும் 1989ல் ஒன்றாகச்சேர முதல், தெருக்களில் இப்படி யாரும் ஆபாசமாகப் பேசுவதைக் கேட்க முடியாது.

காலம் காலமாக கம்யுனிசத்தை அனுபவித்து வந்த கிழக்கு ஜேர்மன் மக்கள், கிழக்கும் மேற்கும் இணைந்தபின் செல்வம் தங்களுக்குச் கொட்டும் என்று நினைத்தார்கள். இப்போது அவர்கள் ஏமாற்றத்துடன் ஏழைகளாக ஜேர்மன் தெருக்களிற் திரிகிறார்கள். வீடுவாசல் வைத்திருக்கும் வெளிநாட்டாரில் அவர்களுக்குப் பொறாமையாகவிருக்கிறது. சில வேளைகளில் அவர்களின் ஆத்திரம் கொலைகளிலும் முடிவதுண்டு.

கிழக்கு ஜேர்மன்காரின் கொதிப்பை, ஜேர்மன் இனவாதிகள் பயன்படுத்திக்கொண்டு அயல் நாட்டாரை இனப் படுகொலை செய்கிறார்கள். அண்மையில்,நான்கு துருக்கியப் பெண்களைப் பூட்டிய அறையில் வைத்து துடிக்கத்துடிக்க கொழுத்திக் கொலை செய்தார்கள் ஜேர்மன் இனவாதிகள்.

கோடிக்கணக்கான யூதர்களைக் கொலை செய்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களிற் சிலர் இன்னுமிங்கிருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்த 1983ம் ஆண்டு கலவரத்தின்போது, சிங்களக் காடையர்கள் சண்முகநாதனைத் தெருவில் வைத்துப் பெற்றோல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய முயன்றபோது அவன் ஓடித்தப்பினான்.

அங்கு ஓடித்தப்பியவர்கள், இங்கு ஜேர்மனியில் இன்னும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது.

அவளுக்குத் தன் கணவனை நினைத்தால் ஒரு பக்கம் கோபம் வந்தாலும்; அவனைப்பார்க்கம்போது பெரும்பாலும் பரிதாபம்தான் வரும். அவளுடைய அக்காவுடன் ஒருகாலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்தவன். படிப்பு முடியவிட்டுக் கொழும்பில் வேலை கிடைத்தது.

80ம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தைக்கட்டவிழ்த்துக்கொண்டிருந்தது.

கொழும்பில் அதிகம் பிரச்சினையில்லையில்லாத கால கட்டத்தில். கொழும்பிலிருந்து கொண்டு விடுதலைக்கு அடிக்கடி ஊருக்கு வருவான்

1983ம் ஆண்டு,இலங்கை இராணுவத்தைச்சேர்ந்த 13 படையினரை யாழ்ப்பாணத்தில்வைத்துத் தமிழ்ப் போராளிகள்; கொலை செய்தார்கள். அதன் எதிரொலியான சிங்களஅரச பயங்கரவாதத்தைக்கண்டு உலகமே அதிர்ந்தது. அரசாங்கத்தால் பாதுகாக்கப் படவேண்டிய சிறுபான்மையின தமிழ் மக்களுக்கெதிராக இப்படி ஒரு பயங்கர நடவடிக்கையா?

இப்படி ஒரு சூழ்நிலையை முகம் கொடுக்கச் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு என்ன செய்தார்கள்?

நாகரிகமடைந்த மக்கள் இலங்கையில் நடந்த நரபலியைக்கண்டு நாணித் தலைகுனிந்தார்கள்.

சுpங்களப் பேரினத்தின் அரசபடை சிறுபான்மைத் தமிழரை வேட்டையாடியது.

சண்முகநாதன் போன்றவர்கள்,இனிக்கொழும்புக்குப்போவதில்லை எனச்சபதம் எடுத்துக்கொண்டார்கள்.

சுமதியின் சிந்தனை தொடர இருட்டில் தன் பிரயாணத்தைத் தொடர்கிறாள்.

சுமதியின் கண்கள்,றோசா லஷ்சம்போர்க் வீதி மூலையிலிருக்கும் அந்தக் கிழவியின் வீட்டை நோட்டம் விடுகின்றன.அந்த வீட்டிலிருக்கும் மூதாட்டிக்கு இப்போது எழுபது வயதுக்கு மேலாகிறது.ஜேர்மனியரால் யூதர்களை அழித்தொழிக்க அமைத்த சித்திரவதை முகாப்களில் ஒன்றான ஆஷ்விஷ் என்ற கொலைக் கூடத்தில் தன்னுடைய குடும்பத்தில் அத்தனைபேரையும் பறிகொடுத்த சரித்திரத்தைத் தன்னுடன பிணைத்திருப்பவள் இந்த யூதப்பெண்மணி இஸபெல் கோல்ட்பேக்கர்.

மிருகங்களுக்கு அடையாள நம்பர் போட்டதுபோல் இவள் கையிலும் ஜேர்மனியர்களால் இவளின் அடையாள நம்பர் எழுதப்படடிருக்கிறது.அமெரிக்கரும், பிரித்தானியரும் இரஷ்யரும் ஜேர்மனியர்களை வென்று ஒரு சில யூதர்களைக் காப்பாற்றினார்கள். அந்தமாதிரிக் காப்பாற்றப் பட்டவர்களில் ஒரு இளம்பெண்தான இஸபெல்கோல்ட் பேக்கர்.

குடும்பத்தில் அத்தனைபேரையும் இழந்தபின், அனுதாபமுள்ள ஒரு அமெரிக்க யூத குடும்பத்தின் தயவில் அமெரிக்கா சென்றவள். தனக்கொரு குடும்பத்தை அமெரிக்காவில் உண்டாக்கியவள்.

பல்லாண்டுகள் சென்ற பின், தனது கடைசிக்காலத்தைத் தான் பிறந்த நாட்டில் வாழ்ந்து முடிப்பேன் என்று இஸபெல் கோலட்பேக்கர் வந்திருக்கிறாள். தனது மூதாதையர்,ஹிட்லரின் கொடுமைகள் தொடங்க முதல் வாழ்ந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தனது மூதாதையர் இறந்த நாட்டிற்தான் அவளும் இறப்பாளாம்.

சண்மகநாதனும்,இஸபெல் முதாட்டியும் நல்ல சினேகிதர்கள்.இருவரும் பேரினவாதத்தின் கொடுமையை நேரில் அனுபவித்தவர்கள். உலகில் நடந்த,நடந்து கொண்டிருக்கிற பல விடயங்களைப்பற்றி மணிக்கணக்காகப்பேசிக்கொண்டிருப்பார்கள்.

பேரினவாத ஒடுக்கு முறை மட்டுமல்லாது, சாதி சமய பேதங்களை முன்வைத்து நடத்தப்படும் அத்தனை கொடுமைகளுக்கும் எதிராக முற்போக்கான மக்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று பேசிக்கொண்டிருப்பார்கள்.

சுமதி தெருமுனையிற் திரும்பினாள்.இப்போது,பெரும்பாலும் இஸபெல் மூதாட்டியின் முன்னறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மூதாட்டியார்,ஏதையோ வாசித்துக்கொண்டிருப்பது தெரியும்.

‘இந்த வயதில் என்ன நித்திரை? இளமையில் நடந்தவற்றை மனதில் இரைபோட்டுக்கொண்டு சும்மா புரண்டு கிடப்பதை விட ஏதோ ஒரு நல்ல புத்தகத்தைப்படிக்கலாமே’ மூதாட்டியார் அடிக்கடி சொல்லிக்கொள்வாள்.

‘நானும் ஒரு காலத்தில் நான் பிறந்த நாட்டுக்குப்போவேனா? இந்த நினைவுகளை மனதில் இரைபோட்டுக்கொண்டு,மார்கழியின் குளிரான இரவுகளில் திருவெம்பாவைப் பாடல்களை ரசிப்பேனா? ‘

சுமதியின் கண்கள் கலங்குகின்றன. ஜேர்மனியில், இந்த இரவு வேளையில் கொள்ளிவாய்ப்பேய் மாதிரி வீதி வலம் வரும் வேலையைப் பெரும்பாலான இலங்கைப் பெண்கள் செய்வது மிகவும் அருமை. சுமதி மாதிரி ஒன்றிரண்டு பெண்கள் ,தங்களின் குடும்பச் சுமை தாங்காது இப்படி வேலை செய்கிறார்கள்.

தூரத்தில் இன்னுமொர சைக்கிள் போய்க்கொண்டிருக்கிறது. அது தர்ஷிணி அக்காவாக இருக்கவேண்டும். அவளும் பாவம், குடிகாரக் கணவனிடம்; அடிவாங்கித் மிகக் கொடுமையான துயர்கள் பட்டபின்,அவனை விட்டுப்பிரிந்து நான்கு குழந்தைகளுடன் தனியாக வாழ்கிறாள். அவளின் தனிமையான வாழ்க்கையைத் தாறுமாறாக நினைக்கும் தமிழ் ஓநாய்கள் ஏராளம்.

கணவனைப் பிரிந்துவாழும் ஒரு பெண்ணை விலைமாதாக நினைக்கும்’கற்புடைய தமிழன்கள்’ எங்குமிருக்கிறார்கள்.

தர்ஷிணி. போன்ற தனியாக வாழும் தமிழ்ப்பெண்களை எலும்பைப் பார்க்கும் நாய்கள்போல்,பண்புகெட்ட சில தமிழர்கள் எச்சிலூறப் பார்க்கிறார்கள்.

தர்ஷிணி சொல்வாள்,’ இந்த மாதிரித் தமிழன்கள் உலகத்தில எந்த மூலைக்குப்போனாலும் திருந்தப்போவதில்லை. பெண் ஒருத்தி தனியாக இருந்தால் அவளுடன் படுத்தெழும்பப் பார்க்கிறார்களே தவிர அவளுக்காகப் பரிதாபமாகப் பட்டு உதவவோ அல்லது அவளின் துயர் நிலையை உணரவோ மறுக்கிறார்கள்’.

தர்ஷிணியின் வேதனை சுமதிக்குப்புரியும். எவ்வளவோ படித்த சண்முகநாதனும் சுமதி வேலைக்குப்போவதை விரும்பவில்லை.

தண்ணீர் போட்டால் அந்தத் தள்ளாட்டத்தில் ஏதோ எல்லாம் பொரிந்து கொட்டுவான். ‘நேரம் கெட்ட நேரத்தில் வெளியிற் போய் வேலை செய்யும் பெண்களைப் பற்றி என்ன மாதிரிக் கதைக்கினம் தெரியுமோ?’ என்று வார்த்தைகளால் இவளை வதைப்பான்.

போதை வெறி போனபின் இவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்; வடிப்பான்.’என்னை மன்னித்துவிடு சுமதி என்று குழந்தைபோற் தேம்புவான்.

அவனைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவள், அவன் பேசியதை மறக்கவும் மன்னிக்கவும் பழகிக் கொண்டாள்.ஓரு கணவளைக் கையாலாகாதவன் என்று நினைக்கப் பண்ணிய சூழ்நிலையை அவள் வெறுத்தாள்.

தூரத்தில் ஒரு விபச்சார விடுதி தெரிகிறது. அது நிறைய அயல்நாட்டுப் பெண்கள் வேலை செய்கிறார்கள். பல நாடுகளிலுமிருந்து வந்த அல்லது வரவழைக்கப் பட்ட பல நிறப் பெண்கள் உடல்களை வெள்ளைத் தோல்க் காரன்களுக்கு விற்றுப் பிழைக்கிறார்கள். ‘மூன்றாம் உலக நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்களாக, விபச்சாரிகளாக மாற்றம் செய்கிறது இந்த கேடுகெட்ட பணக்கார மேல்நாடுகள’சுமதி மேற்கு நாட்டை வைது கொண்டாள்.;.

தங்கள் நாடுகளிலிருந்து,அரச பயங்கரவாதத்திலிருந்தோ அல்லது வறுமையான வாழ்க்கையிலிருந்தோ வந்த மக்களின் நிலை, சட்டியிலிருந்து தப்பி எரியும் நெருப்பில் விழுந்த கதையாகவிருக்கிறது.

அந்த இடத்தைக் கெதியாகத் தாண்ட,அதிவேகமாக சைக்கிளை ஓட்டினாள் சுமதி.

‘ஏய்,ஏய்..ஏன் ஓடுகிறாய்?’ ஒரு வெள்ளைக்காரன் வெறியில் இவளைப் பார்த்துக் கத்தினான்.ஆங்கிலம் பேசினான். அவன் ஜேர்மன்காரனாக இருக்க முடியாது.அமெரிக்கன் அல்லது இங்கிலிஸ்க்காரனாக இருக்கவேண்டும்.

இங்கிலாந்தின் வேலையில்லாத் திண்டாட்டமும்,ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியும் ஆங்கிலேயர்களை இப்போது ஜேர்மனிக்குப் படை எடுக்கப் பண்ணியிருக்கிறது.

‘hநல றாயவ’ள வாந hரசசல? றூல னழn’வ லழர உழஅந றiவா அந யனெ hயஎந ய niஉந வiஅந?’அவன் இவளைக் கேட்டுக் கொண்டு தொடர்ந்தான்.

அவன் இவளின் சைக்கிளை மறித்தான்.

சுமதிக்கு ஆத்திரமும் அழுகையும் வந்தது. வுpபச்சார விடுதியில் முகம் நிறைய பூசிக்கொண்டு ,தங்களின் மார்பகங்களின்; பெரும் பகுதியை வெளியற் காட்டிக்கொண்ட விபச்சாரிகள் ஒன்றிரண்டுபேர் தங்களின் வாடிக்கைக்காரர்களுடன் சல்லாபத்திலிருந்ததால், இந்த ஆங்கிலேயனின கூச்சலையோ அவனைத் திட்டிக்கொண்டு போகும் ‘இந்தியப்’ பெண்ணையோ சட்டை செய்யவில்லை.

சுமதி இப்போது விம்மவில்லை. உண்மையாகவே அழுதுவிட்டாள்.யாரைக்கோபிப்பது? உலகத்திடம் கோபம் வந்தது.யார் என்று தெரியாத மனிதர்களிடமெல்லாம் கோபம் வந்தது.

தங்களை இப்படி நாடோடிகளாக்கிய சிங்கள இனவாதம்,அவர்களை அப்படித் தூண்டிய தமிழ் இனவாதம்,கல்யாணங்களுக்காகப் பலியாடுகளாகும் தமிழ்ப்பெண்களைச் சுற்றிய தமிழ்க் கலாச்சாரம் என்ற மாயை..இப்படி எத்தனையோ. சுமதி குழம்பிப் போனாள்.

அவசரமாகச் சைக்கிளை மிதித்தாள். தூரத்தில் பேப்பர்க்கடை தெரிகிறது. பேப்பர்களை எடுக்கவேண்டும்.

தர்ஷிணி புறப்பட்டுக்கொண்டிருந்தாள். பாவம் தர்ஷிணி, நான்கு குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறாள்.குழந்தைகள் தாயின் துயர் தெரிந்தவர்கள்.பெரிய மகன் அவன் வகுப்பில் அவனின் திறமைக்காக முதற்பரிசு வாங்கினான. பல துன்பங்களுக்கு முகம் கொடுக்கும் தர்ஷிணியுடன் சேர்ந்து சுமதியும் அழுவாள்.’எங்கள் வாழ்க்கை சிதைந்து விட்டது,எங்கள் குழந்தைகளையாவது நல்ல மனிதர்களாக வளர்ப்போம்’ இருபெண்களும் அடிக்கடி சொல்லிக்கொண்வார்கள்.

சுமதி போயக்கொண்டிருக்கிறாள்.’ஹலோ’ அவள்,அவன் மூலையில திரும்புவதைக் கவனிக்கவில்லை. அவனும் இரவில் பேப்பர் போடும் ஒரு தமிழன்.அடிக்கடி கூட்டம், அரசியல், ஆர்ப்பாட்டம் என்றலைவான்.ஆனால் சுமதி போன்ற பெண்களைக் கண்டால் ‘அலட்டத்’ தயங்காதவன்.

‘சில ஆண்கள்,அரசியல் என்று ஈடுபட்டால்,ஏதோ ஒரு அந்தஸ்து வந்து விட்டதும்,தங்கள் வேலைக்குப் பேப்பர் பென்சில்களைப் பாவிப்பதுபோல் பெண்களையும் பாவித்துப் பார்க்கலாம் என்று ஏன் நினை;கிறார்களா?’

சுமதியால் மறுமொழி தேட முடியாத கேள்வியது.

அவன் பெயர் நாகராஜா.இவளைப் பார்த்துப் புன்னகைத்தான். ‘பாம்புகள் நெழியும் சுழியும்’ சுமதி தனக்குள் முணமுணுத்துக்கொண்டாள். முற்போக்குவாதிகள் என்று காட்டிக்கொள்ளத் தாடியும் மீசையும் வைத்துக்கொண்ட பாம்புகளா சில ஆண்கள்?

இவள் புறப்பட அவசரப் பட்டாள் நேரம் மூன்று மணியாகி விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பசியுடன் எழும்பியழும். இப்போதே அவளின் முலைகள் பாலின் கனத்தில் தினவெடுக்கத் தொடங்கிவிட்டன.

அவள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டாள்.

”சனிக்கிழமை ஒரு கூட்டமிருக்கு, சண்முகநாதனையும் கூட்டிக்கொண்டு வரப்பாருங்கோ’ நாகராஜா இளித்தான்;.

”அவருக்குச் சொலலுறன்’அவனைப்பார்க்காமல் அவள் விரைந்தாள்.

‘தமிழாம், கூட்டமாம்,மண்ணாங்கட்டியாம்.தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் தங்கட பொக்கட்டில வைச்சுக்கொண்டு திரியுற பெரிய கதை. சில பைத்தியங்கள் சும்மா பழங்கதைகளைச் சொல்லித் தமிழரப் பேய்க்காட்டுதுகள்.சங்க காலம், பரணிகண்ட தமிழன் என்ட கதையெல்லாம் இடம் பெயர்ந்த நாட்டில விசர்க்காய்ச்சல் பிடிச்சவர்களின்ர கதைகள். இவை அதை இதைக் கதைச்சிக் காசு சேர்ப்பினம், இஞ்ச கஷ்டப்படுறது எங்களப்போல ஏழைகள்தான்’அவனிடம் சொல்லிக் கத்தவேண்டம்போலிருந்தது.

அவள் ஆத்திரத்துடன் விரைந்தாள்.

சுமதிக்கு இந்த நாட்டை ஒரு நாளும் பிடிக்காது.விமானத்திலிருந்து வந்து இறங்கிய நிமிடமே ஏதோ ஒரு இருட்குகையுள் நுழைவது போன்ற உணர்வு.

‘கோடிக்கணக்கான யூத மக்கள் இந்த மண்ணில் கொலை செய்யப்பட்டார்கள்.அந்த யூத மக்களின் மரண ஓலங்கள் மவுனமாக இந்நிலத்தில் உறைந்து கிடக்கிறதா? அவர்களின் குருதி என்றும் இந்த மண்ணோடு கசிந்து கிடந்து என் கால்களில் பிசுபிசுக்குமா? யூத மனிதர்களின் ஆவிகளின் பரிதாபமான மரண கிசுகிசுப்புக்கள் காலையிளம் குளிர்காற்றுடன் சேர்ந்து வந்து என் உடலோடு ஒட்டிக்கொள்ளுமா?’

சுமதியின் உடம்பு சிலிர்த்தது.இவளுக்க இந்த நாட்டைப் பிடிக்கவில்லை என்று சண்முகநாதனிடம் ஒருநாள்ச் சொன்னபோது அவன் சொன்னான,;’லோறா லஷ்சம்பேர்க்கும் என்ற பெண்ணும் நீ சொன்னமாதிரித்தன் சொன்னாளாம்’

‘யார் அந்த லோறா லஷ்சம்போர்க்?’ அப்பாவித்தனமாகக் கணவனைக் கேட்டாள் சுமதி.

பேர்லினுக்கு வந்த தமிழ் அகதிகளில் லோறா லஷ்சம்போர்க் என்ற பெண்ணும் வந்ததாக அவள் கேள்விப்படவில்i சுமதி. அவள் தன் குடும்பத்தைப் பராமரிப்பதிற் கெட்டிக்காரி. உலக விடயங்களில் அதிகம் அக்கறை காட்ட நேரமில்லை,விருப்பமுமில்லை.

சண்முகநாதன் இலங்கையிலிருக்கும்போது பல முற்போக்குக் கூட்டஙகளுக்கும் போயிருக்கிறான். அவனுடைய மாமனார் நல்ல இலக்கிய ஆர்வலர்.அவரின் பல புத்தகங்களையும் படித்திருக்கிறான்.

‘நாங்கள் இருக்கிற தெருவின் பெயர் ஏன் லோறா லஷ்சம்பேர்க் என்று ஏன் வந்தது என்பது உனக்குத் தெரியுமா?’

‘எனக்குத் தெரியாது,உங்களுக்குத்தெரியுமா?’

அவள் தனது இளம் வயதில் இவனிடம் இப்படி அப்பாவித்தனமான கேள்விகள் கேட்கப்போய்த்தான் இவர்களுக்கிடையில் காதல் வந்தது. அக்காவுடன் படித்தவன் என்ற முறையில் எப்போதாவது சண்முகநாதன் இவர்கள் வீட்டுக்கு வருவான். சுமதி சின்னப் பெட்டை. எலிவால்ப் பின்னலுடன் ஓடித்திரிந்த வயது. 83ம் ஆண்டு கலவரத்தின் பின் அவன் ஊரோடு தங்கி விட்டான். இவர்கள் வீட்டுககுக அடிக்கடி வந்தான்.சுமதி தொண தொணவென்று அவனிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருப்பாள்.

இவளின் சுறுசுறுப்பும் கண்களிற் தெரிந்த தேடலும் அவனுக்குப் பிடித்து விட்டது. சண்முகநாதனின் குடும்பத்தில் இரண்டு ஆண்பையன்களும் இரண்டு பெண்களும் ஆண்கள் இருவரும்; பல்கலைக்கழகப் படிப்புப் படித்தவர்கள். நல்ல வேலையிலிருந்தவர்கள். 83மு;ஆண்டுக் கலவரத்தின் பின ஒருமகனைக் கனடாவுக்கு அனுப்பி விட்டார்கள். அடுத்த மகன் சண்முகநாதனை ஜேர்மனிக்கு அனுப்பத் திட்டம் நடந்து கொண்டிருந்தது.

‘சுமதியைக் கலயாணம் செய்யப்போகிறேன்’ இப்படிச் சண்முகநாதன் சொன்னபோது அவனது தாய் நம்பவில்லை.

அவனுக்கு இரண்டு தங்கச்சிகள் இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் சுமதிக்கு இரண்து தமக்கைகள் கலயாணமாமலிருக்கிறார்கள்.

‘எனக்கு முப்பது வயதாகிறது”முன்தலையில் சாடையாக வரும் வழுக்கையைத் தடவிக்கொண்டு இவன் சொன்னான்.

‘சுமதியை என்னவென்று கல்யாணம் செய்வாய் அவளுக்கு இரண்டு அக்காமார் இருக்கினம்’தாய்கேலியாகச் சிரித்தாள்.

சண்முகநாதன் கொழும்புக்கு வர வெளிக்கிட முதல் சுமதியைக்கேட்டான்.’ சுமதி, நான் உன்ன விரும்புறன் என்டு உனக்குத் தெரியும்,நான் ஜேர்மனிக்குப்போக வெளிக்கிடுறன். என்னோட வர விருப்பமா?’

சுமதியின் பெரியக்காவுக்குச் சண்முகநாதனின் வயது.முப்பது வயதில் இன்னும் ‘சரியான’ மாப்பிளளை வரவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாள். சின்ன அக்கா, தான் ஒரு டொக்டரையோ எஞ்சினியரையோ தவிர வேறு யாரையும் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.

சுமதி கெட்டிக்காரி.’நீ விரும்புவனைச் செய்வதை விட உன்னை மனதார விரும்புவனை மணப்பது நல்லது ‘என்பதைப் புரிந்து கொண்டவள். வீட்டில் இவளின் காதல் விடயத்தைச் சொல்லி ஒரு ‘ட்ராமாவை’ அரங்கேற்ற அவள் விரும்பவில்லை.

அவனுடன்’ஓடி’வந்து விட்டாள்.

தோரணம் நாட்டித் துளாய் மாலை தொங்கவிட்டு,பூரண கும்பம் பொலிவாக முன்வைத்துத் தாரணி போற்றும் ஒரு புரோகிதர் வந்து மந்திரம் ஓத அவன் அவள் கழுத்தில் தாலி கட்டாமல் அவன் மார்பில் காதல் மாலையாக விழுந்தாள் சுமதி.

இலங்கையில் நடக்கும், இனக்கலவரத்தில் ஷெல்லடியில் சிதைந்து சாவதைவிடத் தன்னை விரும்பியவனிடம் தன் உடலையும் உள்ளத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொடுத்து விட்டாள் சுமதி.

ஊர் திகைத்தது. உலகம் நகைத்தது. தாய் தகப்பன் தலை குனிந்தார்கள்.

சொந்தங்களே இவளுடன் எந்தத் தொடர்பும் வைது;துக் கொள்ளவில்லை. பிறந்த வீட்டு உதாசீனத்தை,அவள் தெரிந்தெடுத்தவனின் அணைப்பில் மறந்தாள் சுமதி.

ஜேர்மன் நாட்டின் குளிர் இனவாதம்,தனிமை,அவ்வளவம் ஒருத்தொருக்கொருத்தரில் வைத்திருந்த அவர்களின் அன்பை இறுகப்பண்ணியது.

‘லோறா லஷ்சம்போர்க்,என்ற முற்போக்குவாதியான பெண், போலந்த்து என்ற நாட்டில் பிறந்து, உன்னைப்போலவே, அரசியற்காரணுங்களுக்காக சுவிட்சர்லாந்துக்குத் தப்பி ஓடிவந்து,பின்னர் ஜேர்மனிக்கு வந்தவள். பல முற்போக்கான விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவள்.நீயும் பல புத்தகங்களைப் படிக்கவேணும், லோறா லஷ்சம்போர்க் மாதிரி முற்போக்குச் சிந்தனைகளை வளர்க்க வெணும்’ இப்படிச்சொல்லி அவளை ஊக்கப் படுத்தியிருக்கிறான்.

ஆனால் இன்று அவன் எவ்வளவோ மாறிவிட்டான்.

மாமியும் மைத்துனியும் ஜேர்மனிக்கு வரமுதல் சுமதியும், சண்முகநாதனும் மிகவும் சந்தோசமாகவிருந்தார்கள்.

ஜேர்மனியில் நடக்கும் இனவாதச் செயல்களைக் கண்டு நடுங்கினாலும்,ஒருத்தொருக்கொருத்தர் அன்பான துணையாகவிருந்தார்கள். அவளுக்கு அவனில் பரிதாபம் வருகிறது.

அவனது தாயையும் தங்கையும் ஜேர்மனிக்கு எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

அவர்களை எடுப்பதற்காக அவர்கள் இருவரும் இரவு பகலாக முதுகுடைய வேலை செய்தார்கள்.சுமதி கற்பவதியானதும் சண்முகநாதன் இடைவிடயது வேலை செய்தான். இரண்டு தங்கைகளுக்கும் மாப்பிள்ளைபேசியபோது, சீதனம் என்ற பெயரில் கேட்ட அந்த விலைகளைக ;கொடுக்க அவன் மிகவும் கடினமாக உழைத்தான்.

இப்போது ஒரு மைத்துனி கனடாவிலும் இன்னொருத்தி நோர்வேயிலுமிருக்கிறார்கள். மாமியார் அவர்களிடம் போகமாட்டாளாம். மகனுடனிருக்கவேண்டுமாம். சுமதி மாமியை அன்புடன் வரவேற்றாள். மாமியாருக்குச் சுமதியில் மிகவும் ஆத்திரம் பதினெட்டு வயதில் தன் மகனைச் சுமதி ‘மயக்கிப் பிடித்து(?)’ விட்டதாக சுமதிக்குச் சொல்லிக் குதறுவாள்.

சண்முகநாதன் ஓய்வில்லாமல்வேலை செய்து விட்டு வரும்போது சுமதியின் முணுமுணுப்பும் தாயின் நச்சரிப்பும் அவனாற் தாங்க முடியவில்லை.வீட்டிற் தொடரும் தர்மசங்கடமான நிலையிலிருந்து தப்ப அவனுக்குகு; கொஞ்சம் குடிப்பழக்கம் வந்தது.

ஆது நாளடைவில் அவனின் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டது. குடித்துவிட்டு வந்து படுத்துவிட்டு நேரத்துக்கு வேலைக்குப்போகாமல் அவன் செய்த வேலையும் போய்விட்டது. வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். அந்த விரக்தியை மறக்க இன்னும் குடித்தான்.இந்த வாழ்க்கை அலுத்துப்போய் விட்டது அவனுக்கு.

இலங்கையில் எப்போது அமைதி வரும் எப்போது திரும்பிப்போவோம் என்று ஏங்குவான்.

சுமதி வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள்.தூரத்தில் லஷ்சம்போர்க் வீதி தெரிகிறது.றோஷாவையும் அவளின் காதலன் ஜோகிஷேயையும் ஜேர்மன் நாட்டுக்கு எதிரான புரட்சிவாதிகள் என்று ஜேர்மனிய அரசு கொலை செய்ததாகச் சண்முகநாதன் சுமதிக்குச் சொன்னான். அவளைப்போல் ஆறுகோடி யூத மக்களையும் ஜேர்மனிக்கு எதிரானவர்களென்று ஹிட்லர் கொலை செய்தான்.

றோஷா முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடிய பெண்ணாம். சண்முகநாதன் சொன்னான். கோடிக்கணக்கான யூத மக்கள் எந்த வாதத்தையும் பேசாமல் கொலை செய்யப் பட்டார்கள்.

சுமதிக்கு சண்முகநாதன் சொல்லும் முதலாளித்துவமோ தொழிலாளித்துவமோ தெரியாது.

அவளின் குடும்பம்தான் அவளின் அரசியல் அரங்கு.மாமியார் ஒரு கொடுமைவாதி. கணவன் பல சந்தர்ப்வசத்தால் கையாலாகாதவனாகப் போய்விட்டான்.

உலகறியாத வயதான குழந்தைகள் அவள் உழைப்பு, பாதுகாப்பு,பாசம் அத்தனையையும் எதிர்பார்ப்பவர்கள்

சுமதி, தன் தெரு மூலையிற் திரும்பும்போது அதிகாலை ஐந்து மணிச்சத்தம் அடிக்கிறது.இப்போது ஊரில் கோயில் மணியோசை கேட்கும்.

யூதக்கிழவியின் வீட்டில் லைட் வெளிச்சம் தெரியவில்லை.இப்போது நித்திரையாயிருப்பாள்.

சுமதியின் பால்கனத்த முலைகளிலிருந்து பால் சுரந்த கனம் தாங்காமல் பால் கசியத் தொடங்கிவிட்டது. றோஷா லஷ்சம்போர்க் உலகக் கொடுமைகளுக்குக் குரல் கொடுத்தபடியால் அவளையழித்து விட்டார்கள். சுமதி ஒரு சாதாரண தமிழ்ப்பெண். தன் குடும்பத்திற்காக உழைத்த களைப்பிலேயே சுமதி கெதியில் இறந்துபோகலாம்.

பிறந்தவர்கள் அத்தனைNபுரும் இறப்பவர்கள்தானே?

இறப்பை யார் தடுப்பதாம்?

எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைகளுக்காக எனது உயிர் போகும்; வரை உழைப்பேன்.

சுமதி லஷ்சம்போர்க் வீதி மூலையில் நின்று சபதம் செய்து கொண்டாள் சுமதி.

புலம் பெயர்ந்த, பரிதாபமான ஒரு தமிழ்ப் பெண்மையின் சபதமது.

இப்போது சண்முகநாதன் விழித்திருக்கலாம்.பகலில் இவள் ஒரே பிஸியாயிருப்பாள். அத்துடன் மாமியார் முன்னிலையில் கணவருடன் மனம் விட்டுப் பேசமுடியாத.பின்னேரங்களில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்று பல வேலையிருக்கும்.

இப்போது சுமதியின் குழந்தை எழும்பி பாலுக்கு அழலாம்.

சைக்கிளை வைத்துவிட்டு அவசரமாக அறைக்குள்போனதள்.குழந்தை மெல்லமாக முனகத் தொடங்கிவிட்டது.

முன்பக்கத்தில் முலையைக் குழந்தை உறிஞ்ச, பின்பக்கத்தில் கணவன் அவளை அன்புடன் அணைத்துக் கொள்ள சுமதி தூங்கிப் போய்விட்டாள்.

( இந்தச் சிறுகதை 90ம் ஆண்டின் முற்பகுதியில்,திரு.ஆர்.பத்மனாப ஐயரால் இந்தியாவில் வெளியிடப்பட்ட புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புத் தொகுதியில் வெளிவந்தது)

(ஜேர்மனி 1991)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *