கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,772 
 

கணக்குப் போட்டுப் பார்த்தேன்… சரியாக இரண்டு வருடங்கள், 66 நாட்கள்

ஆகியிருந்தன.

கடைசியாக வெளியான அந்தச் சிறுகதையும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இன்னும் சரியாகச் சொல்வது என்றால், அதற்கு முன்பு வந்த சில சிறுகதைகளும் அதே ரகம்தான். வெற்றிகளாகக் குவித்த ஒரு விளையாட்டு வீரனின் கடைசிக் கால தோல்விகளைப்போல் அந்தப் படைப்புகள் என்னைப் பார்த்துப் பரிகாசம் செய்தன.

நான் பத்திரிகையாளனாகி ஆறு வருடங்கள் இருக்கும். ஆயினும் இப்போதும் எழுத்தாளனாக அறிமுகம் செய்துகொண்டால்தான், ‘ஓ… நீங்கதானா?’ என்று ஒரு ‘ஓ’வை வாங்க முடிகிறது. ‘பழங்காட்டூர் பாலு’ என வண்ண வண்ண எழுத் துக்களில் மின்னியவன். ஒரு பத்திரிகையின் முகவரிப் பகுதியில் ‘கே.சி.பாலசுப்ரமணியன்’ என்ற பொடி எழுத்துக்களில் பொதிந்துபோனேன்.

“சார்தான் பாலசுப்ரமணியன்…”

“வணக்கம் சார்.”

“வணக்கம்.”

“பழங்காட்டூர் பாலுன்னு கேள்விப்பட்டு இருப்பீங்களே…”

“ஆமா…”

“அது இவர்தான்.”

“ஓ… நீங்கதானா? நிறையப் படிச்சிருக்கேன் சார். முன்னாடி எந்தப் பத்திரிகை எடுத்தாலும் உங்க கதைகளா இருக்கும். நடைவண்டின்னு ஒரு கதை எழுதி இருக்கீங்க இல்லே?”

“ஆமா…”

“பார்த்தீங்களா பேரைக்கூட கரெக்டா சொல்றேன். அந்தக் கதை இப்பவும் வரிக்கு வரி மனசுக்குள்ளே அப்படியே இருக்கு சார்.”

தடுமாறி “தேங்க்ஸ்” என்பேன். உண்மையில் அது சரியான வார்த்தை அல்ல என்பதுமட்டும் தெரியும்.

“இப்ப ஏன் சார் கதைகளே எழுதறது இல்லே?”

இந்தக் கேள்விக்கு மட்டும் தடுமாற்றமே இல்லாமல் “பத்திரிகையில வந்தபிறகு நேரமே இருக்கறது இல்லே சார்” என்பேன்.

“ஆமாமா! புக்கை முடிக்கணும். இவங்ககிட்ட இருந்து இதை வாங்கணும்… அவங்ககிட்ட இருந்து அதை வாங்கணும்னு எப்பவும் டென்ஷனா இருப்பீங்க” என்பார் தனது பத்திரிகை உலக அறிவைக் காட்டும்விதமாக.

இப்படி சுலபமாகத் தப்பித்துவிடலாம். ஆனால், கேசவமூர்த்தி சார் போன்ற யாராவது இருந்துவிட்டால் போச்சு. “அதெல்லாம் ஒண்ணுமில்லே… முன்னாடி வெளியே இருந்தப்பவாவது போஸ்ட்ல அனுப்பணும். இப்ப எவ்வளவு ஈஸி. நேரா ஆசிரியர்கிட்டயே கொடுக்கலாம். சோம்பேறி ஆயிட்டான்” என்று போட்டு உடைப்பார்.

நான் அசட்டுத்தனமாகச் சிரித்து, “எழுதறேன் சார். அதுவும் இல்லாம முன்ன மாதிரி இப்ப சிறுகதைகளுக்கு எங்கே இடம் இருக்கு. அந்த இலக்கியமே நோயாளி ஆகிடுச்சு” என்பேன்.

ஆனால், அடிக்கடி படிக்கும் சில சிறுகதைகள் பொளேர் என என் முகத்தில் அறைந்து ‘நான் நல்லாதான்டா இருக்கேன். நீதான் நோயாளி’ என்று சொல்லும். வெட்கமாக இருக்கும். எங்கே பிரச்னை? காலையில் இருந்து இரவுக்குள் எத்தனை மனிதர்களைப் பார்க்கிறேன். எத்தனை உறுத்தல்களைச் சந்திக்கிறேன். அவை எல்லாம் வெளியே வராமல் எது தடுக்கிறது?

காலையில் கேசவமூர்த்தி அழைத்தார். “பாலு! ரெண்டு நாளைக்குள்ளே ஒரு சிறுகதை வேணும். ஆசிரியர்கிட்ட மூணு கதைகள் கொடுத்தேன். எதுவுமே பிடிக்கலையாம்.”

“சரி சார்…”

“எப்படி? எப்பவும்போல யாருக்காவது போன் பண்ணிக் கேட்டா..? அந்தக் கதையே வேணாம். ‘நீ ஒரு கதை சொன்னே, ரொம்ப நல்லா இருந்தது. நாளைக்கு கம்போஸ் பண்ணிக் கொடுக்கறேன்னு சொன்னே’னு ஆசிரியர்கிட்ட சொல்லிட்டேன். அதனால நீயே கொடுத்துடு” என்றார்.

“சார்… திடீர்னு எப்படி?”

“முடியும் போய்யா” என்றவர் அழைத்த செல்போனில் பேச ஆரம்பித்துவிட்டார்.

வீட்டுக்கு வந்து காபி குடித்த கையோடு கதைகள் வெளியான ஃபைலை எடுத்துப் புரட்டினேன். அப்போது கிடைத்த புள்ளிவிவரம்தான் இரண்டு வருடம் அறுபத்தாறு நாட்கள்.

செல்போன் அழைத்தது. ராஜசேகர்!

“பாலு சார், எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“இருக்கேன் சார். சங்கீதாவுலதான் இருக்கேன். உங்க ஞாபகம் வந்தது…”

மற்ற நண்பர்களின் குசலம், புலம்பல்கள் என அரை மணி நேரம் நீண்டது. இன்னும்கூட நீண்டு இருக்கும். நானாகத் துண்டித்தேன். மனிதர் இருக்கும் இடம் அப்படி.

இந்த ஆறு வருடங்களில் மூன்று பத்திரிகைகள் மாறி இருந்தேன். சிலரிடம் பழைய நட்பு தொடர்ந்தது. அதில் ஒருவர்தான் ராஜசேகர். மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட். பத்திரிகையில் எடிட்டோரியலும் மார்க்கெட்டிங்கும் கணவன் – மனைவிபோல. பார்ப்பதற்கு இணைந்த கரங்கள்போலத் தெரியும். ஆனால், ஒருவர் திறமை மீது இன்னொருவருக்கு எப்போதும் நம்பிக்கை இருக்காது. அபூர்வமாகச் சில நட்பு அமைவது உண்டு. அப்படி ஒருவர் ராஜசேகர். சுவாரஸ்யமான மனிதர். தடதடவென வருவார். படபடவெனப் பேசுவார். திடீரென ‘தீபாவளிக்கு அடுத்துதானே பொங்கல் வரும்’ என்ற பயமுறுத்தும் சந்தேகங்க ளைக் கேட்பார். வேகவேகமாகப் போய்விடுவார். திடீரென போன் செய்வார். “பாலு சார் எங்கே இருக்கீங்க?” என்று கேட்பார்.

“ஆபீஸ்லதான்.”

“கிளம்பிட்டீங்களா?”

“இதோ கிளம்பறேன்…”

“அப்படியே சங்கீதாவுக்கு வந்துடுங்க. எல்லோரும் இங்கேதான் இருக்கோம்” என்பார்.

எல்லோரும் என்பது அலுவலக நண்பர்கள் நான்கு பேர். என்னையும் சேர்த்தால் ஐந்து. சங்கீதா என்பது சினிமா தியேட்டர். ஆனால், அவர் வரச் சொல்வது படம் பார்க்க அல்ல.தியேட்டர் எதிரே இருக்கும் பார் அட்டாச்டு டாஸ்மாக்.

அலுவலகத்தைவிட பாரில் ராஜசேகர் இன்னும் சுவாரஸ்யமாக இருப்பார். சரக்கு இறங்கியதும் பேச்சுடன் ஆக்ஷனும் சேர்ந்துவிடும்.

“இப்படித்தான் போன வாரம் பாலாஜி கூப்பிட்டான். ‘மாசக் கடைசி ஒண்ணும் இல்லடா’னு சொன்னேன். ‘நான் குடுக்கறேன். வா’ன்னு சொன்னான். ‘வீட்ல வேலை இருக்கு, சீக்கிரம் போகணும்டா’னு சொன்னாலும் விடலை. ‘ஒரே ஒரு குவார்ட்டர்தான். அரை மணி நேரத்துல போய்டலாம்’னு தொந்தரவு. சரின்னு வந்தோம்.”

இதைச் சொல்லும்போது அந்த பாலாஜி எதிரில் நின்று பேசுவதுபோலவும், இருவரும் அலுவலகப் படிகளில் இறங்கி வருவதுபோலவும் உட்கார்ந்தபடியே உடல் மொழியில் காட்டுவார்.

“குவார்ட்டர் அப்டியே ஆஃப் ஆச்சு. ஆஃப்… ஃபுல் ஆச்சு. அரை மணிங்கிறது மூணு மணி நேரம் ஆச்சு. பார்த்தா மணி 11. பய தள்ளாடறான். ‘ஸாரி ராஜா, பத்திரமாப் போய்டுவியா?’ன்னு கேட்குறான். ‘நான் போவேன், நீ ஒழுங்காப் போடா’ன்னு ஆட்டோவுல ஏத்தி அனுப்பினேன்.”

கை தட்டி ஆட்டோவை அழைப்பதுபோலவும் தடுமாறும் பாலாஜியை உள்ளே திணிப்பதுபோலவும் சட்டைப் பையில் கைவிட்டுப் பணம் எடுத்து ஆட்டோக்காரனிடம் தருவதுபோலவும் செய்வார்.

“அப்புறமா நான் ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாயில போட்டுக்கிட்டு பைக்கை எடுத் தேன்…”

கையில் இல்லாத பாக்குப் பொட்டலத்தின் காலி கவரைத் தெருவாகப் பாவித்து பக்கத்து டேபிளில் வீசுவார். அவரது கால், மேஜை காலை கிக்கராக உதைக்கும். கை ஆக்ஸிலேட்டரை முறுக்கும்.

“தலை லைட்டா சுத்துது. சமாளிச்சு ஓட்டறேன். போறப்பவே யோசனை. அடடா! மாசக் கடைசி ஆச்சே… நேரம் வேற ஆயிடுச்சி… சிக்னல்ல போலீஸ் மாமா நிறுத்துவாரே. இருந்த 100 ரூபாயும் காலி. எப்படிடா சமாளிக்கிறதுனு நினைச்சுட்டே போறேன். டர்ன் பண்றப்பவே” (உடலை ஒரு வளை வளைத்து பின் டேபிள் ஆளின் நாற்காலியில் மோதிவிடுவார்) “ஸாரி பிரதர்…”

“நோ பிராப்ளம்…”

“டர்ன் பண்றப்பவே கவனிச்சேன். ரெண்டு பேர் சிக்னல நிற்கறாங்க. என்னடா பண்றது? திரும்பிடலாமா… சரி பார்த்துப்போம்னு போனேன். கையை நீட்டி நிறுத்தச் சொல்றாங்க. கொஞ்சம் தள்ளியே நின்னேன். அந்தப் பக்கம் போகாதீங்க. ஆக்ஸிடென்ட். திரும்பிப் போங்கனு சொன்னார். அப்பதான் கவனிச்சேன். ஒரு கார்காரன் பைக்கை மோதி இருக்கான். தரை எல்லாம் ரத்தம். ஆளை அப்பதான் தூக்கிட்டுப் போனாங்களாம். சின்ன வயசுதானாம். பொழைக்கறது கஷ்டமாம். எனக்கு திகிலாயிடுச்சு. இந்தக் கருமத்தை வேற குடிச்சிருக்கோம்… உருப்படியா வீடு போய்ச் சேரணுமேனு நடுங்கிக்கிட்டே ஓட்டினேன்” என்று வீட்டில் போய் படுக்கையில் விழுந்தது வரை காட்சிகளாக விவரிப்பார்.

முதல்முறை இதே பாரில் இந்த மாதிரி ஆக்ஷனுடன் அவர் தனது கல்லூரிக் கால நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னதும், அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. வீட்டுக்குப் போன சூட்டோடு அதைக் கதையாக்கி அடுத்த நாளே ஆசிரியரிடம் கொடுத்தேன். அது மறுவாரமே பிரசுரமானது. ராஜசேகருக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. அச்சானதும் பக்கங்களைப் புரட்டி விளம்பரங்கள் சரியாக வந்துள்ளனவா என்று மட்டுமே பார்ப்பார்.

இன்னோர் உதவி ஆசிரியர் சொன்னதும், “பாலு சார், இது நியாயமா? இதுக்குத்தான் எழுத்தாளர்கிட்ட எதுவும் சொல்லக் கூடாது. உடனே, கதையாக்கி காசுபார்த்துடுவீங்களே. சரி போகட்டும்… அதே சங்கீதாவுல ட்ரீட் வெச்சுடுங்க” என்றார்.

அன்று முதல் எதைச் சொல்லி முடித்தாலும் பக்கத்தில் நான் இருந்தால், “அடடா, ரைட்டர் கேட்டுட்டாரே… கதையாக்கிடுவாரே” என்பார். ஆனாலும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை அதே சங்கீதாவில் என்னிடம் சொன்னது உண்டு. என்னை மட்டும் அழைத் துச் செல்வார். பெரும்பாலும் சக ஊழியர்களின் செயல்கள்பற்றிச் சொல்வார்.

“பாலு சார், மனுசங்க ஏன் இப்படி இருக்காங்க? நீங்க குடிக்க மாட்டீங்க. இருந்தாலும் கூப்பிட்டதும் வர்றீங்க. சங்கடப்படாம எவ்வளவு நேரமானாலும் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க. எதுக்கு? ஒரு நட்புக்கு. ஆனா, இங்கே ஒரு மாதிரி இருக்கறது… வெளியே போனதும் இன்னொருத்தன்கிட்ட வேற மாதிரி பேசறது. அசிங்கமா இல்லே. இதை நான் யார்கிட்டேயும் சொல்ல முடியாது. உங்ககிட்ட மட்டும் சொல்றேன். மனசோடு வெச்சுக்கங்க” என்று சொல்வார். வருத்தமான விஷயமாக இருந்தாலும் உடல் மொழி தவறாமல் இடம் பெறும்.

ராஜசேகரின் தந்தைக்கு 86 வயது. நீண்ட நாட்கள் உடல்நலம் இல்லாமல் இருந்து ஒரு விடியற்காலை நேரத்தில் இறந்து போனார். எல்லோரும் சென்றிருந்தோம். ஒரு மாதத்துக்குப் பிறகு என்னைத் தனியாக சங்கீதாவுக்கு அழைத்தார்.

“மனசு சரியில்லே பாலு சார்” என்றார்.

“ஏன்?”

“அப்பாவை நினைச்சுக்கிட்டேன். ரொம்ப சாதாரண குடும்பம். அப்பாவோடு பிறந்தவங்க நாலு பேர். எல்லாமே பொண்ணுங்க. இவர்தான் பையன். எல்லோருக்கும் இவர்தான் கல்யா ணம் செஞ்சுவெச்சார். ரொம்ப கஷ்டம். இருந்தாலும் நான் என்ன கேட்டாலும், எப்படியோ கடன் வாங்கிக் கையில குடுத்துடுவார். அப்ப ஃபேன்கூடக் கிடையாது. இந்தப் பனை விசிறி இருக்கே… அதால நானும் அக்காவும் தூங்கற வரை விசிறிட்டே இருப்பார். ஒருநாளும் கை வலின்னு நிறுத்தினதில்லே. ஒரு தலைவலின்னுகூடப் படுக்காத மனுசன் கடைசி ஆறு வருஷம் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டார்” என்று சொல்லிக் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“வயசானாலே அப்படித்தான்… என்ன செய்யறது” என்றேன்.

“இல்ல பாலு சார். என்னோட கையாலாகாத்தனம். ஏனோதானோனு இருந்து, கடைசியில அப்பாவைக் கொன்னுட்டேன்.”

“யார் தடுத்தாலும் வர்ற நோயை நிறுத்த முடியாது.”

“நிஜமாதான் சார், அப்பா தானா சாகலை. தூக்க மாத்திரை கொடுத்துக் கொன்னுட்டேன்” என்றார்.

அப்போதுகூட மனிதர் போதையில் உளறுவதாகவே நினைத்தேன்.

“கொஞ்ச நாளாவே என் ஒய்ஃப் கத்த ஆரம்பிச்சுட்டா. அவளுக்கும் சலிச்சுப்போச்சு. எத்தனை நாளைக்குத்தான் அப்பாவோட பீத் துணியை மாத்திட்டே இருப்பா. போதாக்குறைக்கு அக்கா வீட்டுப் பிரச்னை. அன்னிக்குக் காலையில இருந்து நாலு முறை கட்டிலில கக்கூஸ் போய்ட்டாரு. ஒரு பக்கம் அவ கத்த… இன்னொரு பக்கம் அப்பா அழறார். நிலமை புரியாம அக்கா போன்ல பேசறா. (கையில் செல்போனை வைத்துப் பேசுகிற மாதிரி) மாமாவோட பிரச்னைன்னு வந்து பேசச் சொல்லி இருந்தா. ஏன் இன்னும் வரலை. செத்துப் போறேன்னு புலம்பல். எனக்குத் தலையே வெடிக்கற மாதிரி இருந்தது. (தலையை இரு கை களால் பிடித்துக்கொண்டு). சாப்பிட்டுப் படுத்தோம். ஒய்ஃப் சமையல்கட்டுலயே படுத்துட்டா. ஹால் கட்டிலில் அப்பா…”

எதிர் டேபிளைச் சுட்டிக் காட்டினார். எனக்கு அந்த டேபிள் மறைந்து கட்டில் தெரிந்தது. அதில் எலும்புக்கு நனைந்த துணியைச் சுற்றியதுபோல ராஜசேகரின் அப்பா தெரிந்தார்.

“நான் அப்பா பக்கத்துல தரையில படுத்திருக்கேன். டென்ஷனுக்காகவும் தூக்கம் வர்றதுக்காகவும் தூக்க மாத்திரை சாப்பிடுவேன். ஒண்ணுக்கு ரெண்டு போட்டும் தூக்கம் இல்லை. அப்பாவோட வலி புலம்பல். மறுபடியும் கக்கூஸ் போய்ட்டார். எழுந்து துணியை மாத்தினேன். அந்த வேட்டியைச் சுருட்டி… (பக்கோடாவைத்த பேப்பரைச் சுருட்டி வீசினார்.) திடீர்னு அப்பதான் முடிவு பண்ணினேன். என்னோட தூக்க மாத்திரைகளில் ரெண்டைக் கொண்டுவந்தேன். கட்டில்கிட்ட போனேன்…”

நான் கட்டிலைப் பார்த்தேன். ராஜசேகர் அப்பாவை நெருங்கினார். “அப்பா இந்தாங்க…”

“எ… என்னடா…”

“பேதி மாத்திரை. வாயைத் திறங்க…”

“இன்னும் கொஞ்சம் தண்ணி…”

ராஜசேகர் தரையில் படுக்கிறார். உடம்பு நடுங்குது. அழுகையா வருது. கால்களை மார் வரைக்கும் மடக்கி… முட்டிகள் மோதி டேபிளில் இருந்த பாட்டில் விழப்போக… சட்டெனச் சுதாரித்துப் பிடித்தேன்.

“… சுருண்டு படுத்துக்கிட்டேன். அழுகையை அடக்கிக்கிட்டு போர்வையை இழுத்த்த்த்த்த்துப் போர்த்திக்கிட்டேன். அப்பாகிட்ட இருந்து விக்கல் மாதிரி சத்தம். எப்போ தூங்கினேன்னு தெரியலை. காலையில 4 மணிக்கு முழிப்பு வந்துச்சு. மெதுவா எழுந்து கட்டில்கிட்ட போய்ப் பார்த்தேன்.”

“என்ன சார் வேணும்?” என்று கேட்டான் எதிர் டேபிள் குடிமகன்.

“ஒண்ணுமில்லைங்க. ஸாரி… ராஜா சார் இப்படி வாங்க” என்று அவர் கை பிடித்து இங்கே அமரவைத்தேன்.

“அசைவு இல்லை. அப்பா… அப்பான்னு கூப்பிட்டேன்” என்றவர், டேபிளில் முகம் புதைத்துக் குலுங்கினார்.

10 நிமிடங்கள் அமைதியாக இருந்தேன். பிறகு, அவர் முதுகைத் தொட்டு “விடுங்க… காந்தியே சொல்லி இருக்கார். வலியில துடிக்கிற ஆட்டைக் கொல்லலாம்னு.”

அந்தப் பதில் எனக்கே திருப்தியாக இல்லை. சமாதானம் செய்து அழைத்துகொண்டு வெளியே வந்தபோது 12 மணி.

செல்போன் அழைத்தது. கேசவ மூர்த்தி!

“பாலு, நாளன்னிக்கி ஆபீஸ் லீவா?”

“ஆமா சார்.”

“மறந்தே போய்ட்டேன். அப்ப நாளைக்கே முடிக்கணும். கதையோடு வாய்யா” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தார்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பேப்பரை எடுத்தேன். தலைப்பிட்டேன்… ரெண்டு மாத்திரை!

“வாங்க சார்” என்றான் மணி.

ராட்சச அச்சு இயந்திரங்கள் தனக்குள் சென்ற வெள்ளைத் தாள்களை அழுக்காக்கி கக்கிக்கொண்டு இருந்தது. “மூணாவது ஃபாரம் ஓடியாச்சா?”

“ஆச்சு சார். இந்தாங்க.”

கைகளில் வாங்கும்போதே நடுங்கியது. பிரித்தேன். வண்ணத்தில் ‘பழங்காட்டூர் பாலு’!

“உங்க கதையா சார்?”

“ம்” என்றபடி கிளம்பினேன்.

வீட்டில் சாப்பிட்டுப் படுத்தேன்.

“என்னங்க… ஒரு மாதிரியா இருக்கீங்க.”

“த… தலைவலி. போர்வை கொடு.”

விளக்குகள் அணைந்தன. பக்கத்தில் கட்டிலில் அம்மா. எல்லோரும் தூங்கிவிட எனக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டேன். நிசப்தம். மெதுவாக பார்வையைத் திருப்பினேன். கட்டிலில் அம்மா இல்லை ராஜசேகர். எலும்புக்கு நனைந்த துணியைச் சுற்றியது போன்ற தோற்றத்தில் என்னையே வெறித்துப் பார்த்தார்.

போர்வையை இழுத்த்த்த்த்த்துப் போர்த்திக்கொண்டேன்!

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *