கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 16,778 
 

வேலாயி ஒரு மணி நேரமாக வீட்டை சல்லடை போட்டு சலித்துவிட்டாள். ரேஷன் கார்டைக் காணோம்; வீடென்றால் சிறிய குடிசைதான். அரிசிபானை, ட்ரங்க் பெட்டி, எரவானம், துணி மடித்து வைத்துள்ள அட்டைப்பெட்டி, விறகு பரண், தவிட்டு வாளி வரை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துவிட்டாள். ஓர் இடத்திலும் காணவில்லை. கை மறதியாய் வைக்கக் கூடியவளும் இல்லை; எப்பொழுதும் அரிசி, மண்ணெண்ணெய் வாங்கி வந்தவுடன் முதல் காரியமாக கார்டை மஞ்சள் பையில் போட்டு, சாமி படத்துக்குக் கீழுள்ள ஆணியில் மாட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். மஞ்சள் பை அதே இடத்தில் தொங்குகிறது. அதற்குள் இருந்த கார்டைத்தான் காணவில்லை. வீட்டில் அவள், அவளது கணவன் மருதையன், ஒன்றரை வயது மகன் நிர்மல் தவிர வேறு யாரும் கிடையாது. யார் வந்து எடுத்திருப்பார்கள்? அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. போன தடவை மண்ணெண்ணெய் வாங்கி விட்டு வந்து அதே ஆணியில் மாட்டிவிட்டு நிமிரும் பொழுதுதான், சாமி படத்துக்குக் கீழுள்ள ஸ்டாண்டில் உச்சந்தலையில் நச்சென்று இடித்துக் கொண்டாள். நான்கு நாள் வரையில் தலை புடைத்து, வலி உயிரை வாங்கியது. தலைக்கு எண்ணெய் தடவும்போதும், சீவும்போதும், சீப்பு பட்டால் “சுரீர்’ என்று வலித்தது. ஆக தான் எங்கேயும் மறந்துபோய் வைக்கவில்லை; வெளியாரும் வந்து திருட மாட்டார்கள். திருடி அதை வைத்து என்ன பண்ண முடியும்? கடைசியாக அவள் கணவன் மேல்தான் சந்தேகம் வந்தது. “அந்த ஆள்தான் எடுத்து ஏதோ செய்திருக்க வேண்டும்’ என நினைத்துக்கொண்டே சோற்றை வடித்தாள். நேற்று வைத்த குழம்பு மீதி இருந்தது. எடுத்து சுட வைத்தாள். இன்று அரிசி இருந்தது. வடித்தாகிவிட்டது. நாளைக்கு? இன்னைக்கு ரேஷனில் அரிசி போடுகிறார்கள்; நல்ல அரிசியாகவும் இருக்கிறது. வாங்கி வந்துவிட்டால் இருபது நாள் பாடு கவலை இல்லை. கார்டைத் தேடினால் காணவில்லை. எங்கே போயிருக்கும்?

யுத்த காண்டம்

அய்யோ… என்ன செய்வேன்? அக்கம் பக்கத்தில் எல்லோரும் மூட்டை மூட்டையாய் கட்டி தூக்கி வருகிறார்களே? “பாவி கார்டு’ எங்க தொலைஞ்சிருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே, அவள் கணவன் வந்து விட்டான்.

“”வேலாயி! சோறு குடு!” என்றபடியே கை கால் கழுவிவிட்டு தலையில் முண்டாசு கட்டி இருந்த துண்டை எடுத்து, தரையில் போட்டு அமர்ந்தான். நாற்று பறித்துவிட்டு வருகிறான். நாளையிலிருந்து நடவு ஆரம்பிக்கிறது. அய்யோ கடவுளே, நாளைக்கு நடவுக்கு போயிட்டா எப்படி அரிசியும், மண்ணெண்ணெயும் வாங்குறது! இந்த ஆளு ஒரு நாளையில் போயி அதெல்லாம் வாங்கிடாது. இந்த வருசம் குறுவையும் கிடையாது. நூறு நாள் வேலையும் முடிஞ்சு போச்சு, வேலைக்குன்னு போயி இருபது நாளுக்கு மேல ஆச்சு, இருந்து இருந்தும் மொத நடவு போடறாங்க, நடவு களையெடுப்புன்னு ஆரம்பிச்சதுன்னா கைல காசு செலாவணியா பொழங்கும்.

“”என்னா சோறும், பழைய கொழம்புந்தானா? தொட்டுக்க ஒண்ணும் இல்லியா?”

“”இது கெடைச்சதே பெருசுன்னு நெனைச்சுக்க!”

“”ஏன் ஒரு கருவாட்ட வாங்கி பொரிச்சுருக்கப்புடாது?”

“”வெளையாடுறியா? கையில பத்து காசு இல்ல, வயல் வேல ஆரம்பிச்சாதான காசிருக்கும்? இருந்த அரிசியும் இன்னையோட தீர்ந்து போச்சு. போயி வாங்கிட்டு வருவம்னா, இந்த கார்டை காணோம். ஆமா நீ பார்த்தியா?” என்று அவள் கேட்டதும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு புரையேறிற்று. இடது கையால் தலையில் தட்டிக்கொண்டே தண்ணீரைத் தேடினான். அவள் அவசரமாய் ஒரு டம்ளரை எடுத்து அடியைத் துடைத்துவிட்டு தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தாள்.

“”சாப்புடும்போது தண்ணீ வக்க துப்பு இல்லை; பேசற பேச்சு?”

“”அதான் மொண்டு குடுத்துட்டன்; நீயும் குடிச்சுட்ட; அத்தோட உடு; பேச்ச மாத்தாத; கார்ட காணுமே

எங்க?”

“”சாப்புடற புருசனுக்கு தண்ணி வக்க தெரியாது ஒரு பொம்பளைக்கு, சாப்புடறவன் தொண்டய அடச்சி சாவட்டும்னு ஒரு எண்ணந்தான்?”

“”இப்ப என்னா நீ செத்தா போயிட்ட?”

“”நாஞ் சாவனுங்குறியா? இல்ல தெரியாமதான் கேக்குறன். என்னைய சாவச் சொல்றியா? சொல்லு”.

“”இப்ப என்னா சொல்லிட்டன்? ஏ இப்புடி உழுந்து லாவுற?”

“”என்னைய என்னா நாயின்னு நெனைச்சியா! ஏந் தண்ணி வக்கிலன்னு கேட்டா, நாயாட்டம் லாவுறேங்கற? நா அவ்ளோ கேவலமா போயிட்டனா?”

“”அப்பா, சாமி பெரிய கும்புடு… ச்சை… பேசுனதயே “தொண தொண’ன்னு பேசிகிட்டு. ஒரு சேதிய ஒரு பேச்சோட உடுவம்னு இல்லாம, பொட்டச்சியாட்டம் பண்ணா பண்ணான்னு கிட்டு… ச்சை… எளவு… எப்பிடிதான் அலுத்துக்காத பேசுவியோ? வாய கீய வலிக்காது”

“”அடியே, ஏந்திரிச்சன்னா, தூக்கி போட்டு மிதிச்சுடுவேன் பார்த்துக்க. எளவாம், கருமாதியாம், என்னா பேச்சு பேசற… ம்?”

“”சரி உடு, பாயாத ஒரே பாச்சலா; கார்டு எங்கே?”

“”எனக்கென்ன தெரியும்?”

“”இந்த ஊட்லதான இருக்க நீயும்?”

“”இங்க இல்லாம எங்க இருக்கிறது? இது நாங்கட்ன ஊடுடி. ஒப்பனா கட்டி குடுத்தான்? இந்த ஊட்லதான் இருக்கேன். அதுக்கு என்னா இப்ப?”

“”ஒனக்கும் எனக்குந்தான் பேச்சு. எதுக்கு எங்கப்பன் கால்ல உழுவற? என்னைய கட்டிக் குடுத்தது பத்தாதுன்னு, ஒனக்கு வீடும் கட்டிக் குடுக்கனுமாக்கும்”

“” கட்டி குடுத்துட்டாலும் ம்கூம்! விதியத்த வெறும் பய… ஒரு வண்டி உண்டா. அவ, அவன் மாமனாரு குடுத்த பெரிய வண்டீல சும்மா, சல்லுன்னு போறானுவ, எம்மாமனாரும் குடுத்திருக்கான் பத்து வேலி நெலமும், பண்டார வடையும்!”

“”எப்பனுக்கு பத்து வேலி நெலமிருந்தா, என்னைய ஒழுங்கான மாப்புளைக்கு கொடுத்திருக்காதா? பாவி என்னை இந்த பாழுங்கெணத்துல கொண்டாந்து தள்ளுமா?”

“”என் ஊட்ல குந்திகிட்டு, என்னையவே பாலுங் கெணறுங்கிறியா?”

“”எது உன் வீடு? ஓங்கம்மா சண்ட வளத்து வேற போனப்போ, எந்தோடு மூக்குத்திய அடமானம் வச்சு வாங்குன பணத்துல கட்டுன வீட்ட உன் வீடுங்குறியே? ஓங்கம்மா, ஊட்லேர்ந்து ஒரு ஓட்ட பான கூட வரலை; பெருசா பேசுற பேச்சு”.

“”வாய, கய்ய வச்சுகிட்டு இருக்கிற மட்டு மரியாதையோட இருந்தீன்னா, எங்கம்மா ஏன் வேற போன்னு சொல்லுது?”

“”நீ ஒரு நச்சவாயின்னா, ஒம்மா ஒரு நாற வாயி; சதா பொலம்பல்} சனி புடிச்சாப்ல பொலம்பி கிட்டே இருந்தா, எவதான் சகிச்சிப்பா? பத்து வார்த்த பேசுனா ஒத்த வார்த்தையாச்சும் பேசத்தான் செய்வா?”

“”பெத்த ஆயி அப்பன் வாயத்தான் வளத்து உட்ருக்காங்க; ஒவ்வொருத்தி பத்து பவுன், இருபது பவுனுன்னு போட்டுகிட்டு வந்தாளுவ… எனக்குன்னு வாச்சாம் பாரு மாமானாரு… வெறும் பய, பொண்ண ஓட்டி உட்டுட்டு ஒக்காந்துட்டான் வீட்ல”

“”ந்தரு, ஒனக்கு இதுதான் மரியாதி… இத்தோட பேச்ச நிப்பாட்டிக்க… எங்கப்பன் ஏழையா இருந்தாலும், எரந்து குடிக்குமே தவிர, சொந்த வீட்லய ஒன்னய போல திருடி பொழைக்காது? பேசுறியா, பேச்சு”

“”என்னாத்தடி திருடுனன்?”

“”சீனி கார்டு ஒன்னைய தவிர எங்க போயிருக்குங்கறேன்?”

“”இப்பல்ல யாவுகம் வருது. வேலைக்கு போயி பத்து நாளுக்கு மேலாச்சு? ரெண்டு நாளா போதைல வந்தியே எப்புடி? சரக்கு வாங்க காசு? சீனி கார்ட் எடுத்துட்டு போயி, எவன்ட்டயோ அடமானம் வச்சுட்டு அந்த காசுலதான் மஞ்ச குளிக்கிற”

“”நீ கிட்டக்க இருந்து, பாத்தியா, நா அடமானம் வச்சத?”

“”கிட்டக்க இருந்து பாக்கணுமாங்காட்டியும், உன் லட்சணம் தெரியாதா? உன் யோக்கிதிதான் தெரிஞ்சு கெடக்கே!”

“”செவுள பேத்துடுவேன்!”

அவள் பதிலுக்குப் பதில் வாயடிக்கவும், அவன் எழுந்து அவள் கொண்டையைப் பிடித்து நாலு சாத்து சாத்திவிட்டான். “”இனிமே பேசுவியா?பதிலுக்குப் பதில் வாயடிப்பியா?” என்று மிதி மிதின்னு மிதித்தான்.

“”பாவி, என்ன போட்டு இந்த பாடு படுத்துறியே… ஒன்னைய பாம்பு புடுங்க… ஒம் பாட கௌம்ப; சீனி காருட எவங்ட்டயோ கொண்டு அடமானம் வச்சு, அந்த காசுல குடிச்சிட்டு வந்து, எனயை இந்த மிதி மிதிக்கறியே… நீ வெளங்குவியா? வெளங்குவியாங்குறேன்? ஒங்கால்ல கட்ட மொளக்க!” என்று அவள் வலி தாங்காமல் கத்தவும்,

“”ஏ வீட்ல ஒக்காந்துகிட்டே எனக்கு சாவங்கொடுப்பியா? சீனி கார்ட நாந்தான் கொண்டு அடமானம் வச்சேன். அந்த காசுல தண்ணி அடிச்சேன், இப்ப என்னா செய்யணும்ங்கற? ஊர்ல ஒலகத்துல இல்லாததயா செஞ்சுபுட்டேன்? அதுக்கு எத்தினி பய, பரட்டைய சொல்லி என்னய கூப்புடுவே? ஒனக்கு அவளோ அதப்பு வச்சு போச்சா! போடி வெளீல” என்று அவள் சிண்டை பிடித்து வெளியில் தள்ளினான்.

நிலை குலைந்து போய் வாசலில் விழுந்தவள் சற்று நேரம் அப்படியே கிடந்தாள். பின் அக்கம்பக்கத்தில் பார்ப்பதை உணர்ந்து எழுந்தாள். விடுவிடுவென வீட்டினுள் சென்று, தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனைத் தூக்கிக் கொண்டாள். தலைமுடி அவிழ்ந்து தொங்கியது. அதைக்கூட அள்ளி முடியாமல் எல்லைக்காளிபோல் நடந்தாள். சேலையில் ஒட்டி இருந்த புழுதியைக்கூட தட்டவில்லை.

கீதாரி வீட்டு வழியாக நடந்து பெரிய குளக்கரையில் சற்று நின்றாள். குழந்தையை இறக்கி இரண்டு கால்களாலும் இறுக்கிக்கொண்டு, கூந்தலை தட்டி முடிந்தாள். புடவையை அவிழ்த்து உதறி ஒழுங்காக உடுத்திக் கொண்டாள். பிள்ளையை அப்படியே உட்கார வைத்துவிட்டு, குளத்தில் இறங்கி முகத்தைக் கழுவிக் கொண்டாள். முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே மகனைத் தூக்கிக்கொண்டு குறுக்குப் பாதையில் வேக வேகமாக நடந்தாள்.

நல்லவேளை, சாப்பிடச் சென்ற ஆட்கள் இன்னும் திரும்பவில்லை. சேற்று வயலின் நடுவே அங்கங்கே மண்வெட்டிகளை வைத்துவிட்டு சென்றிருந்தார்கள். ஆத்தியடியில் நாற்று பறித்து வைத்திருந்தார்கள். வந்து கட்டி, தூக்கி, உழுத வயலில் வீச வேண்டும். நாளை முதல் நடவு. கை பரபரத்தது வேலாயிக்கு. விட்டால் இடுப்பு குழந்தையை இறக்கிவிட்டு நட ஆரம்பித்து விடுவாள் போலிருந்தது. “பாவி, பாவி இருந்து இருந்தும் ஊர்ல மொத நடவு போடுறப்பயா,

என்னைய தொரத்துவ! சீனி கார்ட போயி அடவு வச்சி எந்த மனுசனாச்சும் குடிப்பானா? நாளைக்கு சோத்துக்கு அரிசி இல்லியே? என்னா பண்ணுவ? கெட; ஒவ்வொருத்தன் பொண்டாட்டிய என்னா தாங்கு தாங்குறான்; நீ என்னான்னா என்னைய போட்டு இந்த வாங்கு வாங்குற? பொம்பளைன்னா ஒனக்கு கிள்ளு கீரையாய் போச்சா? பட்டு, பாரு; அப்ப தான் புத்தி வரும். எனக்கென்னா? போக்கெடம் இல்லாத சாக்கடையா நானு? என்ன பெத்த ஆயி அப்பன் இல்ல? எப்ப போனாலும், என்னையும் எம்புள்ளையையும் தங்கம் தங்கம்னு தாங்குவாவோ… எங்க இருந்தாலும் ஒழைச்சு சாப்புடற கட்டை. நானும் இங்க பாக்குற வேலைய அங்க போய் பாத்தா, அடி ஒத இல்லாத நிம்மதியா சோறு திம்பேன். காலம்பற ஒரு டீ குடிச்சது, சோறாக்கி ஒனக்கு படைச்சுட்டு, நாஞ் சாப்புடலாம்னு தட்டுல ஒக்காறலை; ஒனக்கு சாமி வந்து இந்த ஆட்டம் ஆடிப்புட்ட; ஆடு எல்லாம் நல்லதுக்குதான்!’ } என்று தனக்குள் புலம்பிக்கொண்டே வேகமாய் நடந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது. கையில் காசும் இல்லை. ஒற்றைப் பனை மரம் வந்தது. வலது பக்கம் திரும்பி ஊட்டியாணி நோக்கி நடந்தாள். வழியில் சுபத்திரியம் செல்லும் பாதையில் காளியம்மன் கோயில் இருந்தது. “காளியாத்தா நீயே கேளு’, நாயத்தை!’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டே, நேரே நடந்தாள். வெட்டாறு வந்தது. பாலத்தில் ஏறி ஆத்தூர் வழியாக நடந்தாள். வழியில், வனகாளியம்மன் கோயில் முன் நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு நேரே நடந்தாள். மனிதர் நடமாட்டம் இல்லாத சாலையில், மரங்கள் சூழ்ந்த பாதையில் நடப்பது மிகவும் நன்றாக இருந்தது அவளுக்கு. சிணுங்கும் குழந்தையைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே வெயில்படாதிருக்க, தன் முந்தானையை அவன் தலையைச் சுற்றி மூடி அணைத்துக்கொண்டே வேகமாய் நடந்தாள். ராதாநல்லூர் தாண்டி, பூசலாங்குடி முனை திரும்பியதும் அவள் வீடு வந்தது.

“”இந்தோ நம்ம ஐயா ஊரு வந்தாச்சு!” என்று மகனிடம் சொல்லிக் கொண்டே, படலைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். கொல்லைக்கு நடுவில்தான் வீடு. வீட்டைச் சுற்றிலும் கத்தரியும், வெண்டையும், பூவும், பிஞ்சுமாய் குலுங்கின. வீட்டைச் சுற்றிக்கொண்டு ஓடும் வாய்க்கால் தண்ணியை குடம், குடமாக ஊற்றி அவள் அம்மா வளர்த்து வைத்திருக்கிறாள். அவள் அம்மா நல்ல பாட்டாளி. முளைக்கீரையும், மிளகாயும் பசேல் என்றிருந்தன. தலையில் கட்டுடன், அவள் அம்மா உட்காந்து மீன் கழுவிக் கொண்டிருந்தாள்.

“”யம்மா!” என்றாள் வேலாயி.

“”ஆருடி அது?” ஏ தங்கச்சி வா… வா… அது ஆரு அது இடுப்புல? ஏ, என்ன பெத்த அம்மா, வாங்க, வாங்க!”

என்று சுத்தம் செய்த மீன்களைக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு, பரக்க பரக்க ஓடி வந்தாள். மீன் கவிச்சியை மீறின அம்மா வாசம் அடித்தது அவள்மேல். அம்மாவைக் கண்டதும் இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் அழுகையாய் வெடித்தது வேலாயிக்கு.

“”யம்மா!” என்று பிள்ளையை இறக்கி விட்டு விட்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

“”ஏ என்னை பெத்த அம்மா… அழுவாதிங்க… எனக்கு ஒண்ணும் இல்லை. டாக்டர்ட்ட காட்டி தையல் போட்டிருக்கு… இப்ப ஒண்ணும் வலி இல்லை. ஊசி போட்டு, மருந்து மாத்திரை சாப்புட்டாவுது… ஏழு தையல்? அதுங்காட்டியும் எனக்கு மண்ட ஒடஞ்ச சேதிய ஒங்கிட்ட மூட்ட கட்டிகிட்டு வந்து சொன்னதாறு? அந்தப் பன்னீரா? காலம்பற மீனு வாங்குன்னு கேட்டுச்சு. இது மாதிரி பைப்படீல வழுக்கிகிட்டு உழுந்துட்டேன். லேசான காயம்தான்னு சொன்னேன். அது வந்து சொல்லவும் நீ பொறப்புட்டு ஒடியாந்தியாக்கும்? தம்பி நல்லா இருக்காங்களா?” என்று கேட்டுக்கொண்டே மகளையும், பேரனையும் வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

“”அம்மா சும்மா டூப்வுடுது… பைப்படீல ஒண்ணும் உழுவலை… நம்மா அப்பா குடீல கண்ணு மண்ணு தெரியாத, சோறு ஏன்டி இன்னும் ஆக்கலைன்னு?’

எரிஞ்சுகிட்டிருந்த வெறவு கட்டையிலயே அது மண்டைய பொளந்துடுச்சு. ஏ அப்பா என்னா ரத்தம் தெரியுமா? அந்த மஞ்சள் புடவை முழுக்க ரத்தத்தால் சேப்பாயிடுச்சு” என்று அவள் தங்கை புனிதா விவரிக்க ஆரம்பித்தாள்.

“”ஏ கூறுகெட்ட செம்மம், அது வந்து நொழைஞ்சோனவே ஆரம்பிச்சிட்டியா? போ, வெல்லமும், காப்பித் தூளும் இருக்கு. அக்காவுக்கு வரக் காப்பியாச்சும் போடு; சீக்கிரம் ஆஞ்ச மீன அரிஞ்சு கொழம்பு வை; கீரையை தொவட்டு!” என்று சின்னவளைத் துரத்திவிட்டு விட்டு பாயெடுத்துப் போட்டு மகளையும், பேரனையும் உட்காரச் சொன்னாள்.

“”என்னம்மா, நம்ம அப்பா திருந்தவே திருந்தாதா!”

“”அதவுடு, ஏதோ குடிமயக்கத்துல செஞ்சுடுச்சி. அடுத்த நிமிஷம் சைக்கிள்ல வச்சு, மிதிச்சுகிட்டு போயி வைத்தியம் பாத்ததும் அதுதான். என்னா பண்ணச் சொல்ற! அந்த நிமிசத்து வெறி; ஏ அப்பாடி கண்ணு மண்ணு தெரியாத குடிப்பானே; இப்ப அய்யோ தப்பு பண்ணிட்டனேன்னு என்னைய பாத்து பாத்து அழுவுது; இன்னும் கரையேத்த வேண்டிய புள்ளைங்க மூணு இருக்கே; நாம குடிக்காம வாயக்கட்டணும்னு தெரிய வேணாமா? கேட்டா சண்டைதான்; தெனம் ஊர் சிரிச்சுகிட்டிருந்தா நல்லாவா இருக்கு? எம் பொண்ணுவளை பெரிய படிப்புகாரனுக்கோ, பணக்காரனுக்கோ குடுக்காட்டியும், குடிகாரன், கோவகாரனுக்கு குடுக்காம இருக்கணும்னு தான் அந்த சாமிய வேண்டிக்கிறேன். அடி, ஒத பட்டு அவமானப்படறது என்னோட போவனும். தம்பி நல்லா வச்சிருக்காங்கள்ல ஒன்னை? ஆமா, என்னா என்னமோபோல இருக்க? தலையுங்கோலமும், நல்லாவே இல்லியே?”

“”இல்ல, அங்கு இன்னைலேர்ந்து நாத்துபரி, நாளைலேர்ந்து நடவு; ஒம்மருமவனுக்கு சோறு குடுக்க வந்தன். அப்படியே ஒரு எட்டு ஒன்னையும் பார்த்துட்டு வந்துடலாம்னு ஓடியாந்தேன்.”

“”நாந்தாம்மா ஒனக்கு ஒரு வெத்தல பாக்கு கூட வாங்கியாறாம வந்துட்டேன். வெறுங்கையோட வந்துட்டமேன்னு, என்னமோபோல இருக்கு”.

“”ஆமா நீ என்னா விருந்தாளியா? வந்ததே பெரிசு, எம்மொவ போன இடத்துல சமத்தா, பொறுப்பா இருந்து குடும்பம் பண்ணுதே! அதான் வேணும்”

“”அதெல்லாம் ஒரு கொறவும் இருக்காது! அப்ப நா பொறப்புடட்டுமா?

“”இரு; இந்த உச்சி வெயில்ல போவாத; வயித்துக்கு ரெண்டு சாப்புடு. புனிதா சோறாக்குது; மீன் கொழம்புதான்; சாப்புட்டுட்டு, அந்த தூக்கு வாளில தம்பிக்கும் எடுத்துட்டு போயி குடு”.

வரக்காப்பியை குடித்துவிட்டு தரையில் விழுந்து படுத்தாள். அலாதியாய் தூங்கிவிட்டாள். வெயில் தாழ அவள் தங்கை புனிதா எழுப்பி தட்டில் சோறு கொடுத்தாள். வயிறடங்க சாப்பிட வேண்டும்! எழுந்தாள். சாப்பிட்டாள். அதற்குள் பள்ளிக்கு போயிருந்த கடைசி இரண்டு தங்கைகளும் வந்துவிட்டன. அக்கா மகனை ஆசையாய் தூக்கி வைத்துக் கொண்டன. இவள் அம்மா ஒரு பையில் கத்தரி பிஞ்சு, வெண்டிக்காய், மிளகாய், கீரை, உரித்த தேங்காய், ரெண்டு மரக்கால் அரிசி என்று ஒரு பையில் போட்டு கொடுத்தாள். அவள் தங்கை தூக்கு வாளியில் சோறும், மீன் குழம்பும் கொடுத்தாள்.

“”நாளைலேர்ந்து நடவு இல்லாட்டினா கூட இருப்பேன்; நீ ஒரு தடவ தங்கச்சிவள அழைச்சுட்டு வாம்மா, அப்பா வந்துச்சுன்னா நா வந்துட்டு போனேன்னு சொல்லு! எங்க அப்பாவ காணலை?”

“”அது பண்ணைக்கு ஒரமெடுக்க திருவாலூரு போயிருக்கு. ராவிக்கிதான் வரும். வந்தா சொல்றேன், நீ பொழுதோட, ஊடுபோயி சேரு!” அவள் இடுப்பில் குழந்தையும், ஒரு கையில் பையும், ஒரு கையில் தூக்குவாளியுமாய் மெல்ல நடந்தாள். வீராப்பாய் பொறப்புட்டு வந்துட்டோம்? இப்ப வெக்கங்கெட்டு போயி திரும்ப எப்படி போறது? பேசாமல் கல்லைக் கட்டிக்கொண்டு வெட்டாற்றில் இறங்கி விடுவோமா?” என்று யோசனையோடு, ஆத்தூர் மதகு தாண்டி நடந்தபொழுது, எதிரில் அவள் கணவன் சைக்கிளில் வந்தான்.

இவளருகில் நிப்பாட்டி இறங்கினான். இவள் தலையைக் கவிழ்த்து நின்றாள்.

“”இந்தரு, காலம்பற அடிச்சிட்டமேன்னு மனசு ரொம்ப கஷ்டமா போச்சு; இனிமே குடிக்கபுடாது; அப்படியே குடிச்சாலும், கட்டுன பொண்டாட்டிய அடிக்க புடாதுன்னு சாமி படத்துக்கு முன்னால சத்தியம் செஞ்சுகிட்டேன். இன்னைக்கு நாத்து பரிச்ச கூலி எடுத்துட்டு போயி சீனி கார்டை மீட்டு, சாக்கு நெறையா அரிசி வாங்கி கட்டி வீட்ல போட்டுட்டுதான் வாறேன். எம்மொவம் மூஞ்சி அப்படியே நெனப்புல வந்துச்சு. எப்புடி விட்டுட்டு இருக்கிறதாம்? அதான் சைக்கிளை எடுத்துகிட்டு ஓடியாந்தேன். நீ ஒண்ணும், பேசினதையும், அடிச்சதையும் மனசுல வச்சிகிடாத வேலாயி; என்னவோ, அப்ப ஒரு கோவம்; அடுத்த நிமிசமே வருத்தமா இருந்துச்சி, இந்த கையிதான அடிச்சதுன்னு தரைலயே ஓங்கி குத்திக்கிட்டேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “யப்பா, யப்பா’ என்று நிர்மல் தாவ ஆரம்பித்தான்; தூக்கி முத்தம் கொடுத்து, அணைத்துக் கொண்டான்.

பின்னர் மகனைத் தூக்கி முன்புறம் சைக்கிளில் உட்கார வைத்தான். அவள் கையிலிருந்த பையையும், தூக்கு வாளியையும் வாங்கி பக்கத்திற்கு ஒன்றாய் மாட்டினான்.

“”அங்க, அத்த மாமா, ஒந்தங்கச்சிவோ எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்றான்.

“”ம்!” என்றாள் அவள்.

அடுத்த வாரம் நானும் வாரேன்; நம்ம மூணு பேருமா போயி பாத்துட்டு வருவம்; சரி, நீ ஏறிக்க; வா நம்ம வூட்டுக்கு போவம்!’ என்று அவன் சொன்னதும், இவள் பின்னால் உட்கார்ந்தாள். தங்கள் வீடு நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் மருதையன்.

– ஆகஸ்ட் 2014

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2014 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு ரூ.2,500/- பெறும் கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *