கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 14,052 
 

“யேய்… தனா… மிஸ் உன்னையே பார்க்கிறாங்க முழிச்சுக்கோ” அடிக்குரலில் கிசுகிசுத்த பக்கத்து இருக்கைக்காரி மிருதுளா, டெஸ்க் மறைப்பில் தனாவின் தொடையை இலேசாக சுரண்டினாள்.

கண்கள் செருகிட கிறக்கத்திலிருந்தாள் தனா. தானொரு ப்ளஸ் டூ மாணவி என்பதோ கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதென்பதோ நினைவற்ற கனவொன்றில் அமிழ்ந்திருந்தாள் அவள். “ஆல் ஆஃப் யூ அண்டர்ஸ்டாண்ட்…?”

எல்லோர் முகத்தையும் வருடி வந்த டீச்சரின் பார்வை தனாவிடம் நிலைத்தது. தளர்ந்தும் சரிந்தும் அயர்ந்துமிருக்கும் அவள், அவரது கடுப்பைக் கிளப்பப் போதுமானவளாயிருந்தாள்.
“தனலட்சுமி… ஸ்டேண்ட் அப்… டெல் மி அபெளட் திஸ் தியரம்.” என்ற மேத்ஸ் டீச்சர் முத்து மீனாளின் கர்ணகடூர குரலில் வகுப்பின் மொத்த கவனமும் தனா மேல் விழுந்தது.

ஏளனமும் கேலியும் அனுதாபமுமாக கிசுகிசுப்புகள் கிளம்பின. தனாவோ சிலிர்த்தெழுந்து, அப்போது நடத்தி முடித்திருந்த தியரத்தை கடகடவென சொல்லியமர்ந்தாள்.

வகுப்பு முடிந்ததற்கான மணியோசை ஒலித்தது. தன் வகுப்பின் கால அளவை வினாடியும் தவற விடாத கண்ணியமுள்ள அந்த ஆசிரியை வெளியேறவும், தனாவைச் சூழ்ந்தனர் மாணவிகள். “அதெப்படி தனா…? தூங்கவும் தூங்கிட்டு, கேட்டதும் பளீர்ன்னு சொல்லித் தப்பிக்க முடியுது உன்னால?”

“எல்லாம் லீவிலேயே கரைச்சு குடிச்சிருப்பா”

“தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக் கூட சரியா சொல்றா பாருடி… நம்மால முடியாதுப்பா”

“அவ தூங்கலடி… தூங்கறமாதிரி நடிச்சா… இல்லப்பா…”

“சும்மாயிருங்கடி… க்ளாஸ் பாய்ஸ்ஸெல்லாம் நாம பேசறதைக் கேட்டு கிண்டல் பண்ணப் போறாங்க”

“நம்ம தமிழம்மா சொன்னாப்ல எருது வருத்தம் காக்கைக்குத் தெரியுமா? எனக்கு வாய்ச்ச அம்மா அப்பா போல உங்களுக்கிருந்தா நீங்களும் என்னை மாதிரிதான் இருப்பீங்க” சலிப்புடன் கூறினாள் தனா.

“அப்ப மாடா நீ….? ஹே ஹே ஹே…” ஒட்டுமொத்தமாக உரத்து சிரித்தனர்.காக்கை விரட்டுவது போல் அவர்களை விரட்டினாள் தனா. கலகலத்துப் போன வகுப்பறை, அடுத்த பாடவேளை ஆசிரியை தூரத்தில் வரவும் கப்சிப்பென ஓய்ந்து ஒழுங்கானது.

அவளது அப்பா பொதுத் துறை நிறுவனமொன்றில் மரியாதைக்குரிய பதவியிலிருப்பவர். அலுவலகத்தில் சகலரையும் ஆட்டிப் படைப்பது போலவே வீட்டிலும் அனைவரும் அவரது விருப்பம் போல்தான் இருக்க வேண்டியிருந்தது. மிரட்டல்களும் அச்சுறுத்தல்களுமாய் தன் பதவியதிகாரத்தை சதாசர்வ காலமும் உயிர்ப்பித்துக் கொண்டேயிருப்பவர்.

தன் கல்லூரிக் காலத்தில் வாங்கிய கோல்டு மெடல் தந்த கர்வம் இன்னும் அழியவில்லை. படித்த காலத்திலேயே கலெக்டர் ஆகும் கனவில் மிதந்தவர். அதற்கான வயது வரம்பைக் கடக்கும் வரை சற்றும் தளராமல் முயன்றும் நனவாகாமலே போனதவர் கனவு.

தன் மகனின் இளமையையும் தானெடுத்துக் கொண்ட யயாதி போல, தன் வாரிசையேனும் ஐஏஎஸ் ஆக்கிப் பார்ப்பதென்ற வேகத்தில் தனாவை பம்பரமாய் சுழலவிட்டுக் கொண்டேயிருப்பவர்.

தனாவின் அம்மாவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளர் வேலை. வேலைக்கேற்ற அலங்காரமும் உடல் பராமரிப்பும் தான் வீட்டிலிருக்கும் போதும் அவரது தலையாய வேலை. வாங்கும் சம்பளத்துக்கு வேலையிடத்தில் தேனொழுகப் பேசுவது போதுமென்பது போல், வீட்டுக்குள் காலடி வைத்தவுடன் வெளிப்படும் அவரது மற்றொரு முகம் வெகு சிடுசிடுப்பானது. வீடென்பது மேலதிகாரியற்ற, பொறுப்புகளற்ற விடுதலையான இடமாயிருக்கவே விரும்புபவர்.குடும்பப் பொறுப்புகளில் அகப்படாமலிருக்கவும், சமூக அந்தஸ்துக்காகவுமே வேலைக்குச் செல்பவர்.

மாணவ மாணவிகள் மதிய சாப்பாட்டு மணியொலிக்கவே சலசலத்துக் கலைந்தனர். மிருதுளாவும் தனாவும் தங்கள் இருக்கையிலேயே இடமொதுக்கி சாப்பிடத் தயாரானார்கள்.
மிருதுளாவின் சாப்பாட்டுப் பை எப்போதும் ரசனையான ஐட்டங்கள் உடையது. அவளது தந்தையின் ஒற்றைச் சம்பளத்தில் நிறைவாக வாழும் சூட்சுமம் அறிந்தவர்கள் அவளது பெற்றோர். தனாவுக்கு அவள் எது எடுத்து வந்தாலும் சாப்பிடப் பிடிக்கும். மிருதுளாவும் தோழியருடன் பகிர்ந்து கொள்ளத் தக்க அளவு சற்று கூடுதலாகவே எதையும் எடுத்து வருபவள்.

வழக்கம் போல் தனாவுக்கு அரைக்கப் சாம்பார் சாதம், ஒரு கரண்டி மோர் சாதம், கீரைப் பொரியல். எப்போதும் மிருதுளாவின் சாப்பாட்டைப் பகிர்ந்தே தனாவின் வயிற்றுப் பசி சாந்தமாகும்.

சாப்பிடும்போது, மெல்லிய குரலில் கேட்டாள் மிருதுளா… “ஏண்டி தனா, ராத்திரி ரொம்ப நேரம் கண்ணு முழிச்சு படிச்சியா?”

“ஆமா… தினமும்தான் எங்க தூங்க விடறாரு எங்கப்பா..? ஒன்பதரை வரைக்கும் வீட்டுப்பாடம், பதினொன்றரை வரைக்கும் மறுநாளைய பாடம், மறுபடி காலையில நாலு மணிக்கெல்லாம் அலாரம் வெச்சு எழுந்து ஹேண்ட் ரைட்டிங் ப்ராக்டீஸ், ஸ்பீட் ரைட்டிங் ப்ராக்டீஸ், அப்புறம் ஐஏஎஸ் எக்ஸாம்க்கு ப்ரிபரேஷன்… ஆறரை வரைக்கும் ரிங் மாஸ்டர் போல கூடவே உட்கார்ந்திருப்பார். ஒரு சாட்டையொண்ணு கையில இல்லாதது தான் குறை.
அவர் வாக்கிங் கெளம்பின பிறகு அரக்கபரக்க குளிச்சு எதையோ முழுங்கி ஏழுமணி க்ளாஸ்க்கு வந்து சேர்றதுக்குள்ள… போறும்போறும்ன்னு ஆயிடுது. மிஸ் ராகம் போட்டு பாடம் எடுக்கும் போது சொகம்மா கண்ணு சொக்குது. என் கஷ்டம் இவளுங்களுக்கெங்கே தெரியப் போவுது? கேலியும் கிண்டலும்…”

கண்களில் முட்டும் நீரை மறைக்க குனிந்து வேகமாக சாப்பிடும் தனாவைப் பார்க்க மிருதுளாவுக்கு அய்யோவென்றிருந்தது.

“சரி… சரி… இதுக்கு போய் ஏண்டி கலங்குறே…? யாராச்சும் எதாச்சும் சொல்லிட்டுப் போகட்டும். பெத்தவங்க நம்ம மேலுள்ள அக்கறையில தானே எதையும் செய்வாங்க… இப்பக் கஷ்டப்பட்டாலும் பின்னாடி செளகர்யமா இருக்கப் போறது நாமதானே… விடு இவளுங்க கிண்டலையெல்லாம். அப்படியெல்லாம் படிக்கப் போய்தானே மிஸ் கேட்கும்போதெல்லாம் டாண்டாண்னு பதில் சொல்ல முடியுது”

“பரிட்சை நேரத்துல ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் தன் செல்லுல அலாரம் வெச்சு எழுந்து, ராத்திரி படிச்சதையெல்லாம் ஒருதடவை கேட்டுக் கேட்டு இம்சை பண்ணுவார் தெரியுமா…? தூக்கத்துல கேட்டாக் கூட சொல்ற அளவு தரோவா படிச்சாதான் காலத்துக்கும் மறக்காதாம். நாளை ஐஏஎஸ் பரிட்சையில எங்கேயிருந்து கேள்வி எடுத்தாலும் பதில்தர முடியுமாம்.

நல்லா தூங்கிட்டிருப்பேன். இவரு போடற கூப்பாட்டுல அடிச்சு பிடிச்சு எழுந்துப்பேன். இவரோட அட்டகாசத்தால ‘தனலட்சுமி’ அப்படின்னு யாராவது கூப்பிட்டாலே எனக்கு காதெல்லாம் எரியும். தாங்க முடியலப்பா இவங்க டார்ச்சர். செத்துடலாமான்னு இருக்கு. மறுபடி அவள் கண்ணிமைகள் நனைந்தன.

இடக்கையால் அவள் தோளை ஆதரவாய் தட்டினாள் மிருதுளா.

“எங்க அம்மா என்னடான்னா எப்பப் பார்த்தாலும் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளோட கம்பேர் பண்ணிப் பேசறதும், தன்னோட வேலை செய்யறவங்க பிள்ளைகளைவிட நா அதிகம் மார்க் வாங்கலேன்னா தலை குனிவாப் போயிடும்ங்கறதும்… இவங்க மட்டும் வீட்டுல முடிஞ்சதைத் தான் செய்வாங்களாம்; நாங்க மட்டும் இவங்க ஆசைப்படற ஒசரத்துக்கு தாவிக் குதிக்கணுமாம்…”

“தோ பாரு தனா… இதுக்கெல்லாம் அழுதிட்டிருக்காதே. இன்னுமிருக்கிற காலத்துல இந்த உலகத்திலே நமக்கான இம்சை எவ்வளவோ இருக்குடி. சகிப்புத் தன்மையும், அனுசரிச்சுப் போற குணமும் நமக்கு வீட்டிலேயிருந்து தான் பழக வேண்டியிருக்கு. இந்தா உனக்குப் பிடிக்குமேன்னு உருளைக் கிழங்கு பொடிமாஸ் எங்கம்மா அதிகமா வெச்சு குடுத்து விட்டிருக்காங்க, எடுத்துக்கோ.”

“எனக்கு என்னென்ன பிடிக்கும்ன்னு எங்க அம்மாவுக்கே தெரியாதுடி. யு ஆர் லக்கிடி. நினைச்சப்ப ஹோட்டலுக்குப் போகவும், கண்டதையும் வாங்கிக் கொடுக்கவும் முடியிற அம்மாவுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் மனசறிஞ்சு நடக்க மட்டும் முடியாமப் போயிடுது. உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் எவ்வளவு புவரா இருக்கேன்னு சங்கடமாயிருக்குடி. அதே நேரம் உன்னைப் போல ஃப்ரண்ட்ஸ் கிட்டயாவது மனசு விட்டு பேசறதால கொஞ்சம் ரிலீஃப் கிடைக்குது மிருது எனக்கு.”

“எல்லாத்திலேயும் நல்லதுமிருக்கு; கெட்டதுமிருக்கு தனா. நாமதான் நல்லதை நினைச்சு மனசை தேத்திக்கணும். நம்மை நல்லவிதமா வளர்த்தெடுக்க தானே அவங்க ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டியிருக்கு…”

“பத்துமாசம் சுமந்து பெத்துடறதாலயும் செல்வாக்கா வளர்க்கறதாலயும் கீ கொடுத்த பொம்மையாட்டமிருக்க முடியுமா சொல்லு.”

“இங்க பாருப்பா… நாம தேர்ந்தெடுத்துக்க முடியாத ஒரே விஷயம் நம்மைப் பெத்தவங்க யாராயிருக்கணும்ங்கறது தான். நல்ல மார்க், நல்ல காலேஜ், நல்ல வேலை இதெல்லாம் நம்ம கையில… சியர் அப்! வா வா சீக்கிரம்… லஞ்ச் ஒர்க் செஞ்சாகணும் இன்னும் பத்து நிமிஷத்துல”

கரும்பலகையில் எழுதியிருந்த பாடக் குறிப்புகளை எழுதிக் கொண்டே வகுப்பறை வம்புகளை பேசிக்கொண்டிருந்த தனா தற்காலிகமாக தன் சுயபச்சாபத்திலிருந்து விடுபட்டாள்.

வீட்டுக்குப் போனால் அவள் பேசுவதைக் கேட்கக் கூட ஆளில்லை. இவளுக்கான கட்டளைகளை பிறப்பிக்க மட்டுமே அப்பா வாய் திறப்பார். அவளிடம் படிப்பு தவிர்த்த வேறு பேச்சை காது கொடுத்துக் கேட்கவும் அவர் விரும்புவதில்லை.

அம்மாவிடம் இவளாக போய் ஏதேனும் பேச்சுக் கொடுத்தால் கூட “ஆஃபிஸ்ல பேசிப்பேசி மண்டையப் பிளக்குது தலைவலி. ஐ வாண்ட் ரெஸ்ட்” என்று கண்ணை மூடிக் கொள்வார்.
வீட்டுக்குப் போனபின் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வந்தால் கூட தோழிகளிடம் கேட்கவும் அனுமதியில்லை. “இத்தனை நேரம் அங்கிருந்துவிட்டுதானே வருகிறாய். கேட்கும்போதே கவனமாய் கேட்பதற்கென்ன?” என்று திட்டு விழும். பள்ளி வந்த பிறகு தான் எதுவாயிருந்தாலும் பேசிக் கொள்ளலாம். தோழிகள் பேசினால், ‘தனா தூங்குறா, வெளிய போயிருக்கா” ஏதாவதொரு சமாளிப்பு அவரிடம் தயாராய் இருக்கும்.

பக்கத்திலேயே குத்துக் கல்லாய் நின்று கொண்டிருப்பாள் தனா. மறுநாள் பள்ளியில் அவர்கள் முகத்தில் விழிக்க வெட்கப்படவும், ‘நாங்க போன் செஞ்சாக் கூட மகாராணி பேசமாட்டிங்களோ…’ என்று சீறும் தோழியரைச் சமாதானப் படுத்தவும் தனா தான் கிடந்து அல்லாடுவாள்.

கொஞ்ச நாட்கள் முன், ஊரில் ஏதோ உறவினர் மண்டையைப் போட்ட தகவல் வந்தது. தனாவின் பெற்றோர் ஊருக்குச் சென்றுவிட்டனர். அடித்தது யோகம் தனாவுக்கு. ஆசை தீர தன் தோழியர்க்கு போன் செய்து மணிக்கணக்கில் பேசித் தள்ளிவிட்டாள். அன்றிரவு எதுவும் சாப்பிடாமலேயே விருந்து சாப்பிட்ட திருப்தியும் மகிழ்வுமாய் உறங்கினாள் அவள்.

என்னவொரு சோகமென்றால், அந்த மாதம் போன் பில் வந்ததும்,தொகை கண்டு திகைத்த தனாவின் அப்பா எக்ஸ்சேஞ்ச் சென்று இன் -அவுட் கால் லிஸ்ட் கேட்டு வாங்கி வந்தவர் யாருக்கெல்லாம் பேசினாளென ஆராய்ந்து தெரிந்து கொண்டு பாட்டும் ஆட்டமுமாய் அமர்க்களப்படுத்தி விட்டார்.

அன்று அவருக்கு செய்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இன்னும் தனா போனைத் தொடுவதேயில்லை. அதற்கான தண்டனையாக கைவிரல் ஒடிய ஒடிய நூற்றெட்டு தடவை தமிழ்ப் பாடநூலின் மனப்பாடச் செய்யுள்களை எழுதிய வலி அவளுக்குத் தானே தெரியும்!
மதியம் ஒவ்வொரு வகுப்பிலும் காலாண்டுத் தேர்வு விடைத் தாள்களை ஆசிரியர்கள் தருவதும் யார் என்ன மதிப்பெண் என பேசிக்கொள்வதுமாகக் கழிந்தது. வகுப்பில் எல்லோருமே கடுமையாக உழைத்திருந்தனர். எந்தளவு நெருங்கிய சினேகிதமென்றாலும், மனதுள் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கவே செய்தது.

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகச் சொல்லக் கூடிய தனா எல்லாத் தேர்வுகளிலும் சொல்லிக் கொள்ளும்படி மதிப்பெண்கள் பெறவில்லை. இது ஆசிரியர்களுக்கும் சக வகுப்பினர்க்கும் ஆச்சர்யமான ஒன்றாயிருந்தது.

“எக்ஸாம் ஹால்லயும் தூங்கிட்டாளோ…”

“எல்லாம் தெரியும்கற மிதப்புல விட்டிருப்பா”

“அம்மையாருக்கு சொல்லத் தெரியும்; எழுத வராதோ…”

தனா மனசுக்குள் சொல்லிக் கொண்டாள், “போங்கடி இவளுங்களே…இது எங்கப்பாம்மாக்கு நான் தர்ற தண்டனை.”

அவள் மனசைப் படித்தது போல் மிருதுளா சொன்னாள், “இதுல உன்னோட மதிப்பும் இருக்கு தனா”

“அதை நிரூபிக்க எனக்கு அவகாசமிருக்கு மிருது…” முழு ஆண்டுத் தேர்வை மனதில் வைத்து சொன்னாள் தனா. தன் பெற்றோரின் ரியாக்ஷனைக் கற்பனையில் களித்தபடி முகத்தில் மட்டும் ஒரிஜினல் சோகம் ததும்ப வீட்டுக்குப் போனாள்.

கேட்டதும் அம்மா ‘உனக்கு இனி ஒரு வேளை சாப்பாடு கிடையாது’ என்று அறிவித்தாள். தண்டனைக்கு தண்டனையுமாச்சு. தனக்கும் வேலை மிச்சமாச்சு! அப்பாவின் திட்டும் அடியும் பழகிப் போனது தானே அவளுக்கு. தலை கவிழ்ந்து நிற்பது சுலபமாயிருந்தது அவளுக்கு. உள்ளுக்குள் நிறைந்திருந்த குதூகலம் அவர்களின் தவிப்பையும் அனத்தலையும் பார்த்து அதிகரித்தது.

“என்னதான் நினைப்பிலிருக்கே…? எங்களை வெளிய தலை காட்டவிடாம செய்யறதுல தான் உனக்கு நிம்மதியா? படிக்கிற வயசில மனசை வேறெங்கே அலைய விடறே? சொல்லு சொல்லு” என்று தோள்களைப் பிடித்து உலுக்கினார் அப்பா. அவரின் உருட்டி விழிக்கும் கண்களை மிக அருகில் பார்த்து திக்கித் திணறிய தனாவுக்கு பேச்சு குழறியது.

“அ…அதெல்லாம் ஒ..ஒண்ணுமில்லேப்பா…”முகம் சுருங்க வாய்க்குள் சிக்கிக் கொண்ட நாவை சிரமப்பட்டுப் பெயர்த்தெடுத்து தொண்டையிலிருந்து குரலை வரவழைக்க அவள் பட்ட பாடு….!
அம்மாவும் கூட கூட சேர்ந்து அப்பாவுக்கு எடுத்துக் கொடுத்தார். கற்பனையில் தோன்றியதையெல்லாம் அவள் மேல் சுமத்தி கண்டபடி பேசினார்கள் இருவரும். தன்னை இதைவிட இழிவாய் யாரும் இனியும் பேசிட முடியாதென்ற தீர்மானத்துக்கு வந்த தனா மனம் சோர்ந்து போனாள். சற்று முன்னிருந்த பழிவாங்கும் குதூகலம் ஓடி ஒளிந்தது. என்ன சொல்லியும் அவர்கள் சமாதானமாகவில்லை. அவளை நம்பவுமில்லை. யாருமற்ற பாலைவனத்தில் தன்னந்தனியளாய் தன்னை உணர்ந்தாள் தனா. நிரூபனமற்று அவள் மேல் அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சோர்வையும் கழிவிரக்கத்தையும் தந்தன.

ஒடுங்கிப் போனாள். ஏதாவது கேட்டால் மலங்க மலங்க விழித்து பிறவித் திக்குவாய் போல் திக்கித் திக்கிப் பேசலானாள். “சும்மா நடிக்கிறா. ரெண்டு போடு போடுங்க” என்றவாறு பியூட்டி பார்லருக்கு கிளம்பிவிட்டார் அம்மா. உண்மையாகவே தனாவால் பழையபடி சரளமாகப் பேச முடியவில்லை.

அன்று மாலையே மனோவியல் நிபுணரிடம் ஆலோசனைக்கு நேரம் வாங்கினார் அவளது தந்தை. அக்கம்பக்கத்தவர்களுக்கு அவர்கள் வீட்டு களேபாரம் அவலானது.

அவர்களிடம் தனித்தனியாக உரையாடிய நிபுணரோ அவள் அப்பாவையும் அம்மாவையும் இன்னும் மூன்று தடவை வரும்படி கேட்டுக் கொண்டார்.

“அவளுக்கு ஏதாவது மருந்து மாத்திரை…” இழுத்தார் அப்பா.

“நம்ம தோட்டத்துல முளைச்சதுக்காக மட்டும் செடி நம்முடையதாயிடுமா? இருக்குற மண்ணோட வாகு, கிடைக்கிற சூரிய ஒளியளவு இப்படிப் பலதும் சம்பந்தப்பட்டது அதோட வளர்ச்சி. நம்மாலானது தண்ணி ஊத்தி, உரம் போட்டு பூச்சி வராம, ஆடுமாடு திங்காம பாதுகாத்து வெச்சுக்கறதுதான். பூக்கறதும் நிலைக்கறதும் நம்ம கையில இருக்கா?
பெத்த புள்ளைங்க செடியவிட மேல் இல்லையா… ஆடம்பரமாயிருக்க காசுபணம் வேணும். அன்பாயிருக்க மனசிருந்தா போதும்”

நிபுணர் அடுத்த பார்வையாளரை அழைத்தார்.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

1 thought on “யயாதியின் மகள்

  1. நல்ல கதை. ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோருக்குக் கொடுக்க வேண்டிய கவுன்சிலிங் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *