மோகன் வாத்தியார்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 7,285 
 

“நாம அப்புடி பேசிருக்ககூடாதோ… போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல…. இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு வாத்தியாருகிட்ட படிச்சவனுகதானே வெறும் பாடத்த மட்டும் சொல்லிக் கொடுக்குறதுக்கா இந்த வாத்தியாரு பொழப்பு…..”

“கொட்ட வேண்டிய எடத்துல கொட்டியும் தட்டிக்கொடுக்க வேண்டிய எடத்துல தட்டியும் கொடுத்தாதான் நல்ல வழிக்கு வருவானுக.. ரிட்டேரு ஆனாலும் நா வாத்தியாருதானே… வாத்தியாரு கேள்வி கேப்பாருங்குற பயம் சாகுற வரைக்கும் இருக்கனும்… படியாத மாடு ஒழவுக்கு ஒத்து வருமா…. ” என்ற சிந்தனையோடு வீட்டுத் திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த மோகன் ஆசிரியர் பழைய நினைவுகளில் மூழ்கினார் ……

முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றும் ஆனந்தகுமார் தன் மனைவி சங்கீதாவுடன் காரில் வந்து தனது மகளின் திருமணவிழா அழைப்பிதழை கொடுத்துச் சென்றதிலிருந்து உற்சாகமாக காணப்பட்டார் எழுபத்தெட்டு வயது மோகன் ஆசிரியர்.

“அய்யா, எங்க கல்யாணத்த நடத்தி வச்ச மாதிரி எம் மக கல்யாணத்தயும் நீங்கதான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கனும்…” ஆனந்தகுமார் சொன்னது அவரது நினைவில் வந்து சென்றது.

அவ்வப்போது கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்ட ஆனந்த குமாரிடம்…

” என்னப்பா வேர்க்குதா… எனக்கு பழகிருச்சு… அம்மாடி நீ வேணா அப்புடி படில ஒக்கந்துக்கவே….”

” இல்லங்கய்யா இப்புடி திண்ணையிலயே ஒக்காந்துக்குறேன்….”

” நாங்க ரெண்டு பேருமே கிராமத்துல பொறந்து வளந்தவங்கதானே… இப்ப இந்த வாழ்க்க நீங்க கொடுத்ததுங்கய்யா…”

” நீ நல்லா படிச்ச.. ஒன்னோட தெறமைக்கு கெடச்ச வேலைய்யா…. இதுல நா எங்க….”

“எனக்கான ஆணிவேரு நீங்கதானய்யா… ” என்று சொன்னபோது மோகன் ஆசிரியர் கண்களில் குபீரென்று நீர் எட்டிப்பார்த்ததை நாற்காலியில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.

” நீங்கெல்லாம் வந்துருக்கீக தண்ணி மோந்து கொடுக்கக்கூட இங்க ஆளு இல்ல… ஊருக்குள்ள இருக்கே வேலு கலப்புக்கட அங்கருந்துதான் மூனு நேரமும் சாப்பாடு வரும். சாப்புட்டுக்கிறது… எங்க அண்ணன் மருமகபுள்ள தட்டுகிட்ட கழுவி வச்சிட்டு தண்ணி மோந்து வச்சிட்டு போகும்..”

“அய்யா ஒங்க பையன் ஒருத்தரு இருந்தாரே….சொற்களை கோர்த்தாலும் ஒலியளவை குறைத்தான்.

“கெவுர்மெண்ட் வேல பாக்குறான்ல அதுனால கெவுர்மெண்ட் வேல பாக்குற பொண்ணதான் கட்டிக்குவேனு சொல்லி கட்டிக்கிட்டு இப்ப குடும்பத்தோட திருவண்ணாமலை ஆரணில இருக்கான். ஏங்கூடவே வந்துருனு எவ்ளோ சொன்னான்… எனக்குத்தான் இந்த ஓட்டு வீட்டயும் இந்த ஊரயும் விட்டுட்டுப் போக மனசில்லாம தங்கிட்டேன். ஆனா குடும்பத்தோட மாசத்துக்கு ரெண்டுதடவயாச்சும் வந்துட்டு போயிருவான். … ” சொல்லிக்கொண்டே பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்து சங்கீதாவை பார்த்தார் ..

“நா வேலக்கி போகலங்கய்யா.. பசங்கள பாத்துக்கிட்டு வீட்லதாங்கய்யா இருந்தேன்.. பசங்க பெரியாள வரவும் வீட்ல சும்மாதானே இருக்கோம்னு பார்வையற்றோர் பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு சம்பளமில்லா டீச்சரா போய்க்கிட்டு இருக்கேன்…” மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.

தலையை மேலும் கீழும் அசைத்தவர் ம்…. என்று கண்களை மூடி திறந்தார்.

“பக்கத்து ஊரு ஈப்பி ஆபிசுலதாயா ஒங்க ஊரு மலையரசன் வேல பாக்குறான். அவன் ஓங்கூடவா படிச்சான்….”

“அவன் எனக்கு பின்னாடி செட்டுங்கய்யா. அன்னைக்கு ஒருநா அவனப்பாத்தேன். அவன் சொல்லிதாங்கய்யா நா இங்க வந்தேன்….”

“ம்…. அவன்தான் இந்தப்பக்கமா வந்தா பாத்துட்டுப் போவான். யாருக்கிட்டயும் எதும் பேசுறது இல்ல நா… வெளில என்ன நடக்குதுனே தெரியாம போச்சு… மனசு ஒருமாறியா இருக்கவும் போன தடவ ஓட்டுப்போடக்கூட போகலப்பா… ஒத்தக்கையா இப்புடி ஒக்கார வச்சுட்டுப் போயிட்டாளே…. அது போகட்டும் போறப்ப அவனுக்கும் ஒன்னு வச்சுட்டு சொல்லிட்டுப் போ… அவன்கூடவே வந்தர்றேன்…..”

“இனமாற்றிக் கழித்தல்னு வாத்தியாரு சொல்லிட்டாலே ஒன்னுக்குப் போயிருவான் இந்த மலையரசன். இப்ப வாத்தியாருக்கு புடுச்ச புள்ளய மாறிட்டானே… “தனக்குள் நினைத்துக்கொண்டான்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே, மோகன் ஆசிரியர் காலைத்தொட்டு இருவரும் வணங்க முயன்றபோது “காலுல எதுக்குயா விழுந்துகிட்டு ..என்னோட அன்பு எப்பவும் என் புள்ளைங்களுக்கு உண்டு ” என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.

“ஒன்னாவது ரெண்டாவது வாத்தியாருனா கேவலமா… குடியரசு தலைவரா இருந்தா கூட அவருக்கு எழுதப் படிக்க சொல்லிக் கொடுத்ததே இந்த சின்னக்கிளாசு வாத்தியாருகதான்… சின்னக்கிளாசு வாத்தியாருகனா அரசாங்கமே எளக்காரமா பாக்குது.. வெத போட்டு மொளக்க விடுறதே நாங்கதானே.. எங்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணணும்னா அரசாங்கத்துக்கு கையே வர மாட்டேங்கிது…. சின்னக்கிளாசு வாத்தியார எல்லாரும் அவ்ளோ வெரசா மறந்துர முடியுமா… இந்த நாட்டோட ஆணிவேர நாங்கதேனே…” தன்னுள் பெருமை பேசிக்கொண்டே மேலச் சுவரில் தொங்கிய தன் மனைவி பேச்சியம்மாளின் புகைப்படத்தைப் பார்த்து மெல்லியதாய் சிரித்துக் கொண்டார்…..

மோகன் ஆசிரியர் முப்பத்தொன்பது வருடம் தொடக்கப்பள்ளியிலேயே ஆசிரியர் பணியாற்றினார். அதில் கடைசி பதினொன்று ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணி. முழு அதிகாரமும் தன் கைக்குள் வந்துவிட்டால் மாணவர்களுக்கு தேவையானதை செய்தும் சொல்லியும் கொடுக்கலாம் என்று சக ஆசிரியர்களிடம் சொல்லிக் கொள்வார். தலைமை ஆசிரியராக பணியேற்றபோது இந்த உலகமே தன் கைகளுக்குள் வந்ததாகவும் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பேச்சியம்மாளிடம் சொல்லி மகிழ்ந்தார்.

எத்தனையோ தலைமை ஆசிரியர்களிடம் ஈராசிரியர் பள்ளியில் பணிபுரிந்து இருந்தாலும் அவர் ஈசுவரி டீச்சரை மட்டுமே எல்லோரிடமும் பெருமையாக பேசுவார்.

” டீச்சர் வியாழக்கிழமை மத்தியானம் முழுசும் பசங்களுக்கு வாரவாரம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள மட்டும் வச்சு அவங்களுக்கு சிந்திக்கிறதுக்கான வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்தா பசங்க படிக்கிறதோட மத்த விசயத்துலயும் ஆர்வம் காட்டுவானுகதானே….”

“ஏங்க சார்.. பாடம் சொல்லித்தரலயானு அதிகாரிக கேட்டா என்ன சொல்றதாம்…”

“புத்தகத்த தாண்டியும் சொல்லிக் கொடுப்போம் டீச்சர். அன்னகாச்சும் பாட புத்தகத்த மூட்டகட்டி வைக்கட்டுமே…எப்பப்பாத்தாலும் படிபடினு சொன்னா அவனுகளுக்கு வெறுப்பு வராதா… புள்ளைகள பிரியா விட்டு படிக்கிறதே தெரியாம படிக்க வைக்கனும் டீச்சர்…”

“நல்லாதான் சார் இருக்கு….ஆனா…” அவர் பேச்சை இழுப்பதற்குள் “விடுங்க டீச்சர் பாத்துக்கலாம்..” என்று சொன்னபோது மோகன் ஆசிரியர் முகத்தில் புன்னகை அழகாய் அமர்ந்து கொண்டது…

அதேபோல்தான் வெள்ளிக்கிழமை மதியம் முழுவதும் மாணவர்களுக்கு விளையாட்டு என்று சொன்னபோதும் ஈசுவரி டீச்சர் மறுக்கவில்லை. இப்படி பல புதுமைகளை புகுத்திய போதெல்லாம் மறுக்காமல் ஒத்துக் கொண்டதால்தான் தலைமை ஆசிரியர் ஈசுவரியை எப்போதும் பெருமையாகவே பேசுவார். நாம் தலைமை ஆசிரியராக இருந்தால் இன்னும் நிறைய புதுமைகளை புகுத்தலாமே என்று எண்ணியதால்தான் அதிகாரம் தன் கைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மாணவர்களிடமும், “இந்த அதிகாரத்தை பெற கடுமையாக உழைக்க வேண்டும். அதிகாரம் தங்கள் கைகளுக்கு கிடைத்துவிட்டால் இந்த மக்களுக்கு எவ்ளோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யிங்கய்யா…”என்று அடிக்கடி சொல்லி வந்தார்…

ஆசிரியர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தபோது தன் மகளையும் மகனையும் தாய்மொழிக்கல்வி உள்ள அரசுப்பள்ளியில் சேர்த்து பெருமைபட்டுக்கொண்டார்.

புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களை சந்தித்துவிட்டால் போதும் தனது முதல் பள்ளி அனுபவத்தை மறக்காமல் சொல்லி சிலாகித்துக்கொள்வார்.

அவரது ஊரான காண்டாம்பட்டியிலிருந்து எருக்கலாங்காடு பள்ளிக்கூடத்துக்கு முப்பத்தேழு கிலோமீட்டர் எட்டு ஆண்டுகள் சைக்கிளில்தான் சென்றார். பிறகுதான் அவருக்கு இருபது கிலோமீட்டர் அருகில் மாறுதல் கிடைத்தது.

அன்று பணியில் சேர்ந்த முதல்நாள். மாணவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் பேசும் சொற்கள் பலவற்றுக்கு பொருள் புரியவில்லை. யாவும் புதிதாக இருந்ததால் ஆச்சரியமாகவே இருந்தது அவருக்கு. அன்று இரவு முழுவதும் மறுநாள் வகுப்பறை பற்றிய சிந்தனைதான். இளம் வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் மீசையை அடிக்கடி தடவிக் கொள்வார். அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைவிட்டுக்கொண்டு இருக்கும். புதிய ஆசிரியரைப் பார்த்ததில் குழந்தைகள் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

முதல்வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தை இவ்வாறு ஆரம்பித்தார்.

“நம்ம வீட்ல வந்து உட்காரும். கருப்பா இருக்கும் .. கா… கா…னு கத்தும் அது என்ன…?

காக்காய்…. ஒருமித்த குரலில் ….

காகம் னு சொல்லுங்க…

காகவம்… என்று சொல்ல மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னார். அவர்கள் சொன்னதில் திருப்தி அடையாமல் தனித்தனியே சொல்லச் சொன்னார். மாணவர்கள் பலரும் “காவம் ” என்று சற்றே திகைத்துப் போனார். ஒரு மாணவன் இடது ஆள்காட்டி விரலால் கண்களை குத்தி குத்தி அழ ஆரம்பித்து விட்டான். செய்வதறியாது திகைத்துப் போனவர் ஒருவழியாக அழுகையை நிறுத்தினார்.

அவனை அருகே அழைத்து “காகம் ” சொல்லு என்றார். எவ்வளவு சொல்லியும் அவன் “காவம்…. காவம்….”என்றே திரும்ப திரும்ப சொன்னான்.

அய்யா… இவ்வென் சின்ன ஆயம்மா மயன் .. மாணவன் ஒருவன் சொல்லி முடிப்பதற்குள் தங்கமணி ஆயா வகுப்புக்குள் வந்து சேர்ந்தாள்..

பெரிய ஆயம்மாவை சமைக்கச் சொல்லிவிட்டு தங்கமணி ஆயாவை அவனுக்கு காகம் என்ற வார்த்தையை மரத்தடி ஒன்றில் உட்கார்ந்து சொல்லித்தரும்படி சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியிலிருந்து அழுகைச் சத்தம் கேட்கவும் அமைதியானது வகுப்பறை.

“சொல்லுடா காவம்… காவம்….”என்று அதட்டிக்கொண்டு இருந்தாள். தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார் மோகன் ஆசிரியர். அவன் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். எலுமிச்சம் பழத்தை எம்பிளிச்சம் பலம் என்றும் திங்கிற பூந்தியை பூவந்தி என்றும் அவ்வூர் மக்கள் சொன்னதையும் தாம் அதை மாற்றி அமைத்ததாகவும் பலரிடமும் சொல்லி பெருமைபட்டுக் கொள்வார். எப்போது காகத்தை பார்த்தாலும் தனக்குள் காவம் என்று சொல்லி ஆனந்தப்படுவார்.

தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காகவே பல அரிய நூல்களை வாங்கிவந்து வகுப்பறையில் மாணவர்களை வாசிக்கச் சொல்லுவார்.

அன்றொருநாள், “இந்தப் புத்தகத்தப்பத்தி இவனுகளுக்கு என்ன சார் தெரியும். வந்தமா ஏதோ சொல்லிக் கொடுத்தமானு போறதவிட்டுட்டு ஒலகத்தையே மாத்தப்போறதா நெனச்சு ரொம்ப பண்ணாதீக சார்…”என்று தலைமை ஆசிரியர் ஞானசெல்வம் சொன்னதுதான் தாமதம் ….

“அவனுக்கு புரியாட்டியும் பரவாயில்ல சார்.. வாசிக்கிற பழக்கத்தயாச்சும் கொண்டு வருவோம்…..” என்றதும் அவர் முகம் சுருங்கி போயிருந்தது.

ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை புரட்டிப்புரட்டி பார்த்துக் கொண்டார். மலையரசனோட சீக்கிரமா மண்டபத்துக்கு போயிரனும். வெளியில போயி எவ்ளோ காலமாச்சு. வெளியுலகமே தெரியாம முடங்கிப் போயிட்டேனே.. மத்தவங்கள எனக்கு நெனவு இல்லாட்டியும் இந்த மோகன் வாத்தியார ஒரு பயலும் மறந்துருக் மாட்டானுக…எவ்ளோ வெசயம் சொல்லிக் கொடுத்துருப்பேன். ஏங்கிட்ட அடி வாங்காம ஒரு பயலும் தப்பிச்சுருக்க மாட்டானுக… கம்ப எடுத்தாதானே பல நேரம் சொல்லுப்பேச்சு கேட்குறானுக.. கொஞ்சிக்கிட்டே இருந்தா நம்ம தலயில அரப்பு தேச்சுருவானுக… தனக்குள் பேசிக் கொண்டார்.

ஒருநாள் முட்டைக்கடை கோவிந்தன், “சார் ஒங்களத்தான் பாக்க வந்தேன். நல்லா சொல்லித்தர்றதா எம்மக வேணி சொன்னா… படிக்கலனா கண்ணு காதுல பட்ராம நாலுசாத்து சாத்திருங்க சார்…. ”

” மக நல்லாதான் படிக்கிது.. ஒம்மயன்தான் நீ விக்கிறத வாங்கிக்கிட்டு இருக்கான். ” என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.

“அவனுக்கு நாலெழுத்து படிக்கத் தெரிஞ்சா போதும் சார்… அவனுக்கென்ன ஆம்பளப் புள்ளைக்கு கடகண்ணில வேலக்கி சேந்தாவது பொழச்சுக்குவான்….”

“அப்புடிச் சொல்லாதீக அவனோட பேச்சு நடையப்பாத்தா பின்னாடி அரசியல்வாதியா வந்தாலும் வந்துருவான்க” அவர் சொன்னபோது கண்கலங்கி போனார் கோவிந்தன். கோவிந்தனோடு பேசியது ஏதோ நேற்று பேசியது போல் இருந்தது.

திருமண அழைப்பிதழை பார்த்ததிலிருந்து அவருக்குள் பழைய நினைவுகள் யாவும் நிழலாடிக்கொண்டிருந்தது.

திருமண அழைப்பிதழை புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார். சிறப்பு விருந்தினர் இடத்தில் மாண்புமிகு திரு. கோ.சரவணன் அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என்றிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதற்கு மேல் வேறு எந்தப் பெயரையும் பார்க்கவில்லை. அவர் மனைவி இறந்து பதினைந்து வருடங்களாக வெளி உலகத்தை பார்க்க விரும்பாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தவருக்கு அரசியல் மாற்றங்கள் புதிதாய் இருந்தது.

“இவன் கோயிந்தன் மயனா இருக்குமோ… “ஒருமுறை பிரபல கட்சி ஒன்றில் கவுன்சிலர் பதவிக்கு சீட்டு வாங்கி தோற்றுப் போனதாக சொல்லி அவர் முன்னால் வந்து தலையை சொறிந்தது அவரது நினைவுக்கு வந்தது.

அவ கூட வாழ்ந்த வாழ்க்கை சும்மாவா.. எம்மனசு கோணாம நடந்துகிட்டவள அவ்ளோ சீக்கிரம் ஒதிக்கி வச்சுற முடியுமா.. போகும் போதே என்னயவும் இழுத்துக்கிட்டு போயிருந்தா நிம்மதியா நானும் போயி சேந்துருப்பேன். வழிந்த கண்ணீரை வலது கையால் துடைத்து தன்னையே சமாதானம் செய்து கொண்டார்.

நான்கு மணி நேர பயணத்திற்குப் பிறகு மலைரசனோடு திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். மண்டப வாசலில் மோகன் ஆசிரியரை வரவேற்று ஒரே ஒரு பதாகையை தவிர வேறு எந்தப் பதாகையும் வைக்கப்படவில்லை. பதாகையை பார்த்ததும் கண்கலங்கிய அவரது கைகளை இறுக பற்றிக் கொண்டார் மலையரசன்.

மோகன் ஆசிரியரின் பணிநிறை விழாவுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்த்துப் பதாகை வைக்க முயற்சித்தபோது, பதாகை வைக்கிற காசுக்கு பிள்ளைகளுக்கு பேனா பென்சில் வாங்கிக் கொடுத்தாகூட உதவியா இருக்குமுனு தான் சொன்னதும் அவர்கள் வாங்கிக் கொடுத்ததோடு புதிய கணினி ஒன்றையும் வாங்கிக் கொடுத்தது அவரது நினைவில் வந்து சென்றது..

மோகன் ஆசிரியர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டியதும் ஆசி பெற கீழே குனிந்தவர்களை அப்பா அம்மா கால்ல தவிர வேறு யாரு கால்லயும் விழக் கூடாதுயா.. என்னோட ஆசி எப்போதும் உண்டு என அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ஆனந்தகுமாரும் அவரது மனைவி மனைவியும் அவரது காலை தொட்டு வணங்கி “எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நீங்க எங்க அப்பா அம்மாவுக்கு சமம்தானங்கய்யா ” என்றபோது அனைவரையும் தனது கைகளால் அரவணைத்து கண்களை மெதுவாக மூடி திறந்தபோது மகிழ்ச்சியில் அவரது முகம் சிவந்திருந்தது….

விழா அரங்கில் முதன்மை நாற்காலியில் மோகன் ஆசிரியர் அமர அருகிலேயே மணமக்களும் அமர்ந்தனர். அப்போது பத்து பதினைந்து பேர் கட்சி கறை கட்டிய வேட்டி அணிந்தபடி மண்டபத்துக்குள் வர கீழே உட்கார்ந்தவர்கள் எழுந்து திரும்பி பார்த்தனர். கையில் சிறிய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு பேண்ட் சட்டை அணிந்த ஒருவர் வியர்வை துளிகளை முத்தமிட்டபடி ஓடி வந்து கொண்டு இருந்ததையும் மேடையில் இருந்தபடி கண்ணுற்றார்.

“உனக்கு பேச்சு தெறம இருக்குடா வக்கீலுக்கு படி இல்லனா அரசியலுக்கு வந்து நல்லது பண்ணுடானு எங்க சாருதான் சொன்னாரு. எங்க சாரு ஆசிர்வாதத்துல இன்னைக்கி நல்லா இருக்கேன். மணமக்களும் நல்லா இருப்பீங்க ” என்று அமைச்சர் சரவணன் பேசியபோது கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.

மாவட்ட ஆட்சித்தலைவர் இப்போது வாழ்த்திப் பேசுவார்கள் என்று தொகுப்பளர் சொன்னபோது மோகன் ஆசிரியர் அரங்கத்தை சுற்றும்முற்றும் பார்த்தார். வேர்க்க கைப்பையோடு ஓடிவந்தவர் பேச ஆரம்பித்தார்.

“மணமக்களின் திருமணம் எங்கள் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் நடந்திருப்பது மணமக்கள் பெற்ற புண்ணியம். ஆசிரியர் அவர்கள் லெக்கணாப்பட்டியில் பணியாற்றிய போது நான் அவரிடம் முதல்வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படித்தேன். அவரிடம் பரிசு வாங்கிய மாணவர்களில் நான்தான் அதிகம் வாங்கினேன். கொஞ்சமா அடி வாங்குனதும் நான்தான். மிகவும் கண்டிப்பு மிக்கவர் என்றாலும் அதிகமாக இரக்க குணம் உடையவர். மாணவர்களிலய யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் தனது தனது டிவியஸ் பிப்டியில் உட்கார வச்சு அருகில் இருக்கும் கடம்பூர் ஆசுபத்திரியில் சேர்த்து சிகிச்சை செய்து அழைத்து வருவார். எங்க சாரு மேல டாக்டர் நர்ஸ் எல்லாம் அவ்ளோ மரியாதையா இருப்பாங்க. என் வலது கால் கட்டைவிரல்ல புண்ணு வந்து சீள் புடுச்ச போது சுத்தம் பண்ணி மருந்து போட்டத என்னால மறக்க முடியாது “என்று கண் கலங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் சுதாகர்.

நிறைவாக மோகன் ஆசிரியர் இப்படி பேசத் தொடங்கினார்…

“என் பேரப்புள்ளைங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் புருஞ்சுக்கிட்டு வாழுங்க. விட்டுக் கொடுத்து வாழுங்க. ஒருத்தரே விட்டுக் கொடுத்தா நல்லா இருக்காது. ரொம்ப காலமா வெளி ஒலகத்த பாக்காம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடந்தேனா.. இப்ப கொஞ்சநாளா ஒலகத்த பாக்க ஆரம்பிச்சுருக்கேன். எல்லாமே புதுசா தெரியுது. நா என்ன ஆசப்பட்டனோ : எத வெதச்சேனோ அதுல நெறய மொளக்கலயேனு வருத்தமா இருக்கு… ஆனந்தகுமாரு மலயரசன மாதிரி புள்ளைகள பாக்கும்போது மனசுக்கு ஓரளவு ஆறுதலா இருக்கு. வல்லங்காடு கிராமத்துல வேல பாத்தப்ப கதிரேசன் படிச்சானாம். உள்ள வந்ததும் என்னப் பாத்துட்டு கட்டிப்புடுச்சு அழுகுறான். வெவசாயம் பாக்குறதா பெருமையா சொல்றான். கடல தொவர வெளஞ்ச மண்ணு இப்ப பிளாட்டா மாறிப்போச்சு. என் பேரப்புள்ளைங்க நீங்களாம் எப்புடி பொழக்கப் போறீகளோ….”

“நம்ம நாடு என்னமோ டிஜிட்டல் ஆயிருச்சாம்ல. ஆனா சோத்துக்கு மண்ண நோண்டிதானே ஆகனும். இன்னொரு வருத்தமான சேதி. நா எதயும் அப்பலருந்து ஒளிச்சு மறச்சு பேச மாட்டேனு என் புள்ளைங்களுக்கு தெரியும். எம்புள்ளைங்க ஒழுக்கமானவங்களாவும் நேர்மையானவங்களாவும் இருக்கனும்…”

அப்போது அனைவரும் வாயை குறுங்கோணத்தில் திறந்தபடி மேடையைப் பார்த்தனர்.

“போக்குவரத்து துறை இன்னக்கி வரைக்கும் நட்டத்துல ஓடுது. ஓட்டுப்போட்ட மக்களோட வாழ்க்க இன்னமும் நடுத்தெருவுலதான் நிக்கிது. ஆனா ஒன்னோட வாழ்க்க இந்த அளவுக்கு வசதியா ஒசந்துருக்கே எப்புடி. அன்னைக்கி வேட்டி ஒன்னு எடுக்குறதுக்கு டவுனுக்கு வந்துட்டு டவுனு பஸ்ல போகும் போது சோ….னு மழ கொட்டுது. ஒரு ஆளு பஸ்சுக்குள்ளயே கொட புடிக்கிறானா பாரு…”

நீங்களாம் நொழயும் போது ஒரு கைப்பைய கொண்டுக்கிட்டு ஓடிவரும்போது நீ அமைச்சருக்கு பிஏ னுதான் நா நெனச்சேன். ஆனா நீ கலைக்டர் வேலய பாக்காம பிஏ வேலயத்தான் பாக்குறாபோல. ஒன்ன பாத்ததுமே எல்லாரும் நக்கலா சிரிக்கிறத நானே பாத்தேனே. நீ அரசு அதிகாரி எதுக்கு கூழக்கும்புடு போடுற. ஒனக்கு பிஏவா இருக்குறவரு கம்பீரமா வர்றாறே….”

“நா இதயா ஒங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். என்னைக்கி தப்பு செஞ்சாலும் வாத்தியாரு கேள்வி கேட்பாருங்குற பயம் எல்லாருக்கிட்டயும் இருக்கனும். நா எங்க குழந்தைவேலு வாத்தியார நெனச்சாலே பயப்படுறேனே. எந்த வாத்தியாரு எதுத்து கேட்கலனாலும் இந்த மோகன் வாத்தியாரு கேள்வி கேட்பான்…. கொஞ்ச நேரம் மவுனமாயிருந்தார். சரவணன் முகத்திலும் சுதாகர் முகத்திலும் எண்ணெய் வழிந்து கொண்டு இருந்தது. கைக்குட்டையால் எவ்வளவு துடைத்தும் மாறவில்லை. மண்டபத்தில் சலசலப்பும் ஆனந்தகுமார் முகத்தில் ஒருவித படபடப்பும் குடி கொண்டிருந்தது.

“எம்புள்ளைங்க தப்ப திருத்திக்கிட்டு மாத்திக் காட்டுவீங்கனு நம்புறய்யா.” கனத்த குரலோடு இருக்கையில் அமரச் சென்றதுவரை நினைத்துப் பார்த்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு அந்த மாலை வேளையில் வீதியைப் பார்த்தார்.

குழந்தைகள் சிலர் ஏழெட்டு புத்தகப் பைகளை ஒரு குச்சியில் தொட்டில் போல் தொங்க விட்டபடி ஆளுக்கொரு முனையை இருவர் பிடித்துக்கொள்ள ஆட்டிக்கொண்டே வீடுகளுக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *