முதலிரவுக்கு அடுத்தநாள்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 44,347 
 

(வாசர்களின் கவனத்திற்கு, கதையில் சில பகுதிகள் 18+ வயதிற்கு மேற்பட்டவர்க்கு மட்டுமே)

பாவம் அந்த மாடு!

சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன் கால்களைக் கட்டி,மாடு அசையமுடியாமற் பண்ணியிருக்கிறார்களா? அல்லது,கழுத்தில் கயிறு மாட்டி,மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா?

அந்த மாட்டுக்குச் சொந்தக்காரர்,தன் உரிமையின் பிரதிபலிப்பை நிலை நாட்ட வாயில்லாப் பிராணிக்குக் குறி போட்டுக்கொண்டிருக்கிறார்.
குறிபோடப்படும் மாட்டின் வேதனையைப் புரிந்ததோ இல்லையோ மற்ற மாடுகள் வைக்கோலை மென்றபடி இந்தக் கோரக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.அவைகளிற் பெரும்பாலானவை அப்படியான சடங்குகளுக்கு முகம் கொடுத்தவை.. ‘இப்படித்தான் உங்கள் சீவியம்’ என்பதை அந்த மாடுகளின் உரிமையாளானால் வலியுறத்தப் பட்டதை உணர்ந்து கொண்டவை. உரிமையாளனுக்குப் பணத்தையும், அத்தோடு சேர்ந்த படாடோபமான வாழ்க்கைக்கும் அத்திவாரமாவிருப்பவை. அவன் போடும் வெறும் கை;கோலை மென்று விட்டு, அவன் வைக்கும் நீரைக் குடித்துவிட்டு. அவனின் செல்வம் வளர்க்க,அவன் கவுரவம் சமுதாயத்தில் உயர உதவி செய்பவைகள்.

பட்டியில் அடைபட்டுக்கிடக்கும் மாடுகளின் சொந்தக்காரன், சூட்டால் வேதனைப் படும் மாட்டை அன்புடன் தடவிக் கொடுக்கிறான்.மாட்டின் அலறல் காதைப் பிளக்கிறது. சூடு போட்ட நெருப்பில் கருகும் மாட்டுத்தோலின் எரிந்த நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.

விமலா திடுக்கிட்டு எழுந்தாள். என்ன பயங்கரமான கனவு இது?

புராதன கிரேக்க நம்பிக்கைகளின்படி,கனவு என்பது,எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் கடவுள்; கனவில்; சொல்கிறார் என்ற அர்த்தமாம்! உலகப் பிரசித்தி பெற்ற மனதத்துவ நிபுணரான ப்;றாய்டின் ஆய்வின்படி,கனவுகள் என்பவை, ஒருத்தனின் ஆழ் மனதில் அமிழ்ந்து கிடக்கும் ஆசைகளின்,அல்லது அபாய உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று சொல்கிறது.

அவள் அடிமனத்தில் என்ன ஆசைகள், அபாய அறிவிப்புக்கள் அமிழ்ந்து கிடக்கின்றன? அது விமலாவுக்குத் தெரியாது.

அவள் மூக்கில் இன்னும் அந்த மாட்டின் கருகிய தோலின் நாற்றமடித்துக்கொண்டிருப்பதான பிரமை. அவளுக்கு உடம்பு வியர்த்துக் கொண்டிருந்தது. இலையுதிர்கால காற்று இருளைத்தாண்டிவந்து அவள் ஜன்னலைத் தட்டிக்கொண்டிருந்தது. படுக்கையில் திரும்பி நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை நேரம் நான்கு மணியாகவிருந்தது.அதிகாலையிற் கண்ட கனவு நிஜமாகும் என்று பாட்டிகள் சொல்லியிருக்கிறார்கள்.

விமலா எழுந்து,தன் ஜன்னற் திரைகளை அகற்றி வெளியுலகத்தைப் பார்த்தாள். லண்டனில்,பல்லாயிரம் விளக்குளின் மத்தியில்,இரவில் வானத்து நட்சத்திரங்களைக் காண்பது மிக மிக அரிது. ஆனால்,இலையுதிர்காலக் காலை நேரத்தில், வானம் மிகவும் துல்லியமாக நட்சத்திரக் கோலத்தைக் காட்டியது.

பல வருடங்களுக்கு முன்,இந்தியாவுக்குப் போயிருந்தபோது, உறவினர்களின் வீட்டு மூன்றாம் மாடி மொட்டை மாடியில், வீட்டுக்காரக் குழந்தைகளுடன்;, பாயிற் படுத்துக் கொண்டு,பக்கங்களிலிருந்து வரும் பலதரப்பட்ட இரவின் ஒலிகள்,ஒளிகளுடன்,வானத்து நட்சத்திரங்களை ரசித்தது ஞாபகம் வருகிறது.குழந்தைகள்,நட்சத்திரங்களை எட்டிப் பிடித்து விளையாடவும்,எண்ணிக்கை எடுக்கவும்; கற்பனை செய்து மகிழ்ந்த ஞாபகம்,தென்றலிற் தள்ளாடிய தென்னங்கீற்றுபோல்; விமலாவின் நினைவில் நிழலாடியது.

அதிகாலையில் உலகம் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.இந்த வீட்டில் உள்ள ஐந்து மனிதர்களில் நால்வர் நல்ல நித்திரையிலிருக்கிறார்கள். அவர்களக்கு, இப்படியான கனவுகள் வருமா?

அப்பாவின் முகத்தில் நிரந்தரமான சிந்தனை படிந்திருக்கும். அவரின் குழந்தைகளான இருபையன்களுக்கும், மகளுக்கும் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பான பாரம் அவரின் கண்களிற் தேங்கி நிற்பது போலிருக்கும்.

அம்மா, குடும்பத்துப் பொறுப்புக்கள் எதிர்கால நடவடிக்கைகள் அத்தனையையும் கடவுளில் பாரத்தைப் போட்டு விட்டுத்தன் இருப்பைச் சமையலறைக்குள் சங்கமமாக்கிவிட்டாள்.

அம்மாவின்,பெரிய உலகம் அவளது சமையலறை. அவளது,நாற்பது வருடத் திருமணவாழ்வில்,எத்தனை விதமான சட்டிபானைகள் வாங்கியிருப்பாளோ தெரியாது. வித விதமான பாத்திரங்கள். ‘ஸ்ரெயன்ஸ்ரீல் பாத்திரங்கள் பத்துவருடத்திற்கு மேல்; பாவிக்கும்’ என்று தனது, சட்டிபானைப் பண்டிதத்தைச் சினேகிதிகளுக்குச் சொல்லி மகிழ்வாள். நல்லதொரு, குடும்பத்துப் பெண்ணாக வாழ்வது அவளது தாயின் அடையாளம்.

விமலாவுடன் ஆபிஸில் வேலை செய்யும் சினேகிதி,; மஞ்சுளா பட்டேல்,லண்டனிற் பிறந்த இரண்டாம் தலைமுறை இந்தியப் பெண். தனது அடையாளம் என்ன என்று ஒருநாள் விமலாவைக் கேட்டாள். ‘இந்தியப்; பெண்ணா அல்லது பிரித்தானியப் பெண்ணா’ என்று கேட்டாள். விமலா அந்தக் கேள்வியால் மிகவும் குழம்பி விட்டாள்.

விமலாவின் சிந்தனை எங்கேயெல்லாமோ ஓடிக்கொண்டிருந்தது.

அம்மா விமலாவின் சகோதரர்களில்,விமலாவை விட மிக மிகப் பாசம் வைத்திருப்பது விமலாவுக்குத் தெரியும்.அம்மாவுக்கு விமலா ஒரு பாரமாகவிருக்கிறாள். பையன்களைப் பெரிய இடங்களிலிருந்து பெண்பார்த்து வருகிறார்கள். அவர்களின் எதிர்கால மனைவிகள் பளபளப்பான பாத்திரங்களைச் சீதனமாகக் கொண்டு வந்து அம்மாவைச் சந்தோசப்படுத்துவார்களா?. அம்மா, விமலாவைக் ‘கரையேற்றும்வரை’ மகன்களின் திருமணம் நடக்காது என்ற சொன்னாள்.
கரையேற்றுவதா? விமலா ஏதோ ஒரு வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கிறாளா?

உலகம் வெகு நிசப்தமாகவிருந்தது. பக்கத்து வீட்டு நாய், இந்த நேரத்தில்,தெருவில் ஓநாய்கள் செல்வதை மோப்பம் பிடித்து அலறிப் புடைத்துக்கொண்டு சத்தமிடும்.அந்த நாயும் மௌனம்.

விமலா அடுத்த பக்கம் திரும்பித் தன் மணிக்கூட்டைப்பார்த்தாள். அதிகாலை நான்கரை மணியாகிறது. முன்வீட்டுக்கார இத்தாலிய மரக்கறி வியாபபரி அதிகாலையிலிருந்து கொள்வரவுச் சந்தைக்குச் செல்வார்.அவரின் வேனின் சத்தம் இப்போது எந்த நேரத்திலும் அவளைக் குழப்பும்

இன்னொருதரம் நித்திரை கொள்ள விமலா விரும்பவில்லை. பழையபடி அந்தக் கனவைக்காண அவள் விரும்பவில்லை.அவளது எதிர்காலத்தைப் பற்றிய இனம் தெரியாத தவிப்பு அவள் உள்மனத்தில் தழுவியதை அவள் வெறும் பிரமை என்ற தட்டிக்கழித்தாள்.
எழும்பி வெளிக்கிட்டு,ஆபிசுக்கப் போகவேண்டும்

ஆபிஸ் ஒரு வித்தியாசமான உலகம். அவளின் குடும்பத்தோடு ஒப்பிடும்போது அவளது ஆபிஸ், ஒரு பெரியதொரு உலகம். அங்குள்ள மூன்று டைபிஸ்டுகளில் ஒருத்தியான, கமலா, விமலாவை ஒரு மாதியாகப் பார்த்தாள். கமலா ஒரு நடுத்தர வயது இந்தியப் பெண்மணி. மற்றவர்கள் பலர் இன்னும் வந்து சேராதபடியால், ஆபிஸ் சந்தடியின்றிக் கிடந்தது. ‘விமலா…’ கமலா தன் மெல்லிய குரலில் விமலாலைக் கூப்பிட்டாள்.

விமலா, டைபிஸட்டுகளின்; மேசைக்கப்பாலிருக்கும் ஆபிஸ் தபால்ப் பெட்டியில் தனக்கு ஏதும் நோட்ஸ்; கிடக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘விமலா.. உனது திருமணத்தின் பின் வேலையை விடப்போகிறாயாமே…யோசித்துப் பார்த்துத்தான் இந்த முடிவெடுத்தாயா?’

கமலாவின் குரலில் உண்மையான கரிசனம்.

விமலாவுக்குத் திருமணம் நிச்சயமாகியிருப்பதும், திருமணத்தின்பின் விமலா அவளது உத்தியோகத்தை இராஜினாமா செய்யவிருப்பதும் ஆபிசிலிருக்கும் பல பெண்களிடையே பல விவாதங்களையுருவாக்கியிருந்தது.

‘அவருக்கு லண்டனுக்கு வெளியில் வேலை… நல்லவேலை…நான் வேலை செய்யும் நிர்ப்பந்தம் இல்லை…குடும்பம் குழந்தைகள் முக்கியமில்லையா என்று அவர் அம்மா கேட்டாராம்’விமலாவின் குரலில்ச் சந்தோசமா அல்லது தர்மசங்கடமா என்று கமலாவால்ப் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘ஏய் கல்யாணப் பெண்ணே,எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டமும் நடையும்.. இன்னும் கொஞ்ச நாளில் காலையில் எழும்பி ட்ரெயினுக்கு ஓடாமல்,மகாராணி மாதிரித் தோட்டத்தில் உனது காலைநேரக் காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கப் போகிறாய்’ ஆபிஸ் பைனானஸ் டிப்பார்ட்மென்ட் சிந்தியா போலிப் பொறாமையுடன் விமலாவைச் சீண்டினாள்.

அப்போதுதான் ஆபிசுக்கள் நுழைந்த, ஜேன் வால்ட்டர்,,’அது சரி எப்போது ஹென் நைட் வைக்கப் போகிறாய்?’

கமலாவுக்க ஜேன் சொன்ன ‘ஹென் நைட்’ என்னவென்று புரியவில்லை என்பது அவள் தனது முகத்தைச் சுருக்குவதிலிருந்து தெரிந்தது. கமலா தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் வேலையும் வீடும் என்று மிக ‘அடக்கமாக’ வாழக்கையை நடத்துபவள். பல வருடங்களாக லண்டனில் வாழ்கிறாள், ஆனால் ஆங்கில சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் தெரியாது.ஆபிஸ் பார்ட்டிகளிலும் தலைகாட்டாமல் பல சாட்டுக்களைச் சொல்லித் தட்டிக் கழிப்பவள்

‘என்ன அது ஹென் நைட்?’ கமலாவின் கேள்வி அப்போதுதான் நுழைந்த ஹிலரியின் காதில் விழுந்தது.

‘ஓ..கமலா..நீ எவ்வளவு அப்பாவியாயிருக்கிறாய்.. கல்யாணப்பெண் தனது திருமண முதலிரவில் தனது சுதந்திரங்களையிழக்க முதல்,கடைசியாகத் தனது சினேகிதிகளுடன் ஆடிப்பாடிச் சாப்பிட்டு,சம்பாசித்துக் கொண்டாடும் நைட்தான் ஹென்நைட், கமலா நீயும் கட்டாயம் வரவேண்டும’ ஹிலரி கமலாவுக்குப் பதில் சொன்னாள்.

‘ஐயையோ…’ ஏதோ ஒரு பேயைக்கண்டமாதிரி அலறினாள் கமலா.

‘ ஏன் உன்னுடைய அவர் பார்ட்டிக்குப் போகவிடமாட்டாரா?’ அப்போது அங்கு வந்த,மஞ்சுளா பட்டேலின் கேள்வி அம்பாகப் பாய்ந்தது.

கமலாவின் முகம் சட்டென்று வாடியதைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது.

‘நீங்கள் எல்லாம் இளம் பெண்கள்….நான் ஏன் வரவேணும்?’ கமலா தர்மசங்கடத்துடன் சமாளிக்கப் பார்க்கிறாள். டிப்பார்ட்மென்ட் தலைமை அதிகாரியின் வருகை அவர்களின் குறும்புக் கூத்தைத் தற்காலிகமாக நிறுத்துகிறது.

மத்தியான சாப்பாட்டு நேரம் வரைக்கும் பொறுத்திருந்த குறும்புப் பேச்சுக்கள் சாப்பாட்டு மேசையில் சூடு பிடிக்கின்றன.’எங்கே ஹென் நைட் வைக்கலாம் என்ற தேடலுக்கு ஒவ்வொருத்தரின் மறுமொழிக்கும், விமலா, பார்ட்டியை அங்கே வைக்க வேண்டாம், இங்கே வைக்க வேண்டாம், ஏதோ சாட்டுச் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

‘விமலா உனக்குப் பார்ட்டி வைக்க விருப்பமில்லையா அல்லது,சுதந்திர சிந்தனையுள்ள எங்களுடன் வெளியில் செல்ல விருப்பமில்லையா?’ நறுக்கென்று கேட்டாள் வேர்ஜினியா.அவள் அந்த ஆபிசில் சமுக நல ஆராய்ச்சிப் பகுதியில் வேலை செய்கிறாள்.இந்தியாவுக்குப்போய்ச் சிலகாலம், பின்தங்கிய பெண்களின் கல்வி சுகாதார நிலைகள் பற்றி ஆராய்ச்சி செய்தவள். இந்திய கலாச்சார பண்பாடுகளில் ஓரளவு பரிச்சயம் பெற்றவள்.அவளுக்கு,விமலாவின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தெரியும்.

விமலாவுக்கோ, வெளியில் போக அம்மாவிடம் என்னவென்று அனுமதி கேட்பது என்ற தயக்கம்.

அத்தனை பேரின் பார்வைகளும் விமலாவிற் நிலைத்தன. அக்கண்களின் கேள்விகளுக்கு மறுமொழி தெரியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள் விமலா.
‘விமலா, இன்றைய இந்த நிமிடம் இனித்திரும்பி வராது. உன்னுடன் பழகிய எங்களுடைய ஞாபகம் உனது மனதில் நிலைத்து நிற்பதற்காகவென்றாலும் எங்களுடன் பார்ட்டிக்கு வரப்பார்’ விமலாவுக்குப் பக்கத்து மேசையிலிருந்து வேலை செய்யும் உஷா உண்மையான பாசத்துடன் கேட்டாள்.

உத்தியோகத்தர்களின் டைனிங் றூம் இந்தப் பெண்களின் குறும்புப்பேச்சால், கலகலத்துக்கொண்டிருந்தது. ஆபிசைத் துப்பரவு செய்யும் ஆபிரிக்க இளைஞன் இவர்கள் அடிக்கும் கலாட்டாவை விளங்கிக் கொள்ளாமல் தலையைச் சொறிந்து கொண்டு போய்விட்டான்.

மதிய நேர உணவு நேரம் முடியும் நேரமானபடியால், நூறுபேர் இருந்து சாப்பிடும் அந்த இடத்தில் இந்தப் பெணகள் மட்டும் எஞ்சியிருந்து கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

‘விமலா நாள்,நட்சத்திர,யோனிப் பொருத்தமெல்லாம் பார்த்தாயிற்றா?’ கமலா மெல்லமாகக் கேட்டாள்.

தனது மற்ற சினேகிதிகளுக்கு இந்த யோனி பொருத்த விடயமெல்லாம் தெரிந்தால் அவர்கள் அவைகளைப்பற்றிக் கேட்டுத் தொல்லை கொடுப்பார்களே என்று விமலா தவித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் மற்றவர்களோ ஹென் நைட் பார்ட்டி வைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

‘விமலாவுக்குக் கிளப் அல்லது பார் என்று அவளுக்குப் பழக்கமில்லாத இடங்களுக்குப் போகத் தயக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன் பார்ட்டியை எனது வீட்டில் வைக்க மற்றவர்களுக்கு ஆட்சேபணையில்லாவிட்டால் என் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்’ சிந்தியா எலலோரையும் பார்த்துச் சொன்னாள்.
அந்தத் திட்டத்தைப் பலர் ஆதரித்தனர். கல்யாணப் பெண்ணான விமலாவுக்குத் தலையிடித்தது.

வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு அந்தப் பார்;ட்டி பற்றிச் சொன்னதும், அம்மாவுக்கு அந்த விடயம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.’எங்கட கலாச்சாரத்தில இல்லாத பார்ட்டிகள்….அத்தோட கல்யாண வேலைகள் எத்தனையோ கிடக்கு…’அம்மாவின் அதிருப்தி அவளின் வார்த்தைகளில் தடக்கப்பட்டு வெளியில் கொட்டப்பட்டன.

விமலாவுக்குத் தன் சினேகிதிகளை ஏமாற்ற விருப்பமில்லை.அவர்கள் ஒன்றும் பெரிதாகக் கேட்கவில்லை. விமலா திருமணமாக முதலே வேலையிலிருந்து விலகப் போகிறாள். அதன் பிறகு கணவருடன் பேர்மிங்காம் போய்க் குடித்தனம் செய்யப் போகிறாள். இனி எப்போது அவளின் சினேகிதிகளைக் காண்பாள்? ஏறத்தாள ஏழுவருடங்கள் அவர்களுடன் வேலை செய்கிறாள.; எல்லோரும் சேர்ந்து ஒரு பார்ட்டி வைக்க கேட்கிறார்கள்.

‘அம்மா,நான் இனி அவர்களைக் காணும் சந்தர்ப்பம் அரிது. நான் லண்டனில இருக்கப்போறதில்ல’ இதைச் சொல்லும்போது விமலாவுக்குத் தொண்டையடைத்தது.

விமலாவின்; குடும்பத்தினர், அவள் பத்து வயதாக இருக்கும்போது லண்டனுக்கு வந்தவர்கள். அவளுடைய ஆரம்ப படிப்பு,பட்டப் படிப்பு அத்தனையும் லண்டனில். வேலை செய்த இடங்கள், பழகிய மனிதர்கள் அத்தனைபேரையும் பிரிந்து போகப் போகிறாள். அவளின் பத்தொன்பது வயதுப் பிணைப்புக்கள் எப்போதாவது இருந்து சந்திக்கும் தொடர்பில் தொடரப் போகிறது.

‘ பேர்மிங்காம் என்ன சந்திர மண்டலத்திலா இருக்கிறது.’ அம்மா எடுத்தெறிந்து வாதிடுகிறாள். அம்மா கல்யாணம் ஆகிக் கொழும்புக்கு வந்தபின் குடும்ப சடங்குகளுக்கும் கோயிற் திருவிழாக்களுக்கும் மட்டும் ஊருக்குப் போனவள். கணவர் எங்கேயோ அங்கேதான் மனைவியின் உலகமும் என்ற தாரகமந்திரத்தில் வாழ்ந்தவள், மகளையும் அப்படியே வாழ எதிர்பார்ப்பவள்.

சட்டென்று விமலா கனவிற் கண்ட மாடு ஞாபகம் வருகிறது. மாட்டுக்கு உரிமைக்காரனாற்; போட்ட சூடு மாட்டின் உடம்பிலும் மட்டுமா நோவையுண்டாக்கியது??

அம்மாவின் வாதம் விமலாவுக்குப் புரியும்.அம்மாவின் கல்யாணகாலத்தில் ‘ஹென்பார்ட்டியை’ யாரும் கற்பனையும் செய்திருக்க முடியாது. அம்மா ஒரு அலங்கார பொம்மையாய், கல்யாணசந்தையின் காட்சிப் பொருளாய்ப் பிரதிபலித்திருப்பாள்.

நாற்பது வருடங்களுக்கு முன் பட்டுப்புடவை சலசலக்க,நகைகளின் கனத்தில் தலைகுனிந்து,சினேகிதிகளின் குறும்புப்; பேச்சுக்களின் நாணத்தில் சிவந்து அவள் கல்யாண மேடைக்குப் போயிருக்கலாம். அம்மா பழைய பண்பாட்டின் நடமாடும் சின்னம். கோயிலுக்குப் போயிருந்த அம்மாவின் அடக்கமான தோற்றத்தைக் கண்டு அப்பா காதல் வயப் பட்டாராம்.

விமலாவுக்கும,; பெண்கள் எப்படி அடக்கமாக வாழவேண்டும் என்பது பற்றிப்; பல பத்திமதிகளை அவளின் பத்து வயதிலிருந்தே, லண்டனுக்கு வந்த காலத்திலேயே பெற்றோர் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.லண்டனில் ஆங்கிலப் பெண்கள் மாதிரி நடக்கக்கூடாது,பழகக்கூடாது என்று ஓயாமற் தாய் தகப்பன் புத்தி சொன்னவற்றைக் கேட்டு வளர்ந்தவள் விமலா. அவளுக்குத் தோதான மாப்பிள்ளையாய், கல்யாண பலன்கள் எல்லாம் சரிவரத் தக்கதான ஒரு மாப்பிள்ளையை அவளுக்கு அவள் பெற்றோர் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது.

இன்று கல்யாணத்தை எதிர்பார்த்திருக்கும் விமலாவுக்குப்பல புத்திமதிகளுக்குப் பின் ‘ஹென் பார்ட்டிக்கு’ அம்மா அனுப்பியதே பெரிய விடயம்.

‘மாப்பிள்ளையை எவ்வளவு காலமாகத் தெரியும்’ கமலா விமலாவை விசாரித்தாள். விமலா பதில் சொல்ல முதலே, கமலா,தான் தன் கணவரைக் கல்யாணத்தன்றுதான் கண்டதாகச் சொன்னாள். தாய்தகப்பன் பார்த்து நிச்சயித்த மாம்பிள்ளையைத் தான் திருமணம் செய்ததாகச் சொன்னாள். அவள் குரலிற் பெருமை. தனது,கலாச்சாரத்தின் காவலாளியாக இருப்பதாக ஒரு கர்வம்.

இரண்டு மாதங்களுக்கு முன் கல்யாணத் தரகர் மூலம் விமலாவின், எதிர்காலக் கணவரின் தொடர்பு அவளின் பெற்றோருக்குக் கிடைத்து அதன்பின் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.அவளுக்கு இருபத்தி ஒன்பது வயதாகப் போகிறது. ‘இது நல்ல இடம்போல கிடக்கு நழுவ விடக்கூடாது’ என்று சொல்லிக்கொண்டு,அம்மா கல்யாணப் பேச்சில் முக்கிய பங்கெடுத்தாள்.

விமலாவின் எதிர்காலக் கணவன் பரமேஸ்வரன்,தனது தாய்தகப்பன், தமக்கை குடும்பத்துடன் விமலாவைப் பெண்பார்க்க வந்தபோது, அவர்களுக்கு,அம்மா செய்த தடபுடல் விருந்துபசாரத்தில்,அம்மா எவ்வளவு தூரம் இந்தக் கல்யாணம் நடக்கவேண்டுமென்று அம்மா விரும்புகிறாள் என்பது,அப்படமாகத் தெரிந்தது. பரமேஸ்வரன் பார்ப்பதற்குக் கண்ணியமானவனாகத் தெரிந்தான். அவன் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அவனது தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்து,அவனின் தம்பியின் படிப்புக்கும் உதவி செய்ததாக விமலாவுக்குச் சொல்லப் பட்டது.

பெண் பிடித்து விட்டது என்று மாப்பிள்ளை வீட்டார் அறிவித்தபின், முக்கிய விடயமாக, விமலா வேலையை விடவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.விமலாவின் பெற்றோர் அதை உடனடியாக ஒப்புக்கொண்டார்கள்.மகளின் வாழ்க்கை,அவளின் உழைப்பின் அவசியமின்றி நகரப்போகிறது என்று சந்தோசப் பட்டார்கள்.விமலாவிடம் அதுபற்றி ஒன்றுமெ கேட்கவில்லை.

பரமேஸ்வரன் விமலாவுpடன் போனில் பல தடவைகள் பேசினான். பெரும்பாலான நேரங்களில், அவனது தாய் அவனைக் கெதியாகத் ‘தகப்பனாகச்’ சொல்கிறாள் என்று சொல்வான். அவனின் தாய்க்கு எழுபது வயதாகிறது. பல தரப்பட்ட உடல் நோய்களுடன் உபத்திரவப் படுகிறாள்.அவனின் தங்கைகள் இருவரும் கனடாவிலிருக்கிறார்கள் அம்மாவுக்கு அவளின் மகனுடன் தனது கடைசிக் காலத்தைக் கழிக்க விருப்பமாம்.

விமலாவுக்காக, சிந்தியா வீட்டில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த,’ஹென் பாhட்டிக்கு’ விமலா வேலை செய்யும் ஆபிசிலிருந்து பெரும்பாலான பெண்கள் வந்திருந்தார்கள் நாலைந்து டிப்பார்ட்மென்ட்ஸ் கொண்ட பெரிய ஆபிசிலிருந்த அவளுக்குத் தெரிந்த பெண்களிற் பெரும்பாலோர் வந்திருந்தது விமலாவுக்கச் சந்தோசமாகவிருந்தது.

‘உனது கல்யாணத்தை நீதான் முடிவு கட்டினாயா?’ வந்திருந்த சனேகிதிகளில் ஒருசிலர் அடிக்கடி கேட்ட கேள்வியது. விமலா பெரும்பாலும் பதில் சொல்வதைத் தவிர்த்து விடுவாள்.பிரித்தானியக் கல்வி கற்ற விமலாவுக்கு ,ஆங்கிலேயப் பெண்கள் தங்களின் துணையைத் தாங்களே தெரிந்தெடுப்பது தெரியும்.
ஆபிசில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து கலாச்சார சம்பிரதாயப் பண்பாடுகளை விளங்காதவர்கள். தங்கள் குழந்தைகளுக்குத் தாய்தகப்பன்தான் அவர்களின் எதிர்காலத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள் என்ற பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்.

‘நான் எனது போய்பிரண்டுடன் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தேன்;,கல்யாண முடிச்சு போடவேண்டும் என்ற சம்பிரதாயத்தை நான் அவ்வளவாக விரும்பவில்லை’ வேர்ஜினியா தனது வைன் கிளாசை நிரப்பிக்கொண்டு சொல்கிறாள்.

”கல்யாணம் என்பது பெரும்பாலான பெண்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறைக்கூடம்..சிறைக் கூடத்தின் அதிகாரிகள் ஆண்கள்,பெரும்பாலான ஆதிக்கத்தைக் கையிலெடுத்துக் கொள்வார்கள்’ சிந்தியா தனது கேக்துண்டைக் கடித்தபடி சொல்கிறாள். அவளொரு ஆசிரிiயாக இருந்தவள்.அவள் ஒருகாலத்தில் தான் ‘திருமதி’யாக இருந்ததாக வேடிக்கையாகச் சொல்வாள் பண்பும் பாசமும் கொண்ட நல்ல பெண்மணி. ஏன் அவள் தனியாக வாழ்கிறாள் என்பதை அவள் சொல்லவில்லை.

சிந்தியாவின் வீடு பலதரப்பட்ட மலர்க்கொத்துக்களால் நிரம்பிக் கிடந்தது. பெரிய ஹோலின் நடுவில் ஒரு குழந்தையின் படமிருந்தது. அதில் விமலாவின் பார்வை படிவதைக்கண்ட சிந்தியா,’ அது ஒருகாலத்தில் எனது துணைவராக இருந்தவரின் குழந்தைக்காலப் படம்.அவருடன் வாழப் பல பிரச்சினைகள் தலையெடுத்தன. ஆனால் சினேகிதமாக இருக்கத் தடையில்லை.அந்தப் படத்தின் களங்கமற்ற அழகு எனக்குப் பிடித்தது. அதுதான் இன்னும் வைத்திருக்கிறேன்’ சிந்தியா விளக்கினாள்.

‘ஆண்கள் எப்போதுமே குழந்தைகள்தான்,தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வார்கள், தனக்குப் பிடித்ததையடையப் பிடிவாதம் பிடிப்பார்கள். அது ஆண்மை என்றுவேறு தம்பட்டம் அபடித்துக்கொள்வார்கள்’ மஞ்சுளா பட்டேல் சிந்தியாவைப் பார்த்தடி சொன்னாள். கமலா தனது கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டாள்.அவள் விரைவில் வீட்டுக்குப் போகவேண்டும்.

‘ இதுதான் நீ முதற்தரம் வீட்டை விட்டுத் தனியாகப் பார்ட்டிக்கு வந்தாயா?’மஞ்சுளா பரிதாபக் குரலில் கமலாவைக் கேட்டாள். கமலா ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

அப்போது எல்லோர் கவனமும் அங்கு வந்த உஷாவில் திரும்பியது. ஓவியர் ரவி வர்மாவின் சித்திரமொன்று உயிரெடுத்து வருவதுபோன்ற அழகிய தோற்றமுடையவள் அவள். அவளுக்கு விமலாவின் வயதாகிறது, இன்னும் திருமணமாகவில்லை, காதலர் யாரும் இருப்பதான எந்தத் தடயமும் இல்லை.ஆபிசிலுள்ள அத்தனை பெண்களிலும் பார்க்க மிகப்படித்தவள். காதல் கல்யாணம் என்பதில் அக்கறை காட்டாமல், படிப்பு,வேலை என்பதில் அக்கறை காட்டுபவள். விடுமுறைகாலத்தில், ஏதோ ஒரு நிறுவனத்துடன் இணைந்து தர்ம வேலைகள் செய்பவள். அவளுடைய அற்புதமான அழகு, மற்றவர்களால் மதிக்கப்படும் அறிவு என்பவை,அவளுடைய தனிமையான வாழ்க்கை முறையில் அர்த்தமற்றுப்போகிறதா என்று விமலா சிந்தித்ததுண்டு.

அவளைத் தொடர்ந்து ஹிலரி வந்து கொண்டிருந்தாள்.’ சரி விமலா,உன்னுடைய வருங்காலக் கணவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லேன்,எங்கே சந்தித்தீர்கள், எப்போது உங்கள் காதல் தொடர்பு மலர்ந்தது?;’ஹிலரி குறும்புத்தனமாக விமலாவின் கன்னத்தைக் கிள்ளினாள். விமலா வெட்கத்துடன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

‘எல்லாப் பொருத்தமும் பார்த்தாயிற்றா?’ கமலா சில நாட்களுக்கு முன் கேட்ட கேள்வியை இன்னொருதரம் விமலாவிடம் கேட்டாள்.

‘என்ன பொருத்தங்கள்?’வெஜிடேரியனான வேர்ஜினியா,தக்காளிப் பழத்தைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.

அதைக் கேட்டு மஞ்சுளா பட்டேல் களுக்கென்ற சிரித்தாள்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் விமலா ஏதோ சாட்டுச் சொல்ல யோசித்தாள்.

‘ நாங்கள் இந்துமதப் பெண்கள், எங்கள் திருமணம் நீண்டகாலம் நிலைக்க, நாங்கள் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டுமா? தினப் பொருத்தம்,கணப்பொருத்தம்,மஹேந்திரப் பொருத்தம்,ஸ்திரிதீர்க்கப் பொருத்தம்,யோனிப்பொருத்தம்,ராசிப் பொருத்தம்,ராசி அதிபதிப்பொருத்தம், நாடிப்பொருத்தம்,தாலிப்பொருத்தம் …….’ மஞ்சுளா அடுக்கிகொண்டே போனாள்.

அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஆங்கிலப் பெண்கள் திகைத்துப்போய் நின்றார்கள்.

‘இத்தனை பொருத்தம் பார்க்கவேண்டுமா?’ ஜேன் வால்ட்டர் ஒன்றம் புரியாமல் விழித்தாள்.

கமலா அவர்களுக்குத் தன் அமைதியான குரலில்,பத்து விதமான ‘கல்யாண’ பொருத்தங்கள் பற்றி விளக்கினாள். ‘இந்தப் பொருத்தங்கள் சரிவந்தாற்தான் திருமணமா?’ சிந்தியா ஆச்சரியத்தில் கூவினாள்.
‘பத்துப் பொருத்தங்களும் சேர்ந்து பொருந்துவது அபூர்வம் ஏழு அல்லது எட்டுப் பொருத்தங்கள் சரிவந்தாலே போதும்.’கமலா பெருமையுடன் சொன்னாள்;.

‘இந்தியாவில், பல்லாயிரக்கணக்கான பெண்கள், திருமணமாகிப்போகும் வீட்டில் சீதனக் கொடுமையால், அவர்களின் மாமியார்களாலும், கணவராலும், வதைக்கப் படுவதாகச் செய்திகள் வருகின்றனவே, பலபெண்கள் சீதனத்திற்காகக் கொலைசெய்யப் படுகிறார்கள்,அவர்கள் எத்தனை பொருத்தங்களுடன் தங்கள் எதிர்காலக் கணவரைத் தொடர்ந்தார்கள்?’ வேர்ஜினியா சட்டென்ற கேட்டாள்.அவள் குரலிற் கோபம்.

‘சீதனத்தை வாங்கிவிட்டுப் பெண்களின் அடிமைகளாகவிருக்கும் ஆண்களுமுண்டு,எல்லாம் அவர்களின் தலைவிதி’ கமலா மறுமொழி சொன்னாள்.

அப்போது, ஆபிசின் றிசப்சனிஸ்டான, மார்க்கரட் சிம்சன், ‘என்ன தலைவிதிபற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்படி உள்ளே வந்தாள். மேற்கிந்தியத் தீவுப்பகுதியிலிருந்த வந்த கறுப்புப்பெண் அவள். எப்போதும் மலர்ச்சியாகவிருக்கும் அவள் முகத்தில் சோகம்.அவள் அளவுக்கு மீறி கொழுத்த உடம்பும் பெரிய முலைகளையமுடையவள்.; உடம்பைக் குலுக்கி,முகமும் கண்களும் சுருங்கப் பெரிதாகச் சத்தம் போட்டு சிரிப்பாள்.ஒளிவு மறைவுதெரியாத நேர்மையான பெண்மணி.அவள் கேட்ட கேள்விக்கு,ஜேன் வால்ட்டர்,பெண்களின் துயரவாழ்க்கைக்குகு; கமலா சொன்ன ‘தலைவிதி’ பற்றிய விளக்கத்தைச் சொன்னாள்.

‘ஓ.யெஸ் ஆண்கள்; என்ன சொன்னாலும்,செய்தாலும் அது எங்களின் தலையிற்தானே வந்து விழுகிறது.”.வந்ததும் வராததுமாக அவள் அழத் தொடங்கிவிட்டாள். கமலா ஓடிப்போய் அவளை அன்புடன் அணைத்துக்கொண்டாள்.

‘இன்று எல்லோரும்,விமலாவின் எதிர்காலம் பற்றிய சந்தோசமாகப் பார்ட்டி வைத்துக் கும்மாளமடிக்க வந்திருக்கிறோம்…எங்கள் ஒவவொருத்தரிடமும் எவ்வளவு துன்பங்கள் இருக்கிறது என்ற அவரவர்களுக்குத்தான் தெரியும்’.மார்க்கரெட்டின்; அழுகையைக் குறைக்க ஒரு கிளாஸ் வைனை ஊற்றிக் கொடுத்தாள் ஹிலரி.

கொஞ்சம் னை;, வாயிலூறியதும், மார்க்கிரட்டின் விம்மல் கொஞ்சம் குறைந்தது.

‘ மன்னித்துக் கொள்ளுங்கள், இன்றைய மகிழ்ச்சியான நேரத்தில்,எனது துக்கத்தைச் சொல்லி உங்களுக்குத் துன்பப் படுத்தவிரும்பவில்லை… என் புருஷனுடன் பன்னிரண்டு வருஷமாக வாழ்கிறேன்..அநியாய்ப்போனவன், என்னுடனிருந்தகாலத்தில் இன்னொரு பெண்ணுடனும் தொடர்பாகவிருந்து,மூன்று பிள்ளை பெற்றிருக்கிறான் என்று சொல்கிறான். நான் அதைப்பற்றிச் சண்டை போட்டால், உனக்கென்ன குறை வைத்தேன் என்று உதைக்கிறான்; பாவி’ மார்க்கரெட்டின் அழுகையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

‘என்னுடைய காதலன் என்னுடன் பதினைந்து வருடம் உறவாக இருந்தான். அவனுக்கு இன்னொரு உறவு வந்ததும் நான் வாதம் செய்தபோது,அது வெறும் செக்ஸ் உறவு மட்டும்தான் என்று உளறினான். சமுகக் கவுரவத்திற்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்ற அவனின் வேடம் எனக்குப் பிடிக்கவில்லை.பெரும்பாலான ஆண்களுக்கு ஒருத்தியுடன் திருப்தி வராது போலிருக்கிறது…அதுதான் நான் தனியாக இருக்கிறேன்’ சிந்தியா தன்னைப் பற்றி அதிகம் சொல்லாதவள். இன்று மார்க்கரெட்டின் சோகக் கதை அவள் மனத்தை நெகிழ வைத்திருக்க வேண்டும்.

‘அவனுடன் ஏன் மாரடிக்க வேண்டும், பேசாமல் டிவோர்ஸ் செய்யேன் மார்க்கரெட்’ வேர்ஜினியா ஆத்திரத்துடன் சொன்னாள்.

‘ஆமாம்,அதெல்லாம் சரிவராது,இரண்டு குழந்தைகளுடன், வீட்டுக் கடனுமிருக்கிறது..அவனின் வருவாய் இல்லாவிட்டால் என்னால்த் தனியாகச் சமாளிக்க முடியாது மார்க்கரெட்டின் விசும்பல் ஓயவில்லை.

‘குடும்பப பிரச்சினைகளைச் சமாளிக்காமல் டிவோர்ஸ் எடுக்க வெளிக்கிட்டால் குழந்தைகளின் கெதி என்னாவது?’ கமலா முணுமுணுத்தாள்.

‘ அதெல்லாம் எனது வாழ்க்கையில் நடக்காது..எனது பார்ட்னர் என்னை நன்றாகப் புரிந்துகொண்டவள்” ஹிலரி சந்தோசத்துடன் இன்னுமொருதரம் தனது வைன் கிளாசை நிரப்பிக் கொண்டாள்.

கமலாவுக்கு ஹிலரி சொன்னது புரியவில்i என்பது அவளின் முகத்தில் தெரிந்த கேள்விக்குறியில் பளிச்சிட்டது.

‘ கமலா, ஹிலரி பெண்ணுடன் வாழ்கிறாள். நாங்கள் ஆண்களுடன் வைத்துக்கொள்ளும் பாலுறவை அவள் பெண்களுடன் வைத்துக்கொள்கிறாள்.’ உஷா பாதி குறும்பாகவும் பாதி சீரியசாகவும் கமலாவுக்கு விளங்கப் படுத்தினாள்.

கமலாவின் முகத்தில் அளவிட முடியாத ஆச்சரியம் அத்துடன் ஹிலரியை ஒரு புதியபார்வையுடன் நோட்டம் விட்டாள்.
‘பயப்படாதே கமலா நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று ஹிலரி சொன்னதும் எல்லோரும் கொல் என்று சிரித்தார்கள்.

‘கமலா..அவர்களுடையது கட்டாயப் படுத்தாத செக்ஸ் லைவ்’ மஞ்சுளா பட்டேல் திடிரென்று சொன்னாள். அவள் எதையோ சொல்ல வருகிறாள் என்பது முகத்திற் தெரிந்தது.

‘கடவுள் ஆணையும் பெண்ணையும்,எதிர்கால பரம்பரையைப்; படைக்க ஒன்று சேர்க்கிறார்.அதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ ஜேன் வால்ட்டர் ஒரு கத்தோலிக்கப் பெண். என்ன பிரச்சினைக்கும் இயேசுவை உதவிக்கு அழைப்பவள்.

ஹிலரி, எல்லோரையும் ஒருதரம் அளவிட்டாள். அவர்களின் வேலையிடத்தில்,அவளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றித் தெரிந்தவர்கள் ஓருசிலர்.

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. காதல் என்பது மிகவும் சிக்கலான உணர்வின் பரிமாணம். அது பாரம்பரிய கோட்பாடுகளுக்குள்ச் சிறை பிடிக்க முடியாதது…,அன்பான தாய் தகப்பனுக்கு மகளாகப் பிறந்த எனக்கு எனது தாய்மாதிரி ஒரு ஆண்துணை வேண்டும் என்ற ஆவல் இருந்தததில்லை…எனது பதினான்கு வயதில் நான் ஒரு லெஸ்பியன் என்ற தெரிந்துகொண்டேன்.’ ஹிலரி தன் வைன் கிளாசை மேசையில் வைத்துவிட்டுச் சொன்னாள்.

‘ எப்படி அந்த,வித்தியாசமான செக்ஸ் உணர்வு உனக்குத் தெரிந்தது? பெரும்பாலதன பிரித்தானியப் பெண்களைப்போல் உனது இளவயதில் எந்த ஆணுடனும் சாடையான உறவு வைத்துக் கொள்ளவில்லையா?’ எல்லோர் சார்பிலும் உஷா கேட்டாள்.

‘இல்லை..பாடசாலையில் எனது வகுப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் இளவயதிலிலேயே பையன்களின் பொறூமையைத் தேடிக் கொண்டேன். அது மட்டுமல்லாமல், எனது வளரும் வயதில் ஒருநாளும் ஆண்களில் எந்த விதமான செக்ஸ் கவர்ச்சியும் வரவில்லை..அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.. ஒரு நாள் எனது சினேகிதியின் பேர்த் டேய் பார்ட்டிக்குப் போயிருந்தேன். இரவு நாங்கள் எல்லோரும் அவளுடைய பெரிய வீட்டில் தங்குவதாக ஏற்பாடு,..அன்றிரவு என் சினேகிதியின் கட்டிலில்ப்; படுக்;கவேண்டிய நிர்ப்பந்தம்…’ அவள் முகம் சிவந்தது. கண்கள் போதையும் காதலும் கலந்து மின்னிட்டன.

‘தயவு செய்து மேலே சொல்லு..’ சிந்தியா தட்டிக்கொடுத்தாள்.

‘..அன்று நிறையச் சாப்பிட்டதாலோ என்னவோ எனக்கு வயிறு வலித்தது. முக்கலும் முனகலுமுடன் தவித்தேன். எனது சினேகிதி எனது வயிற்றைத் தடவிக் கொடுத்தாள். வயிற்று வலி கொஞ்சம் குறைவதுபோலிருந்;தது..அதன் பின்..அவளின் ஸ்பரிசம் எனது உடம்பில் இனிய உணர்வைத் தந்தது. அந்த உணர்வு என்னை ஆச்சரியப் படவைத்தது. மெல்லிய தடவலில் இப்படியான..அற்புதமான ஒரு உணர்ச்சி உண்டாவதை நான் தெரிந்திருக்கவில்லை…அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பின் யுனிவர்சிட்டிக்கு ஒன்றாகப்போனோம்..அதன் பின்…’ஹிலரி நிறுத்தினாள்.

விமலா இந்தமாதிரியான பேச்சுக்களைக் கேட்க அங்கு வரவில்லை என்பது அவள் முகத்திற் தெரிந்த தர்மசங்கடத்தில் தெரிந்தது. ‘ஏய் விமலா, புதிய உலகத்தில் நுழையமுதல் உனக்குத் தெரியாத உலகத்தைக் கொஞ்சம் தெரிந்துகொள்’..சிந்தியாவின்; குறும்பு கமலாவையும் தர்மசங்கடப்படுத்தியது அவள் முகத்திலும் தெரிந்தது.

‘இதென்ன புதினம். காமத்தின் பைபிளான காமசூத்திரத்திற்கு இலக்கணமும் எழுதி, அதை விளங்கப் படுத்தக்கோயிலும் கட்டிய கலாச்சாரத்திலிருந்து வந்த இந்தியப் பெண்கள், காமசூத்திராவிற் சொல்லப் பட்ட அறுபத்து விதமான செக்ஸ் பற்றிச் சொல்வார்கள் என்று பார்த்தால்..’ வேர்ஜினியா கேலி செய்தாள்.

‘ம..ம் விமலா..நீ கல்யாணம் பண்ணப் போகிறவர் உனது எத்தனையாவது போய்பிரண்ட?’ மார்க்கரெட் தனது வைன்; கிளாசை நிறைத்தபடி கேட்டாள்.

‘ஐயையோ..மார்க்கரெட் அப்படியெல்லாம் கேட்காதே.. நாங்கள் இந்துப் பெண்கள் ..கல்யாணம் ஆகும் வரைக்கும்,அப்பா, தாத்தா, அண்ணன் தம்பிகள் தவிர யாரையும் தொடமாட்டோம். காதலுக்காகக் கல்யாணம் நடக்காமல் கல்யாணத்திற்குப் பின் காதல் செய்யும் கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள்’ கமலா அலறாத குறையாக விமலாவிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு அவசரமாக மறுமொழி சொன்னாள்.

‘பொய். விமலாவுக்கு இருபத்தி ஒன்பது வயது, இதுவரைக்கும் அவள் யாரையும் முத்தமிடவில்லை என்பது நம்பமுடியாத விடயம்..’ ஹிலரி ஆச்சரியத்துடன் சொன்னாள்.
‘ நான் முப்பது வயதில் திருமணம் செய்தேன்….நான் யாரையும் முத்தமிடவில்லை..’ லண்டனில் பிறந்து வளாந்த மஞ்சுளா பட்டேல் ஆறுதலாகச் சொன்னாள்.;

ஆங்கிலேயப் பெண்கள் ஒருத்தரை ஒருத்தர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.மஞ்சுளா மனம் விட்டுப்பேசியது உஷாவையும்,தனது தனிப் பட்ட வாழ்க்கை பற்றி வாய் திறக்கப் பண்ணியது.

‘நான் முதற்தரம் முத்தமிடப்பட்டது…..’ உஷா தான் சொல்ல வந்ததசை; சொல்லாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள் அவள் குரல் கரகரத்தது.

‘ எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது. விடுமுறைக்குக் கூட்டிக் கொண்டு போவதாக என்னை அழைத்துக் கொண்டு என் பெற்றோர்,இந்தியாவுக்குப் போனார்கள்.அங்கு போனபோதுதான்,அவர்கள் என்னை, முப்பது வயதுக்கார பணக்கார மாப்பிள்ளைக்குத் தாரை வார்க்கத் திட்டம் போட்டிருந்தது தெரிந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை அதைத் தாய்தகப்பனுக்குச் சொன்னேன், வயது பெரிய விடயமில்லை..வசதியான வாழ்க்கை கிடைப்பது அரிது என்றார்கள். மாப்பிள்ளையை எனக்குச் சரியாகத் தெரியாது அவரைப் புரியாது என்று பிடிவாதம் பிடித்தேன்…அவர்கள் எனது அழுகையைப் பொருட்படுத்தாமல் நிச்சயாhத்;தம் செய்தார்கள். ஓரு நாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, எனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் தாலி கட்டமுதலே தன்னை எனக்குப் ‘புரிய’ வைக்கப் பார்த்தார்..’ உஷா இப்படிப் பகிரங்கமாகத் தனது கதையைச் சொல்ல வெளிக்கிட்டது விமலாவாற் தாங்கமுடியாதிருந்தது. அங்கு இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் முதற்தரம் அறிந்துகொள்வதுபோல் உற்று நோக்கினாள்.

அந்த அறையில் நிசப்தம்.உஷா தொடர்ந்தாள்,

‘ஓரு கிளியை அடைத்து வைத்த கூண்டுக்குள் ஒரு கொடிய பூனை புகுந்தால் என்ன நடக்குமோ அது எனக்கு நடந்தது.முன்பின் தெரியாத ஊரில் எனக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை. அடுத்த வீட்டிலிருந்த ஒருத்தர் எனது கூக்குரல் கேட்டு வந்து கதவைத் தட்டினார். எனது நிலையைத் தெரிந்துகொண்டார்…’ கதவைத் திறக்காவிட்டால் போலிசுக்குப் போன்பண்ணுவேன்’ என்றார். கடவுள் இருக்கிறாரே இல்லையோ..அவர் அன்று எனது கடவுளாக வந்தார். மாப்பிள்ளை வீட்டார் பெரிய பணக்காரர்…போலிசை அல்ல மந்திரியையே விலைக்கு வாங்கக் கூடியவர்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர், சமுகத்தில் மதிப்புடைய டாக்டர்;,அவரின் தலையீட்டால் கல்யாண ஏற்பாடுகளிற் பிரச்சினை வந்தது.’அந்த மாப்பிள்ளை என்னை இன்னொரு தரம் தொட்டால் தற்கொலை செய்வேன்’ என்று சொன்னேன். அவர்கள் பயந்து விட்டார்கள். எனது கன்னித்தன்மை சூறையாடப் பட்டதை விட அவர்களின் ‘கண்ணியமான’ குடும்பப் பெயர் சமுகத்தில் கெடக்கூடாது எனபதற்காகத் திருமணத்தை நிறுத்தினார்கள்’

உஷா சொல்லி முடிவதற்கிடையில் கமலா விசும்பத் தொடங்கிளாள்.

‘மஞ்சுளா..நீ சந்தோசமாகத்தானே இருக்கிறாய்?’ கமலா தாய்மையுடன் மஞ்சுளாவைக் கேட்டாள்.

இதுவரைக்கும் ஆப்பிள் ஜூசைக் குடித்துக் கொண்டிருந்த மஞ்சுளா, கமலாவின் கேள்விக்குப் பின்படபடவென்று ஒரு கிளாஸ் சிவப்பு வைனை மடமடவெனக் குடித்து முடித்தாள்.

‘என்னில் விருப்பமில்லாத எனது சொந்தக்காரனுக்கு என்னைச் செய்து வைத்தார்கள். கல்யாணமானதும் எல்லாம் சரிவரும் என்று சொன்னார்கள்.அந்த மாப்பிள்ளையும் தனது பெற்றோருக்காக என்னைச் செய்தவர். எங்களின் முதல் இரவு மிக அசிங்கமானது என்று நினைக்கிறேன்.

எனது முப்பது வருட எதிர்பார்ப்புக்கள் இனிய கனவுகள் அன்று தகர்ந்து கொட்டப்பட்டன. அவர் பெரிதாக ஒனறும் என்னுடன் பேசவில்லை. எனக்கு என்ன பிடிக்கும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் உடலுறவுக்க நான் தயாரா என்ற எந்தக் கேள்வியும் கிடையாது.கதவைப் மூடிவிட்டு வந்து எதோ கடமைக்கு ஏறி விழுந்ததுபோல் ஏதோ செய்து முடித்தார். அவரில் பிழையில்லை என்று நினைக்கிறேன், எங்கள் கலாச்சாரம் அப்படியானது. ஆழ்மனத்தின் ஏக்கங்கள் வெளியே தெரியாமல் கவுரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர் எனக்கு அடிப்பதோ பேசுவதோ கிடையாது. அவர் குடிப்பதோ, புகைப்பதோ எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. எங்கள் உடம்புகள் சேர்ந்து அடுத்த தலைமுறையை விருத்தி செய்கிறோம்.குழந்தைகள் நன்றாக வாழ்கிறார்கள் படிக்கிறார்கள்..அதன் திருப்தியில் தனிமனித ஆசாபாசங்கள் அமிழ்ந்து போகின்றன..பொருளாதார சௌகரியத்தில்,உங்களை விட நான் அதிர்ஷ்டசாலி..ஆனால்,எங்கள் அந்தரங்க வாழ்க்கையில் பெரிய திருப்தி இருவருக்குமில்லை என்று அவருக்குத் தெரியும்..ஆனாலும் ஒருநாளும் என்னை விட்டு இன்னொருத்தியை, சிந்தியாவின் காதலர் போலவோ, மார்க்ரெட்டின் புருஷன் மாதிரியோ பார்க்க மாட்;டாh’.

‘மஞ்சுளா ஏதோ கற்பனையில் வாழ்ந்ததாக..வாழ்வதாகச் சொன்னாயே அது என்ன?’ மார்க்கரெட் மஞ்சுளாவைப் பார்த்துக் கேட்டாள். அவளும் அந்த மாதிரியான விடயங்களையறியவேண்டும் என்ற அவல் அவளின் குரலில் ஒலித்தது.

மஞ்சுளாவின் கண்கள் கலங்கின..’ நான் ஒரு யதார்த்தவாதியல்ல என்ற நினைக்கிறேன்..எனது உணர்வு ஆண் பெண் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வு என்ற நினைக்கிறேன்..நான் அவரிடம் எதிர்பார்ப்பது, ஒவ்வொரு வினாடியும் ஐ லவ் யு என்ற பொய்மையான வார்த்தைகளல்ல.. ஒரு சினேகிதமான, உள்ளார்ந்தமான பிணைப்பு. திருமணம் என்ற பந்தத்துக்குள் செயற்படும் ஒரு,’வியாபாரத்’ தன்மையான உறவுக்குப்பால் அவரிடமிருந்து ஒரு அன்பான அணைப்பு,இரவின் தனிமையில் பாவித்து ருசிக்கும் பண்டமாக என்னைப் பாவிக்காமல்,இருவரும் அனுபவிக்கும் இன்பத்தை மனம் விட்டுப்பகிரும் ஒரு பார்ட்னராக அவரைப் பார்க்கக் கற்பனை செய்கிறேன். எங்கள் வாழ்க்கை அவற்றைத்தாண்டி நகர்ந்து பொய்மையாக,வசதியான பொருட்களுக்காக, குழந்தைகளைப் பராமரிப்பதற்காகப் போய்க்கொண்டிருக்கிறது.’

‘அதாவது அவர் உங்களின் காதலின் உச்ச நிலைக்கு உன்னைக் கொண்டுசெல்லவில்லையா?’ ஹிலரி பச்சையாகக் கேட்டாள். கமலா அவளைக் கோபத்துடன் பார்த்தாள்.

‘கல்யாணமாகாத விமலா இருக்குமிடத்தில் பேசக்கூடிய பேச்சா இது?’ கமலா முணுமுணுத்தாள்.

உஷா,மஞ்சுளாவை ஆழமாகப் பார்த்தாள். இருவரும்,இந்தியாவின் இருவேறுபட்ட பிரதேசங்களிலிருந்து வந்த பெற்றோருக்கு லண்டனில் பிறந்து வளர்ந்த பெண்கள்.

‘ஓ கமலா, விமலாவக்குக் கல்யாணம் பற்றிய சில விபரங்கள் தெரியவேண்டுமென்றுதானே இந்தப் பார்ட்டி வைக்கிறோம்’ ஹிலரி கமலாவைக் கடிந்துகொண்டாள்.

‘அதற்காக.. எல்லாவற்றையம் பகிரங்கப் படுத்துவதா?’ கமலா வாதம் செய்தாள்.

‘ஆமாம், பெரும்பாலான பெண்கள் எல்லாவற்றையும் ஒளித்து மறைத்து வாழ்வதற்தானே இப்படியிருக்கிறோம்?’ உஷாவின் குரலிற் கோபம்.. ‘பெண்களுக்கு அபாயமான இடம் அவளின் கணவரின் வீடு என்று தெரியாமல் பாசாங்கு செய்யாதே கமலா’ உஷா வெடித்தாள்.

‘ஓ.யெஸ் உஷா சொல்வது சரி….’ மார்க்கரெட் ஒத்துப்பாடினாள்.

வேர்ஜினியா எல்லோரையும் அளவிட்டுப்பார்த்தாள்.

‘விமலா உனது புருஷனை யாரிடமும் பறிகொடுக்காதே…அதுசரி ,வேர்ஜினியா உனது காதலன் எப்படி ‘ மார்க்கரெட் உரத்த குரலில்ச் கேட்டாள்.

வேர்ஜினியாவின் முகத்தில் ஒரு கவர்ச்சியான புன்னகை தவழ்ந்தது.

‘நான் இப்போது சேர்ந்து வாழும் காதலன் எனது நான்காவது காதலன்…எனது முதலாவது காதல் எனது பதினைந்து வயதில் வந்தது..எனது பாடசாவைச் சினேகிதிகள் பலர் அப்போது போய்பிரண்ட்ஸ் வைத்திருந்தார்கள். எனக்கு அப்படியொன்றும் இருக்கவில்லை. அதனால் அவர்களின் ஓயாத கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளானேன்..எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பீட்டர் என்ற பையனுடன் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் பாடசாலைக்குப் போவேன். எனது சினேகிதிகளின் கிண்டலிலிருந்த தப்ப அவனை எனது போய்பிரண்ட்டாக நடிக்கச் சொல்லிக் கேட்டேன்..அவன் ஒரு நோஞ்சான். சரியாக ஒரு நல்ல உடுப்பும் போடத் தெரியாதவன்…ஒருநாள் அவன் எனது செக்ஸ் ‘போய்பிரண்ட்டாக’ மாறமுடியுமா என்று கேட்டேன்;. அவனும் சரியென்றான். ஏங்களுக்கு, செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாது’வேர்ஜினியாவின் முகத்தில் தனது பழைய வாழ்க்கையை நினைத்து ஒரு குறம்புத்தனமான சிரிப்பு வந்துபொனது.

அவள் தனது கதையைத் தொடர்ந்தாள்,

‘வெளியில் சரியான பனியடித்துக்கொண்டிருந்தது. வீட்டில் யாருமில்லை. பீட்டர் அடிக்கடி வீட்டுக்கு வருவதால் யாரும் சந்தேகப் படவுமில்லை. அவனுக்கும் ஒருநாளும் எந்த கேர்ள்பிரண்ட்ஸ்சும் இருக்கவில்லை. நாங்கள் இருமுட்டாள்களும் சேர்ந்து எதோ பண்ணினோம். அவன் தனக்குத் தெரியாத ஏதோ செய்ய வெளிக்கிட,அவனின் விந்துவும் கன்னி கழிந்த எனது இரத்தமும் கசிய நான் வலியில் அலறினேன்.அவன் பயத்தில் மிரண்டுபோய் என்னுடன் சேர்ந்தழுதான். அது மட்டுமல்லாமல்,அவனின் அழுக்கான சேர்ட்டும் காலணியும் நாற்றமடித்தன. அது ஒருபக்கம் எனக்கு வாந்தியை வரப்பண்ணியது.அவன் என் நிலையைக்கண்டு நடுங்கி விட்டான்…அதன் பிறகு பலகாலமாக ஆண்களைக்கண்டால் எனக்கு அருவருப்பு வரும்.’

வேர்ஜினியா தனது கதையைச் சொல்லிவிட்டுச் சிரித்தாள். அவர்கள் எல்லோரும்,வேர்ஜினியாவின்,’முதலிரவில்’நாற்றமடித்த காலணி பற்றிச் சொல்லிச் சிரித்தார்கள்.

‘அப்படியென்றால நீயும் இப்போது…லெஸ்பியனா’கமலா தயக்கத்துடன் வேர்ஜினியாவைப்பார்த்தாள்.

‘இல்லை கமலா..உலகம் பதினைந்து வயதைத்தாண்டி ஓடிவிட்டது. யுனிவர்சிட்டியில் இன்னும் இரண்டொரு காதலர்கள் வந்துபோனார்கள்.எனது மனம் ஒரு முழுமையான காதலனை,எனது ஆத்மீகத் தோழனைத் தேடிக்கொண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் ஒரு ஓவியனைச் சந்தித்தேன். அவன் பிறவிக் கலைஞன்.றிச்சார்ட் ஸேர்லிங் பெண்களை ரசிக்கத் தெரிந்தவன்.காதல் புரிவது என்பது வெறும் செக்ஸ் செயற்பாடு மட்டுமல்ல,அது ஒரு உயர்ந்த கலையழகின் வெளிப்பாடு என்று உணரப்பண்ணியவன் மனித உணர்வின் ஒவ்வொரு நரம்பிலும் உள்ள இன்ப உணர்வின் ரகசியங்களுக்கும் உயிர்கொடுக்கத் தெரிந்தவன்.பெண்ணுடம்மை ஒரு வாத்தியக் கருவியாக மீட்டி உச்சநிலைக்குக் கொண்டுபொகத் தெரிந்தவன்…’

வேர்ஜினியா பேசிக்கொண்டிருந்தாள்.

‘ஆஹா எவ்வளவு இனிமையான காதலன்..’ மார்க்கரெட் சந்தோசத்தில கூவினாள்.

‘ அப்புறம்;’ ஹிலரி ஆவலுடன் கேட்டாள்.

‘பல வருடங்களாக ஒன்றாக இருக்கிறோம்..கல்யாணம் செய்வோமா என்ற கேட்டான்..எங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுக்க நான் விரும்பவில்லை..நான் என்னால் முடிந்தவரை, பெண்களின் வாழ்க்கைநிலை உயர ஆராய்ச்சிகளையும் அறிக்கைகளையும் தயாரிக்க உலகமெல்லாம திரிபவள்,அத்துடன் அவனை ஒரு கட்டமைப்புக்குள் சிறைபட்ட கலைஞனாகப் பார்க்க நான் விரும்பவில்லை.சுதந்திரமான எங்கள் உறவுக்குள் நேர்மையிருக்கிறது. ஓருத்தருக்கு ஒருத்தர் உண்மையாக இருப்போம் என்ற எங்கள் உறவு மிக மிக நெருக்கமானது. ஒளிவு மறைவற்றது.எங்கள் இனிய நெருக்கம் சொர்க்கத்தின் வாசல்கள்.அவனது முத்தங்கள் மதுக்கிண்ணத்தின் மறுபெயர்கள்.அவன் அணைப்பு இசையும் தாளமும் இணைந்த நாதத்தின் சங்கமம்.அவனுடன் காதல் புரிவது இன்னொரு பிறவி என்னுள் வாழ்கிறது என்று காட்டும் அனுபவங்கள்,அந்த அனுபவம் நீடிக்கும்வரை அவனுடன் நான் வாழ்வேன்;’ வேர்ஜினியா தனது இனிய கலவி அனுபவங்களின் ஞாபகத்தில் தனது கண்களை மூடிக்கொண்டாள்.

;’ம்ம்..வேர்ஜினியா மாதிரி எல்லோரும் அற்புதக் கலைஞனைக் காதலனாக அடைய முடியாது…நாங்கள் பெண்கள் அதிகம் எதிர்பார்த்தால் எதையோ இழக்கவேண்டிவரும்..எனது அம்மா சொல்வதுபொல்,பெண்கள் ஆண்களைத் திருப்தி செய்வதில் சந்தோசமடையவேண்டும்..அதுதான் நல்ல குடும்ப அமைப்புக்குச் சரியான வழி..’ கமலா தனது சேலைத்தலைப்பைச் சரி செய்தபடி சொன்னாள்.

விமலா தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களைப்பார்த்தாள். ஓவ்வொருவரும் ஒவ்வொரு சரித்தி;ரங்கள். அவற்றை,ஆண்களால் முழுமையாகப் புரிந்து கொள்ளவோ எழுதவோ முடியாதவை.

‘இங்கு பேசப்பட்ட விடயங்கள் உன்னைக் குழப்பியிருக்காது என்று நினைக்கிறேன்;’ ஜேன் வால்ட்டர் சிரித்தபடி விமலாவை அணைத்து முத்தமிட்டாள்.

‘ ஏய் விமலாப் பெண்ணே..உன்னுடையவனிடம் உனது பரிபூரணமான உலகத்தைப் புரிந்து கொள்’மார்க்கரெட் கண்களைச் சிமிட்டியபடி குறும்பாகச் சிரித்தாள்.

‘எங்கள் ஒவ்வொருத்தரின் அனுபவங்களும் வித்தியாசமானவை.நீ கெட்டிக்காரப் பெண்.. சுயமையை இழந்து விடாதே’வேர்ஜினியா சொன்னாள்.

சிந்தியா விமலாவைத் தனது காரிற் கூட்டிக்கொண்டு வந்தாள்.

‘விமலா,இன்று பல தரப்பட்ட அனுபவங்களைக் கேட்டாய். சிலர் பாரம்பரியங்களின் கட்டுக்கோப்புக்குள் வாழ்கிறார்கள், சிலர் புதுமை என்று ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறையைத் தேடுகிறார்கள், வேர்ஜினியா போன்றவர்கள் புதுமையிலும் புதுமையாக, பாரம்பரியத்தைக் கேள்வி கேட்பவர்களாக,புதுமையை ஆராய்பவர்களாக, வாழ்பவர்களாக இருக்கிறார்கள். உலகம் மிகவும் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. எங்களின் வாழ்க்கை மிக மிகக் குறுகியது. அந்த வாழ்க்கைக் காலத்தில் மற்றவர்களுக்காக முற்று முழுதாக வாழ்ந்து முடிக்க நாங்கள் அடிமாடுகளல்லர்…சுயமையை இழந்து, பொருளாதார வசதிக்காக,சமுகத்தின் அங்கிகாரத்துக்காக வாழ்வது தனது ஆத்மாவுக்குச் செய்யும் துரோகம் என்று நினைக்கும் உஷாவை நான் மிகவும் மதிக்கிறேன்’ சிந்தியா தனது ‘ஆசிரியைப்’ பாணியிற் சொன்னாள்.

விமலா வீடு திரும்பக் கொஞ்சம் நேரமாகி விட்டது.

‘ஹென் நைட்டும் மண்ணாங்கட்டியும்’ அம்மா எரிந்து விழுந்தாள்.

அம்மாவின் சினேகிதிகள்,விமலாவுக்கு முந்திய தலைமுறையினர். ஆண்கள் முன்னெடுக்கும் நடைமுறைக்குள் வாழப்பழக்கப் பட்டவர்கள். பெரும்பாலும்,தமிழர்கள்,ஒரே மொழி,ஒரே கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். அவர்களை ஆதிக்கம் செய்யும் ஆண்களின் பார்வையில் உலகத்தைப் பார்க்கப் பழகிக் கொண்டவர்கள்.

அம்மா பழைய உலகத்தப் பெண், விமலாவின் ஆபிஸ் சனேகிதிகள் பல மொழி, பலசாதி, பல்லின,பலகலாச்சார வேறுபாடுகளைக் கொண்டவர்கள். பலவிதமான அனுபவங்களுக்குள்ளால் உலகத்தைக் கணிப்பிடுபவர்கள்.

அவர்கள் அம்மாவின் உலகத்தைக் காணாதவர்கள். ஓரு பதிய தலைமுறை வித்தியாசத்தில் வாழ்பவர்கள். புதிய சிந்தனைகளும்,புதிய தேடல்களுமுள்ளவர்கள்.ஆண்களின் பொருளாதாரத் தயவில் வாழ வேண்டும்,அதனால் ஆண்களால் முன்னிலைப்படுத்தும், கலாச்சார,பொருளாதார,பண்பாட்டுக் கட்டுப்பாடுகளை முழுக்க முழுக்க ஏற்றக் கொள்ளாதவர்கள்.

அம்மாவின் அடுப்படிச் சினேகிதிகளும், விமலாவின் ஆபிஸ் சினேகிதிகளுக்குமிடையில் அவர்கள் எல்லோரும் பெண்கள் என்ற ஒற்றுமையைவிடப் பல வித்தியாசங்களுள்ளன. ஆபிஸ் சினோகிதிகளிற் பலர்,தங்களுக்கென்ற சுயமையை அடையாளம்காட்ட முனைபவர்கள்.

விமலாவின் எதிர்காலக் கணவன் பரமேஸ்வரன் பெரிய வேலையிலிருக்கிறான். நல்ல சம்பளம். வீடு இருக்கிறது.அவளுக்கு அதைவிட வேறுவேலை தேவையில்லை என்று அவன் அடிக்கடி சொல்லியிருக்கிறான். அவன் அவளை வாழ்க்கை முழுதும் நன்றாக வைத்திருப்பான் என்ற அவளின் தாய் பெருமையுடன் சொன்னாள். அவளுக்கு இருபத்தொன்பது வயது, அவள் கணவன் பரமேஸ்வரனுக்கு முப்பத்தி ஐந்து வயது.இருவரின் குடும்பத்தினரும் அவர்கள் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது என்ற பலர் புத்திமதி சொன்னார்கள்.

சில கிழமைகளில் விமலாவின் திருமணம் சிறப்பாக நடந்தது.

விமலாவின் கழுத்தில் பத்தொன்பது பவுணில் பெரிய தாலி ஏறியது. இனி விமலா என்பவளுக்குத் தனியடையாளம் கிடையாது.அவளின் படிப்பு, பட்டம், உத்தியோக அனுபவங்கள் அத்தனையும் அவளுடைய பழைய சரித்திரம். உஷா சொல்வதுபோல் அவளின் உடம்பு இரவில் கட்டிலிலும் பகலில் வீட்டிலும் அவள் கணவனின் விருப்பங்களை நிறைவேற்றும்.அவள் இன்று தொடக்கம், அந்த வீடு,அவளின் கணவர், அவனின் பெற்றோர்கள், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு வேலையாளி.அதன் ஊதியம்,பொருளாதார வசதியான வாழ்க்கை,சமுதாய அங்கிகாரம்.

முதலிரவு முடிந்து விட்டது. கலவி செய்த களைப்பில் பரமேஸ்வரன் நல்ல நித்திரை. விமலாவின் நினைவில், வேர்ஜினியாவும் அவள் பார்ட்னர் றிச்சார்ட்டும் ஏனோ வந்து எட்டிப்பார்த்தார்கள்.அவளாற் தூங்கமுடியவில்லை.கன்னி கழிந்த காயம் அவளின் பெண்ணுறப்பில்,சாடையாக நோ தந்தது.மிகச் சிரமத்தின்பின் நித்திரையில் ஆழ்ந்தபோது, கட்டிவைக்கப்பட்டு சூடு போடப்படும்,அந்த மாடு கனவில் வந்தது.மாட்டுக்குச் சூடுபோட்டு தோல் கருகி எரிந்த மணம் மூக்கில் அடிக்குமாற்போல் இருந்தது.

சட்டென்று எழுந்தாள்.

அவனின் விந்துவும் அவளின் கன்னி கழிந்த குருதியும் ஒரு புதிய மணத்தைத் தர,அவள் உள்ளாடை தொடையில் ஒட்டிக்கொண்டது.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

3 thoughts on “முதலிரவுக்கு அடுத்தநாள்

  1. இந்தக் கதை முதலிரவில் ஆண்களின் மனநிலைக்கும் பெண்களின் மன நிலைக்குமுள்ள வித்தியாச எதிர்ப்பார்ப்புக்களைப்புரிய வைக்கும் முயtsiயாகும் .

  2. ராஜேஸ்வரி நமக்கெல்லாம் முனுன்னுழவுக்காரி. மிகச்செழுமையானது, புதுமையானது என்றில்லாவிட்டாலும் தனக்கென்றே தனித்துவமான ஒரு மொழிநடையின் சொந்தக்காரி. எதை நினைக்கிறாரோ அதை எழுதிவிடும் துணிச்சற்காரி. ஒரு சந்திப்பில் அவர் விதைகள் என்றபோது வாசகமணிகள் புரியாமல் குழம்பவும் “ அதுதான் உங்க கொ* சொன்னேன்பா” என்று தயங்காமல் விளக்கங்கொடுத்தவர். என்ன அவரது அரசியல் நிலைப்பாடுகள் பலருக்கும் ஏற்கமுடியாதவை, ஆதலால் அவரை வாசிக்கச் சிலர் தயங்குவதுண்டு. அது கிடக்கட்டும் அரசியல் தன்பாட்டில்….. . நீங்கள் வாழ்வை உலகத்தை புரிந்துகொண்ட கோணத்தில் இன்னும் இன்னும் இன்னும் தளர்ச்சியில்லாது எழுதவேண்டும் என்பது என் விண்ணப்பம்.

  3. அருமை…ஆச்சிரியம்…பாராட்டுகள்….விஜயன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *