கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 21,418 
 

“வாங்க ரைட்டர் சார், என்ன வேணும்?” அண்ணாச்சி மோதிர விரல்களால் கரன்சி நோட்டை எண்ணிக்கொண்டே அதியனை வரவேற்றார். பாலவாக்கம் ஏரியாவுல அண்ணாச்சி டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்னா எல்லாருக்கும் தெரியும்.

“டேய் பசங்களா நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு கடைக்கு லாரில சரக்கு வருது. ரெண்டு பெரும் வேலைய முடிச்சிட்டு நைட் கடையிலேயே படுத்துகோங்க” கடையில வேல பாக்கும் பசங்ககிட்ட பேசிக்கொண்டே தன் பார்வையை

அதியன் பக்கம் திருப்பினார்.

“சாரி சார், சொல்லுங்க தோசை மாவுதான?” என்று புன்னகைத்தார். அண்ணாச்சிக்கு தெரியும் அதியன் ஏழு மணி வாக்கில் கடைக்கு வந்தால் தோசை மாவுக்காகத்தான் இருக்குமென்று. அதியன் புன்னகைத்தார்.

“ஒரு பில்டெர் பாக்கெட் சிகரெட். அப்படியே பத்து முட்ட கொடுத்துருங்க.”

“தரேன் சார்.” அண்ணாச்சி எதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே ஒரு பேப்பரைக் கிழித்து ஒன்றன்மேல் ஒன்றாக முட்டைகளை அடுக்கினார்.

“வேற?”

“அவ்ளோதான்”

“அண்ணாச்சி 5 ரூபாய்க்கு புளிப்பு முட்டாய் தாங்க”, அருகில் ஒரு சிறுவன் தன் கால்சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி கேட்டான். “சார் ஆனந்த விகடன்ல வர உங்க தொடர்கதை பிரமாதம். கடைக்கு வரவங்க கிட்டலாம் சொல்லிட்டு இருக்கன்.” “ஓ அப்படியா ரொம்ப நன்றிங்க.”,

அதியன் ஆச்சர்யத்துடன் புன்னகைத்தார். “என்ன சார் அப்படி பாக்கறிங்க, ஆளு கரடுமுரடா ரவுடி மாரி இருக்கானே இவன் எப்படி கதைலாம் படிக்கிறானுதான பாக்கறிங்க?”.

“ச்ச ச்ச அப்படிலாம் இல்ல.”

“நான் சின்ன வயசுல கவிதயெல்லாம் எழுதி நிறய பத்திரிக்கயில வெளி வந்திருக்கு. அப்பறம் அப்படியே பொழப்ப பாக்க வந்துட்டன்.” என்று முகத்தில் சிறிது பெருமை பூசிக்கொண்டு சிரித்தார். அதியானால் இம்முறை அவ்வளவு இயல்பாக சிரிக்க முடியவில்லை.

அந்த பத்து முட்டைக்காகக் கிழிக்கப்பட்ட பேப்பரில் அதியனின் தொடர்கதை இருந்தது இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அண்ணாச்சி எல்லாவற்றயும் எடுத்து அரிசி மூட்டைமேல் வைத்துக்கொண்டே கேட்டார்.

“கவர் வேணுமா சார்?”

கவர் வேணுமா என்று கடைக்காரன் கேட்டால் ஐந்து ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுக்கவேண்டும் என்று அர்த்தம். கையிலிருந்த பையைக்காட்டி இதுல கொடுத்துடுங்க என்று நீட்டினார் அதியன். அண்ணாச்சி ஒரு அசட்டு சிரிப்புடன் வாங்கிய பொருட்களை பையில் வைத்து பவ்யமாக கொடுத்தார்.

“அண்ணாச்சி புளிப்பு முட்டாய்” சிறுவன் அவசரப்படுத்தினான்.

“கொஞ்ச நேரம் இரண்டா இவன் ஒருத்தன்.” அண்ணாச்சி அதட்டினார்.

அதியன் புன்னகைத்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார். “சார் சார் ஒரு நிமிஷம்”, அண்ணாச்சி மெல்ல அருகே வந்து கேட்டார். “உங்க கதையில வர்ர கார்த்தியும் நிவேதாவும் கண்ணாபின்னானு லவ் பன்றாங்களே, அவங்க கடைசியில கல்யாணம் பண்ணிக்குவாங்கல்ல?”

அவரது கேள்வியில் ஒரு அப்பாவின் பதட்டம் தெரிந்தது. அண்ணாச்சியின் கேள்விக்கு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தார் அதியன்.

“எப்படியாச்சி சேத்து வச்சிடுங்க சார்!” அண்ணாச்சியின் குரல் சற்று தூரத்திலிருந்து சன்னமாக ஒலிக்கிறது.

அண்ணாச்சியை அந்த சிறுவன் பாவமாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். “என்னடா புளிப்புமுட்டாயா?. நாங்களும் சின்ன வயசுல இதான் வாங்கி சாப்டோம்.”

கிரில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. “சுப்பு வந்துட்டேளா?” அறையிலிருந்து மாலினி குரல் கொடுத்தாள். “நான்தான். செத்த இரு! கைகால் அலம்பிண்டு வரன்”.

சுப்ரமணியசுவாமிக்கு வயது ஐம்பத்தைந்து. LIC யில் மேலாளராக பணிபுரிகிறார். தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு இவைதான் சுப்புவின் உலகம். தன் மனைவி மாலினி மேல் உயிரையே வைத்திருக்கிறார். யார் வம்புக்கு போக மாட்டார். பரம சாது. ஒருமுறை அக்ரஹாரத்தில் கோஷ்டித்தகராறு. வடகலையா தென்கலையானு சண்ட வந்தப்ப கூலா உக்காந்துண்டு வேர்க்கடலை சாப்டுண்டு இருந்தார்.

“ஏன்னா டாக்டர் என்ன சொன்னார்?, நேக்கு சாப விமோச்சனம் கெடச்சிடுமோன்னோ?” அறையில் படுத்த படுக்கையாக இருந்த மாலினி சுப்ரமணியைப்பார்த்து கேட்டாள். “ஏண்டி இப்டி அபசகுணமா பேசிண்டு இருக்கா?. உனக்கு சீக்கிரம் எல்லாம் குணமாகிடும்னு டாக்டர் சொல்லி இருக்கார்”. மாலினியின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் தலையை மெல்ல தன் விரல்களால் கோதிக்கொடுத்தார். “குடுக்கிற மாத்திரையெல்லாம் கீழ போடாம சாப்பிடு. நீ பழையபடி ஓடியாடி வேல செய்யலாம்.”

“உங்கள பாடாப்படுத்தறன்ல?. இப்பவே பிராணம் போயிட்டா தேவலனு இருக்கு”.

“இப்படியெல்லாம் பேசி சங்கடப்படுத்தாதடி” என்று சொல்லும்போதே சுப்புவிற்கு உதடு துடித்தது. “ஏன்னா முகமெல்லாம் வாடிப்போய் இருக்கு?”. அது ஒண்ணுமில்ல அசதியா இருக்கு. காபி குடிச்சா சரியாயிடும், பெருமாளே” என்று சிரமப்பட்டு எழுந்தார்.

மாலினிக்கு காசநோய். நுரையீரலிலிருந்து மெல்ல முதுகுத்தண்டிற்குப் பரவி இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மாலினியால் நடக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, குளியல் மற்றும் இதர இயற்கை உபாதைகளுக்கு சுப்ரமணிதான் உறுதுணையாக இருந்து வந்தார். சுப்ரமணி-மாலினியின் மகன் அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் செய்து நல்ல இருக்கியாம்மா என்று பாசத்தோடு விசாரிப்பான். அவன் வாங்கி அனுப்பிய IPad-ஐ கைக்கெட்டும் தூரத்திலேயே மாலினி வைத்திருந்தாள். முப்பது வருடங்களாக தன் குடும்பத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு பிள்ளைகளை வளர்த்தெடுத்த மாலினிக்கு இந்த மூன்று மாதப்பிணிப்படுக்கையின் சுமை தாளமுடியாமலிருந்தது. மாலினி மனதளவில் மிகவும் தளர்ந்துவிட்டாள். நம்பிக்கை இழந்தவளாய்ப் பிதற்றினாள். சுப்பு அடிக்கும் கடிஜோக்குகளுக்கு முன்புபோல் அவளால் சிரிக்கமுடிவதில்லை.

“இந்தாடி காபிய குடி”, ஆவி பறந்தது. நம்ப பேரப்பசங்க கல்யாணத்த பாத்துட்டுதான் கண்ண மூடுவோம். பெருமாள் நம்மல கைவிட்டமாட்டார். நம்ப ஜோசியக்காரன் என்ன சொல்லிருக்கான் தெரியுமோன்னோ?. உன்னோட ஜாதகத்துல

லக்கினாதிபதியும் எட்டமாதிபதி, சந்திரன் , ஹவுரா லக்கினாதிபதி எல்லாரும் ஹாயா உக்காந்துண்டு இருக்கா. பூரண ஆயுசு. ஏண்டி கவலைப்பட்டுண்டு இருக்க. பி ஹாப்பி மாலு.” என்று கன்னத்தைகிள்ளிவிட்டுத் தொடர்ந்தார்.

“எனக்கு என்ன ஒரே கவலைன்னா, உடம்பு சரியாயிட்டா பழையபடி என்கூட சண்டை போடா ஆரம்பிச்சிடுவ, அதா நெனச்சாதான் ….. ” என்று கிண்டலாக இழுத்தார்.

“போங்கோண்ணா”. ஐம்பது வயதைக் கடந்த பெண்மணிகள் வெட்கப்படும்போது கூடுதல் அழகாக இருக்கிறார்கள். உண்மைதான்.

“என்னென்னெ தெரியலைனா நம்ப பேரப்பசங்கள பாக்கனும்போல இருக்கு.”

“அதான் க்ரிஷ் லீவ் கெடச்சதும் அழைச்சிண்டு வரேன்னு சொல்லிருக்கானே. அவா என்ன அமிச்சிக்கடையிலயா இருக்கா. அமெரிக்காவுலன்னா இருக்கா.” சுப்புவிற்கு பையனை நினைத்து ரொம்ப பெருமை. ஆபிஸ்ல எப்படியும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ‘கேசுவலாக’ கிரிஷைப் பற்றி பேசிவிடுவார்.

“நேத்தைக்கு ஒரு நாவல் படிச்சன். அப்படியே என்னோட காலேஜ் டேஸ்க்கு அழச்சிண்டு போயிடுத்து. கத சொல்லவா?” என்று மாலினி கண்களில் ஆர்வம் வழியாக கேட்டாள்.

“தினமும் கத சொல்லி என்ன முன்னாடியே அனுப்பி வச்சிடுவ போல” என்று நக்கலாக சிரித்தார் சுப்பு.

“ம்க்கும் ….உங்ககிட்ட போய் சொன்னன் பாரு. சரியான ரசனை கெட்ட ரவா.” மாலினி சலித்துக்கொண்டாள்.

“சரி நான் செத்த வெளிய போயிட்டு வரன்.”

“அந்த ரெண்டாவது ஷெல்ப்புல இருக்க பச்சை கலர் புக்க எடுத்து குடுத்துட்டு போங்களேன்”.

“இதுவா?”

“ஆமா”.

மாலினி அந்த காலத்து BA இங்கிலிஷ் லிட்டரேட்ச்சர். கல்லூரிக்காலங்களில் அவள் பின்னாடி சுற்றிய வாலிப பசங்களையெல்லாம் தாடி வைக்க சொல்லிவிட்டு சுப்புவைக் கரம் பிடித்துவிட்டாள்.

“ஹாய் மாலினி ஐ அம் கிருஷ்ணன்” என்று தொடங்கும் பாடலில் வரும் சிம்ரனின் அழகுக்கு இணையாக இருப்பாள் மாலினி. சிறு வயது முதலே இலக்கிய ஆர்வமுள்ளவள். நல்ல புத்தகங்களைத் தேடி தேடி வாசித்துவிடுவாள்.

தினமும் இரவு புத்தகம் படிக்கவில்லையென்றால் மாலினிக்கு தூக்கம் வராது. திருமணத்திற்குப் பிறகு மனையாள் பொருப்பை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவள்.

வீடே உலகமெனக் கிடந்தவளுக்கு கதைபுத்தகங்களும் அதில் வரும் கதைமாந்தர்களுமே பெரும்பாலும் துணையாகிப் போனார்கள். ஒரு புத்தகத்தை ஒருமுறை படித்தால் அதில் வரும் கதை மாந்தர்களை அவளால் எளிதில் மறந்து விடமுடிவதில்லை.

“சீக்கிரம் வந்திருங்கோண்ணா மழ வரமாரி இருக்கு”. ஜில்லென்று காத்து வீசியபடி இருந்தது.

“ம்ம் ..சரி”

“கொட எடுத்துட்டு போங்கோ”.

“சரி சரி” கிரில் கேட் மூடும் சத்தம் கேட்டது.

அதியன் வீட்டிற்குள் நுழைந்தார்.

“அப்பா எனக்கு சாக்லேட் வாங்கனியா?” துருவ் சாக்லேட் கேட்டதை சுத்தமாக மறந்துவிட்டது அதியனுக்கு நியாபகம் வந்தது.

“டேய் இந்த வயசுல நிறையா சாக்லெட் சாப்டா பல்லு சொத்தையாயிடும்”.

“போப்பா மறந்துட்டன்னு சொல்லு சும்மா சமாளிக்காத”. என்று துருவ் சலித்துக்கொண்டான்.

அதியன் மைண்ட்வாய்ஸ் : பையன் வளந்துட்டான் போல.

தோசை மாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றார் அதியன். கிச்சனில் துருவின் அம்மா நேத்ரா!!

பிரிட்ஜின் கதவைத்திறந்து மாவுபாக்கெட்டை வைத்துவிட்டு கேசுவலாக வெளியேற முயன்றார் அதியன். “அதி வி நீட் டு டாக்!”. அதி வெளியேறிக்கொண்டிருந்தார். அதி உன்கிட்டதான் பேசறன்”.

“ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்துட்றன்”. என்று சொல்லிவிட்டு அங்கே இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் காலக்ஷபத்தை உணர்ந்தவராய் பில்டர் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவிக்கொண்டு அவசரமாக மொட்டை மாடிக்கு ஓடினார். முக்காலமும் உணர்ந்தவன்தான் நல்ல படைப்பாளி. உண்மை!

அதியன் ஒரு முழு நேர எழுத்தாளர். எழுத்தாளர் என்ற உடன் உங்கள் மனம் அனிச்சையாக வரைந்துகொள்ளும் உருவத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதவர் அதியன். ஜோல்னா பை இல்லாமல் புட்டிக்கண்ணாடி போடாமல் க்ளீன்ஷேவ் செய்த முகம். ஒரு IT ஆசாமியைப் போல யூத்தாக டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து ஸ்லிம்மான உடல் தோற்றத்துடன் இருந்தார். வயது நாற்பதைக்கடந்து விட்டது என்று சொன்னால் எவரேனும் ஒருமுறை புருவம் உயர்த்துவர்.

எழுத்தாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளும்போது யாரேனும் சடாரென அனுமதியின்றி அனுதாபங்களை இறக்கி வைத்துவிடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வு கூட அதியனின் இந்த தோற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். இல்லையென்றால் அவர் அவராகவே இருக்கலாம். நாம் தேவையில்லாமல் யோசிக்கலாம். கருத்துத்திணிப்பு தானே நம் மரபு. சரி பரவாயில்லை.

இது வரை பத்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் , அது இல்லாமல் இரண்டு குறும்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், ஸ்க்ரீன்ப்லே கன்சல்டன்ட்டாகவும் பணியாற்றி இருக்கிறார். சினிமாவில் ரைட்டராகும் முயற்சியில் முழுமனதுடன் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது சமூக ஆர்வலராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுவதுண்டு. அது தவிர நெட்டபிலிக்ஸ் , அமேசான் ப்ரைம் மற்றும் மனைவியிடம் திட்டு வாங்குவது போன்றவை எழுத்தாளரின் சமகால பொழுபோக்குகள்.

ஓயாமல் கரையை முட்டிக்கொண்டிருக்கும் அலைபோல மனஅழுத்தம் தரும் எண்ணங்கள் அதியனை நில்லாமல் மோதிக் கொண்டே இருந்தன. எதிர்காலத்தை எண்ணி அவர் மிகவும் பயந்தார். ஒருவேளை இறுதிவரை அவர் வேண்டிய உயரம் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அவரை அவரே நொந்துகொண்டார். சிறிது நேரம் மொட்டைமாடியில் எல்லாவற்றிலிருந்தும் டிஸ்கனக்டடாக இருப்பது அவருக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.

அங்கே சுருட்டி மடித்து வைக்கப்பட்ட பாய் தலையணையை விரித்து அதில் படுத்துகொண்டார். மார்கழிப்பனி இதமாக விழுந்துகொண்டிருந்தது. ஒருகணம் கண்களை மூடி நிலவொளியின் குளிர்ச்சியை உணர்ந்தார். தன் செவிப்பறையில் மீது ஓயாமல் விழுந்துகொண்டிருக்கும் ஒலிகளை சிறிது நேரம் ஒதுக்கி வைத்தார். நிசப்தம்!.

கொண்டுவந்திருந்த சிகரெட்டைப் பற்றவைத்து புகையை தன் நுரையீரல் முழுவதும் பரவவிட்டார். இரவுக்கு பொட்டு வைத்ததுபோல் ஒளி வீசிக்கொண்டிருந்தது சிகரெட்டின் கங்கு. இன்னும் ஏதோ ஒன்று குறைகிதே என்று யோசிக்கும்போதே

இளையராஜா வந்துவிடுகிறார். தன்னுடைய மொபைலில் சேவ் செய்து வைத்திருக்கும் பேவரைட் பிலேலிஸ்டிலிருந்து பாடலை ஓடவிட்டார் அதியன். ‘வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா’ ஆஹா என்ன ஒரு அருமையான பாடல். பாடல் முடிவதற்குள் சிகரெட் முழுவதுமாக கரைந்துவிட்டிருந்தது.

“இவ வேற என்ன சொல்லப்போறானு தெரியலையே” என்று முணுமுணுத்துக்கொண்டே படியிறங்கி வீட்டிற்குள் நுழைந்தார். மைண்ட்வாய்ஸ் : “இன்னிக்கு என்ன ஆனாலும் சண்டை மட்டும் போடக்கூடாது. கேசுவலா ஆரம்பிப்போம்”.

“ஹே நேத்ரா எப்படி இருக்க ? ஆபீஸ்லாம் எப்படி போது?” என்று தோழமையைக் கேடயமாக்கினார்.

“உன்னக் கல்யாணம் பன்னன்ல எப்படி இருப்பன்?” என்று துருவின் இருத்தலை மனதில் கொண்டு மிகவும் சன்னமான குரலில் பொறிந்தாள் நேத்ரா.

“துருவ் கண்ணா, ஒய் டோன்ட் யு கோ இன்சைட் அண்ட் ரீட்?”

தருவ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அப்பாவைப் பாவமாக பார்த்துக்கொண்டே உள்ளே போனான். மைண்ட்வாய்ஸ் : “போகாதடா”.

“இன்னும் எத்தன நாளைக்குதான்டா இப்படியே இருப்ப?. நீ கத எழுதற சினிமாவுல டயலாக் எழுதரனு சுத்திட்டு இருக்க, இது வரைக்கும் எதாச்சி உருப்படியா நடந்துச்சா? பேசாம இதெலாம் தூக்கிப்போட்டுட்டு வேற எதாச்சி வேலைக்கு போகலாம்ல?. என்னால தனியா சமாளிக்க முடியலடா. இந்த வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தம் இல்லாத மாதிரி நடந்துக்கற? கடைசியா நீ எப்ப என்கூட சந்தோசமா இருந்தன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?. உன் புக்ல அவ்ளோ ரொமான்ஸ் இருக்கு. நீ ஏன்டா வெத்து பேப்பரா இருக்க?”

அவள் சொல்வது உண்மைதான். கவிதைக்காரனெல்லாம் காதலிப்பதில்லை. காதல்காரனெல்லாம் கவிதை எழுதுவதில்லை.

“வீட்ல என்னென்ன பொருள் இருக்கு இல்லனு தெரியுமா உனக்கு? சொல்லு பாக்கலாம்?”

அதியன் தரையைப் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்தான். மைண்ட்வாய்ஸ்: “டோன்ட் லூஸ் தி டெம்பர். யு கேன் டூ இட் அதி”.

“அந்த ரூம்ல டியூப்லைட் மாத்த சொல்லி ஒருவாரம் ஆகுது. இதெல்லாம் கூட நானே பண்ணனுமா?. கீழ்வீட்டு அங்கிள் வந்து மாத்தி குடுத்துட்டு போனாரு. அசிங்கமா இருக்கு அதி.”

“நீ இப்படித்தான் இருக்கபோறன்னா என்ன ஏன்டா கல்யாணம் பன்ன ?”

“சம்பாதிக்க மாட்ட சரி, அட்லீஸ்ட் வீட்ல வேலையாச்சி பாக்கலாம்ல?. எதாச்சி பேசு, என்ன டேஷுக்கு என்ன கல்யாணம் பன்ன?”

‘போதும் நிறுத்து’ என்று கிச்சனில் இருந்து பிரஷர் குக்கர் விசிலடித்து அழைத்தது.

“எதுக்கு கல்யாணம் பன்ன?” என்று கத்திகொண்டே அழ ஆரம்பித்தாள் நேத்ரா. அதுவரை பொறுமை காத்த அதியனுக்கு பிரேக்கிங் பாயிண்ட் வந்தது. உடைந்தான். பெண்கள் எவ்வளவு திட்டினாலும் பொறுமை காக்கும் ஆண்கள் அழுக ஆரம்பித்துவிட்டால், தன் மக்களுக்காக கிளர்ந்தெழும் கிளர்ச்சியாளனைப்போல் வீறுகொள்கிறார்கள்.

“ஹே இப்ப எதுக்கு அழுவுற, சும்மா …. இந்த வீட்ல நான் வேலையே செஞ்சது இல்லையா? கடைக்கெல்லாம் யாரு உங்கொப்பவா போயிட்டு வராரு?”

“தேவ இல்லாம எங்கப்பாவ இழுத்த மரியாதை கெட்டுடும் உனக்கு. அவ்ளோதான் சொல்டன்” குக்கரை நிறுத்த சமயலறைக்குச் சென்றவள் குரலை மட்டும் வெளியே அனுப்பினாள்.

“சம்பாதிக்க துப்பில்ல பெருசா வந்துட்டான் பேச” இப்போது கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருந்தது. “நீ சிகரெட் குடிக்கற காச சேத்து வச்சிருந்தாலே அரகிரௌண்ட் லேண்ட் வாங்கிப் போட்ருக்கலாம்”.

அதியன் அமைதியானான். அவனால் ஏதும் பேச முடியவில்லை. நேத்ரா பேசிமுடிக்கும் முன்னரே தெரியும் அதியனை அவள் எவ்வளவு காயப்படுத்தப் போகிறாள் என்று. திருமணமான பத்து வருடங்களில் இருவரும் எவ்வளவு சண்டையிட்டுக்கொண்டாலும் நேத்ரா அதியனை சம்பாதிக்கவில்லை என்று குத்திக்காட்டியதில்லை. இருவரும் அமைதியானார்கள். நேத்ராவின் கண்களில் சிறுதுளி குற்றவுணர்வு கசிந்தது.

“அம்மா பசிக்கிது” துருவ் சிணுங்கிக்கொண்டே ஹாலுக்கு வந்தான். அதியன் அங்கு நிற்க முடியாதவனாய்க் கோவமாக ரூமிற்கு சென்று தாழிட்டுக்கொண்டான். கபாலம் உடைந்து சுக்குநூறாகும் வரை கத்த வேண்டும் போல் இருந்தது அதியனுக்கு.

நேத்ரா அரசு வங்கியில் மேலாளராக இருக்கிறாள். நல்ல சம்பளம். அழகும் திறமையும் ஒருங்கே பெற்றவள். குடும்பத்தில் மூத்தவள் என்பதால் கடமையெல்லாம் நிறைவேற்றுவதற்குள் முப்பது வயது ஆகிவிட்டது. அன்றைய நாட்களில் விகடனில் வெளியான அதியனின் கவிதைகளை படித்துவிட்டு அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டவள். பெரும்பான்மையான இந்தியத் திருமணங்களுக்கு காதலோ கவிதையோ காரணமாக இருப்பதில்லை. வயது மூப்பே காரணமாக இருக்கிறது. பாவம் நேத்ரா. அதியனும்தான்.

ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கத் தொடங்கினார். அதீத உணர்வுகள் ஆட்கொள்ளும்போது மூடுக்கு ஏத்த மாதிரி பாட்டு கேட்பது அதியனின் வழக்கமாக இருந்தது. யூடூபில் இளையராஜா சோகப்பாடல்கள் என்று டைப் செய்து சர்ச் பொத்தானை அமுக்கினார். ‘மயிலப்புடிச்சி கால உடச்சி ஆட சொல்லுகிற உலகம். குயிலப்புடிச்சி கூண்டிலடச்சி கூவ சொல்லுகிற உலகம்’ பாடலை பாடவிட்டு கமெண்ட் செக்ஷனை நோட்டம் விட்டான். முதல் கமெண்ட் இப்படியாக இருந்தது. “வாழ்கையில் பல வலிகள் ஒரே மருந்து – இளையராஜா. அவர் இல்லை என்றால் மனம் விட்டு அழ கூட வழி இல்லை. நன்றி” ச்ச எவ்வளவு உண்மை.

முகநூலைத்திறந்து தான் எழுதிய பதிவிற்கு வந்த லைக்குகளையும் கமெண்ட்களையும் நோட்டமிட்டார். அதியனுக்கென்று ஒரு வாசகர்கூட்டம் இருந்தது. அவர் எழுப்பும் அரசியல் சார்ந்த கேள்விகள் சில நேரங்களில் நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும். எதிர்தரப்பு சண்டை, அதியன் ஆதரவாளர்களின் கூக்குரல் என அன்று இணையம் முழுவதும் பரபரப்பாக இருக்கும். பிறகு தொலைக்காட்சி அழைத்து எதிர்தரப்பினருடன் காரசாரமாக விவாதமேடை அமைப்பார்கள். சில நேரங்களில் தகாத வார்த்தைகளால் திட்டிவிடுவார்கள். அரசியலில் இதெல்லாம் சாதா(ரணம்)தானே.

அதியன் கடந்த பதினைந்து வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார். சிறுவர்மலரில் வெளிவந்த துணுக்குகளில் தொற்றிக்கொண்ட ஆர்வம் வளர வளர வார இதழ்கள், மாத இதழ்கள் என்று தனக்கென பல தளங்களை உருவாக்கிக்கொண்டார்.

தனக்கு வந்த அணைத்து வாசகர் கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். ரெனால்ட்ஸ் பேனா முதல் பார்க்கர் பேனா வரை பல விலைமதிப்புள்ள பேனாக்கள் அன்பளிப்பாக வந்தாலும் தான் முதன் முதலில் வாங்கிய ஹீரோ பேனாவையே இன்று வரை பயன்படுத்தி வந்தார் அதியன். அதியனின் மேசைமேல் எப்போதும் ஒரு நீலநிற பிரில் இங்க் பாட்டில் இருக்கும்.

தான் எழுத ஆரம்பித்த காலத்தில் வாசகர்கள் எழுத்தாளர்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள். இப்போது எழுத்தாளர்கள் வாசகர்களைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். காலத்திற்கு எவ்வளவு ரசனை இருக்க வேண்டும் என்றெண்ணி சிரித்துக்கொண்டே எதிரில் மாட்டி இருந்த நிலைக்கண்ணாடியில் முகம் பார்த்தார். புதிதாக ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்த்தது.

அடுத்த சிறுகதைத்தொகுப்பிற்காகத் தயாராகிக்கொண்டிருந்தார் அதியன். பதினொன்று முடிந்தாகிவிட்டது. இன்னும் ஒரு சிறுகதை எழுதுவதற்காகக் காத்திருந்த அதியனிடம் காலம் கபடி ஆடிக்கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக மனநிலை பிறழ்ந்தவனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். கருவும் எழுத்தும் பிடிபடவில்லை. அதனாலென்ன சிறுகதை என்ன பாஸ்ட்புட் சமாச்சாரமா? எண்ணையில் போட்டு எடுப்பதற்கு. ஒரு நல்ல கதை கிடைப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். நேத்ரா பேசியது மீண்டும் மீண்டும் மூளையை முட்டியது. உண்மை வலித்தது. இப்போதய அவசரத்தேவை ஒரு சிகரெட்.

சிகரெட் பாக்கெட்டை நேத்ரா பார்க்கும்படி சட்டைப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

“சாப்டுட்டு போ” நேத்ரா ஒரு மூலையில் சோகமாக அமர்ந்து கொண்டு அழைத்தாள்.

அதியனுக்கு இப்போது பதில் சொல்லாமல் அவளை இக்னோர் செய்துவிடும் பிரிவிலேட்ஜ் இருந்தது. கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் தனிமையில் இருந்துவிட்டு வரலாம் என்று இருந்தது அதியனுக்கு. வீட்டிலிருந்து கடற்கரை மூன்று கிலோமீட்டர்தான். நேத்ராவுடன் கடற்கரையில் நடந்த பொழுதுகளைவிட தனிமையில் நடந்ததே அதிகம். வழக்கமாக அவர் அமரும் இடத்தில் ஒரு காதல் ஜோடி எந்தக்கவலையும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் சிறிது தூரம் நடந்து சென்றார். சோடியம் விளக்கொளியில் கடற்கரை ரம்யமாகக் காட்சியளித்தது. இருளும் மஞ்சள் ஒளியும் குழையும்போது மனதிற்கு இதமாக இருப்பதாக அதியன் உணர்ந்தார்.

சிறிது தூரத்தில் அரவிந்தன் தள்ளுவண்டியில் சுண்டல் விற்றுக்கொண்டிருந்தான். சென்னைக்கு மாற்றலாகி வந்த முதல் நாளிலிருந்தே அரவிந்தன் அதியனுக்கு பழக்கம். முகநூலில் பின்தொடர்வது இல்லை, மொபைல் எண் பரிமாறிக்கொள்ளவில்லை என்றாலும் இருவருக்கும் ஒரு அழகான நட்பு இருந்தது. ஒருவேளை அதுவே காரணமாக இருக்கலாம். அரவிந்தன் படித்தவன். டிகிரி முடித்து தனக்கானதொரு வேலை தேடிக்கொள்ளும் படித்தவன் இல்லை. டிகிரி முடிக்கவில்லை என்றாலும் நிறைய வாசிக்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசுவான். வாய் நீளம் என்பதால் எங்கு வேலைக்குப் போனாலும் தாக்குப்பிடிக்கமாட்டான். அதனால் அப்பாவுக்குத் துணையாக கடற்கரையில் சுண்டல் விற்க ஆரம்பித்துவிட்டான். எப்போது கடற்கரையில் சந்தித்தாலும் ஒரு நல்ல உரையாடல் செய்த திருப்தியைத் தந்துவிடுவான். எல்லாவற்றிற்கும் மேலாக என் அன்பிற்குரிய வாசகன்!. விமர்சகன்!.

“சார்! வா சார்! எப்டி இருக்க?, அண்ணிகூட பைட்டா?” என்று பள்ளு தெரிய சிரித்தான். “ஆமா எப்டி கண்டுபுடிச்ச?” “அடப்போ சார் எத்தினி வருசமா பாக்கறேன் உன் மூஞ்சி தெரியாதா எனக்கு?, பாதி மூஞ்சிதான் இருக்கு”.

அதியன் பெருமூச்சு விட்டார். ” இந்தா சுண்டல் சாப்பிடு சார்”, என்று நீட்டினான். அப்பறம் அரவிந்தன் வியாபாரம்லாம் எப்டி போது ?” என்று கேட்டுக்கொண்டே அருகில் இருந்த ஒரு கட்டையின் மேல் அமர்ந்தார்.

“அத்த ஏன் சார் கேக்குற, ரெண்டு நாலா லாக்கப்ல இருந்தன். ஈவ் டீசிங் கேஸ போட்டு உள்ள தள்ளிட்டானுங்க, போலீஸ் பாடுங்க.”

“நீ என்ன பன்ன?”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி, இங்கதான் சுண்டல் வித்துட்டு இருந்தன். அப்போ ஒரு பொண்ணு அவ ப்ரண்ட்ஸ் கூட வந்தா. நல்லா சோக்கா டிரஸ் பன்னிட்டு வந்து சுண்டல் வாங்கிட்டு போகசொல கால் தடுக்கி கீழ விழப்பாத்தா.

நான் ‘அய்ய பாத்து போம்மா, கீழ கிழ உளுந்து வாரப்போற’னு சொன்னன். நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்திருக்கணும். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா சார்?”

“என்ன சொன்னா ?”

“மைண்ட் யுவர் பக்கிங் பிசினெஸ் அஸ்ஹோல்னு இங்கிலிஷ்ல திட்டிட்டா”

“நமக்குதான் இங்கிலீஸ்னா புடிக்காதே, கோவம் வந்துருச்சி, அவ சொன்னத அப்படியே தமிழ்ல மாத்தி திட்டிட்டன்”.

“அப்பறம்”

“அவ ஒனு அழ ஆரம்பிச்சிட்டா. அப்பறம் பக்கத்துல இருந்த போலீஸ்காரனுங்க அப்படியே அலேக்கா தூக்கினு போய்ட்டானுங்க. ஸ்டேஷன்ல வச்சி பொளந்துட்டானுங்க சார்.”

அதியன் சிரித்தார்.

“இதென்ன சார் நியாயம். அந்த பொண்ணு சொன்னதைத்தான் நானும் சொன்னன். இங்கிலீஷ்ல சொன்னா மணக்கும். தமிழ்ல சொன்னா நாறுமா?”

அதியன் தொடர்ந்து சிரித்தார். “நீ நாம் தமிழர் கட்சி ஆதரவாளரா?”

“சார் எப்படி சார் கண்டுபுடிச்ச?”

“கண்டெல்லாம் புடிக்கவேணாம். சரி மேல சொல்லு என்று சிரித்தார்”. “வலி தாங்க முடியல. அம்மாதான் ஒத்தடம் வசித்து.”

“சரி விடு. இனிமே இங்கிலீஷ்ல இருந்து ட்ரான்ஸ்லேட் பண்ணாத”. என்று சொல்லிவிட்டு அதியன் சிரித்தார். அதியனுக்கு அவனுடைய கவலையெல்லாம் மறந்து மனம் விட்டு சிரித்தது நன்றாக இருந்தது. மனிஷ மனசு இப்படித்தான…

அவன விட மோசமான இருக்கவன் நிலைய பாத்துதான ஆறுதல் தேடும்.

“இந்த ஆண்டவன் இருக்கானே அகராதிப்புடிச்சவன். எப்படிப் போட்ருக்கான் பாருங்க முடிச்ச”, எங்களக் கடந்து சென்ற ஒரு காதல் ஜோடியைப் பார்த்து அரவிந்தன் பெருமூச்சு விட்டான். “என்ன சார் அநியாயம் இது. மொக்கையா இருக்கான் பையன், நல்லா இருட்டுக்கட அல்வா மாரி இருக்கு அந்தப் பொண்ணு, என்ன கருமம் புடிச்ச காதலோ”.

“உருவப்பொருத்தம் எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் அரவிந்தன். மனசளவுலயும் சிந்தனை அளவுலயும் ஈர்ப்பு இருந்தாதான் கடைசிவரைக்கும் உறவு பிணஞ்சி இருக்கும்”.

“அதெல்லாம் ஒரு மண்ணும் நீடிக்காது, சும்மா புக்ல எழுதரமாரி எங்கிட்ட பேசாத சார்”.

அரவிந்தன் இப்படித்தான். எதார்த்தவாதி. அடிக்கடி ‘அடடே ஆச்சர்யக்குறி’ என்பது போல் வார்த்தைகளைக் கொட்டிவிடுவான். நான் கவனமாகப் பொறுக்கிக்கொள்வேன்.

“கரன்ட்டா மீனம்மா கூட லிவ்-இன்ல இருக்கன் சார். ரெண்டு மாசம்தான் ஆச்சி. மார்க்கெட்ல மீன்கட வச்சிருக்கா. பேரும் மீனு. தொழிலும் மீனு. புஹாஹா….. எப்டி புடிச்சன்னு கேக்கறியா? வல போட்டுப் புடிச்சன் சார்.

புரியலையா? அதான் சார். நெட்ல புடிச்சான் சார்.”

தூண்டிலில் ஒருவன் பெவிகாலைத் தடவி அசால்டாக ஐந்து மீன்களைப் பிடிப்பானே அந்த பழைய காலத்து பெவிகால் விளம்பரம் அனௌன்ஸ்மென்ட் இல்லாமல் அவன் நினைவுக்கு வருவதை அவனால் தடுக்க முடியவில்லை.

“நீ புத்தகத்த படிச்சா அளவுக்கு வாழ்க்கைய படிக்கலைனு நெனைக்கிறன். கவலைப்படாத போகப் போக எல்லாம் சரியாயிடும்”. என்று ஆறுதல் சொன்னான்.

அதியன் நிதானமாக சிரித்தார்.

“என் ஆளுகூட ஸ்மூத்தாதான் போச்சி. ஒரு வாரமா மக்கர் பண்ணுது. எப்படி கழட்டி விடறதுனு யோசிச்சிட்டு இருக்கன்.”

அப்படியே கடையைக் கிடப்பில் போட்டு நடக்க ஆரம்பித்தோம். அரவிந்தன் வலது கையை சுழற்றி காற்றில் பௌலிங் போட்டுக்கொண்டே வந்தான்.

“வந்ததுல இருந்து என்கதையே சொல்லிட்டு இருக்கன். உனக்கு எப்படி சார் போது லைப்?”. அரவிந்தன் கேசுவலாகக் கேட்டான்.

“ஒன்னும் சொல்றதுக்கில்ல அரவிந்தன். நிம்மதி இல்லாத வாழ்க்கை. பேசாம நேத்ரா சொல்றமாரி இந்த எழுத்து பொழப்பெல்லாம் விட்டுட்டு வேற வேல இருந்தா பாக்கலாம்னு இருக்கன். எதா வேல இருந்தா சொல்லு.”

“என்ன சார் எங்க வேலைக்கெல்லாம் கொள்ளி வைக்கலாம்னு பாக்கறியா?, பேனாக்காரங்களாம் சுண்டல், பக்கோடானு விக்கப் போய், பக்கோடா வித்தவன்லாம் பேனா எடுக்க முடிவு பன்னா நம்ம நாட்டோட நெலம எப்டி இருக்கும்னு கொஞ்சம் நெனச்சி பாரு சார். இதனால உலகத்தோட சமநிலையே பாதிக்கப்படும். நீ எழுது சார், எனக்கென்னமோ கடவுள் இப்ப என் நாக்குல வந்து உக்காந்துகிட்டு உனக்கு வழி சொல்லிட்டு இருக்காருன்னு நெனைக்கிறன். நீ நிச்சயம் பெரிய ஆளாத்தான் வருவ பாரு”.

அரவிந்தன், நான் சொன்னதுபோல அடடே ஆச்சர்யக்குறிதான். பேனா எடுத்து எதுகை மோனையெல்லாம் போட்டு ஏதோ பெருசா எழுதிட்டோம்னு மீசையை முறுக்கனா அதைவிட நச்சுனு சுண்டல் சாப்டுட்டே நெத்திப்பொட்டுல அடிக்கிறமாரி சொல்லிடுவான். என்னோட ஈகோவ இரக்கமில்லாம காயப்படுத்துவான்.

இன்னும் தூரம் நடந்தோம். இலக்கில்லாம நடப்பது எவ்வளவு எளிதா இருக்கு.

“ஏன் சார், உலகம் புல்லா குரூட் ஆயில் ரேட் கம்மியாயிடுச்சே, இவனுங்க என்னன்னா பெட்ரோல், டீசல் விலைய ஏத்துறானுங்க. கேக்க ஆளே இல்லல?”.

அதியன் சிரித்தார்.

“ஒரு நியாயமான சர்வாதிகாரி கெடச்சா, இந்த ஜனநாயகவாதிகள் எல்லாரையும் சுட்டுக் கொன்னுடலாம் சார். இவனுங்களாலதான் எல்லா பிரச்னையும். வேடிக்க பாத்தே பழகிட்டானுங்க.”

“அப்படி ஒரு முடிவுக்கு வந்துட முடியாது அரவிந்தன்”. அதியன் மறுத்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறுக்கிட்டார்.

“சார் நீங்க எழுத்தாளர் அதியன்தான? இப் ஐம் நாட் ராங்!”

“ஆமா நீங்க?”

“நான் சுப்ரமணியன் LIC ல மேனேஜரா இருக்கன். உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க நியாயம் இல்ல. ஆனா நான் நெறய முற உங்கள தொலைக்காட்சி விவாதங்கள்ல பாத்திருக்கன்.”

“ஓ அப்படிங்களா!”

அதியன் அவரை சீக்கிரம் கட் செய்யவேண்டும் என்று நினைத்து அவரது பார்வையை தவிர்த்தார்.

“உங்க பிரைவேட் டைம்ல தொல்ல பன்றதா தப்பா நெனைக்க வேண்டாம். உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே.”

அதியன் தயங்கினார். திரும்பி அரவிந்தனைப் பார்த்தார். “ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டன். ஒரு பத்து நிமிஷம்” அவர் கேட்பதை மறுக்க முடியாதபடி மிகவும் மரியாதையுடன் கேட்டார். இருந்தாலும் அதியன் முழுமனதாக ஓகே சொல்லவில்லை.

“சரி சார் நம்ப அப்பறமா பேசலாம்” என்று அரவிந்தன் அந்த இடத்தைவிட்டு கிளம்பினான்.

பெயர் தெரியாத வாசகர்கள் சில நேரங்களில் கண்முன் வந்து தத்தம் ஆதங்கங்களை இறக்கிவைத்து அழுதுவிடுவார்கள். சொந்த கதைகளை சொல்லி மொக்க போடுவார்கள். ஆரம்பகாலகட்டங்களில் அது புது அனுபவமாக இருந்தாலும், போகப்போக அதை அவர் விரும்புவதில்லை.

இருவரும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு சிமெண்ட் பெஞ்சில் உக்கார்ந்தார்கள்.

“உங்களோட ஒரு புத்தகத்த கூட நான் வாசிச்சதில்ல. என் ஆத்துக்காரி உங்களோட தீவிர வாசகி. ஒரு புத்தகத்த விடமாட்டா. வெளிவந்த முதல் நாளே வாங்கிப் படிச்சிடுவா. உங்க எழுத்து மேல அவ்ளோ மரியாதை அவளுக்கு.”

அதுவும் உங்களோட ‘தென்றலே என்னைத் தாலாட்டு’ புத்தகத்த இதுவர பத்து முறையாவது படிச்சிருப்பா.

அதியனுக்கு ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. தனக்கு இப்படி ஒரு வாசகி இருப்பார் என்று அதியன் எதிர்பார்த்திருக்கவில்லை.

“கடவுள பூஜ அறையில பூட்டி வைக்கிற மாதிரி என் ஆத்துகாரிய வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சிட்டேன். நேத்து இல்ல இன்னிக்கு இல்ல. முப்பது வருஷமா” என்று சொல்லி முடிக்கும்போதே அவர் குரல் தழுதழுத்தது. அந்த காலத்து

BA லிட்டரேச்சர் அவ. எங்க ஊர்லயே அவளப்போல இங்கிலிஷ் பேச ஆள் இல்ல தெரியுமா சார். எனக்கு சர்க்கார் உத்யோகம் கிடைச்சதும் மத்தவா பேச்சையெல்லாம் கேட்டுண்டு அவ வேலைக்கு போகாம தடுத்திட்டன். பட் ஷி நெவெர் கம்பளைண்ட் ஆன் தட். நாட் ஈவென் ஒன்ஸ்.” என்னையும் பசங்களையும் மட்டுமே உலகமா நெனச்சி வாழ்ந்துட்டா. என் வாழ்க்கையில அவளுக்காக நான் எதுமே பண்ணதில்ல சார், புள்ள கொடுத்ததை தவர.” என்று சொல்லி முடிக்கும்போது கன்னத்தில் விழுந்த கண்ணீரை அவர் துடைத்துக்கொண்டார்.

“அவளுக்கு டிபி அட்வான்ஸ்ட் ஸ்டேஜ், இன்னும் ஒரு வாரம்தான் மாக்ஸிமும் உயிரோட இருப்பான்னு டாக்டர் சொல்லிட்டார். உங்க அனுதாபத்தை சம்பாதிக்கறதுக்காக இத நான் சொல்லல.” அதியன் என்ன சொல்வதென்று தெரியாதவராய் விழித்துக்கொண்டிருந்தார்.

“நாளைக்கு அவளோட பிறந்தநாள். கடைசி பிறந்தநாள். நீங்க ஒரு பத்து நிமிஷம் வீட்டுக்கு வந்து அவள சந்திச்சிங்கன்னா அவ ரொம்ப சந்தோஷப்படுவா.” கைக்குட்டையை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டார்.

“ஒரு கையாலாகாத கணவன் தன் மனைவிக்கு செய்யற கடைசி கைமாறா இதை நான் நெனைக்கிறன். வர முடியுமா சார்” என்று அதியனின் கையைப்பிடித்து கலங்கினார் சுப்பிரமணியன்.

“ஐயோ சார் என்ன சார். பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு, மொதல்ல வாங்க நீங்க வீட்டுக்கு போலாம்” என்று அதியன் சுப்பிரமணியன் வீட்டிற்கு கிளம்பத்தயாரானார். இருவரும் அங்கிருந்து கிளம்பினர். அதியன் வீட்டிற்கு சில வாசகர்கள் அதுவரை வந்திருந்தாலும் அதியன் அவருடைய வாசகர் வீட்டிற்கு சென்றதில்லை. அதுவே முதன்முறை.

“உள்ள வாங்க அதியன் சார். இதுதான் எங்க வீடு.” அதியன் வீட்டிற்குள் நுழையும்போது வீட்டை நோட்டமிட்டபடி நடந்தார். சுப்புவின் வீடு பழைய அக்ரஹாரம் டைப். ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவரை வீடு நீண்டிருந்தது. வீட்டிற்கு நடுவே ஓபன் ஸ்பைஸ் விட்டு கட்டி இருந்தார்கள். நடுவில் பூச்செடி மற்றும் துளசி மாடம் இருந்தது. இரும்புக்கம்பிகள் வரிசையாக அடுக்கியபடி ரூப்டாப் வைத்திருந்தார்கள். வெயிலானாலும் மழையானாலும் வீட்டில் இலகுவாக புகுந்து கொள்ள முடியும்.

“செத்த இருங்கோ நான் உள்ள போய் அவகிட்ட நீங்க வந்திருக்கறதா சொல்லிட்டு வந்துடுறேன். இன்ப அதிர்ச்சியெல்லாம் அவ தாங்கற நெலையில இல்ல.” என்று சொல்லிட்டு பூரிப்புடன் உள்ளே சென்றார்.

அதியன் ஹாலில் நின்றுகொண்டு சுற்றும்முற்றும் பார்த்தார். சுப்பிரமணியனின் குடும்பப் புகைப்படத்தை பெரியதாக பிரேம் செய்து மாட்டி இருந்தனர்.

“மாலினி யார் வந்திருக்கா தெரியுமோ?, நீ அவர பாத்த ரொம்ப ஹாப்பி ஆயிடுவ.” சுப்பு ரொம்ப எஸ்சைட்டடா இருந்தார்.

“யாருண்ணா வந்திருக்கா, சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்கோளேன்.”

“நீ தெனமும் வாசிச்சிண்டிருக்கியோன்னோ கதப்புத்தகம், அத எழுதனவர் வந்திருக்கார். உன்ன பாக்க நம்ம ஆத்துக்கு வந்திருக்கார்.”

“அதியன் சாரா வந்துருக்கா, பொய் சொல்லாதீங்கோன்னா?” மாலினி சந்தேகத்துடன் நம்பமுடியாமல் கேட்டாள்.

“பொய் சொல்லலடி, செத்த இரு அழைச்சிண்டு வரன்.”

“சார் மாலினிக்கு அவளோட நோயின் தீவிரம் தெரியாது. இன்பாக்ட் அவ சீக்கிரம் குணமாயிடுவானு அவகிட்ட சொல்லிருக்கன். நீங்களும் அப்படியே …..”. அதியன் மெல்ல தலையசைத்தார்.

மாலினிக்கு ஒரு இனம் புரியாத உணர்வு உடலெங்கும் பரவி குறுகுறுப்பைத் தந்தது. தன் வாழ்வின் வெற்றிடங்களை எழுத்துக்களால் நிரப்பிய ஒருவர் தன்னைக்காண வந்திருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. அருகில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். கலைந்திருந்த தன் தலைமுடியை சரி செய்து கொண்டாள். அதியன் எழுதிய ‘தென்றலே என்னைத் தாலாட்டு’ நாவலின் செந்தூரன் என்ற கதாப்பாத்திரத்தோடு அவள் காதல் வயப்பட்டிருந்தாள். இதை ஒருபோதும் சுப்ரமணியனிடம் அவளால் சொல்ல முடிந்ததே இல்லை. அது தன் கணவனுக்கு செய்கின்ற துரோகம் என்றுகூட குற்ற உணர்ச்சியில் கலங்கியதுண்டு. இது வரை ஒரு நூறுமுறை அந்த புத்தகத்தைப் படித்திருப்பாள். கிறங்கியிருப்பாள். கலங்கியிருப்பாள். ஒரு வேளை எப்போதாவது அதியனை நேரில் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் என்ன பேசலாம் என்ன கேட்கலாம் என்று ஒரு பெரிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது பதட்டத்தில் எதுவுமே அவள் நினைவுக்கு எட்டவில்லை.

அவர்கள் அறையை நோக்கி நடந்து வரும் சத்தம் அவளால் கேட்க முடிந்தது. அவளது இதயத்துடிப்பு கணக்கில்லாமல் எகிறிக்கொண்டே இருந்தது. அவள் முடிந்தளவு இயல்பாகப் புன்னகைக்க முயன்று தோற்றுப்போனாள். முகமெல்லாம் பல்.

மாலினி எழும்ப முயற்சித்தாள். “வேணாம் ப்ளீஸ் படுங்க! உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்”, அதியன் உரையாடலை ஆரம்பித்தார்.

“நீங்க பேசிண்டு இருங்கோ, நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரன்”, என்று சொல்லி சுப்பு அந்த ரூமை விட்டு வெளியேறினார்.

“ஆத்துக்காரர் திடீர்னு வந்து நீங்க வெளியேதான் இருக்கீங்கன்னு சொன்னதும் நேக்கு கையும் ஓடல காலும் ஓடல”. அதியன் புன்னகைத்தார்.

“ஐ மீன் ஒரு மூணு மாசமா கைகால் ஓடல இப்ப உங்கள பாத்ததும் மறுபடியும் ……” என்று மாலினி இழுத்தாள். அதியன் மறுபடியும் புன்னகைத்தார். “ச்ச.. ஒளரன் இல்ல?”

“நோ நோ … உங்கள பத்தி சுப்பிரமணியன் சார் நெறய சொன்னாரு. யாருடா அது நமக்கு இப்படி ஒரு வாசகியானு உங்கள பாக்க வந்துட்டன்.”

மாலினி புன்னகைத்தாள். இம்முறை சற்று கம்பர்ட்டபலாக.

அதியன் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த ராக்கை பார்த்தார். “வீட்லயே ஒரு மினி லைப்ரரி வச்சிருக்கிங்களே?”.

“ஆமா, எனக்கு இருக்க ஒரே பொழுதுபோக்கு அதான்”.

சுப்பு இருவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு “யூ போத் கேரி ஆன்” என்று சொல்லி வெளியே வந்து ஈசேரில் தூரலை ரசித்தபடி சூடான காபியோடு அமர்ந்துகொண்டார். அந்த நாள் அப்படி முடிவடைவது அவருக்கு நெகிழ்வாக இருந்தது.

“உங்களுடைய எல்லா புத்தகங்களையும் வாங்கி வச்சிருக்கன். குறிப்பா உங்க முதல் நாவல் ‘காத்திருக்கிறேன்’ படிச்சிட்டு ரெண்டு நாலா தூக்கம் வரல. அப்போ நான் காலேஜ் பைனல் இயர் படிச்சிட்டு இருந்தன். ஒரு சின்னப்பொண்ணு மனசு அதபடிச்சிட்டு என்னப்பாடு பட்டிருக்கும்னு நெனச்சிப் பாருங்க. இப்ப படிச்சாலும் உருகிடுவன்” என்று மாலினி முடித்தபோது அவள் கண்கள் கலங்கி இருந்தன.

அதியனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் நேத்ராவை முதன்முதலாக சந்தித்தபோது அவள் சொன்ன அதே வார்த்தைகள். ஒருவேள நேத்ராவைத் திருமணம் செய்யாமல் காதலித்துக்கொண்டே இருந்திருந்தால்

அவளும் என்னைத் தொடர்ந்து ரசித்துக்கொண்டே இருந்திருப்பாள் போலும். ச்ச… திருமணம் எவ்வளவு பெரிய வன்முறை. என்று நினைத்துக்கொண்டிருந்தபோது மாலினியின் குறுக்கீடு அதியனை நிகழ்காலத்துக்கு கூட்டிவந்து.

“என்ன யோசனை”, மாலினி ஆர்வத்துடன் கேட்டாள். “ஒண்ணுமில்ல, உங்கள நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு, இன்னும் நிறைய எழுதணும்னு தோணுது”.

“ஒவ்வொரு புத்தகத்த படிச்சி முடிச்சதும் உங்களுக்கு கடிதம் எழுதுவன். நீங்க அனுப்பின பதில் கடிதங்கள கூட இன்னும் பத்திரமா வச்சிருக்கன்.” அதியன் புன்னகைத்தார். “உங்கள சந்திக்க விரும்பறதா கடிதத்துல சொல்லி இருந்தேன், அதுக்கப்புறம் நீங்க பதில் அனுப்பறத நிறுத்திட்டிங்க” மாலினி சிரித்தாள். “இல்ல அந்த சமயம் என் வாழ்க்கையில புதுப்புது மாற்றங்கள். அப்பறம் வீடு வேற திருவான்மியூருக்கு மாத்திட்டு வந்துட்டேன். என்னோட புது முகவரி யாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பில்லை. மற்றபடி உங்களப்போல வாசகர்களோட அன்புதான் என்ன இன்னும் எழுத வச்சிட்டு இருக்கு. ”

“ஈமெயில் கூட அனுப்பினேன்” என்று சொல்லி மாலினி மீண்டும் சிரித்தாள்.

“மன்னிக்கணும், நான் ஈமெயில் அடிக்கடி செக் செய்வதில்ல.” என்று சொல்லி அசடு வழிந்தார் அதியன்.

“இட்ஸ் ஓகே சார், பரவால்ல.” என்று சிரித்தாள்.

ஒரு சில நிமிட அமைதிக்குப்பின் மீண்டும் பேச ஆரம்பித்தாள் மாலினி. “அவ்ளோதான் இல்ல சார் வாழ்க்க. சீக்கிரம் முடியப்போது. இன்னும் ரெண்டு நாளோ மூணு நாளோ.” ஒன்றும் புரியாதவனாய் அதியன் திரும்பிப் பார்த்தார். சுப்பிரமணி ஈசேரில் உக்கார்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

“எனக்கு எல்லாம் தெரியும் சார். நான் ரிப்போர்ட் பாத்துட்டன். அட்வான்ஸ்ட் ஸ்டேஜ். என் சுப்புவுக்கு எதையுமே மறைக்க தெரியாது. இப்படித்தான் மாட்டிக்குவார்” என்று சிரித்துக்கொண்டே அழுதாள் மாலினி.

“இன்னும் நிறைய வாழனும் போல இருக்கு சார்”, தன் முந்தானையை எடுத்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் மாலினி.

“என் வாழ்க்கையில உங்களோட எழுத்துக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல” மாலினியின் பேச்சு அதியனுக்கு சற்று எமோஷனலாக இருந்தது.

மீண்டும் அந்த அறையில் அமைதி நிலவியது.

“உங்க கணவர் உங்கள ரொம்ப நேசிக்கிறார். பாக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.” அமைதியைக் கலைத்தார் அதியன்.

“தெரியும்.” சிரிப்பும் அழுகையும் மாரி மாரி வந்தது மாலினிக்கு.

“மன்னிக்கணும், நாங்க தேவையில்லாம உங்களுக்கு சங்கடத்த கொடுத்துட்டோம்.”

“அப்படியெல்லாம் இல்ல, நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்”, அதியன் இயல்பாக இருப்பதற்கு முயற்சி செய்தார்.

“நன்றியெல்லாம் வேண்டாம், ஆட்டோகிராப் ப்ளீஸ்!” என்று குழந்தை உள்ளம் கொண்டு அதியன் எழுதிய புத்தகத்தை நீட்டி சிரித்தாள் மாலினி.

அன்புடன் ,

அதியன்.

இருவரும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பின், “அப்ப நான் கெளம்பரன், அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி” என்று விடைபெற்றுக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேற எத்தனித்தார்.

நாளை பிறந்தநாள் என்பதை அக்கணம் வரை மாலினி உணரவில்லை.

“ஒரு நிமிஷம்”

அதியன் திரும்பினார்.

“உங்க நாவல்ல வர செந்தூரன் கதாபாத்திரத்தோட கத உங்களோட நிஜவாழ்க்கைதான?”

“ஆமா” சின்னதாய் சிரித்துவிட்டு அந்த ரூமை விட்டு வெளியேறினார் அதியன்.

“உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது வாழ்க்க மேல ஒரு பிடிப்பு வருது சுப்பிரமணியன் சார். அதுவும் இந்த ஸ்டேஜ்ல எனக்கு அது ரொம்ப தேவ” அதியன் தோழமையுடன் சுப்பிரமணியனின் கைகளைப் பற்றிக்கொண்டார்.

“நான் அழச்சதும் சிரமம் பாக்காம வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.” சுப்பு கலங்கினார்.

“நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்”, அதியன் அங்கிருந்து விடைபெற்றார்.

அங்கிருந்து கடற்கரைக்கு நடந்து சென்றார் அதியன். வழியெங்கும் எண்ண ஓட்டங்கள். தெருவின் முனையில் ஏதோ ஒரு அம்மா குழந்தையின் அழுகையை பாட்டுப்பாடி சரிசெய்து கொண்டிருந்தாள்.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த கணவன் குளித்துக்கொண்டிருக்கையில், மனைவியுடன் சட்டியில் கொதித்துக்கொண்டிருக்கும் மீன்குழம்பு தயார் நிலையில் தெருமுழுக்க வாசம் வீசிக்கொண்டிருந்தது.

“உலகத்தில் எதுவும் தனிச்சி இல்லையே, குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல” கவிஞர் பழனி பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.

நாம் இந்த பிரபஞ்சத்தின் சிறு மூலக்கூறு. நாம் என்னவாக இருக்கிறோமோ, அப்படித்தான் இந்த பிரபஞ்சமும் நமக்கு தெரிகிறது. இல்லையா?

உதாரணமாக கோவிலில் இருக்கும் ஆடையணியாத ஒரு சிற்பம், குழந்தைக்கு ஒரு பார்வையும், கலைஞனுக்கு ஒரு பார்வையும், காமுகனுக்கு ஒரு பார்வையும் கொடுத்துவிடுகிறது. இல்லையா?

அதியன் சுப்புவின் வீட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் தூரத்தில் ஞானியாக முயற்சித்துக்கொண்டிருந்தார். கடற்கரையில் தன்னுடைய பைக் தனியாக நின்று கொண்டிருந்தது.

தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் அதியன் .

“அதி எங்க போய் இருந்த?, சாப்டியா இல்லையா?” நேத்ராவின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் ரூமிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்.

அன்று இரவு முழுவதும் அதியனின் அறையிலிருந்து டியூப்லைட் வெளிச்சம் கதவின் ஊடே கசிந்துகொண்டே இருந்தது.

காலை ஆறு மணி, பக்கத்து வீட்டில் சுப்ரபாதம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

“டேய் துருவ், ஸ்கூலுக்கு டைம் ஆச்சி எந்திரி, செல்லம்ல போ பாத்ரூம் போய் பல் வௌக்கு. அம்மா பால் கொண்டு வரன். ஸ்கூல் பஸ் வந்துடும் சீக்கிரம் போடா!”

நேத்ரா அதியனின் அறையை ஒருமுறை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அதியன் தன் கம்ப்யூட்டரில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தார்.

“ஹலோ சார், என்ன இன்னும் கோவம் போகலையா? ம்ம் ??”

அதியன் அமைதியாக இருந்தார்.

” ஓகே ஐம் சாரி பார் தி லாஸ்ட் நைட். நான் அப்டி பேசி இருக்கக்கூடாது.”

“இட்ஸ் ஓகே, ஐ டிசர்வ் இட்” என்று கண்ணடித்தார்.

“ஹப்பா சிரிச்சிட்டான்” என்று கன்னத்தைக் கிள்ளினாள்.

“பன்னெண்டாவது சிறுகதை எழுதி முடிச்சிட்டன். தலைப்புதான் சிக்க மாட்டுது.”

“இந்தா காபி குடிச்சிட்டே யோசி, கெடச்சிடும். எனக்கு கிச்சன்ல வேல இருக்கு.”

மானிடரை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த அதியன் காப்பி மஃகை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பால்கனியில் அந்த காலைவேளையில் சூரியனின் கதிரொளி குளிருக்கு இதமாக இருந்தது. சூடான காபியை ரசித்துக் குடித்தபின்

காப்பி மஃகை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்றார்.

நேத்ரா குளித்து முடித்து ஈரமான முடியுடன் வானலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தாள். அவள் ஈர முடியிலிருந்து ஒருதுளி உருண்டோடி ஒருகணம் முதுகில் பூத்து நின்றது. அதியனின் பார்வைபட அந்தத்துளி அவள் ஆடைக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. அதியன் மெல்ல அருகே சென்று அவள் இடையைப் பற்றி பின்னிருந்து அணைத்துக்கொண்டார். அது கிட்டத்தட்ட அவள் மறந்துவிட்ட ஒரு தடுமாற்றமாக இருந்தது. இருந்தும் இன்னும் தாமதிக்காமல் நிகழ்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

அதியன் அவள் இடையைப் பற்றி அவளைக் கிச்சன் மேடையில் கிடத்தினார்.

“டேய் எண்ணெய் காயுதுடா”

“நானும்தான்” என்று நேத்ராவின் உதடுகளை மெல்ல முத்தமிடத் தொடங்கினார்.

“என்ன திடீர்னு சாருக்கு ரொமான்ஸ் மூடெல்லாம்… ம்ம்?, கத எழுத தேவைப்படுதா?” என்று கூறி சிரித்தாள்.

செல்லமாக மெல்லமாக நேத்ராவின் தலையில் ஒரு கூட்டு வைத்தார் அதியன்.

“ஆ வலிக்கிதுடா எரும”

“என்ன பாத்தா எப்படி தெரியுது?”

“ம்ம் ..? வேலைக்காவத ஹஸ்பன்டு மாரி” என்று கூறி கிண்டலாக சிரித்தாள்.

“அடிங்க .. கொழுப்புடி உனக்கு…”

“என்னடா காலைலயிலே ஸ்டார்ட் பன்னி விட்டுட்ட… லீவு போடவா ?” என்று கண்ணடித்தாள் நேத்ரா.

“இப்படி நம்ப பேசி எத்தன நாள் ஆவுது” என்று கசந்துகொண்டு அதியனின் தலையைச் செல்லமாக முட்டினாள்.

“என் தலையாதான் யாரும் முட்ட மாற்றாங்க” இருவரையும் பார்த்த துருவ் ஸ்கூல் யூனிபார்முடன் கிச்சன் கதவில் லேசாக முட்டிவிட்டு குடுகுடுவென வெளியே ஓடினான்.

“ஐயோ…. பையன் வளந்துட்டான்ல” என்று இருவரும் அசடு வழிந்தபடி தலையில் கைவைத்துக்கொண்டார்கள். சிரித்தார்கள்.

“உனக்கு என்ன வேணும், கேளுடி”

“என்ன கேட்டாலும் தருவியா?”

“காசெல்லாம் கேக்காத இப்ப என்கிட்ட இல்ல” அதியன் சிரிக்க முயன்றான்.

“அடச்சீ,… இங்க வா” என்று சட்டயைப் பிடித்து அருகே இழுத்தாள்.

மெல்ல அதியனின் காதருகே சென்றாள். அவளின் சூடான மூச்சுக்காற்றை இப்போது அதியன் உணர்ந்தார்.

“எனக்கு பாத்திரம் வெளக்கித் தரியா?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராதவனாய், ஏமாற்றத்துடன் ஒரு கொஞ்சல் பார்வையை வீசிவிட்டு, கிச்சனிலிருந்து நைசாக வெளியேறினார் அதியன்.

“டேய் எங்க எஸ்கேப் ஆகுற வாடா இங்க ?”

“இந்த கவித எழுதறவன் கத எழுதறவனெல்லாம் நம்பவே கூடாது சுத்த ப்ராட் பசங்க”, என்று முணுமுணுத்துக்கொண்டே சின்னதாய் வெட்கிபுன்னகைத்தாள் நேத்ரா.

“அம்மா பசிக்கிது”

“இதோ வந்துட்டன்டா கண்ணா”

அறைக்குள் சென்ற அதியன் கம்ப்யூட்டரை ஆன் செய்து தான் எழுதி முடித்த கதைக்குத் தலைப்பிட்டார்.

“முடிச்சி”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *