முகாமில் இருப்பவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,810 
 

கைத்தொலைபேசி தலைமாட்டில் கிணுகிணுத்தது.

வலதுகையை போர்வைக்குள்ளால் வெளியேவிட்டு அதைஎடுத்து அழுத்தி, யாரென்று பார்க்காமலேயே காதில்பொருத்தினான் வேந்தன்.

“என்னடா நித்திரையே…குழப்பிட்டன்போல……”

“இல்லதனுக்கா…அப்போத முழிச்சிட்டன்….எழும்பித்தான் என்ன செய்யிறதெண்டுபோட்டு சும்மா படுத்திருக்கிறன்…..சொல்லுங்கோ……”

“உப்பிடியே படுத்து படுத்து கிடந்து என்ன செய்யப்போறாய்?…அம்மாவோடை கதைச்சனியே…..”

“இல்ல….”

“ம்…அதுகள் உன்னை இஞ்ச அனுப்பிப்போட்டு…அங்கை என்னபாடுபடுங்கள்…ஒருக்கா ரெலிபோன் எடுத்துகதைச்சால் என்னடா?….”

“இஞ்சயிருந்து கதைக்க கனக்ககாசு வெட்டுமக்கா….அவைக்கு என்ரநிலைமை விளங்காது..போன் எடுத்தால் வையாயினம்…”

“அதுக்காக கதைக்காமல் இருக்கிறதே…அதுசரி காலமை என்ன சாப்பாடு….”

“இன்னமும் கட்டிலைவிட்டு எழும்பேல்லை…பிறகு என்ன சாப்பாடு எண்டு கேக்கிறியள்?……”

“ நீ இப்ப எழும்பிக்குளிச்சிட்டு இஞ்ச வா….வந்து நிண்டு வடிவாச் சாப்பிட்டுவிட்டு…அம்மாஆக்களோடையும் ஸ்கைப்பிலை கதைச்சுப்போட்டு இரவு உங்கை போகலாம்…சரியே…..”

“இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை….பெடியளோடை வெளியபோகலாம்….”

“இஞ்சவா…உங்கை ஆரெண்டு தெரியாதவையோடையெல்லாம் சேர்ந்து திரியாதை… ஊருலகமெல்லாம் இப்ப வேறமாதிரிகிடக்கு…சிரிக்கிறவனையும் நம்பமுடியேல்லை….அழுறவனையும் நம்பமுடியேல்லை…. கொண்ணனுக்கு நடந்தது தெரியும்தானே….பிறகு உனக்கும் ஒண்டெண்டால் கொம்மா மனுசி செத்துப்போயிடும்….”

“ம்….”

“என்ன ம் எண்ணுறாய்….வெளிக்கிட்டு வா…நேரை கதைப்பம்…..”

தனுஅக்கா அழைப்பை துண்டித்துவிட்டா. அவனுக்கு காணாமல்போன அண்ணனின் நினைவு வந்தது. அண்ணன்தான் மூத்தவன். அதன்பிறகு மூத்தக்கா, சின்னக்கா பிறகு இவனும் தங்கச்சியும்…

அண்ணன் ஆனந்தன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, விடுதலையில் நாட்டங்கொண்டு அதற்காக பாடுபட்டவன். அவனுடைய பணி குறிப்பிட்டுச்சொல்லுமளவுக்கு பல வெற்றிகளை கொடுத்ததை பின்னர் தெரிந்துகொண்டார்கள். போரெல்லாம் ஓய்ந்து இரண்டு வருடங்களிற்கு பிறகு… சாதாரண உடையில் வந்தவர்கள் அண்ணனை கூட்டிக்;கொண்டு போனார்கள்.

அம்மா அடித்துப்பிடித்து அழுதபோதும் அவர்கள் இரங்கவில்லை. நாகரிகமாக தாங்கள் விசாரித்துவிட்டு காலையில் விடுவதாக அவர்கள் சொல்லிப்போனார்கள். ஆனாலும் இன்று வரை அவன் எங்கே என்றோ அவனுக்கு என்னநடந்தது என்றோ தெரியாது.

இவனும் சில வருடங்கள் அண்ணன் போலவே பயணித்திருக்கின்றான்.. இறுதியில் அனைத்தையும் கடந்து எல்லாம் அமைதியடைய.. அம்மா, அக்காக்களுடன் இணைந்து வீட்டுக்கு வந்தான்.

அண்ணன் காணாமற்போன அச்சம் இவனை வீட்டில்வைத்திருக்க அம்மா விரும்பவில்லை. இவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக அம்மா பட்ட கஸ்டம் சொல்லிமாளாது.

தங்கச்சி கலியாணவயதில் இருந்தபோதும், அதைவிட இவனின் பாதுகாப்பு முக்கியம் என நினைத்து, அனைத்து வலிகளையும் மறைத்துக்கொண்டு,
“என்ர ராசா…எங்கையெண்டாலும் உசிரோடை இருந்தாக்காணும்…” என்று அவனின் கன்னங்களை தடவி அம்மா அனுப்பிவைத்ததை நினைக்க கண்கள் கலங்கியது.

போர்வையை உதறி எழுந்தான்.

குளியலறையில் நுழைந்து தலைமுழுகி…ஷேவ் செய்து உடைமாட்டினான்..

“டேய்..எங்கையடா வெளிக்கிட்டிட்டாய்…”

“அக்கா போன்பண்ணினவவடா….போறன்….இரவுக்கு வந்திடுவன்….”

“ போ…வரேக்குள்ளை நல்ல றைச்சிக்கறியோடை புட்டு கட்டிக்கொண்டுவா… கறியை பிறம்பாக்கட்டு… இரண்டு நாளைக்கு காணக்கூடியதா கட்டிக்கொண்டு வா..என்ன?…”

வெளியே வந்தான். வெய்யில் சுள்ளென்று முகத்தில் அடித்தது….

வேற்றுநாட்டு சிறுவர்கள் இருவர் முன்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவனுக்கு மூத்தக்காவின் குழந்தைகளை பார்ப்பதுபோலிருந்தது.
தெருவுக்கு வந்தான். ரயில் நிலையம் போவதற்கு பஸ்பிடிக்கவேண்டும். ஊர்மாதிரி இல்லை. சொல்லப்பட்ட நேரத்துக்கு இங்கு பஸ் வந்துவிடும். கைத்தொலைபேசியை அழுத்தி நேரம் பார்த்தான். இன்னமும் ஆறுநிமிடங்கள் இருந்தன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தெருவில் சனநடமாட்டம் குறைவாக இருந்தது. பார்வையிற்றட்ட ஒருசிலரும் தாமும் தம்பாடுமாய் போய்க்கொண்டிருந்தனர்.

மெதுவாக நடந்து பஸ்தரிப்பிடத்துக்கு வந்தான்.

வேற்றுநாட்டு பெண்ஒருத்தி குழந்தையைவண்டிலில் வைத்துக்கொண்டு நின்றாள். இவனைக் கண்டதும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னாள். இவனும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, நின்றான்.

இன்னுமொரு நடுத்தரவயதுடைய பெண் சிறுவன் ஒருவனுடன் பஸ்ஸ{க்கு வந்தார். நெற்றியில் சிவப்புநிற ஒட்டுப்பொட்டிருந்தது. அதனால் இவன் அவவைபார்த்து தமிழில் வணக்கம் என்றான்.

அந்தப்பெண் விறைப்பாக வணக்கம் என்றுவிட்டு தலையை திருப்பிக்கொண்டு நின்றார்.

“ இஞ்சயுள்ள சில தமிழாக்கள் எங்களைக்கண்டால் ஏதோ அட்டையை பாத்தமாதிரி நினைக்கினம்…..சிலபேர் தூரத்திலை கண்டவுடனை தெரியாதமாதிரி போயிடுவினம்……” என்று சுஜந்தன் சொன்னது நினைவில் வந்தது.

பஸ்வந்தது. குழந்தைவண்டிலுடன் நின்றபெண் ஏறியபிறகு அவன் ஏறி தனிஇருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

இருபது நிமிடத்தில் ரயில்நிலையம் வந்தான். ரயிலுக்கு இன்னமும் ஐந்துநிமிடங்கள் இருந்தன. ரிக்கற் மெஷினில் காசுபோட்டு ரிக்கற் எடுத்தான்.
ரயில்நிலைய கடையில் பொருட்கள் விலை அதிகம் என்பதால் தனுஅக்காவின் பிள்ளைகளுக்கு ஒன்றும் வேண்டாமலே ரயிலில் ஏறினான். தனுஅக்காவின் இரண்டு பிள்ளைகளுமே இந்தநாட்டில் பிறந்தவர்கள். அத்தான் மருத்துவமனை ஒன்றின்; சமையலறையில் வேலைசெய்கிறார். நல்ல சம்பளம் என கேள்விப்பட்டிருக்கிறான்.

அக்காவும் அலுவலகம் ஒன்றில் பகுதிநேர துப்புரவுத்தொழிலுக்கு போவா. ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் விடுமுறை.

ரயிலில் ஒவ்வொரு நிறுத்துமிடங்களையும் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். வந்த புதிதில் இந்த நாட்டின் மொழி தெரியாமல் மிகுந்த கஸ்டப்பட்டதை நினைத்துக்கொண்டான்.

வந்து ஒருசில மாதங்களில் மொழிவகுப்புக்கு போனான். முதல்வகுப்பு கசந்தது.

“ இந்த மொழியை என்னெண்டு படிக்கிறது………..? ” என கவலைப்பட்டான். ஆனால் போகப்போக ஓரளவு புரிந்தது.
இறங்குமிடம் வந்தது. பஸ்சில் போனால் பத்து நிமிடத்தில் போகும் தூரம். ஆதனால் நடந்து செல்லதொடங்கினான். வுழியில் எல்லாமே தெரியாத முகங்கள். ஆனால் காணும் ஒவ்வொருதரும் வணக்கம் சொல்லி சென்றனர்…
கைத்தொலைபேசி ஒலித்தது. அறையிலிருக்கும் நண்பனின் அழைப்பு.

“ஹலோ………என்னடா…”

“ டேய்….நீயில்லாம பொழுதுபோகுதில்லையடா…..இரவுமட்டும் நிக்காமல் கெதியாவா……….”

“ஓமடா….ரவலை விரிக்க மறந்திட்டன்போல…எடுத்துவிரிச்சுவிடு காயட்டும்…என்ன?’’

“ஓமோம்…கெதியாவாடா….”

அறையில் அவனோடு இருப்பவன் ஜெசி.

ஜெசி இவனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் இங்குவந்தவன். முன்னர் வேறுநாட்டுக்காரருடன் அறையில் இருந்தான். இவன் வந்தபின்னர் இவனை ஜெசியுடன் சேர்த்துவிட்டார்கள்.

ஜெசிக்கு இங்குயாரும் இல்லை. அண்ணன்மார் இருவர் ஜேர்மனியில் இருந்தார்கள். ஜெசி இவனுடன் நல்ல நெருக்கமான நண்பனாகிவிட்டான்.
தனுஅக்காவின் வீடு வந்ததும் அவன் அழைப்பு மணியை அடித்தான். பிள்ளைகள் தான் முதலில் ஓடிவந்தார்கள்…அவர்கள் இவன் வந்தால் மிகவும் சந்தோசப்படுவாரகள்..

மற்றவேளைகளில் அக்கா தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கமாட்டா. இவன்வந்தால் சுதந்திரமாக அவர்கள் தொலைக்காட்சியை போடுவார்கள். அக்காகேட்டால்,

“அது வேந்தன்மாமாதான் போட்டவர்….” என்பார்கள்.

“ வேந்தன் இந்தா ரீ….றொட்டி இருக்கு சாப்பிடுறியோ?……”

“வேண்டாம்…..”

 

“ஏன்ரா இப்பவே சாப்பிடாம மிச்சம் பிடிக்க தொடங்கீட்டியோ?…………”

அவன் எதுவும் சொல்லாமல் அக்கா நீட்டிய தேநீரை வாங்கி குடித்தான்.

“ டேய்…தேத்தண்ணியை குடிச்சிட்டு கோழி எடுத்துவைச்சிருக்கிறன்…ஒருக்கா வெட்டிவிடு…நான் இதுகளின்ர உடுப்புகளை ஒருக்கா மடிக்கப்போறன்….”

அக்கா அறைக்குள் நுழைந்தாள்.

தேனீர் குடித்து முடிந்ததும் அவன் கோழியை வெட்டதொடங்கினான். ஊரில் அவன் சமையலறைப்பக்கம் போனதே கிடையாது. அக்காமார் தான் எல்லாம். இங்கு வந்தபிறகு சமைக்கவும் கற்றுவிட்டான்.

இளகிய கோழி என்பதால் விரைவாக வெட்ட முடிந்தது. வந்து தொலைக்காட்சி முன் அமர்ந்தான்.

“வேந்தன் கோழி வெட்டியாச்சே…….”

“ஓம்….”

“குறைநினைக்காதையடா….கனநாளா வீடு மொப்பண்ணேல்லை……ஒருக்கால் பூவர்(மிஷின்) பிடிச்சு மொப்பண்ணிவிடு……………”
அவனுக்கு முகாமிலும் வாரத்தில் இரண்டுநாட்கள் துப்பரவுப்பணி போடுவார்கள். அதனால் அதனையும் பழகியிருந்தான்.
தூசி எடுக்கும் இயந்திரத்தை எடுத்துவந்து வீடு முழுவதையும் துப்பரவு செய்தான். அக்கா யரோசினேகிதியுடன் கைத்தொலைபேசியில் கதைத்தபடியும் சிரித்தபடியும் பிள்ளைகளின் உடுப்புகளை மடித்துக்கொண்டிருந்தாள்.
வீடு துப்பரவாக்கி முடிந்ததும் மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தான்.

“ வேந்தன்….உதுகளை ஒருக்கால் முழுகவாத்துவிடன்ரா…..அத்தான் யாரையோ சந்திக்கவெண்டு போட்டார்..எப்ப வாறாரோ தெரியாது…..”

“மாமா….இந்தப்படம் முடிஞ்சாப்பிறகு குளிப்பம்மாமா….”

“ஆரது…..ரீவீயை நிப்பாட்டு வேந்தன்….எப்பபாத்தாலும் ரீவீ இல்லாட்டி ஐபாட்….படிக்கிற யோசினை இல்லை………..”
அக்கா உச்சஸ்தாயியில் கத்தினாள். குழந்தைகள் மிரண்டு தொலைகாட்சிப்பெட்டியை அணைத்துவிட்டு ஆளுக்கொரு துவாயுடன் குளிக்க ஆயத்தமாயினர்.

முதலில் சின்னவனை வேந்தன் கூட்டிப்போய் முழுகவைத்தான். தண்ணீரை வாயால் ஊதியபடியும்….குளிக்கும் கிறீமை தேய்த்து விளையாடியபடியும் குளித்து முடித்தான் சின்னவன்.

மூத்தவன் பிரசாந்த் அடம்பிடித்தபடியே அக்காவின் வசைகளுடன் குளிக்க வந்தான்.

“உதுகளோட கத்திக் கத்தியே எனக்கு தொண்டை நோகுது….நான் சமைக்கப்போறன்…ரண்டுபேரும் வேந்தன்மாமாட்டை கேட்டு தமிழ் படியுங்கோ….ஒருதரும் ரீவீ போடக்கூடாது……….”

“ஏனக்கா பிள்ளையளோடை உப்பிடி கத்துறியள்…..இந்தநாட்டுக்காரரை பாருங்கோ…எவ்வளவு நைஸா பிள்ளையளை வைத்திருக்கினம்…வளக்கினம்…”

“ம்…அந்தப்பிள்ளையள் சொன்னா கேக்குதுகள்…இதுகள்….அப்பிடியே….”

“இல்லையக்கா…நீங்களும் சொல்லுறமாதிரி சொல்லவேணும்….எந்தநேரமும் உப்பிடி கத்தினா….”

“போடா விசரா….எப்பாலும் வாற உனக்கு இதுகள் படுத்துறபாடு தெரியுமே….”

“மாமா….” இரகசியமாக மூத்தவன் சுரண்டினான். இவன் திரும்பிப் பார்த்தான்.

“ அம்மா..எப்பபாத்தாலும் ரெலிபோன் கதைச்சபடி இருப்பா….நாங்கள் குழப்புறம் எண்டுதான் சும்மா சும்மா கத்துறா…..” என்றான் அவன்;.

“வேந்தன்..இஞ்சவா…இந்த உள்ளியை ஒருக்கால் உடைச்சுத்தா….:

அவன் உள்ளிமுழுவதையும் தோலுரித்தான்.

கோழியும் கத்தரிக்காய் வெள்ளைக்கறியுமாக சிறிது நேரத்தில் சமையல் முடிந்தது. அக்கா குளிக்கப்போனாள்.

வீட்டின் அழைப்புமணி அடித்தது. மூத்தவன் ஓடிப்போய் கதவு திறந்தான். அத்தான் உள்ளே வந்தார்.

“ஹலோவேந்தன்….எப்ப வந்தனீர் ………..?

“கொஞ்சம் முன்னமாத்தான் அத்தான் வந்தனான்……….”

 

“நான் உதிலை ஒரு பிரெண்டை சந்திக்கபோனனான்….போனாத் தெரியும்தானே….” ஏன்ற அத்தானின் பதிலில் சற்று பியர் வாடையடித்தது.

“என்னவாமப்பா சந்திரன்?…………”

“அவனென்ன…வீட்டுப்பிரச்சினை வேலைப்பிரச்சினை எண்டு சொல்லுறான்…………”

“அவன்ர பிரச்சினையள கேக்கிறதுக்கு உங்கட பெற்றோலை சிலவளிச்சு அங்கை போனனீங்களே….”

“…………….

“உங்களப்போலயும் முட்டாள் ஆரும் இருக்கினமே…..சந்திரன் உங்கள முட்டாளாக்கிறான்…கேட்டுக்கொண்டு சும்மா வாறியள்…”

“இஞ்ச தனு…எங்கட பிரன்ட்ஷிப்பிலை தலயிடாதேம் எண்டு உமக்கு கனதரம் சொல்லிட்டன்…ஏன் பிறகும்பிறகும் கத்துறீர்……..”

“ஓ…..உப்பிடியே திரியுங்கோ….மைதிலியின்ர கலியாணத்துக்கு வாங்கின காசுக்கு மனோக்கா எத்தினைதரம் பேசிப்போட்டா.

“ என்ர தங்கச்சிக்கு வாங்கின கடனை நான் எப்பிடியும் குடுப்பன் தானே….அதுக்கு நீர் எதுக்கு ரென்சனாகிறீர்?………..”

“உப்பிடியே சொல்லிக்கொண்டிருங்கோ….நான் ஒரு பெஸ்றுக்கும்(கொண்டாட்டங்களுக்கும்) போகேலாமகிடக்கு…காணுற இடமெல்லாம் அவவுக்கு பயப்பிடவேண்டிக்கிடக்கு……..உங்களுக்கு ரோசம் இருந்தாத்தானே…..”

“கனக்ககதைக்காதேம்…பிறகு உம்மட குடும்பத்தைபற்றி நானும் ஏதாலும் சொல்லவேண்டி வந்திடும்….”

 

“ஓ…..என்னசொல்லக்கிடக்கு….சொல்லுங்கோ பாப்பம்…”

“சீ…..லீவுநாளிலை கூட இந்தவீட்டில நிக்கோலாது……….வெளியிலை போனாத்தான் நிம்மதி………..” தன் சிவப்பேறிய கண்களை உருட்டிவிட்டு, அத்தான் தடதடவென்று வெளியே இறங்கிப்போனார். பிள்ளைகளின் முகம் கறுத்து விறைத்துப்போனது.

சிறிது நேரம் சுடுகாட்டு அமைதிநிலவியது.

“வேந்தன்….உவர் உப்பிடித்தான்ரா….சுழண்டுபோட்டு வருவர்…நீ சாப்பிடடா….பிள்ளையள்…மாமாவோடை சேந்து சாப்பிடுங்கோ…..”

“……………”

“என்னடா வேந்தன் சத்தத்தை காணேல்லை……”

“ எனக்கு பசிக்கேல்லை…..”

“ டேய்…எங்கட கதைக்கு நீ காதுகுடுக்காதை…இது எங்கட குடும்பவிசயம்…வா சாப்பிடு………” சிரித்தபடி தனுஅக்கா கையைப்பிடித்து இழுத்துப்போய் சாப்பாட்டுமேசையில் இருத்தினாள்.

அவன் அமைதியாக சாப்பிட்டான். நெஞ்சுக்குள் முள்குத்தியமாதிரி வலித்தது. பார்க்க யாரும் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டி இயங்கிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் புறப்பட எழும்பினான்.

“ இப்ப எங்கையடா போப்போறாய்….இரு இரவுக்கு புட்டு சாப்பிட்டுவிட்டு ஆறுதலாகப் போகலாம்…”

“இல்லையக்கா…என்ர பிரெண்ட் போன் அடிச்சுக்கொண்டிருக்கிறான் வரச்சொல்லி…”

“அதுக்கு சொல்லுறதுதானே…..”

“வெளியிலைபோன அத்தான் திரும்பிவரேக்குள்ளை சாதாரணமான ஆளாவரமாட்டார்…வந்தவுடனை மிச்சம் வெடிக்கும்…அதுக்குள்ளை போயிடவேணும்….” மனதுக்குள் நினைத்தபடி,

“அவனும் நானும் வேற பெடியனை சந்திக்க போகவேணும்…..அதுதான் அடிக்கிறான்……….”

“போகவேணுமெண்டால் என்னசெய்யிறது?….போகத்தானே வேணும்…………”

அவன் அக்காவின் குழந்தைகளைப்பார்த்தான். பாவமாக தெரிந்தது. சின்னவன் அவனைப்பார்த்து,

“போப்போறீங்களாமாமா….” எனக் கேட்டான். அந்தப்பிஞ்சு முகம் போகவேண்டாமென கெஞ்சுவதுபோலிருந்தது.

மனதை கல்லாக்கிக்கொண்டு, “போட்டுவாறன்……..” எனப் படியிறங்கினான்.

தொலைபேசி அழைத்தது.

“என்னடா?…”

“கெதியாவாடா பசிக்குது………”

“ஏன் மத்தியானம் சாப்பிடேல்லையோடா…..”

“நீயும் இல்லைத்தானே…சமைக்கேல்லை….பாண் இருந்தது சாப்பிட்டனான்….”

“சரி….வெளிக்கிட்டுட்டன்…வாறன்………..”

இப்போது வேந்தன் இன்னொரு முகாமில் இருக்கும் நண்பனுக்கு கைப்பேசியில் அழைப்புஎடுத்தான்.

“மச்சான்…எங்கநிக்கிறாய்….”

“காம்ப்பிலை தான்…ஏன்……….?

“என்ன சாப்பாடு?………………”

“சோறு…கோழி….கத்தரிக்காய்………..”

“சரி…வந்துகொண்டிருக்கிறன்….வாறன்……..”

நண்பனின் முகாமுக்கு போனபோது நான்குமணியாகிவிட்டிருந்தது.

“டேய் இரவுக்கு புட்டவிப்பம்…………”

“ஓமடா..றைச்சிக்கறியும் கனக்க கிடக்கு……”

அங்கிருந்த நான்கு தமிழ்இளைஞர்களுமாக சேர்ந்து புட்டு அவித்தார்கள். ஊரைப்பற்றி கதைத்தார்கள். ஊர்பற்றி கவலைப்பட்டார்கள். ஊரைப்பிரிந்துவந்து புலத்தில் உணரும் துன்பத்தை பகிர்ந்துகொண்டார்கள்…

ஏழு மணிபோல், வேந்தன் புட்டும் கோழிக்கறியும் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.

அவன் தான்தங்கியிருக்கும்; முகாமுக்கு வந்தபோது எட்டுமணிக்கு மேலாகிவிட்டது. நேரத்துடன்வரவில்லை என திட்டியபடியே அறைநண்பன் ஜெசி சாப்பிட தொடங்கினான், “டேய்….அக்காவீட்டு சாப்பாடு நல்லா இருக்கடா….” ஏன்றபடி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *