கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 7,406 
 

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போன போது ஏகப்பட்ட மாற்றங்கள்.

“மிஸ்டர் ராஜேஷ்! உங்க ஊருக்கு விசிட் போறேன். ஒருநாள் லீவு போட்டுட்டு வாங்களேன். காரில் ஜாலியாப் பேசிகிட்டுப் போன மாதிரியும் இருக்கும்; உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் இருக்கும். இப்ப உங்க ஊரு ரொம்பப் பிரபலமாயிடுச்சே அந்த சலவைக் கல் லிங்கேஸ்வரர் கோயிலாலே! அங்கே கோயில் சார்பாக வெளியூர் பயணிகளுக்கு ஒரு டூரிஸ்ட் ஹோம் கட்டித் தந்தால், புதூர் வரை அரசாங்க பஸ்களை விட ஏற்பாடு செய்யலாம். இதுபற்றி தர்மேஸ்வர் சுவாமிஜியிடம் பேசிவிட்டு வர அரசாங்கம் என்னைப் போய்ப் பேசிவிட்டு வரச் சொல்லுது.. வர்றீங்களா?” என்று நண்பரும் அரசுச் சுற்றுலாத்துறையின் ஓர் அதிகாரியுமான சஞ்சய் கூறியபோது, இவனால் மறுக்க முடியவில்லை..

வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வில்வ மரத்தின் அடியில் கேட்பாரற்றுக் கிடந்த பிள்ளையார் சிலைக்கு தர்மனால் ஸாரி, தர்மேஸ்வர் ஸ்வாமிஜியால் அடித்தது யோகம்!

ஆரம்பத்தில் இரண்டு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டுக் கேட்பவருக்கு பிள்ளையாருக்கு முன்னால் உட்கார்ந்து அருள்வாக்கு சொன்னார் சாமியார்.. கூட்டம் தேடி வந்து உண்டியலை நிறைத்தது. சுவாமிஜி பூமிக்கு அடியிலிருந்து ஒரு சிவலிங்கம் வரவழைத்த பிறகு, வெளி நாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நிறையப் பேர் வந்து நன்கொடை கொடுத்ததாகப் பேச்சு அடிபட்டது.. சலவைக் கல்லில் பெரிய அளவில் ஸ்ரீலிங்கேஸ்வரர் கோயில், புதூர் மலைக்கோடி அடிவாரத்தில் உருவாயிற்று. .

புதூருக்குப் பக்கத்து நகரான மங்கல்பூரில் பதினைந்து வருடங்களுக்கு முன் இவன் `வால் நட்சத்திரம்’ வார இதழின் நிருபராக இருந்தான். அப்போது சலவைக் கல் கோயில் உருவாகியிருக்கவில்லை. இப்போது தர்மேஸ்வர் ஸ்வாமிஜி என்று புகழ் பெற்றிருந்த ஸ்வாமிஜி, தர்மன் சாமியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். வில்வ மரத்தடி விநாயகருக்குப் பூஜை செய்துகொண்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிக் கொண்டும் இருந்தார்.

ஒருசமயம் புதூர் பரபரப்பாக இருந்தது. மலையடிவார தர்மன் சாமியார் யாகங்கள் நடத்தி, ஒரு ஸ்பெஷல் பூஜை செய்யப் போவதாகவும் பக்தர்கள் தலா ஆயிரத்து ஒரு ரூபாய் பணம் செலுத்தினால் அங்கு நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த சித்தர்கள் பூஜித்த சிவலிங்கம் பூமிக்குள்ளிருந்து மேலே வரவிருக்கிறது என்றும் அது அரசியல்வாதி கே.எம்.அண்ணாச்சி தலைமையில் நிகழப் போவதாகவும் ஏராள சுவரொட்டிகள்… சாமியாரின் படம் அந்த சுவரொட்டிகளில் பிரதான இடம் வகித்தது.

ஏராளப் பேர் ரூ.1001 கட்டி ரசீது பெற்றார்கள்.

குறிப்பிட்ட தினத்தில் `வால் நட்சத்திரம்’ வார இதழ் சார்பில் புகைப்படக்காரருடன் இவன் புதூர் மலையடிவாரத்துக்குப் போயிருந்தான். கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தூரத்துக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நின்றிருக்க, ஏராளக் கூட்டம். ஸ்பெஷல் பஸ்கள் நிறைய விட்டிருந்ததால், அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து பக்தர்கள் பூமிக்குள்ளிருந்து லிங்கம் வரும் அதிசயத்தைக் காண வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். அந்த இரவில் மலையடிவாரத்தில் ஏராளக் கடைகள், வண்ண வண்ண விளக்குகள், ஆட்டபாட்டங்கள்…

லோக்கல் அரசியல்வாதியான கே. எம். அண்ணாச்சி வந்திருந்தார். வில்வ மரத்தடியில் இருந்த விநாயகர் புது ஆடை அணிந்து பளிச் விபூதிப் பட்டை, சந்தனம், குங்குமம் புஷ்ப மாலைகள் சகிதம் காட்சியளித்தார்.. நிறைய பக்தர்கள் கூட்டம். பெரிய பந்தல் போட்டு, திரும்பிய பக்கமெல்லாம் யாக குண்டங்களில் அக்கினி கொழுந்து விட்டு எரிய, அதையொட்டி அமர்ந்திருந்த சிலர் வேதகோஷங்களை முழக்கிக் கொண்டி ருந்தனர். பணம் கட்டியவர்கள் அந்த அக்கினிக் குண்டங்களைச் சுற்றி நின்று தங்கள் கைகளால் கரண்டியை எடுத்து நெய்யை விட்டு, அங்கிருந்தவர் இயக்கியபடி ”ஸ்வாகா ஸ்வாகா என்று பய பக்தியுடன் கூறிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு வரை மேளம், நாதசுரம், மந்திர கோஷங்கள் அமர்க்களப்பட்டன. திடுமென்று காட்சி மாறியது. எங்கும் அமைதி. விநாயகர் சிலை அருகே தர்மேஸ்வர சுவாமிஜி தோன்றினார். அவரைப் பத்துப் பேர் பிடித்திருந்தார்கள். அவர்களை மீறி ஆவேசம் வந்தவராய் துள்ளிக் கொண்டிருந்தார். கண்களை உருட்டினார். பற்களை நெரித்தார். “ஓம், ரீம்..” என்று ஏதோ உச்சாடனம் செய்தவராய் அங்கும் இங்கும் ஓடிப் போய் `தாம் தூம்’ என்று குதித்து நர்த்தனம் ஆடினார். அருள் அவர் மேல் இறங்கியிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். “ஹர ஹர மகாதேவா!” என்றும் `அரோகரா!’ என்றும் பக்தர்கள் கும்பல் பரவசக் கூக்குரல் எழுப்பியது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாமியார் பலதடவை தொம் தொம்மென்று எம்பி எம்பிக் குதித்தார். இங்கேதான் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் சித்தர்கள் வழிபட்ட சிவலிங்கம் இருக்குதுன்னு ஸ்வாமிஜிக்குள்ளேயிருக்கும் சுவாமி காட்டிடுச்சு.. அங்கே இப்போ சிவலிங்கம் தோன்றப் போகுது! என்று மைக்கில் சொன்னார்கள். யாரோ சிலர் அந்த இடத்தில் மண்ணைப் பறித்தார்கள். சிலர் குடம் குடமாக அங்கு தண்ணீரை ஊற்ற, மணல் விலகி, ஒரு சலவைக்கல் லிங்கத்தின் மேல் நுனி அரையடி உயரத்தில் தெரிந்தது.

“இன்னாடா ஹம்பக்! மின்னங்காட்டியே சாமியார் மண்ணுக்குள்ளே புதைச்சு வெச்ச லிங்கம் பள்ளம் தோண்டியதும் வெளியே தெரியுது. இதுல இன்னா அதிசயம் கெடக்கு? தானா லிங்கம் மேலே வரும்னு இல்ல விளம்பரம் செஞ்சிருந்தாங்க?” என்று இவனருகில் நின்ற பத்திரிகையாளர்கள் பேசியது இவன் காதில் விழுந்தது. “தீபாராதனை..” என்று மைக்கில் சத்தமாக ஒருவர் கூற, அந்த லிங்கத்துக்குக் காட்டப்பட்ட கற்பூர தீபத்தைப் பார்த்து நிறையப் பேர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

தர்மேஸ்வர் சுவாமிஜி மயக்கம் போட்டு விழ, அவரைப் பக்தர்கள் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த குடிலுக்குள் கொண்டு போனார்கள். கூட்டம் கலைய ஆரம்பித்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

மறுநாள் ராஜேஷ், `வால் நட்சத்திரம்’ புலனாய்வு வார இதழின் நிருபராகச் சென்று சாமியாரைச் சந்தித்தான். “சுவாமி, லிங்கம் தானா மேலே வரும்னு சொன்னீங்க. ஆனா, மண்ணைப் பறிச்சுத்தானே நேற்று லிங்கத்தை வெளியே எடுத்தாங்க?” என்று பணிவாகக் கேட்டான்.

“ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தி இங்கே சித்தர்கள் வாழ்ந்திருக்காங்கன்னு எனக்கு ஞான திருஷ்டியில தெரிஞ்சது. அவங்க வழிபட்ட சிவலிங்கம்தான் வெளியே வந்தது” என்றார் சுவாமிஜி.

“ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னே சலவைக்கல் இருந்துச்சா சாமி? பூமிக்குள்ளே ரொம்ப காலம் புதைஞ்சிருந்த சிவலிங்கம் சலவைக்கல் சிலையா பளிச்சுன்னு மின்னுதே, எப்பிடி?” என்று இவன் கேட்டான்.

பதில் சொல்ல முடியாமல் சுவாமிஜி அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தார். “தம்பி, நம்பறவனுக்கு நடராஜா. நம்பாதவனுக்கு வெறும் கல்லு!” என்று சொல்லிவிட்டு எழுந்து குடிலுக்குள் போய் மறைந்து விட்டார். சுவாமிஜி நிஷ்டையில் ஆழ்ந்து விட்டதாகவும், யாரையும் இனிமேல் பார்க்க முடியாது என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

சாமியாரின் பித்தலாட்டம் இவனுக்கு உறுதிப்பட்டது.

லிங்கம் நிஜமாகவே வந்ததா? சலவைக்கல் சிவலிங்கம் சித்தர்கள் வழிபட்டதா? என்ற தலைப்பில் `வால் நட்சத்திரம்’ புலனாய்வு வார இதழில், ராஜேஷ் எழுதிய கட்டுரை வெளியாயிற்று. சாமியார் நடத்திய யாகம், வசூலித்த லட்சக்கணக்கான தொகை, சிவலிங்கம் தானாக வராதது, அது சலைவைக் கல்லாக இருப்பது எனப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு, சுவாமியார் அளித்த பேட்டியுடன் கவர் ஸ்டோரியாக.

அதன்பிறகு சில நாளில் இவன் சென்னைக்குப் போக நேர்ந்தது.. `வால்நட்சத்திரம்’ வார இதழில் தலைமை நிருபராக, பின், துணை ஆசிரியராக உயர்ந்து பணி புரிந்தான். அவனுக்குக் கிடைத்த பல நண்பர்களில் அதிகாரி சஞ்சயும் ஒருவர். அவர் அழைப்பினால் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் புதூருக்கு வருகிறான்.

புதூரில் லிங்கேஸ்வரர் ஆலயம் மிகவும் பரந்த இடத்தில் பிரம்மாண்டமாக, ஏராள பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் கோயிலாக வளர்ந்திருந்தது. கோயிலை ஒட்டி ஒரு ஆசிரமம். அங்குதான் சுவாமிஜியை சந்திக்க முடியும் என்றார்கள்.

ஸ்வாமிஜியைத் தரிசிக்க நிறையப்பேர் காத்திருந்தார்கள். நண்பருடன் இவன் உள்ளே நுழைந்ததுமே ஆளுக்கு ஒரு தாளைக் கொடுத்து, பெயர், பதவி, முகவரி, ஸ்வாமிஜியைச் சந்திக்கும் நோக்கம் ஆகியவற்றை அதில் எழுதித் தரச் சொன்னார் காவியுடை அணிந்திருந்த ஓர் இளம்பெண்.

எழுதிக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்கள். மாவட்ட அதிகாரிகள் வருவதாகச் சொன்னதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு நண்பனான ராஜேஷை மட்டும் உடன் அழைத்து வந்திருந்தார் சஞ்சய்.

திடீரென்று பரபரப்பு.

“மினிஸ்டர் வர்றார்!” என்று சிலர் வேகமாக வந்தார்கள். நிறைய அதிகாரிகள், அரசியல் தலைகள், போலீஸார் என்று ஒரு கூட்டம் வந்தது. மினிஸ்டரும் உடன் சிலரும் மட்டும் ஸ்வாமிஜியைத் தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ராஜேஷுக்குச் சிரிப்பு வந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் ராஜேஷிடம் இந்த மினிஸ்டர் (அப்போது இவர் எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலாளர்) அடிக்கடி வருவார். கலர் கலராகக் காட்சியளிக்கும் லெட்டர் பேடில் ஏதாவது செய்தியை எழுதிக் கொடுத்து இவன் வேலை பார்க்கும் பத்திரிகையில் வெளியிடுமாறு கோருவார்

`வால் நட்சத்திரம்’ தினசரிப் பத்திரிகை அல்ல; ஒரு வார இதழ். அதில் இந்தச் செய்திகள் இடம் பெற முடியாது என்று இவன் தெளிவு படுத்துவான்; அதுபற்றி அவர் கவலைப் பட மாட்டார். சளைக்காமல் செய்திகள் தந்து கொண்டே இருப்பார். ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியபோது போலீஸ் தடியடியில் அவருக்கு அடி விழ, அதைப் புகைப்படத்தோடு செய்தி யாக்கினான் ராஜேஷ்.

கட்டுரை வெளிவந்த மறுதினம், தன் தொண்டர்கள் புடைசூழ மாவட்டம் ராஜேஷைத் தேடி வந்தார். “தடியடி பட்டாருன்னு எழுதி தலையை அவமானப் படுத்திட்டியே!” என்று தொண்டரடிப்பொடிகள் ராஜேஷை அடிக்கப் பாய்ந்தார்கள்; அவர்களைத் தடுத்தார் மாவட்டம்.

“டேய், பொறுங்கடா! தம்பி நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கு. `வால் நட்சத்திரம்’ பத்திரிகைல ஒரு வரி நம்மளைப் பத்திப் போடமாட்டாங்களான்னு எத்தினி காலம் ஏங்கியிருந்தேன் தெரியுமா? இப்ப ரெண்டு பக்கத்துக்கு நியூஸ் கவரேஜ். பெரிசா, கலர் படத்தோட.! தமிழ்நாடு பூரா இப்ப என் பேரு பப்ளிசிடி ஆயிருச்சே, தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வாங்கடா, போலாம்!” என்றார் அவர். இதை ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதி தம்மைப் பற்றி மதிப்புக் குறைவாகச் செய்தி வந்தாலும், செய்தி வருகிறதே என்று சந்தோஷப்படுவதை அவன் அன்று தான் முத்ன் முதலாக உணர்ந்தான்!.

அந்த மாவட்டச் செயலாளர் தான் இப்போது உயர்ந்து ஆளும்கட்சி அமைச்சராக ஆகிவிட்டிருக்கிறார்…

அமைச்சர் ஸ்வாமிஜியைச் சந்தித்துவிட்டுக் கிளம்பியதை. அடுத்து இவனுடைய நண்பரான அரசு அதிகாரியை உள்ளே போக அனுமதித்தார்கள். இவனும் உடன் செல்ல எழுந்தபோது, அந்தப் பெண், “ஸாரி ஸார்! ரிப்போர்ட்டர்களை ஸ்வாமிஜி சந்திப்ப தில்லை. ரிப்போர்ட்டர்ஸ் உள்ளே போனதும் ஸ்வாமிஜிகிட்டே சலவைக் கல் கோயிலைக் கட்ட எங்கேருந்து பணம் வந்துச்சு?ன்னு தான் கேட்கிறீங்க. அதனாலத்தான் ரிப்போர்ட்டர்ஸ் ஆர் நாட் அலவ்ட்!” என்று இவனுக்கு அனுமதி மறுதளித்தாள் அவள்.

இரண்டே நிமிடங்களில் காட்சி மாறியது. பரபரப்புடன் காவியுடை இளம்பெண் ராஜேஷிடம் ஓடி வந்தாள்.

“ஸாரி ஸார், ஸ்வாமிஜிகிட்டே உங்க பத்திரிகை பேரைச் சொன்னேன். `வால் நட்சத்திரம்’ நிருபரா? மிஸ்டர் ராஜேஷா? உடனே உள்ளே கூட்டிகிட்டு வாம்மான்னு ஸ்வாமி சொல்கிறார். உங்களை அவருக்கு ரொம்ப நல்லாத் தெரியுமாமே! வாங்க ஸார், வாங்க!” என்றாள் அவள்.

ராஜேஷுக்குப் புரியவில்லை. பதினைந்து வருடத்துக்கு முன் சாமியாரை ஐந்து நிமிடம் பார்த்துப் பேசியதை அவர் இன்னும் ஞாபகம் வைத்திருப்பார் என்று இவன் நினைக்கவில்லை. சாமியார் பூமிக்குள் புதைத்து வைத்த சிவலிங்கத்தை வெளியே எடுத்தது ஹம்பக் என்று கட்டுரை எழுதியவன் இவன். அதனால் நினைவில் வைத்துக் கங்கணம் கட்டிக் காத்திருக்கிறாரா?

புலித் தோல் ஆசனத்தில் பத்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார் ஸ்வாமிஜி.

ஆசீர்வாத போஸில் கையை உயர்த்தி, “வாங்கோ ராஜேஷ். உங்களுக்கு என் ஆசீர்வாதம். வீட்டில் அம்மா நல்லா இருக் காங்களா?” என்றார்.

இவன் திடுக்கிட்டான். “ஸ்வாமிஜி..” என்றான்.

இவனுக்கு முன்னே ஸ்வாமிஜியைச் சந்திக்க வந்த இவன் நண்பர் சஞ்சய் அங்கே பவ்யமாக அமர்ந்திருந்தார். அவருக்கு ஸ்வாமிஜி ராஜேஷுக்கு அளித்த வரவேற்பு ஆச்சர்யம் அளித்தது.

ஸ்வாமிஜி சன்னமான குரலில் பேசினார்: “பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னே ஒரு ஏப்ரல் மாதம் முதல் வாரம் வெளிவந்த `வால் நட்சத்திரம்’ பத்திரிகை அட்டைல என் கலர் போட்டோவைப் போட்டு, லிங்கம் உண்மையிலேயே வந்துச்சா? இல்லை சாமியாரின் ஹம்பக்கா?-ன்னு கேட்டு ஒரு கட்டுரை நாலு பக்கத்துக்கு எழுதினீங்களே, அதுதான் இந்த சலவைக்கல் லிங்கேஸ்வரர் கோயிலுக்கு ஓப்பனிங்! ஒரே நாளில் உலகம் பூராவுக்கும் என்னையும் இந்த லிங்கேஸ்வர ஸ்வாமியையும் பிரபலப் படுத்திட்டீங்க. அடேயப்பா, என்னா பப்ளிசிட்டி, என்னா பப்ளிசிட்டி! அன்னிலேர்ந்து வளர்ச்சி தான். எங்கெங்கிருந்தோ பக்தர்கள் அருள்வாக்கு கேட்க வந்தாங்க. நன்கொடையை வாரி வாரி வழங்கினாங்க! ராஜஸ்தான்லேர்ந்து அடங்கா மார்பிள் வாங்கி, சலவைக் கல் கோயிலைக் கட்டினேன். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆயிடுச்சு. இப்ப இங்கே ஐநூறு தொண்டர்கள் வேலை பார்க்கிறாங்க. ஆயிரக் கணக்கான மக்கள் இந்தக் கோயிலையும் கோயிலுக்கு வருகிற பக்தர்களை வெச்சும் பிழைக்கிறாங்க. எல்லாத்துக்கும் மூல காரணம், உங்க பத்திரிகைல நீங்க எழுதின கட்டுரை! ரொம்ப சந்தோஷம். என் ஆசீர்வாதம்!”

ஆன்மிக புத்தகங்கள், விபூதி குங்குமம் கல்கண்டு பிரசாதம் ஆகியற்றைத் தந்தார் ஸ்வாமிஜி.. நண்பர் வைத்த கோரிக்கைக்கும் அனுமதி வழங்கினார். இருவரையும் ஆசீர்வதித்து விடை கொடுத்தார்..

எழுந்து கிளம்பும்போது ஸ்வாமிஜியை நிமிர்ந்து பார்க்கத் தோன்றியது ராஜேஷுக்க்கு.

பார்த்தான்.

அவர் முகம் கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து போன அமைச்சரின் முகமாக ஒருகணம் மாறிக் காட்சி தந்து இவனைத் திடுக்கிட வைத்தது.!

`வால் நட்சத்திரம்’ பத்திரிகைல ஒரு வரி நம்மளைப் பத்திப் போடமாட்டாங்களான்னு எத்தினி காலம் ஏங்கியிருந்தேன் தெரியுமா? இப்ப ரெண்டு பக்கத்துக்கு நியூஸ் கவரேஜ்! பெரிசா, கலர் படத்தோட.! தமிழ்நாடு பூரா இப்ப என் பேரு பப்ளிசிடி ஆயிருச்சே, தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வாங்கடா, போலாம்! என்று திட்டினாலும் குட்டினாலும் தமக்கு விளம்பரம் என ஏற்றுக் கொள்ளும் அரசியல்வாதியின் மனோபாவம் கொண்டதால்தான் சுவாமியார் இத்தனை பெரிதாக வளர்ந்திருக்கிறாரோ ஒருவேளை?

யோசனையுடன் வெளியே வந்தான் ராஜேஷ்.

(சூரியக் கதிர் மாத இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *