மிஸ்டர் துக்ளக்கின் மகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 12,970 
 

கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது.

அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு போன பொழுது கல்யாண வீடு எப்படி திமிலோகப்பட்டதோ, அப்படி!

வீராசாமி ராஜாவிற்கும் பெருந்தேவிக்கும் பிறந்த ஒரே ஒரு பெண்தான் கனகதுர்கா. ஒரே பெண் என்னும் காரணத் தால் செல்லமாகவும் செழிப்பாகவும் வளர்ந்தாள். அவள் மட்டுமல்ல, அவளது உடலும் கொழுகொழுவென வளர்ந்தது. பெண்ணுக்குப் பதினைந்து வயதாகியும், குனிந்து ஒரு செம்பு ஜலத்தைக்கூட எடுக்க அவள் தாயார் அனுமதித்தது இல்லை. அதனால் மதமத வென வளர்ந்து, வாசலுக்குள் நுழைய முடியாத அளவு தோற்றமளித்தாள் அவள்.

வீராசாமி ராஜா ஒரு விசித்திரப் பேர்வழி. எதையும் மெதுவாகப் பேசமாட்டார். அக்கம்பக்கத்துக்குக் கேட்கும்படிதான் பேசுவார். அவர் பேச்சிலிருந்தே அன்றைக்கு அவர்கள் வீட்டில் என்ன சமையல், என் னென்ன காய்கறிகள் வாங்கி இருக்கிறார்கள், என்ன நகை செய்யப் போகிறார்கள், யார் யாரைப் பார்க்கப் போகிறார்கள் என்னும் விவரமெல்லாம் தெரிந்து போகும். அதை நாலு பேருக்குத் தெரியப்-படுத்த அவர் கையாளும் முறை அது-தான். ரொம்பப் படாடோபக்காரர்.

ஒரு புராதன கார் அவரிடம் இருந்தது. அதைக் கிளப்புவதற்குள் அவர் படும்பாடு

வேடிக்கையாக இருக்கும். காய்கறி வாங்க அருகில் இருக்கும் கடைக்குப் போவதென்றால் கூட, அந்த ஓட்டைக் காரை எடுக்க பிரம்மப்பிரயத்தனப் படுவார். வேலை ஆட்களைக் கொண்டு தள்ளச் சொல்லியே கறிகாய்க்கடை வரைக்கும் போய் வந்துவிடுவார். வேலையாட்கள் இல்லாவிடில், ரோட்டில் போவோர் வருவோரை யெல்லாம் கூடத் தள்ளச் சொல்லு வார். அதனால் நானும் என் கணவரும் அவருக்கு ‘துக்ளக்’ என்று பெயர் வைத்துவிட் டோம்.

வேலைக்காரர்கள் தப்பித் தவறிக்கூட அவரை ‘ஐயா’ என்று கூப்பிடக்கூடாது. மகா

கோபம் வந்துவிடும். ‘மகாராஜா மகாராஜா’ என்றுதான் கூப்பிட வேண்டும். மகாராஜா என்று கூப்பிட மறுத்த ஒரு வேலைக் காரனுக்கு வேலையிலிருந்தே கல்தா கொடுத்து விட்டதும் எங்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட துக்ளக்குக்கு கனமான சுமையாக வீட்டுக்குள் நடமாடும் கனகதுர்காவின் கல்யாணம் பெரிய பிரச்னையாகி விட்டது.

பெருந்தேவிக்கு ‘பணத்தை விட்டெறிந்தால் யாராவது நம் பெண்ணைக் கொத்திக்கொண்டு போக மாட்டார்களா’ என்னும் இறுமாப்பு இருந்தது வாஸ்தவம் தான். ஆனால், வந்த வரன்களெல் லாம் பணத்துக்கு அடிமையா காமல், அழகு ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போகப் போகத்தான் அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

”உங்கள் பெண் இப்படி பெருத்துக்கொண்டே போனால், யார் கல்யாணம் செய்து கொள் வார்கள்? கொஞ்ச நாளைக்கு ‘லைட்’ ஆகாரம் கொடுங்கள்” என்று உபதேசம் செய்த ஒரு பெண்மணியிடம், ”என் பெண் ணைப் பார்த்தால் உங்களுக் கெல்லாம் வயிற்றெரிச்சலா?” என்று கேட்டுவிட்டு, அந்தப் பெண்மணியின் எதிரேயே பூசணிக்காயை எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்டாளாம்! தன் பெண்ணின் அழகில் அத்தனை நம்பிக்கை பெருந்தேவிக்கு!

வந்த வரன்களெல்லாம் கை நழுவிப் போக, பெற்றோருக்குக் கவலை அதிகமாகிவிட்டது. வீரா சாமி ராஜா வீட்டில் இரைந்து பேசுவதைக் கூட குறைத்துக் கொண்டு விட்டார்.

ஒரு நாள்…

திடீரென்று வீராசாமியின் குரல் பழையபடி எங்கள் காதில் கணீரென ஒலித்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர் வீடு. சுவர் ஓரத்தில் நானும் என் கணவரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தொடங்கி னோம். வேலைக்காரர்களிடம் தான் சப்தம் போட்டுக் கொண்டு இருந்தார்.

”பெரிய ஜமீன்தார் வீட்டுச் சம்பந்தம். இருபதாயிரம் ரூபாய் வரதட்சணை; பத்தாயிரம் ரூபாய் சீர்; நீங்களெல்லாம் என் மானத்தை வாங்கிவிடாதீர்கள்!” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

”ஓகோ! கனகத்திற்கு நல்ல வரன் அமைந்துவிட்டது போலி ருக்கிறது” என்றார் என் கணவர்.

அவர்கள் வீட்டு வேலைக்காரி இந்தச் செய்தியைத் தூக்கிக் கொண்டு போய், கோயிலில் சுண்டல் விநியோகம் செய்வது போல் வீடு வீடாக விநியோகம் செய்துவிட்டாள். ஊரே அதிர்ந்து போய் நின்றது. நாங்களும்தான்.
வீடு வீடாகச் சென்று பெருந் தேவியைத் துக்கம் விசாரிப்பது போல, ”உன் பெண்ணுக்கு வரன் கிடைத்துவிட்டதாமே! யாரது மாப்பிள்ளை? என்ன செய்கிறார்?” என்று கேட்டுவிட்டு வெளியே வந்த பெண்கள், ”பாவம்… எந்த துரதிர்ஷ்டசாலியோ தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு விட் டான்” என்று பேசிக்கொண்டு போயினர்.

”பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அவள் அப்பா காண்பித்த ரூபாய் நோட்டை மட்டும் பார்த்திருப்பான்” என்று ‘விட்’ அடித்தாள் ஒரு பெண்.

ஊரே இந்தத் திருமணத்தைப் பற்றி இப்படிப் பரபரப்பு காட்டி வந்தபொழுது, அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று ‘வேலைக்காரி நியூஸ் சர்வீஸ்’ மூலம் வெளி யானது, பெண் பார்த்துவிட்டுப் போன மறுநாளிலிருந்து மாப் பிள்ளைக்கு ஜுரம் வந்துவிட்ட தாம். பெண் பார்த்ததுமே இப்படி கெடுதல் ஏற்படுவதை அபசகுன மாகக் கருதி, மாப்பிள்ளை வீட்டார் கல்யாணமே வேண் டாம் என்று வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்களாம்!

வீராசாமி ராஜாவுக்கும் பெருந் தேவிக்கும் பெரிய தலைக் குனிவாகப் போய் விட்டது, பாவம்! இருவரும் வீட்டை விட் டுக்கூட வெளியே வருவதில்லை. அதே கவலையில் ராஜா படுத்த படுக்கையாகி விட்டார். இப் பொழுதெல்லாம் அவர் குரலைக் கூடக் கேட்க முடிவதில்லை.

இது நடந்து கொஞ்ச நாட்கள் இருக்கும்… ஒருநாள் நடுநிசி! வீராசாமி ராஜா வீட்டிலிருந்து ‘தடதடா’ என ஓர் ஓசை! அதை யட்டி யாரோ குசுகுசுவெனப் பேசும் ஒலி. மறுபடியும் தடதடா சப்தம். உடனே, வீதி நாய்கள் குரைத்தன. சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் – இப்படி யாகக் கேட்டது. லட்சியப்படுத் தாமல் தூங்கிவிட்டேன்.
தொடர்ந்து இதே பயங்கர சப்தமும் அழுகுரலும் மாறி மாறிக் கேட்டபொழுதுதான் என் கணவரை எழுப்பினேன்.

”ஒரு சமயம் பேய் பிசாசாக இருக்கலாம்” என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு, நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான்! எனக்கோ பயம் பிடித்துக்கொண்டு விட்டது. போதாக்குறைக்கு வெள்ளைப் புடவை வேறு கட்டிக்கொண்டு இருந்தேன்.

‘வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டு மாடியில் படுத்தால், பிசாசு பிடித்துக்கொள்ளும்’ என்று எப்போதோ ஒரு சிநேகிதி சொன்னது அப்போதுதானா என் நினைவுக்கு வர வேண்டும்? பயத்தில் துப்பட்டியை எடுத்துப் புடவை தெரியாமல் கழுத்து வரை போர்த்திக்கொண்டு விட்டேன்.

ஒரு வேளை பிசாசாக இருந்து, மரத்து மீது ஏறி, மாடியில் குதித்து விட்டால்..?
பயத்தால் உடலெல்லாம் நனைந்துவிட்டது. அவரோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

கீழே கடிகாரத்தில் சரியாக மணி பன்னிரண்டு அடித்தது. வழக்கமாக சப்தம் வரும் நேரம் இதுதான்!

தட தடா… தட… தடா…

சப்தம் கேட்டதும் தலைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு விட்டேன்.
மீண்டும் தட தடா சப்தம் கேட்கிறது. தொடர்ந்து குசுகுசு வெனப் பேச்சு ஒலி; அழுகுரல்.

நல்லவேளையாக, இந்தத் தடவை அவர் எழுந்துவிட்டார். நான் அவரைப் போர்வைக்குள் இருந்தவாறே கோபித்துக்கொண் டேன்.

”இன்னமுமா நீ தூங்கவில்லை?” என்று கேட்டுவிட்டு அவர் மொட்டை மாடியின் விளம்புக்கு எழுந்து போவது, போர்வை துவாரத்தின் வழியாகத் தெரிந்தது. அவரைத் தடுத்து, ”போகவேண் டாம்” என்று குரல் கொடுத்தேன். அவர் கேட்கவில்லை.

திடீரென ஒரு சிரிப்பொலி. பயந்து போய், போர்வையை விலக்கிப் பார்த்தேன். நல்ல வேளை! அவர்தான் என் அருகில் அமர்ந்தவாறே சிரித்துக்கொண்டு இருந்தார்.

அவர் பேசவில்லை. என் கையைப் பிடித்துத் தரதரவென மாடி ஓரத்துக்கு அழைத்துச் சென்றார்.

”அதோ பார்த்தாயா?” என்று அடுத்த வீட்டு முன் வாசலைக் காட்டினார்.

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அங்கு பிசாசு இல்லை. என்றாலும் பூதம் மாதிரி தோற்றமளிக்கும் கனக துர்கா ஒரு ரோட் ரோலரைக் கட்டி இழுத்துக்கொண்டிருந்தாள். கொஞ்சம் இழுத்ததும், நின்று கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டாள் அவள். வீராசாமியோ அவளை மேலும் இழுக்கும்படி தொந்தரவு செய்தார். பெருந்தேவி கையில் ஒரு டிரே வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அதில் ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ், பால், பிஸ்கட், விசிறி எல்லாம் இருந்தன.

பெருந்தேவி கனகத்திடம் வந்து கண்களைத் துடைத்துவிட்டு, ”போதும், விடுங்கள்! குழந்தை இளைக்காமல் போனால் போகி றாள்! அவள் உடம்பு இளைத்தால் தான் கல்யாணம் ஆகும் என்றால், கல்யாணமே ஆகாமல் போகட் டும். கவலை இல்லை! அவள் படும் அவஸ்தையைப் பார்க்க முடியவில்லை” என்றாள்.

‘உடம்பு இளைப்பதற்காகவா அவளை இந்தப் பாடு படுத்து கிறார்-கள்’ என்பது போல் என் கணவரைப் பார்த்தேன். அவர் ‘உஷ்… பேசாதே!’ என்பது போல ஜாடை காட்டினார்.

வீராசாமி கனகத்திடம் போதிய அளவு வேலை வாங்கி, இனி முடியாது என்னும் நிலை யில், தம் பெண் இடுப்பிலிருந்த பெல்ட்டைக் கழற்றிவிட்டார்.
ஓடிப் போய் கனகா, தன் தாயார் கொடுத்த ஒரு செம்புப் பாலையும், தொட்டியில் எருமை மாடு கழுநீர் குடிப்பது போலக் குடித்துத் தீர்த்தாள்.

நானும் என் கணவரும் இந்தப் பக்கம் வந்து விழுந்து விழுந்து சிரித்தோம்.

இது நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊரையே கலக்கிய அந்தப் பரபரப்பான செய்தி வந்தது. கனகதுர்கா யாருடனோ ஓடிவிட்டாளாம்!
அது வேறு யாரும் இல்லை, அவளுடைய அத்தான்தானாம். கிராமத்தில் விவசாயம் செய்து வந்த அவனுக்கு கனகதுர்காவைக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன வீராசாமி ராஜா வேறு வழியில்லாமல், திருப்பதியில் கல்யாணம் செய்துகொண்ட கனக-துர்காவையும், அவளைவிட இருமடங்கு கனமுள்ள யானை மாப்பிள்ளையையும் அழைத்து வந்து, வீட்டில் ஏக தடபுடலாக விருந்து கொடுத்தார்.

விருந்துக்குப் போன நான், கனகதுர்காவை, ”ஏண்டி, ருக்மிணி மாதிரி ஓடிப் போயிட்டியே!” என்று கேட்டேன்.
”அப்படிப் போகலேன்னா அத்தானுக்கு என்னைக் கொடுக்க மாட்டாரே, எங்க அப்பா! அதுக் குத்தான் அத்தானுக்கு ரகசிய மாகக் கடிதம் போட்டேன். அவர் யாருக்கும் தெரியாமல் வந்து என்னைத் தூக்கி(!)க் கொண்டு போய்விட்டார். இருந் தாலும் அந்த ரோடு ரோலரை யார் இழுப்பாங்க… அம்மா தூக்கமில்லாமல்!” என்றாள்.

– 30.05.1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *