கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,602 
 

தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து சீட்டு விளையாடுவதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். ஒலிப்பெருக்கியில் குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க அப்ளிக்கேஷன் போட்டுக் கொண்டிருந்தார் டி.எம்.எஸ். வேப்ப மரங்களில் “சீரியல்” பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. விடிந்தால் திருவிழா.

திருவிழாவிற்காக வந்து இரண்டு நாளாகிறது. நாளை திருவிழா முடிந்து மேலும் ஒரு நாள் இருந்துவிட்டு கிளம்ப வேண்டும். இப்போதே நான் ஏன் கிளம்புவதைப் பற்றி யோசிக்கிறேன். திருவிழாவிற்கு முந்தைய நாளின் உற்சாகமே தனிதான். அதை அனுபவிப்பதற்கே காலாற கீழத்தெரு வரைக்கும் நடந்து சென்று ஆனந்தைப் பார்த்துவிட்டு வந்தேன். வரும் போதும், போகும் போதும் வழி நெடுக நலம் விசாரிக்கும் உள்ளங்களுக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் சென்று வரலாம். ரம்யா தான் வர விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. நாலு சுவருக்குள் நாள் முழுக்க அவளால் இருக்க முடியும் ஆனால் நாலு பேருக்கு மத்தியில் நான்கு நிமிடங்கள் கூட இருக்க முடியாது. அவளைச் சொல்லியும் தப்பில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி. சென்னையில் ஒரு அப்பார்ட்மண்டில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வாழ்வு அவளுடையது.

வீட்டிற்குள் நுழையும் போது தான் அதைத் தற்செயலாக கவனித்தேன்.

” அம்மா.. அம்மா…”

” ஏன் டா.. இங்க சமையல் கட்டுல இருக்கேன் ”

சமையற்கட்டினுள் நுழைந்தேன். அது அம்மாவின் ராஜ்யம். எத்தனை சுத்தம் ! எத்தனை ஒழுங்கு ! கண்ணை மூடிக் கொண்டு கூட அம்மாவால் அருமையாக சமைத்துவிட முடியும். ஒரு பாத்திரம் கூட கழுவப்படுவதற்காக காத்திருக்காது. அம்மாவுக்கு நேர் எதிர் ரம்யா. அவளுக்கு எங்கே எதை வைத்தாள் என்று தெரியாது. எப்போதும் “இதப் பாத்தீங்களா அதப் பாத்தீங்களா”ன்னு என்னமோ தினம் நான் சமைக்கிற மாதிரி என்னிடம் கேள்வி கேட்பாள். ஒரு ஒப்புமைக்கு அம்மாவின் சமையற்கட்டினைப் பத்தி நான் கூறினால் அன்றைக்கு இருவருக்கும் சண்டை நிச்சயம். அன்றைய சண்டைக்கு அது ஒரு காரணமாகிப் போகும் அல்லது அதுவும் ஒரு காரணமாகிப் போகும்.

” நம்ம ஆளு எங்க போயிருக்கார்.. ஆளைக் காணோம்..” அப்பாவைப் பற்றி கிண்டலாக அப்படித்தான் கூறுவது வழக்கம்.

” ஏன்டா.. இன்னைக்கு ராத்திரி ஊர்ச் சாப்பாடு இருக்குல.. அங்க வேலை ஒழுங்கா நடக்குதான்னு பார்க்க கிளம்பிப் போயிருக்கார். ஐயாதான் இளைஞர் சங்கப் பொருளாளராம். இவரெல்லாம் இளைஞர்ன்னா நீங்களெல்லாம் யாராம் ” அம்மாவின் பேச்சில் கொஞ்சம் நக்கல் தூக்கலாகவே இருந்தது.

” பார்த்துமா.. நம்ம தெருவுக்கு பதிலா பக்கத்துத் தெருவுக்குப் போயி உட்கார்ந்திருக்கப் போராரு. இந்தா பிடி அவரோட ஸ்கூட்டி சாவி. அதை அப்படியே மறந்து வண்டியிலேயே வச்சுட்டாரு. நல்ல வேளை நான் தற்சயலா பார்த்ததுனால எடுத்துட்டு வந்தேன். ”

” ம்க்கூம்.. போன வாரம் பூக்கடைல வண்டியவே விட்டுட்டு நடந்து வந்தாரே அதுக்கு இதுதாவலாம்..” என்றாள் அம்மா சிரித்துக் கொண்டே. விளையாட்டாய் அம்மா கொஞ்சம் எக்சாஜரேட் பண்ணி சொல்கிறாளோ என்று தோன்றியது. இருந்தாலும் அப்பா அப்படி வந்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அப்பா எப்போதுமே இப்படித்தான். அப்படியொரு மறதி. ஒருமுறை அம்மாவைக் கூட்டிக் கொண்டு சொக்கர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அம்மாவை அங்கேயே விட்டுவிட்டு இவர் அவசர வேலையாக எங்கோ கிளம்பிவிட்டார். அம்மா பாவம் நடந்தே வீடு வந்து சேர்ந்திருக்கிறாள். அப்பாவிற்கு மறதி ஒன்றும் வயதின் காரணமாக வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மேற்சொன்ன சம்பவம் நடந்த போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். இதற்காக பார்த்தாகிவிட்டது அலோபதியிலிருந்து ஆயுர்வேதம் வரை அத்தனை மருத்துவங்களையும். பயன் என்னவோ பூஜ்யம் தான்.

அப்பாவின் இந்த மறதி, சிற்சில சமயங்களில் பொருள் இழப்புகளையும், பல சமயங்களில் சிரிப்பையுமே தந்து போயிருக்கின்றன. அம்மா ஒருத்திதான் அலுத்துக் கொள்வாள். தினம் தினம் அவள் தானே அத்தனையையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. “பாவம்.. அவர் வாங்கி வந்த வரம் அப்படி” என்பாள்.

” அம்மா ஒரு நல்ல பில்டர் காபி கிடைக்குமா? ”

” அதுக்கென்னப்பா இதோ அஞ்சு நிமிசத்துல தர்ரேன் ”

” ரம்யா எங்க இன்னும் மேலதான் இருக்காளா? ”

” உம் பொண்டாட்டி என்னைக்குடா கீழ வந்து கூட மாட ஒத்தாசையா இருந்திருக்கா. எப்படி ஒரு மனுசியால நாட்பொழுதும் வீட்டுக் குள்ளேயே அடைஞ்சு கிடக்க முடியுதோ தெரியலடா தம்பி.. நாலு எடத்துக்குப் போனோமா.. நாலு மனுசங்களப் பார்த்து பேசுனோமா பழகுனோமோன்னு இருக்க வேண்டாமா? ஏங்க்கா உன் மருமக இப்படி அடைச்சுப் போயிருக்கான்னு உன் சித்திக்காரி கேக்கும் போது நான் மூஞ்சிய எங்க போயி வச்சுக்கிறது. நீயே சொல்லு..” இதைச் சொல்லும் போது எனக்கும் அம்மாவிற்கும் மட்டுமே கேட்கும் குரலில் சொன்னாள்.

” அப்பாவுக்கு மறதி மாதிரி. இவளுக்கு இதுமா.. சில விசயங்களையெல்லாம் மாத்தமுடியாத போது நாம மாறிக்கிறதுதான் புத்திசாலித்தனம் ”

” போடா நீதான் உன் புத்திசாலித்தனத்த மெச்சிக்கணும் ”

அம்மாவிடம் எப்படி சொல்வது அவள் அக்கம்பக்கத்து மனிதரிடம் சரியாக பேசாவிட்டால் பரவாயில்லை. என்னிடம் கூட அவள் பேசுவதே இல்லை. வீட்டில் எங்களுக்கிடையே பேச்சு வார்த்தை நின்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. அவளுக்கு சினிமா பிடிக்காது. அரசியல் தெரியாது. புத்தகம் என்றாலும் காத தூரம். இப்படி நாங்கள் இருவரும் பேசுவதற்கான ஒரு புள்ளியே கிடையாது. நானே வலிய ஏதாவது பேச ஆரம்பித்தாலும், அவள் காட்டும் அசுவாரஷ்யமான முகபாவம் எனது அடுத்த வார்த்தையை அப்படியே விழுங்கிக் கொள்ளும். எங்கு ஆரம்பித்தாலும் கடைசியில் சண்டையில் தான் வந்து முடியும். இதுவெல்லாம் தெரிந்தால் அம்மா மிகவும் வருத்தப்படுவாள். கல்யாணமே வேண்டாம் என்று சொன்ன என்னை அழுது அடம்பிடித்து சம்மதிக்க வைத்தவளே அவள் தான். இப்போது நான் சந்தோஷமாக இல்லையென்று தெரிந்தால், குற்ற உணர்ச்சியிலேயே நொந்துவிடுவாள் பாவம்.

* * *

திருவிழாவன்று வேட்டி கட்டுமாறு நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதால், கல்யாணத்திற்குப் பிறகு அந்தப் பட்டுவேட்டியை எடுத்து உடுத்திக் கொண்டேன். அது என்னுள் தேவையில்லாத நினைவுகளைக் கிளறிச் சென்றது. தேவையில்லாதது என்றபோது அதைப் பற்றி பேசி மட்டும் என்ன பயன்.

என் வேட்டியைப் பார்த்து, அப்பா கிண்டலடித்தார். அம்மா ஆதரித்தாலும் அவள் கண்களில் ஒரு எள்ளல் தெரிந்தது. வழக்கம் போல ரம்யாவிடமிருந்து எந்த ஒரு ரியாக்சனுமில்லை. நான் அவளிடம் எதையும் எதிர்பார்க்கவுமில்லை.

நண்பர்கள் ஐவரும் சொல்லி வைத்துக் கொண்டு மெரூன் கலர் சட்டையும், பட்டு வேட்டியும் கட்டிக் கொண்டு தெருவெங்கும் உலா வந்தோம். சப்பரத்திற்குப் பின்னால் தெருத் தெருவாய்ச் சுற்றினோம். ஏழெட்டு வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் அப்படிச் சுற்றிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு தெருவைக் கடக்கும் போதும் சொந்தங்கள் நட்புக்கள், தெரிந்தவர்கள் என அத்தனை பேரும் அன்பிலும் பாசத்திலும் குளிர வைத்தார்கள்.

எங்கள் தெருவைக் கடந்து முனியம்மன் பொட்டலை அடையும் போதுதான் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். சுருள் சுருளாய் முடியும், முட்டைக் கண்களும், உப்பிய கண்ணங்களுமாய் பட்டுப்பாவாடை கட்டி, கொள்ளை அழகு. அப்போதுதான் நடக்கப் பழகியிருக்கும் போல தட்டுத்தடுமாறி நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. யாரேனும் இடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அதை அள்ளி எடுத்துக் கொண்டேன். அதுவும் சிறு சிணுங்கலுமின்றி என்னிடம் ஒட்டிக் கொண்டது.

சில நொடிகளில் ஒரு வயதான பெண்மணி வந்து, ” என்ன தெருவுக்கு வந்துட்டீங்களா.. இது யாரு புது மாமா வா? ” என்று கொஞ்சியவாறு அதை என்னிடமிருந்து அள்ளினார்.

” என் பேத்திதான் தம்பி.. இப்போதான் நடக்க ஆரம்பிச்சுருக்கு.. வீட்டுக்குள்ள ஒரு இடத்துல நின்னாத்தானே.. அதையும் இதையும் போட்டு உருட்டுறதும், ஒடைக்கிறதும். அப்பப்பா.. என்ன சேட்டை.. ஆம்பிளையாப் பொறக்க வேண்டியது தப்பி பொண்ணாப் பொறந்துடுச்சு” அவரது வார்த்தையில் தான் எத்தனை பெருமிதம்.

வெயிலும், நடையும் தொண்டையை அடைக்கவே, ” அம்மா.. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றேன். நண்பர்கள் ஆங்காங்கு நின்று ஆளுக்கொருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு முன்னால் அம்மனுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் போய்க் கொண்டிருந்தது.

இதோ ஒரு நிமிசம்ப்பா என்றவாறு.. ” ஏ..தீபா கொஞ்சம் ஒரு சொம்புல தண்ணி கொண்டு வா” என்றார். எனக்கு அந்தப் பெயரைக் கேட்டதும் படபட வென்று அடித்துக் கொண்டது. ஒரு நிமிடம் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. இது என் தீபாவாக இருக்கக் கூடாது. இது என்ன முட்டாள்தனம். இப்போது எப்படி அவள் என் தீபாவாக முடியும். உயிருக்குயிராய் நேசித்த பின்னும் தவறுதலாய் வந்துவிட்ட ஒரு வார்த்தைக்காக நான் வேண்டாமென்று தூக்கி எறிந்து சென்றவள் தானே அவள். அவள் மட்டும் கொஞ்சம் நிதானித்து யோசித்திருந்தால், எனக்காக கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். நினைக்கும் போதே கண்கள் கலங்கியது. தூசு பட்டது போல் துடைத்துக் கொண்டேன். என்ன செய்வது சில சமயங்களில் வார்த்தை கூட வாழ்க்கையை நிர்ணயத்துவிடுகிறது. அவளாக இருக்காது. அவள் தான் எங்கோ கல்பாக்கத்திற்கு திருமணம் செய்து போய்விட்டாளே. இங்கே எப்படி வர முடியும். இருக்கவே முடியாது.

விதி யாரை விட்டது. வந்து நின்றது தீபாவே தான். கண்களில் இன்னும் கொஞ்சம் ஒளி கூடியிருந்தது. முன்னெற்றிச் சுருள் முடிகூட அப்படியே இருந்தது. கொஞ்சம் பூசினாற் போலிருந்தாள். உண்மையில் இன்னும் அழகாகவேயிருந்தாள். பிறன் மனை நோக்கும் குற்ற உணர்ச்சி தடுக்கவே அந்தக் குழந்தையைப் பார்த்து என் பார்வையை மாற்றிக் கொண்டேன். இப்போதுதான் அது தீபாவை உரித்து வைத்தால் போலிருப்பது தெரிந்தது. அதை அள்ளியெடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் செய்யவில்லை.

தீபாவும் என்னைக் கவனித்துவிட்டாள். எனக்குக் கிடைத்த அந்த ஒரு நிமிட அவகாசம் கூட அவளுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் எவ்வளவு அழகாக சமாளித்துக் கொண்டாள். தண்ணீரைக் கொடுத்துவிட்டு என்னைப் பார்த்து வாஞ்சையாக புன்னகைத்துவிட்டு. ” என் கூடப்படித்தவர் அத்தை. பேர் அரவிந்த் ” என்று அறிமுகம் கூட செய்தாள். இவளால் மட்டும் எப்படி முடிந்தது.

என்னால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. அதற்கு மேல் என்னால் தூசின் மேல் பழி போட முடியவில்லை. நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.

வீட்டிற்கு வந்து மொட்டைமாடியில் மூங்கில் ஊசலில் அமர்ந்து கண் மூடினேன். ஏதேதோ ஞாபங்கள். ஒரு நாள் கூட அவளைப்பற்றி நினைக்காத நாளே கிடையாது. தலைவாரும் போதும், சட்டைப்பித்தன் போடும் போதும், இளம் பச்சை நிறத்தை எங்கு பார்த்த போதும், பூங்காற்றிலே பாட்டு கேட்கும் போதும், விசிறி மடிப்பு வைத்து காட்டன் புடவை கட்டிய பெண்களைப் பார்க்கும் போதும் எப்படி அவளை மறக்க முடியும். இனிமேலும் அவளை மறக்க முடியுமா என்று தெரியவில்லை. அவள் மறந்துவிட்டாளே. எல்லாவற்றையும் நேற்று போட்ட கோலத்தை நீருற்றி அழிப்பது போல் துடைத்தெறிய அவளால் மட்டும் எப்படி முடிந்தது.

மறதி என்பது வரம் தான்.

– ஜனவரி 09, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *