கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 15,387 
 

வாழ்க்கையே ஒரு சுமைதான். சுமை என்றால் நாமே விரும்பினாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. அது தானாகத்தான் ஏறும்; தானாகவேதான் இறங்கும். இடையில் எத்தனையோ சுமைகளை நாமே ஏற்றியும் வைத்துக்கொள்ளலாம். இறக்கியும் போட்டுவிடலாம். அதற்குத் துன்பச் சுமை, துயரச் சுமை, குடும்பச் சுமை, குட்டிச் சுமை என்று எப்படி வேண்டுமானாலும் பெயரும் வைத்துக் கொள்ளலாம்.

அலுவலக விவகாரங்களினால் ஏற்பட்ட தலை வேதனையோடு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த எனக்கு இந்த வார்த்தைகள்தான் சற்றே ஆறுதலாயிருந்தன. இந்தக் கருத்துக் கருவூலம் நான் பெற்றுப் போட்டதல்ல. ஆபீஸிலும் வீட்டிலுமாய் எனக்கு மாறிமாறிக் கிடைக்கும் தொல்லைகளினூடே இப்படித் தத்துவக் கருத்தரிக்கவெல்லாம் நேரமேது?

நான் ஒரு ரசிகன். ‘பரம ரசிகன்’ என்றுகூட எனக்குப் பரிச்சயப்பட்ட எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் பலர் புகழ்வதுண்டு. நானும், “ஏதோ என் மனத்தில் பட்டதைச் சொன்னேன்” என்று தன்னடக்கமாகச் சொல்லி வைப்பதுமுண்டு என்றாலும், எழுத்தாளன், கவிஞன், பேச்சாளன், ஓவியன் என்று தங்களை இனம் பிரித்துக்கொண்டுவிட்டவர்களின் மத்தியில் பரம ரசிகன் என்ற பொதுப்பெயரோடு பழகுவதில் எனக்குப் பெருமையுண்டு.

ஒரு ரசிகனாவது இருக்கிறதே இது, எழுதுவது பேசுவது எல்லாவற்றையும்விட ஒரு கடினமான விஷயம் என்பது எனது அபிப்பிராயம். இந்த ரசனை ஒரு சரியான பித்து. ஏனெனில், படிப்பதை, பார்ப்பதை, கேட்பதை, வெறுமனே ரசித்துவிட்டுப் போவதோடு அது விட்டுவிடுவதில்லை. அதைப் படைத்தவனையும் பார்த்து நாலு வார்த்தை பாராட்ட வேண்டும் என்கிற எண்ணத்தையும் அது விதைத்துவிடுவதால், அவரவர்களின் வீடு தேடிச்சென்று அவர்களை அறிமுகப் படுத்திக்கொள்ளச் செய்துவிடும். அந்த அறிமுகம் அப்புறம் நட்பாகக் கிளைத்து, கொடுக்கல் வாங்கல்வரை வந்துவிடுகிற போதுதான் தொல்லைகளே ஆரம்பமாகின்றன. பக்கத்தில் தேவைகள் வாய்பிளந்து நின்றாலும் மற்றவருக்கு உதவ வேண்டிய ஓர் அவசியம் ஏற்பட்டுவிடும். அப்படி உதவுவதிலும் ஓர் ஆத்ம திருப்தி இருக்கும்.

இப்படி அறிமுகமானவர்கள் எனக்கு ஏராளம். ஆபீஸ் நேரம் முடிந்த பிறகும், அது வருமுன்பும், அவர்களோடு இலக்கிய இலக்கணங்களைப் பற்றி மணிக்கணக்கில் அலுக்காமல் சலிக்காமல் பேசிக்கொண்டிருப்பதும், இரவு, நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பி என் இல்லாளின் வாயால் சகஸ்ரநாம அர்ச்சனைகளைப் பெறுவதும் , எத்தனையோ வேலைகள் காத்திருக்க, ஞாயிற்றுக் கிழமை என்கிற ஒரு முழு நாளை இலக்கிய விமர்சனங்களுக்குப் பலியிடுவதும் என்னைப் பொறுத்தவரை சகஜமாகிவிட்ட நிகழ்ச்சிகள். ரசிகனாயிருப்பதில் உள்ள தொல்லைகளில் இது ஒரு பகுதி.

ஸ்கூல் ஃபைனல் படித்துக் கொண்டிருக்கும் மூத்தவன் ராஜியிலிருந்து, முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைத்திருக்கும் கடைக்குட்டி கீதா வரை பாடப் புத்தகங்களுக்கும் இரு நூறு பக்க நோட்டுக்களுக்கும் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்கையில் எந்தெந்தப் பதிப்பகங்களில் புதுப்புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தேடியலைந்து வாங்கி வந்து அவர்களின் குமுறலைக் கொட்டிக்கொள்வதும் மற்றொரு பகுதி.

இலையில் சாதத்தைப் போட்டு, சாம்பாரையோ ரசத்தையோ கொட்டிச்,”சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்” என்று என் மனைவி தொண்டை வறள் அலறுகிறபோது கையிலிருக்கும் நாவலின் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் ஆழ்ந்திருந்து அவளுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதும், விருந்து விசேஷம் என்று எழுத்தாள நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பிவிட்டு, அவர்களைத் தக்க முறையில் கவனிக்கும் முயற்சியில் நாலு ஊர் தாண்டி வந்திருக்கும் உறவினர்களைக் கவனிக்க முடியாமல் போய், அவர்களின் குறைபாட்டுக்கு ஆளாவதும் வேறொரு பகுதி. இப்படித் தொல்லைகளைப் பகுதி வாரியாகப் பிரித்துக்கொண்டு போகலாம். நன்மைகள் என்று பார்க்கையில், இன்ன எழுத்தாளர் எனது நண்பர் என்று சொல்லிக் கொள்வதையும், இதோ, இப்படி நடந்து கொண்டிருக்கையில், அந்த எழுத்தாளர் ஏதோ ஒரு நாவலில் உதிர்த்து வைத்த ஒரு சித்தாந்தக் கருத்தை அசை போட்டுக்கொண்டு நடப்பதையும் தவிர்த்து வேறெதுவுமில்லைதான்.

இதோ, இப்போது நடந்து போய்க்கொண்டிருக்கிறேனே, இதுவும்கூட அந்தத் தொல்லைகளில் ஒன்றுதான். எழும்பூரிலிருக்கிற அலுவலகத்திலிருந்து திருவல்லிக்கேணியிலிருக்கிற வீட்டுக்கு நடந்துகொண்டிருக்கிறேன் என்றால் பஸ் கட்டணத்தைப் பார்த்து மிச்சம் பண்ணுவதற்காக அல்ல. போகிற வழியில் சிலரைப் பார்த்துச் சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போகலாம் என்கிற எண்ணம்தான். இப்போது தெரிகிறதா ரசிகனாயிருப்பதில் உள்ள சிரமங்கள்?

நான் ஒரு சிமண்ட் கம்பனியில் மேனேஜராய் அங்கம் வகிப்பவன். குழந்தை குட்டி என்று பெரிய குடும்பம் என்னுடையது. வருகிற வருவாயில் எப்படியோ காலம் போகிறது. இடையில் நோய் நொடி என்று வீட்டுக்கு விருந்தாய் வருகிறவர்களைக் கவனிக்கிற முயற்சியில் துண்டுவிழும் பட்ஜெட்டை சரிக்கட்டுவதற்காக நாலு பதிப்பகங்களில் ப்ரூஃப் திருத்திக் கொடுப்பதுண்டு. இதில் வருவாயைக் கருதுகிற நோக்கத்துக்கு இருபத்தைந்து சதவிகிதம்தான். ப்ரூஃப் திருத்துகிற சாக்கில் வெளிவராத புத்தகங்களையும் ஒரு மூச்சுப் படித்துவிடலாம் என்கிற சுயநலத்துக்கு எழுபத்தைந்து சதவிகிதமுண்டு.

எழும்பூரைக் கடந்து சிந்தாதிரிப் பேட்டை வாராவதியைச் சமீபித்திருந்தேன். காற்று ஜிலுஜிலுவென்றது. விலைவாசிகள் மலையாய் உயர்ந்துவிட்ட இந்த நாளில் ஒரு நயா பைசா செலவழிக்காமல் கிடைக்கிற சுகம் இது ஒன்றுதான். மாலை நேரத்து முதுவெயில் வேறு உடம்புக்கு இதம் அளித்தது.

சற்று நெருக்கடியான பிரதேசம் இது. சாலையில் போக்குவரத்து துரித கதியில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிளாட்ஃபார்த்திலும் மனிதர்கள் நெரிபட்டனர். அந்த நெருக்கடியில்கூட ஓரிடம் எந்த மனிதக் கால்களாலும் தீண்டப்படாமல் அநாதையாகக் கிடப்பதைக் கவனித்த நான், அங்கே எட்டிப் பார்க்க எத்தனித்தபோது, “பிச்சைக்காரக் களுதைங்க! நடை பாதையிலே படுத்துக்கிட்டுப் போறவங்க வாரவங்க உசிர வாங்குறானுவ. எத்தனை அரசாங்கம் மாறினாலும் எந்த அரசாங்கமும் இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்தை மாத்திரம் ஒழிக்காது போலிருக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டு போனார் ஒருவர்.

நான் அங்கே எட்டிப் பார்த்தேன். உண்மைதான். பிளாட்ஃபாரத்தில் குறுக்காய்க் கிடந்தான் ஒருவன். தோலுரிந்து விட்டால், பேசாமல் மியூசியத்தில் வைத்துவிடலாம். கபால ஓட்டிலிருந்து கால் எலும்பு வரை அப்பட்டமாய்த் தெரிந்தன. உடம்பை ஒரு பிடிக்கும் அடக்கிவிடலாம் போலிருந்தது. பக்கா எலும்புருக்கி நோயில் சிக்கிக் கிடப்பவன் என்பதைப் புரிந்து கொள்ள நேரமாகவில்லை எனக்கு. மூச்சை விட்டு மூச்சை இழுக்க அவன் ஒரு ஜீவ மரணப் போராட்டமே நிகழ்த்திக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் மேலாக அவன் அவ்வப்போது குரல் கொடுக்க முயன்று கொண்டிருந்தான். எல்லாவற்றையும்விட விந்தையான விஷயம் என்னவென்றால், அவன் தலைமாட்டில் ஒரு மருந்து பாட்டிலையும், நாலைந்து மாத்திரை புட்டிகளையும் வைத்துக் கொண்டிருந்ததுதான். இந்த நிலையில்கூட இதையெல்லாம் தின்று, இருக்கிற உயிரை நிறுத்தி வைத்துக் கொள்வதில் அவனுக்குத்தான் எத்தனை ஆசை!

நான் நினைத்தேன்: ‘இவன் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? இவனால் யாருக்குத்தான் என்ன நன்மை?’

முதலில் சாதாரணமாக அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த எனக்கு ஏனோ திடீரெனக் கழிவிரக்கம் சுரந்தது. பளிச்சென்று வலக்கை பாக்கெட்டைத் துழாவிய அதே சமயம் மனம் எனது எழுத்தாள நண்பரொருவரின் தர்க்க வாதக் கருத்தை எண்ணிப் பார்த்தது.

’சுயநலக் கலப்பில்லாத தர்மம் என்று ஒன்று இந்த உலகிலேயே இல்லை. இருக்கவும் முடியாது. ஒரு பிச்சைக்காரனைப் பார்க்கிறபோது உங்கள் மனம் அனுதாபப் படுகிறது. அதன் காரணமாக இரக்கம் சுரக்கிறது. இரக்கம் வேதனையாகி உங்களைத் துன்பப் படுத்துகிறது. அவனுக்கு ஏதாவது தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது. நீங்கள் போடப்போகிற இரண்டொரு பைசாக்களில் அவனுக்கு எந்த நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை என்பது உங்கள் பகுத்தறிவுக்கு நன்கு புலப்பட்டும்கூட நீங்கள் தர்மம் பண்ணுகிறீர்கள் என்றால் அது, அவனால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட அந்த வேதனையை ஆற்றிக் கொள்கிற பச்சைச் சுயநலம்தான்’!

நான் பாக்கட்டிலிருந்த கையை வெளியே இழுத்துக் கொண்டேன். பத்துப் பைசாவை தாரை வார்த்துவிட்டு, சுயநலக்காரன் என்று மனச்சாட்சியால் இடித்துக் காட்டப்படுவதைவிட அவனை ஏறிட்டும் பார்க்காமல், வழிப்போக்கனாய் போய்விடுவது சாலச் சிறப்பில்லையா?

நான் பேசாமல் நடந்துவிட்டேன். மனம் ஏனோ அந்தப் பிச்சைக்காரனுக்காக அழுது வடிந்தது. எலும்புருக்கி நோயினால் அவன் பட்டிருக்கும் அவஸ்தைகளை கற்பனை செய்ததுமே நெஞ்சம் உருகிப் போயிற்று. அவனும்தான் வாழ்கிறான். யாருக்கும் எந்தப் பயனுமில்லாமல். தானே தனக்கொரு சுமையாய், பார்ப்போரின் அனுதாபத்துக்கும், அருவருப்புக்கும், ஆத்திரத்துக்கும் ஆளாகி அவனும்தான் உயிர் பிழைத்திருக்கிறான். மருந்தையும் மாத்திரையையும் குடித்து, போகிற உயிரை யாருக்காகப் பிடித்து வைத்திருக்கிறான்?

கையில் ஏந்தியிருந்த காப்பித் தம்ளரை உதட்டில் வைக்கக்கூட மறந்து அந்தப் பிச்சைக்காரனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிக் கிடந்த என்னை, “என்ன சர்மா சார், என்ன அப்படியொரு யோசனை?” என்று தோளைப் பிடித்து உலுக்கிச் சுய உணர்வுக்குக் கொண்டு வந்தார் அந்த எழுத்தாள நண்பர்.

“ஒன்றுமில்லை” என்று காப்பியை இரண்டே மடக்கில் வயிற்றில் ஊற்றிக்கொண்ட என்னால் அந்தப் பிச்சைக்காரனைப் பற்றி யாரிடமாவது விசாரித்துத்தான் ஆக வேண்டும் என்று தோன்றவே, அருகிலிருந்த அந்த எழுத்தாளரிடமே மடமடவென்று ஒப்பித்தேன், கண்டதைக் கண்டபடி.

“ப்பூ, இவ்வளவுதானா? இதைவிட உருக்கமான பாத்திரங்களையெல்லாம் என் கதைகளில் சந்தித்திருக்கலாமே, நீங்கள்?” என்றார் அவர் சாதாரணமாய்.

நான் சொன்னேன்: “எனக்கு அவனை அந்த நிலையில் பார்த்ததுகூட வேதனையாயில்லை. அந்த நிலையிலும் அவனுக்கு வாழ்வதில் எத்தனை ஆசையிருந்தால், மருந்தும் மாத்திரையும் வாங்கி வந்திருப்பான்? அவனுக்கு அந்த ஆசையை உண்டு பண்ணிய அந்த விஷயம் எது? யோசித்துப் பாருங்கள் சார்”.

எழுத்தாளரும் ஒரு கணம் சிந்தனையில் மூழ்கிப் போனார். மறுகணம் துள்ளிக் குதித்தார். “சபாஷ்! அருமையான கரு! அற்புதமாய் ஒரு கதை எழுதிக் காட்டுகிறேன் பாருங்கள்”

“அவசியம் செய்யுங்கள். அதைப் படித்துப் பார்த்த பிறகாவது இந்த ஜனங்களுக்கு இப்படிப்பட்டவர்களின்மீது இரக்கம் ஏற்படட்டும்!” என்று கூறிவிட்டு எழுந்தேன். அவர் இருக்கச் சொல்லவில்லை. நான் தந்திருக்கும் கருவுக்கு உருக்கொடுக்கப் போகிறாரே அவர்!

எழுத்தாளரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தேன் நான். மனம் சற்றே ஆறுதலடைந்திருந்தது. நான் கண்ட காட்சியை அவர் தம் பேனா வழியாக வடித்து, லட்சக் கணக்கான மக்கள் உணருகிற மாதிரி செய்யப் போகிறாரே, அது ஒரு பெரிய நிறைவில்லையா?

ராயப்பேட்டை மணிக்கூண்டைக் கடந்து, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அடிபோடத் தொடங்கினேன் நான். திடீரெனப் பின்னாலிருந்து, “ஹலோ சார்” என்ற அழைப்புக் குரல்…அறிமுகப்பட்ட அந்தக் குரலுக்குரியவரைத் திரும்பிப் பார்த்தபோது அவரே என்னை நெருங்கிவிட்டார். அவர் ஒரு பேச்சாளர். தீவிர அரசியல்வாதி. மேடையேறி முழங்கினால், சொல்லுக்குச் சொல் உணர்ச்சி கொப்புளிக்கும் வன்மை அவர் பேச்சுக்கு உண்டு. எங்கோ ஒரு கூட்டத்தில் அவர் பேசியதைக் கேட்டுவிட்டு, அடுத்த நாளே அவர் வீடு தேடிப்போய் அறிமுகம் பண்ணிக்கொண்டவன் நான்.

குசல விசாரணைகள் முடிந்தன. “சமீபத்தில் உங்கள் கூட்டம் எதுவுமில்லையே?” என்று கேட்டேன்.

“இல்லாமலென்ன? வருகிற ஞாயிற்றுக் கிழமை மெரீனாவில் ஒரு கூட்டமிருக்கிறதே!” என்றார் அவர். பின்னர், “ஏன், ஒரு மாதிரியிருக்கிறீர்கள்?” என்று வேறு கேட்டு வைத்தார்.

என்னால்தான் எதையும் அடக்கி வைத்திருக்க முடியாதே! மடமடவென்று அந்த வாராவதிப் பிச்சைக்காரனைப் பற்றிக் கொட்டித் தீர்த்தேன், உணர்ச்சிகரமாய்.

“சரியாகச் சொன்னீர்கள் நீங்கள்! எத்தனை ரோடு போட்டாலென்ன? எத்தனை வீடு கட்டினாலென்ன? நாட்டில் நிலவுகிற வறுமையையும், பஞ்சத்தையும் நீக்க முடியாமல் இப்படிப்பட்ட மனிதர்களை மலிய விட்டுவிட்ட நாடு என்ன நாடு சார்? இன்றைக்கு நீங்கள் பார்த்தது ஒரு பிச்சைக்காரனையல்ல, நம் நாட்டின் பலவீனமான நிலையை. க்‌ஷீனித்துப் போய்விட்ட பொருளாதாரத்தை. அருமையான பாயிண்ட் சார் இது” என்று ஒரு குட்டிப் பிரசங்கமே அடித்த அவர், “நீங்கள் அவனை எங்கே பார்த்தீர்கள்?” என்று கேட்டு, தமது டைரியிலும் குறித்துக் கொண்டார்.

எனக்கோ எல்லை மீறிய திருப்தி. இரண்டு பேரிடம் என் நெஞ்சைக் குமுறலைச் சொல்லி இரு வேறான வழிகளில் அதை மக்களுக்குப் புரியவைக்க வழிபண்ணிவிட்ட நிறைவில் அவரிடம் விடை பெற்றேன்.

சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவிலிருந்தது என் வீடு. நேராக அங்கேயே போய்விடலாமா என்று நினைத்தவாறே கடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டுதான். அதற்குள் அங்கு போய் என்னத்தை வெட்டி முறிக்கப் போகிறோம் என்று எண்ணமிட்டவாறு பெரிய தெருவுக்குள் புகுந்து நடந்தேன். அங்கே எனக்குப் பரிச்சயமான ஒரு ஓவிய நண்பர் இருந்தார். அவரோடு கொஞ்சம் அளவளாவிவிட்டுப் போகலாம் என்பது எனது திட்டம்.

நல்ல வேளை, நான் போன நேரத்தில் அவர் வீட்டில்தான் இருந்தார். ”வாங்க சர்மா சார், ஏது இவ்வளவு தூரம்?” என்று உற்சாகமாக வரவேற்று இருக்கையும் தந்தார்.

“ஒன்றுமில்லை, ஆபிசீலிருந்து மெல்ல நடையைக் கட்டிவிட்டேன். வழியில் நண்பர்களைச் சந்தித்தவாறே வீடு சேர்கிற திட்டம்” என்றேன்.

“அடேயப்பா! ஆபிசிலிருந்தேவா நடை? ஏனிப்படி?” என்று அவர் தேதியைக் கடைக்கண்ணால் கவனிக்கவும் எனக்குச் சங்கடமாகிவிட்டது. பேச்சை மாற்ற வேண்டி அந்தப் பிச்சைக்காரன் பிரச்சனையைப் பேசத் தொடங்கினேன். கண்டதை

விள்ளல் விள்ளலாய் விவரித்த நான், “என்னை ரொம்பவும் உருக்கிவிட்ட காட்சி சார் அது” என்று முடித்தேன். அதற்குள் அவர் கைவிரல்கள் சூனியத்தில் கோடு போடத் தொடங்கிவிட்டன.

”என்ன சார் யோசனை?” என்று நான் கேட்டபோது அவர் சொன்னார்: “நீங்கள் சொன்னதை வைத்து ஒரு உயிருள்ள ஓவியத்துக்கு ஸ்கெட்ச் போட்டுப் பார்த்தேன். அருமையாய் வரும்”.

“செய்யுங்கள் சார்” என்றேன் நான் உற்சாகமாய்.

ஒருவார காலம் ஓடி மறைந்திருக்கும்.

தற்செயலாக அன்று மாலை மெரீனாவுக்குச் சென்றிருந்த என் காதுகளில், சற்றுத் தொலைவில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து உணர்ச்சிகரமான சொற்பொழிவொன்று வந்து விழுந்தது. பேசியது எனது நண்பர்தான் என்பதை பேசப்பட்ட பாணியிலிருந்தே கண்டு கொண்ட நான், மெல்ல அதை நோக்கி நடந்தேன்.

அந்தப் பிச்சைக்காரனைப் பற்றித்தான் அவர் விவரித்துக் கொண்டிருந்தார். அந்த விவரிப்பில்தான் எத்தனை உருக்கம்! எத்தனை ஆவேசம்! எத்தனை வன்மை! தாமே நேரில் கண்டதாய் எடுத்துக் கூறிய அவர், எவ்வளவு சாதுரியமாய்த் தாம் சார்ந்துள்ள கட்சி அரசியலோடு அந்தப் பிரச்சனையை இணைத்துவிட்டார் என்கிறீர்கள்!

கூட்டம் முடிந்து நான் அவரைப் பாராட்டும் நோக்கத்தில் நெருங்கியபோது அவரைச் சுற்றி ஏகக் கூட்டம். அன்றைய சொற்பொழிவைப் பற்றி விதவிதமான விமரிசனங்கள்! ஒருவர் விக்கி விக்கி அழுதேவிட்டாராம்!

கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “நீங்க இன்னிக்குப் பேசின பேச்சுக்கு இரண்டாயிரம் கூடக் கொடுக்கலாம். ஆனால், இந்த இரு நூற்றைத்தான் எங்களால் தர முடிகிறது” என்றவாறே கற்றை நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னால் அவரை நெருங்க முடியவில்லை. ஏனெனில் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வந்தவர்களும், பாராட்ட வந்தவர்களுமாய் ஏகக் கூட்டம்.

நான் பேசாமல் திரும்பி விட்டேன்.

அதற்கடுத்த மூன்று நாள் கழித்துப் பிரபல வாரப் பத்திரிகையொன்றில் ‘இலட்சியக் கதை’ என்று தனித்தகுதி தரப்பட்டுப் பிரசுரமாகியிருந்த எனது எழுத்தாள நண்பரின் சிறுகதையைப் படித்து மெய் சிலிர்த்துப் போனேன். அதே பிச்சைக்காரனை மையமாக வைத்து உள்ளத்தைப் பிழியத் தக்க வகையில் எழுதி இருந்தார் அவர். கடைசி பாராவாய், ‘மதுபான வகைகளோடும் மாதுகளின் மடிமீதும் மல்லாடிக் கொண்டிருக்கிற சீமான்களும் சரி, உண்ண ஒருவேளை உணவின்றி, அந்தச் சிந்தாதிருப் பேட்டை வாராவதியின் மீது உயிரையே குரலாய்த் திரட்டி, ஓலமிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பிச்சைக்காரனும் சரி, மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். மனிதாபிமானம், மனிதாபிமானம் என்கிறார்களே, அது எங்கே இருக்கிறது?’ என்ற சாடலோடு முடித்திருந்தார் அவர்.

இன்னொரு நாள் அந்த ஓவிய நண்பரைச் சந்தித்தபோது தாம் வரைந்த ஓவியத்தைப் பணக்காரர் ஒருவர் ஐந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரிவித்து ஒரு நன்றியும் சொன்னார். என்ன வேடிக்கை இது! அந்தப் பிச்சைக்காரனுக்கு ஒருவேளை உணவிட யாருக்கும் மனமில்லை, ஆனால் அவனை வைத்து வரையப்பட்ட ஓவியத்தின் விலை, ஐந்நூறு ரூபாயா?

நான் யோசித்துப் பார்த்தேன். இத்தனைக்கும் காரணமான அந்தப் பிச்சைக்காரனுக்கு நன்றி செலுத்த யாருமே இல்லையா? அவனைப் பற்றிய கதையையும், அவனைப் பற்றிய பேச்சையும், அவனைப் பற்றிய படத்தையும் அனுதாபத்துடன் ரசித்தவர்களில் ஒருவர்கூட அவனை நினைவுகூறவில்லையா?

நான் அந்தக் கணமே தீர்மானித்துக் கொண்டேன். மூன்று பேருடைய பேருக்கும் புகழுக்கும் காரணமாயிருந்த அவனை நானே கௌரவித்துவிடுவது என்று. கௌரவம் என்றால் அவனைப் பொறுத்தவரை ஒரு ஐந்து ரூபாயை முழுசாகத் தருவதே ஒரு பெரிய கௌரவம்தானே?

மறுநாள் அலுவலகம் முடிந்து கால்நடையாகவே சிந்தாதிரிப் பேட்டை வாராவதியை வந்தடைந்தேன் நான். அன்றைய தினத்தைப் போலவே போக்குவரத்து மிகுந்திருந்தது. அன்றைய தினத்தைப் போலவே ஜிலுஜிலுவென்ற காற்றும், உடம்புக்கு இதம் சேர்க்கும் முது வெயிலும் வீசிக்கொண்டிருந்தது. ஆனால் அன்றையை தினத்தைப் போல அவனை மாத்திரம் அந்த இடத்தில் காணவில்லை. எங்கே போனான்?

அக்கம் பக்கம் தேடிப்பார்த்தேன். எங்குமே இல்லை. எங்கே போனான்? அவனால் எப்படிப் போகமுடியும்?

வாராவதி இறக்கத்தில் தன் ரிக்‌ஷாவை நிறுத்தி வைத்து அதன் ஏர்க்காலில் உட்கார்ந்தவாறே சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த ஒருவனை அணுகி விசாரித்தேன்.

“அவனா சார், ஐயோ பாவம்! க்‌ஷயம் சார் அவனுக்கு! கெடந்து லோல் பட்டான் கொஞ்ச நாளா. நேத்து பார் சார், பொட்டுனு பூட்டான். தர்ம சாவு எடுக்கக்கூட யாருமில்ல சார். பொணம் நாற ஆரம்பிச்சதும்தான், கார்ப்பரேஷன் லாரி வந்து போட்டுகினு போச்சி”.

எனக்கு நெஞ்சமே விண்டுவிட்டது. அவன் செத்துவிட்டான். பிச்சை கேட்டுக் கத்திக் கத்திப் போடுவார் யாருமின்றியே செத்திருக்கிறான் அவன். அவனை இலக்கியமாயும்,சொற்பொழிவாயும், கலைப்படைப்பாயும் ரசித்தவர்கள் அவனுடைய உண்மை வாழ்க்கைக்கு உதவவில்லை. அவனை வைத்து மூன்று பேர் வியாபாரம் பண்ணிப் பெயரும் புகழும் பெற்றிருக்கிறார்கள் அங்கே. அத்தனைக்கும் மூல காரணமானவனோ…?

எனக்கு ஒன்று புரிந்தது. அது, அவன் எதற்காக வாழ்ந்தான் என்கிற உண்மை. மூன்று பேருக்காக. ஆமாம். மூன்றே பேருக்காகத்தான் அவன் வாழ்ந்தான்.

நான் திரும்பி நடந்தேன். நானோர் அசடன். ஆமாம். மனித உலகத்தின் தர்மங்களைப் புரிந்துகொள்ள முடியாத மடையன். சாகிறவனைப் பற்றி எழுதிப் பிழைப்பது எழுத்தாள தர்மம். சாகிறவனைப் பற்றிப் பேசிப் பிழைப்பது பேச்சாள தர்மம். சாகிறவனைக் காட்டிப் பிழைப்பது, ஓவிய தர்மம். இவற்றையெல்லாம் கலை, இலக்கியம் என்கிற புனிதத் தன்மைக்கு உயர்த்திவைத்து ரசித்துக் கொண்டிருப்பது என் போன்ற ரசிகர்கள் தர்மம். மொத்தத்தில் இவையெல்லாமே மனித தர்மங்கள்தானே?

(ஆனந்த விகடன் 24.03.68)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *