கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,245 
 

சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால தாமதமாக ஓடிவந்து பயணிகள் சிலர் தங்கள் பெட்டிகளைப் பார்த்து அவசரம் அவசரமாக ஏறிக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்தவர்களை வழியனுப்ப வந்திருந்த உறவுக்காரர்களும் நண்பர்களும் நடைபாதையை நிறைத்துக் கொண்டு நின்று அவசரமாய் ஓடி வந்து ஏற முயற்சித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலைத் தந்தனர். “ப்ளீஸ்… கொஞ்சம் வழிவிடுங்க… வழி விடுங்க’ என்று கெஞ்சிக் கெரவி முன்னேறிய பயணிகளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இரவு இந்த ரயிலை விட்டுவிட்டால் இன்றே திருநெல்வேலிக்குச் செல்ல வேறு ரயில் இல்லை. மறுநாள்தான் பார்க்க முடியும். கோடை விடுமுறை என்பதால் கூட்டம் பிதுங்கி வழிந்ததற்கும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பதிவு செய்து கொண்டு வந்தவர்களின் பாடு பரவாயில்லை. “உடன் டிக்கெட்’ பெட்டியில் ஏறியவர்கள்தான் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் நெருக்கடியில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்கள். காற்றும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. பகல் நேர வெப்பத்தின் தாக்கம், இரவிலும் முக்காடு போட்டுக் கொண்டு மனித சுவாசங்களைப் பகிரங்கமாய் கபளீகரம் செய்தது. உடன் டிக்கெட் பெட்டிகளின் பயணிகள் புழுக்கத்தில் வெந்து “செத்துக் கொண்டிருந்தார்கள்’. எப்போதடா ரயிலை எடுப்பார்கள்? வாசல் வழியே உள் நுழையும் காற்றில் சுகப்பட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள்.
மனிதர்கள்அவர்களில் உத்தமனும் ஒருவனாக நின்றிருந்தான். வாசலருகே நெருக்கிக் கொண்டு நின்றவர்களின் இடையில் தன் முகத்தை மட்டும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். சற்று முன்புதான் அவன் ரயிலில் வந்து ஏறியிருந்தான். சாம்பல் நிறப் பேண்ட்டும் வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்தான். நெருக்கடியில் சட்டை கசங்கி வேர்வையில் நனைந்து போயிருந்தது. எத்தனை முறைகள்தான் கர்ச்சீப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தாலும் சுனை பொங்கி நீர்கொட்டியதுபோல தொடர்ச்சியாய் வேர்த்து வடிந்தது. இடது கையில் இரவு நேரத்துக்குரிய சோற்றுப் பொட்டலத்தை கேரி பேக்கிற்குள் போட்டு எச்சரிக்கையாகப் பிடித்திருந்தான். கூட்டத்தில் அது பிதுங்கிக் கிழிந்துவிடக் கூடாது என்ற கவலை இருந்தது அவனுக்கு. வீட்டிலிருந்து அவன் புறப்பட்ட நேரத்தில் அரக்கப் பரக்க ஓடி அக்கறையாய்ச் சமைத்துக் கொடுத்திருந்தாள் அவன் அம்மா.
ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியானதும், ரயில் ஊர்ந்து கொள்ளத் துவங்கியது. ஓட்டமும் நடையுமாய் விரைந்து வந்த வாலிபன் ஒருவன், உத்தமன் நின்றிருந்த பெட்டியைக் குறிவைத்தே ரயிலைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். வாசலில் நின்றிருந்தவர்கள் அவனை விரட்டுவதுபோலத் தெரிந்தது. ரொம்பவும் களைத்துப் போன முகபாவனையில் அவன் மீண்டும் மீண்டும் அந்தப் பெட்டியில் கால் பதிக்கவே முயற்சித்துக் கொண்டிருந்தான். இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கப் போகிறான்? கொஞ்ச நேரத்தில் ரயில் “தம்’ கட்டி ஓடத் துவங்கிவிடும். எவ்வளவு வேகத்துடன் ஓடிவந்தாலும் அதைப் பிடித்துவிட முடியாது. அப்படியே அதன் வாசலில் அவன் கால் மிதித்துக் கொண்டாலும் சுதாரித்து ஏறுவதற்குள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருக்கும் அவனுக்கு. ஒருவேளை பிடிமானம் கிடைக்காமல் நிலைத் தடுமாறி கீழே விழுந்துவிடவும் சாத்தியம் இருக்கிறது. அநியாயமாய் ஓர் உயிர் போவதை விரும்பவில்லை உத்தமன். வாசலில் நின்றிருந்தவர்களின் ஊடே வலுக்கட்டாயமாய் தன் தலையை நுழைத்து உடலை முன்னால் நகர்த்தி விளிம்புக்கு வந்து நின்றான். அதறபதற ஓடிவந்து கொண்டிருந்த வாலிபனுக்குத் தன் கையை நீட்டி சட்டென்று அவன் பற்றிக் கொண்டதும், சடக்கென்று அவனை உள்ளே இழுத்துக் கொண்டான். அவன் மேலேறி வந்த வேகத்தில் விளிம்பில் நின்றிருந்தவர்கள் சற்று விலகிப் போயிருந்தார்கள். உத்தமனுடன் ஒட்டி உரசி நின்று கொண்டான் அவன். நன்றிப் பெருக்கோடு உத்தமனைப் பார்த்து நறுவிசாய் புன்னகைத்துக் கொண்டான். கரணம் தப்பினால் மரணம் தரும் காரியம் இது. காலாகாலத்தில் வந்திருந்தால் இப்படிக் கஷ்டப்பட்டு ஏறியிருக்க வேண்டுமா? என்று கரிசனையுடன் நினைத்துக் கொண்டான் உத்தமன். வாலிபனுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. வெள்ளை வேட்டியும் பச்சை நிறத்தில் கறுப்புக் கட்டங்கள் போட்ட சட்டையும் அணிந்திருந்தான். முகத்தில் இப்போதுதான் அரும்பாக மீசை முளைக்கத் துவங்கியிருந்தது. சுருட்டைத் தலை. சொக்கப்பனை மாதிரி உடல் வளர்த்தி. உத்தமன் அவனின் தோளுக்குத்தான் இருந்தான். ஆனல் வயதில் அவனை விட மூத்திருந்தான்.

***
“”கொஞ்சம் சீக்கிரமாய் வந்திருக்கக் கூடாது தம்பி? நமக்காக ரயில் காத்துக் கிட்டு நிக்குமா?”
“”மொதலாளி இப்பதான் சார் விட்டாரு. அதறபதற ஓடி வர்றென்”
“”எங்க வேலப் பாக்கற?”
“”அசோக் நகர்ல ஒரு ஹோட்டல்ல சமையல்காரனா இருக்கேன் சார்”
“”இப்ப எங்க போற?”
“”திருநெல்வேலிக்கு. சார் நீங்க?”
“”நானும் திருநெல்வேலிக்குதாம்பா”
“”இங்க வேலை பாக்கறீங்களா சார்?”
“”ஆமாம்ப்பா. ஹார்பர்ல கிளார்க்கா இருக்கென். என் வொய்ஃப் பேறு காலத்துக்குப் போயிருக்கா. அவளப் பாத்துட்டு வரலாமின்னு போயிக்கிட்டிருக்கென்”
“”ஒங்க சொந்த ஊரு மெட்ராசுதானா சார்?”
“”இல்லப்பா… கல்லிடைக்குறிச்சி. திருநெல்வேலி மாவட்டந்தான்”
“”அங்கயிருந்தா சார் இங்க வந்து வேலைப் பாக்கறிங்க?”
“”வேல கெடச்சா எங்கேயும் வந்து பாக்க வேண்டியதுதானப்பா”
“”மெட்ராசுல வீடு… சொந்த வீடா சார்?”
“”குவார்டர்ஸ் குடுத்திருக்காங்க… அம்மா இப்போ எங்கூட இருக்காங்க”
“”ஹார்பர்ல வேல பாக்கறென்னு சொல்றீங்க. ட்ரெயின்ல் ரிசர்வ் பண்ணிட்டு வர வேண்டியதுதானே சார். ஏன் இப்படி நெருக்கியடிச்சிக்கிட்டு நின்னு கஷ்டப்படணும்?”
“”ஒரு மாசத்துக்கு முன்னே சீட்டெல்லாம் ரிசர்வ் ஆயிருச்சி தம்பி. இது வெக்கேஷன் டைம் இல்லியா. ஸ்கூல்களுக்கு எல்லாம் லீவு விட்டிருப்பாங்க. அதான் அட்வான்ஸô வந்து அவுங்க புக் பண்ணியிருப்பாங்க”
“”ஆமா சார். நானும் ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்து ரிசர்வ் பண்ண வந்தென். எல்லாம் ரிசர்வ் ஆயிட்டுன்னு சொல்லிட்டாங்க”
“”என்ன விசயமா போய்க்கிட்டிருக்க?”
“”எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க. பொண்ணு பாக்கப் போய்க்கிட்டிருக்கென் சார்”
“”நீயும் அவ்வளவு தூரத்திலயிருந்து இங்க வந்து வேலப் பாக்கறியே… எப்படி?”
“”என் சொந்தக்காரர்தான் சார் ஓட்டல் வச்சிருக்காரு. எனக்குப் படிப்பெல்லாம் அதிகமா கெடையாது. அஞ்சாங் கிளாசோடு நின்னுக்கிட்டென். அதான் சமையல் கட்டுல வந்து வேல பாருன்னு எங்க மாமா கூட்டிக்கிட்டு வந்திட்டாரு”
“”சரி தம்பி. நேரமாகுதுல்ல? வயிறு பசிக்கத் துவங்குது. நீ ஏதாச்சும் சாப்பிடக் கொண்டு வந்திருக்கியா?”
“”இல்ல சார். அவசரத்துல எதையும் கொண்டுக்கிட்டு வர முடியல. திருநெல்வேலியில எறங்கித்தான் வீட்டுக்கு ஸ்வீட்டெல்லாம் வாங்கணும்”
“”அப்ப எஞ்சாப்பாட்டையே ரெண்டு பேரும் சாப்பிடுவொம். நீ சாப்பிடுவல்ல?”
“”சரி சார்”
வண்டி தாம்பரத்தைக் கடந்திருந்தது. வெளியிலிருந்து விர்ரென்று வீசிக் கொண்டிருந்த காற்றில் இருவரும் மெய்மறந்து சுகப்பட்டுக் கொண்டிருந்தனர். வாசலின் வலதுபுறம் உள்வாங்கி நின்றிருந்த கழிவறையிலிருந்து “கப்கப்’ என்று துர்நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. கழிவறை தொடங்கி சனத்திரள் நிறைந்திருந்தனர். கீழே உறுதியாய் கால்களை ஊன்றிக் கொண்டு நிற்க, பக்கவாட்டில் தேகத்தை வளைத்து நெளித்து சோர்வு முறித்துக் கொள்ள, முடியாதிருந்தது. இந்த இம்சையில் எப்படி பொட்டலத்தைத் திறந்து பருக்கைகளை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள முடியும் என்று நினைக்கத் தோன்றியது உத்தமனுக்கு. ஆனாலும் வயிறு தீயாய்க் காந்தல் எடுத்தது. ஒரு கைப் பருக்கைகளாவது உள்ளே போனால்தான் தீயின் வேகம் குறைந்து நிம்மதியாய் நின்று கொள்ள முடியும் என்பது புரிந்தது. நின்ற மேனிக்கே பொட்டலத்தை அவிழ்த்தான். எலுமிச்சைச் சோறும், எள்ளுத் துவையலும் வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாகத் தின்று கொள்ள இரண்டு அவித்த முட்டைகள் வேறு. உத்தமனும் வாலிபனும் நேருக்கு நேர் பார்த்து நின்று கொண்டார்கள். இருவரின் வயிற்றுக்கு மத்தியில் உத்தமன் தன் இடது கை விரல்களைப் பாலமாய் விரித்து, அதன் மேல் பொட்டலத்தை வைத்துக் கொண்டான். அவசரம் அவசரமாய் தின்று முடித்தார்கள். வெற்றுப் பொட்டலத்தை வெளியே தூக்கி எறிந்தான் உத்தமன். இருவரின் தொண்டைகளும் நீருக்கு ஏங்கின. நாக்குகள் வறண்டு கொண்டு வந்தன. “”செங்கல்பட்டுல வண்டி நிக்கும்ல. தண்ணிப் பாட்டில் வாங்கிக்கிரலாம்” என்று தைரியம் சொன்னான் உத்தமன்.

***
காலை பத்துமணிக்கு திருநெல்வேலிக்கு வந்து நின்றது ரயில். இன்று ஒரு மணி நேரம் தாமதம்தான். வழக்கமாய் ஒன்பது மணிக்கெல்லாம் கூவென ஊளையிட்டுக் கொண்டு திருநெல்வேலி நிலையத்தில் கால் பதிக்கும் ரயில். அவிழ்த்துப் போட்ட மூட்டையிலிருந்து பொலபொலவென சரிந்து ஓடும் நெல்லிக்காய்களைப் போல ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் சனங்கள் சரம்சரமாய் வெளியேறிக் கொண்டிருந்தனர். உத்தமனுக்கு முன்னால் பெட்டியிலிருந்து குதித்து வேகமாக முன்னேறிப் போய்க் கொண்டிருந்தான் அந்த வாலிபன். இளைஞன் என்பதால் அவன் அவசரமும் சுறுசுறுப்பும் கொண்டிருக்கிறான் என்று நினைக்கத் தோன்றியது உத்தமனுக்கு. பெண் பார்க்கப் போகிறான் மாப்பிள்ளை. அவனின் அவசரம் அவனுக்குத்தான் தெரியும் என்று எண்ணிச் சமாதானம் அடைந்து கொண்டான் உத்தமன்.
கோடை வெயில் காலையிலேயே தன் குணத்தைக் காட்டத் துவங்கியிருந்தது. செவியோரத்தில் விழுந்த வெயில் சாட்டை அடியாய்க் காந்தியது.
ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறி, பழைய பேருந்து நிலையத்துக்கு நடந்து வந்து, அங்கிருந்து நகரப் பேருந்தில் ஏறி புதிய பேருந்து நிலையத்துக்கு வர வேண்டியிருந்தது. புதிய பேருந்து நிலையத்திலிருந்துதான் பல ஊர்களுக்கும் பயணிக்க முடிந்திருந்தது.
உத்தமன் களக்காடு என்று பெயர் மாட்டியிருந்த கணபதி ட்ராஸ்போர்ட்டைக் கண்டு அறிபறியாய் அதன் உள்ளே ஏறி உட்கார்வதற்கு இடம் தேடியபோது, இடது பக்கம் இருவர் உட்காரக் கூடிய இருக்கையில் அந்த வாலிபன் மட்டும் தனியே அமர்ந்திருந்து வெளியே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் சன்னமாய் அதிர்ந்து போனான். தற்போதைக்கு அந்த ஓர் இடம் மட்டுமே காலியாகக் கிடந்தது. மற்ற இருக்கைகளிலெல்லாம் பயணிகள் அமர்ந்திருந்து வேர்த்து விறுவிறுத்துக் கொண்டிருந்தனர். “பஸ்ûஸ எடுத்துத் தொலைத்தால் என்ன?’ என்பதே அவர்கள் பலரின் முணுமுணுப்புகளாய் இருந்தன. இவன் எவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்? பக்கத்தில் கர்சீப்பை வேறு போட்டிருக்கிறானே. நாம் போய்க் கேட்டால் நமக்காக அந்த இடத்தை விட்டுத் தராமலா போய்விடுவான்? அந்த வாலிபனைப் பெருமையாய் கணித்துக் கொண்டு அவசரமாய் அவனின் அருகில் சென்றான் உத்தமன்.
“”தம்பீ”
“”என்ன?” அதட்டலாகக் கேட்டான் தம்பி.
“”யாருக்காவது வெயிட் பண்றியோ?”
“”ஆமா எம் ஃபிரண்டு வர்றன்னிருக்கான். இந்தக் கடைக்குப் போயிருக்கான்” எதிரில் தெரிந்த சாந்தி ஸ்வீட்ஸ் கடையைச் சுட்டிக்காட்டினான் மிதப்பாக.
“”வேற எடமில்ல. இதுல நா ஒக்காந்துக்கிராலாமான்னுக் கேட்டன்”
“”அதான் எம் ஃபிரண்டு வர்றான்னு சொன்னம்மில்லியா?”
மறுபேச்சுப் பேசவில்லை உத்தமன். முகம் இறுகி, மனம் கறுத்து, சற்று முன்னோக்கி நகர்ந்து கம்பியின் மேல் சாய்ந்து நின்று கொண்டான். ஏன் இந்த வாலிபன் தன்னை தூக்கி எறிந்தது மாதிரிப் பேசிவிட்டான் என்று நினைத்துப் பார்த்தான். சொன்ன வார்த்தைகளில் கூட நாகரிகம் தென்படவில்லையே. ரயிலில் அவனுக்காக எவ்வளவு சிரமப்பட்டிருந்தோம். உயிரைப் பணயமாக வைத்து அவனைக் கை கொடுத்துப் பெட்டிக்குள் ஏற்றிவிட்டு, தன் வயிற்றுப் பசியைக் கூட அரைகுறையாய் தீர்த்துக் கொண்டு அவனின் பசியடங்க சோறு கொடுத்து, சுகமாக நின்று கொள்ள இடம் கொடுத்து….
உத்தமனுக்கு இப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. வண்டி செங்கற்பட்டில் நின்று இருந்த இரண்டு நிமிடத்தில் வெளியே தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தவனை அழைத்து அவனிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி இருவரும் நீரருந்தி கொண்ட பிறகு அந்த வாலிபன் உத்தமனிடம் பேசத் துவங்கியிருந்தான்.
“”திருநெல்வேலியில எறங்கி ஒங்க ஊருக்குப் போறீங்களா? இல்லன்னா ஒங்க ஒய்ஃப் ஊருக்குப் போறீங்களா சார்?”
“”நேரா என் ஒய்ஃப் ஊருக்குத்தான் போறம்பா”
“”அவுங்களுக்கு எந்த ஊரு சார்?”
“”களக்காட்டுக்குக் கிழக்கே இருக்கே காடுவெட்டி… கேள்விப்பட்டிருக்கியா? அந்த ஊருதான்”
அந்த வாலிபனுக்குத் திக்கென்று ஆகியிருக்க வேண்டும். முகம் விகாரமாய் சுருங்கிக் கொண்டது. புருவங்களை ஒடுக்கிக் கொண்டே விழிகள் சிறுத்தன. ரொம்ப யோசனையுடன் பேசத் துவங்கினான் அவன். “”மேலக் காடுவெட்டியா? கீழக் காடுவெட்டியா? ரெண்டு காடுவெட்டி இருக்குது”
“”கீழக்காடு வெட்டி. ஏன் ஒனக்குத் தெரியுமா?”
“”தெரியும். அதான கேக்கறென். கீழக்காடு வெட்டியில யாரோட மகா?”
“”அழகுமுத்து… அவுங்க அப்பாப் பேரு”
“”திருநெல்வேலிக் காலேஜுல ஒரு பொண்ணு படிச்சிக்கிட்டு இருந்திச்சே அந்தப் பொண்ணா?”
“”ஆமா… உனக்கு எந்த ஊருப்பா?”
“”எனக்கு கீழக்காடுவெட்டிதான். எங்க தோட்டங்களுக்கு அழகுமுத்துக் குடும்பம் வேலைக்கு வரும். அழகுமுத்து மருமகனா? தெரியாமப் போச்சிதே…ச்சே… தெரிஞ்சிருந்தா சோறு வாங்கித் தின்னிருக்கமாட்டனே”
“”ஏந்தம்பி? சோறு நல்லாத்தானே இருந்துச்சி”
“”நா சோறு வாங்கித் தின்னத ஊர்ல யாருக்கிட்டயும் சொல்லிரக் கூடாது. என்னையக் காறித் துப்புவாங்க. பரிகாசம் பண்ணுவாங்க”
அங்கிருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் வரைக்கும் உத்தமனோடு பேசிக் கொள்ளவில்லை அவன். ரயிலை விட்டுக் கீழே இறங்கியதும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளாமல் அவன் வேகமாக நடைபோட்டதன் காரணமும் இப்போதுதான் புரிந்தது உத்தமனுக்கு.

பேருந்தில் ஓட்டுநர் ஏறிக் கொண்டு உட்கார்ந்ததும் தடித்த ஓர் ஆசாமி வந்தான். அவனும் வாலிபன்தான். திறுக்கு மீசையும் உருட்டும் விழிகளையும் கொண்டிருந்தான். கர்சீப்பைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த வாலிபனுக்குப் பக்கத்திலிருந்த அந்த இடத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டான். பேருந்து பின்னோக்கி வந்து மேற்காகத் திரும்பிப் புறப்படத் துவங்கியது. இருவரும் என்னென்னவோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உத்தமனைப் போல நிறையப் பேர் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு வரிசையாக நின்றிந்தனர். கூட்டம் பிதுங்கி வழிந்தது. அவனுக்கு நேற்றைய ரயில் பயணம் ஞாபகத்துக்கு வந்தது. அடிக்கடி முகம் திருப்பி அந்த வாலிபனைப் பார்த்துக் கொண்டிருந்தான் உத்தமன். அந்த வாலிபன் அகஸ்மாத்தாய் கூட உத்தமனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

– ஜூலை 2012

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000/- பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *