கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,868 
 

பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின் ஒரு துளி துண்டு நிலம்.

சின்ன வயசுலயே கொழும்பு சென்று, தொழில் கற்று, சிறுக சிறுகச் சேமித்து, சொந்த வீடு கட்ட வாங்கிய நிலம்.

ஊரு பழக்கத்துலேயும், அனுபவ அறிவிலும் ஞானஸ்தன் எங்க தகப்பனார் .

மனசாடுதல்அவர் அடிக்கடி சொல்வார், “”இந்த பூமி இருக்கே, அது கடவுள் நமக்கு கொடுத்த மிக பெரிய கொடைடா. ஒண்ணு நாம வாழ பயன்படனும், அல்லது வாழ்வதற்கு பயன்படணும்”

ஆரம்பத்துல எனக்கு சட்டுன்னு புரியலே. என் முகக்குறிப்பை வச்சே அவர் விளக்கமா சொன்னார்: “” டேய் சரியா புரியலையா? இந்த மண் நாம பாதுகாப்பா வாழறதுக்கு வீடு கட்ட பயன்படனும், இல்ல உணவுக்காக விளைச்சல் பண்ணனும், இல்ல மரஞ்செடிக்கொடி வளர பயன்படனும். சும்மா தரிசா போட்றாதே” தலையாட்டினேன்.

என்னுடைய சிறிய தகப்பனார் கோயில் குளமெல்லாம் போகமாட்டார். ஆனா பாதயாத்திரை யார் போனாலும் அடிக்கடி போவார். அதுக்கு அவருடைய விளக்கம்: “”நடையன் போடாம இந்த மண்ணுல நடக்கனும்டா அப்பத்தான் இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு பந்தம் இருக்கிறது புரியும். எந்தவித இடைவெளியும் இல்லாம, ஈர்ப்பு சக்தியின் உணர்வோட, தாயோட தொப்புள்கொடியோட சேருறது போல இருக்கும். அனுபவிக்கணும்டா, காலே வலிக்காதுடா. கல்லு குத்துறதலையும் ஒரு சொகம் இருக்குடா” அப்படிம்பார்.

நான் எடம் வாங்குனவுடனே அவர் சொன்னார், “”எடம் முழுக்க கான்க்ரீட் போட்றாத. மரஞ்செடி போக, நடக்க ஏதுவா மண் பாத இருக்கட்டும்டா. அதுல நடந்து பாரு. நமக்கு சொந்தமான மண்ணுல வெறுங்காலோட நடடா. அப்ப ஒரு கர்வம் வரும் பாரு, உலகே ஆண்டுபுட்டாப்லே” தலையாட்டினேன்.

பேரன் பேத்தி ஆசையோடயே இருக்கிற எங்க தாயார் சொன்னார்: “”நம்ம குடும்பம் தழச்சு பேரப்புள்ளலாம் ஓடி ஆடி திரியறாப்ல வீடு கட்றா. விசாலமா இருக்கணும்டா; சூரியனும் வாயுவும் தங்கு தடை இல்லாம நுழையணும்டா” தலையாட்டினேன்.

அம்மான் மகளான என் மனைவி சொன்னாள்: “”ஏங்க வீடு கட்றப்ப, வாச விரிவா இருக்கனுங்க, முன்னாலையும் பின்னாலையும். முன்வாசல்ல அக்கம்பக்கதோட பேசறாப்லையும், மார்கழி மாசம் பூக்கோலம் போடறாப்லையும், பின்னாடி அரிசி பருப்பு காய வைக்றாப்லையும் இருக்கட்டுங்க. ரொம்ப ஒசத்தி கட்டவேணாங்க, மாமா அத்தைக்கெல்லாம் வயசாகிட்டே போகுது. அவங்க சுளுவா நடமாடனுங்க”தலையாட்டினேன்.

வாழ்க்கையிலே பல மாதிரி கஷ்டநஷ்டமெல்லாம் அனுபவிச்சவரு எங்க அம்மான்.

அவர் சொன்னார், “”மாப்ளே கட்றதுதான் கட்றீங்க, ஒரு மாடி வீடும் சேத்து கட்டி விட்ருங்க. அதுக்கு தனி பாதை வச்சுருங்க. ஏன்னா, இடம் ஊருக்கு வெளியே தள்ளி இருக்கு. மேல ஒரு துணைக்கு குடி வைக்கலாம்ல. வருமானத்துக்கு இல்லாட்டியும், ஒரு நல்ல மனுசாள குடில்ல வச்சா, அவசர ஆத்திரத்துக்கு இருப்பாகள்லே. நீங்களும் அடிக்கடி ஊரு பேருன்னு அலையிறவரு. அப்புறம் நாளைக்கு ஏதும்னாலும், ஒரு கைச்செலவுக்கு தோதா இருக்கும்ல” தலையாட்டினேன்.

கவிதையும் தத்துவமுமாய் வாழும் என் நண்பர்சொன்னார்: “”டேய் நிலமோ வீடோ, நம்ம ஐம்புலனும் ஆட்சி செய்யிற இடமா இருக்கணும்டா. கண்ணுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இதமா, கெட்ட வாடை இல்லாம, காற்று நேரடியா உடம்புல படர மாதிரியும், சுவையான தண்ணி ஆதாரமும் இருக்கும் வகையிலே சூழ்நிலைய அமைச்சுக்கணும்டா. சத்தம் அதிகம் இல்லாம, சுத்தமா இருக்கணும். வீட்டுக்குள்ளே நல்லா பசியும் ஆறணும். அதே நேரத்துல மனசும் ஆறணும்டா” தலையாட்டினேன்.

இதல்லாம் மனசுல வச்சு, நானும் கொத்தானாரும் கலந்து ஆலோசிச்சு, வானம் தோண்டறதுக்கு நாள் குறிச்சு, குலதெய்வத்தை வேண்டிகிட்டு, வீடு கட்டற வேலைய ஆரம்பிச்சோம். பின்புறத்துல கேணி வெட்டுனா, தண்ணி சில அடியிலயே வந்துருச்சு. இனிப்புன்னா இனிப்பு அப்படி ஒரு இனிப்பு. நிலையா இருக்கணுமுன்னு நல்ல நாள் பாத்து நிலையும் வச்சு, கட்டடம் கட்டறவங்களுக்கு விருந்தும் வச்சோம். இடத்துக்கு நட்ட நடுவுல வீடு கட்டி, முன்னாடியும் பின்னாடியும் வாசல் வச்சு, மாடி வீடும் கட்டி, சொந்த பந்தமெல்லாம் வரவழச்சு , பால் காய்ச்சி குடி போன நாள்ல இருந்த முழுமையான உணர்வு, இதுவரைக்கும் திரும்பவும் அமையலை.

உடல் உழைப்பு அதிகம் இல்லாத குடும்பத்துல பொறந்தவன் நான். எனக்கு தெரிஞ்சதெல்லாம் கணக்கு .. கணக்கு .. கணக்கு … மூளை உழைப்புன்னு வேண்ணா சொல்லிக்கலாம். நல்லா வருமானமும் வந்துச்சு. ஆனா மனசோரத்துல, ஒரு உறுத்தல், நெருடல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அது என்னனா, அடுத்தவங்க உடல் உழைப்புலயே வாழறோமே, விளைச்சல் செய்யிறவங்களவிட நாம வசதியா வாழறோமே அப்படின்னு. கோயில் குளமுன்னு தானம் தர்மமும் என்னால முடிஞ்ச அளவு செஞ்சு பார்த்தேன். மனசாறலை. வயல்ல இறங்கி வேலை செய்யிறதுக்கு பழக்கப்படாத உடம்ப வச்சுக்கிட்டு என்னால அதுக்கு ஒண்ணும் பண்ண முடியல.

சரி நம்மால முடிஞ்சது, மரஞ்செடிகொடியாவது வீட்ட சுத்தி வளப்போம்னு முடிவு செஞ்சு தோட்டம் போட்டேன். தென்னை மரம் மாதிரியெல்லாம் வளர்த்து நம்மால ஏற இறங்க முடியாதுன்னு, மாமரம், வாழைமரம் வச்சு காய்கறிச்செடிபோட்டேன். என் மனைவி சில பூச்செடியும், துளசிச்செடியும், கற்பூரவள்ளி, மணத்தக்காளி செடிகளும் வளர்த்தா. ஆரம்ப பள்ளிக்கூடத்துல படிச்ச ஞாபகம், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதின்னு. ஆலமரம் வளக்க இடமில்லாட்டியும், வீடு முன்புறம் ஒரு வேப்பங்கன்று நட்டு வச்சேன்.

புது வீடு கட்டி குடி வந்த நேரமோ என்னமோ, மரஞ்செடிகொடி நட்டு வளர்த்த பலனோ என்னவோ, வாரிசில்லாம தரிசா இருந்த எங்க தாம்பத்திய வாழ்க்கையில, தளிரா ஒரு மகன் பொறந்தான். மரஞ்செடிகொடியோடு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமா அவனும் வளந்தான். பள்ளிக்கூடம் போயி நல்லாவே படிச்சான்.

தெனமும் முன் வாசல்ல அரிசி மாவு கோலம் போட்டு எறும்புக்கு தீனி வச்சோம், பின் வாசல்ல மூதாதையர் நினைவா காக்கைக்கு சோறு வச்சோம். சொந்தபந்தங்களுக்கும், திருவிழா படையலுக்கும் வாழை இலையில விருந்து வைப்போம். அப்பல்லாம் எம்பையன் நுனி இலைதான் வேணும்பான். மத்த நாள்ல காய்கறி சாப்பிட அடம் புடிக்கிற பய, நம்ம தோட்டத்துல அவன் தண்ணி ஊத்தி வெளஞ்ச காய்கறின்னா உடனே சாப்புடுவான். துளசி இலய பிச்சு பிச்சுத் திம்பான். வாய்ப் புண்ணு வந்தா மணத்தக்காளியும், சளி புடிச்சா கற்பூரவள்ளியும் பக்குவம்மா ஆக்கி தருவா எம்மனைவி. சட்டுன்னு கேக்கும்.

எம்பையன் தான் சிநேகிதன்களுடன் வீட்டை சுத்தி விளையாடும்போது, “”எங்க வீடே ஒரு பார்க்குடா” அப்படின்னு பெரும பேசுவான்.

என்ன மாயமோ தெரியல, எங்க வீட்டு மாமரத்துல வருசம் முழுக்க காய் காய்க்கும். அந்த மரத்துக்கு அவன் பேரு வச்சிருந்தான், “ஏ.டி.எம்’ – எனி டைம் மேங்கோ மரம் ன்னு.

ஒரு தடவ, வேப்ப மரத்தடியில அவன் ஒன்னுக்கு போறத பார்த்தேன். “”டேய் நான் ஆசையா வெதச்சு வளத்த மரத்துல ஒண்ணுக்கு அடிக்கிறியேடா, நியாயமா?” ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான், “”அப்பா நான் பாடத்துல படிச்சிருக்கிறேம்ப்பா, யூரின்ல யூரியாங்க்ற உப்பு இருக்காம்ப்பா. அதனால, நான் ஒண்ணுக்கு அடிக்கிறதுனால, வேப்பமரம் நல்லா வளர உரந்தான் போடறேன்”

அப்போதைக்கு நாலு போடு போட்டாலும், அறிவியல்பூர்வமாஅவன் சொன்னதில உண்மை இருக்கோ இல்லையோ, உள்ளுர சந்தோசப்பட்டேன். சரி நம்ம பையன் பாடத்த பாடமா மட்டும் படிக்காம, அனுபவமா கையாள்றான்னு.

தோட்டத்துக்கு தண்ணி பாச்சிறப்ப, ஒரு மண் வாசனை வரும் பாருங்க, அந்தச் சிலிர்ப்பே தனி. காலங்காத்தால குளிச்சு முடிச்சு ரெண்டு பூ பறிச்சு சாமிக்கு வச்சாலும், அது நம்ம தோட்டத்துல பூத்ததுன்னு நினைக்கிறப்பவே ஒரு தெய்வீகம் வரும்.

எங்க தகப்பனார் , “”…..இச்சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருள்ளானே” என்று ஆழ்வாரை பாடியதுமாய், நான், “”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா”, என்று பாரதியை பாடியதுமாய், என் மகன், “”மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே?” என்று ஜேசுதாசை பாடியதுமாய் கழிந்த சொகமான நினைவுகள் பசுமரத்தாணி போல அப்படியே இருக்கு.

கால ஓட்டம் வேகமா போயிருச்சு. உயிர் கொடுத்து, உதிரமா இருந்தவங்க எல்லாம் சருகு கணக்கா உதிர்ந்து இயற்கையோட கலந்துட்டாங்க. என் உருவத்துக்கு வழி நடத்துனவங்க எல்லாம் அருவமாகி வழிபாடாயிட்டாங்க.

எம்பையன் எனக்கு செலவுன்னு வைக்காம மெரிட்லயே பிசினெஸ் மேனேஜ்மன்ட் படிச்சான். இப்ப பல கம்பெனிகளுக்கு ஆலோசகராக இருக்கான். அவனுக்கு பெரிய சொத்துன்னு சேத்து வைக்காட்டியும், கடன் வைக்கல நான். நானும் என் மனைவியும் அவனுக்கு சாரமாத்தான் இருந்தோமே ஒழிய, பாரமா இல்ல.

அவன் கை நெறைய சம்பாரிக்கிறான். எம்பையன் எங்க மேல வச்சிருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், எள்ளளவும் குறைச்சல் இல்ல. எம் மருமக எங்க வீட்டுக்கு வந்திருக்கிற வாழ்வரசி. எங்களுக்கு மகள் இல்லாத குறைய போக்க வந்த குணவதி. நல்லா படிச்சவ. பேரனும் பேத்தியுமா ரெண்டு பேரப்புள்ளைங்க, “”அய்யா அய்யா”, “”அப்பத்தா அப்பத்தா”ன்னு உசிரா சுத்திச்சுத்தி வருதுங்க. பிள்ளைங்க முழு நேர பள்ளிக்கூடம் போறவரைக்கும், வீட்ட மட்டும் கவனிச்சுகிட்டிருந்த மருமக, இப்ப அந்த பள்ளிக்கூட நேரத்துக்குள்ள வேலைக்கும் போயிட்டு வரா.

எம்பையன ஒருநாள் கூப்பிட்டு பேசுனேன், “”இங்க பாருப்பா நான் நிறைவா என் கடமையெல்லாம் செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன். நீயும் நல்லா இருக்க. இந்த வீடு உட்பட மத்ததெல்லாம் உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். இந்த காலகட்டத்துக்கு எது செüகரியமோ அத பாத்து செஞ்சுக்கப்பா. உங்களோட எதிர்காலத்துக்கு எது தோதோ, அதபத்தி நீயே முடிவு பண்ணிக்கப்பா”

அதுக்கு அவன் சொன்னான், “”அப்பா உங்கள சந்தோசமாவும், செüகரியமாவும் வச்சுக்க வேண்டியது எங்க பொறுப்பு. ஆனா உங்கள்ட்ட சொல்லாம்ம எந்த முடிவும் எடுக்கமாட்டேன்”.

கால வெள்ளத்துல, ஹைவேய்ஸ் எங்க வீட்ட ஒட்டி வந்துருச்சு. பல பன்னாட்டு கம்பெனிகளும், அப்பார்ட்மென்டுகளும் வீட்ட சுத்தி உருவாகிருச்சு. எங்க இடத்தோட மதிப்பு பல மடங்கு கூடிப்போச்சு. மனமதிப்பு சுருங்கிப்போச்சு.

எனக்கு பாதத்துல வலி உண்டாயி, நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போச்சு. அத அவனால தாங்கிக்க முடியலே. உடனே எம்.சி.ஆர். செருப்புன்னு என் காலுக்கின்னே அளவெடுத்த செருப்பு வாங்கி கொடுத்தான்.

நான் கேட்டேன், “”ஏம்ப்பா வெலை அதிகமா இருக்கும் போல இருக்கே, வெளியகிளிய போறப்ப தொலைஞ்சா என்ன பண்ணுறது?”

அதுக்கு எம்பையன் சொன்னான்,””அப்பா அது வெளிய போடற செருப்பு இல்ல, வீட்டுக்குள்ள நடக்குறதுக்கு” என்றான்.

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”அப்பா வீட்டுக்கு வெளிய ட்ராபிக் அதிகமா இருக்கு. எல்லாரும் வேகமா போறாங்க. பிள்ளைகளும் வீட்டுக்கு பின்னாடிதான் விளையாட வேண்டிருக்குது. ஆனா கிணறு இருக்கிறதுனாலே,உள்ள விழுந்துடப் போறாங்கன்னு பயமா இருக்கு. அதனால, அந்த கிணத்த மூடிட்டு, ஒரு போர் மட்டும் போட்ருவோம்ப்பா”

நான் கேட்டேன், “”அருமையா இனிச்சு கெடைக்கிற தண்ணிடா அது”

அதுக்கு எம்பையன் சொன்னான், “”அப்பா கவலையே படாதிங்க. நம்ம வீட்டுக்கே வந்து மினரல் வாட்டர் சப்ளை பண்ண ஏற்பாடு பண்ணிருக்கேன்”.

தலையாட்டினேன்.

எங்களையும் சேத்து மொத்த குடும்பமாய் போய்வறதுக்கு தோதா ஒரு பெரிய காருக்கு, அட்வான்ஸ் கட்டிட்டு எம்பையன் சொன்னான்,””அப்பா இன்னும் ஒரு மாசத்துல கார் டெலிவரி கொடுத்துருவாங்க. கார் நிப்பாட்ட எடம் வேணும்ப்பா. அதனால ஒரு பக்கம் தோட்டத்த சுத்தம் செஞ்சிட்டு, கார் ஷெட் போட்ருவோம்ப்பா. இன்னொரு விஷயம், நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே ப்ரஷ் காய்கறி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வந்துருச்சு. வேணுங்கிறத போன்ல சொல்லிட்டா போதும். எப்ப வேண்ணாலும் வீட்லே வந்து குடுத்துருவாங்க” .

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”ரொம்ப வருசமா மாடி வீட்ல வாடகைக்கு இருந்தவங்க அடுத்த மாசம் காலி பண்ண போறாங்களாம். எனக்கு தெரிஞ்ச ஒரு ம்யூச்வல் பண்ட் கம்பெனிக்காரங்க, ஒரு ஆபீசுக்கு இடம் வேணுங்றாங்க. நல்ல அட்வான்சும், வாடகையும் தரேங்றாங்க. அத வச்சே நம்ம வீட்டையும் கொஞ்சம் மராமத்துபண்ணிடலாம்ப்பா. மேல்வீட்ட கொஞ்சம் ரீமாடல் செஞ்சா போதும். அதுவும் அவங்களே செஞ்சுக்கிறாங்களாம்”.

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”மேல இருக்கிற கம்பெனிக்காரங்களுக்கு வண்டிகள் நிறுத்த எடம் வேணுமாப்பா. இந்த பக்கம், நான் மாடிவீட்டு பிள்ளைகள்லாம் பார்க்குன்னு சொல்லி விளையாடுவோம்ல, அந்த எடத்த பார்க்கிங் ஸ்லாட்டா கொடுத்துருவோம்ப்பா. அதுக்கு தனியா வாடகை தருவாங்க”.

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான்,””பக்கத்துல ஒசரம் ஒசரமா கட்டடம் வந்துட்டதனால, வெயில் சரியா படாம துணிமணியெல்லாம் காயமாட்டேங்குது. அதனாலே வாஷிங் மெஷினும் ட்ரையரும் வாங்கிட்டேம்ப்பா. இனிமே நாமவீட்லே நிம்மதியா துணிமணிகளைப் பராமரிக்கலாம்” .

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”அப்பா ரோட்டோரத்துல வீடு இருக்கிறதுனால வீடு முழுக்க தூசியா அப்புதுப்பா. வர வர அம்மாவுக்கும் தும்மல் அதிகமாயிட்டேப்போகுது. அதனால தூசி வர முன்பக்க ஜன்னலுக்கு கண்ணாடி அடைப்பு போட்டுடலாம். வேணும்னா ஏசி பண்ணிக்கலாம்”.

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”ஏம்பா வீட்டை இடத்துக்கு நட்ட நடுவுல கட்டினீங்க? எதுக்கும் பயன்படாம சுத்தி காலி இடம் வேஸ்டா கிடக்குது. வீட கொஞ்சம் ஒரு பக்கமா கட்டி இருந்தா, நாலு கடை கட்டி வாடகைக்கு விட்ருக்கலாம். சரி அது போகட்டும். அந்த ஏ.டி.எம் – மாமரம் இடத்துல, நான் ஆலோசகராக இருக்கிற பேங்க்காரங்க, ஒரு ஏ.டி.எம் சென்டர் வச்சுக்கிறேங்றாங்க. நல்ல வாடகையும் தருவாங்க. அந்த சென்டருக்கு ஷிப்ட்டு முறையில இருவத்துநாலுமணி நேரமும் செக்யூரிட்டி போட்ருவாங்க. நமக்கு வருமானத்துக்கு வருமானம். பைசா செலவு இல்லாம செக்யூரிட்டியும் அமைஞ்சுரும். நாங்க இல்லாதப்ப, நீங்க மட்டும் தனியா இருக்கிறப்ப, உங்களுக்கும் ஒரு பாதுகாப்புக்கும் ஆச்சு. மரத்துப்பக்கம் பூச்சி அட்டையெல்லாம் வேற வருது”.

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”அப்பா நமக்கு நெறைய பணம் சேந்துருக்கு. எனக்கு மேலும் பேங்க்ல லோன் எவ்வளவு கேட்டாலும் தருவாங்க. இப்பல்லாம்

லேண்ட்ல இன்வெஸ்ட் பண்றதுதான் பெஸ்ட். அதனால புயூச்சர்ல நல்ல ப்ராஸ்பெக்ட் இருக்கிற இடமா பாத்து இன்வெஸ்ட் பண்ணபோறேன்”

அதுக்கு நான், “”அதுல பயிர் விளைவிக்க போறியா இல்ல தோட்டம் கீட்டம் போட போறியா?” ன்னேன்.

அவன் சொன்னான், “”அப்பா இப்பல்லாம் காலி இடத்துக்குதான் மதிப்பு. அதுதான் ரியல் எஸ்டேட் பிசினஸ். அதுல என்ன ரியல் இருக்குன்னு எனக்கு புரியல. ஆனா டிவில்லேல்லாம் வேற அப்படித்தான் சொல்றாங்க”.

தலையாட்டினேன்.

எம்பையன் சொன்னான், “”இந்த பழைய வீட்ட மெயின்டைன் பண்றது கஷ்டமா இருக்கு. எம் பொண்டாட்டியும் வேலைக்கு போறா. நீங்களும் தனியா இருக்கீங்க. என் ப்ரண்ட் ஒருத்தன் ஆர்கிடெக்டா இருக்கான். அவன் ஒரு யோசன சொன்னான். இந்த வீட்ட இடிச்சிட்டு, பெரிசா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிறலாம். நமக்கு ரெண்டு வீடு கீழ் ப்ளோர்ல, நம்ம தோதுக்கு எடுத்துக்கிட்டு மத்தத வித்திரலாம். இல்லாட்டி வாடகைக்கு விடலாம். கோடி கணக்குல லாபம். அதேநேரத்துல, ரெண்டு அருமையான மாடர்னான அப்பார்ட்மென்ட் வீடு பைசா செலவு இல்லாம கிடைச்சுரும். அதுவரைக்கும்நாமஎல்லோரும் உங்க மருமக ஆபீஸ் குவார்டர்ஸ்ல தங்கிக்கலாம்” வாழ வந்தவ வீட்டுக்குத்தானே நாம வாழப்போறோம்ன்னு நினைச்சுக்கிட்டேன் நான், “”அதுக்காக செலவழிச்சு கட்டின வீட்ட இடிக்கனுமா?” ன்னு கேட்டேன். அதுக்கு அவன், “”இந்தவீடுகட்ட நீங்க செலவழிச்சத, இந்த காலத்து பண மதிப்போடவட்டியும்சேத்தாக்கூட, வீட இடிக்கிற செலவு அதிகமாஇருந்தாலும்இருக்கும்ப்பா” ன்னு சொல்லி லேசா சிரிச்சான்.

“”அப்புறம் உடனே உங்க முடிவ சொல்லவேண்டாம். நல்லா ஆற அமர யோசிச்சு சொல்லுங்கப்பா. ஒன்னும் கட்டாயம் இல்ல. உங்களுக்கு சம்மதம் இல்லைன்னா வேண்டாம். எனக்கு உங்க சந்தோஷம்தான் முக்கியம். ஏதோ நமக்கு பிறகு, ரெண்டு பிள்ளைக்கும் எல்லா வகையிலையும் வசதியா இருக்கும்னு சொன்னேன். அவ்வளவுதான்”

ஒருவாறு தலையாட்டினேன்.

நண்பரோட வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு, பக்கத்துல இருக்கிற கோயில் குளம் பாத்துட்டு வரலாம்னு, வெளியூர் போய் இருந்தேன். போக, வர டிரைவரோட கார் ஏற்பாடு பண்ணி, நானும் என் மனைவியும் தங்குறதுக்கு, அந்தந்த ஊர்லலாம் ஒரு குறையும் இல்லாம வசதியும் பண்ணி கொடுத்தான் எங்க மகன். தொடர்புல இருக்கிறதுக்காக ஒரு புது செல்போனும் வாங்கி கொடுத்தான்.

அப்ப ஒருவாட்டி, எம்பையன் போன்ல சொன்னான், “”அப்பா அப்பார்ட்மென்ட் கட்டறத பத்தி அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி, அந்த வேப்ப மரம் இருக்கில்ல, அந்த இடம் நல்ல விஷன்ல இருக்காம்ப்பா. அங்க அட்வர்டைஸ்மென்ட் போர்டு வைக்கலாம்னு அட்வர்டைஸிங் கம்பெனி ஆளுங்க கேக்குறாங்க. அத வச்சா நம்ம இடம் பிரகாசமாவும், ஒரு நல்ல லேண்ட் மார்க்காவும் ஆயிரும். சைடு வாக்குல தூசியும் வராது. அவங்க போர்டு வச்சுக்க எடுத்துக்கப்போற இடம் ரொம்ப சின்னது. ஆனா, மாச மாசம் கணிசமா வாடகை தருவாங்க. ஆனா ஒரு சின்ன பிரச்னை. அந்த வேப்ப மரம் வியூவ மறைக்குதாம். அத வெட்டிரலாம்பா. அதையும் அவங்களே பண்ணிக்கிறாங்களாம். அதுக்குரிய ஈடையும் கொடுத்துறாங்களாம். அப்புறம் அம்மாவுக்கும் உங்களுக்கும் உடம்பெல்லாம் சுகமாத்தானே இருக்கு” தலையாட்டினேன்.

உடம்பு சுகமா இருந்தாலும், அவன் சொல்லறதுல கால நியாயம் இருந்தாலும், மனசோரம் ஒரு சோகம் இருந்துக்கிட்டுதான் இருந்துச்சு. ஊருக்கு திரும்பி வர்றப்ப, பழைய நினைப்பெல்லாம் வந்து வந்து போச்சு.

வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு, ஆட்டிகிட்டே இருந்த தலைய உயர்த்தி அந்த பெரிய விளம்பர போர்ட பார்த்தேன். மனசாடிறிச்சு.

எம்பையன் உப்பு உரம் போட்ட வேப்பமரம் இருந்த இடத்துல, அந்த விளம்பரம் சிரிச்சுகிட்டே என்னைய பார்த்து கேக்குது,

“”உங்க டூத் பேஸ்டுல உப்பும் வேம்பும் இருக்கா?”

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *