கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 16,398 
 

அன்று அவளுக்கு முதல் இரவு! வரப்போகும் ஆயிரமாயிரம் இன்ப இரவுகளுக்கு அது ஆரம்ப இரவு! இளம் பெண்கள் சிலர் அவளுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தனர்.

அவர்களின் கேலிப் பேச்சில், புஷ்பாவின் நெற்றி யிலிருந்த குங்குமம் முகமெல்லாம் பரவியது போல, வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது.

“அடி போங்கடி இவளுங்களா! எதுக்கு இப்படிக் கஷ்டப்பட்டு டிரஸ் பண்ணிவிடுறீங்க? என்னமோ எல்லாம் அப்படியே இருக்கப் போற மாதிரி… சும்மா சேலையைச் சுத்திவிட்டு அனுப்புவீங்களா!” என்றாள் ஓர் அனுபவக்காரி.

அறைக்குள் அடையப்போகும் கோலத்தை அங்கேயே அடைந்துவிட்டதுபோல் கூச்சத்துடன் நெளிந்தாள் புஷ்பா.

“ஏய்… ஏண்டி அவளை சும்மா கோட்டா பண்றீங்க? பாவம், புதுசு! உபயோகமா ஏதாச்சும் சொல்லிக் கொடுத்து அனுப்புங்க.”

“புஷ்பா, நீ ஒண்ணும் கவலைப்படாதே! எல்லாம் ஒழுங்கா நடக்கும்!”

“என்ன நடக்கும்?”

புஷ்பாவின் நெஞ்சு ‘படபட’வென்று அடித்துக் கொண்டது. தோழிகள் பரிகாசம் புடைசூழ, பள்ளி-யறையை நோக்கி நடந்தாள். எண்ணங்கள் முன்னே இழுத்தன. நாணத்தால் பின்னிய கால்கள் பின்னே இழுத்தன.

புஷ்பா, அறைக்குள் நுழையக் காலெடுத்து வைத்தாள்.

“நில்லுடி!” என்று இடிமுழக்கம் போல் ஒரு குரல்.

புஷ்பா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் மாமியார் பூதம் போல் நின்றுகொண்டிருந் தாள். அவள் கண்களிலிருந்து நெருப்பு கொட்டியது.

“ஏண்டி, இன்னிக்குச் ‘சாந்தி முகூர்த்தம்’னு உன் அப்பனுக்குத் தெரியுமில்ல?”

‘தெரியும்’ என்ற பாவனையில் தலை அசைத்தாள் புஷ்பா.

“ஒரு வாரத்துக்கு முன்னாலியே லெட்டர் எழுதிப் போட்டிருந்தும், இதுவரைக்கும் ஏன் வரலே?”

அவள் போட்ட சப்தத்தைக் கேட்டு, புஷ்பாவின் கணவன் ராமு அறைக்குள்ளிருந்து ஓடி வந்தான்.

“அம்மா! என்னம்மா?”

“டேய், ராமு! நீ இதுல தலை இடாதே! ஏண்டி மரமாட்டமா நிக்கறே? சாந்தி முகூர்த்தத்துக் குள்ளே வைர மூக்குத்தி, வைர மோதிரம், தங்கச் செயினோட கைக்கடிகாரம் வாங்கிப் போட றதா சொன்னானே உன் அப்பன், எங்கேடி அதெல்லாம்?” என்று கையை நீட்டினாள்.

ராமு பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய், சுவர் ஓரமாகச் சாய்ந்து நின்றான்.

ராமுவின் தந்தை சிவலிங்கம் ஹாலிலிருந்து ஓடி வந்தார்:

“வேதா! எதுவா இருந்தாலும், காலையில பேசிக்கலாம்” என்று கூறி முடிப்பதற்குள், “நீங்க சும்மா இருங்க! இந்த நிமிஷம் வரையில் நகைகளெல்லாம் வரும், வரும்னு காத்துக்கிட்டிருந்தேன். என்னை ஏமாத்தலாம்னு நெனச்சா அதை மட்டும் என்னால பொறுத்துக்க முடியாது! தள்ளிப் போங்க!” என்று அதட்டினாள் வேதா.

சிவலிங்கம் மறுவார்த்தை பேசாமல் கீழே இறங்கிப் போய் விட்டார். பாவம், அவர்தான் என்ன செய்வார்? சொத்தெல்லாம் அவள் பெயரில் இருந்தது. ‘தான் பணக்காரி’ என்ற அகம்பாவம் இருந்தது. நினைத்ததைச் சாதித்தே தீர வேண்டுமென்ற பிடிவாதம் இருந்தது. ‘வேதாவின் வார்த்தை தான் வேதவாக்கு’ என்ற உணர் வில் ஊறிப்போயிருந்தார் அவர்.

புஷ்பா தன் கணவனைப் பார்த்தாள். அவள் தலை குனிந்து நிற்க வேண்டிய நேரத்தில், அவன் தலை குனிந்து நின்றிருந்தான். அவளுடைய கணவனாக இல்லா மல் ‘அம்மாவுக்குப் பிள்ளை’யாக நின்று கொண்டிருந்தான்.

தோழிப் பெண்கள் ஒவ்வொரு வராக நழுவினர்.

“அத்தை…” என்று ஏதோ சொல்ல முயற்சித்தாள் புஷ்பா. ஆனால், நெஞ்சிலிருந்த பாரம் தொண்டையை அடைக்க, எதுவும் பேசாமல் சிலையாக நின்றாள்.

“பொன்னி..!” என்று கத்தினாள் வேதா. வேலைக்காரி ஓடி வந்தாள்.

“டிரைவரை வண்டி எடுக்கச் சொல்லு. புஷ்பாகூட நீயும் போய், அவளை அவ அப்பன் வீட்டுல விட்டுட்டு வா! ஏண்டி நிக்கறே? புறப்படு! நகைகளோட வந்து இந்த வீட்டு வாசப்படியை மிதி! இல்லேன்னா, வராமலே இருந் துடு! ம்… போ!” என்று அதட்ட லாகக் கூறிவிட்டு, ‘திம் திம்’ என்று மாடிப்படிகளில் இறங்கிச் சென்றாள் வேதா. ராமு பூனைக் குட்டியைப் போல் அவள் பின்-னால் ஓடினான்.

புஷ்பாவின் குடும்பமும் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த குடும்பம்தான்.

சீனிவாசன் – காமாட்சி தம்-பதிக்கு இரைந்துகூடப் பேசத் தெரியாது. அவர்களுடைய குடும் பம் பச்சைப்பசேலென்று செழித்து வளர்ந்தது. அச்செடியில் இரண்டே பூக்கள்… கல்யாணி, புஷ்பா! இருவரிடமுமே பெற்றோ ரின் நற்குணங்கள் அப்படியே அமைந்திருந்தன.

கல்யாணி திருமணப் பருவம் அடைந்தாள்.

கதிர்வேலுவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பொருத்த மான மாப்பிள்ளை’ என்று பூரித் தார்.

‘மாப்பிள்ளைகள்’ எப்போதுமே நல்லவர்களாகத்தான் தோன்று வார்கள். அவர்கள் ‘கணவர்களா’ன பிறகுதான் உண்மைச் சொரூபம் வெளிப்படும். அப்போதும் அவர் கள் நல்லவர்களாக இருந்தால்… அவர்கள் உறவைப் பெற்ற எல்லா ருமே அதிர்ஷ்டசாலிகள்தான்!

சீனிவாசனுக்கு அந்த அதிர்ஷ் டம் இல்லை.

வாழ்க்கை ஒரு விந்தையான ஓவியம். நாம் ஒரு ‘ஸ்கெட்ச்’ வைத்துக் கொண்டு ஆரம்பித்தால், ‘ஃபினிஷிங்’ ஒரு மாதிரியாக அல்லவா அமைந்துவிடுகிறது!

கதிர்வேலு பெரும் குடிகாரன். எந்நேரமும் அவன் கண்கள் சிவந்தே இருக்கும். வாயில் எப்-போதும் மதுவின் நெடி!

கல்யாணி புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும், தன் கணவனின் குறைகள் வெளியே தெரியாதபடி, கூடிய வரை மறைத்து வைத்து வாழ்ந் தாள் அந்த உத்தமி.

அடுத்து, புஷ்பா ‘தளதள’வென்று வளர்ந்து வந்தாள். பொங்கிப் பூரித்த அவள் அங்கங்கள்… அவற் றில் பருவத்தின் மெருகு… இளமை பதித்த எழில் முத்திரைகள்… அவளைப் பார்த்துப் பெருமூச்சு விடாத ஆண்கள் மிகக் குறைவு.

கல்யாணியின் வாழ்க்கையைப் போல் இவள் வாழ்க்கையும் ஆகி விடக்கூடாதே என்று கவலைப் பட்டார் சீனிவாசன். அதனால் அவளின் திருமண விஷயத்தில் அதிக எச்சரிக்கையோடு இருந் தார். மகளுக்கு வரன் தேடுவதில் அவர் தீவிரமாக இறங்கியிருந்த போது பக்கத்து ஊர் மிராசுதார் சிவலிங்கமும், அவர் மனைவி வேதாம்பாளும், மகன் ராமுவும் புஷ்பாவைப் பார்க்க வந்தனர். சீனிவாசனும் காமாட்சியோடு அவர்கள் ஊருக்குப் போய் வந்தார்.

மிராசுதாரின் பெரிய மாடிவீடு, பரந்த வயல்வெளிகள், அடர்ந்த தோப்பு, மாட்டுச் சந்தையைப் போல் காட்சியளித்த தொழுவம், நூற்றுக்கணக்கான வேலையாட் கள் எல்லாவற்றையும் பார்த்தார் சீனிவாசன். ஆனால், உடனே எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை. கல்யாணியின் திருமணம் அவ-ரைச் ‘சூடு கண்ட பூனை’யாக்கி-விட்டிருந்தது.

அதனால் ராமுவின் பழக்க வழக்கங்களைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.

“ரொம்ப நல்ல புள்ளை! ஒரு வெத்தலை பாக்கு கூடப் போடாது!” என்று எல்லோரும் ஒரே ரீதியில் கூறினர். ஆனால், ராமுவையே கேட்டிருந்தால், “வெத்தலை போட்டா கோழி முட்டிடும்னு எங்க அம்மா சொன்னாங்க!” என்று விளக்கி யிருப்பான்.

பாவம், அவ்வளவு அப்பாவி அவன்! அம்மா கிழித்த கோட்டி லிருந்து பத்து கெஜம் தள்ளியே இருப்பான்.

மிராசுதார் மட்டுமென்ன… வேதாம்பாளைப் பொறுத்தவரை, ஒரு பண்ணை ஆள் மாதிரிதான்! அந்த வீட்டில் ஓங்கி ஒலிப்பது வேதா குரல் மட்டும்தான்!

அவள் கேட்ட சீர்வரிசைகள் அனைத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டார் சீனிவாசன். கல்யா ணம் உறுதிப்பட்டது.

சீனிவாசன் தன் முழுத் திறமை யையும் பிரயோகித்தார். அப்படி யும் ஒரு வைர மூக்குத்தி, வைர மோதிரம், தங்கச் செயினோடு கைக் கடிகாரம் ஆகியவை குறைந்து விட்டன.

வேதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

“நகைகளைச் செஞ்சு வையுங்க. அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து வந்து, பொண்ணை அழைச்சுக் கிட்டுப் போறோம்!” என்றாள்.

“பொண்ணை இங்கே விட் டுட்டுப் போனீங்கன்னா அதை விட எங்களுக்கு வேற அவமானம் வேண்டியதில்லை. உங்களைக் கையெடுத்துக் கும்பிடறேன். நீங்க இப்ப கூட்டிக்கிட்டுப் போங்க! நான் சீக்கிரம் நகைகளோட வர்றேன்!” என்று கெஞ்சினார்.

சிறிது யோசித்த வேதா, “சாந்தி முகூர்த்தத்துக்கு முன்னால நகைங்க வந்து சேரணும்!” என்று கண்டிப்பான குரலில் நிபந்தனை விதித்துவிட்டு புஷ்பாவை அழைத் துச் சென்றாள்.

என்றாலும், அவளை ராமு விடம் பேசக்கூட வேதா அனுமதிக் கவில்லை. எந்த நேரமும் ‘கண் குத்திப் பாம்பு’ போல் தன் மருமகளையே கவனித்துக்கொண்டு இருந்தாள்.

புஷ்பா, ராமுவை நிமிர்ந்து பார்க்கக் கூடாது; ஜாடைமாடை யாகக்கூட அவனிடம் பேசக் கூடாது; அவன் இருக்கும் பக்கமே போகக்கூடாது எனப் பல கட்டுப் பாடுகளை விதித்து, கடுமையாக அமல்படுத்தினாள்!

சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு ஒரு வாரம் முன்பே சீனிவாசனுக்குக் கடிதம் வந்தது. விசேஷத்திற்கு முன்னால் நகைகளுடன் வந்து சேருமாறு வலியுறுத்தி எழுதி யிருந்தாள் வேதா.

சீனிவாசன் பகீரதப் பிரயத்-தனம் செய்தார். அவருக்கு எந்த வழி-யும் புலப்படவில்லை. எல்லா வழி-களிலும் கடன் அடைத்துக்கொண்டு நின்றது.

கார் நின்றது. புஷ்பா இறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள்.

தாயைக் கண்டதும் அடக்கி வைத் திருந்த அழுகை வெடித்துக் கிளம்பி யது. அவளைக் கட்டிக்கொண்டு ‘கோ’வென்று அழுதாள். நிலைமையைக் கேள்விப்பட்ட மூத்த மகள் கல்யாணி ஓடி வந்தாள். அவளாலும் அழத்தான் முடிந்தது. குடிகாரனுக்கு வாழ்க்கைப் பட்டு, ஒவ்வொரு நாளையும் போராட்-டத்துடன் நகர்த்திக்கொண்டிருந்த அவ- ளால் வேறென்ன செய்ய முடியும்?

ஒன்று மட்டும் முடிந்தது. திரும்பிச் சென்றபோது, “சில நாட்களுக்கு புஷ்பா என் வீட்டில் வந்து இருக் கட்டும்” என்று தங்கையை ஆறுதலாகத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

அவர்கள் ஊரிலிருந்து வந்த மறு-நாள் காலை…

கல்யாணி கூடத்தைப் பெருக் கிக்கொண்டு இருந்தாள். அப்போது அந்த வீட்டுச் சொந்தக்காரன் சுந்தரம், வாடகை வசூலிப்பதற்காக வந்து நின்றான்.

அவனுக்கு 35 வயதிருக்கும். எப்போ தும் சில்க் சட்டையும் வாயில் வேட்டி யுமாக ‘ஜிலுஜிலு’வென்று காட்சி யளிப்பான். அவன் வந்தால் கூடவே ஒரு பூந்தோட்டத்தை அழைத்து வருவ தைப் போல் ‘சென்ட்’ வாசனை கமழும். அவனொரு ஷோக்குப் பேர்வழி!

அவன் கண்ணில், வீட்டுக்குள் இருந்த புஷ்பா பட்டுவிட்டாள். லஜ்ஜையின்றி புஷ்பாவின் மேனியை ஊடுருவிப் பார்த்தன அவன் கண்கள்.

அதற்குள் கல்யாணி வாடகைப் பணத்தோடு வந்தாள். பணத்தை வாங்கிக்கொண்ட சுந்தரம், “யாரோ விருந்தாளிங்க வந்திருக் காப்பல இருக்கே!” என்றான்.

“என் தங்கச்சி.”

“எப்ப வந்திச்சு?”

“சரியா இருக்கான்னு எண் ணிப் பாருங்க!” என்று கூறி அவன் பேச்சை வெட்டினாள் கல்யாணி.

“எண்ணிப் பார்த்துட்டேன். சரியா இருக்கு!” என்று அந்த வார்த்தைகளுக்குத் தேவையில் லாத அழுத்தம் கொடுத்துக் கூறிவிட்டு நடந்தான் சுந்தரம்.

புஷ்பாவை நினைத்துக் கொண்டே கிறக்கத்துடன் வந்த சுந்தரம், வழியில் கல்யாணியின் கணவனைச் சந்தித்தான்.

கையில் காசில்லாமல், குடிப் பதற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த கதிர்வேலுவின் நிலையைப் புரிந்துகொண்ட சுந்தரம், பக்குவமாக அவனிடம் பேசி, புஷ்பாவின் சிக்கலைத் தெரிந்துகொண்டான்.

கதிர்வேலுவை அழைத்துச் சென்று இரண்டு பாட்டில் பிராந்தி வாங்கிக்கொடுத்தான். பிராந்தி வாங்கிக் கொடுத்த ‘பெரிய மனிதரி’ன் பேச்சை மீறலாமா? சுந்தரத்தின் திட்டத் திற்குக் கதிர்வேலுவும் ஒப்புக் கொண்டான்.

அன்று இரவு சுந்தரம் கொடுத்த மயக்க மருந்தைத் தண்ணீரில் கலந்தான் கதிர்வேலு. கல்யாணி யும் புஷ்பாவும் அதைக் குடித் தனர். சிறிது நேரம் கழித்து…

கதிர்வேலு ஓடிப் போய்க் கதவைத் திறந்தான். நகைகளோடு உள்ளே வந்தான் சுந்தரம். கதிர்-வேலுவுக்காக இப்போது ஒரு ‘ஃபுல்’ பாட்டில் வாங்கி வந்திருந் தான்.

அவன் இந்த விஷயத்தில் எவ்-வளவு வேண்டுமானாலும் செய்-வான். ஒரு பெண்ணுடன் ஓர் இரவைக் கழிக்க, அவளுக்கொரு வீட்டையே எழுதி வைத்தவன் என்று கூட அவனைப் பற்றி ஒரு வதந்தி உண்டு!

கதிர்வேலு மது போதையில் மூழ்க, சுந்தரம் தன் மாது போதை யைத் தீர்த்துக்கொள்ள விரைந்-தான்.

விடிந்தது. சுந்தரம் போய் விட்டான்.

சாளரத்தின் வழியாகப் பாய்ந்த சூரிய வெளிச்சம் ‘சுள்’ளென்று கல்-யாணியின் முகத்தில் அடித்தது. திடுக்கிட்டு எழுந்தாள். ‘என்ன, இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்!’ என்று வியந்து கொண்டே வந்த வளை, கணவனின் உளறல் இழுத்தது. உற்றுக் கவனித்தாள். பின்பு பதற்றத் துடன், புஷ்பா படுத்து இருந்த இடத்திற்கு ஓடி-னாள்.

ஆடைகள் அலங்கோலமாகக் குலைந்து கிடக்க, புஷ்பா இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தாள். அவளை எழுப்புவதற்காகக் குனிந்தாள் கல்-யாணி. ‘கம்’மென்று ஒரு வாசனை… சுந்-தரம் உபயோகிக்கும் அதே சென்ட்டின் வாசனை.

புஷ்பாவுக்குப் பக்கத்தில் இருந்த வைர மூக்குத்தி, வைர மோதிரம், தங்கச் செயினோடு கைக்கடிகாரம்… கணவனின் உளறல்… கல்யாணிக்கு எல்லாம் விளங்கி-விட்டது.

புஷ்பாவின் ஆடைகளைச் சரி செய்துவிட்டு, அவளை எழுப்பினாள்.

அசதியோடு எழுந்தவளின் கைகளில் நகைகளை வைத்தாள் கல்யாணி.

புஷ்பாவின் மனத்திற்குள் முந்தைய இரவின் நிழல்கள்! நடந்ததைப் புரிந்து-கொண்ட புஷ்பா துடித்தாள்.

“நீங்கெல்லாம் ஆசைப் பட்ட வாழ்க்கையை நான் அடைஞ்சுட்டேன்! இனிமே நான் எதுக்கு உசுரோட இருக்கணும்?” என்று கதறி-னாள்.

“ஆம்பிளைங்களோட மானம், அவங்க மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம்! ஆனா பொண்ணுங்களோட மானம், அவங்க குடும்பம் முழுசையும் பாதிக்கக் கூடி-யது. நீ சாகறதுனால நாங்க-தான் அவமானப்படுவோம். இங்கே நடந்தது வேற யாருக்கும் தெரியாது. நீயும் இதை ஒரு கெட்ட சொப்-பனமா நெனைச்சு மறந்துடு. நகைகளை எடுத்துக்கிட்டுப் போ! உன் புருஷனோடு புது வாழ்க்கையை ஆரம்பி!” என்றாள் கல்யாணி.

புஷ்பாவை ஏற்றிச் சென்ற குதிரை வண்டி அவள் கணவன் வீட்டிற்கு முன்னால் நின்றது.

தோழிகள் ஓடி வந்தனர்.

“சரசு! பார்த்தியா, வைர மூக்குத்தி, வைர மோதிரம், தங்கச் செயினோடு வாட்ச். மாலதி, நான் நகைங்களோட வந்துட்டேன்! நான் என் புருஷனோடு வாழப் போறேண்டி” என்று ஒவ்-வொருவரிடமும் ஓடி ஓடிப் பேசினாள் புஷ்பா. பைத்-தியக்காரி போலச் சிரித்தாள்.

வேதாம்பாள் வந்தாள்.

“அத்தை… இதோ பாருங்க. நீங்க கேட்ட நகைங்க!” என்று சொல்லி, வாய்விட்டுச் சிரித்தாள் புஷ்பா.

‘கணவனோடு வாழப் போகும் பூரிப்பில் பாவம், தலைகால் புரியவில்லை!’ என்று அவள் தோழிகள் பேசிக்கொண்டனர்.

இரவு… மாடி அறையில் கணவ னுக்கு அருகில், பொம்மை போல உட்கார்ந்திருந்தாள் புஷ்பா.

“புஷ்பா, அம்மா எப்பவுமே ஒரு மாதிரி! அதனாலதான் இப்படியெல்லாம் நடந்திடுச்சு. நீ எதையும் மனசுல வச்சுக்காதே! இன்னம் கொஞ்ச காலத்துக்குப் பொறுத்துக்க. காலப்போக்குல மெதுவா அம்மா மனசை மாத்தி டறேன்! அப்புறம் நாம எப்பவுமே சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கலாம்!” என்று கூறிய ராமு, “புஷ்பா!” என்று ஆசையோடு அவள் கரங்களைப் பற்றினான்.

புஷ்பா அவன் பிடியை விலக்கி விட்டுத் தான் கொண்டு வந்த நகைகளை அவன் கையில் கொடுத் தாள். ராமு அவற்றை வாங்கி டீப்பாயின் மீது வைத்தான். பிறகு, அவளை நெருங்கி உட் கார்ந்து, அவள் கூந்தலைக் கோதி விட்டான். மோவாயைப் பிடித்து முகத்தை நிமிர்த்தினான். பின்பு மெதுவாக அவளைத் தன் மார் பில் சாய்த்துக்கொண்டு, இறுக அணைத்தான்.

புஷ்பாவின் தலை சரிந்து ‘டொங்’கென்று அவன் தோள் மீது துவண்டு விழுந்தது. அவள் கை கீழே விழுந்த வேகத்தில் கட்டில் சட்டத்தின் மீது மோதி, வளையல்கள் நொறுங்கின.

ராமு திடுக்கிட்டுத் தன் அணைப்பைத் தளர்த்தினான்.

புஷ்பாவின் உயிரற்ற சடலம் கட்டிலின் மீது சரிந்தது.

“புஷ்பா!” என்று அலறினான் ராமு.

விஷயம் தெரிந்து ஓடி வந்த புஷ்பாவின் பெற்றோர் அழுதனர். ராமு அழுதான். அவன் அப்பா அழுதார். ஏன்… வேதா கூட அழுதாள். ஊரே அழுதது.

ஆனால், டீப்பாயின் மீதிருந்த நகைகள்…

அவை மட்டும் சிரித்துக் கொண்டே இருந்தன!

– 05th நவம்பர் 2008

Print Friendly, PDF & Email

1 thought on “மணமகள் வந்தாள்!

  1. ஒரு பெண்ணின் பெண்மையை உணர வைக்கும் சிறுகதை 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *