பெயரில் என்ன இருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 8,876 
 

பனிக்கொட்டோ கொட்டு எனக் கொட்டிக்கொண்டிருந்தது, இத்தாலிதானே, நம்ம கோயம்புத்தூர் தட்பவெப்பம்தான் சமாளித்துக்கொள்ளலாம் என இந்த துணைத் தலைவர் ரங்கநாதனின் பேச்சைக் கேட்டு கைக்காப்புறைகள், கனமான மேலாடைகள் என எதுவுமே எடுத்து வராததில் , மீன்கடைகளில் விறைத்துப்போய் கிடக்கும் மீன்களைப்போல கைவிரல்களும் காது மடல்களும் உணர்ச்சியற்றுப்போயின. எனது பெயர் கார்த்திக் ராமச்சந்திரன், பெயரில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா… திரைவிரும்பிகளின் குடும்பத்தில் பிறந்த எனக்கு, இந்தப் பெயர்தான் குறை சாதியினர் நுழைய முடியாத, நிறுவனத்தில் மேலாளப்பொறுப்பில் இடம் கிடைக்க உதவியது. அசைவ உணவு வகைகளைன் ருசியைப் பற்றி அடிக்கடி பேசப்போக, ஒரு நாள் இதே ரங்கநாதன், ஏதேச்சையாக தோளைத் தொடுகையில் நான் ஒரு நடுத்தர சாதியைச் சேர்ந்தவன் எனக் கண்டுபிடித்துவிட்டார். யதார்த்தமாகத்தான் தொட்டாரா என்பதில் இன்னமும் எனக்கு சந்தேகம் உண்டு, கி.மு , கி.பி என்பதைப்போல, தோளுக்கு முன்னர் தோளுக்குப்பின்னர் என ரங்கநாதனின் நட்பு மாறிப்போனது. நானும் கொஞ்சம் இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விலாங்கு மீனாகிப்போனேன், பாம்புக்கு வாலாயும், மீனுக்குத் தலையாயும் ஆறு வருடங்கள் ஒப்பேற்றினாலும், அலுவலக விசயமாக வெளிநாடு வருவது எனக்கு இதுதான் முதன்முறை, திறமை முக்கால் பங்கு உள்ளடி கால் பங்கு என அலுவலக அரசியலைக் கற்றுக் கொள்வதற்கு இத்தனை வருடங்கள் ஆகி இருக்கின்றன.

ரோம் நகரத்தில் வேலைகளை முடித்துவிட்டு, நாங்கள் அடுத்து வியன்னா போகவேண்டும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், ரயிலில் போகலாம் என ரயிலுக்காக காத்திருக்கையில்தான்,

“ரங்கா சார், பசுபதி பாண்டியனைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” எனப் பேச்சை எடுத்தேன்.

பசுபதி பாண்டியன் சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தவன், வயது மூப்பு, அனுபவ மூப்பு என்ற வகையில் சேர்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும், என்னைவிட குறைவான சாதியில் இருந்து வந்தவன் ஆதலால், னகர விகுதி போட்டு அழைப்பது சிறுவயதில் இருந்து பழக்கமாகிவிட்டது. காஞ்சி சங்கராச்சாரியாரின் படங்களே, அனைவரின் மேசைகளை அலங்கரிக்கையில், வந்த முதல் நாளே அலுவலக மேசையில் சிறிய அளவிலான அம்பேத்கார் படத்தை வைத்தவன், எனக்கு அம்பேத்கார் முதன்முதலில் அறிமுகமானது, எனது மாமா அம்பேத்கார் சிலையை உடைத்து கைதான பொழுதுதான். சமீபத்தில் அதே மாமா தனது விதவை மகளுக்கு, பெண் தேடும்பொழுது தாழ்த்தப்பட்ட பழங்குடியினரைத் தவிர யார் வேண்டுமானாலும் என்று மாப்பிள்ளைத் தேடினார். அந்த அளவிற்கு மீசையே பெருமை என்ற சாதிய அடையளத்துடன் வளர்ந்தவன் நான். சாதி, பசுபதியின் நுனிநாக்கு ஆங்கில முயற்சி, கருப்பு நிற முகத்தின் மேல்பூச்சுகள் செய்து கொள்வது, நவீன பாணியில் ஆடைகள் அணிவது இவற்றை எல்லாம் விட, அவன் என்னைவிட கொஞ்சம் அறிவாளியாக இருக்கிறானோ என்ற ஐயம் தான் வெறுப்பை சாதிப்பூச்சுடன் காட்ட வைத்தது. கோபாலன்களும் வாசுதேவன்களும் எனக்கு செய்த அரசியலை பசுபதிக்கு நான் செய்துதான் இந்த இத்தாலி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன்.

நானும் ரங்கநாதனும் ஒன்று சேரும் மையப்புள்ளி அம்பேத்காரின் வழிவகைகளைக் கிண்டலடிப்பதுதான். பெயரை வைத்தும் ஊரை வைத்தும் எப்படி சாதிகளைக் கண்டுபிடிப்பது என எனக்கு கற்றுக்கொடுத்தவர் ரங்கா சார் தான். என்னை ஒருத்தன் மிதிக்கிறப்ப இருக்கிற வலியைக் காட்டிலும், நான் ஒருத்தனை மிதிக்கிறப்ப இருக்கிற மகிழ்ச்சி இருக்கே அட அட… நிறுவனத்தின் அசூர வளர்ச்சி, குறிப்பிட்ட காலத்திற்குப்பின்னர் வேலைக்கு பெயர்களை வைத்து மட்டும் எடுப்பது என்ற நிலையில் இருந்து மாறிப்போய் இருந்தது. நிறுவனத்தில் நிறைய ராம்விலாஸ் பாஸ்வான்களும், மாயவதிகளும் இருக்கின்றனர்.

“கோட்டால கவர்ன்மெண்ட் வேலைப்பார்த்துட்டு இருந்தவனுங்க, இப்பொவெல்லா, டைக்கட்டிக்கிட்டு கலெக்டர் வேலைக்கு வர்ற மாதிரி வர்றானுங்க” கையில் வைத்திருந்த ஹம்பர்கரை கடித்தபடியே பேசினார்.

ரங்கநாதனைப்போல என்னாலும் அவர்களின் பொருளாதார முன்னேற்றங்களைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனது கிராமத்தில் இரண்டு மூன்று அம்பேத்கார் சிலைகள் வந்துவிட்டன, நான்கடி உயரத்திற்கு கூனிக்குறுகி நடந்தவனெல்லாம், மாடிவீடுக் கட்டிக்கொண்டு, ஊருக்குபோகையில் மாப்பிள்ளை என கூப்பிடுகிறான்.

“இப்பொவெல்லாம் பேரை வச்சுக்கூட கண்டுபிடிக்க முடியல, உன்னை மாதிரி”

“சார், ஆயிரம் இருந்தாலும் நான் வீரப்பரம்பரை, என்னை சுப்ரீம் கோர்டுகளோட கம்பேர் பண்ணாதீங்க” சுப்ரீம் கோர்ட் என்பது பசுபதிபாண்டியன் வகையறாக்களைக் குறிக்கும் ஒரு குறிச்சொல்.

“நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்……… அன்னக்கி மாட்டுக்கறி சாப்பாடு லஞ்சுக்கு எடுத்துட்டு வரான் .. ”

“இண்டியால ரிஷர்வேசனால பொழச்சுக்குறானுங்க, ஃபாரின்ல எல்லாம் மெரிட்டுதான்” எனக்கான பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டைக் காட்டிலும் அவர்களுக்கு எளிதாக இடங்கள் கிடைக்கின்றதே என்ற கடுப்பில்…

“நீ சொல்றது சரிதான், பத்துக்கு எட்டுபேர் டாக்டரேட்ஸ் எல்லாம் எங்களவாதான், இப்போ ஒன்னு இரண்டு உங்க ஆட்களும் வர்றானுங்க, ” ரங்கா சார் சொல்ல உண்மையில் அப்படி இருக்கின்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை என்றபோதிலும் பெருமையாகத்தான் இருந்தது,

“மேல் சாதிப் பொண்ணுகளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும்னு அலையுறானுங்க, பசுபதியோட வொய்ஃப் கூட உங்களவாதான்”

“அப்படிப்போடு, எப்படி நம்ம பாஸ் பசுபதியைத் தான் எடுக்கனும்னு சொன்னாருன்னு, அப்பவே நினைச்சேன் ஏதாவது கனெக்ஷன் இருக்குமுன்னு”

அடடா, எனக்கு நானே குழியை வெட்டிக்கொண்டுவிட்டேனோ … கோடுபோட்டாலே கோலமாக்கிவிடுபவர்களிடம், பசுபதியை சொந்தக்காரன் ஆக்கிவிட்டுவிட்டேனே !! அடுத்த பத்து நிமிடங்கள் கனத்த மௌனம்தான். அனேகமாக இதுவே முதலும் கடைசி வெளிநாட்டுப்பயணம் என நினைக்கின்றேன். அடுத்த முறை பசுபதியைத்தான் ரங்கா கூட்டிக்கொண்டு வருவார்.

ஏழரையைக் கடந்தும் வியன்னாவிற்கான ரயில் நடைமேடைக்கு வருவதைப்போலத் தெரியவில்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆங்கிலத்தில் பேசி பந்தா காட்டுவதைப்போல, ரங்கா சார் ஆங்கிலத்தில் அங்கு இருந்த இத்தாலியர் ஒருவரிடம் கேட்டார்.

“நோ கப்பித்தோ நோ கப்பித்தோ “ என்று அவன் சொல்ல, “என்னடா இவன் காப்பித்தா காப்பித்தாங்கிறான்” என்று அவனை கேலிபேசி விட்டு சலிப்புடன் மீண்டும் என்னிடத்திற்கு வந்தார்.

ஆங்கிலத்தில் வியன்னா என்றபோதிலும் ஜெர்மனிலும் இத்தாலியனிலும் அந்த ஊர் வேறு உச்சரிப்பில் அழைக்கப்படும். வியன் , வீன் என ஜெர்மன் இத்தாலிய உச்சரிப்பில் ஒருவருடன் கேட்டுவிட்டு, அவர் கைக்காட்டிய ரயிலில் ஏறிக்கொண்டோம். பரிசோதகர் எங்கள் பயணச்சீட்டுகளில் எதையோ கிறுக்கிவிட்டு, ஒரு பெட்டியைக் கைக்காட்டினார்.

”காத்தால எந்திரிச்சா, வியன்னா ~ என ரங்கா சார் சோம்பல் முறித்தார். பெட்டியில் தமிழ் குரல் கேட்க தூரத்தில் ஆரம்ப இருபதுகளில் ஒருவன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

நாங்கள் அவனைப்பார்த்து கையசைக்க, எங்கள் அருகில் வந்து அமர்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். மிலான் நகரில் உயிர்தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சிப்பாடம் படிப்பதாகவும், ரோமில் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க வந்ததாகவும் சொன்னான். மீசையில்லா கனிவான முகம், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் ஆகியனவற்றினால் ரங்கநாதன் என்னை இடித்தார். அதாவது அவங்க ஆளாக இருக்கக்கூடும் என எனக்கு சமிஞையாம். கையில் வி.பி.சிங் அட்டைப்படம் போட்ட புத்தகம் வைத்திருந்ததை ரங்கா சார் கவனிக்கவில்லைபோலும், பையனின் பேரைக் கேட்கும் முன்னர், அவன் எங்களிடம்

“நீங்களும் மிலான் தான் போறீங்களா”

“இல்லை, இல்லை வியன்னா”

“இந்த ரயில் வியன்னா போகாதே” அதிர்ச்சி அலைகள் எங்கள் முகத்தில் பரவும் முன்னர்

“கவலைப்படாதீங்க, நீங்கள் புளோரன்ஸ் நகரில் ரயில் மாற வேண்டியிருக்கும்” , எங்களது டிக்கெட்டை வாங்கி ஒரு முறை சரிப்பார்த்துக்கொண்டான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவனின் ஜெர்மனியில் படித்த மாஸ்டர்ஸ் படிப்பு, பின் இத்தாலிய ஆராய்ச்சிப்படிப்பு, எதிர்கால ஸ்விட்சர்லாந்து தொடர் ஆராய்ச்சி வேலை, கிரிக்கெட், இத்தாலியப் பெண்கள், ஐரோப்பியர்கள் இந்தியர்களைப் பார்க்கும்விதம் என்று வெவ்வேறுத் தளங்களில் பயணித்தன. புளொரன்ஸில் எங்கள் ரயிலில் ஏற்றிவிட்டு அவன் ரயிலுக்கு மீண்டும் திரும்பினான். அவன் திரும்புகையில்தான் ரங்காவும் நானும் ஒருசேர, கேட்க மறந்திருந்த அவனின் பெயரைக்கேட்டோம்

“இமானுவேல் சேகரன்” என்றான் மிடுக்குடன்.

– மார்ச் 1st, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *