பூனையும் நிலவும் சாட்சிகளாய்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,659 
 

அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து கிளம்பியதும் மெல்ல வந்து முகத்தைத் தொட்ட காற்று, ஏதோ அன்னையின் வருடலைப் போல இருந்தது.

“”டிக்கெட்டும்மா…” என்று ஏற்கெனவே கிழித்து வைத்திருந்த பயணச் சீட்டை, பழகிய நடத்துநர் ஒரு புன்னகையுடன் நீட்டினார்.

“”தாங்ஸ் சார்…” என்று சரியான தொகையைக் கொடுத்தாள். புன்சிரித்தாள்.

“”நேற்று தவற விட்டுட்டீங்களாம்மா நம்ம பஸ்சை?”

“”ஆமாம் சார்! கிளம்புற நேரத்துல மச்சினரும் அவரு சம்சாரமும் வந்துட்டாங்க, ஒரு அழைப்பிதழ் கொடுக்க. அதுல லேட்டாய்ட்டுது. வேற வழியில்லாமல ஆட்டோவுல போக வேண்டியதாய்ப் போச்சு. அக்கறையா கேட்டதுக்கு தாங்க்ஸ் சார்” என்று சாய்ந்து உட்கார்ந்தாள்.

சுகுமாரும் சுமதியும் மிகச் சரியாக அலுவலகம் கிளம்புகிற நேரத்திற்கு ஏன் வந்தார்கள்? என்று உண்மையிலேயே தெரியவில்லை. அரைமணி நேரம் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வந்திருந்தால், அவளுக்கு இருநூற்றைம்பது ரூபாய் ஆட்டோவுக்காகச் செலவு செய்ய வேண்டியிருந்திருக்காது. ரமேஷ் கிளம்புகிற நேரம் ஆறரை மணி என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மாமியாரும் மாமனாரும் எம்.பி.ஏ.

படிக்கிற நாத்தனார் சுபாவும் அவளுடைய விடுமுறைக் காலம் பற்றியும் தெரியும்தான். மஞ்சுளா ஒன்பது மணி பஸ் பிடித்து ராமாவரத்திலிருந்து பாரிமுனை தாண்டி தினம் ஐ.டி. நிறுவனம் போய் வர வேண்டியவள் என்று எல்லாம் தெரிந்தும் மிகச் சரியாக ஒன்பது மணிக்கு வந்து நிற்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கத்தை என்னவென்று புரிந்து கொள்வது? அண்ணியின் மேல் சுகுமாருக்கு அக்கறையில்லாமல் இருக்கலாம். சுமதிக்குத் தெரிய வேண்டாமா, வேலைக்குப் போகிற இல்லதரசியின் காலை வேளைக் கடமைகள்? அவளும் ஒரு லெக்சரர் தானே?

செல்போன் அழைத்தது.

அம்மாவின் அழைப்பு என்று பாடல் அறிவிக்க உடனே எடுத்தாள்.

“”சொல்லும்மா…குட்மார்னிங்மா…நல்லா தூங்கினியா?” என்றாள் மென்மையாக.

“”தூக்கமா? அது எங்க வருது மஞ்சு…? கிளம்பிட்டியா? பஸ்ல இருக்கியா?” என்ற அம்மாவின் சொற்கள் ஏதோ ஒரு ஆழ்கிணற்றிலிருந்து கேட்டன.

“”ஆமாம்மா பஸ்லதான் இருக்கேன். ஏன் தூங்கலே? சரியா சாப்பிட்டியா இல்லையா ராத்திரி? துணைக்குப் படுத்துக்கிற கோகிலா வந்தாளா? இல்லையா?”

“”அவ வந்தா…ஆனா…” என்று அம்மா ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது, ஏதோ குறுக்கீடு கேட்டது.

அடுத்த வினாடி கோகிலாவின் குரல் ஒலித்தது.

“”மஞ்சும்மா…அம்மாவுக்கு எந்நேரமும் கவலைதான்மா. ஏற்கெனவே ஒண்டியா இருக்குது. இதுல இதயநோய் வேற, இப்பத்தானே பேஸ்மேக்கரு அது இதுன்னு ஒரு மாசம் ஆஸ்பத்திரில இருந்துட்டு வந்துச்சு? நீயுந்தான் பச்சப்புள்ளய பாத்துக்கிற மாதிரி பாத்துக்கிட்டே. நீயும் புருசன், மாமியார், மாமனார், நாத்தனார்னு கூட்டுக் குடும்பத்துல இருக்குற…தெனம் வந்து அம்மாவோட இருக்க முடியுமா? அதான் ஆத்தாமை மஞ்சும்மா. நீ கவலைப்படாதே. ஏற்கெனவே ஒனக்கு கோணி கோணியா சுமை. விடு…நிம்மதியா வேலைக்குப் போ”

“”கோகிலா…” என்றாள் குரலில் வழுவழுப்புடன்.

“”யாரு கேட்டது கோகிலா எனக்கு கல்யாணத்தைப் பண்ணி வைன்னு யாரு கேட்டது, சொல்லு! எங்கேயும் நிம்மதியா இருக்க முடியலே கோகிலா. ஒவ்வொரு நாள் விடியும்போதும் ஏதோ ஒரு பெரிய சைத்தான் என்னை நாள் முழுக்க விழுங்கிட்டு துப்ப காத்திருக்க மாதிரி தோணுது” என்பதற்குள் தொண்டை அடைத்துக் கொண்டது.

“”சரி, சரி, கவலைப்படாதே மஞ்சும்மா. நீ ஒரு அம்மன் மாதிரி தெரியுமா? எல்லாத்தையும் பொறுமையா, பக்குவமா ஏத்துக்குவ. எல்லோருக்கும் சந்தோசத்த கொடுப்ப. இரு நாலு வார்த்தை பேசு அம்மாகிட்ட”

“”மஞ்சு…சாயங்காலம் வரியா?”

“”சரிம்மா. வரேன். என்ன வேணும் உனக்கு சொல்லு. நாவல் பழம் வாங்கிட்டு வரட்டா?”

“”நீ வந்தா போதும் மஞ்சு”

“”இன்னிக்கு நாலு மணிக்கு வீடியோ கான்ஃப்ரன்ஸ் இருக்கு. அதை முடிச்சுட்டு வரேம்மா. எப்படியும் எட்டு ஆயிடும்”

“”எட்டா? அப்புறம் ராமாவரம் போய் ராத்திரிக்கு இட்லி, தோசைன்னு பண்ணணுமே…வேணாம் மஞ்சு, நீ நேரா வீட்டுக்குப் போயிரு…”

“”ராத்திரி தூங்கறதில்லேன்னு சொல்றியேம்மா…ஏம்மா? என்னம்மா கவலை உனக்கு? நீ சொன்னேங்கறதுக்காகத்தானே இந்தக் கல்யாணம் நடந்துச்சு?”

“”ஆமாம் மஞ்சு. எல்லாம் நல்லாத்தான் நடந்தது. இனிமேலும் நல்லாத்தான் நடக்கும். கவலைப்படாதே. நான் நல்லா சாப்பிட்டு, நல்லா தூங்கறேன்.”

“”சரிம்மா…மை டியர் அம்மா…” என்று போன் அணைந்தபோது இமைகளில் அடர்த்தியாக ஈரம் படர்ந்திருந்தது.

தன் இருபத்தெட்டு கரங்களுடன் நீண்டு விரிந்த ஒரு முழுநாள், அவளை சக்கையாகப் பிழிந்துவிட்டு படுக்கைக்கு அனுப்பியபோது, எதிர் வீட்டுப் பால்கனியின் பூனை அவளை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டது.

ரமேஷ் காத்திருந்தான். அவள் வந்ததும் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியை அணைத்துவிட்டு அவளை அணைத்துக்கொண்டான்.

விழிகளை மூடிக்கொண்டபோது அந்த இமைகளுக்குள் பூனை வந்தது. அதைப்பற்றி படித்த கவிதை அவள் நினைவுகளில் படர்ந்தது. “பூனை நம்பிக்கையுள்ள ஒரு மிருகம். எவ்வளவு நேரமானாலும் எனக்காக அது காத்திருக்கிறது’ என்று அந்த வரிகளில், தான்தான் அந்தப் பூனையோ என்று நினைத்தாள். தனக்காக அவள் காத்திருக்கிறாள் என்ற நம்பிக்கையா அல்லது அவள் அப்படி காத்திருக்க வேண்டிய அடிமைதான் என்ற எண்ணமா, எது அவனை, அப்படி கரும்புச் சக்கை போன்றவளை மேலும் மென்று துப்ப முடிகிறது?

“”தூங்கிட்டியா?” என்றான்.

உச்சியைத் தாண்டியிருந்த நிலவின் ஏதோ ஒரு கீற்றும் அந்தக் குரலும் அவளை உடனே எழுப்பின.

“”சொல்லுங்க”

“”டுமாரோ மே பீ தி பெஸ்ட் டே…”

“”எப்படி?”

“”கெஸ் பண்ணு”

“”கார் புக் பண்றீங்களா?”

“”இல்லே…”

“”இன்சென்டிவ்?”

“”நெக்ஸ்ட்”

“”தெரியலே”

“”வெயிட்…நாளைக்கு சொல்றேன்…குட்நைட்” என்றான். தூங்கிவிட்டான்.

தன் நித்திரையை தொந்தரவுபடுத்தி எழுப்பிவிட்டுவிட்டு, எதையோ பூடகமாகப் பேசிவிட்டு உடனே குறட்டை விட்டு அவன் உறங்குவதை, அவள் எழுந்து உட்கார்ந்து சலனமின்றிப் பார்த்தாள்.

வேலைகள் இன்று இரண்டு மடங்காக இருந்தன. வராத நிவேதாவின் இருக்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருந்தது. அம்மா இரண்டு முறை அழைத்தாள். காலையில் ஒரு தடவை நெஞ்சு வலித்ததாகச் சொல்லி, உடனே பேச்சை மாற்றி, சமையல் என்ன என்று விசாரித்தாள்.

ஒரு மணிக்கு ரமேஷின் அழைப்பு வந்தது.

“”சொன்னேன்ல? கிரேட் டே மஞ்சு? ஆறு மாசம் கம்பெனி ட்ரெயினிங்…நியுயார்க்ல! மே பீ எக்ஸ்டென்டட் ஃபார் என் இயர் மஞ்சு…நான் பறக்கிறேன் மை டியர் பொண்டாட்டியே…” என்று குதித்தான்.

“”இஸிட்? கிரேட்…பாராட்டுகள்!” என்றாள் மலர்ச்சியுடன்.

“”புது ஸôலரி…கம்பெனி அபார்ட்மென்ட்…லக்சுரி லிவிங்…நமக்கு ஒரு வருஷம் ஹனிமூன் மஞ்சு”

“”புரியலையே? நான் எங்கே இதுல?”

“”நீ இல்லாம?” என்றான் வேகமாக. “”இது ஜாக்பாட் மஞ்சு…கப்பிள் டிரிப் இது. கம்பெனி ரூல்ஸ்லேயே பிரமாதம் இதுதான்… பாஸ்போர்ட், விசா ரெண்டுமே ரெடி பண்ணணும் உனக்கு, இன்னும் பத்து நாள்ல…”

அவள் திகைத்துப் போனாள். திடீரென்று என்ன இது? கொஞ்சம் கூட மனத்தயாரிப்பு இல்லாமல், ஒரு வருட காலம் வெளிநாட்டில் எப்படி வாழ்வது? ஏற்கெனவே தனியாக இருக்கும் அம்மாவை விட்டுவிட்டு…

“”என்ன ஆச்சு? ஹேய்! ப்ளசன்ட் சர்ப்ரைஸ் இல்லே, உனக்கு? சரி ராத்திரி பேசலாம்…பை”

“”ஓகே…பை…”

பூனை இப்போதும் அதே இடத்தில்தான் இருந்தது. அதே இருட்டில், அதே காலநொடியில் அவளை ஓர விழிகளால் பார்த்தபோது, “பூனை சந்தேகமுள்ள ஒரு மிருகம். ஒருபோதும் என்னை அது முழுமையாக நம்புவதில்லை’ என்ற அதே கவிதையின் வேறு வரிகள் நினைவுக்கு வந்தன.

“”புரியல எனக்கு…என்ன சொல்றே? என் கூட வரப் போறியா இல்லையா?” ரமேஷ் அதே டிஸ்கவரி சேனலில் கொட்டும் அருவியை வெறித்துப் பார்த்தபடி கேட்டான்.

“”உங்ககூட வராம எப்படி? இன்னும் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள், காலங்கள் இருக்கு. இந்த முதல் வாய்ப்புல நீங்க போயிட்டு வாங்களேன். இங்கே நமக்கு நிறைய கடமைகள் இருக்கே…” அவள் மென்மையாக நிலவைப் பார்த்தபடி பேசினாள்.

“”கடமைன்னா? அப்பா அம்மாவா?”

“”ம்…எல்லோரும் முதியவர்கள்…சுபா எப்பவும் காலேஜ், படிப்புன்னு இருக்கா. என் அம்மாவும் தனியா இருக்காங்க”

“”ஓ! அதுதானா விஷயம்?” என்று சடாரென்று திரும்பினான். “”அம்மாவை விட்டுட்டு வர மாட்டியோ? புருஷனை விட அம்மாதான் முக்கியமோ?”

“”அம்மாவை விட்டுட்டுத்தானே இதோ இங்கே வந்து வாழறேன். அதுவும் இதயநோயாளியான அம்மாவை விட்டுட்டு! நீங்க போயிட்டு வரக்கூடாதா? என் ஆபிஸ்லயும் ஒரு வருஷம் பிரேக் விடமுடியாதே…”

“”உன் வேலை என்ன பெரிய வேலை, சுண்டக்காய் வேலை…முடிவா சொல்லு…வர முடியுமா? முடியாதா?”

“”இப்படி உடனே யெஸ் ஆர் நோ எப்படிச் சொல்ல முடியும்? யோசிக்கணும்…”

“”இதுல யோசிக்க என்ன இருக்கு? உன் அம்மாதான் பிரச்னைன்னா, அவங்களை ஒரு ஹோம்ல சேத்துடலாம்…காஸ்ட்லி அபார்ட்மென்ட்…எல்லா வசதியும், பாதுகாப்பும் இருக்கும்…நீயும் கவலையில்லாம இருக்கலாம்”

அவள் கண்கள் படபடத்தன. பொறுமையாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“”இல்லை ரமேஷ்…” என்றாள் நிதானமாக.

“”என் அம்மாவுக்கு நான் இருக்கேன்… உங்க பெற்றோருக்கு எப்படி நீங்க, சுகுமார், சுபான்னு இருக்கீங்களோ, அப்படி என் அம்மாவுக்கு நான் இருக்கேன். ஆதரவில்லாதவளா அவங்களை இல்லத்துல விடறதுல எனக்கு உடன்பாடு இல்லே…”

“”ஓகோ…” என்றான். ரிமோட்டை எறிந்தான். சப்தத்துடன் மூச்சுவிட்டு அவளை வெறித்துப் பார்த்தான்.

“”அப்படின்னா, நீ எல்லாத்துக்கும் தயாரா இருக்கே…”

“”புரியலே…”

“”அம்மாவுக்காக எதையும் இழப்பே”

“”எதையும் இழக்காமல் அம்மாவையும் காப்பாத்துவேன் ரமேஷ்”

“”நான் உன் புடவைத் தலைப்பை பிடிச்சுகிட்டு சுத்தற தாசன் இல்லே…”

“”தெரியும். ஆனால் தர்மத்துக்கு ஒரு பலம் உண்டு. அது என்பக்கம் இருக்கு ரமேஷ்…”

“”ஓ ஷிட்…” என்று தலையணையை வீசி படுத்துக் கொண்டான். “”நீ வர மஞ்சு…என் கூட அமெரிக்காவுக்கு வரே. என் ஆர்டர் இது…குட் நைட்…”

பூனையும் நிலவும் பார்த்துக் கொண்டே இருந்தன.

அலுவலகம் அவனை வாழ்த்து மழைகளால் நனைத்தது. கம்பெனி செலவில் தேன்நிலவு, அதுவும் நீண்ட கால ஹனிமூன் கொண்டாடப் போகிற முதல் லக்கிமேன் என்று இனிப்பைத் திணித்தது. மெயிலுக்கு மேல் மெயிலாக வந்துகொண்டே இருந்தாலும், உள்ளே ஓர் எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து மஞ்சுளாவின் மேல் அமிலமாகக் கொட்ட தயாராகிக் கொண்டே இருந்தது.

அழைப்பு.

அவள்தான்.

“”சொல்லு…” என்றான்.

“”அம்மாவுக்கு திடீர் மயக்கம்…போன் வந்தது. ஆம்புலன்úஸôட போய் கூட்டிட்டு வந்து மிதிலா ஆஸ்பிட்டல்ல சேத்திருக்கேன். ப்ளீஸ் வந்திடுங்க ரமேஷ்” என்றாள். குரலில் நடுக்கமும் அச்சமும் படர்ந்திருக்க உடனே போனை வைத்துவிட்டாள்.

“”ரமேஷ்…ஜி.எம். கூப்பிடறார்… ஏதாவது அர்ஜென்ட் காலா?” மாலதி தயக்கத்துடன் கேட்டாள்.

“”நோ…நத்திங்…இதோ…” என்று ஜி.எம். அறை நோக்கி மெல்ல நடந்தான்.

அவனைவிட ஜி.எம்.நாகராஜ், மிக மிக உற்சாகமாக இருந்தார். கம்பெனிக்கு அவனும் அவனுக்கு கம்பெனியும் மிக முக்கியமானது என்றார். அவனைப் போன்ற இளைஞர்களால்தான் இது உலகம் போற்றும் கார்ப்பரேட்டாக மாறும் என்றும், அதில் அவருக்கோ சேர்மனுக்கோ எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் அவனுடைய இரண்டு கைகளைப் பற்றிக்கொண்டு குலுக்கியபோது அவனுக்கு உண்மையிலேயே முதுகுக்குப் பின்னால் இரண்டு சிறகுகள் முளைத்துவிட்டதைப் போலவே இருந்தது. அதற்குப் பின் அலுவலகம் முழுக்க இனிப்பு விநியோகிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருவரிடமும் இரண்டொரு நிமிடங்கள் பேச வேண்டியிருந்தது. விரிந்த புன்னகை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுமாக இன்பத் தொல்லைகளுடன் அந்த நாள் ஏறக்குறைய முடிவுக்கு வந்தபோது இரவு எட்டரைக்கு மேலாகியிருந்தது.

மிதிலா மருத்துவமனையின் நான்காவது மாடி அவசர சிகிச்சைப் பிரிவு அறை நோக்கி நடந்தபோது, உள்ளுக்குள்ளே குரூரமாக ஓர் எண்ண அலை அடித்தது.

மஞ்சுளாவின் அம்மா ஏற்கெனவே இதயநோயாளி. ஒருவேளை…ஒருவேளை…எல்லாம் அவன் நேரம்தானா? மஞ்சுவும் அவனும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேன்நிலவை அனுபவிக்கத்தான் இயற்கை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதா? இது தடைகள் தகரும் தருணமா?

அறையை நெருங்கியபோது

அப்பா வாசலில் காத்திருந்தார். இவனைப் பார்த்ததும் ஓடி வந்தார்.

“”ரமேஷ்…” என்றார். குரல் நடுங்கிற்று.

“”என்ன…என்னப்பா?”

“”அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்ப்பா…நல்ல வேளையா உயிர் பிழைச்சுட்டா…ஆனா பக்கவாதம் தாக்கி…வலதுபக்கம்…செயலிழந்து…அய்யோ ரமேஷ்…அம்மா இனிமேல் படுத்த படுக்கைப்பா…” கதறிய அப்பாவை அதிர்ச்சியுடன் அவன் பார்த்தான்.

“”உன் போன் கெடைக்கவே இல்ல. ஆனா உடனே மஞ்சு ஆம்புலன்úஸôட பறந்து வந்தா. அதனால உசிர காப்பாத்த முடிஞ்சது. இல்லேன்னா இந்தக் கிழவனால அவசரமா என்னப்பா செய்ய முடியும்?” அப்பா குரல் நடுங்கி உடல் பதறி முகம் மூடி அழுவதைப் பார்க்கையில் அவன் தேகத்தின் மொத்த ரத்தமும் வடிந்தது.

“”எப்ப வந்தீங்க ரமேஷ்? அப்பா, இதை ஐ.சி.யு. சிஸ்டர்கிட்ட கொடுங்களேன்…இஞ்செக்ஷன்…”என்று மஞ்சுளா எதிரில் வந்து நின்றாள்.

“”மஞ்…சு… இதென்ன… அம்மா…என் அம்மா… புரியலே…நான்…உன் அம்மான்னு…” அவன் கைகள் அவள் விரல்களைப் பற்றின.

“”எல்லாருமே தாய்தான், தகப்பன்தான் ரமேஷ். இதுல உங்கம்மா, எங்கம்மான்னு பிரிவினை எதுக்கு? கவலைப்படாதீங்க…அம்மாவை நான் மகளா இருந்து பார்த்துப்பேன்” என்றவளின் கால்களில் அவன் மானசீகமாக விழுந்தான்.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *