கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 13,152 
 

வீடெங்கும் ஊதுபத்தி வாசனை. நடுவீட்டில் என்னை நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். கண் மூடி தாகட்டையை தலையோடு சேர்த்து கட்டி, கீழே விழாமல் இருக்க நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்திருக்கிற கோலத்தை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்த்து. நான் இறந்து ஒரு நாள் ஆகி விட்டது. என் கண் முக்கியமான ஆளை தேடியது.

என் மனைவி. வறண்ட தலையோடு கண்ல தண்ணி வழிய உட்கார்ந்திருக்கிற நிலையை பார்த்தா, பாவி இப்படி மோசம் பண்ணிட்டியடான்னு என்னை நானே திட்டிக்கனும் போல இருந்துச்சு. நான் முத முத அவளை பெண் பார்க்க போயிருந்தப்ப பார்த்த முகம்தான் ஞாபகம் வந்துச்சு. அவ்வளவு அழகு. கூட வந்திருந்த துரை, மாப்பிள்ளை இதுக்கு மேல ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டாடான்னு தொடைய கிள்ளுனான்.

அந்த முகமா இது. உனக்கு கண்டிப்பா நரகம்தான். இப்படி பாவி இப்படி மோசம் பண்ணிட்டியே. அவ கிடச்சது எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா?. அடுத்த நாள் ஆபிஸுல பூரா அவளை பத்தின தம்பட்டம்தான். மாப்புளை நீ சரி சொன்னது சரி. அந்த பொண்ணு சரி சொன்னாளா? என கிண்டல். தினம் தினம் அவ முகத்தை நினவுபடுத்தி கொண்டே இருந்தேன். இப்ப அவ இருக்கிற கோலத்தை பார்த்து எனக்கே சகிக்கல.

ராணி மாதிரி இருப்பேன்னு தானே அந்த படுபாவிக்கு கட்டி கொடுத்தேன். இப்படி உன்னை நாசம் பண்ணிட்டானேன்னு அவ அத்தை அவளை கட்டிக்கிட்டு என்னை சபிச்சா? என் சித்தப்பா, அவனால தினம் தினம் இவ் உயிரோட செத்தா. குழந்தை ரொம்ப பாவம்ன்னு யாருக்கிட்டேயோ அங்கலாய்த்து கொண்டிருந்தார்.

என் சம்சாரம் முகத்தை நான் உசிரோட இருந்தப்ப எப்ப கடைசியா பார்த்தேன் எனக்கு ஞாபகம் இல்லை. எப்போ பார்த்தாலும், போதையோட இருந்தா, பார்த்தது எது ஞாபகம் இருக்கும். எல்லாம் கடங்காரன் துரையாலதான். என் கல்யாணத்துல அவன் தான் மாப்பிள தோழன். தங்கச்சி தங்கச்சின்னு அவ மேல பிரியமா இருந்தான்.

கூட பிறந்தவன் கூட இவ்வளவு பாசமா இருந்திருக்க மாட்டான். அவ கூட அடிக்கடி விளையாட்டா சொல்லுவா, உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதில்லேயே நல்ல விஷயம் துரை அண்ணே கிடைச்சதுதான். அவனுக்கு பொண்ண ஒகே பண்ணது இவதான். அவன் கல்யாணத்துல இவ ஆடுன ஆட்டம், ஊர் கண்ணு பூரா பட்டுச்சு. எனக்கு ரொம்ப பெருமை.

கணவனின் நண்பனை மனைவி சகோதரனாக அங்கிகரீப்பது கணவனுக்கு பல வகையில் சௌகரியம். எனக்கு ரொம்ப உதவி துரைதான். அவன் மனைவியோடவும் ரொம்ப சினெகிதமா இருந்தா. எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம். நான் அரசாங்க ஊழியன். அவன் அவங்க குடும்ப தொழிலான, நகை செய்யுற தொழிலைதான் பார்த்துகிட்டுதான் இருந்தான்.

என் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமையான விஷயம் வரும்ன்னு நான் நினைச்சு பார்க்கல. கடவுளை பார்த்தா கண்டிப்பா ஏன் அந்த நிலைமையை எனக்கும் என் நண்பனுக்கும் கொடுத்தேன்னு கேட்கனும். அதுக்காகதானே வந்திருக்கேன்.

மாப்புள, நாளைக்கு குமாரசாமி கல்யாணம் போகனுமே? என்ன முடிவு பண்ண? வீட்டோட போவோமா?

எங்கிட்ட கேட்டா? உன் தங்கச்சிய கேளு?

அண்னே என்னால வர முடியாது. நீங்களும், உங்க ப்ரெண்டுமா போயிட்டு வந்துடுங்க.

என் பைக்கில போயிட்டு வந்துடுலாம். அதுதான் இசியா இருக்கும். என்ன சொல்லுற என்றேன்.

சும்மா இருங்க. பஸ்லெயே போயிட்டுவாங்க. அண்ணே அவர் பேச்சை கேட்காதீங்க.

இருக்கட்டும்மா. அவனோட எங்க எல்லாம் போயிட்டு வந்திருக்கேன். பயப்படாத. சீக்கிரம் வர்றதுக்கு பைக்தான் சௌகரியம் என்றான்.

கல்யாணம் முடிச்சு திரும்பி வரும் போது, எதிர்ல வந்த வண்டியுல இருந்து முன்ன டயர் கழண்டு எங்க வண்டி மேல மோதுச்சு. இரண்டு பேரும் சைட்ல போய் விழுந்தோம். சுதாரிச்சு எழுந்தா, துரை கல்லுல மோதி, தலை பூரா ரெத்தம். ஐய்யோ, துரை முழிடான்னு நான் அலறின அலறல். எல்லாரும் ஓடி வந்தாங்க உதவிக்கு. என்ன பிரயோஜனம். அவன் பொணத்துகிட்ட உட்கார்ந்து, என் பொண்டாட்டி அழுத அழுகை.

என் அண்ணனை நீங்கதான் கொன்னுட்டிங்க. இந்த பொண்ணுக்கு யாருங்க பதில் சொல்லுவா? ன்னு கதறுன்னா. அந்த குரல் என் மனசில பதிஞ்சுடுச்சு. அந்த சம்பவத்தை என்னால மறக்க முடியல. அதுக்கு பின்னாடி என் சம்சாரம், அவன் சம்சாரம், அப்பா, அம்மான்னு யாரு சமாதனப்டுத்தினாலும் என் மனசு ஆறல. தூக்கம் வரல. நாந்தான் அவனை கொன்னுட்டேன்னு என் மனசுல பதிஞ்சுடுச்சு.

அப்பதான் ஒருத்தேன் சொன்னான்னு, கருமாந்திரம் பிடிச்ச பிராந்திய குடிச்சேன்.

ஏங்க, இது என்ன புது பழக்கம்.

நடந்த விஷயத்தை மறக்கதான். பயப்படாத. நல்லா தூக்கம் வரும்ன்னு சொன்னாங்க. ரெண்டு நாள் தூங்கினா சரியா போயிடும்.

எங்க தூங்கினேன். போதையல அவன் பேரையே புலம்பிக்கிட்டு இருந்தேன்னு என் சம்சாரம் சொன்னா. முத தடவை குடிச்சதால, காலையில திம்ன்னு இருந்துச்சு. ஆபிஸுல ஒரு வேலையும் ஒடல. நான் மறக்கனும்ன்னு நினைச்சாலும், எவன் என்னை மறக்க வுட்டான்.

சார், நைட் நல்லா துங்கினீங்களா?. தொடர்ச்சியா ரெண்டு நாள் சாப்பிட்டா எல்லாம் சரியாயிடும். வெளிநாட்டில எல்லாம், இதைதான் மருந்து மாதிரி சாப்பிடுறாங்க. பொம்பளைக கூட குடிப்பாங்க தெரியுமா. வாங்க சார் போவோம்ன்னு அந்த புறம் போக்கு பய பேச்சை கேட்டுட்டு, அவன் பின்னாடியே போனேன். அவன் குடிக்குறதுக்கு என் காசுதான். ரெண்டு நாள்,ஒரு வாரம் ஆச்சு. ஒரு மாசம் ஆச்சு. நைட்ல சாப்டனும் இருந்தது, பகல், மதியம்ன்னு, அணக்கட்டுல இருக்கிற தண்ணி லெவல் மாதிரி, போதை இறங்க இறங்க ஏத்திக்கனும் வெறி ஆகி போச்சு.

போதையில இருந்தா, எங்க ஆபிஸுல போய் வேலை பார்க்கிறது. துரை முகம் நெஜமாவே மறந்து போச்சு. வீட்டுக்கு வழி மட்டும் நல்லா தெரிஞ்சது. அவ புலம்பல் எதுவும் மண்டையில ஏறல. அவ தம்பி, என் அப்பா அம்மா, எங்க மேனேஜர் எல்லாரும் எவ்வளவோ சொல்லி பார்த்தாங்க. அவுக சொல்லும் போது, ஏதோ தப்பு பண்ணுறமாதிரி இருக்கும். டாக்டர்கிட்ட போனேன். அவர் செஞ்ச டீரிட்மெண்ட்ல கொஞ்சம் குடிக்கிறத விட்டேன்.

சாமி சத்தியமா சொல்றேங்க, திரும்பி துரை ஞாபகம் வந்திருச்சு. என் உயிர் நண்பன், அவனை எப்படி மறக்க முடியும். ஆனா, அவன் ஞாபகம் வந்துச்சன்னா, என் மேல எனக்கே கோவம் கோவமா வருதே. அடிடா திருப்பி பிராந்திய. காலங்காத்தல குடிச்சிட்டு, அபிஸுல போய் விழுந்து கிடப்பேன். என் சம்சாரமும் அவ தம்பியும் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க. அவ தம்பி என் மேல இருக்கிற கோபத்துல அவளை திட்டுறதும், அவ அழுகுறதும் எனக்கு மங்கலா தெரியும், சன்னமா கேட்கும்.

ஆபிஸுக்கே போலன்னா, எங்க சம்பளம். அவகிட்ட எந்த மூஞ்சிய வச்சு பணம் கேட்பேன். ஏற்கனவே, அவ நகை எல்லாம் காணாம போச்சு. வெளிய போய் எல்லார் கிட்டேயும் பிச்சை எடுக்க ஆரம்பிச்சேன். வீட்டுக்கு போறத தவிர்க்க ஆரம்பிச்சேன். எங்க கிடப்பேன், யார் வீட்டுக்கு எடுத்து வருவான்னு எனக்கே தெரியாது. என் உருவம் எப்படி இருக்குது எனக்கே தெரியாது.

போன வாரம்தான் எங்கிட்ட அழுதுகிட்டே அவ சொன்னா, இப்படியே போனா, உங்களை வேலைய விட்டு துக்கிடுவாங்களாம், ஏங்க இப்படி. வேலையும் போச்சுன்னா, என்ன பண்ணுறது. நான் ஓன்னும் சொல்லாம, அவ போன பின்னாடிதான் முகத்தை தூக்கி பார்த்தேன். அன்னைக்கு தண்ணிய போட்டுட்டு ஆபிஸுல போய் ஒரே ரகளை. என் பிரண்ட் பஷீர், என்னை குண்டுகட்டா தூக்கி போய் அவன் தம்பியோட பெட்டி கடையில படுக்க வைச்சான்.

தீடிரென முழிப்பு வந்துச்சு, உடம்பெல்லாம் லேசா இருந்துச்சு. போதையே இல்ல. என்னடான்னு,பார்த்தா வீட்டுல ஓரே கூட்டம், ஓப்பாரி. அடேன்னு பார்த்தா, நம்மள சாமி கூப்பிட்க்கிட்டாரு. ரொம்ப வருத்தமாகி போச்சு. ரொம்ப நாள் கழிச்சு என் சம்சாரத்தை பார்க்கிறேன். அவளை உயிரோட புதைச்சு இருக்கியேடா பாவி, நீயே டைரக்டா போய் நரகத்துல இருக்கிற எண்ணை சட்டியல போய் விழுந்துடுடா. சீக்கிரம் என்னை எரிச்சுடுங்கடான்னு புலம்ப ஆரம்பிச்சேன். யாருக்கு கேட்கும்.

அவளை இனி யாரு பார்த்துக்குவா? ஐய்யோன்னு கத்தனும் போல இருந்துச்சு. எங்க,ஆபிஸு ஆளுக பூரா மொத்தமா வந்துக்கிட்டுருந்தாங்க. பஷீர் என் மச்சான் கிட்ட துக்கம் விசாரிச்சுட்டு, கவலை படாதிங்க. அவர் இன்ஸுரன்ஸ் தொகை அடுத்த வாரம் கிடைச்சுடும். அக்காவோட சர்ட்பிகேட்ட தேடி வையுங்க, அவுகளுக்கு கம்பஷினேஷன் கிரவுண்ட்ல வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

ரொம்ப நல்லது சார். அவ சாப்பிட்டு தூங்கி ரொம்ப நாளாச்சு. அந்த ஆள் உயிரோட இருந்தப்ப எந்த உபயோகமும் இல்ல. இப்ப அவர் பணமும் வேலையும்மாது உதவுதே. இதுக்கு சந்தோஷபடுவதா? அழுகுறதான்னு தெரியலன்னு பெருசா வாய் விட்டு அழ ஆரம்பிச்சான். அதை பார்த்து என் சம்சாரமும் அழ அரம்பிச்சா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. காரியம் இல்லாம சாமி எதையும் செய்யாது. கை பிடிச்சவள, நல்லபடியா பார்த்துகிடுறது தான் புருஷன் வேலை. அதை உசிரோட இருந்து செஞ்சா என்ன, செத்து செஞ்சா என்ன.

என் நண்பன் துரையை திருப்பி பார்க்க போறேன். எப்படி விசாரிக்கிறதுன்ன்னு தெரியல. நாளைக்கு எனக்கு பால். நிச்சயமா அவளுக்கு வயத்தில நெருப்பு அணஞ்சு, பால் வார்க்கும். புருஷ லட்சணம்ன்னா இதுதானே?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *